சேலத்தில் நான்கு நாட்கள்
பல்கலைக்கழக மானியக்குழு நடத்தும் இந்தத்தேர்வோடு அதன் ஆரம்பத்திலிருந்து தொடர்பில் இருப்பவன். அதன் தொடக்கம் 1984. நான் 1983 இல் முனைவர் பட்டத்திற்காகப் பதிவு செய்து உதவித்தொகை எதுவும் இல்லாத ஆய்வாளராக இருந்தேன். அதனால் அதன் அறிமுக ஆண்டிலேயே தேர்வாகிவிட வேண்டிய கட்டாயமும் நெருக்கடியும் இருந்தது. விண்ணப்பித்து, தயாரிப்பில் இறங்கினேன். தமிழுக்கெனத் தேர்வான 10 பேரில் ஒருவன் நான். அதற்கெனக் கிடைத்த சான்றிதழ் பின்னர் எனது பணிக்கான நேர்காணலில் கவனம் பெற்ற ஒன்றாக இருந்தது. அப்போது கிடைத்த உதவித்தொகை மாதம் 1000/- ரூபாய். 1985 இல் அது பெரிய தொகை. கல்லூரி ஆசிரியர்களின் அடிப்படைச் சம்பளம் ரூ.1400/- தான்.
இப்போது தேர்வெழுதும் பலரும் தமிழுக்கான பாடத்திட்டம் அளவில் பெரியது எனவும் விரிவானது எனவும் சொல்கின்றனர். நாங்கள் எழுதிய பாடத்திட்டம் ஏறத்தாழ 30 ஆண்டுகள் மாறாமல் இருந்தது. அதனை மாற்றும்பொருட்டு உருவாக்கப்பட்ட வல்லுநர் குழுவில் நானிருந்தேன். இந்தியாவின் பல்வேறு பல்கலைக்கழ்கங்களின் பாடத்திட்டக்குழுவில் நேரடியாகவும் ஆலோசனை நிலையிலும் இருந்தவன் என்பதால் அவற்றை நன்கு அறிவேன். அதனால் அனைத்துத் தரப்பினரும் பலன் பெறும்பொருட்டும், இற்றைப்படுத்திய பாடத்திட்டம் எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும் என்பதற்காகவும் உருவாக்கப்பட்ட பாடத்திட்டம் இது. இன்னும் ஒரு 10 ஆண்டுக்காவது மாற்றமாட்டார்கள் என்பதால் இந்த மாற்றம் தேவையானது.
******
பல்கலைக்கழக மானியக்குழு நடத்தும் தேசியத் தகுதித் தேர்வு( UGC -NET) ஒவ்வொரு டிசம்பரிலும் ஜூனிலும் என ஆண்டிற்கிருமுறை நடக்கிறது. பட்டமேற்படிப்பு முடித்தவர்கள் இத்தேர்வில் பங்குபெற்று இரண்டு நிலைகளுக்குத் தங்களைத் தகுதிப்படுத்திக்கொள்ளலாம். பல்கலைக்கழக மானியக்குழு வழங்கு ஆய்வு உதவித்தொகை பெறும் ஆய்வாளராகத் தேர்வு பெறலாம். அது இரண்டு ஆண்டுகளுக்கு இளநிலை ஆய்வுத்தொகை எனவும், அதன் பிறகு இரண்டு ஆண்டுகளுக்கு முதுநிலை உதவித்தொகையாகவும் எனக் கிடைக்கும் இப்போது கிடைக்கும் ஆய்வுத்தொகை(37000/-), தனியார் கல்லூரிகளில் ஆசிரியப்பணி செய்பவர்களின்மாதச்சம்பளத்தைவிட அதிகம். அதுமட்டுமல்லாமல் நூல்கள் வாங்க, வாடகைக்கான அலவன்ஸ் எனவும் நிதி வழங்கப்படுகிறது. இரண்டாவது ஆசிரியராகத் தகுதியும் பெறலாம். அதற்கும் இந்தத் தேர்வே அடிப்படை.
மூன்று நாளும் முதல் பணியாக உரையும் உரையாடலும் என விரிவாகப் பாடத்திட்டத்தின் பகுதிகளை எப்படி அணுகிக் கற்பது என நடத்தப் பெற்றது. அதனைத் தொடர்ந்து குழுப் பயிற்சிகள். குழுவாக வினாத் தயாரிப்பு, விடைகளைக் கண்டுபிடிப்பது என அமைக்கப்பட்டது. பிற்பகலில் ஒரே நேரத்தில் பொதுநிலையில் ஒரு வினாத்தாளும் குறிப்பான அலகுகளில் ஒரு வினாத்தாளுமென இரண்டு தேர்வுகள் எனப் பயிற்சிகள் அமைக்கப்பட்டன. பிற்பகலில் மூன்று நாட்களிலும் ஆறு தேர்வுகள். ஆறு தேர்வுகளையும் ஆள்மாற்றி மதிப்பீடு செய்வதோடு, அத்தேர்வுகளில் கேட்கப்பட்ட வினாக்களுக்கான விடைகளைச் சுட்டுவதோடு, ஒவ்வொரு வினாவிலும் இருக்கும் கொள்குறிகளுக்கும் பின்னணியைச் சொல்லி விடையைச் சுட்டுவது என வகுப்புகள் நடந்தன.
இந்தப் பயிற்சி வகுப்பை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பும் இதே துறையில் வழங்கினேன். அந்தப் பயிற்சியில் பங்கெடுத்தவர்களில் மூன்றுபேர் உதவித்தொகை பெறும் ஆய்வாளர்களாகத் தேர்வு பெற்றுள்ளனர். ஐந்துபேர் விரிவுரையாளர் தகுதியைப் பெற்றுள்ளனர் எனச் சொன்னார்கள். இந்த ஆண்டு அந்த எண்ணிக்கை இரண்டு மடங்காகும் எனச் சொன்னேன். ஏனென்றால் இந்த முறை மாணாக்கர்களின் ஆர்வமும் ஈடுபாடும் சிறப்பாக இருந்தது.
இப்படியான வகுப்புகளில் மாணாக்கர்களைச் சந்திக்கும் வாய்ப்பில் எப்போதும் கிடைப்பது பெரும் மகிழ்ச்சி. அத்தகைய மகிழ்ச்சியான நாட்களை உருவாக்கித் தந்து தங்கள் துறையின் மாணவர்கள் நலன்மேல் மிகுந்த அக்கறை கொண்டவராகத் துறையின் தலைவர் பேரா.பெரியசாமி இருக்கிறார். அவரோடு துணைநிற்பவர்களாகப் பேராசிரியர் வெங்கடேசன், முனைவர் தேவண்ணன் இருந்து கவனித்துக் கொண்டார்கள். பங்கேற்ற மாணவர்களின் மனநிலையை எழுதிக்கொடுத்திருப்பார்கள் அது பின்னர் கிடைக்கக்கூடும். இத்தகைய வாய்ப்பை அந்தந்தப் பல்கலைக்கழகங்கள் வல்லுநர்களைக் கொண்டு உருவாக்க வேண்டும்.
சேலம், பெரியார் பல்கலைக்கழக வளாகத்தில் நாகம்மை விருந்தில்லத்தில் தங்கியிருக்கிறேன். கோழி கூவி எழுப்புவதற்குப் பதிலாக மயில்கள் அகவி எழுப்புகின்றன.அதிகாலை நான்கரை மணிக்கு அகவிய மயிலுக்கு உடனே தூரத்திலிருந்து இன்னொரு மயில் பதில் சொல்லி அகவியது கேட்டது. இரண்டு மயில்களுக்கும் இடையேயுள்ள தூரம் ஒரு காத தூரத்திற்கும் குறைவாகத்தான் இருக்கும். முதல் அகவல் பக்கத்திலும் இரண்டாவது அகவல் வெகுதூரத்திலும் கேட்டன. தொடர்ந்து மாறிமாறிக் கேட்ட அகவல்களில் தூக்கம் கலைந்துவிட்டது. முகம் அலம்பி, பல்துலக்கிவிட்டு உடனே அறையிலிருந்து வெளியே வரவில்லை. அப்படி வந்தால் குடிப்பதற்குக் காபி கிடைக்காது. ஏனென்றால் தங்கியிருப்பது பல்கலைக்கழக விருந்தினர் விடுதி.
தமிழ்சார்ந்த பணிகளுக்காகப் பல்வேறு பல்கலைக்கழகங்களுக்குச் சென்றுள்ளேன். தமிழ்நாட்டைத் தாண்டி கேரளம், ஆந்திரம், டெல்லி, வங்காளம் எனவும் இலங்கை, மலேசியா போன்ற நாடுகளின் பல்கலைக்கழக விடுதிகளிலும் தங்கியிருக்கிறேன். அங்கு இடம் இல்லாத நிலையில் தான் நகர்களின் மையப்பகுதிகளில் இருக்கும் தனியார் விடுதிகளிலும் தங்கியிருக்கிறேன். பல்கலைக்கழக விடுதிகளின் அறைகள் ஐந்து நட்சத்திர விடுதிகளின் அறைகளைப் போல விசாலமும் முன்னறை, பின்னறைகள் எனப் பரந்து இருக்கும். தளவாடப் பொருட்கள் எல்லாம் விலையுயர்ந்தனவாகவே இருக்கும். ஆனால் தொடர்ச்சியான பராமரிப்பு இல்லாததால் பாழடைந்த பங்களாக்கள் போலத் தோற்றம் அளிக்கும். பணியாளர் சேவைகள் தனியார் துறையில் கிடைப்பது போலக் கிடைக்காது.
சுழலும் சக்கரத்தில் மேல் கீழென்று எதுவும் இல்லை . ஒன்று கிடைத்தால் ஒன்று கிடைக்காது என்பது சக்கரச்சுழற்சி போன்றதுதான். வாகனங்களின் அலறல் சத்தத்தால் வரும் விழிப்புக்குப் பதிலாக மயில்களின் அகவலால் நடக்கும் எழுப்புதல் என்பது புத்துயிர்ப்பு. மனசு ஏற்றுக்கொள்கிறது. கடந்த முறை வந்தபோது பக்கத்தில் உள்ள ஏற்காடு மலையின் குளிரையும் காட்சிகளையும் பார்த்துவர ஏற்பாடு செய்தார் துறையின் தலைவர். இதற்கு முன் ஒருதடவை சேலம் பெரியார் பல்கலைக்கழகம் வந்துவிட்டு ஏலகிரிக்குப் போனேன். இன்னொரு தடவை வந்து கொல்லிமலைக்குப் போகவேண்டும்.
கருத்துகள்