தன்னெழுச்சிப் போராட்டங்கள் என்னும் பாவனை
இலங்கையின் முதன்மை அமைச்சர் மகிந்த ராஜபக்சே பதவி விலகிவிட்டார். அவரது பூர்வீக இல்லம் தீயில் எரிந்து விட்டது. அரசின் ஆதரவாளர்களின் வீடுகளும் சொத்துகளும் சூறையாடப்படுகின்றன. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி கோத்தபய இன்னும் பதவி விலகவில்லை. இப்போது நடக்கும் வன்முறைக்கும் கலவரங்களுக்கும் அரசு எதிர்ப்பாளர்கள் காரணமா? அரசு ஆதரவாளர்கள் காரணமா? என்பது அறியப்படாத உண்மை. எல்லாமே தன்னெழுச்சியின் போராட்டங்கள் என்ற கருத்துரு உருவாக்கப்பட்டுப் பரப்பப்படுகின்றது.
நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் விளைவுகளை உணரத் தொடங்கிய இலங்கை மக்கள் வீதிக்கு வந்த போராடத்தொடங்கியதின் உச்சகட்ட காட்சிகளைக் கடந்த ஒருமாதமாகப் பன்னாட்டுத் தொலைக் காட்சிகள் தொடர்ச்சியாக ஒளிபரப்பின. ஆங்காங்கே நடந்த போராட்டங்களின் குவி மையமாகத் தலைநகர் கொழும்பின் காலே மைதானம் மாறியபின் போராட்டம் கொண்டாட்டமாக மாறிய பிறகே இந்த ஒளிபரப்புகள் காட்சியின்பத்தோடு தரப்பட்டன.பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க முடியாமல் தவித்த ஆளும் தரப்பான ராஜப்க்சே குடும்பமும் கட்சியும் போராட்டக்காரர்களை எப்படிச் சமாளிப்பது என்பதிலும் குழப்பங்களை எதிர்கொண்டது. முதலில் எதிர்க்கட்சிகளின் தூண்டுதல் எனக் காரணம் சொல்லித் தப்பிவிட நினைத்தவர்கள் அது முடியாமல் போன நிலையில் அமைச்சரவை கலைப்பு, மாற்று அமைச்சரவை உருவாக்கம், நெருக்கடி நிலை, ஊரடங்கு என நகர்ந்து கடைசியில் அடியாட்கள் மூலம் வன்முறையை உருவாக்கிவிட்டு, பிரதமர் மகிந்த ராஜபக்சேயின் ராஜினாமோடு நிறுத்தியிருக்கிறார்கள். அந்தக் குடும்பத்தில் பலரும் தப்பி வேறுநாடுகளுக்குப் போய்விட்டதாக உறுதிப்படுத்தப்படாத செய்திகள் சொல்கின்றன.
*****
இந்தப் போராட்டங்கள், போராட்டங்களாக இருந்தவரை அரசியல் கட்சிகள், இயக்கங்களின் தூண்டுதல் இல்லாத தன்னெழுச்சியான போராட்டம் என்றே சொல்லப்பட்டன. கலவரமாக மாறிய பின்னும் அப்படித்தான் சொல்லப்படுகிறது. சொல்லப்படுவது உண்மையாக இருக்குமென்றால், இந்தப் போராட்டமும் நான்காண்டுகளுக்கு முன்னால் தமிழ்நாட்டில் தன்னெழுச்சியாகத் திரண்டெழுந்து நடந்த சல்லிக்கட்டுப் போராட்டம் முடிந்ததுபோல் இலக்கை அடையாமல் முடிந்துபோகவே வாய்ப்பிருக்கிறது.
சல்லிக்கட்டுப் போராட்டம் தன்னெழுச்சியான போராட்டம் என்பதை அப்போதும் நான் ஏற்கவில்லை; இப்போது பலரும் அப்படித் தான் சொல்கிறார்கள். ஆளுங்கட்சிக்குள் அரசியல் அதிகாரத்தை அடைய நினைத்த ஒரு குழுவின் தூண்டுதல் பின்னணியில் இருந்ததும், அதன் வழியாகத் தூண்டப்பட்ட குழுக்களும் தனிநபர்களும் தொடர்ச்சியாகப் போராட்டக் களத்தில் நின்று முன்னெடுத்தார்கள். அதனை உணர்ந்துகொள்ளாது தன்னெழுச்சியாகப் போராட்டத்தில் கலந்துகொண்டார்கள். முன்னெடுத்தவர்கள் பின்வாங்கிய நிலையில் தன்னெழுச்சியான மனிதர்கள் தாக்கப்பட்டுப் போராட்டம் சிதைக்கப்பட்டது. அப்போராட்டத்தைப் பின்னின்று இயக்கிய கண்ணுக்குப் புலப்படாத சக்திகள் பற்றிப் பின்னர் பேச்சே இல்லை.
ஒரு மாநில அதிகாரத்திற்கான போட்டியில் நடந்ததைவிடக் கூடுதலாகவே இலங்கையின் இப்போதைய நிகழ்வுகளில் பின்னணி வேலைகள் இருக்க வாய்ப்புண்டு. கண்ணுக்குத்தெரியாத அமைப்புகள் இலங்கைக்குள்ளேயேயும் வெளியேயும் இருக்கும் என்றே தோன்றுகிறது. உலக வர்த்தகத்தில் நிலவியல் கேந்திரமுக்கியத்துவம் கொண்ட நாடு இலங்கைத்தீவு. அதில் தலையிட்டுத் தங்களின் விருப்பத்தை நிறைவேற்றிக்கொள்ள யாருக்கெல்லாம் ஆசையிருந்தது என்பதை தனிஈழப் போராட்டத்தின் கடைசி நாட்கள் உணர்த்தியிருக்கின்றன. மொழிரீதியாகவும் இனரீதியாகவும் பிளவுபட்டு நடத்திய உள்நாட்டு போரை முடிவுக்குக் கொண்டுவர உதவிய நாடுகளின் பட்டியலை ராஜபக்சேக்கள் நன்றியோடு சொல்லியிருக்கிறார்கள். அதே நாடுகள் அவர்களைத் தங்கள் கட்டுக்குள் வைப்பதற்கான விளையாட்டைத் தொடர்ந்து நடத்தினார்கள்.
2016 இல் ஒருமுறையும் 2019 இல் ஒரு முறையும் இலங்கைக்குப் போனபோது நேரடிக்காட்சிகளாகப் பன்னாட்டு மூலதனங்களின் இருப்பைப் பார்த்திருக்கிறேன். சீனாவின் நிதிநல்கையும் பெருந்துறைமுகங்கள் போன்ற கட்டுமானங்களும் காட்சிகளாகக் கொழும்பில் விரிந்து கிடைக்கின்றன. போக்குவரத்து, தகவல் தொடர்பு, ஆயத்த ஆடைகள் தயாரிப்பு, எரிசக்தித் துறை போன்றவற்றில் இந்தியாவின் பெருமுதலாளிகள் இறங்கியிருக்கிறார்கள். சீனா -அமெரிக்கப் போட்டியில் இலங்கை எந்தப் பக்கம் இருக்கவேண்டும் என்ற வலியுறுத்தல்கள் மறைமுகமாக நடந்து கொண்டிருப்பதை மக்கள் அறிந்துகொள்ள வாய்ப்புகள் இல்லை. இந்த விளையாட்டுகளை நடத்திக் கொண்டே ‘தன்னெழுச்சியான போராட்டங்கள்’ என்ற பாவனைகளையும் உருவாக்கிக் கொண்டே இருக்கின்றன. இப்போதைக்கு இதுமட்டுமே சொல்லக்கூடிய சங்கதிகள். இன்னும் நிகழ்வுகள் நடக்க இருக்கின்றன. தனது வளத்தைக் கொண்டு நிறைவான வாழ்க்கையை உருவாக்கித்தரும் பொருளாதார உற்பத்திமுறையைக் கடைப்பிடிக்காத எந்த அரசும் இப்படித்தான் சிக்கலில் மாட்டிக்கொள்ளும். உலக மயத்தின் வலைப்பின்னலுக்குள் மாட்டிக்கொள்ளும் சிறுநாடுகள் மட்டுமல்ல; இந்தியா போன்ற பேரரசுகளும்கூட தப்பிக்கும் வாய்ப்புகள் குறைவு.
********
சல்லிக்கட்டுப் போராட்டத்தின் போது எழுதிய கட்டுரையில் இடம் பெற்ற இரண்டு குறிப்புகள் கீழே தரப்பட்டுள்ளன:
“தன்னெழுச்சியான போராட்டங்கள்” என வருணிக்கப்படும் போராட்டங்கள் பற்றி முழுமையான உடன்பாடு எனக்கு எப்போதும் இருந்ததில்லை. நகர்த்துதலுக்கான கருவிகள் - நெம்புகோல்கள் இல்லாமல், பொருட்கள் நகரும் என்பது அறிவியல் இல்லை. போராட்டங்களுக்கும் நெம்புகோல்கள், அல்லது கிரியா ஊக்கிகள் தேவை. அவை நேரடியாக மோதும் கருவிகளாக இருக்கலாம் அல்லது அடித்துப் புரட்டும் சூறாவளியாகவோ, அலைப்பரப்பாகவோ இருக்கலாம்.
*******
திரள்வதற்குப் பல காரணங்கள் தேவை இல்லை. ஒன்றேயொன்று போதும். அந்த ஒன்று அரசியல் கொள்கையென்றால், அதை ஏற்காத கட்சிகள் பங்கேற்காது. பொருளாதாரக் காரணமென்றால், அதனால் பலன் கிடைக்காது என நினைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் நழுவிவிடுவார்க்ள். சமுதாயப்பிளவுகளில் ஒன்று காரணமாக இருந்தால்,அதற்கு வெளியிலிருக்கும் கூட்டம் விரோதமாகச் செயல்படும். பண்பாட்டு அடையாளம் என்றால் அதன் இயங்குநிலையே வேறு.ஒவ்வொருவரின் மூளைக்குள் -மனதிற்குள் - நினைவுக்குள் அலைந்துகொண்டிருக்கும். நிகழ்கால வாழ்வில் அந்த அடையாளத்திலிருந்து வெளியேறியவர்களாகக் கூட இருக்கலாம். ஆனால் அதைப் பார்க்கும் -பங்கேற்கும் - கொண்டாடும் விருப்பம் இருக்கவே செய்யும்.
=====
முழுக்கட்டுரைக்கு
https://ramasamywritings.blogspot.com/2017/02/blog-post.html
கருத்துகள்