நாறும்பூநாதனை நினைத்துக்கொள்கிறேன்
நாறும்பூநாதன் தனது செயல்பாடுகள் மூலம் பாளையங்கோட்டை -நெல்லை என்ற இரட்டை நகரத்திற்குப் பலவிதமாகத் தனது இருப்பை உணர்த்திக் கொண்டே இருந்தார். இப்போது அவரது மரணச்செய்தி வந்துள்ளது. அவரது இன்மையைச் சில ஆண்டுகளாவது அந்த நகரங்கள் உணரவும் கூடும்.
என்னளவில் அவரது இருப்பு உணர்த்தப்பட்ட ஆண்டு 2000. வீடுகட்டக் கடன் வாங்கும்விதமாக அவர் பணியாற்றிய வங்கிக்குப் போனபோது அந்தப் பெயரும் முகமும் அறிமுகம். வங்கி மேலாளரின் வருகைக்காகக் காத்திருந்தபோது என்னோடு வந்திருந்த ஆசிரிய நண்பர் அவரை அறிமுகம் செய்தார். நண்பர் ஆசிரியர்கள் சங்கத்தில் பொறுப்பாளர். நாறும்பூநாதனும் வங்கிப்பணியாளர் சங்கத்தில் பொறுப்பில் இருந்தார் என்பதாகத் தகவல் சொன்னார். எழுத்தாளர் வண்ணதாசனும் - கல்யாணசுந்தரம் என்ற பெயர்கொண்ட வங்கிப் பணியாளராக அதே வங்கியில் இருந்தார். பார்த்துக் கைகுலுக்கிக்கொண்டு மேலாளர் அறைக்குள் சென்று கடன் கேட்புப்படிவங்களில் கையொப்பமிட்டுவிட்டுப் பேசிக் கொண்டிருந்தேன். என்னை அழைத்துச் சென்ற கட்டட ஒப்பந்ததாரர் 'சாருக்கு இதே வங்கியில் நண்பர்கள் இருக்கிறார்கள்' என்று சொல்லி அறிமுகம் செய்தார். நானும் ஆமாம் என்று சொல்லி இருவரின் பெயரையும் சொன்னேன்.
தனது வங்கியில் எழுத்தாளர்கள் இருக்கிறார்கள் என்பதைப் பெரிதாக நினைக்காத வங்கி மேலாளர் “இவர் பல்கலைக்கழக ஆசிரியர்; நிரந்தரமான வருமானமுடையவர்; அதற்காகத்தான் வங்கி கடன் தருகிறது” என்று நடைமுறையை உடைத்துப் பேசினார். எனக்காக அவர்களது அறிமுகப்படுத்துதலோ, பரிந்துரையோ தேவையில்லை என்று சொல்லிவிட்டார். அப்போது நாறும்பூநாதன் எழுத்தாளர் என்பதைவிட வங்கிப்பணியாளர். அப்போது தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் தீவிரமாக இயங்கியவராகக் கூட நான் அறிந்திருக்கவில்லை.
****
இரண்டு ஆண்டுகள்(2011-2013) போலந்துக்குப் போய்விட்டுத் திரும்பியபின்னர் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் அழைப்பிதழ்களில் இந்தப் பெயர் இடம்பெற்றது. நெல்லை மாவட்டப்பொறுப்பாளர் ஆனார். அதன் பின்னர் வங்கிப்பணியிலிருந்து விடுபட்டு, முழுநேரமும் முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் பொறுப்பில் தீவிரம் காட்டினார். அவரது பொறுப்பில் நெல்லை மாவட்டச் சங்கம் பலவிதத்திலும் வெளிப்பட்டது என்பதைக் கவனித்திருக்கிறேன். மாதாந்திரக் கூட்டங்கள், நாடகங்கள் மேடையேற்றம், திரைப்படங்கள் காட்டுதல், புத்தக வெளியீடுகள், மாணாக்கர்களுக்கான பயிற்சி வகுப்புகள், கல்லூரிகளின் விழாக்களில் பேச்சாளர் என நகர்வுகள் இருந்தன. சங்கத்தின் உறுப்பினர்கள்/ பொறுப்பாளர்கள் என்ற எல்லையைத் தாண்டிய ஏற்புநிலை என அவரது செயல்பாடுகளை விரித்துக் கொண்டே இருந்தார். அந்த விரிவாக்கம் தமிழ் நாட்டளவிலும் நடந்ததை உணர்ந்திருந்தேன்.
பல்கலைக்கழகத்தில் நடந்த தமிழ்துறை நிகழ்ச்சிகளைத் தாண்டித் தகவல் தொடர்பியல், சமூகவியல் துறை நிகழ்வுகளுக்கெல்லாம் கூடப் பார்வையாளராக வந்து அமர்ந்துள்ளார். அவற்றைப் பற்றிக் கருத்துரைகள் பரப்பியுள்ளார். துறையின் தலைவராக நானிருந்தபோது அவரைச் சிறப்புப்பேச்சாளராக அழைத்த நிகழ்வுகள் நினைவில் இருக்கின்றன. பல்கலைக்கழகத்தின் சார்பில் எட்டையபுரத்தில் செயல்படும் பாரதியார் ஆவணக்காப்பக விழாவில் சிறப்பு அழைப்பாளராக ஏற்பாடு செய்து நானும் அவரும் ஒரே வாகனத்தில் சென்றோம். அப்போது பல்கலைக்கழகப் படிப்புக்குள் இலக்கியத்தின் இடம், மாணவர்களின் குடும்பப் பின்னணி, அவர்களுக்கு ஓராசிரியராக நாங்கள் செய்யக்கூடிய செயல்திட்டங்கள் பற்றியெல்லாம் சொல்லிக் கொண்டே போனேன். பின்னர் அவற்றைச் சில மேடைகளில் குறிப்பிட்டுப் பேசினார். நான் இல்லாத நிலையிலும் அவற்றைக் குறிப்பிட்டுச் சொன்னதை நானறிவேன், பொதுவாக அவரது உரைகள் தயாரிப்புகளோடு கூடிய - குறிப்புகளை வைத்துக்கொண்டு பேசும் உரைகள் என்பதைச் சொல்லவேண்டும். அந்த விழாவில் இன்னொரு சிறப்பு விருந்தினர் உளவியல் மருத்துவரும் எழுத்தாளருமான ராமானுஜம். எட்டையபுரத்தில் நடந்த நிகழ்வுகளில் அது குறிப்பிடத்தக்க நிகழ்வு.
புத்தகக் கண்காட்சிக்கு நெல்லைக்குத் தனித்த வரலாறு உண்டு. அரசு நடத்தும் கண்காட்சிகளுக்கு முன்பே நெல்லையில் புத்தகக் கண்காட்சியை அறிமுகம் செய்தது பல்கலைக்கழகம். மனோ புத்தகக்கண்காட்சி என்ற பெயரில் பல்கலைக்கழக நூலகத்துறை ஆண்டு தோறும் புத்தகக் கண்காட்சி நடத்த வேண்டுமென ஏற்பாடு செய்தவர் துணைவேந்தர் முனைவர் வே.வசந்திதேவி. அப்போது நூலகராக இருந்த நீலகண்டனின் பொறுப்பில் இரண்டு சனி,ஞாயிறுகளை உள்ளடக்கி நடந்த புத்தகக்கண்காட்சி நெல்லையின் பண்பாட்டு நிகழ்வுகளில் ஒன்றாக மாறியிருந்தது.ஒவ்வொரு நாளும் இரண்டு கல்லூரிகளின் மாணாக்கர்களின் கலைநிகழ்ச்சிகள் நடக்கும். சிறப்புரைகள் இருக்கும். தமிழ்நாட்டளவிலும் மாவட்ட அளவிலும் அறியப்பெற்ற ஆளுமைகளை அழைத்துப் பேச வைத்தோம். அதன் பின்னணியில் நீலகண்டனோடு கவிஞர் பாலா, இளைஞர் நலத்துறை இயக்குநராக இருந்த ச.மாடசாமி, இலக்கிய ஆர்வம் கொண்ட ஆசிரியர்கள் மட்டுமல்லாமல் முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கத்தின், கலை இலக்கியப்பெருமன்றத்தின் ஆளுமைகளும் இருந்தார்கள். பாளையங்கோட்டை வ.உ.சி. விளையாட்டுத் திடலிலும், இந்துக்கல்லூரி மேல்நிலைப்பள்ளி மைதானத்திலும் தொடர்ந்து நடந்தது. பேரா.க.ப. அறவாணன் துணைவேந்தராக இருந்த காலத்திற்குப் பின்னர் அது தொடரவில்லை.
இதன் பின்னரே அரசு நடத்தும் நெல்லைப் புத்தகக்கண்காட்சி அறிமுகம். அதன் தொடக்கத்திலும் அமைப்புகளிலும் புத்தாக்கச் செயல்பாடுகளிலும் நாறும்பூநாதனின் பங்களிப்பு முக்கியமானது. முழுநேர இலக்கியச் செயல்பாட்டாளர் என்ற நிலையில் மாவட்ட ஆட்சித்தலைவரை நேரில் சந்தித்தல், ஆலோசனைக் கூட்டங்களில் பங்கெடுத்துப் பொறுப்புகளை எடுத்துச் செய்தல், தொடர்புகளை ஏற்படுத்தித்தருதல் என நெல்லைப் புத்தகக் கண்காட்சிக்கும் பொருநை இலக்கிய விழாவிற்கும் அவரது பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. நெல்லை மாவட்டத்திற்கு அவரளித்த பங்களிப்பும் ஈடுபாடும் காரணமாக அவரது ஆலோசனைகள் தென்மாவட்டங்கள் பலவற்றிற்கும் பரவியது. அரசுத்துறையில் இருப்பவர்களைத் தூண்டுவதும் பயன்படுத்துவதும் எப்படி என்பதற்கு அவரது மாதிரி நல்லதொரு மாதிரி. தொடர்ந்து பயணம் செய்வதிலும் தொடர்புகொண்டு அழைப்பதிலும் சலிப்புக் காட்டாது பணிகளைச் செய்வார். அந்தப் பணிகளை நெல்லை மாவட்டம் தாண்டித் தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர் என விரிந்த நிலையில் அவரது ஈடுபாட்டின் மீது விமரிசனங்களும் எழுந்தன. இந்த மாவட்டங்களின் எழுத்தாளர்களை அடையாளப்படுத்துவதிலும் எழுத்துகள் அடங்கிய தொகுப்புகள் கொண்டு வருவதிலும் அவரது விருப்பு -வெறுப்புகள் உள்ளன என்ற குறைபாடுகள் எழுந்தன. ஒரு எழுத்தாளருக்கு வட்டார- மாவட்ட அடையாளம் உண்டாக்குவதில் எனக்கு உடன்பாடு இல்லை என்றபோதிலும் அவர் தொகுத்த தொகைநூல்களில் இருந்த விடுபடல்களையும் ஏற்பையும் விமரிசனத்தொடு அவரிடமே சொல்லியிருக்கிறேன். சாதி அடையாளத்தை முன்னிறுத்திப் பேசுவதில் விருப்பம் கொண்ட தென்மாவட்டங்களில் செயல்படுபவர்கள் இதில் கவனமாக இருக்க வேண்டும் என்பதை அவரும் உடன்பட்டே பேசியிருக்கிறார்.
கடைசியாக அவரைத் தூத்துக்குடி மாவட்டம் நாகம்பட்டியில் இந்த ஆண்டின் தொடக்கநாளில் (2025, ஜனவரி, 1) சந்தித்தேன். ஐந்து நாட்கள் நடந்த சிறுகதைப் பட்டறையில் மாணாக்கர்களோடு உரையாட அவரும் வந்தார். அப்போது தென்காசி மாவட்ட எழுத்தாளர்களின் கட்டுரைகள், கதைகள் அடங்கிய தொகுப்பைத் தந்தார். அதன் மீதான எனது கருத்துகளைச் சொன்னபோது சிலவற்றை உள்ளடக்குவதில் நீக்குப்போக்கு இருக்கவே செய்கிறது என்பதை ஒத்துக்கொண்டார்.
தனது எழுத்து -செயல்பாடு - கருத்துநிலை மீது வரும் எதிர்வினைகளை ஏற்றுக் கொள்வதிலும் பதிலுரைப்பதிலும் விவாதிப்பதிலும் பின்வாங்காதவர் நாறும்பூநாதன். ஒடுங்கிய கண்களோடு சிரித்துக் கொண்டே இதையெல்லாம் செய்வார். அந்த முகமும் அவரது செயல்பாடுகளும் நினைவில் இருக்கக்கூடியன. அத்தகைய மனிதர்களே இப்போதைய தேவை. அந்த நிலையை உணர்ந்தவன் என்ற நிலையில் தான் அதைச் சொன்னேன். அவரது இன்மையை நெல்லையின் மண்வாசம் நிச்சயம் சில ஆண்டுகளுக்கு நினைத்துக்கொள்ளும். அவரது மரணச்செய்தியோடு இவற்றையெல்லாம் நினைத்துகொள்கிறேன்.
கருத்துகள்