மேலைக்காற்றுக்குப் பதில் கீழைக்காற்று

 பிறமொழி எழுத்துகளைத் தமிழில் அறிமுகம் செய்யும் நோக்கம் வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறுவிதமாக நடந்துள்ளன. தழுவல்கள், சுருக்க அறிமுகங்கள், மொழிபெயர்ப்புகள் என வரவு வைக்கப்பட்டதுபோலவே குறிப்பிட்ட மொழி இலக்கியங்களைத் தமிழில் அறிமுகம் செய்ய வேண்டும் என்ற நோக்கமும் இருந்துள்ளன.

சம்ஸ்க்ருத நூல்கள் தமிழுக்குள் கொண்டுவரப்பட்ட வரலாறும் காரணங்களும் விரிவாகப் பேசப்படவேண்டியவை.காலனியக் கால கல்விப்புல வரவுகளாகச் சேக்ஸ்பியரும் ஆங்கிலக் கவிகளும் ஆங்கில வழி ஐரோப்பிய எழுத்தாளர்களும் இருந்தார்கள். ஆங்கிலேயர்களைப்போலவே இந்தியப்பகுதிகள் சிலவற்றில் ஆதிக்கம் செலுத்திய பிரெஞ்சுக்காரர்களும் நேரடியாக மொழிபெயர்க்கப்பட்டார்கள். சம்ஸ்க்ருதம், ஆங்கிலம் வழியான நேரடி மொழிபெயர்ப்புக்கு அடுத்தபடியாகத் தமிழுக்கு அதிகம் வந்தவை ருஷ்யமொழி நூல்கள். அவை நேரடியாக ருஷ்யமொழியிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டன என்று சொல்லமுடியாது. ஆங்கிலம் வழியாகவே மாஸ்கோவிலிருந்து முன்னேற்றப்பதிப்பக வெளியீடுகளாகவும், இந்திய- சோவியத் பண்பாட்டு உறவுக்கழக முன்னெடுப்பு வழியாக நியுசெஞ்சுரி புத்தக நிறுவனம் மூலமாகவும் அச்சிடப்பெற்றன. ரஷ்ய ஆதரவு இடதுசாரி இலக்கியங்கள் போலவே சீன ஆதரவு இடதுசாரி நூல்களும் சென்னை புக் ஹவுஸ் வெளியீடுகளாகவும் மார்க்ஸீய -லெனினியக் குழுக்களின் சிறுசிறு பதிப்பகங்கள் வழியாகவும் அச்சிடப்பட்டு வாசிக்கக் கிடைத்தன.

இயக்கம் சார்ந்த மொழிபெயர்ப்புகளுக்குப் பின் தமிழுக்கு வந்த ஜெர்மன், பிரெஞ்ச் மொழி இலக்கிய நூல்களின் பின்னணியில் அந்நாடுகளின் தூதரகங்களின் முன்னெடுப்புகள் இருந்தன. இவை எதுவும் இல்லாமலேயே அரபிய/உருது இலக்கியங்கள் தமிழுக்குள் வந்துள்ளன. அவ்வரவில் சமயப்பரவலின் காரணங்கள் இருந்துள்ளன.

அரசியல் இயக்கங்கள், தூதரக முயற்சிகள் தாண்டித் தனிமனிதர்களின் முன்னெடுப்புகளாலும் மொழிபெயப்புகள் நடந்துள்ளன. அவற்றின் பின்னணியில் உலக இலக்கியப்பார்வை கொண்ட தமிழ்ப் பதிப்பகங்கள் இருந்தன. இலக்கியப்பத்திரிகைகள் இருந்தன. அவற்றின் வழியாக மார்க்சிம் கார்க்கி, தாஸ்தயெவெஸ்கி, லியோ டால்ஸ்டாய், ஆல்பர் காம்யூ, காப்ரியேல் கார்ஸியா மார்க்யுவெஸ், ஜார்ஜ் லூயிஸ் போர்கெஸ், யூஜின் அயனெஸ்கோ, ழான் ஜெனே, ழான் பால் சார்த்தர், அகஸ்டோ பொவெல் . சில்வியா பிளாத் போன்றவர்களின் அறிமுகங்கள் கிடைத்துள்ளன.

மேற்கை நோக்கிய கலை இலக்கியப் பார்வைகளையும் வாசிப்பையும் கிழக்கை நோக்கித் திருப்பிய மொழியாக முன்பு சம்ஸ்க்ருதம் இருந்துள்ளது. தமிழின் செவ்வியல் கவிதைகளும் பக்திமரபும் கூட மேற்கின் கவனத்தை ஈர்த்திருக்கின்றன. இருபத்தியோராம் நூற்றாண்டில் சீனமும் கொரியமொழியும் ஜப்பானிய மொழியும் அந்த இடத்தைக் கைப்பற்றிக் கொண்டிருக்கின்றன.

தனி எழுத்தாளர்களுக்கான சிறப்பிதழ்களை வெளியிட்ட அச்சிதழ்களின் தொடர்ச்சியில் இப்போது கனலி இணைய இதழ் ஒரு குறிப்பிட்ட மொழியின் எழுத்துகளைத் தமிழுக்கு அறிமுகம் செய்யும் பணியைச் செய்திருக்கிறது. ஜப்பானியக் கலை இலக்கியத்தின் பன்முகத்தன்மையைத் தமிழுக்கு அறிமுகம் செய்துள்ள கனலியின் இந்தப் பணி பலபடப்பாராட்ட வேண்டிய பணி. அதன் உள்ளடக்கத்தைப் பார்க்கும்போது கீழைக்காற்றின் நளினத்தையும் சீற்றத்தையும் வாசிக்கமுடியும் எனச் சொல்லத்தோன்றுகிறது. பிடித்தவற்றைத் தடவி வாசிக்க வேண்டும்.

https://l.facebook.com/l.php?u=http%3A%2F%2Fkanali.in%2Fwp-content%2Fuploads%2F2020%2F11%2FKanali-Japanese-Special-Issue-Content-List.pdf%3Ffbclid%3DIwAR31KLEoDXdlKtR18sGgiSiLv2XnLLxw6UYW0uc-kjqWBNmvcW6u63vkPFA&h=AT2RY4OE6PRAbWPXUcQj_y6YCyAJM8BWwSwDg1Ven2A3YLzDi1h87vWKy74Ucl5auLbGJZ8vd8rUQ7m4VAsF2NJ1sK4sW9lkgTNg7AU-kOwqQ07b0vrjGhBSw7UbAynn8fA_1miGbEyC7IBPN8IZOw

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

தணிக்கைத்துறை அரசியல்

நவீனத்துவமும் பாரதியும்