அருந்ததிராயின் தோழர்களோடு கொஞ்சதூரம்

மூன்று ஆண்டுகள் கற்பிக்கப்பட்ட நூலொன்றைப் பல்கலைக்கழகம் தனது பாடத் திட்டத்திலிருந்து நீக்கியிருக்கிறது. நீக்கச் செய்ததின் பின்னணியில் ஒரு மாணவர் அமைப்பு இருந்ததாகச் சொல்லப்பட்டது. அவ்வமைப்பைச் சேர்ந்தவர்களும் அதனை உறுதிசெய்கிறார்கள். அந்த அமைப்பு இப்போதைய அரசினை நடத்தும் கட்சியின் துணை அமைப்பு. இந்தத் தொடர்புச் சங்கிலிகள் மூலம் பாடத்திட்டக்குழுக்களுக்குப் பேரச்சத்தின் நிழல் காட்டப்பட்டுள்ளது. நீக்கம் மட்டுமே முதன்மை நோக்கம் அல்ல. இதுபோன்ற புத்தகங்களைப் பற்றிய சிந்தனையே வரக்கூடாது என்பதும் நோக்கமாக இருக்கக் கூடும்
அருந்ததிராயின் புத்தகத்தை நீக்கலாமா? -
“பாடத்திட்டங்களைப் பற்றிய - காண்டரவர்சீஸ் - சலசலப்பும் விவாதங்களும் வருவதைப் பற்றி ” அப்பல்கலைக் கழகத்தின் முன்னால் பேராசிரியராக என்ன நினைக்கிறீங்க..? ”
சமகாலப்புரிதலும் புதியன புகுத்த வேண்டும் என்று நினைக்கும் பேராசிரியர்களும் இருக்கும் ஒரு பல்கலைக்கழகத்திலிருந்து தான் இதுபோன்று அறிவுத்தேடல் தொடர்பான விவாதங்களும் சலசலப்புகளும் வரும். நான் பணியாற்றிய மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் கல்விப் புலங்கள் சமகாலப் புரிதலை முன்னெடுத்திருக்கின்றன என்று பெருமைப்படுகிறேன். மாற்றங்களும் புதிய கருத்துகளும் வரும்போது அவற்றைப் பாடத்திட்டத்திற்குள் கொண்டுவர வேண்டும் என நினைக்கும் கல்வியாளர்களைக் கொண்டதாக அந்தப் பல்கலைக்கழகம் இருப்பதாகப் புரிந்துகொள்கிறேன். உயர்கல்வி கற்கும் மாணவர்களின் வாசிப்புக்குத் தரவேண்டிய பாடங்களில் திறந்த மனதோடு கூடிய கோணத்தில் எல்லாவகையான கருத்தோட்டங்கள் கொண்ட நூல்களும் இடம்பெறும் அறிவுச்சூழல் அங்கு நிலவியிருக்கிறது என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
 
பாடத்திட்டத்தில் நூல்களை வைப்பதும் எடுப்பதும் அங்கு அடிக்கடி நடக்கும் என்று தெரிகிறதே?
 
அடிக்கடி நடக்கும் என்பதில்லை. சில தடவை நடந்திருக்கிறது. தமிழ்ப் பாடத்திட்டத்திலிருந்த பெண்ணிய, தலித்திய இலக்கியங்கள் என்ற ஒரு தாள் அப்படியே நீக்கப்பட்டது. எட்டு ஆண்டுகளுக்கு முன்பு அப்படி நீக்கப்பட்டபோது நான் வார்சாவில் இருந்தேன். ஆனால் அந்தப் பாடத்திட்டம் உருவானபோது நான் அக்குழுவின் சிறப்பு அழைப்பாளராகக் குழுவில் இருந்தேன். நான் இல்லாதபோது உருவான ஒரு பாடத்திட்டத்தில் நாவலாசிரியர் டி.செல்வராஜின் ஒரு கதை இடம்பெற்றுப் பின்னர் நீக்கப்பட்டது. பாடத்திட்டக்குழு ஏற்றுக்கொண்டதை வெளியிலிருந்து வரும் நெருக்கடிகள் காரணமாகப் பல்கலைக்கழகம் நீக்குகிறது என்றால் கல்விச்சூழல் சரியில்லை என்று பொருள் அல்ல. புதிய சிந்தனைகளைத் தடுக்கும் அரசியல், சமூகச்சூழல் நிலவுகிறது என்றுதான் அர்த்தம்.
”அருந்ததிராய் எழுதிய தோழர்களோடு ஒரு நடை (WALKING WITH THE COMRADES) -புத்தகத்தெப் பாடத்திட்டத்திலிருந்து பல்கலைக்கழகம் நீக்கி விட்டதே ?
 
"அந்தப் புத்தகத்தெ இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே பாடமா வச்சாங்கள்ல. அதுக்காக மகிழ்ச்சி அடைகிறேன்” இப்போது நிலவும் அச்சம் கூடிய சூழலில் நீக்கியிருக்கிறாங்க.
 
பல்கலைக்கழகம் என்பது வெறும் கட்டடம் அல்ல. அங்குப் பணியாற்றுபவர்களும் தனிமனிதர்கள் தான். தனிமனிதர்களுக்குத்தரப்படும் நெருக்கடி - அச்சமூட்டுதல்- எப்படி இருக்கும் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். எல்லாவற்றையும் ஏற்று விவாதிக்கும் அச்சமற்ற சூழலை உருவாக்க அரசும், அரசமைப்பின் உறுப்புகளும் உறுதிசெய்ய வேண்டும்.
[ அமெரிக்காவிலிருந்து அழைப்பெடுத்தவருக்குச் சொன்ன பதில்கள் இவை.] இதுபோன்றதொரு உரையாடல் 2012 இல் நடந்தது. அது குறித்த கட்டுரைப் பின்னூட்டத்தில் உள்ளது]

”எம் ஏ ஆங்கிலம் படிக்கும் மாணவர்களுக்கு இது ஏன் அவசியம் என்பதை முன் வைத்து நீங்கள் விரிவாக எழுதுவீர்கள் என்று எதிர்பார்த்தேன்”.
நடிகர் ரஜினிகாந்தின் நண்பரும் அவரைக் குறித்து விரிவான நூலொன்றை எழுதியவருமான நண்பர் ராம்கியின் கேள்வி. அதற்கான எனது பதில்
நான் இப்போது பல்கலைக்கழகத்திலிருந்து வெளியே இருக்கிறேன். 2019 ஜூன் 30 இல் ஓய்வு. என்றாலும் உள்ளே நடக்கும் எல்லாவற்றையும் நான் எழுதக்கூடாது என்ற புரிதல் இருக்கிறது. நீங்கள் குறிப்பிட்டுக் கேட்டதால் இதைமட்டும் சொல்கிறேன். அந்த நூல் பாடமாக்கப்பட்ட போது நான் கல்விநிலைக்குழுவில் (SCAA) இருந்திருக்கிறேன்.

இப்போது இலக்கியக்கல்வி பலவிதமாக விரிந்து கொண்டிருக்கிறது. அதனால் தான் தமிழ் இலக்கியக்கல்வியை தமிழியல் கல்வி(Tamil Studies) என்கிறோம். ஆங்கில மொழி& இலக்கியக்கல்வி(English Language and Literature) என்று இருந்த நிலை இப்போது ஆங்கிலவியல் படிப்பாக மாறியிருக்கிறது. இந்தமாற்றம் உலக அளவில் நடந்துள்ள மாற்றம். இந்த மாற்றங்களின் பகுதியாகத் தத்துவம், சமூக மானிடவியல், பரப்பியல் எனப் பலவற்றை உள்ளடக்கியதாக மாறிக்கொண்டிருக்கிறது. பரப்பியல் (Area Studies) படிப்பில் சூழலியலும் அடக்கம். சூழலியலும் இலக்கியமும் என்ற பகுதியில் அருந்ததியின் இந்த நூல் பாடமாக வைக்கப்பட்டிருந்தது. இந்தியப் பரப்பில் அங்கு வாழும் மனிதர்கள் வேறுவேறு காரணங்களால் இடம்பெயர்க்கப்படுவதை ஆவணப்படுத்திய எழுத்து அது. அந்த நோக்கம் தான் அந்தப் புத்தகம் பாடமான பின்னணி

உங்களுடைய முந்திய பதிவில் பரப்பியல் படிப்புகள் என்றொரு சொல்லாட்சியைப் பயன்படுத்தியிருக்கிறீர்கள். அதைக் கூடுதலாக விளக்கமுடியுமா? உள்பெட்டி வழியாக ஒரு கேள்வி.
 
இது குறித்து முன்பே எழுதியிருக்கிறேன். கஜா புயலின்போது நியூஸ் 18 தொலைக்காட்சி அலைவரிசையில் அப்போது பணியாற்றிய குணா. குணசேகரன் போராடும் மக்களோடு உடன் இருந்து உரையாடிக் கொண்டிருந்தார். நான் பார்த்துக் கொண்டிருந்தேன். மக்களோடு நடந்த அந்த விவாதங்களும் குமுறல்களும் அரசை நோக்கியதாக மட்டுமே இருந்தன. அவை மக்களாலும் புரிந்து கொள்ளப்பட வேண்டியவை. இந்தப் புரிதல் இன்மை அல்லது அவலம் ஏன் நடக்கிறது என்று காதில் ரீங்காரமாய் ஒலித்துக் கொண்டிருந்தது. இந்திய ஆட்சிப்பணி நிர்வாகங்களும் காவல்துறைப் பணியாளர்களும் என்ன செய்வதென்று கையைப் பிசைந்து கொண்டிருந்தார்கள். ஊடகங்கள் உரையாடலை நடத்துகின்றன.
புயல் உண்டாக்கிய கடல்சார் அவலம் போன்று அண்மைக்காலங்களில் விவாதங்களுக்குள்ளாகும் சிக்கல்கள் எல்லாம் பரப்பியல் படிப்புகள் (Area Studies) இந்தியாவில் ஏன் இன்னும் அறிமுகமாகவில்லை என்ற கேள்வியை எழுப்பிக்கொண்டிருக்கின்றன.. வளர்ச்சியடைந்த நாடுகளில் இப்படிப்புகள் அந்நாடுகளைப் பொருளாதாரரீதியாக நிலைநிறுத்திக்கொள்ளும் நோக்கத்தைக் கொண்டிருக்கின்றன. அதனால் அயல்நாடுகளின் படிப்பின் பகுதியாக இருக்கின்றன. பன்னாட்டு வணிகக்குழுமங்களின் நிதியுதவியோடு இயங்கும் பரப்பியல் படிப்புகள், . பொருளாதார வளர்ச்சி, வணிக மேலாண்மை, பண்பாட்டுக்கூறுகள் வழியாகப் பெருந்திரளின் உளவியலைப் படிப்பித்தல், விளிம்புநிலை மனிதர்களின் ஆதங்கம் போன்றவற்றைக் கவனப்படுத்துகின்றன. நிலவியல் பரப்பை அதன் அனைத்துப் பின்புலங்களோடும் கற்றுத்தரும் பரப்பியல் கல்வியை இந்தியா போன்ற நாடுகளில் மனிதவளக்கல்வியின் பகுதியாக உருவாக்கவேண்டும். மனிதவளம் இந்தியாவில் ஒரே மாதிரியான திறன்களையோ வெளிப்பாட்டு முறைகளையோ கொண்டன அல்ல.

கலை, அறிவியல், மொழி என்பதான மரபான பிரிவுகளின் அடிப்படையில் கல்விப்புலங்களை உருவாக்கும் முறையை இது முற்றிலும் நிராகரிக்கக் கூடிய படிப்பு. நிலத்துக்கடியிலும் நீருக்கடியிலும் பொதிந்துகிடக்கும் வளங்களோடு இணைந்தது இந்திய மனிதவளம். மலைசார்படிப்பு, கடல்சார்படிப்பு, சமவெளிப்படிப்பு, நகர்சார்படிப்பு போன்ற பரப்பியல் படிப்புகள் உருவாக்கப்பட வேண்டும். ஒருங்கிணைந்த அறிவையும் ஊடாடும் விவாதங்களையும் உருவாக்கும் நோக்கம் அவற்றிற்கு இருக்கவேண்டும். இதையெல்லாம் கவனத்தில் கொள்ளாமல் இந்திய அரசின் உயர்கல்விக்கு ஆலோசனைகூறும் பல்கலைக்கழக மானியக்குழு, ஆய்வு & வளர்ச்சி மையங்கள், தொழில்நுட்ப ஆய்வுக்கழகங்கள், அறிவியல் கல்வி ஆலோசனைக்குழுக்கள் போன்றன இன்னும் இன்னும் தனித்தியங்கும் துறைகளையும் படிப்புகளையுமே பரிந்துரைக்கின்றன.





கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தேடிப்படித்த நூல்கள் அல்லது பழைய புத்தகக் கடையில் கிடைத்த நூல்கள்

மன்மோகன் சிங் மட்டும் தான் பொறுப்பா?…

நாயக்கர் கால இலக்கியங்கள் சமுதாய வரலாற்றுச் சான்றுகளாகக் கொள்வதற்கான முன் தேவைகள்