சாணிக்காயிதம்: பழிவாங்குதலின் குரூரம்

 


பழிவாங்கும் உணர்ச்சி ஒவ்வொரு தனிமனிதர்களுக்குள்ளும் உறைந்து கிடக்கிறது. தனக்கு ஏற்படுத்தப்பெற்ற அவமானம், பொருள் இழப்பு, உடல் கேடு, மனநலப்பாதிப்பு போன்றன உறைந்து கிடக்கும் பழிவாங்கும் உணர்ச்சியை மேலெழுப்பிக் கொண்டுவந்து அவற்றுக்காரணமானவர்கள் மீது திரும்பிவிடும் வேலையைச் செய்துவிடும் என்பது உளவியல். மேலெழும்போது அவ்வுணர்ச்சிகள், தனக்குத் தரப்பட்டதைக் காட்டிலும் கூடுதலான பாதிப்பை ஏற்படுத்தவேண்டும் எனத் திட்டமிடும். அத்திட்டமிடும்போது சுற்றியிருக்கும் சூழலையும் சமூக நிறுவனங்களையும் பற்றிக் கவலைகொள்ளாது முன்னேறிக்கொண்டே இருக்கும்.

தனிநபர்கள் மீது பாதிப்பை ஏற்படுத்துபவர்கள் அவர்களின் இருப்பு பாதுகாப்பைத் தரக்கூடியன என நம்புகிறார்கள். பாலடையாளம், சாதி, வர்க்கம், அதிகாரத்துவ அமைப்புகளோடு கொண்டுள்ள நெருக்கம் ஆகியனவற்றை அவர்களின் நிரந்தரமான இருப்பாக நினைத்துக்கொண்டு குற்றச்செயல்களில் ஈடுபடுகிறார்கள். அக்குற்றச்செயல்பாடுகளிலிருந்து பல நேரங்களில் தப்பித்துக்கொள்ளவும் செய்வார்கள்.
தப்பித்துக் கொள்ளும் வாய்ப்புள்ள ஆதிக்க மனிதர்களோடு மோதி வெல்ல முடியாத மனிதர்கள் பாதிப்பைப் பொறுத்துக்கொண்டு - தங்களின் இயலாமையால் ஒதுங்கிப்போகிறார்கள்; தொடர்ச்சியாகக் காணாமலும் போவார்கள். ஆனால் எல்லோரும் ஒதுங்கிப் போவதில்லை; காணாமல் ஆக்கிக் கொள்வதில்லை; எந்த ரூபத்திலாவது திரும்பவருவார்கள்; பழிக்கணக்கைத் தீர்த்துக் கொள்வார்கள் என்பதே பழிவாங்கலின் இயங்கியல்.
அதிகாரத்தால் குற்றமிழைத்தவர்களுக்குத் தண்டனை வழங்கப்படும்; குறைந்த பட்சம் அவர்களின் மனச்சாட்சியே அத்தண்டனையை வழங்கும் என்பது சமயவாழ்க்கை சார்ந்த நம்பிக்கை. குற்றம் இழைத்தவர்களை அடையாளப்படுத்திக் கூண்டில் ஏற்றிவிட்டால் அரசும் சட்டங்களும் உரிய தண்டனையை வழங்கும் என்பது அரசின் மீதும் சட்டத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்களின் செயல்பாடுகள். இந்தப் பிறவியில் கடவுள் தண்டிக்கப் போவதில்லை; இந்த அரசும் அதன் அதிகார அமைப்புகளும் நமக்கு உதவுவதாக இல்லை; குற்றவாளிகளுக்கே சாதகமாக உள்ளன என நினைக்கும் தனிமனிதர்கள் உடனடித் தண்டனைகளைத் தாங்களே வழங்கிடத் தீர்மானித்து, அதே குற்றச் செயல்களில் இறங்குவிடுகின்றனர். இது தனிமனித நீதியாகச் சினிமாக்களில் முன்வைக்கப்படுகின்றன. அம்பியாக இருப்பவன், அந்நியனாக மாறிப் பழிவாங்குவது ஒரு வெளிப்பாடு என்றால், பொன்னியின் வன்ம வெளிப்பாடு அதன் இன்னொரு வகைதான்.
பழிவாங்கல் கதைகள் கலை, இலக்கியங்களின் கச்சாப்பொருள் தான். ஆனால் பழிவாங்கல் உணர்ச்சி மட்டுப்படுத்த வேண்டிய ஒன்று என்ற போதனையின் அடிப்படையில் எதிர்மறைக்கச்சாப் பொருள். அந்த எதிர்மறைக் கச்சாப்பொருளைக் கூடத் தேர்ந்த கலைஞர்கள் தேவையான விசாரணைகளோடும், மன உறுத்தல்களோடும் சூழலின் பாதிப்பைப் பார்வையாளர்களுக்குத் தரும் முடிவுகளோடும் தந்து தனது கலைத்திறனை வெளிப்படுத்திக் கொள்வார்கள்.
வன்முறை நிகழ்த்தப்படுவதற்கான காரணங்கள் இருக்கின்றன. ஆனால் வன்முறையை அழகியல் எனக் கொண்டாடும்போது வன்முறைதான் ஒரே தீர்வு என்ற நிலைக்கு நகர்வதும், நகர்த்துவதும் கலையின் வேலையாக இருக்கமுடியாது. அத்துடன் அதிகார பலம் கொண்ட மனிதர்களைத் தனிமனிதர்கள் வெல்வதாகக் காட்டும் வன்முறை அழகியல் கற்பனாவாதக் காட்சிகளாக மாறிக் காட்சியின்பத்தோடு முடிந்துபோகும். நடைமுறையில் அப்பாவித் தனிமனிதர்களும் அதிகாரமற்ற மனிதக்கூட்டங்களும் வன்முறையால் அழித்தொழிக்கப்படுவதே நடப்பாக இருக்கிறது. சாதிய இந்தியாவில் அதற்கான உதாரணங்களைத் தேடவேண்டியதில்லை. ஒவ்வொரு நாளும் கேள்விப்படும் செய்திகளாகவும் காணும் காட்சிகளாகவும் இருக்கின்றன.

பழிவாங்கலின் எந்தப் பரிமாணத்தை - எப்படிப்பட்ட சொல்முறையால் முன்வைப்பது என்பதின் மூலம் கலையாகவும், வணிகச்சரக்காகவும் ஆகின்றன ஆக்குகின்றன சினிமாக்கள். பழிவாங்கலின் மூவகைப் பரிமாணங்களே தமிழில் பெரும்பாலான சினிமாக்களாக எடுக்கப்பட்டுள்ளன. தனி நபர்களின் பழிவாங்கல் கதையைத் தேர்வு செய்து நடிப்பதின் வழியாகவே நாயகபிம்பத்தை உருவாக்க முடியும் என்ற நம்பிக்கை வணிக சினிமாவின் விதியாகச் செயல்படுகிறது. ஆண்கள் பழிவாங்கல் கதைகளையே நாயக நட்சத்திரங்களின் சினிமாவாகக் காட்டிவந்த தமிழ்ச் சினிமாவில் பெண்ணின் பழிவாங்கல் கதையைக் காட்டுவதின் மூலம் பெண்மைய சினிமாவாக ’சாணிக்காயிதம்’ படத்தைத் தந்து விட நினைத்துள்ளார் அதன் இயக்குநர் அருண் மாதேஸ்வரன்.
பாதிப்பு உண்டாக்கும் கும்பலின் குரூரமான காட்சிகளையும், பழிவாங்குதலின் குரூரமான நடவடிக்கைகளையும் மட்டும் தீர்மானித்துக் கொண்டு படத்தை உருவாக்கியிருக்கும் இயக்குநரின் நோக்கம் ’அதற்கு விளைவு இவை’ என்ற ஒற்றைப் பரிமாண நோக்கமாக இருக்கிறது. பழிவாங்குதலின் திட்டம் தொடங்கப்படும் உருவாக்கப்படும் குற்றவாளிகளின் பட்டியலும் இருப்படங்களும் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்படும் காட்சிகள் வெவ்வேறு இடப்பின்னணிகளை உருவாக்குவதாக இருக்கின்றன. அதே நேரம் அப்பட்டியல் தண்டிக்கப்படுவது உறுதி என்ற நினைப்பைப் பார்வையாளர்களுக்குத் தந்துவிடுவதின் மூலம் பழிவாங்கும் சினிமாவில் இருக்கும் ரகசியத்தைக் குறைக்கவே பயன்பட்டுள்ளது. ஏற்கெனவே அறிமுகமான நாயக நடிகையை -கீர்த்தி சுரேஷை மாறுபட்ட கோணத்தில் நடிக்க வைப்பதின் மூலம் தனது படத்தைப் பார்க்க வைக்க முடியும் என்று நம்பியிருக்கிறார் இயக்குநர். அவரது அண்ணனாக வரும் செல்வராகவனும் முழுமையான பாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார். மற்ற பாத்திரங்களில் வருபவர்களில் பெரும்பாலோர் புதியவர்கள். முதன்மைக் கதாபாத்திரங்களான இவ்விருவர் மட்டுமல்லாமல் எல்லா பாத்திர வார்ப்புகளும் ஒற்றைப் பரிமாணத்திலேயே வெளிப்பட்டுள்ளன. அதனால் புதியவர்கள் போதும் என்று நினைத்திருக்கிறார் இயக்குநர்.
தனித்தனிக் காட்சிகள், வண்ணவேறுபாட்டுக் கலவை, அண்மைக் கோணம், தூரக்காட்சி, இசையின் ஒழுங்கு என ரசிக்கத்தக்க கூறுகள் படத்தில் இருக்கின்றன. ஆனால் அவையெல்லாம் ஒன்றிணைக்கப்பட்டு, நல்ல சினிமாவாக ஆக்கப்பட்டுள்ளதா என்றால் இல்லை என்பதே பதில். நல்திறக்கட்டமைப்பு கொண்ட நாடகத்தைப் போலக் காட்சிகளை வரிசைப் படுத்தி, அவற்றிற்கு உள்தலைப்புகளையும் தந்து எடுக்கப்பட்டுள்ள சாணிக்காயிதம் உணர்வுகளின் கலவையாக இல்லாமல் ஒற்றை உணர்ச்சியின் மேல் அடுக்கப்பட்டுள்ள வன்முறைக்காட்சிகளின் தொகுப்பாக இருக்கிறது. இப்படி அடுக்குவது சினிமாவாக ஆகாது என்பதைத் தமிழ் சினிமாவுக்குள் நுழைபவர்கள் புரிந்துகொள்ளப்போவதில்லை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தி.சு.நடராசனின் திறனாய்வுப் பார்வைகள் :தமிழ் அழகியல், தமிழகத்தில் வைதீக சமயம்

உடல் மறுப்பு என்னும் பெரும்போக்கு

கற்றல் - கற்பித்தல்: மாணவ ஆசிரிய உறவுகள்