பின் - நவீனத்துவ கால நகர்வுகள்

 

நவீனத்துவக்கருத்தியல் கடவுளின் இடத்தை அறிவுக்குத் தருவதின் வெளிப்பாடு. தமிழ் நவீன இலக்கியம் அதிலிருந்து விலகி மொழிப் பயன்பாட்டை மட்டும் முதன்மையாக்கிக் கொண்டு புதுக்கவிதை, புதுவகைப் புனைகதைகள், புதுவகை நாடகங்கள் என நகர்ந்து நிலை நிறுத்திக்கொண்டது.
நவீனக் கலை இலக்கியத்தின் அடையாளங்களாகக் கருதப்பெற்ற ஆளுமைகளின் வாரிசுகள், தந்தையர்களின் நிலைபாட்டைக் கூடப் பின்பற்ற விரும்பாமல் திரும்பவும் சமய நம்பிக்கை, சனாதன ஏற்பு எனத் திரும்பியிருக்கிறார்கள். சில எழுத்தாளர்களே அப்படித் திரும்பியிருப்பதைப் பார்க்கிறோம். ஒவ்வொன்றுக்கும் பெயர் சொல்லிக் காட்ட முடியும்.
கடந்த தலைமுறையின் முன்னோக்கிய கருத்தியல் நகர்வைக் கைவிட்டுவிட்டுப் பின்னோக்கித் திரும்பியதின் பின்னணியில் பா.ஜ.க.வின் எழுச்சியும் அது ஆட்சியதிகாரத்தில் வலுவான சக்தியாக மாறியதும் காரணம் என்பதை மறுக்க நினைக்கலாம். ஆனால் அப்படியான தேவை இப்போது இல்லை. குறியீடுகளாகவும் படிமங்களாகவும் எழுதி மறைபொருளாகப் பேசிய பலவற்றை நேரடியாகக் கவிதைகளிலும் புனைகதைகளிலும் பேசுகிறார்கள். அதன் வழியாகத் தங்களின் இருப்பும் நலனும் காக்கப்படும் என்ற நம்பிக்கை மிகுந்திருப்பதின் வெளிப்பாடு அது.
கலை இலக்கியத்துறையைக் கையில் வைத்திருப்பவர்களின் மறுதிரும்பல், அரசியல் தளத்தில் வேறுவிதமாக நடக்கிறது. தங்களின் தந்தையர்கள் நம்பிய முற்போக்கான அரசியல் எடுபடாது எனத் தோன்றும் நிலையில் ’ எவ்வகையான அரசியலுக்கு எதிர்காலம்’ என்பதைக் கணித்துக் கொண்டு அடுத்த தலைமுறை நகரத்தொடங்குகிறது. திருச்சி சிவாவின் வாரிசு , கருத்தியல் அரசியலைக் கைவிட்டுவிட்டுச் சாத்தியமான அரசியலை நோக்கி நகர்கிறார். கருத்தியல் நம்பிக்கை இல்லாமல், அதிகாரம் மட்டுமே இலக்கு என நினைப்பவர்களின் நகர்வு இப்படித்தான் இருக்கும். அவரது நகர்வு அதிர்ச்சி அடையவேண்டிய ஒன்றல்ல. ஏற்கெனவே பலரும் இப்படி நகர்ந்து கடந்துவிட்டார்கள்.
தேனித் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் அ இ அதிமுகவின் உறுப்பினர் என்றாலும் அவரது அரசியல் செயல்பாடுகள் அதன் அடிப்படை அரசியல் நோக்கங்களுக்கு மாறானது. மரபான காதல், கல்யாணம் போன்றவற்றில் பெரிய வெடிப்புகளை முன்வைத்த நடிகை குஷ்புவின் அரசியல் நகர்வுகள் காட்டியனவற்றை எப்படி மதிப்பிடுவது? காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான ப.சிதம்பர்த்தின் மகனும், காங்கிரஸ் எம்.பி.யுமான கார்த்திக் சிதம்பரத்தின் பல கூற்றுகள் சலசலப்பை உண்டாக்கும்போது அதன் வெளிப்பாட்டை எப்படிக் கடந்து கொண்டிருக்கிறது நமது அரசியல் அறிவு ? தலித் அரசியல் பேசிய - அடையாள அரசியல் பேசிய- சிறுசிறு அமைப்புகள் பலவும் அப்படி நகர்ந்துள்ளன. இடதுசாரிக் கட்சிகள் கோயில் திருவிழாக்களில் பங்கேற்கும் முடிவைத் தீர்மானமாக்குகின்றன.
கருத்தியல் அரசியல் நிரந்தரத்தில் நம்பிக்கை கொண்டதின் வெளிப்பாடு. சாத்தியமான அரசியல் தற்காலிகத்தின் வெளிப்பாடு. தற்காலிகத்தின் மீதான விருப்பம் பின் - நவீனத்துவகாலகட்டத்தின் அடையாளம்
******
ஒரு கவிதை
----------------
பெரும் பொய்களின் சூறாவளிக்கு நடுவே
ஓர் எளிய உண்மையை
அணைந்திடாமல் எப்படி ஏந்திச் செல்வது?
குழம்பி நிற்கும் ஒரு சிவப்பு எறும்பைப்பார்த்தேன்
அது நசுக்கப்பட்டிருந்தது.
ஆனாலும், நகர்ந்தது.
தன் வேதியீரக் கோடுகளைச் சிந்தியபடி
மெல்லமெல்ல ஊர்ந்தது.
பின்னொரு எறும்பு
அக்கோட்டை அடையாளம் கண்டு கொதித்தது-அது
பார்ப்பதற்கு உங்களைப் போலவோ
என்னைப் போலவோ இருந்தது
‘யாவும் பொது?’
என அது முஷ்டியை உயர்த்தியபோது
உலகம் சிரித்தது.
ஆனாலும்
கவிதை நம்புகிறது.
சிறிய எறும்பின் முஷ்டியே என்றபோதும்
அது
அறத்தின் மாபெரும் செங்கோல்.
----------------- வெயில்/ கவிதை நம்புகிறது

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

தணிக்கைத்துறை அரசியல்

நவீனத்துவமும் பாரதியும்