நவம்பர் 04, 2022

நியாயங்கள்

1980 களில் பல கிராமங்களிலும் கல்லூரி வளாகங்களிலும் அரங்கேறிய நாடகம் நியாயங்கள். நான் நடித்த முதல் தெருநாடகம் அதுதான். பத்தாண்டுகளுக்குப் பிறகு இந்த நாடகத்திற்குத் தேவை இருக்காது என்று நினைத்த காலம் உண்டு. ஆனால் அப்போதைய தேவையைவிடக் கூடுதல் தேவையுடையதாக மாறியிருக்கிறது. சாதிய முரண்களை உள்ளடக்கிய தெருநாடகங்களின் முன்னோடி வடிவம் இது. நினைவிலிருந்து அதனை எழுதியுள்ளேன். அரங்கேற்ற நினைப்பவர்கள் மேடையேற்றலாம்.

நடிகர்கள் எட்டிலிருந்து பத்துப்பேர் வரை வட்டமாக நிற்கின்றனர். இடுப்பில் துண்டுகள். உடலிலும் குறுக்காகக் கோடுபோட்டதுபோலத் துணிகள் கட்டி முடிச்சிடப்பட்டுள்ளன.  விதம்விதமாகக் கைகளைத் தட்டிப் பார்வையாளர்களை நோக்கிப்பாடத்தொடங்குகின்றனர்.

பாடல் .

பாரத சமுதாயம் வாழ்கவே  – வாழ்க வாழ்க

பாரதசமுதாயம் வாழ்கவே –ஜயஜயஜய

பாரத சமுதாயம் வாழ்கவே – வாழ்க வாழ்க

பாரத சமுதாயம் வாழ்கவே

 

எல்லோரும் ஓர் குலம் எல்லோரும் ஓரினம்

எல்லோரும் இந்திய மக்கள்  -நாம்

எல்லோரும் இந்திய மக்கள்

எல்லோரும் ஓர் விலை எல்லோரும் ஓர் நிறை

எல்லோரும் இந்நாட்டு மன்னர் – நாம்

எல்லோரும் இந்நாட்டு மன்னர் – நாம்

எல்லோரும் இந்நாட்டு மன்னர்

பாடலின் முடிவில் பல்வேறு நிலைகளில் விழுந்து புரண்டு சிரிக்கின்றனர். சிரிப்பு உச்சத்திலிருந்து குறையும்போது தனியொரு குரல் மட்டும்:

                சட்டத்தின் முன் அனைவரும் சமம்

என்ற குரல் மட்டும் வேதமந்திரம்போல் ஒலிக்கிறது. அது அனைவராலும் உள்வாங்கப்பட்டு உயர்ந்து ஓங்காரமாக ஒலிக்கிறது. அதை அடக்கும் தொனியில் ஒரேயொரு சிரிப்பொலி. அழுகை/ சிரிப்பு/ அழுகை/ சிரிப்பு என மாறிமாறிவர,

ஒருவன்: சட்டத்தின் முன் எல்லோரும் சமமா.. 1968 ல என்ன நடந்துச்சுன்னு தெரியுமா..?

                இன்னொருவன்: என்ன நடந்துச்சு..?

பாடல்.

                அறுபத்தியெட்டில கீழவெண்மணியில் நடந்த அக்கிரமம்

                நாமெ கண்ணுங்காதும் வாயும்பொத்தி இருந்த அக்கிரமம் (2)

பாடல் முடியும்போது ஒருவன் பண்ணையாராகிறான். (தோளில் துண்டு) இருவர் அடியாட்களாகின்றனர் ( தலையில் துண்டுகள் கட்டப்பட்டுள்ளன) மற்றவர்கள் கூலிகள் . கக்கத்தில் துண்டுகள் இடம் மாறுகின்றன

1.        ஐயா, பிள்ளெ குட்டியெல்லாம் பசியால வாடுதுங்கய்யா..

2.        பக்கத்து ஊருலயெல்லாம் கூலியக் கூட்டிக் கொடுக்கிறாங்க.. எஜமான்

பண்ணையார்: அதனாலெ (திரும்பி)

3.        அதனாலெ நீங்களும் கூலியக் கொஞ்சம் கூட்டிக் கொடுத்தீங்கன்னா புண்ணியமா இருக்குமுங்க

பண்ணையார்: கொடுக்கலையின்னா .. (சாந்தமாக)

4, 5 கொடுக்கலையின்னா மண்வெட்டி நிலத்திலெ எறங்காதுங்க

பண்ணையார்: என்னடா நாய்களா.. பார்த்துக்கிட்டு நிக்கிறீங்களே…

கூலிகள் மீது அடியாட்கள் பாய்ந்து அடிக்கின்றனர். கூலிகள் விழுந்து புரள்கின்றனர். உள்ளிருந்து குரல்..

பாடல்.

வெள்ளக்காரங்க ஆண்டபோது அரிசனங்க தான் – இப்போ

டெல்லிக்காரங்க ஆளும்போதும் அரிசனங்க தான்..

கொள்ளக்காரங்க இருக்கும் வரைக்கும் அரிசனங்க தான் – இவங்களெக்

கூண்டோடு ஒழிச்சாத்தான் ஒரு சனங்க நாம்..

கூலிகள் ஊர்வலமாக வருகின்றனர். ஒருவர் சொல்ல மற்றவர்கள் பின் தொடர்கின்றனர்

1 வேண்டும் வேண்டும்     … கூலி உயர்வு வேண்டும்

2 விவசாயிகள் ஒற்றுமை    … ஓங்குக

3 நிலப்பிரபுத்துவம்      … ஒழிக

அடியாட்கள் போலீஸாக மாறுகின்றனர். ஊர்வலத்தைத் தடுத்து நிறுத்தி அடிக்கின்றனர். கூட்டம் விழுந்து சரிகின்றது

பாடல்.

சதையைத் துண்டு துண்டாய் அறுத்தால் எங்கள் உணர்வுகள் மாறுமோ

இதயத்துள்ளே இயங்கும் சக்தி இயங்காமல் நின்று போகுமோ

இந்திய நாட்டின் மக்கள் அனைவரும் பன்றிகள் பெற்ற சேய்களோ – இதை

சிந்தையில் நிறுத்தி ஓரணி சேர்வோம் வாருங்களேன்.. வாருங்களேன்..

பாடல் முடியும்போது,நடிக உடல்கள் சில வீடுகளாக மாறுகின்றனர். சிலர் உள்ளேயும் வெளியேயும் படுத்து உறங்கிக் கொண்டிருக்கின்றனர்

1 என்ன அழகா.. தூங்கலாமா..

2. வெளியில படுக்கலாமின்னா.. மழ வர்ற மாதிரி இருக்கு..

உள்ளே தான் படுக்கணும் போல ( படுக்கிறார்)

மூன்று பேர்  அங்கே வருகிறார்கள். பண்ணையார் உத்தரவிட, அடியாட்கள் மண்ணெண்ணெய் குடுவையைத் திறந்து குடிசைகளின் மீது ஊற்றித் தீவைக்கின்றனர்.பற்றி எரிகிறது. ஓலம். வீடாக இருந்தவர்களும் தூங்கியவர்களும் எரியும் நெருப்பாக மாறிக்காட்சியாக்குகின்றனர். ஓலம். ஒருவர் ஓடிவர, அவரைப் பிடித்து உள்ளே தூக்கிப் போடுகின்றது அடியாட்கள் கூட்டம்.

பாடல்

                கொளுந்துவிட்டு எரிந்த உயிர்கள் சாம்பலாச்சுங்க (2) – அங்கே

வளர்ந்துவந்த பயிர்களுக்கு உரமுமாச்சுங்க (2)

கொள்ளைக்காரக் கூட்டம் நீதிமன்றம் வந்ததுங்க

அங்கே வழங்கப்பட்ட நியாயங்கள்.. நியாயங்கள்

நீதிமன்றக்காட்சியாக மாறுகிறார்கள். நடிகர்கள். விசாரணை நடக்கிறது.

நீதிமன்ற ஊழியர்: நான் சொல்வதெல்லாம் உண்மை. உண்மையைத் தவிர வேறு எதுவுமில்லை

                வாதி: அதைத் திரும்பிச் சொல்கிறார்

அரசு வழக்குரைஞர்: வாதிடுகிறார். ஒலியால் ஆன சொற்கள். உடல் மொழியோடு

                வாதி: கதறி அழுகின்றார்

நீதிபதி   : போகலாம்

ஊழியர்: பிரதிவாதி

பிரதிவாதி: [ஊழியர் தொடங்கும் முன்பே இவரே சொல்கிறார்]

நான் சொல்வதெல்லாம் உண்மை. உண்மையைத் தவிர வேறு எதுவுமில்லை

 அரசு வழக்குரைஞர்: வாதிடுகிறார். ஒலியால் ஆன சொற்கள். உடல் மொழியோடு

பிரதிவாதி: ஒலி ரூபத்தில் பேசுகிறார்.

அரசு வழக்குரைஞர்:  உடல் மொழியால் விளக்கம் கூறி விலகுகிறார்

நீதிபதி: இந்த வழக்கை விசாரித்ததில் குற்றம் சாட்டப்பட்டவர் உயர்ந்த சாதியைச் சேர்ந்தவர்; அவர் இதுபோன்ற கீழ்த்தரமான காரியங்களில் ஈடுபட மாட்டார் என இந்த நீதிமன்றம் கருதுகிறது. எனவே சந்தேகத்தின் பலனைக் குற்றம் சாட்டப்பட்டவருக்கு அளித்து அவரை நிரபராதி என விடுதலை செய்கிறது. இத்துடன் நீதிமன்றம் கலைகிறது.

                                பாடல்

                                இந்தமாதிரி கொடுமைகள்

இங்கு எங்குமே நடக்கிறது – இந்தியாவில்

எங்குமே நடக்கிறது – இந்தியாவில்

என்றுமே நடக்கிறது –இந்தியாவில்

இன்றுமே நடக்கிறது.

1991 ஆகஸ்டு 6 ஆம் நாள் ஆந்திர மாநிலம் சுண்டூர் கிராமம்

பாடல் கேட்கிறது

                                விநாயகனே வினை தீர்ப்பவனே

1.        ஏய் டிக்கெட் கொடுக்கிறாங்கப்பா

2.        ஆமா டிக்கெட் வாங்கியாச்சு

படம் ஆரம்பம். தீண்டாமைக்கு எதிராகப் பேசும் விளம்பரப்படம்.

அதனை ஒருவர் வாசிக்கிறார்

மனிதர்களைத் தீண்டத்தகாதவர்கள் என நினைப்பது குற்றம்.

பிறப்பின் அடிப்படையில் பேதம் பார்ப்பது பெருங்குற்றம்.

பிறப்பின் அடிப்படையில் ஒதுக்குவது தண்டைனைக்குரிய மாபெரும் குற்றம்

படம் தொடங்குகிறது. விசில் அடித்து ரசிக்கிறார்கள். தொடரும் படத்தில் ஒரு காட்சி:

பெண்: நம்மெ காதல் எங்கவீட்டுக்குத் தெரிஞ்சு போச்சு; நீங்க கீழ்சாதியாம் .

எங்கெ அப்பா நம்மெ காதலுக்கு தடையா நிக்கிறாரு

ஆண்: சாதியெல்லாம் ஒரு பிரச்சினையா.. நம்மெ காதலை யாராலும் பிரிக்கமுடியாது

                என் உயிர்போனாலும்சரி உன்னைப் பிரியமாட்டேன். ஊரே தடுத்தாலும் நம் காதல்

                நிறைவேறும்.

பார்வையாளர்களில் ஒருவன்:

                கால் தன்மேல் பட்ட ஆத்திரத்தில் “ஏண்டா பறநாயே என்னையே மிதிக்க வந்தயாடா…”

                 “தெரியாமப் பட்டுடுச்சுங்கய்யா..”

                 “என்னடா தெரியாமப்பட்டுடுச்சு.. உங்களுக்கெல்லாம் திமிரு ஏறிப்போச்சு”

கலவரம்.. அடிதடி. ஒருவர் ஊடே புகுந்து பிரித்துவிடுதல்..

                பஞ்சாயத்து பேசிக்கொள்ளலாம் என்று சொல்ல

                 ‘இவனுங்களுக்கெல்லாம் பஞ்சாயத்து ஒரு கேடா..?

தனித்தனியாகக் கூட்டம்

                 ‘ பண்ணைகள் போலீசிடம் தெரிவித்துவிட்டுத் தயாராகுதல்’

போலீஸ் வந்து சேரி மக்களைப் பார்த்து ஓடும்படி கூறுதல்

                சேரிமக்கள் ஓடத்தயாராதல். சுற்றி வளைத்துக் கொன்று ஆற்றில் போடுதல்

பாடல்:

                                இந்தமாதிரி கொடுமைகள்

இங்கு எங்குமே நடக்கிறது – இந்தியாவில்

எங்குமே நடக்கிறது – இந்தியாவில்

என்றுமே நடக்கிறது –இந்தியாவில்

 

இந்த நிலையிலே நியாயத்தெ இங்கே யார்வந்து கேட்கிறது –இங்கு

யார் வந்து கேட்கிறது –ஐயா யார் வந்து கேட்கிறது

ரவிக்குமார்: அண்ணாமலை நகர் போலீஸ் ஸ்டேஷனில் கற்பழிக்கப்பட்ட

பத்மினி நியாயத்திற்காகப் போராடிக்கொண்டிருக்கிறாள்

சுகுமார்: கோவில்பட்டிக் குறிஞ்சாக்குளத்தில் ஆறுபேர் வெட்டிக்கொல்லப்பட்டார்கள்

                ஊஞ்சனையில்….

                உத்தப்புரத்தில்

                கயர்லாஞ்சியில்

இங்கு எங்குமே நடக்கிறது. இந்தியாவில் எங்குமே நடக்கிறது

பாரத தேசமென்று தோள் கொட்டுவோம் - எங்கள்

பாரத தேசமென்று தோள் கொட்டுவோம் - எங்கள்

 =================================

 பின்குறிப்பு

முதுகலை மாணவனாகப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்த சில மாதங்களுக்குப் பின் அமெரிக்கன் கல்லூரியில் என்னோடு படித்த பரசுராமன் தான் எனக்கு மதுரை நிஜநாடக இயக்கத்தையும் அதனைத் தொடங்கிய மு.ராமசுவாமியையும் அறிமுகம் செய்தார். அதில் ந.முருகேசபாண்டியன் ஒருநடிகராக இருந்தார் என்பது பின்னர் தெரியவந்தது. அந்நாடகக் குழுவில் சேர்ந்து நடிக்கத் தொடங்கியபோது முதலில் நடித்த தெருநாடகம் ‘நியாயங்கள்’. அதில் வரும் குழுவில் ஒருவனாக நடித்துப் பின்னர் பண்ணியாராகவும் நீதிபதியாகவும் நடித்துள்ளேன்.  1981 முதல் 1989 வரை நியாயங்கள் நாடகத்தில் பல பத்துமுறை அரங்கேறியுள்ளேன். அங்கிருந்து புதுவைக்குப்போனபின்பு ஆரம்பிக்கப்பட்ட கூட்டுக்குரல் நாடகக்குழுவில் ‘நியாயங்கள்’ என்ற தலைப்பை ‘ வெண்மணி முதல் சுண்டூர் வரை’ என மாற்றினோம். ஒருமுறை கம்பன் கலையரங்கின் வெளிப்புற தரையில் அந்நாடகத்தைப் பார்த்த தலைவர் தொல். திருமாவளவன், முடிந்தபின் கட்டியணைத்துக்கொண்டார்.