அலைகளைக் கடந்து...


ஒமிக்ரான் அலையாக மாறியுள்ள மூன்றாவது அலைக்கு முதல் அலையில் இருந்ததுபோல அடங்கி இருப்பது என்று முடிவு . முதல் அலையின்போது உருவாக்கப்பட்ட அச்ச உணர்வும் பீதியும் வீட்டுக்குள் முடக்கிப்போட்டது. வீட்டு மாடியில் தான் ஒருமணி நேரம் நடை. வாரம் ஒருமுறை தகுந்த பாதுகாப்பு கவசங்களுடன் கடைகளுக்குப் போய் வந்ததைத் தவிர வெளியேற்றமே கிடையாது. 
இரண்டாவது அலையின் தொடக்கத்தில் முதல் தடுப்பூசி போட்டபின் கொஞ்சம் அலட்சியம் தலை தூக்கியது. விமானம் ஏறி மகள் வீட்டிற்குப் புனே வரை போய்வந்தோம். இரண்டாவது தடுப்பூசிக்கு முன் அங்குமிங்கும் தயக்கமில்லாமல் போய்வந்ததில் கரோனாவின் பிடிக்குள் மாட்டிக்கொள்ள நேர்ந்தது.  62 வயது வரை மருத்துவ மனையில் தங்கி மருத்துவம் பார்த்தது மிகவும் குறைவு. கண் அறுவைச் சிகிச்சைக்காகக்கூட ஒருநாளுக்குமேல் தங்கியிருக்கவில்லை. இருதய அடைப்பு நீக்கத்திற்கான மருத்துவமனை இருப்பு கூட இரண்டு நாட்கள் தான். கோவிட் -19 மட்டும் தான் ஒருவாரம் மருத்துவமனை வாசத்தைத் தந்துவிட்டது.

கோவிட் நோயின் தாக்கமும் அதிலிருந்து மீண்ட பின் ஏற்பட்ட தளர்ச்சியும் தான் மிதிவண்டி ஓட்டும் காரணங்களாகின என்றால் நம்பத்தான் வேண்டும்மருத்துவமனை வாசம் உண்டாக்கிய சோர்வும் சலிப்பும்தான் மிதிவண்டி ஓட்டத்திற்குத் திருப்பியது. இப்போது மாறியிருக்கும் உணவு முறையும் மிதிவண்டி ஓட்டமும் சேர்ந்து உடல் எடையில் 10 கிலோ குறைந்திருக்கிறது. இறுக்கமாக இருந்த சட்டைகளை எல்லாம் தூக்கிப் போடாமல் திரும்பவும் பயன்படுத்தலாம் என்று தோன்றுகிறது. ஆனால் திரும்பவும் ஒமிக்ரான் அச்சம் சட்டைகளின் பயன்பாட்டை இல்லாமல் ஆக்கிக் கொண்டிருக்கிறது.

2021 மே முதல் தேதி

எனது வலது பக்கத்துப் படுக்கையில் இருந்தவர் கிளம்பிவிட்டார். தனியார் மருத்துவக் கல்லூரியின் கோவிட்-19 சிறப்புப்பிரிவுக்கு நானும் அவரும் ஒன்றாக ஏப்ரல் 27 ஆம் தேதி வந்தோம். நான்கு நாட்களில் வீட்டுக்குப் போவதால் அவர் செலுத்திய முன்பணம் ஒரு லட்சத்தில் 30000/- ரூபாய் வரை திரும்பக் கிடைக்கிறது என்று சொன்னார். சிறப்பு வார்டுக்கு வருவதற்கு முன்னால் அதே மருத்துவமனையில் பொதுப்பிரிவில் சில நாட்கள் இருந்திருக்கிறார்.

கரோனாவிலிருந்து விடுபட்ட மகிழ்ச்சியை விடவும் தனது கட்சி, திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றிபெற்று ஆட்சியைப் பிடிக்கும் என்ற நம்பிக்கை பரவலாக இருந்ததில் அவர் மகிழ்ச்சி இரட்டிப்பாக இருந்தது. திமுகவின் தொண்டர் என்று சொல்லமுடியாது. மதுரையில் வெற்றிபெற்று அமைச்சராகத் தேர்வுபெறக்கூடிய ஒருவரின் தொகுதியில் தேர்தல் பணியாற்றியவர்; அவரோடு தொலைபேசியில் தினம் ஒருமுறை பேசினார். அவர் பேசியதைக் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் சொல்லிக் கொண்டிருந்தார். அவரது சிபாரிசு மூலம்தான் இந்தச் சிறப்பு மருத்துவ மனையில் சிறப்பு வார்டில் நல்ல படுக்கையுடன் மருத்துவக் கவனிப்பு கிடைத்தது என்றார். அண்ணன் தான் இப்போது எனது உயிரைக் காப்பாற்றியிருக்கிறார். மருத்துவ மனையின் மருத்துவர்கள், தாதிகள் பற்றியெல்லாம் பேச்சு இல்லை. இன்று வெளியே போனாலும் இன்னும் 10 நாட்களுக்கு வீட்டில் தனித்திருக்க வேண்டும் என மருத்துவர்கள் சொல்லிவிட்டார்கள் என்று வருத்தப்பட்டார். அமைச்சராவதற்கு முன்னால் அவரைப் பார்க்க முடியாமல் போய்விடுமோ என்பதுதான் அவரது வருத்தத்தை அதிகமாக்கியது.

நானும் சிபாரிசுகள் வழியாகவே லட்சம் ரூபாய் முன்பணம் கட்டிச் சேரும் சிறப்பு வார்டில் இடம்பிடித்தேன். எனக்கு இங்கு மருத்துவராக இருக்கும் உறவினரின் சிபாரிசு. கடந்த ஒருவாரத்தில் நோயாளிகளின் தினசரி வருகை சராசரியாக 200 என்று இருப்பதாகவும், இப்போது அந்த மருத்துவ மனையில் பொது மற்றும் சிறப்பு வார்டுகளில் 1000 பேர் வரை கரோனா வைரஸ் பாதித்தவர்கள் இருக்கிறார்கள் என்றார் முகத்தை முழுவதும் மறைத்துக்கொண்டு பேசிய தாதி. வரிசைக்கு 25 பேர் வீதம் 50 பேருக்கான படுக்கை வசதிகொண்ட சிகிச்சைப் பிரிவு. ஒவ்வொருவருக்கும் எட்டுக்கு எட்டு என்ற அளவில் படுக்கைகள். இடையில் துணிகளால் மறைத்துக்கொள்ளும் வசதியோடு கூடிய படுக்கைகளின் தலைப்பகுதி மதிலில் பொருட்கள் வைப்பதற்காக பெட்டி வடிவ உள்ளீடுகள் என அந்த வார்டின் கட்டமைப்பு இருந்தது. நீளவாக்கில் முடியும்போது கழிப்பறைகளும் குளியலறைகளும் தொலைக்காட்சிப் பெட்டிகளும் . ஒருபுறம் பெண்களுக்கு; எதிர்ப்பக்கத்தில் ஆண்களுக்கு. இதுபோல இன்னும் சில சிறப்புப்பிரிவுகள் இருப்பதாகவும், இதற்கும் மேலாகத் தனி அறைகள் கொண்ட அதிசிறப்புக் கவனிப்புகளும் அங்கே இருந்தன. அதற்கு முன்பணம் எவ்வளவு என்று தெரியவில்லை. அதுபற்றி நான் நினைக்கவில்லை.

தடுப்பூசியின் முதல் தவணையைச் செலுத்தியிருந்த காரணத்தால் கொஞ்சம் தைரியமாகத் திரிந்தது தவறாகிவிட்டது. ஏப்ரல் 22 காலை நடை முடிந்தபோது வழக்கத்தைவிட அசதியாக இருந்தது. படுத்துவிட்டேன். உடம்பு முழுவதும் உளைச்சல். கரோனாவாக இருக்குமோ என்ற ஐயம் தோன்ற ஆரம்பித்துவிட்டது. மாலையில் நடக்கவில்லை. கரோனாவாக இருந்தால் எதனால் வந்திருக்கலாம் என்ற எண்ணமும் விவாதமும் ஓடத்தொடங்கிவிட்டது. இரண்டு நாட்களுக்கு முன்னால் திரும்பவும் திருநெல்வேலிக்குப் போய்வந்தோம். திருமங்கலம் வந்தபின் முகவரி மாற்றம் செய்யவில்லை. எல்லாவற்றிற்கும் ஆதார் கேட்டார்கள். அதனை முதலில் மாற்றி விடலாம் என்ற முயற்சியைத் திரும்பவும் தொடங்கினேன். முதலில் சென்ற நகராட்சி மன்றத்திற்குப் பதிலாக அஞ்சலகத்தில் முயற்சி செய்தோம். அங்கும் கூட்டம் இருந்தது. முகக்கவசமெல்லாம் போட்டுத்தான் போயிருந்தோம்.

கரோனா வர வாய்ப்பில்லை என்று நினைத்தாலும் சோதனை செய்து பார்த்துவிடலாம் என்று தோன்றியது. பொது மருத்துவமனைக்குப் போகாமல், திருமங்கலம் மீனாட்சியம்மன் கோயில் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலைய முகாமில் வரிசையில் நின்று சோதனைக்கு கொடுத்துவிட்டு வந்தேன். உடல்வலி, சளிக்கு மருந்துகள் தந்தார்கள். இரண்டு நாட்களுக்கு நான்கு மாத்திரைகள். நல்ல தூக்கம் வந்தது. இரண்டு நாட்களிலும் தகவல் எதுவும் வரவில்லை. மூன்றாவது நாள் தொலைபேசியில் அழைத்தபோது, மதுரை மருத்துவக் கல்லூரியிலிருந்து அறிக்கை வரவேண்டும்; ஒன்றும் வரவில்லை என்றால் நோய் இல்லை என்று சொல்லப்பட்டது. ஆனால் உடல் வலியில் மாற்றம் இல்லை. நோய்க்கிருமி உடலுக்குள் இருக்கிறது என்பதை உணர்த்திக் கொண்டே இருந்த து.

முதல் அழைப்பு

நான்காவது நாள் 27-04-21, காலை 6.42 -க்கு முதல் அழைப்பு நகரசபை ஊழியரிடமிருந்து. அழைத்தவர் உங்களுக்குக் கோவிட் 19+ வந்திருக்கிறது என்றார். கோவிட் சிறப்பு மருத்துவ முகாம் ஒன்றுக்குப் போகத் தயாராக இருங்கள் என்றும் சொல்லிவிட்டார். தயாராகிக் கொண்டிருந்தேன். அரைமணி நேரத்தில் ஒரு மருத்துவத்துறை ஊழியர் வந்து நான் நிற்கும் தோரணை, கண்கள், முகம் போன்றவற்றைத் தள்ளி நின்று பார்த்துவிட்டு, உங்களுக்கு ஆரம்ப கட்ட நிலைதான் இருக்கிறது. ’அசிம்டமேடிக்; ஹோம் குவாரண்டைன்’ போதும் என்று சொல்லிவிட்டு நீங்கள் விரும்பினால் மதுரைப் பல்கலைக்கழக மாணவர் விடுதியில் உருவாக்கப்பட்டுள்ள சிறப்பு முகாமிற்குச் சென்று ஓய்வெடுக்கலாம் என்றார். அது முதுகலை படித்த காலத்தில் தங்கியிருந்த விடுதி. திரும்பவும் நோயாளியாகப் போக நேரும் என்று நினைக்கவில்லை.

மனைவிக்குப் பதற்றம் தொற்றிக்கொள்ள, புனேயில் இருக்கும் மகளிடமும் மருமகனிடமும் சொல்லிவிட்டார். மகள் அமெரிக்காவில் இருக்கும் மகனிடம் பேசிவிட்டார். இருவரும் கேரளாவில் கால்நடை மருத்துவராக இருக்கும் ஸ்ரீதரிடம் (அண்ணன் மகன்) தொடர்புகொண்டு ஆலோசனை கேட்டுவிட்டார்கள். எல்லாரும் சேர்ந்து வீட்டு முடக்கமும் ஓய்வும் போதாது; மருத்துவமனையில் தங்கிப் பார்த்துவிடுவதே நல்லது என்று முடிவுசெய்து வாகன ஏற்பாடு செய்துவிட்டார்கள். அரசு முகாம் வேண்டாம்; தனியார் மருத்துவமனைக்குப் போவதே நல்லது என்ற முடிவும் அவர்கள் எடுத்த முடிவுதான். நான்கு நாட்கள் ஒரே வீட்டில் இருந்ததால் மனைவிக்கும் தொற்றியிருக்கும் என்றேன். ஸ்ரீதர், சித்தி வீட்டில் இருந்து மருந்துகள் சாப்பிட ஏற்பாடு செய்கிறேன்; நீங்கள் மருத்துவமனையில் சேர்ந்துவிடுங்கள் என்று சொல்லிவிட்டான். போலந்திலிருந்து திரும்பியபின் செய்த முழுப் பரிசோதனையில் சர்க்கரை, கொழுப்பு, ரத்த அழுத்தம் என அனைத்தும் கூடுதலாகிவிட்டது; அது நோயின் அளவாகக் கருதப்பட்டுத் தொடர்ந்து மாத்திரைகள் சாப்பிட்டுக் கொண்டிருப்பவன் என்பதால், பிள்ளைகளும் மருத்துவமனையில் இருந்து பார்த்து விடுங்கள் என்று சொல்லிவிட்டார்கள். அரசாங்க விளம்பரங்களும் நீரிழிவு போன்ற தொடர் நோய் இருப்பவர்களைக் கரோனா வைரஸ் வேகமாகத் தாக்குவதாகச் சொல்லிக்கொண்டிருந்தன.

மனைவியைத் தனியாக விட்டுவிட்டு,9.30-க்கெல்லாம் தனியாகக் கிளம்பினேன். 20 கிலோமீட்டர் தூரப் பயணத்திற்கு வாகனக் கட்டணம் 5 ஆயிரம். அரைமணிநேரக் காத்திருப்புக்குப்பின் வெளிப்புற நோயாளி பதிவு. நுரையீரலை சிடி ஸ்கேன் செய்து அறிக்கைவர 4 மணி வரை காத்திருப்பு. முடிவு வந்தபோது நுழையீரலில் ஐந்துமுதல் ஏழு சதவீதப் பாதிப்பு தான்; பெரிதாகக்கவலைப்பட ஒன்றும் இல்லை என்றார் வாசல்நிலை மருத்துவர். அதனால் மருத்துவமனையில் இருக்க வேண்டுமா? என்பதை மறுபரிசீலனை செய்யலாம் என்று தோன்றியது. பிள்ளைகள் பணத்தைப் பார்க்கவேண்டாம்; அங்கேயே இருந்து பார்த்துவிடுங்கள் என்று சொல்லிவிட்டார்கள்.

‘இருந்து பார்த்துவிடுகிறேன்’ என்று மருத்துவமனையின் பணியாளர்களிடம் சொன்னவுடன் ஒரு லட்சம் முன்பணம் கட்டச்சொன்னார்கள். ரொக்கமாகப் பணம் ரூபாய் 10000/ தான் இருந்தது. “பணம் கட்டினால் அட்மிசன்” என்று சொல்லி விட்டார்கள். காசோலையாகத் தரலாம் என்று எடுத்துப் போயிருந்தேன். அதை மருத்துவமனை முன்னறை அலுவலகப் பணியாளர்கள் ஏற்கவில்லை. மகளிடம் சொன்னபோது மருத்துவ மனையின் வங்கிக் கணக்கை இணைத்துப் பணம் அனுப்பச் சில மணிநேரங்கள் ஆனது. மாலை 6.30 க்குப் பணம் வங்கிக் கணக்கிற்கு வந்தவுடன் இருட்டான ஒரு பாதை வழியாக 7 மணிக்குத் தரைத் தளத்தில் ஒரு அறையில் ஓய்வு எடுக்கச் சொன்னார்கள். சாப்பாடு வரும்; இங்கேயே சாப்பிட்டுவிடுங்கள் என்றார்கள். ஆனால் பத்து நிமிடங்கள் கழித்து மேலே கரோனா வார்டிற்கு மாற்றினார்கள். இரவு உணவு இரண்டு இட்லி, இரண்டு இடியாப்பம். கொஞ்சம் மாத்திரைகள். வழக்கமாகவே இரவு 11.30 வரை விழித்திருப்பவன் நான். அன்று 12 மணிக்கு மேலும் தூங்கவில்லை. வார்டில் இருந்த பலரும் தூங்கவில்லை. எனது இட துபக்கப் படுக்கையில் இருப்பவர் தொலைபேசியில் பேசுவதுபோல் இருந்தது; போர்வைக்குள் குலுகுலுங்கி அழுது கொண்டிருந்தார். எப்போது தூங்கினேன் என்று தெரியவில்லை.

அடுத்த நாள் எழுந்தபோது மணி 6.30. பற்பசையும் துலக்கியும் கொண்டுவரவில்லை. அங்கேயே ஒரு தொகை கொடுத்து வாங்கிக் கொண்டேன். உணவுக்கு முந்திய சர்க்கரை அளவு 80/ காபியில் சர்க்கரை போட்டுக்குடிக்கச் சொன்னார் தாதி. காலை 9 மணிக்குக் காலை உணவு ஒரு இட்லி, ஒரு தோசை,கொஞ்சம் சேமியாகிச்சடி, ஒரு அவிச்சமுட்டை. 10.45 வாக்கில் மருத்துவர் வந்தார். ஆக்ஸிஜன் பார்த்தார்கள். 92/ சர்க்கரை அளவு 91. மதியம் கோழிக்கறிக்குழம்பு, இரண்டு காய்கள், ரசம், தயிர்,போதுமானது. பப்பாளிப் பழம், கருந்திராட்சை தந்தார்கள்.

அறை நோயாளிகளின் பேச்சுகளைத் தாண்டி அந்த வார்டில் இருக்கும் இரண்டு தொலைக்காட்சிப் பெட்டிகளிலிருந்து கேட்கும் காமெடிகளும் பட்டிமன்றப்பேச்சுகளும் காதைப்பிளக்கின்றன. கிளம்பி வரும்போது கணினியையும் எடுத்து வந்திருந்தேன். ஜியோ டாங்கலும் இருந்ததால் எப்போதும்போல வேலை பார்த்துக்கொண்டிருந்தேன். இரண்டாவது நாள் தூங்குவதற்கும் மாத்திரை சேர்த்துவிட்டார்கள். நல்ல தூக்கம். காலை ஆறரை வரை அடிச்சுப் போட்ட நிலை. ஆக்ஜிஸன் 95. சர்க்கரை அளவைக் கூட்டிப் பார்த்தார்கள். இன்சுலின் போடுவதால் 338 வரை போய்வருகிறது. உணவு ஓரளவு நன்றாகவே இருக்கிறது; கோழிக்கறிக்குப் பதில் மீன். மூன்றாவது நாள் மருத்துவரிடம் இனிசுலின் குறித்து விவாதித்தேன். அது ஒரு சோதனை என்றார். உணவில் பெரிய மாற்றம் இல்லை; ஆட்டுக்கறிக்குழம்பு மட்டும் புதிய மாற்றம்.
வார்டுக்குள் வந்தவர்களில் சிலரது உடல்நிலை மோசமான நிலையில் வேறு இடங்களுக்கு மாற்றினார்கள். நள்ளிரவுக்குப் பின் கழிப்பறைக்குப் போனவர் அதன் வாசலிலேயே மயங்கி விழுந்துவிட்டார். இரவுப் பணியில் இருந்த இரண்டு தாதியர்கள் தூக்கமுடியாமல் தூக்கிக்கொண்டு வந்தார்கள். மருத்துவமனைகள் கிடைக்கவில்லை; ஆக்ஜிஸன் பற்றாக்குறை என வெளியே அல்லோலகல்லோலப்படுவதாகவும் செய்திகள் கூறின. மரண எண்ணிக்கை கூடிக் கொண்டிருக்கிறது என்பதும் செய்தியில் காட்டப்பட்டன. நான் இருந்த மருத்துவமனையிலிருந்தும் உயிரற்ற உடல்கள் வெளியேறுவதாகச் சொன்னார்கள்.

வலது பக்கத்துப் படுக்கைக்காரர் வெளியேறிய சில மணிநேரத்திலேயே 27 வயதுக்காரர் அந்தப் படுக்கைக்கு வந்துவிட்டார். அவர் போன விளையாட்டு வீரர் அவர். நான்கு நாட்களாகப் படுக்கை கிடைக்காமல் திணறிப்போனபின் கொண்டுவந்தார்கள். எனக்கும் வீட்டுக்குப் போகும் எண்ணம் வந்துவிட்டது. எப்போது நான் போகலாம்? என்று கேட்டபோது. ஆக்ஜிஸன் அளவு இன்னும் சரியாக இல்லை; கூடுவதும் குறைவதுமாக இருக்கிறது என்று சொல்லிவிட்டு இன்னும் ஒன்றிரண்டு நாட்கள் இருங்கள்; பிறகு முடிவுசெய்யலாம் என்றனர்.

ஏழாவது நாள் வீடு திரும்பலாம் என மருத்துவர் சொல்லிவிட்டார். 3 மணிக்கு ஒரு சோதனை; அதன் பின்பு வெளியேற்றத்திற்கான ஏற்பாடுகள். புதிய நோயாளிகள் வந்துகொண்டே இருக்கிறார்கள். எனக்கு மருந்து வாங்கித் தரவும் பணம் கட்டவும் வாகன ஏற்பாட்டிற்கும் ஸ்ரீதர் மருத்துவர்கள் சித்ரா வழியாகவும் விக்கி வழியாகவும் ஏற்பாடு செய்திருந்தான். என்னை அவர்கள் வந்து பார்க்கவில்லை என்றாலும், மருத்துவர்களின் அறிக்கையைப் பெற்று ஸ்ரீதருக்குச் சொல்லிக் கொண்டிருந்தனர். மருத்துவமனையிலிருந்து மாலை 6 மணிக்குக் கிளம்பினேன். 5000+ 2500+100000+300+246+900 என ரசீது கட்டிச் செலவழித்திருந்தேன். எல்லாம் சேர்த்து ஒரு லட்சத்திப் இருபதாயிரம் இருக்கலாம்

வீட்டிற்கு வந்தபின்னும் ஒருவாரம் அதே மாத்திரைகள்; உணவு முறை; ஓய்வு எனத் தொடரவேண்டும் என்று சொல்லி மருந்துகள் கொடுத்து அனுப்பினார்கள். மகளும் மருமகனும் பேரனும் புனேவிலிருந்து கிளம்பி வந்துவிட்டார்கள். வீட்டிலிருந்து வேலை பார்க்கலாம் என்பதால் திருமங்கலத்திலிருந்தே புனே அலுவலகத்திலும் பள்ளியிலும் வேலையும் பேரனின் படிப்பும் தொடர்ந்தன. வாரக்கடைசிகளில் மட்டும் சின்னச்சின்னப் பயணங்கள். காலையில் கிளம்பி மாலையில் திரும்பிவிடக் கூடியனவாக…

கரோனா நோயின் பிடி விலகி ஒருமாதத்திற்குப் பின் உடல் நிலையைப் பேணுவதற்கான யோசனைகள் விவாதிக்கப்பட்டன. மகளின் பகுதிநேர வேலை உடல்நலம் மற்றும் உணவுக்கட்டுப்பாட்டு ஆலோசனைகள். மகளின் ஆலோசனையின்படி உணவுமுறை மாற்றமும் கட்டுப்பாடும் என்பதோடு மிதிவண்டி ஓட்டத்தைக் கைக் கொள்வது என முடிவு செய்யப்பட்டது. ஜூன் மாதத்தில் அதற்கென ஒரு மிதிவண்டி வாங்கப்பட்டது. முதல் வாரத்தில் 4 கிலோமீட்டர் மட்டுமே ஓட்ட முடிந்தது. மூச்சு வாங்கியது. அடுத்த வாரம் கீழ உரப்பனூர் தாண்டினேன். போக நான்கு வர நான்கு என எட்டுக் கிலோமீட்டர். எல்லா நாளும் ஓட்டவில்லை. வாரத்தில் இரண்டு நாளாவது ஓய்வு கொடுத்துவிடுவேன். சராசரியாக 10 கிலோமீட்டர் என மாறியது. ஆனால் ஜூலையில் ஓட்டிய தூரம் 338 கிலோமீட்டர்.
மருமகனும் மகளும் மிதிவண்டி ஓட்டுவதை ஒரு கொண்டாட்டமாகச் செய்பவர்கள். ஒரே நாளில் 300 கிலோமீட்டரெல்லாம் ஓட்டுவார்கள். வாரம் தோறும் மிதிவண்டிச் சவால்களை மேற்கொள்வார்கள். நான் அந்த முறைக்கு ஆசைப்படவில்லை. எனது மிதிவண்டி ஓட்டம் உடல் நலத்திற்காக மட்டும் என்று முடிவு செய்து இப்போதும் ஓட்டிக்கொண்டிருக்கிறேன்.
  2022 இல் மாதம் 20 ஓட்டங்களாவது ஓட்டிவிடுவது என்று தீர்மானித்துள்ளேன்.ஒரு ஓட்டத்திற்கு 15 முதல் 20 கிலோமீட்டர் என்றால் மாதம் முடிவில் 350 கி,மீ. வருடக்கடைசியில் 4000 கிமீ. தொட்டுவிடலாம். இது இந்த ஆண்டிற்கான இலக்கு. 2021 ஜூன் கடைசி வாரத்திலிருந்து டிசம்பர் 31 வரை 200 நாட்களில் 136 ஓட்டங்கள்; 143 மணி நேரம்; 1699 கிலோமீட்டர்கள். சராசரியாக மணிக்கு 11.88 கிலோமீட்டர் தூரம். ஆனால் சமதளமான சாலையில் மணிக்கு 18 முதல் 20 கிலோமீட்டர் வேகத்தில் எனது சைக்கிள் ஓடும். மதுரை – கன்யாகுமரி நெடுஞ்சாலையில் வேகமாகச் செல்லும் வாகனங்கள் அச்சமூட்டுகின்றன. திருமங்கலத்தி லிருந்து எட்டுத்திக்கிலும் எனது மிதிவண்டி ஓடிக் கொண்டிருக்கிறது. பெரும்பாலும் கிராமத்தை நோக்கிய சாலைகளையே தேர்வுசெய்கிறேன். ஒருநாள் சோழவந்தான் சாலை; மறுநாள் சித்தாலை நோக்கி; அடுத்த நாள் சாத்தங்குடி வரை; ஆலம்பட்டி; ராயபாளையம், கூடக்கோவில், வடகரை, சுங்குராம்பட்டி; கப்பலூர்; தோப்பூர் என ஒரு பாகைச் சுற்று வரும்போது மாதத்தின் பாதிநாள் முடிந்திருக்கும். கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து நவம்பரில் ஒவ்வொரு நாளும் 20 கிலோமீட்டர் தூரம் என்றானது. ஆனால் மழையும் பனியும் எல்லா நாளும் ஓட்டுவதைத் தடுத்துவிட்டன.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

தணிக்கைத்துறை அரசியல்

நவீனத்துவமும் பாரதியும்