விக்கிபீடியாவும் நானும் பிறகு தமிழ் விக்கியும்



இணையப்பக்கங்களில் எனது எழுத்துகளைப் பதிவேற்றம் செய்யத் தொடங்கி இப்போது 15 ஆண்டுகள் ஆகின்றன. 2007 முதல் நான் நடத்திவரும் அ.ராமசாமி எழுத்துகள் https://ramasamywritings.blogspot.com/ என்ற வலைப்பூவில் என்னைப்பற்றி என்ற பகுப்பின் கீழ்


என்னைப் பற்றிய விவரங்களைத் தந்துள்ளேன். ஆனாலும் கூகிளின் தேடுபொறியில் அ.ராமசாமி எனக் தமிழில் தட்டச்சு செய்தால் முதலில் வந்து நிற்பன தமிழ் விக்கிபீடியாவில் இருக்கும் தகவல்களே.


தொடர்ந்து அதன் பின்பே மற்றனவெல்லாம் வரும். இன்றைய தேதியில் இணையத்தில் சில லட்சம் இடங்களில் எனது பெயர் இடம் பெற்றிருப்பதாக கூகிள் சொல்கிறது.

போலந்தில் இருந்த காலத்தில் (2012) விக்கிபீடியாவின் இணைய முகவரியிலிருந்து ஒரு கடிதம் வந்தது. உங்கள் பெயரைப் பரிந்துரை செய்தவர்கள் எனச் சிலரது பெயரும் குறிப்பிடப்பட்டிருந்தது. விக்கிபீடியாவில் எப்படிப் பதிவேற்றம் செய்யலாம் என்ற விளக்கமும் அதில் இருந்தது. அதனைப் படித்தபின் முதலில் என்னைப் பற்றிய தகவல்களைப் பதிவேற்றம் செய்தேன். அதில் அவ்வப்போது மாற்றமும் செய்து கொண்டிருக்கிறேன். 2022 இல் கி.ரா.நினைவுகள் என்றொரு நூல் வெளிவந்துள்ளது என்பது வரை உள்ளே ஏற்றியுள்ளேன். இப்போது திருமங்கலத்தில் இருக்கிறேன் என்பதும் இருக்கிறது.

கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் பேசுவதற்கு ஒத்துக்கொண்டபின் என்னை அறிமுகப்படுத்த நினைத்து என்னைப் பற்றிய தகவலைக் கேட்பார்கள்; அண்மைக் காலத்தில் இணையச் சொற்பொழிவுக்கு ஒத்துக்கொள்ளும் நிலையிலும் கேட்கிறார்கள். நான் விக்கிபீடியாவில் பார்த்துக்கொள்ளுங்கள் அல்லது எனது வலைப்பூவில் என்னைப்பற்றி என்ற தலைப்பின் கீழ் உள்ளனவற்றைத் தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள் என்று சொல்லி விடுவேன்.

************

விக்கிபீடியாவில் என்னைப் பற்றிய பதிவேற்றத்திற்குப் பிறகு நண்பர்கள், ஆசிரியர்கள் என ஆளுமைகள் சிலரை அத்தளத்திற்குள் பதிவேற்றம் செய்தேன். அப்படிச் செய்வதற்கு முன்பு அவர்களின் தன்விவரப்பட்டியலைத் தயார் செய்து ஒத்துக்கொண்ட பின்னரே பதிவேற்றம் செய்தேன். அதேபோல் எனது விருப்பத் துறைகள் தொடர்பாகச் சில தலைப்புகளிலும் எழுதி முழுமையாகச் சரி என்று உறுதியான பின்பே உள்ளே அனுப்பிப்பதிவு செய்துள்ளேன். வார்சாவில் இருந்தபோது நேரம் கிடைத்தது; செய்தேன். இன்னும் அதிகமாகச் செய்திருக்கலாம். தமிழ்நாட்டுக்கு வந்து பல்கலைக் கழகப் பணிகளில் மூழ்கியபின் அதில் கவனம் செலுத்த முடியவில்லை. 

துறைசார்ந்து பங்களிப்புச் செய்யமுடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. முதுகலை மற்றும் இளநிலை ஆய்வு மாணவர்களுக்குத் தரப்படும் திட்டக் கட்டுரைகளை விக்கிபீடியாவிற்கேற்பத் தயாரித்துப் பதிவேற்றம் செய்யலாம் என நினைத்ததுண்டு. அந்த அடிப்படையில் மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் எழுத்தாளர்கள், பதிப்பகங்கள், ஆய்வு நூலகங்கள், கல்வி நிறுவனங்கள் பற்றிய தகவல்களைத் திரட்டச் சொன்னேன். இணையம் வழியாகவும் அச்சிட்ட படிவம் வழியாகவும் அனுப்பிய கடிதங்களுக்குக் கிடைத்த பதில் எங்கள் ஆர்வத்தைத் தகர்த்துவிட்டன. பத்துசதவீதம் பேர்கூடச் சரியாகப் பதில் சொல்லவில்லை. மாணவர்களுக்குத் தேர்வும் மதிப்பெண்ணும் உண்டு என்பதால் அவர்களால் காத்திருக்கவும் தொடர்ந்து முயற்சி செய்யவும் ஆர்வம் இல்லை.

தமிழ் எழுத்துலகம் சார்ந்த அறிவுத் தரப்பு அவர்களைப் பற்றிய தகவல்களை முறையாகத் தொகுத்து வைத்துக் கொள்வதில்லை. பத்திரிகையாளரோ, ஆய்வாளரோ அவர்களைப் பற்றிய தகவல்களைத் தீவிரமாக முயன்று தொகுக்க வேண்டும்; தவறில்லாமல் தர வேண்டும்; அறிமுகம் செய்ய வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஆனால் அதற்குச் சிறிதளவும் ஒத்துழைக்க மாட்டோம் என்பதிலும் உறுதியாக இருக்கிறார்கள். அதனையெல்லாம் தாண்டித் தொகுத்து அளிக்கப்பட்ட தரவுகளில் போதாமையும் தவறுகளும் இருந்தால் உடனடியாகக் கேலியும் கிண்டலும் செய்வார்கள். இதனை மனதில் கொண்டே தமிழ் ஆய்வாளர்கள் நவீன இலக்கியவாதிகள் பக்கமே வருவதில்லை. சமகால இலக்கியம் தொடங்குவதற்கு முன்புள்ள இடைக்கால, பண்டைக்கால இலக்கியங்களை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டு முடித்துக்கொடுத்துப் பட்டங்களைப் பெற்றுக்கொண்டு போய்விடுகிறார்கள். அவர்களுக்குத் தேவை பல்கலைக்கழகப்பட்டங்கள் மட்டுமே. அதில் தவறுகளும் போதாமைகளும் இருந்தால் யாரும் எதுவும் சொல்லப்போவதில்லை.

******

இணையப்பக்கங்களின் வழியாகத் தமிழ் கற்பித்தல், தமிழின் வளங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்தல் என்ற நோக்கத்தோடு அரசு நிறுவனம் ஒன்று முயற்சி எடுத்தது. சென்னை கோட்டூர் புரத்தில் – அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்கருகில் இயங்கும் தமிழ் இணையக் கல்விக்கழகம் 2015 இல் இரண்டுநாள் கூடுகை ஒன்றை நடத்தியது. இணையத்தில் தமிழின் என்னவெல்லாம் இருக்கின்றன; என்னவெல்லாம் இருக்கவேண்டும்; இணையத் தமிழ் நெடுஞ்சாலையில் பயணம் செய்பவர்களுக்கு அவற்றை எப்படித் தருவது போன்றவற்றை விவாதிக்கலாம்; இரண்டு நாட்கள் முழுமையாக இருந்து கலந்துரையாடல் செய்யவேண்டும் என்ற அழைப்பைப் பார்த்தேன். அழைப்பில் இரண்டு மாதங்களுக்கு முன்பு இக்கழகத்தின் இயக்குநராகப் பொறுப்பேற்றுக் கொண்ட இந்திய ஆட்சிப்பணியாளர் திரு த.உதயசந்திரனின் ஒப்பம் இருந்தது. அவரது செயல்பாடுகள் பற்றிய நம்பிக்கையூட்டும் தகவல்களே அழைப்பை ஏற்க முதன்மைக்காரணம். ஆகஸ்டு முதல், இரண்டாம் தேதிகளில் நடக்க இருந்த நிகழ்வுகள் முன்னாள் குடியரசுத்தலைவர் அ. ப. ஜெ. அப்துல்கலாமின் மரணத்தினால் ஒருவாரம் தள்ளி 8, 9 - சனி, ஞாயிறு- நடந்தது நம்பிக்கையோடு ஒப்புக்கொடுத்து வந்தேன். நம்பிக்கை வீண் போகவில்லை

தொடக்க நிகழ்வில் திரு. த. உதயசந்திரனின் உரை வானவில்லின் வண்ணங்கள் எனக் கவித்துவமாகத் தொடங்கி ஏழு தலைப்புகளில் விவாதங்களுக்கான முன்வைப்புகளைத் தனது உரையில் முன் வைத்தார். தொடர்ச்சியாக மூன்று இடங்களில் தனித்தனி அமர்வுகள்.

1 எண்மியமாக்கம்

2 கணினி மொழியியல், மொழித்தொழில் நுட்பம் என்ற இரண்டு குழுவினர் மூன்று அமர்வுகளில் விரிவாக விவாதித்து செயல் திட்டங்களைத் தயாரித்தார்கள்.

3. பொதுவள ஊடகப்பரப்புரை என்னும் பொருளில் ஒரு குழுவினர் இரண்டு அமர்வுகளில் செயல்திட்டங்களை உருவாக்கினார்கள். அங்குதான் விக்கிபீடியா பற்றிய விவாதம்.

4 கற்றல் கற்பித்தல் என்னும் பொருளில் ஒரு குழுவினர் இரண்டு அமர்வுகளில் விவாதித்து செயல் திட்டங்களை உருவாக்கினார்கள்.

நிறைவு அமர்வு திரும்பவும் பொது அமர்வாக மாற்றப்பட்டுக் குழு ஒருங்கிணைப்பாளர்கள் உருவாக்கிய செயல்திட்டங்களை முன்வைத்தனர். அனைத்தும் பொதுவில் திரும்பவும் விவாதிக்கப்பட்டன. விவாதம் முழுவதும் அமர்ந்திருந்த இயக்குநர் தனது முன்னெடுப்புகளும் செயல்பாடுகளும் எப்படி இருக்கும் என்பதை விளக்கிப் பேசினார். இதுவரை இந்தக் கழகம் தன்னை ஒரு பல்கலைக்கழகம்போலப் பாடங்கள் தயாரித்து அனுப்பிவிட்டுத் தேர்வுகள் நடத்தும் அமைப்புபோலச் செயல்பட்டது; இனி அப்படி மட்டும் செயல்படாது என்றதோடு இந்தக் கழகத்தைப் பொறுத்தவரை நான் இரண்டு மாதக்குழந்தைதான்; ஆனால் தொடர்ந்து அழுது அடம்பிடிக்கும் குழந்தையாக இருக்கப்போகிறேன் என்று சொன்னபோது நம்பிக்கை கூடியது.

120 பேர் பங்கேற்கலாம் என்று தொடங்கி 220 ஆக மாறி 300 பேர்வரை கலந்துகொண்ட இரண்டு நாள் நிகழ்வுகளையும் திட்டமிட்டுப் பிரித்து ஒருங்கிணைப்புக்குழுக்களை உருவாக்கியதோடு அரசின் பல்வேறு பொறுப்புகளிலிருக்கும் ஆட்சிப்பணி அதிகாரிகள் 17 பேர் வந்து கலந்து கொள்ளும்படியும் செய்திருந்தார். தகவல் தொழில்நுட்பம், கல்வித்துறை, தமிழ் வளர்ச்சித்துறை, ஊரகவளர்ச்சித்துறை, பதிவுகள் மற்றும் புள்ளியியல் துறைகளின் அதிகாரிகள் இருந்தார்கள்; கவனித்தார்கள்; கேட்டார்கள்; கருத்துக் கூறினார்கள் என்பதைப் பார்த்தேன். தமிழ்நாட்டிலிருந்து மட்டுமல்லாமல் ஆந்திரா, கேரளா, கர்நாடக எனப் பிற மாநிலப் பல்கலைக் கழகப் பேராசிரியர்களும் அழைக்கப்பட்டிருந்தனர். அமெரிக்கா, இங்கிலாந்து, சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளிலிருந்து நேரில் சிலர் வந்திருந்தனர். சிலர் காணொளி வழியாக உரையாற்றினர். ஆனால் இலங்கையிலிருந்து பேராசிரியர்கள் ஒருவரும் ஏனோ அழைக்கப்படவில்லை.

நான், 15 ஆண்டுகளுக்கு மேலாகக் கணினியைப் பயன்படுத்துகிறேன். பத்தாண்டுகளாகக் கையால் எழுதுவதை நிறுத்திவிட்டேன். 2007 இல் இணையத்திற்குள் எனது எழுத்துகளை ஏற்றும் வேலையைத் தொடங்கியவன். எனது வலைப்பூ [அ.ராமசாமி எழுத்துகள் http://ramasamywritings.blogspot.in/ ] 2007 வில் பதிவுகள் ஆரம்பம். முதல் கட்டுரை நகல்களின் பெருக்கம் என்பது. இணையத்தில் மூலங்கள் குறைவு; நகல்களே அதிகம். ஒருவர் செய்ததைக் கொஞ்சம் மாற்றித் தாங்களும் மூல ஆசிரியர்கள் என்பதாகக் காட்டிக் கொண்டாலும் நகல்களின் பெருக்கங்கள் அதிகம் தான். தமிழ் இணையப்பதிவுகள் சொல்லியது சொல்லல் என்னும் வகைப்பாடு கொண்டவை.  இணைய நெடுஞ்சாலையில் தினசரிப் பயணி நான். போலந்து நாட்டு வார்சா பல்கலைக்கழகப் பணியில் இருந்த காலத்தில் அங்கு கிடைத்த முழுமையான -வேகமான -இலவச இணையவசதி என்னை அதில் முழுநேரப் பயணியாக மாற்றிவிட்டது. இனி அதிலிருந்து விலகித் துறவு கொள்ளுதல் சாத்தியமில்லை. எனது தொடர் பயணங்களால் எனக்குக் கிடைத்த பயன்பாடுகளும் தொடர்புகளும் நட்புகளும் பொழுதுபோக்கும் சொல்ல முடியாதவை. இந்த அனுபவத்தோடு இந்த இரண்டு நாள் நிகழ்வுகளில் பொது நிகழ்வுகளில் முழுமையாகப் பங்கேற்றதோடு இரண்டு குழுக்களிலும் பங்கெடுத்து எனது ஆலோசனைகளை முன்வைத்தேன்

போலந்து நாட்டு வார்சா பல்கலைக்கழகத்தில் தமிழை மூன்றாவது மொழியாகக் கற்பித்த அனுபவத்தைக் கற்றல் கற்பித்தல் குழுவில் பங்கேற்றுப் பகிர்ந்து கொண்டதோடு எல்லாவகையான தமிழ்மொழிக் கல்விக்கும் பொதுவான பாடத்திட்டங்கள் உருவாக்கப்படவேண்டும் என்பதை வலியுறுத்திச் சொன்னேன். அக்குழு விவாதங்களில் வழக்கம்போல மொழியியல் ஆசிரியர்களுக்கும், மரபான இலக்கண அடிப்படைகளைத் தக்கவைக்க நினைக்கும் மொழியாசியரியர்களுக்கும் உரசல்கள் நடக்கவே செய்தன. மொழிக்கல்வியில் நாம் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து விரைவான நடவடிக்கைகள் தேவை. (மொழிக்கல்வி குறித்த எனது அனுபவங்களையும் முன்வைப்புகளையும் தனியாக எழுதவேண்டும்)

பொதுத்தளத்தில் கட்டுரையாசிரியனாகவும் விமரிசகனாகவும் நான் இயங்கிக் கொண்டிருக்கிறேன் என்ற புரிதலின் அடிப்படையில் பொதுவள ஊடகப் பரப்புரை என்னும் பொருளில் விவாதங்கள் செய்த விக்கி பீடியர்களோடு அமர்ந்து தமிழ்விக்கிபீடியாவின் நிலை எவ்வாறு இருக்கிறது என்பதைச் சொன்னேன். அதைப் பரவலாக்கப் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் பயனர்களையும் பங்கேற்பாளர்களையும் உருவாக்கும் சாத்தியங்கள் பற்றிய திட்டங்களை முன்வைத்தேன். ஒரு லட்சம் தலைப்புகளில் விக்கிபீடியா கட்டுரைகள் இடம்பெறச் செய்வதைக் கொஞ்சம் கறாராகத் திட்டமிட்டால் ஓராண்டிலேயே எட்டிவிடலாம் என்றும் சொன்னேன்.

தமிழ் இணையக்கல்விக்கழகம் ஏற்கெனவே இருக்கும் நூல்களையும் கல்வெட்டுகளையும் செப்பேடுகளையும் படியெடுத்து இணையப்பக்கங்களில் தருவதை செய்துகொண்டிருக்கிறது. அயல்நாடுகளில் வசிக்கும் தமிழர்களுக்கான இணையவழிக் கற்கைக்கான பாடங்களை எழுதிப் பதிவேற்றம் செய்துள்ளது. பட்டப்படிப்பைத் தொடங்கி நடத்தும் திட்டத்தில் பாடங்கள் எழுதப்படுகின்றன. அதற்கான ஆலோசனைக் குழுவில் கூட இருந்து ஒருங்கிணைப்பு வேலைகளைச் செய்து கொண்டிருக்கிறேன்.

இவ்வளவு முயற்சி எடுத்த தமிழ் இணையக்கல்விக்கழகம் விக்கிபீடியாவின் பக்கங்களை விரிவாக்கும் பணியை அதன் பொறுப்பில் எடுத்துக் கொள்ளவில்லை. அதன் மறுதலையாக அதன் பொறுப்புக்கு விக்கிப்பீடியா குழுவினர் வழங்கிடத் தயாரில்லை என்பதாகவும் புரிந்துகொள்ளலாம். அத்தோடு தமிழ் விக்கிபீடியாவில் செயல்படும் சிலரது மொழிப் பயன்பாட்டுக் கொள்கையில் முரண்பாடுகள் உள்ளன என்பதும் உண்மை.

ஒரு பேராசிரியரை ஒருங்கிணைப்பாளராக்கித் துறைசார் வல்லுநர்களின் பார்வையோடு தமிழில் எழுதப்பட வேண்டியவற்றைத் திட்டமிட்டுக் கொண்டு, எழுதி வாங்கிப் பதிவேற்றம் செய்தால் இப்போதுள்ள தமிழ் விக்கி பீடியாவிலேயே முழுமையை எட்டலாம். தமிழக அரசின் தமிழ்வளர்ச்சித்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தமிழ் இணையக்கல்விக்கழகத்தோடு உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், தமிழ்ப் பல்கலைக்கழகம், செம்மொழி நிறுவனம் போன்ற அமைப்புகள் ஒருங்கிணைந்து செயல்பட்டால் கூட இலக்கை அடையலாம்.

******

விக்கிப்பீடியா குழுவினரின் மொழிப்பயன்பாட்டில் முரண்பாடு கொண்டவராகவோ பதிவேற்றங்களில் உருவாக்கும் தடைகளைச் சந்தித்தவராகவோ ஜெயமோகன் விக்கிபீடியாவைக் குறித்து எதிர்மறைக் கருத்துகளை அவ்வப்போது எழுதி வந்தார் என்பதை நானறிவேன். அவற்றை வாசித்திருக்கிறேன். சில மாதங்களுக்கு முன்பு தானே ஒரு விக்கியைத் தொடங்கி விடலாம் என்று முடிவு செய்திருப்பதாகவும் எழுதியிருந்தார் என்பதையும் வாசித்திருந்தேன். அந்தப் பதிவுக்குப் பின்னர் அவரிடமிருந்து எனக்கொரு கடிதம் வந்தது. எனது வாழ்க்கைக் குறிப்பு, தமிழ்க்கலை, இலக்கியப்பங்களிப்புகள் குறித்த தகவல்கள் இடம்பெறும் விதமாகக் கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. நான் அனுப்பிவைத்தேன். அதில் எனது பிறந்த தேதியைக்குறிக்கும்போது ஆண்டைத் தவறாகக் குறிப்பிட்டு விட்டேன். எனது ஓய்வு தேதியைக் கணக்கிட்டுப் பிறந்த தேதியில் தவறிருக்கும் என்பதைச் சுட்டிக்காட்டிக் கடிதம் வந்தது. தவறைத் திருத்தம் செய்து அனுப்பினேன். நாளை மறுநாள் வெளியாகப் போகும் “தமிழ்விக்கி”யில் என்னைப்பற்றிய தகவல்கள் இடம்பெறும் என்று நம்பிக்கை உண்டு.

ஏற்கெனவே தமிழ் விக்கிபீடியா செயல்பாட்டில் இருக்கும்போது அதே பெயரை நினைவூட்டும் ‘தமிழ் விக்கி’ என்ற பெயரில் இன்னொன்று எதற்கு என்று கேள்வி கேட்டால் அதற்குப் பதில் என்னிடம் இல்லை. இணையப்பக்கங்களைப் பணம் கொடுத்து வாங்குவது, அதற்காக விற்பவரின் பெயரில் ஒருபகுதியைப் பயன்படுத்துவது போன்ற உள்சிக்கல்கள் பற்றி எனக்கொன்றும் தெரியாது.







கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கிஷ்கிந்தா காண்டம்- குற்றவியலும் உளவியலும்

உடல் மறுப்பு என்னும் பெரும்போக்கு

கற்றல் - கற்பித்தல்: மாணவ ஆசிரிய உறவுகள்