தேர்வுமுறைகள் மாற்றப்பட வேண்டும்.


தேசிய தரமதிப்பீட்டுத் தேர்வு அறிமுகப் படுத்தப்பெற்ற பின்னணியில் தமிழகப் பள்ளிக்கல்வி வாரியம் பள்ளிப்பாடங்களைச் சீரமைப்புச் செய்வது தொடர்பாகவும், தரமுயர்த்துவது தொடர்பாகவும் ஆரம்ப நிலையில் பல்வேறு விவாதங்களை நடத்தியது. மையப் பள்ளிகள் வாரியப் பாடங்கள், சிறப்பான கல்வியை வழங்கும் கேரளப்பள்ளிக் கல்வி வாரியம் மட்டுமல்லாமல், வெளிநாடுகள் சிலவற்றின் பாடத்திட்டங்களையும் பெற்று ஒப்பிட்டுப் பேசினார்கள் கல்வியாளர்கள். ஆரம்ப நிலைப்பேச்சுகள் தாண்டி, பாடங்கள் எழுத வழிகாட்டப்பட்டன. நானும் ஒரு குழுவில் தமிழ்ப் பாடங்கள் எழுதும் குழுவில் இருந்தேன்..

கல்வியின் தரம் உயர்த்துதல் என்பதைச் சிந்திக்கும் யாரொருவரும் பாடங்களை மட்டும் மாற்றினால் மாற்றங்கள் வந்துவிடும் என நினைக்கக் கூடாது. கற்பித்தலில் ஈடுபடும் ஆசிரியர்கள், மாணாக்கர்கள் என்ற இருசாராரும் ஈடுபடும் பணிகள் மூன்று. கற்றல், கற்பித்தல், சோதித்தல் என்பன இருசாராரும் ஈடுபாட்டோடு செய்ய வேண்டியன. இம்மூன்றையும் சம அளவில் முக்கியமானதாகக் கருதவேண்டும். இந்தியாவில் / தமிழ்நாட்டில் அப்படிக் கருதுவதில்லை. கற்பித்தலுக்கே அதிகம் முக்கியத்துவம் அளிக்கிறோம். ஆசிரியர்களும் மாணவர்களுக்கு இணையாகக் கற்க வேண்டும். ஆனால் பள்ளிக்கல்வி முதல் பல்கலைக்கல்வி வரை ஆசிரியர்களுக்கு அப்படியொரு நெருக்கடியைத் தரும் பாடத்திட்டங்கள் உருவாக்கப்படவில்லை. உருவாக்கப்பட்ட பாடங்களில் அவரவர் விருப்பம் போல, புதுப்புது முறைகளில் மாணாக்கர்களின் தரத்தை அறிய வேண்டும். கற்றலுக்கும் கற்பித்தலுக்கும் செலவழிக்கும் நேரத்துக்கு இணையாகத் தேர்வு நடத்துவதற்கும், நடத்திய தேர்வுமுறையின் முடிவுகளை விளக்கிச் சொல்லவேண்டும். இப்போதிருக்கும் நடைமுறையில் மதிப்பெண்கள் தரும் முறை இருக்கிறது. இதற்குமாறான முறைகளை உலக நாடுகள் சோதனை செய்கின்றன. இவற்றைப் பொறுப்பிலிருந்த அதிகாரிகளிடம் சொல்லவும் செய்தேன். 

தமிழகப் பல்கலைக்கழகங்கள் வழங்கும் சான்றிதழ்களில் தரப்புள்ளிகளே -கிரேடுகளே தரப்படுகின்றன. ஆனால் தெளிவில்லாமல்தான் கிரேடுமுறை பின்பற்றப் படுகின்றது  என்பதையும் எனது அனுபவத்திலிருந்து சொல்ல முடியும். உள்மதிப்பீட்டுத் தேர்வுகளிலும் புறமதிப்பீட்டுத் தேர்வுகளிலும் மதிப்பெண்களை வழங்கிவிட்டு, சான்றிதழ்களில் மட்டும் கிரேடு வழங்குவதால் அதன் நோக்கம் நிறைவேறாது என்பதை அதிகாரிகள் புரிந்து கொள்வதில்லை. மதிப்பெண்களை வழங்கி, வகுப்பறையில் தரும்போதே அங்கிருக்கும் மாணாக்கர்களை அதன் அடிப்படையில் தரப்படுத்தி விடுகிறோம். அதன் பிறகு ஒரு கிரேடுக்குள் பலரைப் பொருத்துதல் நடக்கிறது.

நமது கல்விச்சூழல்: சில எச்சரிக்கைகள்

30 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்நாட்டில் ஒரு கல்வி அமைச்சர் கலைப் பாடங்கள் தேவையா? என்ற விவாதத்தை ஓடவிட்டது இப்போது நினைவுக்கு வருகிறது. அவர், திரு. எம்.ஜி. ராமச்சந்திரனின் அமைச்சரவையில் கல்வி அமைச்சராக இருந்த செ. அரங்கநாயகம். அவ்வெள்ளோட்டத்திலிருந்து தொடங்கி சோதனைச்சாலைகளை உள்ளடக்கிய அறிவியல் பாடங்களையே கல்வியாகக் கருதும் மனநிலை உருவாக்கப்பட்டது. அதன் பின்னர் தங்கள் பிள்ளைகளை எப்போதும் அறிவியல் பாடங்களை நோக்கியே பெற்றோர்கள் திசை திருப்பினார்கள். ஏராளமான பொறியியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டன. இப்போது பொறியியல் பட்டதாரிகள் வேலையில்லாப் பட்டதாரிகளாக அலைந்து கொண்டிருக்கிறார்கள்.

அந்தப் போக்கின் துணை விளைவுகளாக உருவானவைகளே திறன் வளர்க்கும் தனியார் நிறுவனங்கள். அவை மொழிக்கல்வியில் வேலை வாய்ப்புக்குப் பயன்படும் பேச்சு ஆங்கிலத்தைக் கற்பிக்கும் முறைகளைச் சோதனைச் சாலை வசதிகளோடு கற்பித்தன. துணையாகக் கணினிப் பயிற்சிகளையும் வழங்கின. அதே நேரத்தில் இலக்கியம், சமூகவியல், கலை போன்ற பாடங்களின் கற்பித்தல் முறைகளிலும் பாடத் திட்டங்களிலும் பெருமளவு மாற்றங்கள் இல்லாமல் தொடர்ந்து கொண்டிருந்தன. ஆசிரியர்களும் வல்லுநர்களும் அவைபற்றிப் பெரிதாகக் கவலைப்படவில்லை. இப்போது அதற்கும் வேட்டு வைத்துவிட்டது கொரோனாவிற்குப் பிந்திய கல்வி நிலையச் சூழல்கள்.

வகுப்பறைத் தொடர்புகள் இல்லாமல் இணையவழி வகுப்புகளைத் தொடர்ச்சியாகப் பயிற்சி செய்து கொண்டிருந்தன தனியார் பள்ளிகளும் கல்லூரிகளும். அவற்றின் வழியாகவே மொழிக் கல்வியும், சமூகவியல் கல்வியும் வழங்கிட முடியும் என்பதை உறுதிசெய்தபின் இப்பாடங்கள் சார்ந்த ஆசிரியர்களின் தேவை குறையும். அறிவியல் பாடங்களிலும் கூட வகுப்பறைக் கல்வியைக் குறைத்து இணையவழிப் பாடங்களுக்கேற்பப் பாடத்திட்டங்கள் மாற்றப்பட்டன. அனைவருக்கும் கல்வி என்ற கொள்கைக்கு வலுச்சேர்க்க இணையவழி முறையைப் பரிந்துரைத்துச் சான்றிதழ்களை வழங்கினார்கள். அச்சான்றிதழ்களுக்கேற்ப வேலைகளுக்குப் போகும் ஒரு வர்க்கம் உருவாகும். தனியார் நிறுவனங்களுக்கு இவ்வகை அனுமதிகளை வழங்கும் அரசுகள், மொத்தமாகத் தனியாரிடம் கையளித்துவிட்டு ஒதுங்கப்போவதில்லை.

நேரடியாக வகுப்பறைக்கல்வியையும் ஆய்வுக்கூடச் சோதனைச்சாலை வசதிகளைக் கொண்ட கல்வி நிலையங்கள் சிறப்பு நிறுவனங்கள் என்ற பெயரால் தொடரும். நவோதயா, மத்தியப்பள்ளிகள், ஐஐடி, ஐஐஎம் போன்ற தேசியச் சிறப்பு நிறுவனங்கள், மையப்பல்கலைக்கழகங்கள் போன்றன நீட்டிக்கப்படும்; புதிதாகவும் தொடங்கப்படும். அவை நூறுசதவீத மானியங்களுடன் அரசின் செல்லப்பிள்ளை நிறுவனங்களாகக் கருதப்படும். அவற்றில் இருக்கக் கூடிய குறைவான எண்ணிக்கை இடங்களுக்குத் தேசிய தரமதிப்பீட்டுத் தேர்வுகள் நடத்தப்பட்டுக் குறைவானவர்கள் அனுப்பப்படுவார்கள். அந்நிறுவனங்களில் இட ஒதுக்கீடுகள் இருக்காது. எப்போதும் ஏமாற்றுச் சொல்லாக இருக்கும் தகுதி/ திறமை என்ற பெயரில் உயர்சாதியினரும் அதிகாரவர்க்கத்தினரும் தங்கள் பிள்ளைகளை அனுப்பிக் கொண்டிருப்பார்கள். அங்கொரு வர்க்கம் உருவாகும். பாரதூரமான வேறுபாடுகள் கொண்ட வர்க்க உருவாக்கம் நடக்கப்போகிறது.

உள்ளடக்க மாற்றங்களை முன்வைக்க வேண்டும்

தேசியக் கல்விக் கொள்கை (2020) யின் வரைவறிக்கை மைய அரசு வெளியிட்டு விவாதங்களை ஏற்றுக்கொள்ளாமல் நடைமுறைக்கும் வந்துவிட்டது. தமிழ்நிலம், தமிழ்மொழி, தமிழ்ப் பண்பாடு, தமிழ் அறிவு, தமிழர் இறையியல், தமிழர் கலையியல், இலக்கியவியல் என்பன எவ்வாறு தனித்ததொரு முறையியலாக வளர்ந்தது என்பதைச் சொல்ல வேண்டும். அதைக் கற்பிக்கும் நூல்களை எழுதுவது குறித்தும் குழந்தமைப் பருவம் தொடங்கிச் சிறார்ப் பருவம், பதின்பருவம், இளையோர் நிலை என ஒவ்வொரு கட்டத்திற்குமான அறிதலை உறுதி செய்ய வேண்டும். உலகங்களோடு ஊடாடும் அறிவியல் பார்வையையும் சொந்த மக்களையும் சூழலையும் உணரும் சமூகவியல் நோக்கையும் கற்றுத்தரும் கல்வியாக அக்கல்வி இருக்கவேண்டும்.

விடுதலைக்குப் பின்னான இந்தியக் கல்வியை வடிவமைத்ததில் மௌலானா அபுல்கலாம் ஆஷாத்தின் பங்கு முன்னோடியானது. முதல் கல்வி அமைச்சரான ஆஷாத்தும் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவும் இணைந்து இந்தியக் கல்விக்கான தேசியக்கல்விக் குழுமமம் மற்றும் ஆய்வு நிறுவனம், பல்கலைக்கழக மானியக்குழு போன்றவற்றை உருவாக்கிப் பொதுக் கல்விக்கான வழிகாட்டுதல்களைத் தந்தார்கள். அதே நேரத்தில் தரமான உயர்கல்வி நிறுவனங்கள் என்ற பெயரில் இந்தியத் தொழில்நுட்ப நிறுவனம் போன்ற தனிச் சலுகை வளாகங்களையும் உருவாக்கினார்கள். அங்கு கற்றவர்கள் இந்தியாவுக்குப் பணியாற்றுவதை உறுதிசெய்யாத நிலையில் அறிவு ஏற்றுமதி மண்டலங்களாக அவை தனித்துக் கிடந்தன.

இப்போது வரை திரும்பத்திரும்ப உச்சரிக்கப்படும் கல்விக் கொள்கையாளர் பேரா. கோத்தாரி அவரது பெயரால் அழைக்கப்படும் (1964-66) கல்வித்திட்டம் பயிற்றுமொழி தொடங்கி கல்வி நிறுவனங்களின் கட்டமைப்பு, வகுப்பறை, கல்வியின் இலக்கு எனப் பலவற்றில் அடிப்படையான கருத்துகளை முன்வைத்தது. அதற்குப் பின்பு ஒவ்வொரு பத்தாண்டின் நிறைவின்போதும் அல்லது ஆட்சி மாற்றங்களின் போதும் கல்விக் கொள்கைகள் அறிமுகமாகியிருக்கின்றன. நான் முனைவர் பட்ட ஆய்வாளனாக இருந்த காலத்தில் திரு.ராஜீவ் காந்தி அறிமுகப்படுத்திய கல்விக்கொள்கை 1986 தொடங்கி 1992 இல் திரு. நரசிம்மராவ் காலக் கல்விக் கொள்கை என ஒவ்வொன்றின் அறிமுக நிலையில் அவற்றை ஓரளவு உள்வாங்கி எதிர்வினையாற்றியிருக்கிறேன். அவை எல்லாமே பெருமாலும் வடிவ மாற்றங்கள் பற்றிய பரிந்துரைகளாக இருந்தன. உலகமயம் அறிமுகமான போது அதற்கேற்ற மனிதர்களை - தனித்திறன் மனிதர்களை உருவாக்கும் நோக்கும் இருந்தது. மன்மோகன் சிங் காலத்தில் ஏறத்தாழக் கல்வி நிறுவனங்கள் அரசின் பிடியிலிருந்து நழுவிச் செல்லும்படி விடப்பட்டன. நிதியாதாரங்களைத் தராமல் விதிகளை உருவாக்கிக் கட்டுப்பாடுகளைச் செலுத்தும் அமைப்புகளாக அரசுத்துறைக் கல்வி அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. அரசுத்துறைக் கல்விச்சாலைகள் மோசமானவை என்று கருத்து உருவாக்கப்பட்டன; தனியார் கல்வி நிறுவனங்கள் செல்வம் சேர்க்கும் தொழிற்சாலைகளாக வளர்ந்துவிட்டன. இதையெல்லாம் இப்போது வந்திருக்கும் தேசியக் கல்விக் கொள்கை கணக்கில் கொண்டதாகத் தெரியவில்லை. இதற்கு இருக்கும் நோக்கம் கனவு மயமானது. கற்பவர்களின் எண்ணிக்கையை - உயர்கல்வியைப் பெறுபவர்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் நோக்கம் இருக்கிறது என வெளிப்படையாகச் சொல்ல முடியாது. அவ்வப்போது தேர்வுகள் நடத்தி நிறுத்திக் காட்டுவதின் மூலம் திசைமாற்றம் செய்யும் நோக்கம் இருக்கிறது. கல்வித்திட்டத்தினால் வஞ்சிக்கப்பட்டவர்கள் என்பதாக உணராமல், தன் இயலாமையால் இது நடந்தது என விலகிப் போகும்படி தூண்டும். சமநீதி, சமூகநீதி என்ற சொல்லாடல்களுக்கு எதிரான மனநிலையை ஒவ்வொருவரும் உருவாக்கிக் கொள்வார்கள்.

சொந்த அனுபவங்கள்

வாய்ப்புக்கிடைக்கும்போதெல்லாம் நான் நடத்தும் தேர்வுகளில் மாற்றங்களைச் செய்து கொண்டேயிருப்பேன். நான் இக்கால இலக்கியங்கள், திறனாய்வுமுறைகள், கோட்பாடுகள் சார்ந்து பாடம் நடத்துபவன் என்பதால், அவற்றைப் புரிந்துகொண்டவர்களாக இருக்கிறார்களா என்பதை மட்டுமே சோதிக்கிறேன். புரிந்துகொண்டதை எழுதிக்காட்டத்தெரிந்தவர்களாக இருப்பதையும் நான் கணிக்கிறேன். எனது வினாக்களுக்கு ஒரேமாதிரி விடையை எல்லா மாணவர்களும் எழுத முடியாதவகையில் நான் பாடங்களை நடத்துகிறேன்.

இக்காலக் கவிதைகளை, நாடகங்களை, புனைகதை வாசிக்கும் முறை, அதன் வழியாகப் பிரதிகளை, பிரதிகளின் வழியாக அதனை உருவாக்கிய எழுத்தாளரின் திறனை அறிவதும் புரிவதுமாக எனது வகுப்பறை உரையாடல்கள் அமையும். எழுத்தாளரின் எழுத்து உருவாக்கும் பாத்திரங்களின் முழுமையை அல்லது முழுமையின்மையை, அப்பாத்திரங்கள் நடப்பு வாழ்க்கையில் அடையாளப்படுத்தும் மனிதர்களை, அவர்களின் மெய்ப்பாடுகளை, பாவனைகளைக் கண்டறிவது எப்படி எனப் பாடம் நடத்துவதையே எனது வகுப்பறை உரையாடல்கள் செய்தன. நானே வினாக்கள் தயாரித்து நானே மதிப்பீடு செய்து, மதிப்பெண் வழங்கும் உள்மதிப்பீட்டுத் தேர்வுகளில் வினாக்களை முதலிலேயே சொல்லிவிடுகிறேன். அந்த வினாக்களுக்கான விடைகளைத் தயாரிப்பதற்கு இரண்டு மூன்று நாட்கள் முதல் ஒருவாரம்வரை கூடத்தேவைப்படும். அதுதான் பாடம்; அதுதான் தேர்வு.

கற்றல், கற்பித்தல், சோதித்தல் என்ற மூன்றில் சோதித்தலுக்கான நடைமுறையாக இருப்பது தேர்வுகள். தேர்வுமுறையில் மாற்றங்கள் செய்யப்படாத நிலையில் கற்பித்தல் மாற்றங்கள் பெரும்பயன் அளிக்கும் என எதிர்பார்க்கமுடியாது. முன்பெல்லாம் வருடத்திற்கு ஒருமுறை இரண்டு அல்லது மூன்றுமணி நேரத்தேர்வுகளில் மாணாக்கர்கள் கற்றுக்கொண்ட பாடங்கள் ஒரேமாதிரியான வினாத்தாள்கள் வழியாகச் சோதிக்கப்பெற்றன. இப்போது அதனைப் பருவ அடிப்படையில் பிரித்து இரண்டு அல்லது மூன்று பருவங்களாக நடத்தலாமா? என்று பள்ளிக்கல்வித் துறை சிந்தித்துக் கொண்டிருக்கிறது. கல்லூரிகளில் பருவ முறை நடைமுறைக்கு வந்து 40 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. பள்ளியிறுதி வகுப்புகளில் பெறும் மதிப்பெண்கள் தான் உயர்கல்விக்கு -குறிப்பாகத் தொழிற் கல்விக்கு வாய்ப்புகளை உருவாக்கும் என்ற அடிப்படையை இப்போது வந்துள்ள தேசிய தரமதிப்பீட்டுத் தேர்வு பொருளற்றதாக்கிவிட்டது. இந்த நேரத்தில் நாம் தேர்வு முறைகளில் மாற்றம் செய்வதுபற்றியும் சிந்திக்கவேண்டும். 40 -50 மணி நேரம் கற்பித்த ஒரு பாடத்தை ஒரே மாதிரியான வினாத்தாளைக் கொண்டு இரண்டு அல்லது மூன்று மணிநேரத்தில் சோதித்து மதிப்பெண்கள் வழங்குவதற்குப் பதிலாக மாற்றுவடிவங்களைப் பற்றிச் சிந்திக்கவேண்டும். மாணவர்கள் பாடங்களைப் புரிந்துகொண்டுள்ள விதம், விளக்கும் விதம், விவாதிக்கும் திறன், வெளிப்படுத்தும் பாங்கு போன்றன கவனிக்கப்படவேண்டும். ஒவ்வொன்றுக்கும் தனித்தனியே மதிப்பலகுகள் தரப்படவேண்டும்.

நான் இரண்டு ஆண்டுகள் பணியாற்றிய வார்சா பல்கலைக் கழகத்தில் தேர்வுக்காலத்தை மட்டுமே பல்கலைக்கழக நிர்வாகம் குறிப்பிட்டுத்தரும். ஒரு பாடத்திற்குரிய தேர்வு நாட்களை ஆசிரியர்களும் மாணவர்களும் கலந்துபேசி முடிவுசெய்துகொள்ளலாம்.அங்கு இந்தியவியல் துறையில் ஒரு பேராசிரியர் 23 மாணாக்கர்களுக்கு 12 நாட்கள் தேர்வு நடத்தினார். ஒரு மணி நேர எழுத்துத் தேர்வுக்குப் பின்னர் ஒரு மணிநேரப் பேச்சுத்தேர்வை ஒவ்வொருவரும் எதிர்கொள்வார்கள். பேச்சுத்தேர்வுக்கான விவாதக்குழுவில் தாளின் ஆசிரியரோடு துறையின் இன்னொரு ஆசிரியரும், தாளின் பாடத்திட்டத்தோடு தொடர்புடைய ஆசிரியரும் இருப்பார்கள். அவர்களோடு அதே வகுப்பின் மாணாக்கர் ஒருவரும் விவாதத்தில் கலந்துகொள்வார். தேர்வுக்காலமான 3 மணிநேரத்தில் இரண்டு மாணாக்கர்களுக்குத் தேர்வை நடத்தி விட்டுக் கிளம்பிவிடுவார். ஒவ்வொரு நாளுக்கும் ஒவ்வொரு மாணவருக்கும் தனித்தனி வினாத்தாள், தனித்தனி விவாதப் பொருள் என அமையும் அந்தத் தேர்வுமுறையில் வகுப்பிலுள்ள அனைவரையும் ஒப்பிட்டு மதிப்பெண் வழங்கும்- ஏற்றத்தாழ்வு கற்பிக்கும் முறை கிடையாது. ஒவ்வொருவருக்கும் இருக்கும் திறன்களை, எடுத்துரைப்பு முறைகளைக் கண்டறிந்து மதிப்பலகு (grade) கொடுக்கும் முறை அது. கல்வித்துறை மாற்றங்கள் என்பன என்னவகையான சமுதாயத்தை இளையோர்களுக்கு அறிமுகம் செய்யவேண்டும் என்பதிலிருந்து உருவாகவேண்டும்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தி.சு.நடராசனின் திறனாய்வுப் பார்வைகள் :தமிழ் அழகியல், தமிழகத்தில் வைதீக சமயம்

உடல் மறுப்பு என்னும் பெரும்போக்கு

கற்றல் - கற்பித்தல்: மாணவ ஆசிரிய உறவுகள்