புலப்படா அரசியலும் அரங்கியலும்


வரப்போகும் தமிழகச் சட்டமன்றத்தேர்தலில் முன்னாள் முதல்வர்களான மு.கருணாநிதி, ஜெ.ஜெயலலிதா ஆகியோரின் இன்மையைப் பெரிய வெற்றிடமாக ஊடகங்களும், ஊடகங்களில் விவாதிப்பவர்களும் சொல்கின்றனர். இன்னொருவரின் இன்மையைப் பற்றிப் பேசுவதில்லை. அவரது இன்மையும் இந்தத் தேர்தலில் பெரும் வெற்றிடம் என நான் நினைப்பதுண்டு. அவர் தமிழகத்தின் புலப்படா அரசியலின் மையமாக இருந்த திரு ம.நடராசன். புலப்படா அரசியலை விளக்குவதற்கு முன்னால் புலப்படா அரங்கியலை விளக்க நினைக்கிறேன் 

கண்ணுக்குப் புலப்படா மனிதன் (INVISIBLE MAN) ) என்ற புகழ்பெற்ற சினிமாவைப் பலர் பார்த்திருக்கக் கூடும். ஒரு பழைய நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட அறிவியல் புனைவுப்படம். இந்தச் சினிமாவுக்கு முன்பே நவீன அரங்கியல் வரலாற்றில் புலப்படா அரங்கு (INVISIBLE THEATRE) என்ற கருத்தியல் அரங்கு - அரசியல் நடவடிக்கை அரங்க வடிவம் ஒன்று சோதனை செய்யப்பட்டது. அவ்வரங்க வடிவின் கருத்தியல் முதன்மையாளர் அகஸ்டோ போவல் என்ற அர்ஜெண்டைனாக்காரர். 

நிகழ்காலத்தில் ஒவ்வொருவர் கையிலும் நடக்கும் நிகழ்வுகளைக் காட்சிப்பதிவுகளாக்கும் திறன் தொலைபேசி இருக்கிறது. அதனால் கண் முன்னே நடக்கும் ஒவ்வொன்றையும் காட்சிப்படுத்திப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். காட்சிப் படுத்தப்பட்ட ஒரு நிகழ்வு பெருந்திரளான மக்களுக்குச் சொல்லப்பட வேண்டிய ஒன்று என நினைத்தால் உடனடியாக இணையம் வழியாகவே நண்பர்களுக்கு அனுப்புகிறோம். தொடர் பகிர்வுகள் வழியாக உலக அளவில் கிருமி (Viral)யைப் போலப் பரவிவிடுகிறது. இந்தப் பரவல் வழியாக இருவகை விளைவுகளும் ஏற்படுகின்றன. அண்மையில் சாதி ஒடுக்குதலுக்கு எதிராக நல்ல பலனைத் தந்துள்ளது. சிதம்பரம் அருகில் தரையில் உட்காரவைக்கப்பட்ட பஞ்சாயத்துத் தலைவிக்கு ஆதரவாகப் பெருகிய குரல்களும் ஆதரவும் சட்ட நடவடிக்கைக்குக் கொண்டு போயிருக்கிறது. அதே போலத் தங்கள் சாதி ஆணவத்தைப் பறைசாற்றிக் கொள்ளும்விதமாகப் பயன்படும் என அவர்களே எடுத்த காணொளிக்காட்சி அவர்களையே சிறைக்குக் கொண்டுபோய்ச் சேர்த்திருக்கிறது. 

இப்போதிருக்கும் திறன்பேசியும் அதற்குள் இருக்கும் காமிராவும் இல்லாத 1970 களில் கண் முன்னே நடக்கும் தவறுகளைப் பலருக்கும் புலப்படச் செய்யவும் அதன் தொடர்ச்சியாகத் தவறுகளைத் தட்டிக்கேட்கச் செய்யவும் தூண்டும் ஒரு அரங்கநிகழ்வு வடிவமாக அகஸ்டோ போவல் அந்தப் புலப்படா அரங்கைச் சோதனை செய்தார். மக்கள் கூடும் இடங்களில் குறிப்பாக பேரங்காடிகள், அரசாங்க அலுவலகங்கள் போன்றவற்றில் முன் திட்டமில்லாமல், ஒத்திகைகள் எதுவுமின்றி அங்கு நடக்கும் நிகழ்வை மையமிட்டே ஒரு காட்சியை உருவாக்கிச் சுற்றி நிற்பவர்களைப் பார்வையாளர்களாக மாற்றி விடும் வடிவம் அது. அந்த வடிவத்தில் பார்வையாளர்களும் அவர்களை அறியாமல் பங்கேற்பாளர்களாக மாறிவிடுவார்கள். மக்கள் அரங்கின் (People's theatre )தொடர்ச்சியாகப் பல சோதனை அரங்க வடிவங்களை முயற்சி செய்தவர் அகஸ்டோபோவல். அவரது விவாத அரங்கின் (Forum theatre) முன்வடிவமே இந்தப் புலப்படா அரங்கு. 

அமெரிக்காவிலிருந்து அச்சாகி வெளிவந்த - தி டிராமா ரெவ்யூ - The Drama Review (TDR ) என்ற இதழ் 1990 களின் தொடக்கத்தில் அகஸ்டோ போவல் சிறப்பிதழ் ஒன்றை வெளியிட்டது. அவ்விதழுக்குப் புதுச்சேரி பல்கலைக் கழக நிகழ்கலைப்பள்ளி சந்தா கட்டி வாங்கிக் கொண்டிருந்தது. அகஸ்டோ போவல் சிறப்பிதழைக் கைப்பற்றி வாசித்த சாரு நிவேதிதாவும் அவரது அப்போதைய நண்பர்களும் தமிழில் சோதனை செய்து பார்த்தார்கள். அப்படிச் சோதனை செய்த நாடகமே மதுரை நிஜநாடக இயக்க நாடகவிழாவில் மேடையேற்றப்பட்ட இரண்டாம் ஆட்டம். அந்நாடகம் முழுமையும் புலப்படா அரங்காகவும் நிகழ்த்தப்படவில்லை; விவாத அரங்காகவும் உருவாக்கப்படவில்லை. அதிர்ச்சி மதிப்பீடுகளின் வழி பேசப்படும் வாய்ப்புகளைக் கொண்டதாக அதன் பிரதி உருவாக்கப்பட்டிருந்தது. சாருநிவேதிதாவின் முன்னெடுப்பில் நிகழ்த்தப்பட்டு பாதியில் நின்றுபோன இரண்டாம் ஆட்டம் நாடகத்தையும் அதன் விளைவுகளையும் பற்றி இங்கே பேசவேண்டியதில்லை. 

பேசவேண்டியது அவ்வப்போது தோன்றி மறையும் புலப்படா அரசியலின் சூத்திரதாரிகள் பற்றித்தான். குறிப்பிட்ட ஒரு தொகுதியில் வலுவான கட்சி வேட்பாளரின் பெயரிலேயே இன்னும் சிலபேர் சுயேச்சைகளாகப் போட்டியிட்டுக் குழப்பத்தை உருவாக்குவார்கள். அவரது ஏஜெண்டுகளாக ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் ஆட்கள் இருந்து ஏதாவது ஒரு கட்சிக்கு உதவி செய்வார்கள். சில ஆயிரம் வாக்குகளைப் பிரித்துத் தோல்விக்கு வழிவகுப்பார்கள். அவர்களின் வரவு -செலவுகளை அந்தக் கட்சியின் வேட்பாளரே கவனித்துக்கொள்வார். இதன் பெரிய அளவுச் செயல்பாடாகத் தமிழ்நாட்டின் தேர்தல் காலங்களில் உயிர்த்துக் கிளம்பும் திடீர் அரசியல்வாதிகளைச் சொல்லலாம். அந்த அரசியல்வாதிகளும் அரசியல்கட்சிகளும் புலப்படா அரசியலின் பீனிக்ஸ் பறவைகள். அப்படியான பீனிக்ஸ் பறவைகள் தமிழ்ச் சினிமாவிலிருந்து தமிழ்நாட்டரசியலுக்கு வந்துகொண்டே இருக்கின்றன. 

சினிமாக்களில் கவர்ச்சிகரமான பிம்பங்களாக வலம்வரும் நடிகர்களைக் காணக் கூட்டம் கூடும் என்ற அடிப்படையில் தமிழ்நாட்டின் மையநீரோட்ட அரசியலைத் தீர்மானிக்கும் இருபெரும் கட்சிகளும் நடிகர்களை அரசியல் பரப்புரைக்குப் பயன்படுத்தியதைப் புலப்படா அரசியல் எனச் சொல்ல முடியாது. அவை வெளிப்படையான அரசியல். ஓரளவு அரசியல் புரிதல் கொண்ட சிறுவனாக இருந்தால் எனக்கு அந்தத் தேர்தல் பற்றி நினைவுகள் இருக்கின்றன. என் வீட்டில் எனது அண்ணன் ஒருவர் எம் ஜி ஆர் ரசிகராக இருந்த திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணிக்கான ஓடியாடி வேலை செய்தார். ஆனால் அதற்கு முன்பே காங்கிரஸ் கட்சியின் ஆளுமையாகவும் ஊராட்சி மன்றத்தின் உறுப்பினராகவும் இருந்த மாமா சிவாஜி கட்சியின் ஆளாக இருந்த அமைதி காத்தார். 1967 தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியும் திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியும் மோதிக்கொண்டன. தேசியத்தோடு கூடிய மாநில வளர்ச்சி, கல்விக்கண் திறந்த காமராசர் போன்ற சொல்லாடல்கள் ஒருபுறம் பேசப்பட்டன. எதிர்ப்புறத்தில் இந்தி எதிர்ப்பு, படியரிசித்திட்டம் என முன்மொழியப்பட்டன என்றாலும் கிராமப்புறங்களில் இவ்விரு கட்சியையும் நடிகர்களின் கட்சியாகவே மக்கள் அடையாளப்படுத்தினார்கள். சிவாஜி கட்சியாகக் காங்கிரசும், எம்ஜிஆர் கட்சியாகத் திமுகவும் அடையாளப்படுத்தப்பட்டு எம்ஜிஆர் கட்சி வென்றது என்றே பேசப்பட்டது. 

அதே நேரத்தில் எம் ஜி ராமச்சந்திரன் அதிமுகவைத் தொடங்கியபிறகு அவ்வப்போது டி. ராஜேந்தர் போன்றவர்கள் பேசிய தி.மு.க. எதிர்ப்பரசியல் என்பது தர்க்கங்களுக்குள் அடைபடாத புலப்படா அரசியல். தேர்தலுக்கு முந்திய மாதம்வரை கலைஞர் தமிழுக்கு நான் அடிமை எனச் சொல்லிக்கொண்டிருக்கும் டி.ஆர். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் அவரை எதிர்த்துக் களம் இறங்குவார். இப்படித்தான் ஒரு கட்டத்தில் - எம் ஜிஆர் மறைவுக்குப் பின் பாக்கியராஜ் ஒரு கட்சி ஆரம்பித்து வாக்குக்கேட்டு வலம் வந்தார். சரத்குமாரும் தி.மு.கவில் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துவிட்டுத் திடீரென்று ராஜினாமா செய்து திமுக எதிர்ப்பரசியலில் இறங்கினார். எல்லாத் தேர்தல்களிலும் நடிகர் கார்த்திக் களம் இறங்கிக் கட்சி தொடங்கி, கட்சி மாறித் தென் மாவட்டங்களில் குறிப்பிட்ட தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்திவிட்டுத் தேர்தல் முடிந்தவுடன் காணாமல் போய்விடுவார். அவரது நாடாளும் மக்கள் கட்சி, அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சியாக இப்ப்போதும் இருக்கிறது. இந்த த்தேர்தலில் போட்டியிடுமா என்று சொல்லி இன்னும் சில மாதங்கள் போகவேண்டும். இவர்களின் அரசியலின் நோக்கங்கள் எப்போதும் வெளிப்படையானவை அல்ல. வாக்குகளைப் பிரிப்பது என்னும் நோக்கம் மட்டுமே. இந்த நடிக அரசியல்வாதிகளுக்குத் தேர்தல் காலத்தில் மட்டும் கட்சி நடத்தவும் பரப்புரைப் பயணம் செய்யவும் பண உதவி செய்யும் அந்தப் புலப்படா அரசியல் சக்தி யாராக இருக்கும்? அவற்றையெல்லாம் ஒருங்கிணைத்துக் கூலிதரும் முகவாண்மையின் மேலாண்மை இயக்குநர் எவ்வளவு புத்திசாலியாக இருப்பார். அப்படியான புத்திசாலியாகப் பெரும்பத்திரிகளின் புலனாய்வுக் கட்டுரைகள் - டீக்கடை பெஞ்சு, மரத்தடி மாமா, கூகை, ஆந்தை, லென்ஸ், நாடோடி, வாக்கி டாக்கி - எனப் பெயரிட்டு எழுதிய அரசியல் வதந்திக் கட்டுரைகளை ஒருவரைச் சுற்றிச்சுற்றிச் சொல்லிக்கொண்டிருந்தன. அந்தப் பெயரையும் நேரடியாகச் சொல்லாமல் மறைமுகச் சங்கேதக்குறிகளால் தான் குறித்தன. 

எப்போதும் தேசியத்தையும் தேசியவாதக் கட்சிகளையும் ஆதரிப்பவர்களாகவும், அதன் வழியாக மைய அரசின் சலுகைகளைப் பெறுகிறவர்களாகவும் இருந்தவர்கள் தமிழக அரசியலில் அ இ அதிமுகவின் போக்குகளை விமரிசனத்தோடு ஆதரிப்பாளர்களாகக் காட்டிக் கொள்வது வரலாறு மட்டுமல்ல; நிகழ்காலமும்தான். திராவிட இயக்கத்தை எதிர்த்துக் கொண்டே அ இ அதிமுகவை ஆதரித்துக் கருத்துக்கூறும் நடுநிலையாளர்கள், ஜெ.ஜெயலலிதா அவர்களின் அரசு எடுக்கும் முடிவுகள் தமிழ்நாட்டு மக்களின் வெகுமக்கள் உளவியலை உள்வாங்கி வெளிப்பட்டதாக இருந்தது எனப் பாராட்டவும் செய்வர். அதற்காகவே அவரை ஆதரிப்பதாகத் தமிழ்த்தேசியம் பேசுகிறவகளும், அவரது ஆட்சியைப் பாராட்டும் பத்திரிகையாளர்களும் சொல்லிக் கொண்டே இருப்பார்கள். இப்படியான தமிழ்நாட்டு வெகுமக்களின் நலனை மையமிட்ட அந்த முடிவுகளை ஜெ.ஜெயலலிதா எடுத்தாரா? என்று கேட்டால் , இல்லை அந்த முடிவுகளை எடுக்கும்படியான யோசனைகளைச் சொன்னவர் அவரது அன்புத்தோழி - அரசியல் ஆலோசகர் திருமதி சசிகலா என்று கூட்டணிக்குச் சென்று திரும்பிய வட்டார/ சாதித்தலைமைக் கட்சித்தலைவர்கள் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு சொன்னார்கள். 

வெளியே தெரியும் அரசியல் நகர்வுகளைத் தாண்டி உள்ளறை அரசியல் நகர்வுகளை அறிந்தவர்கள் - ஊகிப்பவர்கள் - குறிப்பாகப் பத்திரிகைத்துறை நண்பர்கள் அத்தகைய முடிவுகளின் பின்னணியில் திரு ம.நடராசன் அவர்கள் இருப்பதாகவும் சொல்வார்கள். தன்னையொரு புலப்படா அரசியல்வாதியாக வைத்திருந்த ம. நடராசனின் சாதனைகளையும் திரைமறைவு வேலைகளையும் அவரது ஆதரவாளர்களைப் போலவே எதிர்ப்பாளர்களும் அறிந்தே வைத்திருந்தனர். அவரது ஆதரவாளர்களும் எதிர்ப்பாளர்களும் ஒற்றைத் தன்மையானவர்கள் அல்ல; பலதளமானவர்கள்; தமிழின் அனைத்துத்தளங்களிலும் அவருக்கு நண்பர்கள் இருந்தார்கள்; எதிரிகள் இருந்தார்கள். அரசியல் வேலைகளைப் போலவே கலை, இலக்கியத்தளங்களிலும் அவரது கைகள் இருந்தன. தமிழரசி, புதிய பார்வை போன்றன அவர் நடத்திய பத்திரிகைகள். அவற்றில் எல்லாம் வெளிப்பட்ட கலை, இலக்கியப்பார்வை தமிழில் நவீனத்துவக் கலை இலக்கியப் பார்வையாக முன்வைக்கப்பட்ட பார்வையை நிராகரித்த பார்வை என்பதை அவற்றின் வாசகர்கள் அறிவார்கள். 

திராவிட இயக்க அரசியலோடு, திராவிட இயக்கக் கலை இலக்கியப் பார்வையையும் உள்வாங்கிய திரு ம.நடராசன் தனது மாணவப்பருவக்காலம் தொடங்கித் திராவிட இயக்க அரசியல் அறிவும் அனுபவமும் பெற்றவர். முதன்மையான போராட்டமான இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கு பெற்றவர். திராவிட முன்னேற்றக் கழகத்தலைவர் திரு மு.கருணாநிதி எப்படியான நகர்வுகளையும் முடிவுகளையும் எடுப்பார் எனச் சிந்தித்து அதற்கேற்ப அ இ அதிமுகவும் முடிவுகளை எடுக்கவேண்டும் என்பதை அறிந்தவர். அவரது ஆலோசனைகளே தமிழ்நாட்டின் பல்வேறு வட்டாரங்களில் பலம் பொருந்திய சாதிகளின் எண்ணிக்கை பலம், பொருளியல் முதலீடுகள், பண்பாட்டு நடவடிக்கைகளை ஆதரித்த நிலைக்கு அ இ அதிமுகவின் தலைமையை நகர்த்தியது. அந்த நகர்வுகள் எப்போதும் தேர்தல் வெற்றிக்கு உதவும் நகர்வுகளாக இருந்தன. அதேபோல தேர்தல் காலங்களில் எதிர் அரசியல் மட்டுமல்லாமல் உள் எதிர்வுகளை உருவாக்கி வாக்குப் பிரிப்பு அரசியலுக்கும் அவரிடம் யோசனைகள் இருந்தன. இந்த உத்திகள் பலவற்றிற்கு அவருக்கு வழிகாட்டி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் திரு.மு.கருணாநிதி என்பது சுவாரசியமான நகைமுரண். வெளிப்படையாக மு.கருணாநிதி செய்த அரசியலை ம.நடராசன் மறைமுகச் செய்துவந்தார். அவரது யோசனைகள், வழிகாட்டல்கள் அ இ அதிமுகவிற்கு எப்போதும் பயன்பட்டது. 

அவரது அரசியல் ஈடுபாட்டையும் திராவிடப் பற்றையும் முழுமையாக அறிந்தவர்கள் தமிழ்நாட்டுப் பிராமணியக் கருத்துருவாக்கிகள். அ இ அதிமுகவின் பின்னணிச் செயல்பாடுகளிலிருந்து ம.நடராசனை விலக்கிவைப்பதே அந்தக் கட்சியைத் தங்களின் விருப்பம்போல இயக்குவதற்கு வசதியானது என உணர்ந்தவர்கள். அவர் இல்லாத அ இ அதிமுகவை உருவாக்குவதே முதன்மையான நோக்கமாகக் கருதி செயல்பட்டார்கள். அதற்குத் துணைபோன நிகழ்வே தர்மயுத்தம் என்பது எனது அனுமானம். தர்மயுத்தம் என்னும் பாவனை நிகழ்வு மட்டும் நடக்காமல் போயிருந்தால் என்னவெல்லாம் நடந்திருக்கும் என்பதைக் கற்பனை செய்வதே சுவாரசியமான நாடகக் காட்சிகள். 

புலப்படா அரசியலின் மையம் இப்போது இடம் மாறியிருக்கிறது. திரு. ம. நடராசனின் இடத்தைக் கைப்பற்றியிருக்கும் அந்த நபர் மறைந்து திரியும் மாயாவியாக நினைத்துக் கொண்டிருக்கிறார். மாயாவை நம்பும் அந்த மாயாவி ஒருவராக இருக்கலாம்; ஒன்றிரண்டு பேராகக் கூட இருக்கலாம். பெரிய அரசியல் ஆசை இல்லாத சின்னச் சின்ன நடிகர்களைத் தூண்டிவிட்டுக் கட்சிகள் ஆரம்பித்துத் தேர்தல் காலத்துப் பரப்புரைகள் நடத்துவதற்குப் பதிலாகப் மாற்றுத்திட்டங்களை நடைமுறைப்படுத்துகின்றது மாய அரசியல். அவர்களின் பொருளியல் தேவைகளை நிறைவேற்றும் உறுதிகளை வழங்கிக் கட்சியில் இணைந்து பணியாற்றும் ஆளுமைகளாக மாறிக் கொண்டிருக்கின்றனர். நடிக, நடிகைகள் வரிசையாகக் கட்சியில் இணைகிறார்கள். தமிழ்ச் சினிமாவில் இருபெரும் நடிகர்களான ரஜினிகாந்தும் கமல்ஹாசனும்கூட வெளிப்படையான அரசியல் என்பதற்குப் பதிலாகப் புலப்படா அரசியலில் மிதக்கும் வண்ணக்குமிழிகளாகவே வலம் வருகின்றனர். ஓடாத ஆற்று நீராக இல்லாமல் குளத்துநீரில் அசையும் இந்த வண்ணக்குமிழிகள் தற்காலிகப் பளபளப்புகள் கொண்டவை. வானவில்லின் வண்ணக்கோலங்களைக் காட்டி ஜாலம் செய்யும். ஆனால் ஒரு தேர்தல் காலம் முடிந்தபின் உடைந்து காணாமல் போய்விடும் என்பதுதான் அதன் வாழுங்காலம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்