உள்நோக்கிய சுழற்சிகள்

பீகார் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அசத்துதீன் ஒவைசியும் ராம்விலாஸ் பஸ்வானின் மகனும் லோக்ஜனசக்தி கட்சியும் தலைவருமான சிராக் பஸ்வானும் விமரிசிக்கப்படுகிறார்கள்.

பெரும்பான்மையாக இசுலாமியர்கள் வாழும் தொகுதிகளில் ஓவைசியின் கட்சியும், எஸ்டிபிஐ எனச் சுருக்கமாகச் சொல்லப்படும் இந்திய சமூக ஜனநாயக கட்சி என்ற இன்னொரு இசுலாமிய நலவிரும்பும் கட்சியும் தனித்துப் போட்டியிட்டன. இசுலாமிய வாக்குகள் தனியாகப் பிரிக்கப்பட்டதால் நிதிஷ்குமார் – பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர்கள் எளிதில் வென்றுள்ளனர். அதேபோலப் பஸ்வானின் கட்சி தனித்துப் போட்டியிட்டு தலித் வாக்குகளைப் பிரித்ததால் நிதிஷ்குமாரின் தனிப் பெரும் கட்சி அடையாளம் காணாமல் போய்விட்டது. அதே நேரத்தில் பா.ஜ.க. போட்டியிட்ட தொகுதியில் லோக்ஜனசக்தி போட்டியிடாமல் தவிர்த்து விட்டதால் பா.ஜ.க., அந்தக் கூட்டணியில் தனிப்பெரும் கட்சியாக மாறிவிட்டது. சாராம்சமாக இசுலாமிய எதிர்ப்புக் கட்சியாகவும், தலித்துகளுக்கு எதிரான நடவடிக்கைகளைத் தொடர்ந்து செய்யும் கட்சியாகவும் அறியப்படும் பாரதீய ஜனதா கட்சியின் வெற்றிக்கு ஒவைசி என்னும் இசுலாமியரும், தலித் அடையாளத்தை விரும்பும் சிராக் பஸ்வானும் உதவியிருக்கிறார்கள்.
ஒட்டுமொத்த இந்தியாவில் பா.ஜ.க.வின் வெற்றியும் ஆதிக்கமும் அதிகார இருப்பும் ஆபத்தானவை என நம்பும் பொதுத்தள விமரிசனங்கள் இப்படித் தான் இருக்கும். இந்த விமரிசனங்களின் பின்னால் செயல்படுவது இந்தியா என்ற தேசத்தை ஒற்றைப் பரப்பாகப் பார்க்கும் சாராம்சவாதம். ஆனால் இந்தியாவில் பெரும்பாலான முரண்பாடுகள் உள்ளூர்க் காரணங்களால் தீர்மானம் ஆகக் கூடியனவாக இருக்கின்றன. இந்திய சமூக அமைப்பையும் அடுக்குகளையும் தீர்மானிக்கும் சாதிய முரண்பாடு உள்ளூர்த்தன்மை கொண்டது. சில இடங்களில் சமய முரண்பாடுகளுக்குக் கூட உள்ளூர்த் தன்மை இருக்கிறது. அடுத்த தெருவில் இருக்கும் பகையாளியைவிடப் பக்கத்துவீட்டுப் பங்காளிச் சண்டையை நினைத்துக்கொண்டால் இது எளிமையாகப் புரியவரலாம்.
மாநில சட்டமன்றத்தேர்தல்களில் தேசியக் கட்சிகள் மாநிலக் கட்சிகளோடு கூட்டணி வைக்கவேண்டிய நெருக்கடியை உருவாக்குவது இந்த உள்ளூர்த் தன்மையின் விளைவுகளே. மாநில அளவிலான பெருங்கட்சியோ, சிறுகட்சியோ தங்களின் இடத்தையும் இருப்பையும் உறுதி செய்வதற்கு இருக்கும் ஒரே வாய்ப்பு தேர்தலில் கிடைக்கும் வாக்கு சதவீதங்கள் மட்டுமே. கூட்டணியில் சேர்ந்து வெற்றி பெற்றால் கிடைப்பது அனுபவிக்கும் அதிகாரம். தனியாக நின்று தோற்றால் கிடைப்பது பேரம் பேசும் அதிகாரம். ஏதோவொரு வகையில் அதிகாரம் வேண்டும். அதை இழக்க எந்தக் கட்சியும் தயாராக இருப்பதில்லை. அடுத்துவரப் போகும் தமிழக சட்டமன்றத்தேர்தல் களத்திலும் இத்தகைய காட்சிகளைக் காணத்தான் போகிறோம். இவையெல்லாம் வெளிவட்டப் பாதையிலிருந்து உள்நோக்கிப் போகும் பயணங்களின் நிகழ்வுகள்.
பீகார் தேர்தலில் இப்படித்தான் நடக்கும் என்பது தேர்தலுக்கான கூட்டணிகள் முடிவான போதே தெரிந்த ஒன்றுதான். வட்டாரத்தன்மை கொண்ட இசுலாமியக் கட்சிகளையும் தலித் ஆதரவுக் கட்சிகளையும் தனித்துவிட்டால் என்ன விளைவுகள் ஏற்படும் என்பதைக் கணிக்க முடியாமல் தவறுதலாகக் கழட்டிவிடுவதுண்டு. சரியாகக் கணித்தும் கழட்டி விடுவதுண்டு. பெருங்கூட்டணிகளிலிருந்து கடைசி நேரத்தில் கழட்டி விடப்படும் கட்சிகள் தங்களின் எதிர்காலத்தை உறுதிசெய்வதற்கான முயற்சியில் தங்களின் கொள்கைக்கு எதிரானவர்களுக்கு மறைமுகமாக உதவி செய்துவிடும்போது அரசியல் நோக்கர்களின் விமரிசனங்களை எதிர்கொள்கிறார்கள். தொடர்ச்சியாக அதையே திரும்பத் திரும்பச் செய்யும்போது எதிர்களுக்கு உதவுவதற்காகவே கட்சி நடத்துகிறார்களோ என்று கூடத் தோன்றும். ஒவைசியின் இருப்பு அப்படித்தோன்றுவது ஆச்சரியமல்ல. இந்தியாவில் இருக்கும் பல கட்சி நடைமுறையில் அவ்வப்போது தோன்றி மறையும் விநோதக் காட்சிகள் இவை. விநோதக் காட்சிகளும் வேடிக்கைப் பேச்சுகளும் நிறைந்தவையே இந்தியத் தேர்தல் களங்கள்/ காலங்கள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தேடிப்படித்த நூல்கள் அல்லது பழைய புத்தகக் கடையில் கிடைத்த நூல்கள்

மன்மோகன் சிங் மட்டும் தான் பொறுப்பா?…

நாயக்கர் கால இலக்கியங்கள் சமுதாய வரலாற்றுச் சான்றுகளாகக் கொள்வதற்கான முன் தேவைகள்