படங்கள் வழி மதுரை நினைவுகள்

மதுரை என்னுடைய நகரமென்று இப்போதும் சொல்கிறேன். அந்நகரில் இருந்த ஆண்டுகள் குறைவுதான். மாணவனாக விடுதிகளில் 6 ஆண்டுகள் தங்கியிருக்கிறேன். அமெரிக்கன் கல்லூரியில் வாலஸ் விடுதியிலும் வாஸ்பன் விடுதியிலும் 4 ஆண்டுகள். பல்கலைக்கழக விடுதியில் இரண்டு ஆண்டுகள். தொடர்ந்து திருமணம் செய்துகொண்டு ஆய்வு செய்த ஆய்வாளர்களுக்கான குடியிருப்பில் 5 ஆண்டுகள். அதன்பிறகு கே கே நகரில் ஒரு ஒண்டுக் குடித்தனமாக ஓராண்டு. மொத்தம் 12 ஆண்டுகள். ஆனால் எனது கிராமத்திலிருந்து நான் வாழ்ந்த பல நகரங்களுக்கும் போக மதுரைதான் வழி. எனது கிராமம் இப்போதும் மதுரை மாவட்டத்திற்குள் தான் இருக்கிறது. மேற்குத்தொடர்ச்சி மலைகளின் ஒரு கிளையான வாசிமலையான் கோவில் மலைக்குத் தெற்கே இருக்கும் தச்சபட்டி என்ற அந்தக் கிராமம் அப்போதும் 70 தலைக்கட்டுதான்; இப்போதும் அதே 70 தலைக்கட்டுதான். வளர்ச்சியே இல்லாத கிராமம். அங்கிருந்து மதுரைக்கு வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு காரணங்களுக்குப் போய் வந்திருக்கிறேன். வாழ்ந்திருக்கிறேன்.
ஐந்தாவது உலகத்தமிழ் மாநாடு
மதுரையில் ஒருவாரம் நடந்தது(1981 ஜனவரி, 4-10) அப்போது மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் தமிழியல் துறையில் படித்துக்கொண்டிருந்தேன். ஆய்வுக்கட்டுரைகள் வழங்கும் அமர்வுகள் எல்லாம் பெரும்பாலும் பல்கலைக்கழக வளாகத்தில் இருந்த மு.வ.அரங்கிலும் துறைகளின் கருத்தரங்க அறைகளிலும் நடந்தன. கலை நிகழ்ச்சிகள் எல்லாம் மதுரைக் கல்லூரி மைதானத்தில் நடந்தன. அவற்றில் எல்லாம் பங்கேற்கும் வாய்ப்புகள் இளம் மாணவர்களுக்குக் கிடைக்கவில்லை. அதற்குக் காரணம் மாநாட்டிற்கு வரும் திரளான மக்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட கண்காட்சிதான்.

ஆண்டு தோறும் சித்திரைத் திருவிழாவிற்கு மாபெரும் பொருட்காட்சி நடக்கும் தமுக்கம் மைதானத்தில் மாநாட்டிற்காகக் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டது. அதன் முக்கிய பொறுப்பில் துறையின் பேராசிரியர் முனைவர் கோ.விஜயவேணுகோபால் இருந்தார். இலக்கணம், மொழியியல் துறைகளில் வல்லவரான கோ.வி. கட்டடக்கலை, கல்வெட்டுத் துறைகளிலும் ஆர்வம் கொண்டவர். அவர் வடிவமைத்த மாதிரிதான் இப்போது மதுரைப் பல்கலைக்கழக நுழைவு வாயிலாக உள்ளது. பல்கலைக்கழகத்தின் ஒவ்வொரு துறையும் கண்காட்சிகள் அமைத்தன. தமிழியல் துறை, தமிழர்களின் கலை, வரலாறு, பண்பாடு சார்ந்த பொருட்களைக் காட்சிப்படுத்தியது.
கண்காட்சி தொடங்குவதற்கு முன்னால் பத்திரிகையாளர்கள், பல்கலைக்கழக அதிகாரிகள் அடங்கிய குழுவினருக்கு விளக்கிச் சொல்லும் பொறுப்பைப் பேராசிரியர் கோ.வி.அவர்களே செய்தார். இரண்டாவது படத்தில் வலது ஓரத்தில் இருப்பவர். அதே படத்தில் இடது ஓரம் இருப்பவர் அப்போது பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினராக இருந்த பி.டி.ஆர். பழனிவேல் ராஜன். தன்னார்வப் பணி செய்யத் தயாராக மாணவர்களாகிய நாங்கள் அதற்கான அடையாள அட்டையோடு நிற்கிறோம்.

மாநாடு தொடங்கியபிறகு தமிழியல் துறை அரங்கின் காட்சிகளை அனைவருக்கும் விவரித்துச் சொல்லும் பொறுப்பு மாணவர்களுடையது என்று சொல்லிவிட்டார். ஒரு பொறுப்பு கொடுத்தால் கூடுதல் ஈடுபாட்டுடன் செய்யும் ஆர்வம் இருந்ததால் காட்சிப்பொருட்கள் ஒவ்வொன்றைப்பற்றியும் அதிகப்படியான தகவல்களைத் திரட்டி நேரடி வர்ணனையாகவும் ஒலிபெருக்கி வழியாகப் பெருந்திரளுக்குச் சொல்லும் விதமாக இரண்டாவது நாள் செய்து காட்டினேன். அதன் பலனாக மற்ற இடங்களுக்குப் போகாமல் அந்தக் கண்காட்சியிலேயே இருக்கும்படி ஆகிவிட்டது.
மதுரைக்கல்லூரி மைதானத்தில் நடந்த ஜெ.ஜெயலலிதாவின் நாட்டிய நாடகத்தைப் பார்க்க விரும்பிக் கேட்ட அனுமதிகூடக் கிடைக்கவில்லை. அந்நாடகத்தைப் பார்த்துவிட்டு தமுக்கம் மைதானம் வந்த அப்போதைய நல்வாழ்வுத்துறை அமைச்சர் எச்.வி. ஹண்டே அவர்களுக்கு விளக்கிச் செல்லும் வாய்ப்புக் கிடைத்தது. அந்த நினைவைத் தக்கவைத்துள்ளது இந்த முதல் படம்.


அடித்து விளையாடும் விளையாட்டு
============================
பழைய படங்களைப் பதிவேற்றும் இந்தப்போக்கு மதுரை நினைவுகளைக் கிளறிவிட்டது. கைவசமிருக்கும்/ கணினித் தொகுப்பில் இருக்கும் படங்களைப் பார்த்துக்கொண்டே வரும்போது இந்தப் படத்தைப் பகிரவேண்டும் என்று தோன்றுகிறது. என்னிடம் அடிவாங்குவதுபோலப் பாவனை செய்யும் சுந்தரன் (பேரா.சுந்தர் காளி) எண்பதுகளிலும் தொண்ணூறுகளிலும் மதுரையின் கலை இலக்கியத் தொடர்பாளராக அறியப்பட்ட ஆளுமை. மதுரைக்கு வெளியே இருக்கும்-பிறநாடுகளில் இருப்பவர்களும் மதுரைக்கு வரும்போது தொடர்புகொள்ளும் நபராக இருந்தான். மதுரை நண்பர்கள் என்றொரு குழுவாக்கத்தை உருவாக்கிக் கொண்டாட்ட மனநிலையைத் தந்த முன்னோடி மதுரைக்காரன்.



இந்தப் படத்தில் நானும் இருக்கிறேன். ஆனால் முகம் காட்டவில்லை. அப்போது அமெரிக்கன் கல்லூரியின் இளம் ஆசிரியர். உடன் இருக்கும் நண்பர்கள் ஏ.ஆ.குமார்.அரவிந்தன், கண்ணன்(அவர் மட்டும் இப்போது இல்லை)


இருப்பதில் பழைய படம்-1980. அமெரிக்கன் கல்லூரி விழாவில் பரிசு வாங்கும்போது எடுத்த படம். பரிசு தருபவர் ஒரு நீதிபதி. பெயர் நினைவில் இல்லை. எண்பதுகளின் பெல்பாட்டம் பேண்ட். இரண்டு காதுகளையும் மறைக்கும்படியாக முடிவளர்த்து, அகலமான அடிப்பாகம் கொண்ட கால்சட்டைகள் தரையைக் கூட்டிப்பெருக்க நடந்த காலம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

தணிக்கைத்துறை அரசியல்

நவீனத்துவமும் பாரதியும்