உணர்வுகளை எழுதும் நுட்பம்: உமா மகேஸ்வரியின் வெனில்லா

ஒரு சிறுகதைக்கு ஒற்றை நிகழ்வும் அதன் வழியாகத் தாவிச் செல்லும் மனவுணர்வுகளும் போதும் என்பதைத் தொடர்ச்சியாகத் தனது கதைகள் வழியாக நிரூபித்துக்கொண்டே இருக்கும் எழுத்தாளர் உமாமகேஸ்வரி. ஒற்றை நிகழ்வும் மிகக்குறைவான பாத்திரங்களின் தேர்வும் என்பதால், அவரது கதைகள் வாசிப்பதற்கு அதிக நேரத்தை எடுத்துக் கொள்வதில்லை. அதேநேரம் வாசித்தபின் அக்கதையைப் பற்றிய நினைவுகளைத் தொடர்ச்சியாக கிளப்பிக் கொண்டே இருக்கிறது. அதன் மூலம் வாசித்தவரின் மனதிற்குள்  நீண்ட நேரம் தங்கியிருப்பதாகவும், அக்கதைகளில் இடம்பெற்ற பாத்திரங்களை ஒத்த மனிதர்களின் சந்திப்பை நினைவூட்டுக் கொண்டே இருப்பதாகவும் ஆகிக் கொள்கிறது.  

கூட்டுக்குடும்ப அமைப்புகளைக் கைவிட்டுத் தனிக்குடும்ப அமைப்புக்குள் நுழைந்துவிட்ட நவீன வாழ்க்கையிலும் கூடச் சில காரணங்கள், தனிமனிதர்களைத் தனியர்களாக ஆக்கிவிடுகின்றன. அதிலும் இந்தியக் குடும்ப அமைப்பு, பெண்களைத் தனியர்களாக நினைக்க வைக்கப் பல தருணங்களை உருவாக்கிக் கொண்டே இருக்கும் ஒன்று.  அந்தரங்கமான விருப்பங்கள், அனைவரும் செய்யும் செயல்களில் ஈடுபாடின்மை, நினைவுக்கு வந்துவிடும் பால்யகாலத்துக் காதல் நினைவுகள், வெளியில் சொல்லிக் கொள்ள முடியாத நோய்மைகள்  போன்றன பெண்களைத் தனியர்களாக நினைக்கச் செய்வதில் முக்கியப் பங்காற்றுகின்றன. ஓய்வு நேரத்தில் புத்தகம் வாசிப்பை அனுமதிக்காத குடும்பவெளியைப் பற்றியும், கதை, கவிதை போன்றனவற்றை எழுதுவதைக் குற்றச் செயலாகப் பார்க்கும் உறவுகளையும் பல கதைகளில் பெண்கள் எழுதியிருக்கிறார்கள்.

குடும்ப அமைப்பின் பலப்பலவான   உறவுகளுக்குள் வாழ நேர்ந்தாலும் தனித்திருக்கும் உணர்வைக் கொண்ட பெண்களைத் தனது கதைக்கான மையப்பாத்திரமாகப் பெரும்பாலும் தேர்வுசெய்கிறார் உமா மகேஸ்வரி. இந்தத்தேர்வே அவரது கதைசொல்லும் வடிவத்தைத் தீர்மானித்துவிடுகிறது. ஒரு குறிப்பிட்ட வெளியில் அந்தப் பாத்திரத்தை நிறுத்திவிட்டு, அதன்   அலையும் மனதை எழுத்தில் கொண்டு வருவதற்காக அதனையொத்த வேறு கதாபாத்திரங்களைக் கதைக்குள் கொண்டுவருகிறார். அதன் மூலம் வாசிப்பவர்கள் மையப்பாத்திரம் நினைக்கும்  காலத்திற்குள்ளும், நினைத்துக் கொள்ளும் வெளிகளுக்குள்ளும் பயணம் செய்ய வேண்டியிருக்கிறது. இந்த நுட்பம் பலரது கதைகளிலும் இடம்பெறும் நுட்பங்களில் ஒன்றுதான் என்றாலும், உமாமகேஸ்வரியின் கதைகளில் நகர்வது தெரியாமல் நகர்ந்து விட்டுத் திரும்பிவிடுகிறது என்பதுதான் அவரது சிறப்பு.  

அகழ் - இணைய இதழில் வெளியாகியிருக்கும் வெனில்லா என்னும் கதையின் நிகழ்விடம் ஒரு ஸ்கேன் மையம். உடலுக்குள் குறிப்பிட்ட இந்த நோயின் அறிகுறிகள் இருக்கிறதா? அல்லது இருக்கும் நோயின் அளவு எவ்வளவு என்பதைக் கண்டுபிடித்துச் சொல்லும் நவீன மருத்துவக் கருவியைக் கொண்ட சோதனைக்கூடம் அது. அவள் மம்மோக்ராபி என்னும் புற்றுநோய் இருப்பை அறியும் சோதனைக்காகக் காத்திருக்கிறாள். தனது பெயர் அழைக்கப்படுவதற்காகக் காத்திருக்கும் போது பெண்ணின் முலைகள்   சார்ந்த ஒன்று என்பதை உணர்த்தும் தொடக்கத்தைக் கொண்டிருக்கும் கதை,  அதன் மீது இரண்டுவித உணர்வுகளைச் சுமந்தவளாகக் காத்திருக்கிறாள் என்பதைச் சுட்டிக்காட்டித் தொடங்குகிறது:

பதினைந்து முதல் இருபது வரையில் பிரிவுகள் அவற்றின் நுனிகளில் பால் சுரக்கும் குமிழ்கள் என்றெல்லாம் விலாவாரியாகச் சொன்னது கூகிள். அலுப்பாக அதை மூடினாள். இயர் போர்னை பொருத்திக் கொண்டு கண்களை மூடினாள். “கழுத்தின் கீழே கவிதைகள் ரெண்டு மிச்சமுள்ளதே… அதுவா, அதுவா, அதுவா…” என்று பாடியது அது. ப்ளே நெக்ஸ்ட் போட்டால் “கொப்பரைத் தேங்கா, முத்தின மாங்காய்” “மாங்கனிகள் தொட்டிலிலே தூங்குதடி கண்ணே”.

முதலில் வெளிப்படும் உணர்வு அவளது முலைக்குள் இருக்கும்  நரம்புகள், பால் சுரக்கும் குமிழிகள் போன்றவற்றின் செயல்திறன்கள் பற்றிய உடல் அறிவியல் பற்றிய தேடல். இரண்டாவது முலையைப் பற்றிய ஆணின் மனம் உருவாக்கிக் கொள்ளும் காமம் சார்ந்த உருவகங்கள்.

இவ்விரு எண்ணங்களுமே அவளுக்கு இப்போது எரிச்சல் ஊட்டுவனவாக மாறி விட்டன. காரணம் இப்போது அவளது முலைகளுக்குள் நோயின் வாசம் இருப்பதாகப் பிரமை ஓடிக்கொண்டிருக்கிறது. கரிய குமிழ்கள் உதிக்கின்றன. சிறிய வெல்வட் ஸ்டிக்கர் பொட்டளவே. தேகத்தில் அறையப்பட்ட ஆணிகள் போல அந்தப் பிரமைகள் நகர்ந்து, அது மார்பகப் புற்றுநோயின் அறிகுறிகளாக இருக்கும் என்ற நினைப்பு உச்சமாகும்போது,      அவளின் உடலும் மனமும் தவிப்பில் அலைகின்றன. இருக்கையில் அவளது உடல் இருப்புக் கொள்ளவில்லை என்று உணரும் செவிலியால்,  ‘வெளியில் சென்று வரும் யோசனை முன்வைக்கப்படுகிறது.  கீழே ஐஸ் க்ரீம், காபி, பாப்கார்ன் கூட கிடைக்குது அக்கா” என்றும் வழிகாட்ட முடிகிறது. ஆனால் மனம், ‘ மரணத்தின் தருவாயில் அனைவரிடமும் எரிந்து விழுந்த அம்மாவை, தன் மகளைப் பெற்றெடுத்த பிரசவ நேரத்தை, கணவன் காட்டும் அன்பை, முலைகளைப் பற்றிய கவிதை வரிகளை என நினைத்துக்கொண்டு தாவித்தாவிப் பயணிக்கிறது.

எல்லா அலைவுகளும் தாவல்களும் இரண்டு முலைகளையும் ஸ்கேன் செய்து முடிக்கும் வரைதான். முடிந்தபின் சோதனையின் முடிவு பற்றிய எதிர்பார்ப்பு. முடிவு உடனடியாகக் கிடைக்கப்போவதில்லை; ஒருவாரத்திற்குப் பின் தான் தெரியவரும். அதனை எடுத்துக்கொண்டு அதற்கான மருத்துவரை அணுக வேண்டும்  என்று தெரிந்தவுடன் ஒரு ஆசுவாசம். ஆசுவாசத்தைக் காட்டும் விதமாக மனம் நிலைகொள்கிறது. விரும்பிய உணவுப் பண்டங்களைத் தேடுகிறது. உச்சமாக ஒரு வெனில்லாவை ருசிக்கும் ஆசை. இவ்வளவு தான் கதையின் நிகழ்வுகள். அந்த வெனில்லா அவளை ஆசுவாசப்படுத்திவிட்டது என்பதை உணர்த்தும்விதமாக் கதையின் முடிவுப் பத்தியை  அமைக்கிறார். காரில் ஏறி அமர்ந்தபின் ஓட்டுநரிடம் அவள் சொல்லும் சொற்கள் அவை:

ஏதாவது பாட்டு போடுங்க அண்ணே” மாங்கனிகள் தொட்டிலே தூங்குதடி கண்ணே. மன்னவனின் பசியாற மாலையிலே பரிமாற நல்லாதானே இருக்கிறது. ஆம். எல்லாமே. மரங்கள் பறந்தன. வீடு வெகு தொலைவிற்குப் போக விரும்பினாள்

சோதனைக்கு முந்திய தவிப்பும் எரிச்சலும் பயமும் இப்போது இல்லை. முலைகளைப் பற்றிய  உருவகமான ‘மாங்கனிகள் தொட்டிலிலே தூங்குதடி கண்ணே’ என்பதும் கூட அவளுக்கு இப்போது ஏற்புடையதாகவே இருக்கிறது. சூழலும் வீட்டுக்குப் போகும் பயணமும் கூட நல்லதாகவே தோன்றுகிறது.

தன்னுடைய உடல் தாங்கியிருக்கும் நோயின் தீவிரம் தரும் தவிப்பும், அதன் காரணமாக மனம் அலையும் போது உருவாகும்   நினைவோட்டங்களும் முன்னும் பின்னுமாகச் சுழன்றடிப்பது  தவிர்க்க முடியாத ஒன்று. நினைவின் சுழற்சிக்குள் தன்னை மட்டுமல்லாமல், தனது மூதாதையர்களையும் பக்கத்துச் சொந்தங்களையும், அவர்களின் இருப்பு மற்றும் பேச்சுகளுக்கான நியாயங்களையும் அசைபோடுவதின் வழியாக் கதையை வாசிப்பவர்களுக்கும் கடத்துகிறார். வாசிப்புத் தீனியாகப் பல்லடுக்கு உணர்வுகளை எழுதிக் காட்டும் நுட்பம் – மன உணர்வுகளை எழுதித் தரும் அந்த நுட்பம் உமா மகேஸ்வரியின் பல கதைகளில் வெவ்வேறு விதமாக வெளிப்படும் ஒன்றாக இருக்கிறது. அவரது கதைகளைத் தொகுப்பாக வாசிக்கும்போது இன்னும் தீவிரமாக இதனை உணரலாம்.    

=============================================

கதைக்கான இணைப்பு: https://akazhonline.com/?p=2955

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்