நகைச்சுவைப்படத்தின் ஒரு சட்டகம்: நாங்க ரொம்ப பிஸி

பொருட்படுத்தப்படும் கூறுகள்

பொருட்படுத்திப் பேசவேண்டிய திரைப்படங்கள் என்பதற்கான காரணங்கள் சில உள்ளன.

முதலாவது காரணம், சினிமா என்னும் தொழில்நுட்பம் சார்ந்த கலையின் உள் நுட்பங்களைத் தனதாக்கிக்கொண்டு வெளிப்படும் நேர்த்தியான வடிவம்.

இரண்டாவது, அது வெளிவரும் காலகட்டத்தின் மீதான விவாதங்கள். அவ்விவாதங்கள் தனிமனிதர்களின் உளவியல் சிக்கலாக இருக்கலாம்; சமூகமனிதர்களின் இருப்புக்கான காரணங்களாகவும் இருக்கலாம்.

மூன்றாவது, பொதுச் சமூகத்தில் நிலவும் சில பொதுப்புத்திகளின் மீது கவனத்தைக் குவிக்கும் கூறுகளை அடுக்கிப்பார்வையாளர்களைத் திரளச்செய்வதும், திசைமாற்றுவதுமான நோக்கங்களைக் கொண்டிருப்பது. 

இம்மூன்றும் சினிமாவை விமரிசிக்கத்தக்க பனுவலாக நினைக்கும் திறனாய்வாளருக்கு / ஆய்வாளருக்கு முக்கியமானவை. இம்மூன்றும் ஒரு சினிமாவில் இருந்தால் தான் பொருட்படுத்தி விவாதிக்க வேண்டும் என்பதில்லை. மூன்றில் ஒன்று முதன்மைப்பட்டாலும் பொருட்படுத்தி விவாதிக்கவே வேண்டும். 

இம்மூன்றையுமே முதன்மைப்படுத்தாமல் சினிமா என்னும் தொழில்நுட்ப வெளிப்பாட்டு வடிவத்தைக்கொண்டு பொழுதுபோக்குப் படம் ஒன்றைத் தருவேன் என சினிமாவைத் தயாரிப்பவர் நினைக்கலாம். சினிமாவின் பார்வையாளர்களுக்கு அவர்கள் செலவிடும் குறிப்பிட்ட கால அளவைத் தன்னிலையிலிருந்து விடுபட்டுக் கழிக்க உதவினால் கூட அதுவும் விவாதிக்கப்பட வேண்டிய ஒன்றுதான். கழியும் பொழுதுகளைக் கொண்டாட்டமாகவும் களிப்பு மனநிலையிலும் வைத்து அனுப்புவதன் மூலம் அந்தச் சினிமா ஒருவிதமான சமூகவினையை ஆற்றவே செய்கிறது. இப்படியான சினிமாக்களே உலக மொழிகள் பலவற்றிலும் அதிகமாகத் தயாரிக்கப்படுகின்றன. ஆகவே வெகுமக்கள் சினிமாவைப் பற்றிய விமரிசகருக்குப் பொழுதுபோக்கு சினிமாக்களும் விவாதத்திற்குரியனவே. 

தீபாவளிப் பண்டிகையோடு மூன்று சினிமாக்கள்

நகர்ப்புற பண்பாட்டில் திரையரங்குகளுக்குச் சென்று திரைப்படம் பார்ப்பது பண்டிகைகளின் பகுதியாக மாறி நீண்ட காலமாகிவிட்டது. நகரப் பண்பாட்டின் நீட்சியில் முன்பு கிராமங்களும் இணைந்திருந்தன. தொலைக்காட்சியின் வருகைக்குப்பின்பு விலகிவிட்டன. வாரக் கடைசி விடுமுறை நாட்களிலும் பண்டிகைக்கால விடுமுறைகளிலும் நகரிய வாழ்வில் இன்னும் திரைப்படங்களுக்குச் செல்லுதல் ஒரு சமூக நிகழ்வாகவே இருக்கிறது. இந்தியாவில்/ தமிழ்நாட்டில் அச்சமூக நிகழ்வு தீபாவளி, பொங்கல், சித்திரை முதல் நாள், ஆங்கிலப்புத்தாண்டு போன்ற நாட்களில் புதிய சினிமாக்களின் வருகையோடு இணைகின்றன.

இந்த ஆண்டு கரோனாவின் பிடியில் இருக்கும் சினிமாத்தயாரிப்பும், வெளியீடும் வழக்கமான வெளியீட்டை நடத்த முடியாமல் தவித்த முதல் பண்டிகை நாளாக அண்மையில் வந்துபோன தீபாவளிப்பண்டிகை கடந்திருக்கிறது. என்றாலும் புதிய தொழில் நுட்பமான வான்வழித் தொடர்பாடல் நுட்பம் (OTT) பண்டிகைக்கு சினிமா என்ற சமூகநிகழ்வைத் தொடரச் செய்திருக்கிறது. இதற்கு முன்பே சில படங்கள் அந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திச் சோதனை செய்து பார்த்துவிட்டன. அதிவேக இணையவழி வாய்ப்புக்கொண்ட நகரவாசிகளுக்கு இந்தத் தீபாவளிப்பண்டிகையை புதிய படங்களோடு கொண்டாட முடிந்திருக்கிறது. 

சூரரைப்போற்று, நாங்க ரொம்ப பிஸி, மூக்குத்தி அம்மன் என மூன்று சினிமாக்கள் தமிழ்ச்சினிமாவின் பார்வையாளர்களுக்கு வீடுதேடி இணையவழியில் தீபாவளியன்று பார்க்கக் கிடைத்தன. இம்மூன்றில் சுதா கொங்கராவின் இயக்கத்தில் சூர்யா நாயகனாக நடித்த சூரரைப்போற்று இணையவழி வெளியீட்டிற்காகத் தயாரிக்கப்பட்ட படமல்ல. திரையரங்கப் பார்வையாளர்களுக்காகத் தயாரிக்கப்பட்டுக் கரோனா நெருக்கடியால் இணையவழியைத் தேர்வுசெய்துகொண்ட படம். மற்ற இரண்டும் வான் வழி வெளியீட்டிற்காகவே தயாரிக்கப்பட்ட படங்கள். நாங்க ரொம்ப பிஸி சன் நெட்வொர்க்கின் வெளியீட்டிற்காகத் தயாரிக்கப்பட்டு சாதாரணத் தொலைக்காட்சி வழியாகவே பார்வையாளர்களைச் சென்று சேர்ந்தது.மூக்குத்தி அம்மன் விஜய் தொலைக்காட்சியின் ஹாட்ஸ்டாரின் வெளியீட்டிற்காக உருவாக்கப்பட்ட படம்.

சினிமா என்னும் கலையை அதன் உள்நுட்பங்கள் சார்ந்த புரிதலோடு பயன்படுத்திக் கொண்டு உருவாக்கியதில் இரண்டு படங்களுக்குமே பெரிய வித்தியாசம் இல்லை. இரண்டுமே நகைச்சுவை என்னும் மெய்ப்பாட்டின் உட்கூறுகளான எள்ளல், இளமை, பேதமை,மடன் என்ற நான்கு அடிப்படை உணர்வுகளையும் உரையாடல்கள் வழியாக அதிகமாக உருவாக்கிக் காட்டிய படங்களே. சிற்சில இடங்களில் காட்சிப்படுத்துதல் வழியாகவும் நடிகர்களின் உடல் மொழியின் வழியாகவும் அவ்வுணர்வுகளை உருவாக்க முயன்றன. என்றாலும் “ நாங்க ரொம்ப பிஸி” பெரிய அளவு கவனிக்கப்படவில்லை; பேசப்படவில்லை. 

மாற்றப்படாத சூத்திரம்

தமிழின் நகைச்சுவைப் படச் சூத்திரத்தை அப்படியே தனதாக்கிக் கொண்ட படம். பெரும்பாலான நகைச்சுவைப் படங்களில் உருவாக்கப்படும் நகைச்சுவைக் காட்சிகளின் அடுக்குகளுக்குப் பின்னால் நாயகனின்/ நாயகனோடு நெருங்கிய உறவுடைய பாத்திரம் ஒன்றின் நிறைவேற்ற முடியாத எளிய ஆசை ஒன்று இருக்கும்; அதை நிறைவேற்றிவிட நினைத்துச் செய்யும் தவறுகளே நகைச்சுவைக் காட்சிகளாக மாறிப் பார்வையாளர்களைச் சிரிக்க வைக்கும். படம் முடியும்போது நிறைவேறாத ஆசையே தேவையில்லை; நாயகனின் சாதாரண வாழ்க்கையே நியாயமான வாழ்க்கை தான் என்று முடியும். நாகேஷ் நடித்த சர்வர் சுந்தரம் தொடங்கி ரஜினிகாந்த் நடித்த தில்லுமுல்லு, கமலின் வசூல் ராஜா எம்பிபிஎஸ் வரை இந்தச் சூத்திரமே செயல்பட்டிருப்பதை நினைவில் கொண்டால் போதுமானது.நாங்க ரொம்பப் பிஸியிலும் அந்தச் சூத்திரத்தை அப்படியே உள்வாங்கிக் திரைக்கதையாக்கம் செய்யப்பட்டிருக்கிறது.லஞ்சம் வாங்காத, அரசு ஜீப்பைச் சொந்த உபயோகத்திற்குப் பயன்படுத்தாத நேர்மையான காவல்துறை ஆய்வாளரின் நேர்மையைப் பரிசோதனை செய்ய வருவதுபோல அவரது மனைவியின் நோயும், நோய்க்கான மருத்துவமும் முன் நிற்கிறது. நோயிலிருந்து மனைவியை மீட்பதை மட்டும் நிறைவேற்றிக்கொள்ளும் பொருட்டுக் குற்றச்செயல்புரிவோர்களோடு கூட்டுச் சேர்ந்து திருட்டு, மோசடி, பணப்பரிமாற்றம் எனத் தொடர்ச்சியாக ஈடுபடுகிறார் காவல் ஆய்வாளர்(பிரசன்னா). அவர் கூட்டுச் சேரும் திருடன் யோகிபாபு. முதல் முறை வெற்றியைச் சந்தித்த இந்தக் கூட்டணி, இரண்டாவது தடவைச் சிக்கலைச் சந்திக்கிறது. அதை அடைவதும், அதிலிருந்து மீள்வதுமான முயற்சியில் குற்றம் வெளிப்பட்டுவிடும் – நேர்மை அம்பலமாகிவிடும் என்ற நிலையில், திட்டமிட்டு லஞ்சம், ஏமாற்று, மிரட்டல் செய்யும் மேலதிகாரியின் மன்னிப்பில் அவனது நல்ல குணம் பாராட்டப்பட்டு மனைவி காப்பாற்றப்படுகிறாள்; நாயகன் நல்லவனாகவே வாழ்க்கையைத் தொடர்கிறான் . இவ்வளவுதான் கதை.

இந்தக் கதையை நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவின் மிகப்பெரிய பொருளாதார நடைமுறையான பணமதிப்பு இழப்பின் பின்னணியில் திரைக்கதையாக்கி இயக்கியிருக்கும் இயக்குநர் பத்ரி, விவாதிக்கத்தக்க அரசியல் அங்கதப்படம் ஒன்றைத் தந்திருக்க முடியும். இந்தியா முழுவதும் அறியப்பட்ட, இந்திய மக்களை அவதிக்குள்ளாக்கிய பணமதிப்பு இழப்பு என்னும் துயர நிகழ்வையொட்டிக் கேள்விப்பட்ட/ பத்திரிகைகளில் வாசித்த காட்சிகளைக் காட்சிப்படுத்துவதின் மூலம் அங்கதமும் எள்ளலும் நிரம்பிய நகைச்சுவைக்காட்சிகளைப் படத்தில் அடுக்கியிருக்கமுடியும். வங்கிகள் முன்னால் நின்ற வரிசைகளையும் சிறு/குறு தொழில் நிறுவனங்களின் சந்தித்த நடைமுறைக்காட்சிகளையும் உள்ளடக்கிப் பின்னிய திரைக் கதையாக மாற்றியிருந்தால் தீவிரமான அரசியல் விமரிசனப் படமாக மாறியிருக்கும். அரசியல் சார்புநிலை அல்லது விமரிசன நிலைபாடு என்பதில் நழுவலைக் கடைப்பிடித்து முழுமையும் நகைச்சுவைப் பண்டமாகக் கொடுத்தால் போதும் என அதன் இயக்குநர் பத்ரியும் தயாரிப்பாளர் சுந்தர் சி. யும் நினைத்திருக்கின்றனர். அந்த நழுவல் மனப்பாங்கே அந்தப் படத்தைப் பொருட்படுத்தி விமரிசிப்பதைத் தடுத்துவிடுகிறது. கரோணா காலக் கட்டுப்பாட்டுக்குள் மிகக் குறைவான செலவில் படம் எடுத்து இணையம் வழியாக வெளியிடுவது என்பது மட்டுமே அப்படக்குழுவினரின் நோக்கமாக இருந்துள்ளது. திரையரங்கில் வெளியிட்டு நான்கு நாள் ஓடினாலே போட்ட முதல் சில மடங்காக லாபம் வரும் எனக் கணக்கிட்டு எடுக்கப்பட்ட தமிழ்ப் படங்கள் பல உண்டு. அப்படியான படங்களின் வரிசையில் ‘நாங்க ரொம்ப பிஸி’ படமும் சேர்ந்துகொண்டுள்ளது.பேசப்படாமலேயே போய்விட்ட து.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்