தடைகளின் காலம் நமது காலம்
நீயா? நானா? நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பு நிகழ்ந்து, தொகுத்துச் சுருக்கி ஒளிபரப்பத் தயாரான நிலையில் நிறுத்தப்பட்டுள்ளது என்பதைத் தொடர்ந்து சொல்லிக்கொண்டிருக்கின்றன வலைத்தளப்பேச்சுகள். முகநூல் குறிப்புகளில் எழுதுகிறார்கள். தமிழ்நாட்டுப் பாஜகவின் மீதும், அதன் பொறுப்பாளர்கள், ஆதரவாளர்கள் மீதும் குற்றம்சாட்டுவதில் தொடங்கி, அரசில் அமைச்சுப் பொறுப்பில் இருப்பவர் வரை பெயர்சொல்லிக் குற்றம் சாட்டுகிறார்கள். ஆனால் அதற்குப் பொறுப்பேற்றுப் பதில் சொல்ல ஒருவரும், எந்த அமைப்பும், அரசின் சார்பாளர்களும் முன்வரவில்லை.
சில நாட்களுக்கு முன்னால் நடந்த ஹோலிப்பண்டிகை தொடர்பான காட்சிகளும், நடவடிக்கைகளும் ஒரு சடங்கின்/ திருவிழாவின்/ கொண்டாட்டத்தின் எல்லையைத் தாண்டியதாகக்குற்றச்சாட்டுகள் எழுந்தன. பெண்களின் மீது நடக்கும் அத்துமீறலாகவும், மாற்று மதத்தினரின் வழிபாட்டிடங்கள் மீது நடக்கும் அச்சமூட்டலாகவும், கலவர மனநிலையைத் தூண்டிப் பொதுவாழ்க்கையைச் சூழலைக் குலைத்து அச்சத்தில் இருக்கும்படி தூண்டுவனவாக இருந்தன அந்த நடவடிக்கைகள். இதனை அச்சுப் பத்திரிகைகளும், தொலைக்காட்சி ஊடகங்களும் தனிநபர்களின் கருத்துரைக்கு வாய்ப்பளிக்கும் சமூக ஊடகங்களும் திரும்பத்திரும்பச் சொல்லிக்காட்டுகின்றன. இந்தப்போக்குகள் கங்கைக்கரையில் நடந்த கும்பமேளாவின்போதே தொடங்கி விட்டன. .ஆனால் பொறுப்பேற்றுப் பதில் சொல்ல வேண்டியவர்கள் மாற்றுப் பதில்களையும் -நேரேட்டிவ் எனச் சொல்லப்படும் எடுத்துரைப்புகளையும் உருவாக்கிப் பரப்புகிறார்கள்.
ஒரு சினிமாவில் இடம் பெற்ற காட்சியின் விளைவாக உருவான பதற்றம் பெருங்கலவரமாக மாறித் தனிநபர்களின் வாழ்க்கையையும் பொதுமனத்தின் இருப்பையும் அச்சத்தில் உறைய வைப்பதாக மாற்றியிருக்கிறது. அந்தப் படத்தில் குறிப்பிட்ட காட்சியைத் திணித்து எடுக்கப்பட்டிருக்கவே அதிகம் வாய்ப்புகளுண்டு. ஏனென்றால் அண்மைக்காலத் திரைப்படங்கள் – குறிப்பாக இந்தியத்தன்மை சார்ந்த சினிமாக்கள் வரலாற்றையும் தொன்மங்களையும் முன்வைத்துப் பெரும்பான்மை மனங்களை நோக்கிப் பேசுகின்றன. அவர்களிடம் சிறுபான்மை மதத்தவரை மாற்றுப்பண்பாட்டாளர்களாக முன்வைக்காமல் எதிர்ப்பண்பாட்டாளராக முன்வைக்கின்றன. அதன் வழியாக வரலாற்றுப் பாத்திரங்களின் மீது கொள்ளும் கோபத்திற்கு நிகழ்கால மனிதர்களைப் பழிவாங்கத் தூண்டுகின்றன. இந்நிலை எப்போதும் ஆபத்தானது. இநத அச்சம் வட இந்தியாவில் தான் ஒன்றிய அரசின் அதிகாரம் அதிகம் செல்லுபடியாகும் மாநிலங்களில் – உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரம், குஜராத் போன்ற மாநிலங்களில் நடக்கின்றன என்றாலும் மொத்தமாக நாட்டுக்கே பரவிவிடக்கூடிய சூழல் இன்றைய ஊடகப்பெருக்கத்தில் எளிமையான ஒன்று. இதற்கும் பொறுப்பேற்று எவரும் பேசப்போவதில்லை.
நாடாளுமன்றம் கூடி விவாதிக்கும் நிலையிலேயே எந்தவிதப் பொறுப்புக்கூறலையும் செய்யாத அரசதிகாரம் நிலவுகிறது. இதனைப் பாசிஸம் என வரையறை செய்யாமல் இன்னொன்றாகச் சொல்லிவிட்டு ஒதுங்குவதும் சிக்கலானதுதான். பாசிஸத்திற்குப் பல தளங்கள் இருக்கின்றன. அதனை விளக்கிப் பேசுவதிலும் அதேவிதமான தளவேறுபாடுகள் இருக்கவே செய்கின்றன.
******
இருமொழிக்கொள்கை, மும்மொழிக்கொள்கை எப்போதும் தமிழ்நாட்டில் விவாதப்பொருள்தான். தேர்தல் வெற்றிக்குப் பயன்படும் அரசியல் சொல்லாடல் தான். மும்மொழிக்கொள்கை ஆதரவாளர்கள்X எதிர்ப்பாளர்கள் எனக் கட்டமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடந்து முடிந்த நிலையில் தடுக்கப்பட்டு விட்டதாக எழுந்த வாதங்களும் மறுவிவாதங்களும் ஓய்ந்துவிட்டன. ஆனால் அதன் விளைவுகள் இப்போது வெளிப்படாது. தமிழ்நாட்டில் விஜய் தொலைக்காட்சியாக அறியப்படும் அந்த அலைவரிசையின் சொந்தக்காரர்கள் ஸ்டார் குழுமம். இப்போது ஸ்டார் குழுமமும் ஜியோ தொலைக்காட்சி ஒளிபரப்புக் குழுமமும் வணிக ஒப்பந்தத்தில் பங்காளிகளாக உள்ளன. அதனால் இப்போதுள்ள ஒன்றிய அரசிடம் பெரிய அளவு வரிச்சலுகைகளையும் மானியங்களையும் பெறும் இந்த வணிகக்குழுமங்கள் அதன் மொழிக்கொள்கைக்கு எதிரான கருத்துநிலையை உருவாக்கும் நிகழ்ச்சி ஒன்றை இப்போதைக்கு நிறுத்திவிட்டது. அதேநேரம் இந்த ஒளிபரப்பை நிறுத்த ஒத்துக்கொண்டதின் விளைவாக ஏற்படப்போகும் அவற்றின் வணிகநலனை அவர்கள் மறுபரிசீலனை செய்யவே நினைப்பார்கள்.
வணிகத்தில் நுகர்வோர்களே மையமாக இருக்கவேண்டியவர்கள். ஒரு பொருளை உற்பத்தி செய்து பெரும்பான்மை மக்களிடம் கொண்டு சேர்க்கும்போதே லாபமும் அதிகம் கிடைக்கும். அந்த நோக்கத்தில் பார்த்தால், இந்த மொழிக்கொள்கையை மையமிட்ட விவாதத்தைத் தமிழ்ப் பார்வையாளர்களிடம் கொண்டு சேர்ப்பதே தொலைக்காட்சி அலைவரிசைக்கு லாபத்தையும் நம்பத்தன்மையையும் தரும். ஆனால் கருத்துப் பரவிலினால் தங்கள் கொள்கைக்கு ஆபத்து என நினைக்கும் பாசிச அரசு இதனை ஏற்காது. தடை செய்யவே விரும்பும். இப்போது அதுதான் நடந்துள்ளது.
விஜய் தொலைக்காட்சியின் நிறுத்தப்பட்ட அந்நிகழ்ச்சி அடிப்படையில் அரசியல் விவாதம்தான். ஆனால் நேரடியான கட்சி அரசியல் அல்ல என்பது கவனிக்கத்தக்க வேண்டிய ஒன்று. எப்போதும் கருத்தியல் விவாதங்கள் வழியாகப் பண்பாட்டு அரசியலை அதிகம் பேசியுள்ள நீயா? நானா?வில் இதுபோன்ற அரசியல் விவாதங்களும் நடந்துள்ளன. நானே சிலவற்றில் பங்கு பெற்றுள்ளேன். அவற்றில் ஒன்று உலகமயம் குறித்த விவாதம். ஒருவட்டமேசை மாநாடுபோலப் பிரபலமான ஆளுமைகளை அழைத்துப் பேசவைத்த அந்த விவாதம் 2010 இல் நடந்தது. படப்பிடிப்பின்போதே பெரும் சர்ச்சைகளை உருவாக்கி நீண்ட படப்பிடிப்பாக மாறிய அந்த நாள் நினைவில் இருக்கிறது.
முனைவர் மன்மோகன்சிங்கின் ஆட்சியின் போது அறிமுகமான தனியார் மயம், தாராளமயம், உலகமயம் என்ற கருத்துநிலைகளை விரிவாகப் பேசிய விவாத நிகழ்வு. அப்போதெல்லாம் இரவில் ஒளிபரப்பான நீயா? நானா? ஒன்பது மணிக்கு ஆரம்பித்து இரண்டு மணிநேரம் நீளும். அந்த விவாதத்தில் ஒன்றிய அரசின் /ஆளுங்கட்சியின் ஆதரவாளர்களும் பங்குபெற்று விவாதித்தார்கள். பொதுத்தள அறிவுஜீவிகளும் இடம்பெற்றோம்.
தேசியநலன் என்பது ஒருவிதத்தில் தேசிய முதலாளிகளின் நலன் தான். ஆனால் மக்கள் நலன் என்ற இனிப்புத் தடவிச் சொல்லப்படும். அந்தப் போக்கெல்லாம் இப்போது மாற்றம் பெற்றுள்ளன. தனிநபர் முதலாளித்துவம் பின்வாங்கிக் கொண்டு ஏகாதிபத்தியத்தன்மையை ஏற்றுக் கொண்ட தன்மைக்கு மாறிக்கொண்டிருக்கிறது.
உலகமயத்துக்குப் பின்னான வணிகத்தில் தனித்த முதலாளித்துவம் என்பதற்குப் பதிலாகப் பங்காளிகளாக இணைந்துசெய்யும் வணிகமே மேலோங்கி நிற்கின்றது. ஒவ்வொரு நாட்டின் பெருமுதலாளிகளும் பன்னாட்டு முதலாளித்துவத்தின் பங்குதாரர்களாகவும் முகவர்களாகவும் மாறிக்கொண்டிருக்கிறார்கள். இவர்களை ஊக்குவிக்க வரிச்சலுகை, மானியம் போன்றவற்றை வழங்கும் அரசுகள் உற்பத்தியின் மீதும் விற்பனையின் மீதும் பலநிலைகளில் விதிக்கும் வரிகளைக் கொண்டு அரசு வருவாயைப் பெருக்குகின்றன. இதையெல்லாம் 2010 இல் ஒளிபரப்பான நீயா? நானா? முன்னறிவிப்புச் செய்ததுபோலப் பேசியது.
அந்த நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பு இடைவேளையில் இது அரசுக்கு எதிரான நிகழ்ச்சியா? என்ற ஐயமெல்லாம் எழுப்பப்பட்டன. ஆனால் தடுத்து நிறுத்த வேண்டுமென்று யாரும் நினைக்கவில்லை; முயற்சிக்கவில்லை. ஆனால் இப்போதுள்ள ஒன்றிய அரசின் ஆதரவாளர்கள் தங்கள் கருத்தில் நம்பிக்கையில்லாதவர்கள்; மாற்றுக்கருத்தை ஏற்கும் பக்குவம் அற்றவர்கள். அதனால் தடுத்து நிறுத்துவதில் இறங்கிவிட்டார்கள். நாம் வாழுகின்ற காலம் தடைகளால் சூழப்பட்ட காலமாக ஆகிப் பத்து ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது.
கருத்துகள்