இந்தியச்சாலைகளில் இருவேறு வாகனங்கள்

”மிதிவண்டியைப் பயன்படுத்தும் கலாசாரத்தை முன்னெடுக்கப் பெரியதொரு விழிப்புணர்வுப் பிரசாரத்தை முன்னெடுக்க வேண்டும்” என நாட்டின் துணைக் குடியரசுத் தலைவர் மதிப்பிற்குரிய வெங்கய்யா நாயுடு அவர்கள் பேசியதாக வானொலியின் காலைச் செய்தியில் முதல் செய்தியாக வாசிக்கப்படுகிறது.
உலகநாடுகளில் மிதிவண்டியைப் பயன்படுத்தும் பண்பாட்டைத் தக்க வைத்துள்ள நாடு சீனம். மக்கள் தொகையில் முதலிடத்தில் இருக்கும் சீனம், அந்நாட்டு மக்களுக்குரிய பொதுப்போக்குவரத்தைத் தாண்டி ஒவ்வொருவரும் மிதிவண்டியைப் பயன்படுத்தும் தேவையைத் தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளது. வளரும் நாடுகள் ஒவ்வொன்றும் தங்களுடைய அந்நியச் செலாவணியில் பெருந்தொகையைப் பெட்ரோலியம் சார்ந்த எரிசக்திக்குச் செலவழிக்கும் நிலையைத் தவிர்க்கும் பொருட்டு எடுத்த நடவடிக்கையே மிதிவண்டிப் பண்பாடு. இதுபோன்ற பொருளியல் வளர்ச்சியோடு தொடர்புடைய பண்பாட்டு நடவடிக்கைகளில் இந்திய அரசுகள் எப்போதும் கவனம் செலுத்தியதில்லை. முதலாளித்துவ வளர்ச்சியின் அடையாளமாகப் பல்வேறு இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்களின் உற்பத்தியையும் பயன்பாட்டையும் வேகப்படுத்திய நடவடிக்கைகளை முன்னெடுத்தது காங்கிரஸ் அரசு.
 
உலகமயப்பொருளாதார உறவுகளை அனுமதித்துக் கையொப்பம் இட்டதின் தொடர்ச்சியாக நடுத்தர வர்க்கக் குடும்பங்கள் ஒவ்வொன்றின் வாசலிலும் சொகுசுக்கார்கள் நிற்கத் தொடங்கின. கடந்த 20 ஆண்டுகளில் குறைந்தது ஐந்து தடவையாவது கார்களை மாற்றிக்கொண்டிருக்கும் வசதியைக் கொண்ட குடும்பங்கள் நடுத்தரவர்க்கம் என்ற அடையாளத்திலிருந்து உயர் நடுத்தரவர்க்கமாக மாறிவிட்டதாக நினைக்கின்றன. ஒன்றுக்கு மேற்பட்ட வீடுகளுக்குச் சொந்தக்காரர்கள் என்ற அடையாளம்போலவே ஒன்றுக்கும் மேற்பட்ட கார்களின் உரிமையாளர்கள் என்பது சமூகத்தில் அவர்களின் மரியாதையாக மாறிக்கொண்டிருக்கிறது. சொந்தவீடு கட்டுவதற்கு கடன்கள் வழங்கிய வங்கிகள் அடுத்த இலக்காக கார்கள் வாங்குவதற்குக் கடன் என்பதாக நகர்ந்தது என்பதைப் புள்ளிவிவரங்களோடு விளக்க வேண்டியதில்லை. தமிழ்நாடு, மகாராட்டிரம், கர்நாடகம் போன்ற வளர்ச்சியடைந்த மாநிலங்களின் வளர்ச்சியில் வாகன உற்பத்தித் தொழிற்சாலைகள் முக்கியமான பங்களிப்புச் செய்துள்ளன.
 
உலக அளவில் உற்பத்தியாகும் சொகுசுக்கார்கள் , எரிசக்தியில் ஓடும் இருசக்கர வாகனங்கள், பெண்களுக்கெனத் தனியான கட்டமைப்புத்தன்மை கொண்ட வாகன உற்பத்தி என அனைத்தும் இந்தியாவில் தயாரிக்கப்படும் விதமாகவே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டன. வாகனங்களின் உதிரிப்பாகங்கள் தயாரிப்புக்கான தொழிற்சாலைகள், அவற்றைப் பல்வேறு இடங்களிலிருந்து பெற்று இணைத்து முழுவடிவமாக மாற்றும் தொழிற் சாலைகள் என நகர்ந்துவிட்டது இந்தியா. அண்மையில் கோவிட் 19 காரணமாக வீழ்ச்சி அடைந்த வாகன உற்பத்தியை ஊக்குவிக்கும் விதமாகப் புதுக்கார்கள் வாங்குவதை ஊக்குவித்து மானியங்கள் வழங்கப்படுகிறது என நிதியமைச்சர்கூடத் தெரிவித்தார். இந்த நகர்வுகள் பன்னாட்டு நிதி மூலதனம், பன்னாட்டுச் சந்தை என்பதை நோக்கிய நகர்வு. இந்திய முதலாளிகள் சிலரைப் பன்னாட்டுப் பெரும்பணக்காரர்களாக மாற்றும் நோக்கம் கொண்டது. அதனையும் ஊக்குவித்துக்கொண்டே இந்தியத் திரளுக்கு மிதிவண்டிகளைப் பயன்படுத்தும் பண்பாட்டைப் பரிந்துரை செய்யும் இன்னொரு போக்கு. இருக்கும் பிளவுகளைப் பாரதூரமாகக் காட்டும் - வளர்க்கும் போக்கே இது. அனைவருக்கும் குறைந்த கட்டணத்தில் பொதுப்போக்குவரத்தை உறுதி செய்ய முடியாத நிலையில் இதுபோன்ற பரிந்துரைகளைச் செய்வதைத்தவிர வேறு வழியில்லை.

இப்போதுள்ள மைய அரசு மிதிவண்டிப் பயணப்பண்பாட்டை மட்டுமே சீனாவைப் பார்த்துப் படியெடுக்கிறது என்று நினைக்க வேண்டியதில்லை. ஒரேநாடு, ஒரேமொழி, ஒரே மதம், ஒரே மாதிரியான கல்வி, ஒரே மாதிரியான பண்பாடு என ஒற்றைப் பரிமாணமாக நாட்டை மாற்றும் நினைப்பும்கூட சீனாவைப் பார்த்துப் படியெடுக்கும் நினைப்புகள்தான். உலகவரைபடத்தில் இன்றுள்ள நாடுகளில் வலிமையான அரசு சீன அரசு என்பதை உணர்ந்த நிலையில் அதனை நகலெடுக்கும் போக்கைப் பா.ஜ.க.வின் சித்தாந்திகள் தொடர்ந்து செய்து வருகின்றனர்.

இடதுசாரி அரசு என்னும் பெயரோடு இருந்தாலும், இப்போதுள்ள சீன அரசு, வாக்குரிமை, சமயநம்பிக்கை சார்ந்த உரிமை, கல்வி கற்பிக்கும் உரிமை, எதிர்ப்புகளைக்காட்டும் உரிமை போன்றவற்றை மூர்க்கமாகத் தடுக்கும் அரசாகவே இருக்கிறது. அரச முதலாளியத்தையும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் தனியார் முதலாளியத்தையும் ஊக்குவிக்கும் அரசாகவே அந்த அரசு செயல் படுகிறது. அந்த அமைப்பையும் பொருளியல் நடவடிக்கைகளையும் இந்திய வலதுசாரிகள் நகலெடுக்க வேண்டுமென மறைமுகமாக அரசு நிர்வாகத்தை வலியுறுத்துகின்றனர். அதனை வெளிப்படையாகச் சொல்லிக்கொள்ளாமல் சீனாவின் பாதையில் செல்கிறது இந்திய அரசு.




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மன்மோகன் சிங் மட்டும் தான் பொறுப்பா?…

நவீனத்துவமும் பாரதியும்

புள்ளிவிவர ஆய்வுகளின் தேவை.