இந்தியவியல் பேரா.துப்யான்ஸ்கி

மாஸ்கோ பல்கலைக்கழகத்தின் இந்தியவியல் பேராசிரியர் அலெக்ஸாண்டர் துப்யான்ஸ்கியின் மரணத்திற்கும் கரோனா காரணமாகியிருக்கிறது. ருஷ்யப் பல்கலைக்கழகங்களில் மட்டுமல்லாமல், கிழக்கு ஐரோப்பிய நாடுகளான போலந்து, செக்லோவ்ஸ்கியா நாடுகளின் பல்கலைக்கழகங்களில் இந்தியவியல்/ தமிழியல் கல்விக்குக் கடந்த 50 ஆண்டுகளாகக் காரணியாக இருந்தவர்.

வார்சா பல்கலைக்கழகத்தில் இருந்த இரண்டு ஆண்டு காலத்தில் ஆறுமாதத்திற்கொரு தடவையாவது அங்கு வந்துவிடுவார். பாடத்திட்ட உருவாக்கம், கருத்தரங்குகள், முனைவர் பட்ட ஆய்வாளர்களுக்கான கலந்தாய்வுகள், கிழக்காசியவியல் புலத்தின் சிறப்புக் கொண்டாட்டங்கள் என ஒவ்வொன்றிற்கும் அழைக்கப்படுவார்
அந்தக் காலகட்டத்தில் இந்தியவியலில் மூத்த பேராசிரியர்களாக இருந்தவர்கள் மூன்றுபேர். போலந்தின் பெர்ஸ்கி, செக்கின் வாசெக், ரஷ்யாவின் துப்யான்ஸ்கி. இவர்கள் இல்லாமல் இந்தியவியல் கல்விப்புலம் செயல்பட்டதில்லை. இம்மூவருமே அரசு அனுமதித்த பணிக்காலத்தைத் தாண்டிய மூத்த/ வருகைப்பேராசிரியர்கள். நான் போன ஓராண்டிற்குப்பின் இந்தியவியல் துறையின் 80 ஆவது ஆண்டு நிறைவு விழாவும், அதற்கடுத்த ஆண்டு தமிழ்க்கல்வியின் தொடக்கம் நடந்த 40 ஆவது ஆண்டும் கொண்டாடப்பட்டது. இரண்டு நிகழ்விலும் ஓரமர்வுகளுக்குத் தலைமைதாங்கிக் கட்டுரைகள் வழங்கினார் துப்யான்ஸ்கி.
வார்சா பல்கலைக்கழகத்தில் தமிழியல் துறை ஆரம்பிக்கப்பெற்ற 40 ஆவது ஆண்டு விழா 16-05-2013- அன்று கொண்டாடப்பெற்றது. இரண்டு அமர்வுகள் கொண்ட கருத்தரங்க நிகழ்வாகத் திட்டமிடப்பெற்ற அந்த விழாவின் தொடக்க நிகழ்வில் இந்தியத் தூதரகத்தின் முதன்மைச் செயலர் திரு. மீனா கலந்து கொண்டார். பல்கலைக்கழகம் சார்பில் ரெக்டார் என்னும் முதன்மைப் பொறுப்பில் இருக்கும் அதிகாரி கலந்து கொண்டு விழாவைத் தொடங்கி வைத்தார். துறையின் தலைவர் திருமதி தேனுதா ஸ்தாயிக்கின் வரவேற்புரையில் துறையின் கடந்த காலம் நினைவு கூரப்பெற்றது. ஓய்வுக்குப் பின்னும் துறையோடு தன்னை இணைத்துடுக் கொண்டுள்ள மூத்த பேராசிரியர் பெர்ஸ்கி தமிழ்ப் பேராசிரியர்களாக வந்து போன ஒவ்வொருவரையும் நினைவு கூர்ந்து பேசினார். அப்போது என்னைக் காண்பித்து என் முகத்தின் வழியாக அவர்களின் முகங்களைக் காண்கிறோம் என்ற போது கொஞ்சம் புல்லரிப்பாகத் தான் இருந்தது.

சிறப்பு விருந்தினராக வந்திருந்த மாஸ்கோ பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராசிரியர் அலெக்ஸாண்டர் துப்யான்ஸ்கி இந்தியவியல் சார்ந்த நூல்களை வழங்கி வாழ்த்துச் சொன்னார். முதல் அமர்வில் முதல் கட்டுரையாகத் தமிழ் இரட்டைக் காப்பியங்கள் (The So-Called Twin Poems in Tamil Literature) பற்றிய துப்யான்ஸ்கி கட்டுரை வாசித்தார்.
இந்தியவியல் துறையின் எண்பதாவது ஆண்டு( 2012 நவம்பர் 8, 9 )இந்தியவியல் பேராசிரியரும் தமிழறிஞருமான வாசெக், செக் நாட்டிலிருந்து வந்திருந்தார். நிகழ்வுக்கு முந்திய நாளே அவர் வார்சாவுக்கு வந்து விட்டார். அவரோடு மேற்கத்திய விருந்திலும், நிகழ்வின் தொடக்க நாளிலும் உடனிருந்தது முக்கியமான தருணங்கள். ஒவ்வொருவரிடம் என்னை அறிமுகப்படுத்தும்போது, தமிழின் தன்மையைச் சொல்லி அதனைக் கற்பிக்க வந்துள்ளார் எனச் சொன்னதோடு, “ கணியன் பூங்குன்றனின் தேசத்திலிருந்து வந்திருக்கிறார்” எனச் சொல்லி அறிமுகப்படுத்தினார். கோப்பையில் நிரம்பிய வோட்காவோடு தூக்கி மோதும்போது ’தமிழில் எப்படிச் சொல்லலாம்’ என்று கேட்டார். “கொண்டாடுவோம் ” என்று பாரதி சொன்ன பொருளில் சொன்ன போது அதனை ஏற்றுச் சொல்லியபடி கோப்பையை உரசினார்.
செக்நாட்டுத் தமிழ் அறிஞர் வாசெக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு மரணத்தைத் தழுவினார். இப்போது துப்யான்ஸ்கியின் மரணம். இவ்விரு பேராசிரியர்களோடும் இருந்த தருணங்கள்

திரும்பத்திரும்ப நினைத்துக் கொள்ள வேண்டிய தருணங்கள்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தேடிப்படித்த நூல்கள் அல்லது பழைய புத்தகக் கடையில் கிடைத்த நூல்கள்

மன்மோகன் சிங் மட்டும் தான் பொறுப்பா?…

நாயக்கர் கால இலக்கியங்கள் சமுதாய வரலாற்றுச் சான்றுகளாகக் கொள்வதற்கான முன் தேவைகள்