2021 - இது தோல்வியின் கதை


டிசம்பர் 6 ஆம் தேதி பிற்பகல் 4.35 -க்கு அழைத்த தொலைபேசி 11-12-2021 பிற்பகல் 3 மணிக்கு சென்னை ராஜ்பவனில் ஆளுநரைச் சந்திக்க வேண்டும். தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவிக்கான கலந்துரையாடல் இது எனச் சொல்லிவிட்டு வைத்துவிட்டது. அழைத்தவர் ஆளுநரின் தனிச் செயலக அதிகாரி என்று சொன்னார். கூடுதல் தகவல்களைக் கேட்க நினைத்துத் தொடர்ந்த நிலையில் வைத்துவிட்டார். அதே எண்ணிற்கு ‘இதனை உறுதிசெய்து இணையக் கடிதமாவது அனுப்புவீர்களா? என்று குறுந்தகவல் அனுப்பினேன். பதில் எதுவும் வரவில்லை. விமானத்தில் செல்வதென முடிவுசெய்து ஏற்பாடுகளைச் செய்தேன். கிண்டியிலிருக்கும் ராஜ்பவனுக்குச் செல்லத் தோதாகத் திருவான்மியூரில் தங்கிக்கொள்ள அறையும் பதிவுசெய்து 10 ஆம் தேதியே சென்னைக்குப் போய்விட்டேன்.

2021 டிசம்பர் 11 ஆம் தேதி பிற்பகல் 2.40 -க்கு ராஜ்பவனின் இரண்டாவது வாசலுக்குச் சென்ற போது நான் மட்டுமே இருந்தேன். ஐந்து நிமிடங்கள் கழித்து புதுடெல்லி ஜவஹர்லால் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவர் தாமோதரன் என்ற அறவேந்தன் வந்தார். அடுத்து சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மொழியியல் துறையைச் சேர்ந்த திருவள்ளுவன் வந்தார். மூவரின் வாகனங்களும் ஒன்றன் பின் ஒன்றாக உள்ளே அனுப்பப்பட்டன. முதலில் திருவள்ளுவன், அடுத்து தாமோதரன், கடைசியாக நான். ஆனால் ஆளுநர் சந்திப்பில் முறை மாறியது. முதலில் என்னைச் சந்தித்தார். நான் ஒரு வாசல் வழியாக வெளியேறியபோது இன்னொரு வாசல் வழியாகத் தாமோதரன் நுழைந்தார். ஆளுநர் சந்திப்பு முடித்தவர்கள் செல்ல லாம் எனச் சொல்லப்பட்டது. நானும் தாமோதரனும் ராஜ்பவனை விட்டு வெளியே வந்து விட்டோம். திருவள்ளுவனின் கார் வரும் என எதிர்பார்த்தபோது தாமதமானது. சரி தங்குமிடத்திற்குப் போகலாம் என்று கிளம்பிப் போய்விட்டேன். தங்கியிருந்த இடத்திலிருந்து பத்துநிமிட தூரத்தில் உயிர்மை அலுவலகம் இருப்பதாக கூகுள் வரைபடம் காட்டியது. அங்கு போய் மனுஷ்யபுத்திரனிடம் பேசிக் கொண்டிருந்து விட்டுத் திரும்பி வந்து முகநூலைத் திறந்தபோது அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மொழியியல் துறையின் முதன்மையர் திருவள்ளுவன் துணைவேந்தராக நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்ற தகவலைப் பதிவுசெய்யப்பட்டிருந்தது. பெரிய ஏமாற்றம் தான். ஏற்கெனவே துணைவேந்தராக இருந்த முனைவர் பாலசுப்பிரமணியம் மொழியியல் துறையைச் சேர்ந்தவர். இப்போது நியமிக்கப்பட்டிருப்பவரும் மொழியியல் துறையைச் சேர்ந்தவர் என்பதுதான் எனது ஏமாற்றத்திற்கு முதல் காரணம்.

தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தராக ஆக வேண்டும் என்ற விருப்பம் இருந்தது என்பதைச் சொல்வதில் தயக்கம் எதுவும் இல்லை. ஆனால் ஆக முடியும் என்ற நம்பிக்கை 2018 இல் நடந்த நேர்காணலுக்குப் பின் தகர்ந்தது. அந்த முறையும் விண்ணப்பித்த 100 -க்கும் அதிகமானோரிலிருந்து குறுக்கப்பட்ட 10 பேர் கொண்ட குறும்பட்டியலில் எனது பெயரும் இருந்தது. நேர்காணல் செய்யப்பட்டேன். ஆளுநரைச் சந்திக்கும் மூவரில் ஒருவராக நீங்கள் இருப்பீர்கள் என்று தெரிவுக்குழுவில் இருந்த ஒருவர் முன்பே சொல்லியிருந்தார். அப்படிச் சொன்னவர் மதிப்பிற்குரிய பேராசிரியர். ஆனால் அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. அந்த முறை ஆளுநரைச் சந்திக்கத் தெரிவு செய்யப்பட்ட மூவருமே மொழியியல் துறையைச் சேர்ந்தவர்களாக இருந்தது தமிழ் இலக்கியத்துறைப் பேராசிரியரான எனக்கு வருத்தமாக இருந்தது.

தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தராக இருந்த பேரா.வ.அய். சுப்பிரமணியம் அறியப்பட்ட மொழியியல் பேராசிரியர். அவரைப் போலவே மொழியியல் துறையைச் சேர்ந்தவர்களால் தமிழ்ப் பல்கலைக்கழகம் அறிவியல் பார்வையுடன் ஆய்வுகளை முன்னெடுக்கும் என்ற நம்பிக்கொண்டு தெரிவுசெய்த மொழியியல் பேராசிரியர்கள் சாதனைகள் எதனையும் செய்து விடவில்லை. பேராசிரியர் அகத்தியலிங்கம் காலத்தில் சில முன்னோக்கிய நகர்வுகள் இருந்தன. அவருக்குப் பின்னால் துணைவேந்தர்களாக வந்த மொழியியல் துறைப் பேராசிரியர்கள் புதிய பார்வைகளை முன்னெடுக்கவில்லை. தமிழ் இலக்கியம் படித்தவர்களுக்குப் பல்கலைக்கழக நிர்வாகம் தெரியாது என்று நினைக்கிறார்களோ என்ற நினைப்பினால் ஏற்பட்ட வருத்தம். அந்த வருத்தத்தை நீட்டித்துக் கொள்ளவில்லை. பேராசிரியப் பணியை முடித்து இரண்டு ஆண்டுகளாக ஓய்வூதியமும் வாங்கியாகிவிட்டது.

இப்போதைய ஒன்றிய அரசு, துணைவேந்தர்களின் பதவிக்காலம் 70 வயதுவரை இருக்கலாம் என மாற்றியது. அந்த மாற்றம் திரும்பவும் விண்ணப்பிக்கலாம் என்ற நினைப்பைத் தூண்டினாலும் அரசியல் நெளிவுசுழிவுகளுக்குள் நுழைந்து வெற்றிபெற முடியும் என்ற நம்பிக்கையை உண்டாக்கவில்லை. ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது; நல்லாட்சி தரவேண்டும் எனத் திராவிட முன்னேற்றக் கழகமும் அதன் தலைவரும் முதல்வருமான திரு மு.க.ஸ்டாலின் நினைக்கிறார்; எனவே விண்ணப்பம் செய்யுங்கள் என்று நண்பர்கள் சொல்லச்சொல்ல விண்ணப்பிக்கும் ஆசை கூடிவிட்ட து. உரிய நேரத்தில் விண்ணப்பித்தேன். விண்ணப்பித்தவர்களைக் குறும்பட்டியலாக்கிய பின் தெரிவுக் குழுவைச் சந்திக்க ஆறுபேர் அழைக்கப்பட்டோம். அழைக்கப்பட்டவர்களில் ஒருவரே மொழியியல் துறையைச் சேர்ந்தவர். மற்றவர்கள் ஐவரும் தமிழ்ப் பேராசிரியர்கள். ஐந்துபேரில் மூன்றுபேர் ஓய்வுபெற்ற பல்கலைக்கழகப் பேராசிரியர்கள்.

ஆறுபேரில் பல்கலைக்கழக மானியக்குழுவின் விதிகளின் படியும் தரப்புள்ளிகள் உருவாக்க முறைகளின் படியும் முதலிடத்தில் இருக்கும் வாய்ப்பு எனக்கு இருக்கிறது என்பதாகப் பலரும் சொன்னார்கள். சொன்னவர்களில் சிலர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றவர்கள். அத்தோடு தமிழ்ப் பல்கலைக்கழகம் அதன் தோற்ற நோக்கங்களிலிருந்து விலகிவிட்டது; அதன் கல்வித்திட்டங்களில் மாற்றம் செய்யவேண்டும்; அதற்கு இப்போது தெரிவு செய்யப்பட்டுள்ள மூன்று பேரில் நீங்கள் துணைவேந்தராக வந்தால் நடக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்கள். எனக்கும் அப்படியான திட்டங்கள் இருந்தன. உலகத்தமிழ் இலக்கியப் பார்வையோடு தமிழ்ப் பல்கலைக்கழத்தைத் திசைமாற்றம் செய்யவேண்டும் என்று நினைத்தேன்.

31 ஆண்டுக்காலப் பணி அனுபவம், பள்ளி, கல்லூரிகள், உள்நாட்டு- வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களின் கல்வித்திட்டங்களை உருவாக்கிய திட்டமிடல்கள், மாநில, ஒன்றிய அரசின் தமிழ் சார்ந்த குழுக்களில் இருந்து விவாதித்துப் பெற்ற பங்களிப்புகள், ஈராண்டு அயல்நாட்டுப் பல்கலைக்கழகப் பணி என எல்லாம் சேர்ந்து துணைவேந்தராகும் வாய்ப்பை ஏற்படுத்தித் தரும் என்று நம்பினேன். என்னுடைய நம்பிக்கையும் என்னை ஊக்குவித்தவர்களின் நம்பிக்கையும் பொய்த்துப்போனது.

எனது மாணவப்பருவம் தொடங்கி இடதுசாரிப்பார்வை கொண்டவனாக இருந்தது என்னைத் தெரிவுசெய்வதில் தடையாக இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது. ஆளுநரோடு சந்திப்பு நடப்பதற்கு முந்திய ஒருவார காலத் தொலைபேசி அழைப்புகள் ஒன்றைத் திரும்பத்திரும்பச் சொல்லிக்கொண்டே இருந்தன. மாநில ஆளுங்கட்சியைவிடவும், ஒன்றிய ஆளுங்கட்சியினரே தீர்மானிக்கும் இடத்தில் இருக்கிறார்கள். அதன் தலைவர்களில் ஒருவரைச் சந்தித்து முயற்சி செய்யுங்கள் என்று அறிவுரை சொன்னார்கள். சொன்னவர்கள் எனது நலம் விரும்பிகள் தான். சந்திக்கும் வழிமுறைகளை யெல்லாம் கூடச் சொன்னார்கள்; எப்படி முயற்சிசெய்ய வேண்டும் என்ற ஆலோசனைகளும் தரப்பட்டன. அந்த ஆலோசனைகளை என்னால் ஏற்கமுடியாது என்பதைச் சொல்லத்தயங்கவில்லை. கருத்தியல் ரீதியாக ஒத்துப்போக முடியாதவர்களைப் பதவிக்காக பார்ப்பதும், அவர்களின் வழிகாட்டுதலை ஏற்பதும் என்னால் இயலாது என்று சொல்வதைத் தவிர வேறு வழியில்லை. தங்கள் துறைசார்ந்த புலங்களில் கோட்பாட்டுப் பார்வையற்றவர் களுக்குத் துணைவேந்தர் பதவிகள் தரப்படுவதின் மூலம் புறநிலையில் திணிக்கப்படும் கருத்தியல் செயல்பாடுகள் செயல்பாட்டுக்குரியனவாக மாறும் வாய்ப்புகள் உண்டு. எதிர்காலத்தில் கல்விப்புலங்களில் அதுதான் நடக்கப்போகிறது.

2021 இல் போட்டியின் கடைசிவரை சென்ற எனக்குத் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவி விலகிப்போனதை ஏமாற்றத்தின் கதை என்று சொல்வதைவிடத் தோல்வியின் கதை என்று வர்ணிக்கவே நினைக்கிறேன். அந்தத்தோல்வியை 2022 இல் வேறொன்றின் வெற்றியால் ஈடுசெய்ய வேண்டும். எழுத்து என்வசம் இருக்கும் ஒரு கருவி; பயணங்கள் இன்னொரு வடிகால். பெருந்தொற்றுக்காலத்தைத் தாண்டிவிட்டால் உள்ளூர்ப் பயணங்களும் உலகப்பயணங்களும் வாய்க்கும் என்ற நம்பிக்கை உண்டு.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்