கதையல்ல வாழ்க்கை- நாடகமல்ல; கதை நிகழ்வுகள்

முன்னறிவிப்பு


‘தன்னுடைய ‘ஆஃபர், மணலூரின் கதை, வீடும் கதவும், நன்மாறன் கோட்டைக்கதை’ என்ற நான்கு சிறுகதைகளையும் இணைத்துக் “கதையல்ல வாழ்க்கை” என்ற தலைப்பில் பிரசன்னா ராமசாமி நாடகமாக்கிக் கொண்டிருக்கிறார். வாய்ப்பிருந்தால் வந்து பாருங்கள்’ என்ற தகவலை அனுப்பியிருந்தார் இமையம். அந்த நான்கு கதைகளையும் அச்சில் வந்த போதே வாசித்தவன். திரும்பவும் அந்த நான்கு கதைகளையும் எடுத்து வாசித்தேன்.

இந்நான்கு கதைகளும் ஒன்று, இன்னொன்றோடு இணையும் புள்ளிகள் எதுவுமில்லாத தனித்தனிக் கதைகள். இடப்பின்னணி, கால ஓர்மைக்குள் சந்தித்துக்கொள்ள வாய்ப்புகள் கொண்ட பாத்திரங்கள் என ஒவ்வொன்றுமே ஒட்டிக்கொள்ளாத கதைகள். இந்நான்கு கதைகளையும் எவ்வாறு இணைத்து ஒரே நாடகமாக ஆக்கியிருப்பார் என்ற ஆர்வம் உந்தித்தள்ள நாடகத்தைப் பார்த்துவிடுவது என்று தயாரானது மனது. [2022, ஏப்ரல் 2 ஆம் தேதி, சென்னை, ஆழ்வார்பேட்டை மேடை அரங்கில் நடந்த நிகழ்வை நோக்கி நகர்த்தியது.]

கதைகளும் நாடகக்கூறுகளும்

ஆஃபர் – வீடுதேடிச் சென்று விளம்பரம் செய்தலில் தொடங்கிப் போட்டிகள், இலவசங்கள், தள்ளுபடி, குலுக்கல் முறை எனச் சந்தையின் உத்திகளைப் பயன்படுத்திக் கல்வி வியாபாரமாக்கப்பட்டுள்ள நடப்பைப் பேசும் கதைக்கு இமையம் சூட்டிய தலைப்பு இது. கதையின் பாத்திரங்கள் மூன்று. இரண்டுபேரும் வேலைக்குப் போய்க் கை நிறையச் சம்பாதிப்பதாக நம்பும் நடுத்தர வர்க்க மனைவி- கணவன் . இவர்களைச் சந்தித்து அவர்களது குழந்தையைத் தான் வேலை பார்க்கும் பள்ளியில் சேர்த்துவிட நினைக்கும் ஆசிரியை. இம்மூவருக்குமிடைய நடக்கும் உரையாடல்களே கதை.

தங்கள் பிள்ளைகளுக்கு நல்ல கல்வியைத் தந்துவிட வேண்டுமென நினைக்கும் நடுத்தர வர்க்கத்துப் பெற்றோரின் அறியாமையையும் அபத்தத்தையும் விவாதப்படுத்தும் கதை. குறிப்பாக ஆங்கில வழியில் கல்வியைத் தரும் - பாடம் நடத்தும்- சிபிஎஸ்சி பாடத் திட்டக் கல்விமீது நடுத்தரவர்க்கம் கொண்டிருக்கும் மோகத்தைப் பயன்படுத்திப் பல்தொழில் குழுமங்கள் நடத்தும் கல்வி மோசடியை அம்பலப்படுத்தும் உரையாடல்களால் நிரம்பிய கதையாக எழுதியிருப்பார் இமையம்.

இடமாற்றமில்லாமல் நடக்கும் ஒரு நிகழ்வு; வீட்டில் முன்னறை என்ற ஒரே இடப் பின்னணியில் மொத்த உரையாடல்களும் நடக்கும்.. ஓரங்க நாடகத்தில் உருவாகக் கூடிய முரண்பாடோ, எதிர்வினையோ இல்லாமல் பேசிக்கொண்டே இருப்பார்கள். அதனால் ஒற்றைக்காட்சி நிகழ்வாக விரியும் கதை. பள்ளிக்கூடத்தின் விளம்பரங்கள், பெருமைகள், உத்திகள் பற்றிய ஆசிரியையின் முன்மொழிவுகள் மீது கணவனுக்குக் கொஞ்சம் ஐயங்கள் உண்டு. ஆனால் மனைவிக்கு முழுமையான நம்பிக்கை உண்டு. இதனால் ஆங்காங்கே உரையாடலில் அங்கதமும் பகடியும் கலந்த உணர்வு எழுந்து அடங்கும் வாய்ப்புகளுண்டு. கதையல்ல வாழ்க்கை எனப் ப்ரசன்னா ராமஸ்வாமி தொகுத்து நிகழ்வாக்கியபோது முதல் நிகழ்வின்போது பார்வையாளர்களிடமிருந்து மெல்லிய சிரிப்பொலிகளும் குலுங்கல்களும் எழுந்தடங்கின. தனியொரு வாசிப்பில் மனதிற்குள் தோன்றி அடங்கும் புன்னகை, கூட்டத்தின் வெளிப்பாடாக மாறும்போது நகைச்சுவை உணர்வாகவும் சிரிப்பாகவும் மாறுவதே அரங்க நிகழ்வின் பலம். அதனை உருவாக்கிக் கொண்டது முதல் கதை நிகழ்வு.

மணலூரின் கதை- இக்கதையிலும் நிகழ்வெளியில் மாற்றங்களே இல்லை; அதனால் ஒற்றைக்காட்சி நிகழ்வுதான். கதையின் பாத்திரங்கள் நான்கு. தொலைக்காட்சி ஊடகத்தில் இயக்குநராக இருக்கும் பாத்திரத்தையும், அவர் சந்திக்க வரும் மணலூர் நண்பரையும் உரையாடும் முதன்மைப் பாத்திரங்களெனச் சொல்லலாம். இயக்குநரோடு வரும் உதவியாளப்பெண்ணும், ஒளிப்பதிவாளரும் மற்ற இரண்டு பாத்திரங்கள். ஆற்றங்கரைக் கிராமவெளியில் நடக்கும் உரையாடல்களால் பரவும் வட்டச்சுழற்சிக் கதை.

தொலைக்காட்சித் தயாரிப்புக்காக வித்தியாசமான கதையைத் தேடிக் கிராமத்து நண்பனைச் சந்திக்க வந்த இயக்குநர், எதிர்பார்த்து வந்த கதை கிடைக்காத நிலையில் ‘மணலூர்’ என்ற அந்த ஊரின் பெயரைக் கொண்டே ஒரு கதையைக் கற்பனையாகவும் சுவாரசியமாகவும் உருவாக்கிக் காட்சிப்படுத்துவதை நகைச்சுவையோடு சொல்லும் கதை.“மணலைக் கயிறாய்த் திரிப்பவன்” என்றொரு பழமொழி உண்டு. அந்தப் பழமொழியின் அசல் வடிவமாக நமது தொலைக்காட்சி ஊடகங்கள் திகழ்வதைக் கதையாக்கி இருப்பார் இமையம்.

தொலைக்காட்சி நிறுவனங்களும் அதில் இயங்குபவர்களும் பார்வையாளர்களுக்கு எதனை – எப்படித் தருகிறார்கள் என்பதை அம்பலப்படுத்துவதோடு, தமிழ்த் தொலைக் காட்சி ஊடகங்களின் முதலாளிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் சினிமாக்காரர்களுக்கும் இருக்கும் கொடுக்கல் வாங்கலையும் பொருளாதார வலைப் பின்னலையும் உரையாடல்களால் தந்திருப்பார் இமையம். கதையை வாசிக்கும்போது உண்டாகும் நகைச்சுவை உணர்வும், எரிச்சலும், மேடையில் பாத்திரங்களை ஏற்று நடித்தவர்களின் உடல் மொழியோடு சேர்ந்து வெளிப்பட்ட போது கூடுதலாகவே ஏற்பட்டது. மேடை அரங்கில் ப்ரசன்னா ராமஸ்வாமியின் நிகழ்வைப் பார்க்க வந்திருந்த பார்வையாளர்களில் பெரும்பாலோர் உயர்நடுத்தரவர்க்கப் பார்வையாளர்கள் என்பதால், இந்தக் கதையின் நிகழ்வு அவர்களிடம் சிரிப்பலையை உண்டாக்கிக் கொண்டே இருந்தது. அந்த வகையில் குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று.

வீடும் கதவும் – நான்கு கதைகளில் மூன்றாவதாக நிகழ்த்தப்பட்ட கதை. ஒன்றாய்க் கல்லூரியில் படித்த இருபெண்கள் சந்தித்துக்கொள்வதே கதை. தனது பிள்ளையின் திருமணப் பத்திரிகையைக் கொடுத்துவிட்டுத் தோழியோடு பேசிக் கொண்டிருந்து விட்டுக் கிளம்புவதுதான் கதை நிகழ்வு. நாடக நிகழ்வு அவர்கள் இருவருடையே நடக்கும் உரையாடல் தான். பள்ளி ஆசிரியரான தோழிக்குப் பத்திரிகை கொடுக்க வந்தவள் அந்த ஊரின் ஊராட்சிமன்றத் தலைவி. இரண்டு முறை தேர்தலில் போட்டியிட்டு வென்றவள்.

நமது சமூகத்தில் ஆசிரியராக இருந்தாலும், ஊராட்சி மன்றத்தலைவியாக இருந்தாலும் பெண்கள் எப்போதும் ஆண்களிடம் அடங்கிப் போகவேண்டியவர்களாக – தனக்கெனத் தனியாக எந்த அடையாளத்தையும் உருவாக்கிக் கொள்ள முடியாதவர்களாக இருக்கிறார்கள் என்பதையே மாறிமாறிப் பேசுகிறார்கள். கல்வி அறிவு, அதன் மூலம் வேலைக்குச் செல்லுதல் என இயங்கும் ஆசிரியைக்குக் கதவைக் குறியீடாகவும், வீட்டைவிட்டு வெளியேறாமல் இருக்கும் ஊராட்சிமன்றத்தலைவிக்கு வீட்டைக் குறியீடாகவும் ஆக்கியிருக்கிருப்பார் இமையம். ஆசிரியையின் அன்றாட நடவடிக்கைகளும் பணவரவுகளும் எப்படிக் கணவனால் கட்டுப்படுத்தப்படுகிறது என்பதை அவள் சொல்ல, தனது கையெழுத்தைக் கூடக் கணவனே போட்டுவிடும் அவலத்தில் இருப்பதை இவள் சொல்ல ஏற்ற இறக்கம் இல்லாமல் உரையாடல் வழி இரண்டு பாத்திரங்களும் தங்களை முன்வைக்கின்றன.

கலகலப்பாகத் தொடங்கும் தோழிகளின் சந்திப்பின் நீட்சி கழிவிரக்கத்தின் உச்சத்தைத் தொடும் நிலையில் பார்வையாளர்களிடம் அது கடத்தப்படும் உணர்வாக மாறி விடுகிறது. இயலாமையில் தவிக்கும் பாத்திரங்களை ஏற்று நடித்த இருபெண்களும் உரையாடலில் வெளிப்பட வேண்டிய தொனியை, நடிப்பின் முழுமையை உருவாக்கிக் கடத்தினார்கள். அப்பாத்திரங்களை ஏற்று நடித்தவர்களின் வயதும் தோற்றமும் பொருத்தமாக இருந்தது.

நன்மாறன் கோட்டைக் கதை - ப்ரசன்னா ராமஸ்வாமி தெரிவுசெய்த நான்கு கதைகளில் நன்மாறன் கோட்டைக் கதை ஒன்றுதான் நாடகத்திற்கான முதன்மைக்கூறான முரணைக் கொண்ட கதை. அம்முரணும் கூடக் கதைக்குள் உருவாக்கப்பட்டுள்ள பாத்திரங்களுக்கிடையே உருவாகி வளர்த்தெடுக்கப்படவில்லை. கதைக்கு வெளியே உருவாக்கப்பட்டிருந்தது.

கதைக்குள் இமையம் உருவாக்கியுள்ள பாத்திரங்கள் மூன்று. புதிதாகப் பள்ளியில் தலைமையாசிரியராகப் பொறுப்பேற்றுக்கொள்ள வந்தவர்; அவரது அலுவலக உதவியாளர் என்ற இருவரோடு, தனது மகனின் ‘மாற்றுச் சான்றிதழை – டி.சி.’ -யை வாங்கிக் கொண்டு ஊரைவிட்டுப் போய்விட நினைக்கும் நடுத்தர வயதுப்பெண் ஆகிய மூவரே அந்தப் பாத்திரங்கள். பள்ளியின் ஆண்டிறுதியில் மட்டுமே மாற்றுச்சான்றிதழ் வழங்க வேண்டும்; இடையில் யாருக்கும் மாற்றுச் சான்றிதழ் வழங்கினால் மேலதிகாரிகளின் கேள்விகளுக்குப் பதில் சொல்ல வேண்டியிருக்கும் என்பதால் புதிதாகப் பொறுப்பேற்கும் தலைமையாசிரியர் ஆண்டிறுதியில் வந்தால் சான்றிதழைத் தந்துவிடலாம்; இப்போது தரமுடியாது என மறுக்கிறார்.ஆனால் தனது மகனின் சான்றிதழை வாங்கிவிடுவதில் உறுதியாக இருக்கிறார் அந்தப் பெண்.

சான்றிதழ் பெறுதல் x மறுத்தல் என்ற முரண் உரையாடல்களின் வழி உருவாகும் முரண். ஆனால் உண்மையான முரண் கதையில் தோன்றாப் பாத்திரங்களோடு ஏற்படுத்தப்படுகிறது. ஏன் சான்றிதழைப் பெற்றுக்கொண்டு ஊரைவிட்டுக் கிளம்ப நினைக்கிறாள் என்பதே நாடகத்தின் அடிப்படை முரண். அந்த முரண் உரையாடல்கள் வழியாக இல்லாமல் அசையும் படிமக் காட்சி வழியாகப் பார்வையாளர்களிடம் கடத்தப்பட்டது .

தாழ்த்தப்பட்ட மக்கள் வாழும் காலனிக்காரர் ஒருவர் மாடு வாங்கி வளர்ப்பதைப் பொறுக்காத ஆதிக்கசாதியினர் மாடுகளுக்கான ஓட்டப்பந்தியத்தில் கலந்துகொள்ள வைக்கின்றனர். வெடிபோட்டுத் தொடங்கும் வழமைப்படி, வெடிபோடும்போது வெறித்து ஓடிய காலனிக்காரரின் மாடு பந்தயத்தில் முதலிடம் பிடித்துவிடுகிறது. மாடு வளர்ப்பதையே தாங்கிக்கொள்ளாத ஆதிக்க சாதியினர் முதலிடம் பெற்றுப்பரிசு பெறுவதை எப்படி ஏற்றுக்கொள்வார்கள்?. மாட்டையும் மாட்டின் சொந்தக்காரரையும் சூந்துக் கம்பால் குத்திக் கொல்கின்றனர். கொன்றபின் ‘மாடிமுட்டித்தான் இறந்தார்’ என எழுதியும் வாங்கிக் கொள்கின்றனர். இந்த நிலையில் தான் அந்தப் பெண், தானும் தன்னுடைய மகனும் அந்த ஊரில் இருக்கமுடியாது என்று முடிவெடுக்கின்றார். மகனின் பள்ளிச்சான்றிதழைக் கொடுங்கள்; ஊரைவிட்டு வெளியேறப்போகிறேன் என்று தீர்மானமாகக் கேட்கிறார்.இந்தப் பாத்திரத்தை ஏற்று நடித்தவரின் உடல் மொழியும் உரையாடல் வெளிப்பாடும் அரங்கியல் அனுபவங்கள் கொண்ட தாக வெளிப்பட்ட து. பாராட்டப்பட வேண்டிய நடிப்பு அவருடையது.

தலைமையாசிரியருக்கும் காலனிக்காரப் பெண்ணுக்குமான உரையாடல் வெறும் உரையாடல் முரணாகக் காட்டுவதைத் தாண்டிக் காட்சிப்படிமம் ஒன்று மேடையில் உருவாக்கப்பட்டது. கதைக்குள் தோன்றாப்பாத்திரங்களாக இருக்கும் ஆதிக்கச் சாதிக்கும்பலின் வன்முறை நிகழ்வை - மாடும் மனிதனும் சூந்துக் கம்பால் குத்திக் கொல்லப்படுவதை வன்மை மிக்க ஓசையாலும் உடலசைவாலும் காட்டிய காட்சி பார்வையாளர்களைத் திகைக்கச் செய்த காட்சியாக இருந்தது. மொத்த நிகழ்விலும் அந்த ஒரு காட்சிதான் நாடக நிகழ்வொன்றைப் பார்த்த உணர்வை உண்டாக்கியது. நன்மாறன் கோட்டைக் கதை என்னும் கதையில் உருவாக்கப்பட்ட அந்த உச்சநிலைக் காட்சி ஒருவிதத்தில் மொத்த நாடகத்திற்குமான உச்சக் காட்சியாக மாறி நாடக முடிவைத் துன்பியல் அலைகளைக் கொண்ட நாடகத்தொகுப்பாக மாற்றி விட்டது.

நிகழ்வாக்கலும் பார்வையாளர்களுக்குக் கடத்தலும்

நாடகத்தின் அடிப்படைக்கூறு உரையாடல் (dialogue).உரையாடல்கள் வழி உருவாக்கப்படும் காட்சிகள்(scene) முரண்பட்ட பாத்திரங்களை அடையாளப்படுத்தும். காட்சிகளின் தொகுப்பு அங்கமாக(Act) மாறும். அங்கங்கள் இணைந்து நாடகமாக (Play)முழுமை பெறும். இமையத்தின் புனைவுகள் ‘கதையல்ல; வாழ்க்கை’ எனக் காட்ட நினைத்த இயக்குநர் தெரிவு செய்த நான்கு கதைகளும் ஒன்றோடொன்று தொடர்புடைய கதைகளாக இருந்தால் மூவங்க (Three Acts) நாடகமொன்று உருவாகியிருக்க வாய்ப்புண்டு. ஆனால் நான்கு கதைகளும் ஒன்றோடொன்று தொடர்பற்ற கதைகள். ஆனால் நாடக இலக்கியத்தின் அடிப்படைக் கூறான ‘உரையாடலை’ வலுவாகக் கொண்ட கதைகள். அத்தோடு முழுவதும் சமகாலப் பாத்திரங்களை நடப்பியல் தன்மையோடு முன்வைக்கும் கதைகள். அதனால் அவற்றை ஏற்று நடிக்கும் நடிகர்களின் முழுமையான ஈடுபாட்டுடன் கூடிய நடப்பியல் நடிப்பைத் தரும்போது உரையாடலின் தொனியே பாத்திர வார்ப்புகளை ஓரளவு உருவாக்கித் தரும் வாய்ப்புண்டு. இதனை உணர்ந்தே நாடக இயக்குநர் இந்தக் கதைகளைத் தெரிவு செய்து தொகுத்து நிகழ்த்திக்காட்டியுள்ளார்.

தொடர்ச்சியில்லை என்பதை அறிந்தே தெரிவுசெய்த இயக்குநர், அதனைத் கோர்வைப்படுத்திக் காட்டும் வேலையை ஆணும் பெண்ணுமாகிய இரண்டு கதைசொல்லிகளை உருவாக்கி அவர்களிடம் வழங்கியுள்ளார். அதன் மூலம் தனது நிகழ்வை எடுத்துரைப்பு நிகழ்வாக (Narrative performance) முன் வைத்துள்ளார். அப்பொறுப்பை ஏற்றுக் கொண்ட அவ்விரு எடுத்துரைப்புப் பாத்திரங்கள், கதைத் தொடர்ச்சியை எடுத்துரைப்பதோடு மேடையில் இருக்க வேண்டிய அரங்கப்பொருட்கள், பயன்படுபொருட்கள் போன்றவற்றையும் கற்பனை செய்துகொள்ளுங்கள் என்று பார்வையாளர்களிடம் வேண்டுகோளை வைத்துவிட்டு ஒவ்வொரு கதையாக நிகழ்த்தினார்கள். நான் பார்த்த வகையில் ப்ரசன்னா ராமஸ்வாமி இயக்கும் நாடகங்களில் இந்தக் கூறு பொதுக்கூறாகவே இருந்துவந்துள்ளது. எடுத்துரைப்பு நிகழ்த்துமுறை என்பது ப்ரசன்னாவின் பாணி என்றுகூட அடையாளப்படுத்தலாம்.

மொத்த நிகழ்வும் நாடக நிகழ்வாக இல்லாமல், கதை நிகழ்வாகத் தோன்றியதற்கு இன்னொரு காரணமும் இருந்தது. நிகழ்விடம் பார்வையாளர்களின் கண்பார்வைத் தளத்திற்கு மேல் உயர்த்தப்பட்டதாக இல்லாமல் சமதளத்தில் இருந்த நிலையில் இடையில் உருவாக்கப்படும் மாயச்சுவரை உணரமுடியவில்லை. நடப்பியல் நாடகங்களை அரங்கேற்றும் ப்ரொஷீனிய அரங்கில் நான்காவது சுவரான மாயச் சுவரின் இடையீடு முக்கியமான ஒன்று. அச்சுவர் இந்த நிகழ்வில் பல நேரங்களில் பாத்திரங்களால் / நடிகர்களால் சிதைக்கப்பட்டது. பார்வையாளர் களுக்குள்ளிருந்து வந்து பாத்திரங்கள் அரங்க வெளிக்குள் நுழைவது ப்ரொஷீனிய அரங்கில் தவிர்க்கப்பட வேண்டியது.

கதையல்ல வாழ்க்கை - நீண்ட இடைவெளிக்குப் பின் பார்க்கக்கிடைத்த அரங்கியல் நிகழ்வு. கரோனாப் பெருந்தொற்றுக்காலத்தின் பிடிக்குள்ளிருந்து விடுபட்ட நிலையில் தொடர்ச்சியான ஒத்திகைகளுக்குப் பின் மேடையேற்றிய இயக்குநரும் அவரது நடிகர்களும் பாராட்டுக்குரியவர்கள்.

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

தணிக்கைத்துறை அரசியல்

நவீனத்துவமும் பாரதியும்