தமிழில் எழுதப்பெற்ற இந்தியக்கதைகள்: அம்பையின் சிவப்புக்கழுத்துடன் ஒரு பச்சைப்பறவை


அரசவிருதுகளும் கலைஞர்களும்

கலை இலக்கியங்களுக்கு விருதுகள் வழங்கிப் பெருமைப்படுத்தும் ஒன்றிய அரசின் அகாதெமிகளான சாகித்திய, சங்கீத, லலித் கலா அகாடெமிகள் முறையே எழுத்துக் கலைகள், நிகழ்த்துக்கலைகள், நுண்கலைகள் போன்றவற்றிற்கும் அவற்றை உருவாக்கிச் சிறந்த பங்களிப்பு செய்தவர்களுக்கும் விருதுகள் வழங்கிப் பெருமைப்படுத்துகின்றன. இம்மூன்று அமைப்புகளில் எழுத்துக் கலைக்கு விருது வழங்கும் சாகித்திய அகாதெமி மட்டுமே மொழி அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் ஒருவருக்கு விருதினை வழங்குகிறது.

மற்ற இரண்டுக்கும் மொழி அடிப்படைகள் கிடையாது. கலைப்பிரிவுகள் அடிப்படையில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் விருதுகளை வழங்குகின்றன. தொடக்கநிலையில் எழுத்துக்கு விருது என்றிருந்த நிலை மாறி, சாதனையாளர்களுக்கு விருது என்றான நிலையில் இளம் கலைஞர்களுக்கும் விருது வழங்குவதின் மூலம் தொடர் செயல்பாடுகளுக்கு ஊக்கமளிக்க வேண்டுமென யுவபுரஷ்கார் விருதுகளையும் இம்மூன்று அமைப்புகளும் வழங்குகின்றன.
எனது பட்டப்படிப்பின்போது (1977-80) இலக்கிய இதழ்கள் வாசிப்புத் தொடங்கியது. தொடக்கம் முதலே எனது வாசிப்புக்கான கதைகளை எழுதித் தந்துகொண்டிருப்பவர் சி.எஸ். லட்சுமி என்ற அம்பை. அவருக்குக் கடந்த (2021) ஆண்டிற்கான சாகித்திய அகாதெமி விருது அறிவிக்கப்பெற்றுள்ளது. ‘சிவப்புக்கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை’ என்ற சிறுகதைத் தொகுதியைக் குறிப்பிட்டு இவ்வாண்டுக்கான விருதை அறிவித்துள்ளது அகாதெமி. அறிவிக்கப்படும் ஆண்டுக்கு முன்னால் குறிப்பிட்ட ஆண்டுகளுக்குள் வந்துள்ள நூலே விருதுக்குத் தகுதியானது என்ற விதியொன்று இருப்பதால், இப்படி அறிவிக்கப்படுகிறது என்பதைத் தவிர, குறிப்பிடப்படும் நூலுக்குப் பெரிய காரணங்கள் எதுவும் இருப்பதில்லை என்பதைப் பலரும் அவ்வப்போது சுட்டிக்காட்டி வருகின்றனர். நானும் சில வருடங்களில் சுட்டி எழுதியுள்ளேன்.
தமிழக வாசகப்பரப்பாலும் வெகுமக்களாலும் கவிகளென அறியப் பெற்ற பாரதி தாசனுக்கும், கண்ணதாசனுக்கும், வைரமுத்துவுக்கும் கவிதை வடிவத்திற்குப் பதிலாக நாடகத்திற்கும், புனைகதைகளுக்கும் விருது அறிவித்தால் விமரிசிக்காமல் எப்படிக் கடந்து போவார்கள். ஆ.மாதவன், அசோகமித்திரன், நாஞ்சில் நாடன் போன்ற நாவலாசிரியர்களுக்கு அவர்களது சிறப்பான நாவல்கள் வெளிவந்த காலத்தை விட்டுவிட்டு, ஒரு கட்டுரைத் தொகுப்பைக் குறிப்பிட்டு ஆ. மாதவனுக்கு விருது வழங்கப்பட்டது. அசோகமித்திரனுக்கும் நாஞ்சில் நாடனுக்கும் சிறுகதைகளுக்கு விருது வழங்கப்பட்டது. அப்போதும் விமரிசனங்கள் எழுந்தன.விருது வழங்கும் சாகித்திய அகாதெமியின் விதிகளும் நடைமுறைகளும் மாற்றப்படவேண்டும் என்பதையே பலரும் சுட்டிக்காட்டி வருகின்றனர். இது நிற்க.

அம்பை:

1944 (நவம்பர் 17) இல் பிறந்து, 1960 களின் பிந்திய ஆண்டுகளில் எழுதத்தொடங்கிய அம்பையின் முதல் எழுத்தே அறுபது வயதைத் தாண்டிவிட்டது. நந்திமலைச் சாரலிலே (1961) என்றொரு குழந்தைகள் நாவலும், அந்திமழை (1966) என்றொரு நாவலும் அவரது தொடக்க கால எழுத்துகள் என்ற குறிப்புகள் கிடைக்கின்றன. ஆனால் நீண்ட நாள் வாசகனான நான் அவற்றைப் பார்த்ததில்லை. எனது பட்டப்படிப்புக் காலத்தில் அவரது சிறகுகள் முறியும் (1976) தொகுதி அறிமுகமானது. நீண்ட இடைவெளிக்குப் பின் வீட்டின் மூலையில் ஒரு சமையல் அறை(1988), காட்டில் ஒரு மான்(2000) என்ற இரண்டு சிறுகதைத் தொகுப்புகள் அச்சில் கிடைத்தன; பரவலாக வாசிக்கப்பட்டுத் தமிழின் முன்னோடிப் பெண்ணிய எழுத்தாளர் என அறியப்பட்டார். அந்த நிலையிலேயே அவருக்குச் சாகித்திய அகாதெமி விருது பெறத்தக்க பங்களிப்பு இருந்ததாகச் சொல்லப்பட்டார். அகாதெமியின் முதல் சுற்றுப் பெரும்பட்டியல்களில் அவரது பெயர் இடம்பெற்றதை நான் அறிவேன். அதற்குப் பின்பு வற்றும் ஏரியில் மீன்கள் (2007), ஒரு கறுப்புச் சிலந்தியுடன் ஓர் இரவு (2014), ஸாரஸ் பறவை ஒன்றின் மரணம் (2019) ஆகியன வந்துள்ளன. அதே ஆண்டில் (2019) தான் சிவப்புக்கழுத்துடன் ஒரு பச்சைப்பறவை என்ற விருதுபெற்ற நூலும் அச்சிடப்பெற்றுள்ளது; மூன்றாவது பதிப்பாக 2021 இல் அச்சாகியுள்ளது.

1988 இல் மும்பையில் பெண்கள் ஆவணக்காப்பகம் ஒன்றை (SPARROW)நிறுவி, அதன் வழியாக இசை, நடனம் சார்ந்த பெண்கள் குறித்த ஆய்வுகளை மேற்கொள்வது, நூல்களை வெளியிடுதல், எழுத்தாளர்கள்/ கலைஞர்களுக்கு விருதளித்தல் போன்ற இலக்கியச் செயல்பாடுகளைச் செய்துவரும் அம்பை, சமகாலப் பெண்கள் குறித்துத் தமிழிலும் ஆங்கிலத்திலும் கடந்த கால் நூற்றாண்டுகளுக்கும் மேலாக எழுதும் எழுத்தாளர்; கருத்தியலாளர். அவருக்கு அமெரிக்காவிலிருந்து வழங்கப்படும் விளக்கு அமைப்பின் புதுமைப்பித்தன் விருது(2005) கனடாவாழ் தமிழர்களும் டொரண்டோ பல்கலைக்கழகமும் இணைந்து வழங்கும் இலக்கியத்தோட்ட வாழ்நாள் சாதனையாளர் விருது (2008) தமிழக அரசின் கலைஞர் கருணாநிதி பொற்கிழி (2011) சென்னைப் பல்கலைக்கழகத்தின் இலக்கியத்தில் உன்னதத்திற்கான விருது(2011) போன்றன வழங்கப்பட்டுள்ளன. நிறைவாக இப்போது சாகித்திய அகாதெமியின் விருதினைப் பெற்றுள்ளார்.

சிவப்புக்கழுத்துடன் ஒரு பச்சைப்பறவை -எனது வாசிப்பு

அம்பையின் சிவப்புக்கழுத்துடன் ஒரு பச்சைப்பறவை என்ற சிறுகதைத் தொகுப்பு விருதுபெறுகின்றது என்ற அறிவிப்பு வந்தபோது, மணல்வீடு இதழில் அந்தக் கதையை வாசித்துவிட்டு, ‘ஏன் இந்தக் கதையை ஒரு நாவலாக விரித்து எழுதியிருக்கக்கூடாது என்று நினைத்துக் கொண்டது நினைவுக்கு வந்தது. ஒரு நாவல் வடிவத்திற்குத் தேவையான காலப்பரப்பரப்பையும் வெளிகளையும் உணர்வெழுச்சிகளின் தொகுப்பையும் கொண்ட அந்தக் கதையை வேகம் வேகமான – இடைவெளிகள் இல்லாத பயணங்களாலான தேடல்கள் நிரம்பிய சிறுகதையாக முடித்திருந்தார். அந்தக் கதையில் தொடர்ந்து தேடி அலையும் இரண்டு பெண்களின் மனத்தவிப்பே கதையின் மைய விவாதம் என்றாலும், அந்தப் பெண்களுக்காகத் தனது வாழ்வைத் தியாகமாக்கிக்கொண்ட ஒரு ஆணையே எழுதிக்காட்டியிருந்தார். அதே நேரத்தில் தனது விருப்பங்களைத் தாண்டிய முடிவுகளை எடுத்துவிடும் பெண்களாக அவர்கள் மாறிவிடும் வாய்ப்பிருக்கிறது என்பதை ஊகித்துத் துறவு வாழ்க்கையைத் தேடி ஓடும் ஆணாகவும் அவரைக் காட்டியிருந்ததும் நினைவுக்கு வந்தது. அந்த நினைவைத் தொடர்ந்து அம்பை கடைசியாக எழுதி அச்சில் வாசித்த கதையும் வெளிவந்த இதழும் என் முன்னால் கிடந்தன. கதையின் தலைப்பு: இரு பைகளில் ஒரு வாழ்க்கை. கோவிட் தடைக்காலத்திற்குப் பிறகு திரும்பவும் வரத்தொடங்கிய உயிர்மையின் (அக்டோபர், 2021) முதல் இதழில் அச்சான கதை. அந்தக் கதையைத் திரும்பவும் எடுத்து வாசித்துவிட்டு, அம்பைக்கு வாழ்த்துகள் என முகநூலில் குறிப்பொன்றை எழுதினேன்:

மும்பை நகரப்பின்னணியில் மழைக்கால வாழ்க்கைப்பாடுகளைப் பேசிய கதை. அடுக்கு மாடிக்குடியிருப்பு வாசியான கதைசொல்லியின் எண்ண வோட்டங்களுக்குள் நிகழ்கால இருப்பாக அவரது தீர்மானமும் முடிவுகளும், கடலோரக் குடிசைப்பகுதி மனிதர்களின் எண்ணவோட்டங்களோடு இணை வைத்துக் காட்டப்பட்டிருந்தது. அரசமைப்புகளின் பொறுப்பின்மையையும் இயற்கை உருவாக்கும் அச்சவுணர்வையும் ஏற்றுக் கொள்வதில் இருவேறு வர்க்கப்பெண்களுக்கும் வேறுபாடுகள் இல்லை என்பதாகக் காட்டும் இணைவைப்பு அது. அதே கதைக்குள் கடந்தகாலப் பயணம் ஒன்றிருந்தது. நினைவுப் பாதையில் வந்துபோகும் அந்த நினைவோட்டத்தில் கதை சொல்லியின் அமெரிக்கக் கணவனும் பிள்ளையும் வருகிறார்கள். அவர்களின் தொடர்ச்சியான இந்தியப் பெருமைகளை நிராகரிக்கும் போக்கைத் தாங்கமுடியாமல் விவாகரத்து வாங்கிக் கொண்டு இந்தியா திரும்பியதை நினைத்துப் பார்த்துக்கொள்ளும் பகுதியாக அந்த நினைவோட்டம் அமைக்கப்பட்டிருந்தது. விமானத்தில் இரண்டு பெட்டிகளில் கொண்டுவரும் அளவுக்குப் பொருட்கள் இருந்தபோதும், இரண்டு பைகளில் அடங்கக்கூடிய பொருள்களோடு இந்தியா திரும்பியதை நினைத்துப் பார்க்கிறது கதைசொல்லியான அந்தப் பெண்ணின் மனம்.

அமெரிக்க மனத்தோடு - தன்னிலையோடு- அமெரிக்கக் கணவனும் மகனும் காட்டும் உதாசீனமும் நிராகரிப்பும், தனி மனுசியாகத் தன்னை நிராகரிப்பாக அவளுக்குத் தோன்றவில்லை. இந்தியத் தன்மைகளையும் பெருமைகளையும் ஏற்க மறுக்கும் அமெரிக்க/ மேற்கத்திய மனோபாவம் கொண்டவர்களின் நிராகரிப்பு என்ற ஆதங்கம் அவளிடம் கோபமாக வெளிப்படுகிறது. அப்படி வெளிப்பட்ட அந்த மனவோட்டம் தனியொரு பெண்ணின் மனவோட்டமாக இல்லாமல் “இந்தியப்பெண்”ணின் மனவோட்டமாக எழுதப் பெற்றிருந்தது. சொர்க்கமே என்றாலும் நம்ம ஊரைப்போல வருமா? என்ற பொதுப்புத்தி மனநிலைக்குப் பக்கத்தில் நின்று ”இந்தியாவை அனைத்துக் குறைபாடுகளோடும் ஏற்றுக்கொள்ளச் சொல்லும் குரலாக வெளிப்படும் கதைசொல்லியின்” மொழிநடையும் முன்வைப்பும் இருந்தன. அது ஒருவிதத்தில் கிழக்கையும் மேற்கையும் முரணிலையாக முன்வைத்துவிட்டு, மேற்கைப் பகை முரணாக்கும் பார்வையின் வெளிப்பாடு. இந்தியாவை மேற்குலகோடு ஒப்புவைத்துப் பார்க்கும் பார்வையை ஏற்காமல், இந்தியத்தனத்தோடு, இந்தியப் பாரம்பரிய பெருமைகளோடு ஏற்க வேண்டும் என்பதை முன்வைக்கும் நிலைபாடு.
****
இந்த நிலைபாட்டைக் கொண்ட மனநிலையை ஐந்தாண்டுகளுக்கு முன்பு வந்த அம்பையின் இன்னொரு கதையிலும் வாசிக்க நேர்ந்ததும் அது குறித்து ஒரு விமரிசனக் குறிப்பொன்றை எழுதியதும் அப்போது நினைவுக்கு வந்தது. கதையின் தலைப்பு: தொண்டை புடைத்த காகம். அந்தக் கதை வந்த ஆண்டு 2015. அச்சான இதழ் இந்து தமிழின் சிறப்பு மலர்(பக்.190 -195) தொண்டை புடைத்த காகம் கதையின் கதைசொல்லி, கதைக்குள் ஒரு பாத்திரமாக இல்லை. தந்தைமையை விட்டு விலக முடியாத மகளை மையப்பாத்திரமாக்கி நகர்த்தப்படும் கதையின் தொடக்கம் இப்படி இருக்கிறது:

“அடுப்பில் தோசைக்கல்லைப் போட்டவுடனேயே வந்துவிடும் அது. முதல் தோசை ஊற்ற ஆரம்பிக்கும்போது கரையத்தொடங்கும். ‘கா’ ‘கா’ என்றில்லை. ‘க்ர்ர்க்’ என்று கொஞ்ச நேரம்.’க்ஹக்’ என்று சிறிதுநேரம். சிலசமயம் ‘க்ளைக்’ என்று கொப்பளிப்பதுபோல ஒரு நாள். ‘கங்ங்.. கங்ங்’ என்று மிழற்றும். சிலசமயம் ‘க..ல்..லூ..’ என்று ஒருநாள். அதன் குரல் ஒலித்ததும் தூக்கிவாரிப்போட்டது அவளுக்கு. அப்படித்தான் அப்பா அவளைக் கூப்பிடுவார்.”
உயிருடன் இருந்த காலத்தில் பெருந்தீனிக்காரராகவும், காதலர்களாக வந்தவர்களையே நெருங்க விடாமல் ஆதிக்கம் செலுத்தும் அன்பைத் தன் மகளிடம் பெற்றுக் கொண்டவராகவும் இருந்த அப்பாவின் தந்தை ஆதிக்கம் இறந்தபின்னும் தொடர்வதாக அவள் நினைக்கின்றாள். அந்த நினைப்பே அந்த காகத்தைத் தன் தந்தையாக நினைக்க வைக்கிறது. அது அவளைத் தேடித்தேடி வருவது வெறும் சாப்பாட்டுக்காகத்தான் என நினைக்கிற ஒரு கணத்தில் - “போய்த் தொலை. உன் தொல்லை தாங்கல” என்று கத்தினாள்; சன்னலை அறைந்து சாத்தினாள் - என்ற வரிகள்கூட எழுதப்பட்டுள்ளன. ஆனால் அதனைத் தொடர்ந்து தந்தையைப் பராமரிக்க வேண்டிய நெருக்கடியால் அந்தப் பெண் இழந்த காதல்களும், தனித்துவ நிலைப்பாடுகளும் எண்ணங்களாக விரிக்கப்படவில்லை. அதற்கு மாறாக அந்தக் காகம் ஒரு வண்டியில் அடிபட்டுச் சரிந்து தலையைப் புதைத்துக்கொண்டபோது அவளின்மனம் கசிகிறது; தவிக்கிறது. அந்தத் தவிப்பு, அவரைச் சரியாகக் கவனித்துக் கொள்ளவில்லையோ என்ற குற்றவுணர்வின் நினைப்புகள் என்பதான தொனியைக் கதையின் வாசகர்களுக்குக் கடத்துகிறது.
ஆண்களின் எல்லாவகை ஆதிக்கத்தின் மீதும் பெண்ணியம் - எல்லாவகைப் பெண்ணியச் செயல்பாட்டாளர்களும், பெண்ணியத்தை உள்வாங்கி எழுதும் எழுத்தாளர்களும் விமரிசனங்களை வைக்கிறார்கள் என்பது அறிந்த ஒன்று. குடும்ப வெளியையே ஆதிக்கம் நிகழும் முதன்மை வெளியாகப் பெண்ணியம் நம்புகிறது. குடும்பத்தை அடுத்தே கல்விச் சாலைகள், பணியிடங்கள், பொழுதுபோக்கு வெளிகள் போன்றன விமரிசிக்கப்படுகின்றன. குடும்ப அமைப்பில் நிகழும் ஆதிக்கத்திலிருந்து விடுபடும் உரிமையைத்தான் விவாகரத்து உரிமையாகப் பெண்ணியம் முன்வைத்துப் போராடியது. ஆனால் இந்திய மரபும் அதன் ஆதரவாளர்களும் குடும்ப அமைப்பைப் பாதுகாப்பானதென்றும், அதற்குள் நிகழும் ஆதிக்கத்தை அன்பின் பாற்பட்ட மேலதிகப் பற்று என்றும் பேசிவருகின்றனர். தந்தைப்பாசம், கணவனின் பாதுகாப்பு, சகோதரர்களின் அரவணைப்பு, பிள்ளைகளின் கவனிப்பு என்பதான சொல்லாடல்களை, உரிமையைத் தடைசெய்யும் அதிகாரத்துவச் சொல்லாடல்களாகக் கணிக்காமல், பெண்ணைப் போற்றும்- மதிக்கும்- கொண்டாடும் கணிப்புகளாகப் பார்க்க வேண்டுமென வலியுறுத்துகின்றனர். அதனை ஏற்காதவர்களை மேற்கத்தியப் பண்பாட்டின் அம்சமெனக் கருதிக்கொள்ளும் பலபுருச/பலதார விருப்பத்தின் மீது விருப்பம் கொண்டவர்கள் எனப்பேசிப் பயமுறுத்துகின்றனர்.

இந்தியக் குடும்பவெளியை அன்பின் வெளியாகப் பார்க்க வேண்டுமா? ஆதிக்கத்தின் பகுதியாகப் பார்க்கவேண்டுமா? என்பதை அறியாதவரல்ல அம்பை. இந்தக் கதைக்குள் அத்தகையதொரு சொல்லாடலை -விமரிசனத்தை முன்வைக்க முடியும். ஆனால் அதைச் செய்யவில்லை. இந்தியக் குடும்ப அமைப்பையும், ஆணைச் சார்ந்து வாழக் கற்றுத்தரும் கல்வியையும் விமரிசனம் செய்த அம்பையிடம் ஏற்பட்டுள்ள மாற்றம் ஆச்சரியமாக இருந்தது. குடும்பத்து ஆண்களைச் சார்ந்து வாழ்தலை விமரிசனப் பார்வையோடு பார்க்காமல், அதனை முழுமனத்தோடு ஏற்றுக்கொண்ட பெண்களை முன்வைத்து நகர்ந்த. அந்தக் கதை உள்ளிட்ட ஐந்துபேரின் கதைகள் மீது நான் எழுதிய இந்த விமரிசனக் குறிப்பின் தலைப்பு: அடையாளம் அழிக்கும் புனைவு வெளி(https://ramasamywritings.blogspot.com/ 2015/12/blog-post_29.html)

சாகித்திய அகாதெமி விருதுபெற்ற சிவப்புக்கழுத்துடன் ஒரு பச்சைப்பறவையை தொகுப்பாக இன்னும் வாசிக்கவில்லை. அதில் இருக்கும் கதைகள் கடைசி மூன்றாண்டுகளில் வந்த கதைகளாகவே இருக்கும். அவற்றை வாசிக்கவேண்டும். அத்தோடு காலவரிசையில் அம்பையின் கதைகளை வாசிக்க வேண்டும். அந்த வாசிப்பு ஒரு எழுத்தாளரின் பாத்திரத் தேர்வுகளும் கருத்தியல் நகர்வுகளும் குறித்த பார்வையை வெளிப்படுத்தும்.அத்தோடு இந்தியப் பெருவெளியில் ஏற்பட்ட அரசியல் பார்வைகளின் தாக்கம் அதற்குள் இருக்கிறதா? என்பதையும் கூட உணர்த்துவதாக அமையலாம் என்று அந்தக் குறிப்பில் எழுதியிருந்தேன்.

தலித் இதழில் இந்தக் கட்டுரை எழுதுவதற்குள் கால வரிசையில் வாசிப்பு சாத்தியமில்லை என்பதால் விருதுபெற்ற தொகுப்பை மட்டும் வாங்கிப் படிக்கத் தொடங்கினேன். அத்தொகுப்பின் முதல் கதையே நான் வாசித்து விமரிசனக் குறிப்பெழுதிய தொண்டை புடைத்த காகம் ஒன்று என்றிருந்தது. அக்கதையையும் திரும்பவும் வாசித்துவிட்டு மீதமுள்ள 12 கதைகளையும் வரிசை மாற்றி வாசித்து முடித்த போது இக்கதைகளுக்குள் சில பொதுத்தன்மைகள் இழையோடுவதைக் காணமுடிந்தது. அவற்றை முதலில் விவரிக்கலாம். தொகுப்பிலுள்ள எல்லாக் கதைகளும் தமிழ்நாட்டுக்கு வெளியே நடக்கின்றன. கதையில் இடம்பெறும் பாத்திரங்களில் பெரும்பாலானவர்கள் அல்ல. தமிழர்களின் வாழ்வியல் வெளியில் இயங்கும் மனம் கொண்டவர்களுமல்ல. ஆனால் தனது கதைகளை வாசிப்பவர்கள் தமிழ் மனம் கொண்ட வாசகப்பரப்பு என்பதைக் கவனத்துடன் எழுதியதின் வழியாகவே இக்கதைகளைத் தமிழின் கதைகளாக மாற்றியிருக்கிறார் அம்பை. அத்தோடு கதைக்குள் உருவாக்கப்படும் கதைசொல்லிகளின் நினைவுக்குள் தமிழ்நாட்டின் பகுதிகளும் தமிழர்களின் கடந்த காலமும் உறைந்து கிடக்கின்றன.

தனது கதைகளின் உரையாடலிலோ நினைவோட்டத்திலோ கதை நிகழும் வெளிகளில் நடந்த அறியப்பெற்ற பெரும் நிகழ்வுகள் பற்றிய குறிப்புகளை இடம்பெறச் செய்வதின் மூலம் கதைகளுக்கான காலப்பின்னணியையும், அரசியல் பின்னணியையும் உருவாக்கித் தரும் உத்தியை அம்பையின் முந்திய தொகுப்புகளிலும் வாசிக்க முடியும். இந்தத் தொகுப்பில் உள்ள ‘1984’ என்ற கதைத் தலைப்பின் வழியாக இந்திரா காந்தியின் மரணமும் தொடர்ச்சியாகச் சீக்கிய மக்கள் டெல்லியில் சந்தித்த அவலங்களும் காட்சிகளாக நினைவு படுத்தப்படுகின்றன. தத்தா சமந்த் என்ற தொழிற்சங்கவாதியின் பெயரும் 1982 என்ற ஆண்டுக்குறிப்பும்(சாம்பல் மேல் எழும் நகரம்) பம்பாயில் நடந்த பெரும் ரயில்வே தொழிலாளர் போராட்ட நிகழ்வை நினைவூட்டுகின்றன. அரசுத்துறை அலுவலகங்களில் காணப்படும் உதாசீன மனநிலை மூலம் காங்கிரஸ் ஆட்சி போய்ப் புதிய கட்சி – பிஜேபி என்ற வேறு சிந்தனைக் கட்சி ஆட்சிக்கு வந்துள்ள குறிப்பைத் தருகிறார் (பயணம் 21). முதியவர்களின் இருப்பையும் உயிர் வாழ்தலையும் எரிச்சலாகப் பார்க்கும் மனப்போக்கை விவாதிக்கும் வீழ்தல் கதையில் அவசரநிலைக்காலம் நினைவூட்டப்படுகிறது.

இச்சிறுகதைத் தொகுப்பு முதியவர்களின் வாழ்வச்சத்தை விவாதிக்கும் தொகுப்பு எனக் குறிப்பிடத்தக்க வகையில் அதிகமாக முதியவர்களைப் பாத்திரங்களாக்கியுள்ளன. அவர்களின் பார்வைக்கோணத்தில் கடந்த காலம் திரும்பப் பார்க்கப்படுகிறது. முதியவர்களின் இருப்பை- நகர்வை – நினைப்பை விவாதிக்கின்றன. அவர்களைப் புரிந்து கொள்ளாத புதிய தலைமுறையினரின் -நிகழ்காலத்தலைமுறையினரின் மனப்போக்கை வாசிக்கத் தருகின்றன. தொழில் மயமான காலகட்டத்தில் அகலப்பரப்பில் விரிவடைந்த பெருநகரங்கள், உலகமயத்திற்குப் பிறகு குத்துநிலையில் அடுக்குமாடிக் கட்டடங்களாக உயரமாகும் நிலையில் முதியவர்களும் பொருளியல் ரீதியாகப் பின் தங்கியிருப்பவர்களும் அடையும் உளவியல் சிக்கல்களையும் தனிமையையும் அதிகம் விவாதிக்கின்றன. அதன் வழியாக இக்கதைகள் நிகழ்காலக் கதைகளாக மாறியிருக்கின்றன. தொண்டை புடைத்த காகம் ஒன்று, சாம்பல் மேல் எழும் நகரம், வீழ்தல், வில் முறியாத சுயம்வரங்கள், சிங்கத்தின் வால் முதலான கதைகள் முதுமையின் சிக்கல்களைத் தீவிரமாக விவாதிக்கும் கதைகள் என்றால், குதிரைக்காரி நகைச்சுவையாகத் துன்பியல் அங்கதமாக முதுமையை எழுதிக்காட்டிய கதையாக வெளிப்பட்டுள்ளது.

அடுக்குமாடிக் குடியிருப்புகளில் குடியிருப்பவர்கள் மட்டுமல்லாது, அங்கு சேவைப்பணிக்காக வருபவர்களின் பிரச்சினைகளும், அவர்களால் குடியிருப்பு வாசிகளுக்கு ஏற்படும் சிக்கல்களும் அதனால் உருவாகும் அச்சமும் தனிமையும் விரிவாக எழுதப்படவேண்டிய நிகழ்காலச் சிக்கல்கள். இவை நிகழ்காலத் தமிழகத்தின் பெருநகரவாழ்க்கை, முதியவர்களின் சிக்கல்கள் என்ற பருண்மையான அடையாளங்களைத் தாண்டி, இத்தொகுப்பில் உள்ள கதைகள் கருத்தியல் ரீதியான ஒரு பொதுத்தன்மையைக் கொண்டிருக்கின்றன. அப்பொதுத் தன்மையைக் குறிப்பிட்டுப் பேச, ‘மறுபரிசீலனை’ என்ற சொல்லைப் பயன்படுத்தலாம் என்று தோன்றுகிறது. அதனை இந்த ஒரு தொகுப்பிற்குள்ளேயே விவாதிக்கக்கூடாது என்றாலும், தொகுப்பில் இடம்பெற்றுள்ள சில தகவல்களையும் குறிப்புகளையும் கொண்டு அந்தக் கருத்தை விவாதிக்கலாம் என்றே நம்புகிறேன். தங்களுக்குக் கிடைத்த புதிய வெளிச்சம், அறிவுப்பரப்பு, சிந்தனையோட்டம் காரணமாகப் பழைய மரபின் மீது தீவிரமான விமரிசனங்களை முன் வைத்து நகர்ந்திருப்பார்கள். சில அமைப்புகளின் மீது நம்பிக்கை கொண்டு அதன் பகுதியாக மாறிச் செயல்பாடுகளிலும் ஈடுபட்டிருப்பார்கள். ஆனால் ஒரு கட்டத்தில் அவற்றின் மீது நம்பிக்கை இல்லாமல் போய்விடும் நிலையில் அவற்றிலிருந்து பின்வாங்கி ஒதுங்கிக் கொள்ளவும் செய்வார்கள். அமைப்புகளில் சேர்ந்து இயங்காமல் எழுத்துத் துறையில் மட்டும் இயங்கியவர்கள், தாங்கள் முன்வைத்த கருத்தோட்டங்களுக்கு மாறாகத் திரும்பவும் பழைய மரபின் மீது நம்பிக்கையை வெளிப்படுத்தத் தொடங்குவார்கள். அப்படியொரு எதிர்பயணம் செய்தவராக எழுத்தாளர் ஜெயகாந்தன் மீது விமரிசனங்கள் எழுந்ததுண்டு. ஜெயகாந்தனைப் போலவே அம்பையும் தனது முந்திய கருத்தோட்டங்களின் மீது மறுபரிசீலனையைத் தொடங்கியிருப்பதை இந்தத் தொகுப்பின் கதைகளில் வாசிக்க முடிகிறது.

பெண்ணியத்தின் சில கூறுகளை உயிர்மையில் வந்த கடைசிக்கதையிலும் இந்தத் தொகுப்பின் முதல் கதையிலும் மறுபரிசீலனை செய்திருப்பதை முன்பே விவாதித்துள்ளோம். நவீனத்துவம், ப்ராய்டிய உளவியல் பார்வை, பெண்ணியச் சிந்தனைகள் வழியாக உருவான நம்பிக்கைகளை மறுபரிசீலனை செய்யும் மனநிலைக்கு அம்பை நகர்ந்திருக்கிறார் என்பதற்கான கதைநிகழ்வுகளைத் தெரிவு செய்து எழுதியிருக்கிறார். மொழிப்பயன்பாட்டின் தொனிகளும் அதனை உறுதி செய்கின்றன. தொகுப்பின் கடைசிக்கதையில் கடைசிப்பக்கத்தில் இடம்பெற்றுள்ள இப்பகுதியை இங்கே வாசிக்கலாம். பயணம் -23 என்ற அக்கதையில் பின்வரும் குறிப்புகள் வெவ்வேறு பாத்திரங்களின் சொற்களாகவும், நினைவோட்டங்களாகவும் இருக்கின்றன என்றபோதிலும் அம்பை என்னும் பெண்ணியவாத எழுத்தாளருக்குள் நடந்து கொண்டிருக்கும் மறுபரிசீலனையாகவே அவற்றை வாசிக்க இடமுண்டு:

“டில்லியில் இருந்த அந்தக் காலத்தில் ஒரு கட்டத்தில் அவர்கள் வாழ்க்கையை தீவிரமாக ஆக்கிரமித்துக்கொண்டிருந்த து ப்ராய்டும் சினிமாவும் என த்தோன்றுகிறது. இப்போது நினைத்துப் பார்க்கும்போது எதை எடுத்தாலும் அதன் பொருள் அடுக்குகளின் கீழே எல்லாவற்றையும் அர்த்தப்படுத்தும் அடிப்படை உணர்வான பாலியல்தான் இருந்தது.”
******
“எனக்கு எந்தக் குறியீடுமில்லாத ஒரே ஒரு கப் சாய் குடிக்கவேண்டும்” என்றுவிட்டுக் கேதார் எழுந்துபோனது இப்போதும் பசுமையாக நினைவிலிருக்கிறது.
*******
“அந்தத் தங்கச் சிற்பம்”
“ஓ.. அதுவா.. அது ஃபிலிப் ஸ்டார்க் டிஸைன் செய்த நெருப்பு. ஆனால் இங்கே டோக்யோவில் அதற்கு வேறு பெயர்” என்றார்
“என்ன பெயர்”
“நாங்கள் அதைத் ‘தங்க பீ’ என்றுதான் சொல்கிறோம். அந்தக் கட்டடத்தையும், ‘தங்கப்பீ கட்டடம்’ என்றுதான் சொல்கிறோம்” என்றார் சிரித்தபடி.
நிருபமாவும் அவளும் உரக்கச் சிரித்தனர் கல்லூரிக் குமரிகளைப்போல
தினசரியைப் பார்த்துக்கொண்டே வாய்விட்டுச் சிரித்தாள்
அவளுக்கான தேநீரை அவள் முன் இருந்த முக்காலியில் வைத்த அவள் பெண். ‘வயசாயிட்டுது’ என்று முணுமுணுத்தபடி சென்றாள்.

 

அம்பையின் எழுத்துக்கள் நிகழ்ந்துகொண்டிருக்கும் இந்த மறுபரிசீலனையை விவாதிக்க அவர் எழுதியுள்ள பயணங்கள் கதைகளை(1 முதல் 23) தனியாகத் தொகுத்து வாசிப்பதே போதுமானவையாக இருக்கும் எனத் தோன்றுகிறது. இத்தொகுப்புக்குள் இருக்கும் பயணம் 21 இல் டெல்லியில் நடந்துள்ள ஆட்சி மாற்றத்தையும் அதனால் அரசு நிறுவனங்களில் வெளிப்படும் மாற்றுச் சிந்தனைப் போக்கையும் ஏற்றுக் கொண்டு நகரும் இன்றைய தலைமுறையைக் காட்டுகிறார். அவர் முந்திய அரசாங்கத்தின் கலைக்கோட்பாட்டை ஏற்றுக் களப்பணி செய்த கலைஞர் ஒருவரின் வாரிசு. இன்னொரு பயணம்(22) உலக அளவில் செயல்படும் மதச் சார்புகொண்ட தன்னார்வ நிறுவனங்களின் மீது மறுபரிசீலனையை முன்வைக்கிறது. ஐரோப்பிய வறுமை அல்லது சுகாதாரமின்மையைப் பேசுவதைச் செய்யாமல் இந்தியாவின் வறுமையையும் கேடுகளையும் மட்டுமே விவாதிக்கும் நோக்கம் கொண்டவை எனக் குற்றம்சாட்டும் தொனியைக் கொண்டிருக்கிறது. பின்லாந்துப் பயணமாக எழுதப்பெற்றுள்ள அக்கதையில் “இந்தியா என்றால் பாதுகாப்பில்லாத நகரங்கள், சிசுக்கொலை, வரதட்சணைக் கொடுமை,சாதிக்கொடுமை’’ என விவாதிக்கும் மேற்குலக அறிவுஜீவிகள் ”1945 இல் கூட ஐரோப்பாவில் மருத்துவச்சி பனிச்சறுக்கில் கட்டையில் சறுக்கி வருவாள். கைகழுவும் கழிப்பறையிலும் தண்ணீர் இல்லை” என்ற உண்மைகளை விவாதப்புள்ளி ஆக்குவதில்லை என்ற பார்வையை முன் வைக்கிறது. ஐரோப்பாவில் செயல்படும்கன்னிமாடங்களில் சேர ஐரோப்பியப் பெண்கள் தயாரில்லாத நிலையில் இந்தியப்பெண்களை நோக்கி நகர்ந்துள்ளன ஐரோப்பிய மத நிறுவனங்கள் என்ற தொனிப்பை வாசிக்க முடிகிறது. ஐரோப்பிய வாழ்க்கையில் எதிர்ப்பு வடிவமாக அறியப்பெற்ற பலவற்றை ஹிப்பியிசம் போன்றவற்றை விவாதமில்லாமல் ஏற்றுக்கொண்ட நவீனத்துவத்தை மறுபரிசீலனை செய்யும் குறிப்புகளும் இக்கதைகளுக்குள் தெறிப்புகளாக க் கிடைக்கின்றன.

முடிவாக
இந்தத் தொகுப்புக் கதைகளில் வெளிப்பட்டுள்ள மறுபரிசீலனை சார்ந்த பொதுப்போக்குக்குள்ளேயே ஆண்களின் உலகத்திற்குள் பெண்ணாக இருப்பதின் வலியையும் வெளிக்காட்டுக்கொள்ள முடியாத வேதனையையும் இரண்டு கதைகளில் எழுதிக்காட்டியிருப்பதைச் சிறப்பாகக் குறிப்பிட்டுச் சொல்லத் தோன்றுகிறது. முதல் கதை பொய்கை என்னும் தலைப்பில் உள்ள குறியீட்டுக் கதை. ஆண்கள் பெண்களாக மாறும் கிரேக்க, இந்தியத் தொன்மங்களை நினைவூட்டி விவாதிக்கும் கதை, வன்பயணமாகச் சென்று குளிக்கும் பொய்கையால் ஆண் உடல் பெண்ணுடலாக மாறுகிறது. அம்மாற்றம் நிகழ்ந்தவுடன்,பெண் உடலின் மீது கவியும் ஆண்களின் பார்வையும் கருத்தியல் போக்கும் சட்டென மாறிப்போகின்றன. பெண்ணுடல் மீது வந்து குவியும் குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் கச்சிதமான கதையாக வடிவம் கொண்டுள்ளது. பொய்கையைப் போலவே வில்முறியாத சுயம்வரங்கள் என்ற கதையும் ஆண்மையச் சிந்தனையின் மனப்போக்கைச் சொல்லும் முக்கியமான கதை. தங்கள் விருப்பம்போல ஒரு நவீன சுயம்வரத்தின் வழியாகத் தங்கள் தாய்க்கு – தனியாக இந்தியாவில் இருக்கும் ஓய்வூதியம் பெறும் தாய்க்கு ஒரு ஆண் துணையை ஏற்பாடு செய்ய நினைக்கும் பிள்ளைகள், அவளே தனது கல்லூரிக்காலத்து நண்பனைத் தேர்வுசெய்யும்போது பின்வாங்குவதையும் சந்தேகங்கள் எழுப்புவதையும் விவாதிக்கிறது. அந்தப் பிள்ளைகள் இருவரும் வாரம் ஒருமுறை கணினித் திரை வழியாக அமெரிக்காவிலிருந்து உரையாடும் பிள்ளைகள். எங்கு போனாலும் எந்தச் சூழலில் வாழ்ந்தாலும் மாறாத மனம் கொண்ட ஆண் மைய சமூகம் உருவாக்கிய பிள்ளைகள்.

தொடர்ச்சியாக பெண்களின் மனத்தையும் உடல் இருப்பையும் அவரது சிந்தனை நகர்வுக்கேற்ப விவாதிக்கும் கதைகளை எழுதிக்கொண்டே இருக்கும் அம்பையின் எழுத்து வாழ்க்கை தொடரவேண்டும் எனக் கேட்டு வாழ்த்துகிறேன்.

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

தணிக்கைத்துறை அரசியல்

நவீனத்துவமும் பாரதியும்