இன்னொரு திருப்பம்; இனியொரு பாதை


திருவள்ளுவராண்டு 2053 வைகாசி மாதம் ஒன்பதாம் நாள் 2022, (2022, மே, 23) கோயம்புத்தூர், குமருகுரு கல்வி நிறுவனங்களில் அமைந்துள்ள தமிழியல் கல்விப் புலத்தின் முதன்மையர் (இணை) என்ற பொறுப்பில் இணைந்துள்ளேன்.  2019, ஜூன் 30 ஆம் தேதி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத் தமிழியல் துறையின் தலைவராக இருந்து ஓய்வு பெற்றபின் சில சுற்றுலாக்களை முடித்துவிட்டு ஏதாவதொரு கல்வி நிறுவனம் அல்லது கலையாக்க நிறுவனத்தில் இணைந்து பணியாற்றவே நினைத்திருந்தேன்.

அதன் ஒரு பகுதியாக 2019 நவம்பரில் 20 நாட்கள் இலங்கைப் பயணம் மட்டுமே செல்ல முடிந்தது. பின்னர் விஜய் தொலைக்காட்சியின் தொடரொன்றுக்குப் பங்களிக்கும் விதமாகச் சென்னையில் தங்கி வேலைகளைத் தொடங்கியிருந்தேன்.  எல்லாவற்றையும் களைத்துப் போட்டன கோவிட் 19 இன் அலைகள். கடும் பாதிப்புகளை உருவாக்கிய முதல் இரண்டு அலைகளையும் தாண்டிய நிலையில் உலகம் இயங்கத்தொடங்கியிருக்கிறது. மனிதர்கள் நகரத்தொடங்கியிருக்கிறார்கள். நிறுவனங்கள் செயல்படத் தொடங்கியிருக்கின்றன.

அயல்நாட்டுப் பயணங்கள் செல்ல ஆசைதான். பிள்ளைகள் இருவரும் வெளியில் தான் இருக்கிறார்கள். என்றாலும் முழுமையாகச்   சுற்றுலாப் பயணங்கள் வேகம் பிடிக்கவில்லை. அச்சமும் தடைகளும் இருக்கின்றன. இந்த நிலையில் தான் திரும்பவும் இளம் மாணவர்களோடும் ஆசிரியர்களோடும் கலந்துறவாடிக் கலை பண்பாட்டுச் செயல்பாடுகளில் ஈடுபடும் வாய்ப்புக்கொண்ட இந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டுக் கோவைக்கு வந்துள்ளேன். குமரகுரு கல்வி நிறுவனங்களின் செயல்பாடுகளில் ஒருவனாக மாற்றிக்கொள்ளத் தயாராகியுள்ளேன். அமைப்புகளில் இருந்து செயல்படுவதில் இருக்கும் தடைகள், தனித்துவ இழப்பு பற்றியெல்லாம் கருத்துகள் இருந்தபோதிலும் நீண்டகாலமாக அரசுத்துறைசார்ந்த பல்கலைக்கழக அமைப்பில் செயல்பட்டதில் கிடைத்த நேர்மறை அனுபவங்களும் எதிர்மறை அனுபவங்களும் திரண்டு நிற்கின்றன. இப்போது முழுமையாக மாற்று அனுபவங்களுக்குள் நுழையப் போகிறேன். இலக்குகளைத் தீர்மானித்துக் கொண்டு வேகம் கொள்ளும் வேலைப்பண்பாட்டைப் பின்பற்றும் தனியார் நிறுவனங்களைப் புரிந்துகொள்ள வேண்டும். அது உருவாக்கும் வாய்ப்புகளில் தனித்துவம் பேணுதலையும் சமூகத்திற்குப் பங்களிப்புச் செய்வதையும் கற்றுக்கொள்ள வேண்டும். எப்போதும் கற்றுக் கொள்ளும் ஆர்வத்தைக் கைவிடாமல் இருந்தால் எந்த அமைப்புகளிலும் பொருந்திக் கொள்ளமுடியும் என்பதில் நம்பிக்கை உண்டு. அதற்கேற்ற இடம் இந்தக் குமரகுரு கல்லூரி என்பதைக் கடந்த இரண்டு மாதங்களாக நடந்து உரையாடல்கள் வழியாகப் புரிந்து கொண்டுள்ளேன்.

*********

 இந்த ஆண்டு முதல் தமிழ்ப் படைப்பாக்க இலக்கியம் என்ற பட்டப்படிப்பைத் தொடங்குகிறது குமரகுரு கலை அறிவியல் கல்லூரி. இம்மாதிரியான படிப்பைத் தொடங்கும் முதல் கல்லூரி இது என்பது குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று. இப்பட்டப்படிப்போடு ஆய்வு மையமாகத் தன்னை உருவாக்க நினைக்கிறது கல்லூரியின் தமிழ்த் துறை. தமிழக அறிவுலகம் அறிந்த நூல் விரும்பியான திரு. பல்லடம் மாணிக்கம் அவர்களின் மொத்த சேகரிப்பையும் விலைகொடுத்து வாங்கித் தமிழுக்கான ஆய்வு நூலகத்தை உருவாக்கியிருக்கிறது கல்லூரி நிர்வாகம். அந்நூலகத்தில் இருக்கும் அனைத்து நூல்களின் பட்டியலும் கணினிமயப்படுத்தும் வேலை நடக்கிறது. மொத்தமாக 85000 நூல்களும் 8000 அளவுக்கு இதழ்களும் உள்ளன. இன்னும் நூல்கள் வாங்கப்பட்டும் அன்பளிப்பாகப் பெறப்பட்டும் தனித்துவமான தமிழ் ஆய்வு நூலகமாக மாறிவிடும்.  விரைவில் அதன் பலனைத் தமிழ் ஆய்வுலகமும் அறிவுலகமும் பயன்படுத்திக்கொள்ளும் வாய்ப்பை உருவாக்க உள்ளது.

குமரகுரு கல்வி நிறுவனங்களைத் தொடங்கிய அருட்திரு. பொள்ளாச்சி மகாலிங்கம் அவர்களுக்கு இது நூற்றாண்டுவிழா ஆண்டு. அதனையொட்டி இந்த ஆண்டு முழுவதும் பல்வேறு துறைகளில் உலக அளவிலான கருத்தரங்குகளும் நிகழ்வுகளும் நடக்கவுள்ளன. நிகழ்வுகளில் பெரும்பாலானவை கோவை சரவணம்பட்டியிலுள்ள முதன்மை வளாகத்திலும், சில நிகழ்வுகள் வேளாண்மை கல்லூரி வளாகத்திலும் நகர்மையக் கூடத்திலும் நடக்கவுள்ளன. அவரது வாழ்வையும் வெளிப்பாடுகளையும் செயல்பாட்டுச் சிறப்புகளையும் ஆவணப்படுத்தும் காட்சியகம் உருவாக்கப்பட உள்ளது. ஆவணப்படங்களும் தயாராகின்றன. அத்தோடு கொங்குப் பகுதியின் பண்பாட்டு அடையாளங்களைத் தேடித்தொகுத்து வைக்கும் பண்பாட்டு கண்காட்சியகமும் உருவாக்கும் விருப்பம் இருக்கிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்போடு கூடிய வளர்ச்சி, அறிவியல் கண்டுபிடிப்புகளின் பயன்பாட்டைத் தமிழர்கள் பயன்படுத்துவதற்கான பயிலரங்குகள், கிராமங்களின் அமைப்பையும் இருப்பையும் மாற்றங்களையும் சமகால மாணவர்களுக்கு விளங்கச் செய்தல் எனப் பலவிதமான திட்டங்கள் முன்னெடுக்கப்பட உள்ளன.

நூற்றாண்டுக் கொண்டாட்ட நிகழ்வுகளாகக் கலை, இலக்கிய நிகழ்வுகளும், ஆளுமைகளைக் கவனப்படுத்துதலும் நடக்க உள்ளன. எழுத்தாளர்களும் ஆய்வறிஞர்களும் கல்லூரி வளாகத்திற்கு அழைக்கப்படுவார்கள்.போட்டிகளும் விருதளிப்புகளும் பயிற்சிப் பட்டறைகளும் எழுத்தியக்கமும் அவற்றின் பகுதிகளாக அமையும்.

*********

 வழக்கமான கலை, அறிவியல் கல்லூரியில் வழங்கப்படும் பட்டப் படிப்புகளைப் போலல்லாது வேறுபட்ட புலங்களில், வித்தியாசமான படிப்புகளையும் பாடங்களையும் வழங்கவேண்டும் என்ற நோக்கத்தோடு கல்லூரியின் பெயரையே கொஞ்சம் மாற்றி வைத்திருக்கிறது அதன் நிர்வாகம். ஆங்கிலத்தில் குமரகுரு காலேஜ் ஆப் லிபரல் ஆர்ட்ஸ் அண்டு சயின்ஸ் (KUMARAGURU COLLEGE OF LIBERAL ARTS AND SCIENCE) என்பது கல்லூரியின் பெயர். அதனைத் தாராளவாதக் கலையியல்களுக்கும் அறிவியல் துறைகளுக்குமான கல்லூரி எனச் சொல்லலாம். பன்முகவாய்ப்புகளை உருவாக்கும் கல்வி நிறுவனம் எனவும் அழைக்கலாம். கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் இணைவைக் கொண்டிருக்கும் கல்லூரி, அதன் கீழ் இருக்கும் கல்லூரிகளில் வழங்கப்படும் பட்டப்படிப்புகளையே வழங்கமுடியும் என்றாலும், விருப்பப்பாடங்கள், மதிப்புக்கூட்டுப் பாடங்கள் போன்றனவற்றைக் கூடுதலாகக் கல்லூரி தனியாக வழங்குகிறது.  இவ்வகைப் பாடங்களில் எழுத்துக் கலைகள், காட்சிக்கலைகள், நிகழ்த்துக்கலைகள், பிம்ப அசைவுக் கலைகள் போன்றனவற்றைக் கற்றுத்தரும் சிறு, குறு படிப்புகளை உருவாக்கித் தரும் திட்டத்தைத் தமிழியல் துறையின் வழியாக முயற்சிக்க உள்ளேன்.  தமிழ்நாட்டின் ஆகப்பெரும் பொழுதுபோக்குப் பண்பாடாகவும் பொருளாதாரமாகவும் விளங்கும் திரைத்துறைக்கும் தொலைக்காட்சி ஊடகங்களுக்கும் பங்களிப்புச் செய்யும் வகையில் மாணாக்கர்களுக்குப் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன. ஏற்கெனவே இருக்கும் காட்சித்தொடர்பியல் துறையோடு தமிழியல் துறையும் இணைந்து பணியாற்றும்.

மொழிக்கல்வியிலும் புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஒரு மொழியைப் பேச்சுமொழியாகக் கற்பித்தல், தொடர்புமொழியாகக் கற்பித்தல், இலக்கியமொழியாகக் கற்பித்தல், என ஒவ்வொன்றிற்கும் வேறுபாடுகள் உண்டு. அதனை உள்வாங்கிப் படிப்புகள் உருவாக்கப்பட உள்ளன. பிற மாநிலங்களிலிருந்தும் பிற நாடுகளிலிருந்தும் வருபவர்களுக்குத் தமிழைப் பயன்பாட்டுமொழியாகக் கற்பிக்கும் வாய்ப்புகளையும் உருவாக்கும் திட்டம் உள்ளது.

*******

அரசுப் பல்கலைக்கழகத்தில் ஓய்வு பெற்றபின் இப்படியொரு பொறுப்பை எடுத்துக் கொள்ளப் பலர் தூண்டுகோலாய் இருந்துள்ளனர். இளம் ஆசிரியராகப் புதுவைப்பல்கலைக்கழகத்தில் நான் பணியில் சேரும்போது துறையின் தலைவராக இருந்தவர் பேரா. பார்த்தசாரதி (இந்திரா பார்த்தசாரதி) அப்போது அறுபத்து நான்கைக் கடந்தவராக இருந்தார். எழுத்தாளர் கி.ராஜநாராயணன் புதுவைப் பல்கலைக்கழகத்திற்கு வருகைப் பேராசிரியராக வந்தபோது வயது 67. புதுவையிலுள்ள பிரெஞ்சு இந்திய நிறுவனத்தில் பேராசிரியர்களாக இருந்த கோபாலய்யர், விஜயவேணுகோபால் போன்றவர்கள் 80 வயதைத் தாண்டியவர்கள். தொடர்ந்து கள ஆய்விலும் விவாதிப்பதிலும் விருப்பம் கொண்ட போலந்தின் வார்சா பல்கலைக் கழகப்பேராசிரியர் முனைவர் பெர்ஸ்கி, தொண்ணூறு வயதிற்குப் பிறகும் வாரந்தோறும் துறைக்கு வந்து மாணவர்களோடு உரையாடிக்கொண்டிருப்பதைப் பார்த்திருக்கிறேன். அப்படியான உரையாடல்களோடு கல்விப்பணியில் தொடர்வது இப்போதும் விருப்பமாகவே இருக்கிறது. புதிய பொறுப்புகளோடு எனது வழக்கமான வாசிப்புகளையும் எழுத்துச் செயல்பாடுகளையும் தொடரவேண்டும்.

 


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தி.சு.நடராசனின் திறனாய்வுப் பார்வைகள் :தமிழ் அழகியல், தமிழகத்தில் வைதீக சமயம்

உடல் மறுப்பு என்னும் பெரும்போக்கு

கற்றல் - கற்பித்தல்: மாணவ ஆசிரிய உறவுகள்