நூல் அறிமுகத்தின் மாதிரிகள்


இம்மாத காக்கைச்சிறகினிலே இதழ் பொங்கல் சிறப்பிதழாக அச்சிட்டு அனுப்பப்பட்டுள்ளது. பொங்கல், புத்தாண்டு, தமிழர் பண்டிகைகள், கொண்டாட்டங்கள் தொடர்புடைய விவாதங்களை முன்வைக்கும் கட்டுரைகளை அதிகம் வெளியிட்டுள்ள இச்சிறப்பிதழில் கவனத்திற்குரிய இரண்டு நூல் அறிமுகங்கள் இடம்பிடித்துள்ளன.
வாசித்து அறிமுகப்படுத்த நூலோடு உடன்பாடுள்ள நிலையில் எழுதப்படும் அறிமுகக்கட்டுரை எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு முன்மாதிரியாக ஒரு நூல் அறிமுகக் கட்டுரையை ஒருவரும், தன்னுடைய கருத்தியலோடும் நிலைபாட்டோடும் உடன்பாடில்லாத நிலையிலும் அறிமுகப்படுத்த வேண்டிய நூல் என ஏற்றுக் கொண்டு அறிமுகம் செய்வது எப்படி என்பதற்கு முன்மாதிரியாக இன்னொரு கட்டுரையும் அமைந்துள்ளன. முதல்வகைக் கட்டுரையை எழுதியவர் பேரா.சி.மௌனகுரு. இரண்டாவது கட்டுரையை எழுதியவர் விமரிசகர் கௌரிபரா.
பேரா.எஸ். பத்மநாதன் தொகுத்துள்ள “ இலங்கைத் தமிழர் வரலாறு - கிழக்கிலங்கையில் நாகரும் தமிழரும்( கிமு. 250 -கிபி300)” என்ற தொகுப்புநூலை மிகுந்த பொறுப்புடன் அறிமுகப்படுத்தியுள்ள பேரா.சி. மௌனகுரு, இத்தொகுப்பு நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகளில் தொகுப்பாசிரியரின் முதன்மையான பங்களிப்புகளைப் பட்டியலிட்டுள்ளதோடு, இந்நூலின் வரவால் இலங்கைத் தீவில் வாழும் தமிழர்களின் தொன்மைகுறித்த சொல்லாடல்களில் ஏற்படுத்தக் கூடிய அறிவியல்பூர்வமான வரலாற்றுண்மைகள் குறித்து விரிவாகப் பேசுகிறார். எழுத்துப் பனுவல்களையும் வாய்மொழித் தகவல்களையும் தொகுத்து எழுதப்பட்டுள்ள இந்நூலின் கட்டுரைகள் இதுவரையிலான வரலாற்றெழுதியல் முறையிலிருந்து மாறுபடும் இடங்களைச் சுட்டிக்காட்டுவதோடு, வரலாறெழுதியலில் கல்விப் புலத்தினரின் பங்களிப்பையும் பங்களிப்பின்மையும் விவாதப்படுத்தியுள்ளார். இந்நூலோடு தொடர்புடைய பிற நூல்களின் விவரங்களையும் குறிப்பிட்டு அவற்றை வாசிக்க விரும்புபவர்களுக்கு வழிகாட்டவும் செய்துள்ளார். வரலாற்றெழுதியல் ஆய்வாளர்கள் கற்றுக்கொள்ள ஏராளமான செய்திகள் உள்ள நூலை உடன்பாட்டு நிலையில் அறிமுகம் செய்துள்ள பேராசிரியர் எப்போதும் எந்தப் பொருண்மையிலும் சரியான முறையியலோடு இயங்குபவர். ஒவ்வொரு இயலையும் தனித்தனியாகக் குறிப்பிட்டு விவாதித்துள்ள இக்கட்டுரை காக்கைச் சிறகினிலே இதழின் ஆறுபக்கங்களில் (46-51) விரிந்துள்ளது. ஒன்றுக்கு இரண்டுதடவை வாசித்தபோது கட்டுரை அமைப்பின் சிறப்பை உணர்ந்து ரசிக்க முடிந்தது. பேரா.சி.மௌனகுரு நூல் அறிமுகத்திலும் ஒரு முன்மாதிரியைத் தந்துள்ளார்.
இலக்கியவிமர்சனத்தைத் தாண்டி அரசியல், பொருளாதாரம், புலம்பெயர் வாழ்வியல் சிக்கல்களில் தனிநபர்களும் அமைப்புகளும் எதிர்கொள்ளும் பிரச்சினைப்பாடுகளை விவாதப்படுத்தும் கௌரி பரா அறிமுகப்படுத்தியுள்ள நூல் ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ள நாவல். இந்த ஆண்டு புக்கர் விருதுக்குரிய குறும்பட்டியலில் இடம்பிடித்துள்ள வடக்குக்கு ஒருபாதை - A PASSAGE NORTH - எனும் அனுக் அருட்பிரகாசத்தின் நாவல் முள்ளிவாய்க்கால் பேரழிவுக்குப் பின்னர் எழுதப்படும் போர்க்கால நாவல்களில் ஒன்றுதான். ஆனால் நேரடியாக ஆங்கிலத்தில் எழுதப்பெற்றுள்ளதால் உலக அளவிலான ஆங்கில வாசகர்களின் கவனத்தைப் பெற்றுள்ளதோடு புக்கர் விருதுக்கான பட்டியலிலும் இடம் பிடித்துள்ளது.
தனிநாட்டுக்கோரிக்கையை வெளியிலிருந்து பார்த்து எழுதப்பெற்றுள்ள இந்த நாவலின் கதைகூற்று முறையிலும் பாத்திர உருவாக்கத்திலும் விவரிப்பிலும் கௌரி பராவிற்கு உடன்பாடு இல்லை என்பதை அவரது அறிமுகம் காட்டுகிறது. இலங்கைத் தமிழர்களின் அரசியல் போராட்டங்களையும் ஆயுதப் போராட்டங்களையும் அதன் உள்ளார்ந்த அர்த்தங்களில் புரிந்துகொள்ளாமல் தனிநபர்களின் உளவியல் விவரிப்புகளாகவும் சுற்றுலா மனப்போக்கிலும் எழுதப்பெற்றுள்ளது என்ற விமரிசனத்தைச் சொல்கிறார் கௌரி பரா. நாவலாசிரியருக்கு- ஈழத்தமிழராக இருந்த போதிலும் போர்க்காலம் மற்றும் வெளி குறித்த நேரடி அனுபவங்கள் குறைவு என்பது ஒரு காரணமாக இருக்கும் என்கிறார். அத்தோடு இணையத்தில் கிடைத்த தகவல்களை அதிகம் நம்பியிருக்கிறார் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார். சம காலப் பெருநிகழ்வொன்றை - அரசியல் போராட்ட வரலாற்றைப் பின்னணியாகக் கொண்ட நாவலை விமரிசனத்திற்குள்ளாக்கி விரிவாகப் பேசும் ஐந்து பக்கக் கட்டுரை உடன்பாடில்லாத நிலையிலும் நல்லதொரு அறிமுகத்தைத் தரமுடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாக இருக்கிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

தணிக்கைத்துறை அரசியல்

நவீனத்துவமும் பாரதியும்