மறந்துபோன ஊர் அடையாளங்கள்

 


என்னுடைய பேரனை இடுப்பில் வைத்திருக்கும் இந்தப் பெண்ணின் பெயர் எமிலி மாதவி. படம் எடுக்கப்பட்ட இடம் போலந்தின் பண்பாட்டு நகரமான க்ராக்கோ நகரின் புகழ்பெற்ற பூங்கா.
எமிலி மாதவி என்னுடைய நேரடி மாணவி அல்ல. க்ரோக்கோ பல்கலைக்கழகத்தில் தமிழ்மொழியை ஒரு தாளாக மட்டும் படித்தவள். அங்கு அந்த வசதி மட்டும்தான் உண்டு. வார்சாவிலிருந்து 350 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் க்ரோக்கோவில் பெற்றோருடன் இருந்தாள். வார்சாவில் அந்தக் குடும்பம் இருந்திருந்தால் தமிழைப் பட்டப்படிப்பாகவே அவள் படித்திருக்கக் கூடும் ஏனென்றால், நான் பணியாற்றிய வார்சா பல்கலைக்கழகத்தில் மட்டுமே தமிழைப் பட்டப்படிப்பாகவே படிக்கும் வசதி உண்டு. என் மகள் பேரனோடு போலந்து வந்தபோது குடும்பத்தோடு க்ரோக்கோ போனோம். அப்போது, அங்கு தமிழ் கற்பித்த பேராசிரியர் எங்களுக்கு க்ரோக்கோவைச் சுற்றிக்காட்ட உதவியாக எமிலி மாதவியை வரச்சொல்லியிருந்தார்.
எமிலி மாதவியின் அப்பா பெயர் ஜெகநாதன். திருமதி இந்திராகாந்தி காலத்தில் போலந்துக்குப் போனவர். இந்தோ - போலந்து நட்பு அடிப்படையில் போலந்தின் இரும்புத்தொழில், வேளாண்மை போன்றவற்றிற்கு இந்தியா உதவிக்கொண்டிருந்த நேரம். இந்தியாவின் வேளாண் விஞ்ஞானியான மா.ச. சுவாமிநாதனின் வேளாண்மை ஆலோசனைப் பணியில் உதவியாளராக அங்கு போனவர். போலந்தின் நிலவளம், வேளாண்மை முறை பற்றிப் படித்துத் தெரிந்துகொண்டால் தான் ஆலோசனை சொல்ல முடியும் என்பதால் அந்தக் குறிப்புகளைத் தேடும் பொறுப்பு அவருக்குத் தரப்பட்டுள்ளது. அதற்காகத் தினசரியும் நூலகத்திற்குச் சென்று தரவுகள் திரட்டியிருக்கிறார். போல்ஸ்கி மொழியையும் கற்றுக்கொண்டிருக்கிறார். தினசரி நூலகம் சென்று தகவல் திரட்டும் அவருக்கு நூலகத்தில் பணியாற்றிய பெண் உதவிகரமாக இருந்துள்ளார். அவருடைய தேவைகளை அறிந்து நூல்களை எடுத்துத் தருவதோடு, போல்ஸ்கியில் இருக்கும் நூல்களை வாசித்து ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்தும் உதவியுள்ளார். அப்படி உதவியாக இருந்த அவரையே காதலித்து மணம் முடித்துக்கொண்டு போலந்துவாசியாகிவிட்டார் ஜெகநாதன். நான் போயிருந்த -2012 வாக்கில் அவரது வயது 80.
ஜெகநாதனுக்கு மூன்று பெண்களும் ஒரு ஆணும் என நான்கு பிள்ளைகள். அவர்களின் பெயர்களில் முன் பெயராகப் போல்ஸ்கிப் பெயர்களும் பின் பெயராகத் தமிழ்/ இந்தியப்பெயர்களும் இருந்தன. எமிலிமாதவி கடைசிப்பெண். அவளது அக்காக்களின் பெயரில் ஊர்மிளா, சாவித்திரி என்ற பெயர்களும் சகோதரனின் பெயரில் மாதவனும் இருந்தன. ஜெகநாதன் தஞ்சை / நாகப்பட்டினம் பக்கம் சொந்த ஊர் என்றார். திருமணம் ஆனபின் அவர் மட்டும் இரண்டு தடவை ஊருக்கு வந்ததாகவும், வந்தபோது அவரது உறவினர்களின் போக்கு அவ்வளவாகப் பிடிக்கவில்லை என்றும் தோன்றியிருக்கிறது. அங்கேயே திருமணம் செய்துகொண்டு தங்கியதை உறவினர்கள் விரும்பவில்லை என்றும், இப்போது அங்கிருக்கும் சொத்தில் பங்கு கேட்க நினைத்து வந்திருப்பதாகவும் நினைத்துக் கொண்டார்கள் என்றும் வருத்தத்தோடு தெரிவித்தார். அப்போதே அவரைப் பற்றித் தமிழ்ப் பத்திரிகை ஒன்றில் எழுதலாமா? என்று கேட்டபோது அதெல்லாம் வேண்டாம் என்று சொல்லிவிட்டார். என்றாலும் அவரது பிள்ளைகளைத் தமிழ்நாட்டிற்கு அழைத்து வந்து காவிரி பாயும் தஞ்சைத்தரணியைக் காட்டும் ஆசை இருந்தது என்பது அவரது பேச்சில் வெளிப்பட்டது.

கமலா ஹாரிஸ்களையும் செலின் கவுண்டர்களையும் பேசிக்கொண்டிருக்கும்போது நினைவுக்கு வந்ததால் ஜெகநாதனின் வீட்டிற்குப் போன நாள் நினைவுக்கு வந்தது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தேடிப்படித்த நூல்கள் அல்லது பழைய புத்தகக் கடையில் கிடைத்த நூல்கள்

மன்மோகன் சிங் மட்டும் தான் பொறுப்பா?…

நாயக்கர் கால இலக்கியங்கள் சமுதாய வரலாற்றுச் சான்றுகளாகக் கொள்வதற்கான முன் தேவைகள்