பக்தியின் புதிய முரண்நிலை : மூக்குத்தி அம்மன்

 

பொருட்படுத்திப் பேசவேண்டிய திரைப்படங்கள் என்பதற்கான காரணங்கள் சில உள்ளன.

முதலாவது காரணம், சினிமா என்னும் தொழில்நுட்பம் சார்ந்த கலையின்  உள் நுட்பங்களைத் தனதாக்கிக்கொண்டு வெளிப்படும் நேர்த்தியான வடிவம்.

இரண்டாவது, அது வெளிவரும் காலகட்டத்தின் மீதான  விவாதங்கள். அவ்விவாதங்கள் தனிமனிதர்களின் உளவியல் சிக்கலாக இருக்கலாம்; சமூகமனிதர்களின் இருப்புக்கான காரணங்களாகவும் இருக்கலாம்.

 மூன்றாவது, பொதுச் சமூகத்தில் நிலவும் சில பொதுப்புத்திகளின் மீது கவனத்தைக் குவிக்கும் கூறுகளை அடுக்கிப்பார்வையாளர்களைத் திரளச்செய்வதும், திசைமாற்றுவதுமான  நோக்கங்களைக் கொண்டிருப்பது. இவையல்லாமல் முழுமையும் பொழுதுபோக்கு என்னும் நான்காவது காரணம்கூட ஒரு சினிமாவைப் பொருட்படுத்தும் காரணியாக அமையும்.

தீபாவளிப் பண்டிகையோடு மூன்று சினிமாக்கள்

நகர்ப்புற பண்பாட்டில் திரையரங்குகளுக்குச் சென்று திரைப்படம் பார்ப்பது பண்டிகைகளின்    பகுதியாக மாறி நீண்ட காலமாகிவிட்டது.   நகரப் பண்பாட்டின் நீட்சியில் முன்பு கிராமங்களும் இணைந்திருந்தன. தொலைக்காட்சியின் வருகைக்குப்பின்பு விலகிவிட்டன. வாரக் கடைசி விடுமுறை நாட்களிலும் பண்டிகைக்கால விடுமுறைகளிலும் நகரிய வாழ்வில் இன்னும் திரைப்படங்களுக்குச் செல்லுதல் ஒரு சமூக நிகழ்வாகவே இருக்கிறது. இந்தியாவில்/ தமிழ்நாட்டில் அச்சமூக நிகழ்வு தீபாவளி, பொங்கல், சித்திரை முதல் நாள், ஆங்கிலப்புத்தாண்டு போன்ற நாட்களில் புதிய சினிமாக்களின் வருகையோடு இணைகின்றன.

இந்த ஆண்டு கரோனாவின் பிடியில் இருக்கும் சினிமாத்தயாரிப்பும், வெளியீடும் வழக்கமான வெளியீட்டை நடத்த முடியாமல் தவித்த முதல் பண்டிகை நாளாக அண்மையில் வந்துபோன தீபாவளிப்பண்டிகை கடந்திருக்கிறது. என்றாலும் புதிய தொழில் நுட்பமான வான்வழித் தொடர்பாடல் நுட்பம் (OTT) பண்டிகைக்கு சினிமா என்ற சமூகநிகழ்வைத் தொடரச் செய்திருக்கிறது. இதற்கு முன்பே சில படங்கள் அந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திச் சோதனை செய்து பார்த்துவிட்டன.  அதிவேக இணையவழி வாய்ப்புக்கொண்ட நகரவாசிகளுக்கு இந்தத் தீபாவளிப்பண்டிகையை புதிய படங்களோடு கொண்டாட முடிந்திருக்கிறது. சூரரைப்போற்று, நாங்க ரொம்ப பிஸி, மூக்குத்தி அம்மன் என மூன்று சினிமாக்கள் தமிழ்ச்சினிமாவின் பார்வையாளர்களுக்கு வீடுதேடி  இணையவழியில் தீபாவளியன்று பார்க்கக் கிடைத்தன. 

இணையவழிப்பார்வையாளர்களால் இம்மூன்று படங்களுமே பார்க்கப்பட்டன. சூரரைப் போற்று அதன் அனைத்துக்கூறுகளுக்காகவும் – கலையியல் ஓர்மை, சமகால அரசியல் விவாதம், பொதுப்புத்தியின் திரட்சி உருவாக்கம் – என மூன்று கூறுகளுக்காகவும் விரிவான விவாதங்களை உருவாக்கி விவாதிக்கப்பட்டது.அப்படம் அதன் இலக்கு வெளியீட்டுத் திட்டமான திரையரங்கின் வழியாகப் பார்க்கக் கிடைத்திருந்தால் இன்னும் கூடுதலாகக் கவனம் பெற்றிருக்கும் விவாதிக்கப்பட்டிருக்கும் என்ற குறிப்போடு விலகிக்கொள்கிறது. மற்ற இரண்டு படங்களில் ஒன்று கவனம் பெற்றதற்கும் இன்னொன்று கவனம் பெறாமல் போனதற்குமான காரணங்களைத் தேடுகிறது.

சினிமா என்னும் கலையை அதன் உள்நுட்பங்கள் சார்ந்த புரிதலோடு பயன்படுத்திக் கொண்டு உருவாக்கியதில் இரண்டு படங்களுக்குமே பெரிய வித்தியாசம் இல்லை. இரண்டுமே நகைச்சுவை என்னும் மெய்ப்பாட்டின் உட்கூறுகளான  எள்ளல், இளமை, பேதமை,மடன் என்ற நான்கு அடிப்படை உணர்வுகளையும் உரையாடல்கள் வழியாக அதிகமாக உருவாக்கிக் காட்டிய படங்களே. சிற்சில இடங்களில் காட்சிப்படுத்துதல் வழியாகவும் நடிகர்களின் உடல் மொழியின் வழியாகவும் அவ்வுணர்வுகளை உருவாக்க முயன்றன.  என்றாலும் “ நாங்க ரொம்ப பிஸி” பெரிய அளவு கவனிக்கப்படவில்லை; பேசப்படவில்லை. அதனோடு ஒப்படி ‘மூக்குத்தி அம்மன்’ கவனிக்கப்பட்டது; பேசப்பட்டது.

மூக்குத்தி அம்மன்

 “கரோணா காலக் கட்டுப்பாட்டுக்குள் மிகக் குறைவான செலவில் படம் எடுத்து இணையம் வழியாக வெளியிடுவது” என்ற தயாரிப்பு முறையும் நோக்கமும் என்பதை உள்வாங்கி, ஆர்.ஜே. பாலாஜியின் கதை, இயக்கம், நடிப்பு வழியாக உருவாக்கப்பட்ட படம் மூக்குத்தி அம்மன் படத்தின் பெயராக இருக்கும் மூக்குத்தி அம்மனாகத் தமிழ்ச் சினிமாவின் முதன்மையான நாயகிகளில் ஒருவராக இருக்கும் நயன்தாரா மையப்பாத்திரமாக  நடித்துள்ளதின் மூலம் வெகுமக்கள் திரளின் கவனத்தைத் தன்வசப்படுத்தும் உத்தியைத் தனதாக்கி வெற்றி பெற்றுள்ளது  

 மூக்குத்தி அம்மன் முன்னர் வரிசைப்படுத்தப்பட்ட நான்கு காரணங்களில் முதல் இரண்டு காரணங்களுக்காக அல்லாமல் பின்னிரண்டு காரணங்களுக்காக மட்டுமே விவாதிக்கப்பட்டாக வேண்டிய ஒன்றாக இருக்கிறது. சினிமா மட்டுமல்ல. எந்தவொரு கலைவடிவத்தையும் அவற்றின் கலையியல் நுட்பங்களை முன்வைத்து விவாதிப்பதே கல்விப்புல விவாதம். மரபான திறனாய்வும்கூட அப்படித்தான் விவாதிக்கிறது. சினிமாவின் கலையியல் நுட்பங்களில் மிகச்சிறிய அலகு காட்சி அமைப்பே. காட்சி அமைப்புகளாக உருவாக்கப்பட்டு அடுக்கப்படுவதின் மூலம் நிகழ்வு என்னும் பேரலகு உருவாகிறது. காட்சி அமைப்புகளைப் பார்க்கத்தக்க நகர்வுகளோடும் உணர்வு வெளிப்பாடுகளோடும் நிறைத்துக் காட்டும் பாத்திரங்கள், பாத்திரங்களை ஏற்று நடிக்கும் நடிக/ நடிகையர்களின் ஈடுபாடு, அவர்களின் ஈடுபாட்டிற்குப் பலம் சேர்க்கும் இசைக்கோர்வைகள், பின்னணியாக வைக்கப்படும் வரைகலைப் பொருட்களின் பொருத்தம் என ஒவ்வொன்றிலும் தீவிரக்கவனம் செலுத்தி காட்சியமைப்பை நிகழ்வுக்கோர்வையாக மாற்றும் வேலையை ஒரு சினிமாவின் தேர்ந்த இயக்குநர் உருவாக்குகிறார். நிகழ்வுக் கோர்வைகளின் வழியாக விவாதம் ஒன்றை உருவாக்க நினைக்கும் அந்த இயக்குநர், அதற்கான புனைவுக்கதையை வைத்திருப்பார். திரைப் படத்தின் இக்கலையியல் கூறுகளின் இணைவில் ஏதொன்றும் துருத்திக் கொண்டிராமல் ஓர்மையுடன் இணைக்கும்போது அது கவனிக்கத் தக்க படமாக மாறிவிடும்.

மூக்குத்தி அம்மனில் கலையியல் கூறுகளும் ஓர்மையான இணைவுகளும் இல்லை. அதற்கு மாறாகக் கடவுள் என்ற அரூபமான   கச்சாப்பொருளை விவாதிப்பதற்காக உரையாடல்களை ஓர்மையான இணைவுக்கூறாக வைத்துள்ளார் படத்தின் இயக்குநர். அந்த உரையாடல்கள் ஒவ்வொரு நேரமும் வெவ்வேறு விவாதப்புள்ளிகளைச் சுற்றிச் சுற்றி வரக்கூடியன. கடவுள் உண்டா? இல்லையா? தெய்வம் உண்டென நம்பி வேண்டிக்கொள்பவர்களுக்கு உதவுமா? உதவாதா? சோதிடம், அதிர்ஷ்டம் போன்றவற்றில் நம்பிக்கை வைக்கலாமா? கூடாதா? சாமிக்குச் செய்யவேண்டிய நேர்த்திக்கடனை நிறைவேற்றுவதில் நம்பிக்கை வைக்கலாமா? கூடாதா?  இந்த விவாதங்கள் எல்லாம் வெவ்வேறாகத் தோன்றினாலும் கடவுள் அல்லது தெய்வ நம்பிக்கை சார்ந்த பொதுப்புத்தி விவாதங்கள். அவற்றை மொத்தமாக க்கலக்கி, எந்தப் பக்கம் சார்புநிலை எடுக்கிறார் இயக்குநர் என்பதைக் காட்டிக்கொள்ளாமல் பார்வையாளர்களுக்குள் இருக்கும் நம்பிக்கையை அப்படியே நீட்டித்துக்கொள்ளும் வாய்ப்பையே வழங்கியிருக்கிறார். பக்தர்களுக்கு என்ன வேண்டும் என்பது கடவுளுக்குத் தெரியும்; அதைக்கேட்டுப் பெற்றுவிட முடியும் என்று நினைக்கவேண்டியதில்லை என்பதை உணர்த்தும் படம் கடவுளை நம்பினோர் கைவிடப்படார் என்ற பக்தியின் வெளிப்பாட்டோடு பக்திப்படமாக  முடிவடைகிறது. ஆனால் அதற்குள் இதுவரை விவாதிக்கப்படாத புதிய முரண்நிலை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது என்பது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. 

உள்ளூர்(Local )x உலகம்( Global)

 மூக்குத்தி அம்மன், இதற்கு முன்பு வந்துள்ள பல்வேறு அம்மன் படங்களைப் போன்ற இன்னொரு அம்மன் படமல்ல. கடவுளை உலகமயமாக்கப்பார்க்கும் கட்டமைப்புச் சிறையிலிருந்து விடுவித்து உள்ளூர்த் தெய்வமாகவே – குலதெய்வமாகவே நிலைநிறுத்திவிட நினைக்கும் சொல்லாடல்களையும் அதற்கான காட்சிகளையும் உரையாடல்களையும் உருவாக்கித் தந்துள்ளதன் மூலம் சமகால இந்திய அரசியலை விவாதிக்கும் சினிமாவாகவும் மாறியிருக்கிறது. பெருந்தெய்வம் x சிறுதெய்வம் (நாட்டார் தெய்வம்) என்ற சொல்லாடல்கள் பண்பாட்டுத் தளங்களில் நீண்டகாலமாக இருந்துவரும் ஒன்று. சிறுதெய்வங்களான குலதெய்வங்களையும், காவல் தெய்வங்களையும் வழிபட்டவர்களைப் பெருந்தெய்வங்களான திருப்பதி வெங்கடாஜலபதி போன்ற பெருந்தெய்வங்கள் இழுத்துக்கொண்டிருக்கின்றன; அதன் பின்னணியில் வைதீக சமயத்தின் ஆதிக்கமும் அதனைப் பின்னின்று இயக்கும் சம்ஸ்க்ருதப்பண்பாடும் இருக்கிறது என்ற புகார்களும் இருக்கின்றன.

இந்த முரண்பாடு மட்டுமல்லாமல் புதிதுபுதிதாகத் தோன்றும் உலகமயத்தின் அடையாளங்களைக் கொண்ட ஆஸ்ரமங்களும் அவற்றின் தலைவர்களும் உருவாக்கும் பேருருக் கொண்ட சிவன்களும், கைலாயங்களும் பீடங்களும் கடவுள் பக்தியை வணிகப் பண்டங்களாக்கி வருகின்றன.  அயல் நாட்டுச் செலாவணியை மாற்றுவதற்கு உதவும் வகையிலான இவ்வகை ஆஸ்ரமங்களும் சமயப்பீடங்களும் பக்தியை மட்டுமல்லாமல் பெருந்தொழில் நிறுவனங்களையும் கல்விக்கூடங்களையும் நிர்வகிக்கின்றன. அதன்வழியாக நிகழ்கால அரசியலில் செல்வாக்குச் செலுத்துகின்றன. சந்தைப் பொருளாதாரத்தோடு இணைந்து நிற்கும் ஆஸ்ரமங்களின் வழிபாட்டு முறைகளும் கொண்டாட்டங்களும் சாதாரணமான மக்களை -குறிப்பாகக் கிராமப்புறக் கடவுள் நம்பிக்கையாளர்களைத் திசைமாற்றிவிடும் அபாயம் கொண்டவை. இதிலிருந்து மீட்டுத் திரும்பவும் கடவுள் நம்பிக்கையில் இருக்க வைக்கும் ஏற்பாடொன்றைச் செய்தாகவேண்டியது சமயவாதிகள் மற்றும் சமயத்தை அரசியலுக்குப் பயன்படுத்துபவர்களின் கடமை.

மனிதர்களைப் படைத்த தெய்வத்திற்கு, அவர்களின் தேவை தெரியாமலா இருக்கும்? அதைக் கேட்டுக்கொண்டிருக்க வேண்டியதில்லை. கடவுள் கொடுத்த இந்த வாழ்க்கையை அப்படியே வாழ்ந்து முடிப்பதில் தான் - அதில் திருப்தி அடைவதில் தான் மனித வாழ்க்கை அர்த்தமாகிறது என்பதை நம்பச்செய்யவேண்டும். அதனை வெகுமக்கள் ஊடகமான சினிமா வழியாகச் செய்யமுடியும் எனக் காட்ட முயன்றிருக்கிறார் இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி. கடவுள்,பக்தி, கோயில், வழிபாடு எனத் தனிமனித விருப்பம் சார்ந்த ஒன்றாக இருக்கும் அந்தச் சொல்லாடலை, அரசியல் சார்ந்த ஒன்றாக மாற்றும் பெரும்போக்கை இந்துத்துவ அரசியல் நீண்ட காலமாக முன்னெடுத்து வருகிறது. இந்தியாவின் மற்ற மாநிலங்களில் வாக்கு அரசியலை வென்றெடுக்கப்பயன்பட்ட அந்தக் கருவியைத் தமிழகம் தொடர்ந்து நிராகரித்துக்கொண்டிருக்கிறது. எதிர்க்கிறது. பன்மைத்துவப் பண்பாட்டை முன்னிறுத்தி உள்ளூர்த்தெய்வங்களையும் சிறுதெய்வங்களையும் பெருந் தெய்வங்களுக்கெதிராகவும்,  கடவுள் மனிதர்களின் ஆஸ்ரமங்களுக் கெதிராகவும் பரப்புரைகளை மேற்கொள்கின்றனர்  எதிர்ப்பாளர்கள். அதனைச் சரியாகப் புரிந்துகொண்ட இயக்குநர் பாலாஜி, அதே நுட்பத்துடன் எதிர்வினையாற்றாமல், கரடுமுரடான(Raw) வெளிப்பாட்டுடன் மூக்குத்தி அம்மனாக முன்வைக்கிறார்.  அந்த முன்வைப்பை பொருட்படுத்தி விவாதிக்கத்தான் வேண்டும்.      அப்படி விவாதிக்கும்போது சினிமாவின் கலையியல் கூறுகளை ஒதுக்கிவைத்துவிட்டு, வெகுமக்கள் சினிமாவின் பரப்பியல் தன்மை என்னும் கருவியின் துணையோடு விவாதிக்க வேண்டும் என்ற எச்சரிக்கை தேவை.

எங்கல்ஸ் ராமசாமி என்ற கம்யுனிசப் பெயர் கொண்ட மையக்கதாபாத்திரம் நாஞ்சில் தொலைக்காட்சி என்ற உள்ளூர் தொலைக்காட்சி நிருபர். அவன் சொந்த உழைப்பில் நம்பிக்கை கொண்ட தாத்தாவின் பேரனாகவும், குடும்பச் சுமையைச் சுமக்க முடியாமல், மூன்று பெண்கள் உள்பட நான்கு பிள்ளைகளைக் கைவிட்டுவிட்டுச் சாமியாராகப் போன அப்பாவின் மகன். ஜோதிடம், நேர்த்திக்கடன் என்பதோடு பொய்களைச் சொல்லியாவது பிள்ளைகளை மேடேற்றிவிட நினைக்கும் அம்மா என்ற குடும்பப் பின்னணியில், உள்ளூர்த் தெய்வம் (குலதெய்வம்) x உலக மயமாகும் தெய்வம் என்ற எதிர்வை உருவாக்கி பொதுவான அடையாளமற்ற வெளி ஒன்றில் வைத்துப் பேசாமல் கன்னியாகுமரி என்ற குறிப்பான வெளியில் நிறுத்திப் பேசுகிறார். 11000 ஏக்கர் பொது இடத்தைக் கடவுளின் பெயரால் - தொண்டுசெய்ய விரும்பும் ஆஸ்ரமத்தின் பெயரால் கைப்பற்ற நினைக்கும் சாமியாரின் நடவடிக்கைகளைத் தனது பக்தனின் துணையோடு விரட்டி அடித்துத் தன்னையும் தனது பக்தனையும் காப்பாற்றிய மூக்குத்தி அம்மன் அந்தப் பகுதியையே காப்பாற்றுவாள் என்ற நம்பிக்கையைத் தந்து முடிகிறது.

கன்னியாகுமரி மாவட்டத்தின் பசுமையான நிலவெளிகளை – ஆறு, குளம், வயல்கள், மலை என அனைத்தையும் பின்னணியாக்கிக் கொண்டிருக்கிறது படம். பேச்சுமொழியையும் வெளிசார் வண்ணக்கோலங்களையும் மட்டும் பயன்பாட்டுக் கருவிகளாகக் கொண்டால் போதும் என தயாரிக்கப்பட்ட மூக்குத்தி அம்மனில் அக்கருவிகளும் கூடப் பொருத்தமான அளவீடுகள் இல்லாமல் பயன்படுத்தப்பட்டுள்ளன என்ற குறைகளைச் சுட்டிக்காட்ட முடியும். எல்லாக் குறைகளோடும் மூக்குத்தி அம்மன் இந்தக் காலகட்டத்து அரசியல் சூழலில் விவாதிக்க வேண்டிய ஒன்றை – பொதுப்புத்திக்குள் அலையும் ஒரு கருத்தை விவாதப்படுத்தியுள்ளது. அந்த விவாதப்பொருள் தெய்வம். அந்தத் தெய்வத்தின் பருண்மையான உருவமாக நயன்தாராவை நடிக்க வைத்ததின் மூலம் வெகுமக்கள் உளவியலின் ஆழத்திற்குள் வெவ்வேறு பரிமாணங்களில் நுழைய முடிந்திருக்கிறது. நீண்ட காலமாகத் தமிழ்ச் சினிமாவுக்குள் நடித்துக்கொண்டிருக்கும் நடிகையாக மட்டுமல்லாமல் ஆண்களின் இச்சைக்குள் நுழைந்து வெளியேறும் அழகின் -பெண்ணின் - பிம்பமாகவும் அவர் இருக்கிறார். இன்னொரு பக்கம் தனது உடலைக் கச்சிதமாக வைத்திருப்பதின் வழியாகவும் வெளிப்படுத்துவதின் வழியாகவும் இளம்பெண்களின் விருப்பமான நடிகையாகவும் மிளிர்கிறார்.பொதுவாகவே அவர் அணியும் ஆடைகளின் வழியாகவும், அணிகலன்கள் வழியாகவும் பல்வேறு வயதுப்பெண்களின் கவனத்தை ஈர்த்த பிம்பமாகவும் நயன் தாரா இருக்கிறார் என்பதைப் பலரும் எழுதும் குறிப்புகள் காட்டுகின்றன.  ஒரு வெகுமக்கள் சினிமாவின் சொல்லாடலை, வெகுமக்களிடம் கொண்டுபோய்ச் சேர்ப்பதில் நடிக, நடிகையரின் பங்களிப்பை ஆய்வாளர்கள் மறுக்கவே மாட்டார்கள். மூக்குத்தி அம்மன் படத்தின் கருத்தியலும் விவாதங்களும் நயன்தாராவின் உடல்மொழியாகவும் குரல்மொழியாகவுமே பார்வையாளர்களைச் சென்று சேர்கிறது என்பதைப் படம் பார்த்தவர்கள் உணரவே செய்வர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தேடிப்படித்த நூல்கள் அல்லது பழைய புத்தகக் கடையில் கிடைத்த நூல்கள்

மன்மோகன் சிங் மட்டும் தான் பொறுப்பா?…

நாயக்கர் கால இலக்கியங்கள் சமுதாய வரலாற்றுச் சான்றுகளாகக் கொள்வதற்கான முன் தேவைகள்