கபிலன் வைரமுத்துவின் அம்பறாத்தூணி:சொல்கதைகளின் தொகுதி

 ‘ஒரு ஊரில’ என்று தொடங்கிச் சொன்ன கதைகளைக் கேட்டு – சொல்கதைகளைக் கேட்டு வளரும் சமூகங்கள் இப்போதும் இருக்கின்றன.  அவை சொல்லப்படும் கதைகள். சொல்லப்படும் கதைகளின் முதல் முதலாகச் சொல்லப்படுகின்றன என்பதாக இல்லாமல் ஏற்கெனவே அவை வேறுவிதமாகவும் சொல்லப்பட்டிருக்கும். நடந்த நிகழ்வுகளாகவோ, கேள்விப்பட்ட செய்தியாகவோ, வரலாற்றுக்குறிப்பாகவோ, அறிவியல் உண்மைகளாகவோ- கண்டுபிடிப்பாக – ஆச்சரியமாகவோ சொல்லப்பட்டிருக்கும். அப்படிச் சொல்லப்பட்ட ஒன்றை எழுத்தில் வாசிக்கும்போது எங்கேயோ கேள்விப்பட்டதின் சாயலாக இருக்கிறதே என்று தோன்றும்.

சொல்கதைகள் பற்றிச்  சில வழக்காறுகளும் இருக்கின்றன.  ‘கதைக்குக் காலில்லை’ என்பது ஒரு வழக்காறு.  “கதைகதையாம்; காரணமாம்” என்பது இன்னொரு வழக்காறு. இரண்டாவது வரலாறு கதைக்குக் காரணங்கள் தேவை என்கிறது. காரணங்கள் என்பன ஒருவிதப் பொருத்தப்பாடு எனப் புரிந்துகொள்ளலாம். சொல்லப்படும்போது பொருத்தப்பாடு இருப்பதுபோலத் தோன்றும் கதைக்கு கால்கள் தேவையில்லை என்கிறது முதல் வழக்காறு.  கால் என்னும் உறுப்பு நிற்கும் உறுப்பு உயிரினங்கள் நிற்பதற்கும் நடப்பதற்கும் உதவும் உறுப்புகள் . நிற்பதின் மூலம் நிலைத்தன்மையை உருவாக்க முடியும். நடப்பதின் மூலம் இயக்கத்தை உணர்த்தமுடியும். உயிரினங்களின் கால்கள் போன்ற பருண்மையான வெளிப்பாடு கொண்டனவல்ல கதையின் கால்கள் என்றாலும், கால்களின் பணியினைச் செய்கின்றன.  கதையின் கால்களில் ஒன்று காலம். இன்னொன்று இடம். இந்த இட த்தில் – கதைவெளியில் இந்தக் காலத்தில் – காலகட்டத்தில் நடந்த கதையாக முன்வைத்துக் கதையின் இருப்பையும் இயக்கத்தையும் உறுதிப்படுத்துகின்றன அவை.

புனைகதைகள் கால்களை உருவாக்கிக் காட்டுவதின் மூலம் இருப்பையும் இயக்கத்தையும் உறுதிசெய்கின்றன. அவற்றோடு பாத்திரங்களை ஓர்மைப்படுத்துவதின் மூலம் பொருத்தப்பாட்டையும் தாண்டிய நம்பகத்தன்மையை உருவாக்குகின்றன. பொருத்தப்பாடு என்பது கேட்பதின் தர்க்கம். நம்பகத்தன்மை என்பது இருப்பதின் தர்க்கம். இந்த அடிப்படையான வேறுபாட்டை உள்வாங்கிக் கொண்டு கபிலன் வைரமுத்துவின் அம்பறாத்தூணி தொகுப்பை வாசிக்கும்போது ஒவ்வொரு கதையின் தொடக்கமும் முடிவும் ஒரு சொல்கதையை வாசிக்கும் உணர்வையே தருகின்றன.

  

தொகுப்பில் உள்ள அனைத்துக் கதைகளின் தலைப்புகளில் பெரும்பாலும் ஒற்றைக் கதாபாத்திரங்களை முன்மொழிந்து பேசும் -    தொகுத்துச் சொல்லும் சொல்கதைப்பாணியையே முழுமையாகப் பின்பற்றியுள்ளார் ஆசிரியர். வள்ளிகோஸ்ட் குருநாதன்வாமன்யாழ்மதிஅறிவுடைநம்பிபின்க்மேன்

மணியமுதன், இருதய பிரகாசம்,  மூலாசிவனேசன்,  எல்விஸ்,  நாகமன்,  ய்யன்டிமிட்ரிசீவகன் எனப் பாத்திரப் பெயர்களாலேயே அமைந்துள்ளன.  அப்பாத்திரங்களின் காலத்தையோ, அவை இயங்கிய வெளியையோ உறுதியாகக் காட்டவேண்டும் என்ற புனைவுத்தன்மையைக் கவனமாகவே கைவிட்டுள்ளார் கதாசிரியர். அத்தோடு பெயரையே தலைப்பாக வைத்து எழுதப்படும் இலக்கியப்பனுவல்கள், அந்தப் பெயருக்குரியவரின் பெருமைகளை அல்லது துயரங்களை விவரித்து நிலைப்படுத்தும் நோக்கம் கொண்டனவாக விரியும். அந்தப் பாத்திரங்களின் சாகசம், விநோதமான செயல், தன்னம்பிக்கை,  இருப்பைக் காட்டிக்கொள்ளும் பாங்கு, நல்லனவற்றை முன்வைத்துவிடும் நோக்கம் அல்லது வெறுத்து ஒதுக்கவேண்டிய குணம் என நேர்மறைக் குணங்களை அதிகமாகவும், எதிர்மறைக்குணங்களைக் குறைவாகவும் முன்வைக்கும் இயல்பு அவ்வகைக் கதைகளுக்கு உண்டு. இதற்கு மாறானவை மனிதர்களின் பாத்திரவார்ப்பு, அல்லது செயல்பாடுகளின் தன்மை, உருவாக்கும் அறம் சார் வாழ்க்கை போன்றவற்றை நேரடியாகவோ, குறியீட்டுத்தன்மையிலோ தாங்கி நிற்கும் கதைகள். அத்தகைய கதைத் தலைப்புகள் ஒன்று கூட இல்லை இத்தொகுப்பில். அதன் காரணமாக நடப்பியலைத் தவிர்த்துவிடும்  வாய்ப்பை அதிகமாக்கிக் கொண்டிருக்கின்றன.  

முதல் கதையான வள்ளிக்குப் பின்னால் வேலூர் கோட்டைக்குப் பின்னால் ஒரு பீரங்கி கண்டெடுக்கப்பட்ட உண்மைச் செய்தி(1806) இருக்கிறது.டிமிட்ரி கதைக்குப் பின்னால் பெருந்தொற்றோடு கூடிய ஒரு கப்பல் பயணம் பற்றிய (1899) செய்தியும், எல்விஸ் கதைக்குப் பின்னால் நியுகினியா அரசு (2011) சுரங்கப்பாதை கட்டிய செய்தியும் இருக்கின்றன. இவையெல்லாம் கதாசிரியரே தந்துள்ள வரலாற்றுக் குறிப்புகள். சீவகன், நாகமன்,வாமன் கதைகளுக்குக்குப் பின்னாலும் அப்படியொரு வரலாற்றுக்குறிப்பு இருக்கிறது. இவையல்லாமல் திரைப்படத்துறை சார்ந்தும் புதிதாக வந்துள்ள கணினி வரைகலையைப் பயன்படுத்தித் தயாரிக்கப்படும் குழந்தைகளுக்கான படங்களைத் தயாரிக்கும் தொழில் நுட்பம் சார்ந்தும் சொல்லப்படும் செவிவழிச் செய்திகள் கோஸ்ட் குருநாதன், அறிவுடைநம்பி, மூசா,இருதயப்பிரகாசம் போன்ற கதைகளுக்குப் பின்னால் இருக்கின்றன. ஆசிரியர் செயல்படும் இந்தத் துறைகளின் இயங்குதளங்கள் வழியாக வந்து சேரும் செய்திகளையும் புதிதாக உருவாக்கப்படும் தொல்படிவங்களையும் தனியொரு பாத்திரங்கள் வழியாகச் சொல்கதையாகச் சொல்கிறார். யாழ்மதியும் பின்க்மேனும் அண்மையில் நடந்த மதக் கலவரச் செய்தியின் வழியாகக் கிடைத்த தொல்படிவங்களைக் கொண்டு கதையாக்கப்பட்டுள்ளன.  மூலா தடுப்பூசி சார்ந்து உருவாக்கப்படும் புதிய தொல்படிவம். இப்படி எல்லாக் கதைகளுக்குப் பின்னாலும் ஒரு குறிப்பு இருக்கிறது.  

 

இப்படியான தகவல்களைப் பின்குறிப்பாகத் தராமல் முழுமையும் கற்பனையாக உருவாக்கப்பட்ட புனைவாக எழுதுவதற்குக் கூடுதல் கவனமும் கதைத்தொழில் நுட்பமும் தேவை. அந்த முயற்சியில் இறங்காமல் சொல்கதைகளாகவே எழுதியுள்ளார் கபிலன்.  ஒரு மொழியில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் புனைகதைகளாகத் தான் இருக்கவேண்டுமா? என்று கேட்டால் தேவையில்லை என்றே சொல்லலாம். கதை, நாடகம், கவிதை என்ற வடிவங்களுக்குள் பல்வேறு வகையிலான துணை வடிவங்களை எழுதிப்பார்க்கலாம்.கதை, புனைகதை வடிவமாக மாறியபின் புதினம், குறும்புதினம், சிறுகதை, குறுங்கதை என வடிவ வேறுபாடுகள் உருவாகியிருப்பதுபோல, புனைவுத்தன்மை குறைவான சொல்கதைகளையும் எழுதிப்பார்க்கலாம். அப்படியான கதைகளுக்கும் ஒரு மொழியில் இடமுண்டு. வாசகர்களும் உண்டு. நவீனத்துவத்தால் சிதைவுண்ட – குழப்பங்கள் கொண்ட பாத்திரங்களை வாசித்துப் பழகிய நவீனத்துவ வாசகர்களுக்கு இந்தக் கதைகள் ஏற்புடையனவாக இல்லாமல் போகலாம். ஆனால் இப்படியான சொல்கதைகளை வாசிக்கும் ஏராளமான வாசகர்கள், இக்கதைகளின் எளிமைத்தன்மைக்காக – நேரடியாகவும் சில நேரங்களில் அங்கதமாகவும் விவரிப்புகளோடும் சொல்லும் விதத்திற்காகவே வாசிப்பார்கள். அத்தகைய வாசகர்களை நோக்கித்தான் கபிலன் வைரமுத்துவின் கதைக்கூற்று முறை இருக்கிறது.  

 


=====================================

அம்பறாத்தூணி/ கபிலன் வைரமுத்து

சிறுகதைகள்

டிஸ்கவரி புக் பேலஸ்,கே.கே.நகர் மேற்கு, சென்னை -600078

 

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தேடிப்படித்த நூல்கள் அல்லது பழைய புத்தகக் கடையில் கிடைத்த நூல்கள்

மன்மோகன் சிங் மட்டும் தான் பொறுப்பா?…

நாயக்கர் கால இலக்கியங்கள் சமுதாய வரலாற்றுச் சான்றுகளாகக் கொள்வதற்கான முன் தேவைகள்