சென்னைப்பயணத்தில் இரண்டு நிகழ்வுகள்

சென்னை எனக்கு விருப்பமான நகரமல்ல. அங்கேயே தங்கி வாழும் வாய்ப்புகள் இருந்தபோதிலும் அதனைத் தவிர்த்தே வந்துள்ளேன். அதே நேரம் அந்த நகரத்தை வெறுத்து ஒதுக்கியும் விடமுடியாது. தமிழ்நாட்டின் தலைநகராக இருப்பதால் எனது விருப்பப்புலம் சார்ந்த நிறுவனங்களும் நிகழ்வுகளும் அங்கேதான் இருக்கின்றன; நிகழ்கின்றன. சில ஆண்டுகளுக்கு முன்பு எனது பிள்ளைகள் இருவரும் அங்கே இருந்தார்கள். அதனால் அதிகம் போய் நாட்கள் கணக்கில் தங்கியதுண்டு. அதிகமாக இரண்டு வாரங்கள் அளவு தங்கியுள்ளேன். அப்போது சென்னையில் இலக்கிய நிகழ்வுகளில் பார்வையாளனாகப் பங்கேற்றுவிட்டுத் திரும்புவேன். இப்போது ஓய்வுக்காலம் என்றாலும் அங்கே தங்கி நிகழ்வுகளில் பங்கெடுக்க முடியவில்லை. 

நான்கு நாட்கள் பயணமாக - மார்ச் 20 -23 - சென்ற பயணத்தில் எனது சொந்த நிகழ்வொன்றும், விரும்பிப் பங்கேற்க நினைத்த நிகழ்வொன்றும் இருந்தது. கட்டாயம் கலந்துகொள்ள வேண்டிய நிகழ்வு எழுச்சித்தமிழர் இலக்கிய விருதைப் பெற்றுக்கொள்ளும் நிகழ்வு. கலந்துகொள்ள விரும்பிய நிகழ்வு சென்ற நூற்றாண்டுப் பெண் எழுத்தாளர்களின் எழுத்துகளின் மீதான 'நாயகி' என்னும் முழுநாள் கருத்தரங்க நிகழ்வு.

 கொண்டாட்டமான விருதளிப்பு


இளவந்திகைத் திருவிழாவாகக் கொண்டாடப்படும் எழுச்சித்தமிழர் இலக்கிய விருதளிப்பு நிகழ்வு ஆடல், பாடல், உரைகள் எனக் கொண்டாட்டமாக நடந்தது. சென்னையின் மையமாக விளங்கும் தி.நகர் சர்.பிட்டி தியாகராயர் அரங்கில் மாலை 6 மணிக்குத் தொடங்கிய கொண்டாட்டம் முடியும்போது மணி 11.30.
கவிதை, சிறுகதை,நாவல், கட்டுரை இலக்கியம் என்னும் அல்புனைவு, பெண்ணெழுத்து, பௌத்த எழுத்து,சிறார் எழுத்து, இருவருக்குத் திரைப்பட விருது, இளவந்திகைத் திருவிழா விருது என மொத்தம் பத்துப்பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.எனக்குக் கட்டுரை இலக்கியத்திற்கான விருது அளிக்கப்பட்டது. அண்மையில் வந்த 'பண்பாட்டு வாசிப்புகள்' என்ற நூலை விருதுக்குரியதாகக் குறிப்பிடாமல் - பண்பாட்டு அரசியல், திரைப்பட விமரிசனங்கள், இலக்கியத் திறனாய்வுக் கட்டுரைகள், அரசியல் பார்வைகள் எனப் பல்வேறு தளங்களிலும் நான் எழுதும் கட்டுரைகளுக்காகவே இவ்விருது என அறிவிக்கப்பட்டு விருது அளிக்கப்பட்டபோது உள்ளபடியே மனம் மகிழ்ச்சியில் திளைத்தது.

விருதளிப்பு நிகழ்வில் சென்னைப் பெருநகரத்தின் ஆட்சித்தலைவி ஆர்.பிரியா அவர்களும் உடனிருந்தார். அவரோடு விடுதலைச் சிறுத்தைக் கட்சியின் அமைப்பாளர்கள் சிலரும், அறம் பட இயக்குநர் கோபி நயினாரும் வாழ்த்துரை வழங்கிட விருதுகள் வழங்கப்பட்டன. கலைநயத்துடன் வடிவமைக்கப்பட்ட விருதுக் கேடயத்தோடு, தலைவர் தொல். திருமாவளவன் அவர்களின் ஒப்பமிடப்பட்ட விருதுச்சான்றிதழ், விருதுபெற்றோரைக் கோட்டோவியமாக வரைந்த-அமுதன் பச்சமுத்துவின் ஓவியங்கள்- சட்டகம் என மூன்றையும் பணமுடிப்போடு பெற்றுக்கொண்டு மேடையில் பாராட்டப்படும்போது அதனை ஏற்றுக்கொள்ளும் மனநிலை இன்னொருவிதமான ஒன்றுதான்.

விருதுபெற்ற ஒவ்வொரையும் பேசச்சொல்லிக் கேட்டுக்கொண்டிருந்த தலைவர் நிறைவாகத் தனது அறிவார்ந்த உரையை வழங்கினார். ஓர் அரசியல் இயக்கம் சமகாலத்தைப் புரிந்துகொண்டு பண்பாட்டுத் தளத்தில் இயங்கும்போது இத்தகைய விருதுகளுக்கும் கொண்டாட்டங்களுக்கும் உள்ள இடத்தைச் சுட்டிக்காட்டிப் பேசினார். அவரது அரசியல் முன்னெடுப்புகள், பயணங்கள் குறித்து நானெழுதிய கட்டுரைகளைத் தனது இயக்க வெளியீடாகக் கொண்டுவர விருப்பத்தெரிவித்து மேடையில் அறிவித்ததைக் கூடுதல் மகிழ்ச்சியாக ஏற்றுக்கொண்டேன். கவி. யாழன் ஆதியின் ஒருங்கணைப்பில் அரங்கு நிறைந்த கூட்டம் நள்ளிரவு வரை நின்று பார்த்துக் கேட்டு நகர்ந்தது. விருதுபெறுவதைப் பார்ப்பதற்காக வந்து சிறப்பித்த இமையத்தின் வருகை இன்னொரு மகிழ்ச்சி.

நாயகி- முழுநாள் நிகழ்வில் அரைநாள்

மார்ச், 22 சனிக்கிழமை நடக்கவிருக்கும் நாயகி என்ற கருத்தரங்க நிகழ்வு பெண்ணெழுத்துகளை வாசித்தல் என்ற போக்கில் குறிப்பிடத்தக்க ஒன்றாக இருக்கும் என நினைக்கிறேன். அதற்கு முந்திய தினம் சென்னையில் விருதுபெறும் நிகழ்வு இருப்பதால் இதிலும் கலந்துகொள்ளும் வாய்ப்பிருக்கிறது. இந்நிகழ்வில் பேசப்படவுள்ள 12 பெண் எழுத்தாளர்களின் எழுத்துகளை முழுமையாக வாசித்ததில்லை என்றாலும் ஹெப்சிபா ஜேசுதாசனின் நான்கு நாவல்களையும் வாசித்திருக்கிறேன். அவரது கடைசி நாவலான மா-னீ நான் வாசித்த முதல் நாவல். அந்த நாவலில் விவரிக்கப்பட்ட கதைக்களமும் விவரணைகளும் ப.சிங்காரத்தின் நாவல்களில் விவரிக்கப்பட்ட பர்மீய நிலக்காட்சிகளோடும் பயண உணர்வுகளோடும் ஒத்ததாக இருந்தது. அதனைக் குறித்து எனது நெறியாளரிடம் உரையாடிவிட்டு, அது குறித்து ஒரு கட்டுரை எழுதுகிறேன். அதனை ஆராய்ச்சி இதழில் வெளியிட முடியுமா? என்று கேட்டேன். அப்போது வந்த ஆராய்ச்சி இதழின் ஆசிரியர் குழுவில் அவர் இருந்தார்.

எனது முனைவர் பட்ட ஆய்வை முடித்தபோது சொன்ன அதே ஆலோசனையைத் திரும்பவும் சொன்னார். உதிரி உதிரியாகக் கட்டுரைகள் எழுதுவது சிறுபத்திரிகை மனோபாவம். நாவாவின் ஆராய்ச்சி சிறுபத்திரிகை அல்ல; ஆராய்ச்சி இதழ். அதனால் ஹெப்சிபாவின் அனைத்து நாவல்களையும் வாசித்து, ஒட்டு மொத்தமான மதிப்பீடாக அவரது படைப்புலகை மதிப்பிட்டுக் கட்டுரை எழுது ஆராய்ச்சியில் போடலாம் என்றார். அதனை ஏற்று அவரது முதல் மூன்று நாவல்களையும் -புத்தம்வீடு, டாக்டர் செல்லப்பா, அனாதை - வரிசையாக வாசித்துக் கட்டுரை எழுதித் தந்தேன். 1992 அந்தக் கட்டுரை ஆராய்ச்சி இதழில் வந்தது. அந்தக் கட்டுரைக்காக எடுத்த குறிப்புகளை வைத்து வட்டார மொழி நடையை மையமிட்டு ஒரு கட்டுரை எழுத நினைத்திருந்தேன். ஆனால் அது நிகழவில்லை. இப்போது நடக்கவுள்ள நாயகி கருத்தரங்கில் ஹெப்சிபாவைப் பற்றியும் பேச இருக்கிறார்கள் என்பதில் மகிழ்ச்சி.

சென்னை-கவிக்கோ அரங்கில்   நடந்த 'நாயகி' முழுநாள் நிகழ்வில் அரைநாள் மட்டுமே பார்வையாளனாக அமர்ந்திருந்தேன். பிற்பகல் அமர்வுகளில் குமுதினி, ஹெப்சிபா ஜேசுதாசன், அநுத்தமா, கமலா விருத்தாசலம், இராஜம் கிருஷ்ணன், கிருத்திகா ஆகியோரின் எழுத்துகள் குறித்த உரைகளை மட்டுமே கேட்டேன். நிறைவு விழாவில் மையம் கலைக்குழுவின் ஆட்ட அடவுகளையும் பார்த்தேன். ஆர்.பாலகிருஷ்ணனின் நிறைவு உரையையும், ரமேஷ் வைத்யாவின் பார்வையாளர் கவனிப்புகளையும் கேட்டேன். பின்னர் நடந்த படப்பிடிப்புகளையும் கவனித்தேன். நான் இருந்தபோது பேசியவர்களில் கார்த்திக் புகழேந்தி தவிரப் பெரும்பாலும் பெண்கள். ஆனால் ஜா.ராஜகோபாலன், பாஸ்கர் சக்தி, செல்வேந்திரன்,பரிசல் கிருஷ்ணா,தாமரை பாரதி ஆகியோர் முற்பகல் அமர்வில் உரைகள் நிகழ்த்தியிருக்கிறார்கள்.

நிகழ்வு நடத்துவதில் தேவைப்பட்ட ஒருங்கிணைப்பிலும் நேரமேலான்மையிலும் மிகுந்த கவனத்துடன் இருந்த நாயகி அமைப்பின் பொறுப்பாளர்கள் ஒன்பது பேரும் காலையிலிருந்த அதே உற்சாகத்தோடு முடிவுவரை - 9 மணி வரை இருந்தார்கள் என்பதைத் தனது நோக்கர் உரையில் ரமேஷ் வைத்யா சுட்டிக் காட்டினார்; அது உண்மை. துள்ளலும் வேகமும் நிரம்பிய பெண்களின் துல்லியம் தொடர்ந்து வெளிப்பட்டுக் கொண்டே இருந்தது. நான் பார்த்தவரை உரையாளர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட நேரத்தில் எதனைச் செய்யமுடியுமோ அதனைச் செய்தார்கள். வாசித்ததின் மீது தங்கள் கருத்துக்களைச் சொன்னார்கள். புதையலைக் கண்டுபிடித்து விவரிக்கும் மொழி நடையில் பெரும்பாலான உரைகள் இருந்தன. அதுதான் இதுபோன்ற கருத்தரங்கில் தேவை. சில விமரிசனங்களும் இருந்தன. சில ஆச்சரியங்களும் இருந்தன. இப்போது பேசப்படும் தொடர்பற்ற எழுத்து முறை, தொன்மங்களைப் புத்தாக்கம் செய்வது, வரலாற்றுப்பாத்திரங்களை நிகழ்காலத்திற்குக் கொண்டுவருவது போன்றவற்றையெல்லாம் செய்த சென்ற நூற்றாண்டுப் பெண்ணெழுத்தாளர்களை இந்த நூற்றாண்டுப் பெண்கள் கண்டு அடையும் ஆச்சரியம் அது. அமர்ந்து கேட்டவர்களின் வாசிப்பைத் தூண்டும் உரைகள். கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் ஆய்வுகள் செய்துகொண்டிருக்கும் மாணவிகளையும் அங்கே பார்க்க முடிந்தது.
******
தமிழின் வாசிப்பு மரபு கட்டுப்படுத்தப்பட்ட வாசிப்பு மரபுகளால் ஆனது. ஏதாவதொன்றினால் தடுக்கப்படும் வாய்ப்புகளை உருவாக்கிகொண்ட வாசிப்பு மரபுகள் அவை. கல்விப்புலத்தின் இலக்கியவாசிப்பு பாடத்திட்ட எல்லைகளைக் கடந்துவிடாமல் பார்த்துக் கொள்பவை. அரசியல் இயக்கங்கள் சார்ந்த கலை, இலக்கிய அமைப்புகள் அதன் ஏற்புநிலையை மட்டும் வாசிக்கத் தூண்டுபவை. தீவிரவாசிப்பு என அறியப்பட்ட சிறுபத்திரிகை வாசிப்பும் அதே நிலைகொண்டது தான். நல்ல இலக்கியங்களைக் கண்டுசொல்பவர்களாகவும் முன்வைப்பவர்களாகவும் வரித்துக்கொண்ட இலக்கியத் திறனாய்வாளர்களின் பட்டியல்கள் எப்போதும் உள்வாங்கும் நோக்கம் கொண்டனவாக இருந்ததில்லை. அந்தத்தீவிர வாசிப்பு எப்போதும் விலக்கி வைப்பதையே உத்தியாகக் கொண்டு உருவான பட்டியல்களால் ஆனது. எந்தக் காரணமும் சொல்லாமல் விலக்கிவைக்கும் உள்ளுணர்வுத் தன்மையினால் ஆனவை அந்தப் பட்டியல்கள். தன்னைத் தேடி வந்து நடத்தும் தனி உரையாடல்களிலும் பேட்டிகளிலும் உச்சரிக்கப்படும் பெயர்களையும் அவர்களின் எழுத்துகளையும் மட்டுமே தீவிர இலக்கியம் என நம்பச்செயது பேதைகளாக ஆக்கும் போக்கின் மனம்.

நாயகி நிகழ்வில் பேசப்பட்ட 12 எழுத்தாளர்களில் பாதிப்பேருக்கும் மேல் நமது தீவிரவாசிப்புக் கருத்தாளர்கள் உச்சரிக்க மறந்த பெயர்கள். இந்தப் பெயர்களையெல்லாம் தமிழ் இலக்கிய வாசகர்களுக்குக் காட்டிய ஒரே நூல் தமிழ்நாவல் இலக்கியம் நூறாண்டு வரலாறும் வளர்ச்சியும் என்ற நூல் தான். மதுரைப்பல்கலைக்கழகத்தில் சிட்டியும் சிவபாதசுந்தரமும் தொடர்சொற்பொழிவாக ஆற்றிய உரைகளின் தொகுப்பு அது. அதனை இப்போது இற்றைப்படுத்தும் தேவை இருக்கிறது. அதனை உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் மேற்கொள்ளலாம். நேற்று அதன் தலைவர் இரா. பாலகிருஷ்ணனிடம் பேசிக்கொண்டிருந்தபோது இதுபோன்ற சிலவற்றைச் சொல்ல நினைத்தேன். சொல்லவில்லை; தனியாக எழுதவேண்டும்.
********
இதுபோன்ற கருத்தரங்குகளில் பங்கேற்பாளராக இருப்பதைவிடப் பார்வையாளராக இருப்பதை அதிகம் விரும்புபவன் நான். பங்கேற்றுப் பேசவோ, கட்டுரை படிக்கவோ ஒத்துக்கொண்டால் அதுபற்றியே சிந்தனை ஓடிக்கொண்டிருக்கும். அது முடிந்தவுடன் 'அப்பாடா.. முடிந்தது வேலை' என்று தோன்றும். மற்ற எதனையும் கவனிக்கத் தோன்றாது. ஆனால் இரண்டாயிரத்து முந்திய காலகட்டத்தில் பங்கேற்றுப் பேசுபவர்களும் பார்வையாளர்களும் முழுமையாக இருந்து கேட்டு விவாதித்துத் தேநீர் குடித்துக் கலைவார்கள்
2000 -க்குப் பின் உருவான ஆளுமைகள் பெரும்பாலும் மேடையில் அமர்வதற்காக மட்டுமே அரங்குகளுக்கு வருகிறார்கள். அறியப்பட்ட மனிதர்கள் கருத்தரங்குகளில் பார்வையாளர்களாக வந்தால் ஏற்பாட்டாளர்களும் கொஞ்சம் நெளிந்து அவரை மேடையேற்ற வேண்டிய நெருக்கடியைச் சிந்திக்கிறார்கள்.
 
பிற்பகல் 3 மணி முதல் 9 மணி வரை கவிக்கோ அரங்கில் இருந்து கேட்டபின் காலையில் தொடக்க நிகழ்விலிருந்தே வந்து கவனித்திருக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. என்றாலும் சுருதி தொலைக்காட்சியின் ஒளிபரப்புகள் இருக்கும் காலத்தில் இருப்பதால் வருத்தப்பட ஒன்றுமில்லை. அடுத்தடுத்து 'நாயகிகளின் எல்லைகள்' விரிவடையும் என்று சொல்லி யிருக்கிறார்கள். அப்படியான நிகழ்வுகளில் என்னைப் போன்ற தென்மாவட்ட ஆட்கள் வந்து பங்கேற்பது எளிமையானதல்ல. வாய்ப்பிருந்தால் பிற நகரங்களில் ஒன்றிரண்டை முயன்று பார்க்கலாம். அது உடனடியாக நடக்கும் வாய்ப்பில்லை என்பதும் தெரியும். நாயகிகளுக்குப் பாராட்டு.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஈழத்தமிழ் இலக்கியம்: எழுதப்பட்டனவும் எழுதப்படுவனவும்

நவீனத்துவமும் பாரதியும்

நாயக்கர் கால இலக்கியங்கள் சமுதாய வரலாற்றுச் சான்றுகளாகக் கொள்வதற்கான முன் தேவைகள்