மண்ணின் மைந்தர்களும் .........

இந்திய சமூகம் விடுதலைக்குப் பிந்திய காலகட்டத்து மனிதர்களால் நிரம்பிக் கொண்டிருக்கிறது. இந்திய மக்கள் தொகையில் ஆறில் ஐந்து பங்குப் பேர் 1947 க்குப் பின் பிறந்தவர்களாக இருக்கிறார்கள் எனக் கணக்கெடுப்பு சொல்கிறது. இன்று எழுபத்தைந்து வயதைத் தாண்டிய சிலருக்குக் காலனிய ஆட்சிக்கெதிராக நடந்த போராட்டங்களின் நிழல் படிந்த ஞாபகங்கள் நினைவில் இருக்கலாம். ஆனால் 2000 க்குப் பிந்திய இந்திய சமூகம் என்பது முற்றிலும் வேறானதாக இருக்கிறது.
கல்லூரியில் படிக்கும் மாணாக்கர்களிடம் வந்தே மாதரம் என்ற சொல் பற்றிக் கேட்டால் ஏ.ஆர். ரகுமானின் ஆல்பத்தின் பெயர் என்பது மட்டும் தான் தெரியும். இந்தத்தலைமுறை எந்தப் பொருள் குறித்தும் அதன் மூலத்திற்குள் சென்று தேடுவதில்லை என்று வருத்தப் படுவதைத் தவிர வேறு வழியில்லை. இந்தியாவை ஆட்சி செய்து கொண்டிருந்த பிரிட்டிஷ் ராணியாரை நீடுழி வாழ்க என வாழ்த்துவதற்காக எழுதப் பட்ட அந்தப் பாடல் சுதந்திரப் போராட்ட காலத்தில் சூழலால் அர்த்தம் மாறியது என்பதை இந்தத் தலைமுறை நினைத்துப் பார்க்கப் போவதில்லை. பங்கிம் சந்திர சாட்டர்ஜியின் ஆனந்த மடம் எனும் வங்கமொழி நாவலிலிருந்து தமிழுக்கு மொழி மாற்றம் செய்த போது, “வந்தே மாதரம் என்போம்;மா நிலத்தாயை வணங்குதும் என்போம்” என்று எழுதி, அந்த வரிகளுக்குள் தேசப்பற்று என்னும் உணர்ச்சியைப் பிடித்துத் திணித்தான் பாரதி. மாணவர்கள் அவற்றைத் தேடிப் படிக்கப் போவதில்லை. இப்போதைய தேவைக்கான தகவல்களை மட்டும் தரக்கூடிய கல்வியாக உயர்கல்வி மாறிக் கொண்டிருக்கும் ஆபத்து உணரப் படவேண்டும்.

அறுபது ஆண்டுகளுக்கு முன்பு பிரிட்டானியர்கள் வெளியேறி யிருக்கலாம்; ஆட்சியதிகாரம் இந்தியர்களின் கைகளுக்கு மாறியிருக்கலாம். ஆனால் அவர்கள் இந்தியாவில் இருந்த போது இந்திய சமூகத்தை என்னவாக மாற்ற நினைத்தார்களோ அதன் சாயல் எல்லா தளங்களிலும் படிந்து கிடக்கிறது. காரணம் ஐரோப்பியர்களின் மொழி இங்கு கல்விப்புல மொழியாகவும், தொடர்பு மொழியாகவும் இருந்து கொண்டிருக்கிறது. ஐரோப்பியர்கள் வெளியேறிய பின்னும் ஐரோப்பிய அறிவு இங்கு தங்கியிருந்தது; தங்கியிருக்கிறது. அதனை முற்றிலும் விலக்கி விட வேண்டும் என்ற வேட்கை பலரால் முன் வைக்கப்படுகிறது. என்றாலும் இந்திய வெகுமக்களிடம் அவை முழுமையான செல்வாக்கைப் பெற்றுவிட வில்லை என்பதும் உண்மை. இந்தியப் பண்பாட்டின் பெருமையும் தமிழ்ப் பண்பாட்டின் பாரம்பரியமும் ஆரவாரமான கூச்சல்களாக ஒலித்துக் கொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில் ஐரோப்பியர்களின் பண்பாடு விரும்பத் தக்க பண்பாடு என்று கருதுபவர்கள் வெளியில் அதிகம் பேசிக் கொள்ளாமல் நடைமுறை வாழ்க்கையில் பின்பற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்தியப் பாரம்பரிய அறிவைப் பெற்றுக் கொள்ளும் விதமாக நமது கல்வி நிறுவனங்களை மாற்றி விட்டு ஐரோப்பியக் கல்வி முறையையும், ஐரோப்பிய அறிவையும் வெளியேற்றி விடலாமா? ஐரோப்பிய மனநிலை நீங்கி விட்டால் உண்டாக்கப்படும் இந்திய மனநிலையில் இருப்பதெல்லாம் ஏற்றுக் கொள்ளத் தக்க மன நிலை தானா? பல்வேறு தளங்களில் விவாதிக்கப்பட வேண்டிய கேள்வி இது. ஆங்கிலேயர்களை வெளியேறச் சொன்ன போது உண்டாக்கப் பட்ட உணர்வு தான் தாய் மண்ணை வணங்குதல் என்பது. ஆனால் இன்று எது தாய் மண் என்று கேள்வி தான் விதம் விதமாக கேட்கப் படுகிறது.

இந்தியா என்ற தேசத்தின் மண்ணா? தமிழ்நாடு அல்லது கேரளம் அல்லது கர்நாடகம் என்ற மாநிலத்தின் தாய்மண்ணா? தேசிய வாதத்திற்கு எதிராக மாநிலவாதம் பேசிய கட்சிகள் உருவாக்கும் மண்ணின் மைந்தர்கள் என்ற கருத்துப் படிமம் நன்மையா? தீமையா? உலக அளவில் அந்நிய ஏகாதிபத்தியங்களின் அதிகாரமுறையும், பன்னாட்டுக் கம்பெனிகளும் இங்கே வருகின்ற போது உச்சரிக்கப்படும் மண்ணின் மைந்தர்கள் என்ற சொல்லாட்சியும், முல்லைப் பெரியாறு நீரைத் தமிழ் நாட்டிற்குத் தரக்கூடாது எனச் சொல்லும்போது உச்சரிக்கப்படும் மண்ணின் மைந்தர்கள் என்ற சொல்லாட்சியும் ஒரே பொருள் உடையதுதானா?

இந்த சொல்லாட்சிகள் இலக்கியம், பண்பாடு போன்ற தளங்களிலும் இன்று விரிவாக விவாதிக்கப் படுகின்றன. உலகம் தழுவிய இலக்கிய வகைகளையும், பொது மனிதர்களையும் எழுதுவதை விட்டுவிட்டு ஒவ்வொரு வட்டாரத்தையும் முக்கியப்படுத்தும் வட்டார எழுத்து முறையும், விளிம்பு நிலை மனிதர்களும் இலக்கியங்களிலும் கலைகளிலும் பதிவு பெற வேண்டும் என வலியுறுத்தப் படுகின்றது. இந்த வலியுறுத்தல் ஆதரிக்கப்பட வேண்டியது எனச் சொல்லும் அதே நேரத்தில் எதிர்முனையில் இத்தகைய படைப்பாளிகளும் பண்பாட்டுச் செயலாளிகளும் வட்டார வாதத்திற்குள் மெல்ல மெல்லப் போய்ச் சேர்ந்துவிடும் ஆபத்து இருக்கிறது என்பதையும் சுட்டிக் காட்ட வேண்டியுள்ளது.

இந்தியா என்ற பெரும்பரப்பிற்குள் மாநில வாதம் தலைதூக்குவது போலவே ஒரு மாநில எல்லைக்குள் வட்டாரவாதம் தலைதூக்கும் ஆபத்து இல்லை என்று சொல்ல முடியாது. தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பணியாற்றும் ஓர் அரசுக் கல்லூரி ஆசிரியரின் பணி அனுபவமும் வாழ்க்கை அனுபவங்களும் தான் இதற்கு சரியான உரைகல்லாக அமையும். தென் தமிழ்நாட்டு மக்கள் மதுரைக்கு வடக்கிலிருந்து வந்து தங்கள் ஊரில் இருக்கும் ஒரு அதிகாரியை அந்நியர்களாகக் கருதும் படி தூண்டப்படுகிறது. கொங்கு நாட்டிற்குரிய வட்டார மொழியோடு தஞ்சாவூரில் பணியாற்றும் மனிதர்கள் கேலிக்குரியவர்களாக ஆகி விடுகிறார்கள்.

இந்தப் பின்னணியில் தான் இன்று வட்டாரக் கட்சிகள் தோன்றுகின்றன என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். இந்தக் கட்சிகள் தோற்றத்தில் வட்டாரக் கட்சிகள் போல இருந்தாலும் அவை உண்மையில் சாதிக் கட்சிகள் தான். ஒவ்வொரு வட்டாரத்திலும் பெரும்பான்மையாக இருக்கும் சாதிகள் ஆரம்பிக்கப் போகும் இத்தகைய வட்டாரக் கட்சிகள் தமிழ்நாடு என்ற எல்லைக்குள்ளேயே பல நாடுகளை உருவாக்கும் ஆபத்தைச் செய்யும் என்பது எதிர்கால வரலாறாக இருக்கப் போகிறது.

வட்டார மொழியில் எழுதப் பட்ட இலக்கியம் வட்டாரத்தில் உழைத்து ஓடாகிப் போன மனிதனின் குரலைப் பதிவு செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு வெளி வந்தன. ஆனால் அந்நோக்கம் ஆதிக்கத்தின் குறியீடாக ஆகிக் கொண்டிருக்கிறது. புதுமைப் பித்தனின் கதாபாத்திரங்கள் பேசிய திருநெல்வேலித் தமிழ் அங்குள்ள ஆதிக்க சாதியின் குரலாக ஆகும் என்றால் அதனை நன்மை எனச் சொல்வதா? தீமையெனத் தள்ளுவதா?

கவி பழமலய்யின் சனங்களின் கதை விழுப்புரம் பகுதியில் வாழும் அப்பாவிக் கிராமத்து உழைப்பாளிகளின் குரல் என்று அறியப்பட்ட நிலையிலிருந்து மாறி பெரும்பான்மையாக இருக்கும் வன்னியர்களின் குரல் என்பதாக அறியப்படும் வாய்ப்பே உள்ளது என்றால் அந்தக் கவிதைகள் ஏற்கத் தக்க கவிதைகளா? ஆபத்தான ஆயுதங்கள் எனச் சொல்ல வேண்டிய எழுத்துக்களா? இப்படியே கரிசல் காட்டுக் கி.ராஜநாராயணன்,பா.செயப்பிரகாசம், கொங்குவட்டார சண்முகசுந்தரம், சி.ஆர். ரவீந்திரன் எனப் பலரது எழுத்துக்களையும் கேட்டுக் கொண்டே போகலாம்.

மண்ணின் மைந்தர்கள் என்ற குரல் இப்போது இலக்கியத்திலிருந்து நகர்ந்து திரைப்படங்களிலும் வலியுறுத்தப்படுகின்றன. மண்வாசனை அடையாளம் தான் சரியான கலை இலக்கியத்தின் அடையாளம் என்று நம்பப் படுகிறது. ஆனால் மண்ணின் மைந்தர்கள் என்ற கோஷமும், பரப்புவாதமும் ஒவ்வொரு வட்டாரத்திலும் ஆதிக்க சாதிகளாக இருக்கும்- பெரும்பான்மை சாதிகளின் கோஷம் என்ற இன்னொரு பக்கத்தையும் கொண்டதாகவே இருக்கிறது என்பதையும் நாம் உணர்ந்தே ஆக வேண்டும்.

Nalini Shankar

நாம் எந்த மண்ணின் மைந்தர்கள் என்கிற குழப்பம் இருப்பது உண்மைதான். ஆனால் வட்டார பண்பாடுகளை பதிவு செய்யும் எழுத்து இலக்கியவாதிகளையும் பண்பாட்டுச் செயலாளிகளையும் வட்டாரவாதத்திற்கு நம்மை கொண்டு சென்று விடும் என்கிற அச்சம் அவசியமற்றதாகவே கருதுகிறேன்.

கவிஞர் பழமலய் தொடர்ந்து சாதிய கூட்டங்களில் பங்கெடுத்தவர். தன்னை வெளிப்படையான சாதிய ஆதரவாளராக காட்டிக்கொண்டவர். வட்டார வழக்கு என்பது எந்த ஒரு குறிப்பிட்ட சாதிக்கு மட்டும் சொந்தமானதும் அல்ல. பழமலயின் கவிதைகளில் வரும் படையாட்சி மாவட்ட வட்டார வழக்கு வன்னியர்களுக்கு மட்டுமேயான மொழி அல்ல. அங்கு வாழும் இதர பிறிவினர்களின் மொழியும் அதை வட்டார மொழிதான். பழமலயின் வன்னிய சாதி உறவு நமக்கு இப்படி ஒரு தோற்றத்தை ஏற்படுத்தலாம். குறிப்பாக, பழமலயையும், கி.ரா பொன்ற வட்டார மொழி அடிப்படையில் இயங்கியவர்களையும் ஒரே பட்டியலில் வைப்பது போன்றதொரு தொனியை உங்களின் இந்தப் பதிவு ஏற்படுத்துகின்றது என்பதை நினைவு படுத்த விரும்புகின்றேன்.

நான் புதிதாக எதையும் உங்களுக்கு சொல்லிவிடப்போவதில்லை. வட்டார வழக்கு அடிப்படையில் பிரிவினைவாதம் வரும் என்றால் அது தமிழ் மொழிக்கு மட்டுமேயான பிரச்சனை மட்டுமா? வட்டார வழக்கு என்பது எல்லா மொழிகளுக்கும் உரியதுதானே?

வட்டார வழக்கங்களில் நாம் ஏற்கனவே பலவற்றை இழந்து, ஒரே மாதிரியான பொது அடையாளத்தை நோக்கிச் மெதுவாக நகர்ந்து கொண்டிருப்பதை பெரும் ஆபத்தானதாக நான் கருதி வரும் இவ்வேளையில் தங்களின் இப்பதிவு எனக்கு மிகுந்த குழப்பத்தை தருகின்றது. தமிழ்நாடு முழுவதற்கும் ஒரே மாதிரியான மீன் குழம்பையும், கோழி குழம்பையும் என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியாது.

பிரிவினைவாதம் மக்களின் மனதிலிருந்து துளிர்ப்பதேயன்றி வழக்கங்களிலிருந்து அல்ல. ஆகவே ராஜநாராயணனின் கரிசல் வட்டாரச் சொல் அகராதி, பெருமாள் முருகனின் கொங்கு வட்டாரச் சொல் அகராதி மற்றும் கண்மனி குணசேகரனின் நடுநாட்டுச் சொல்லகராதி என இவைகளை தொடர்ந்து இன்னும் இதர வட்டாரங்களுக்கான சொல் அகராதிகளும் தொகுக்கப்படவேண்டும். இந்த பதிவுகள் நிச்சயம் தமழ்நாட்டு வரைபடத்தை கூறுபோட்டுவிடாது. இன்னும் சொல்லப்போனால் தமிழ்நாடு கூறுபோடப்படுவதை விட இந்த வட்டார வழக்குகள் அழிந்துபோய் கொண்டிருப்பதை வேடிக்கை பார்ப்பதை தான் ஆபத்தானது என கருதுகிறேன்.

அ. ராமசாமி

ஒரு மொழி தொடர்ந்து வாழும் மொழியாக இருக்க வேண்டும் என்றால் பல்வேறு வட்டார மொழிகளை உற்பத்தி செய்யும் இயல்போடு இருந்தால் சாத்தியம். தமிழ் அப்படி இருக்கிறது. அதே நேரத்தில் அதில் இயங்கும் இலக்கியவாதிகள் அதன் நேர்மறைக்கூறுகளைத் தவறவிட்டுவிட்டு எதிர்மறை அம்சங்களுக்குள் சென்று விடும் ஆபத்தும் இருக்கிறது என்பதைச் சொல்லி எச்சரிக்கவே இதை எழுதினேன். பழமலய் ஒரு உதாரணம் தான். இன்னும் சில பழமலய்கள் உருவாகி விடக்கூடாது என்ற பயத்தில் தோன்றிய நிலைப்பாடு இது

Nalini Shankar

பழமலய் என்னுடைய ஆசிரியர் என்கிற முறையிலும் சொல்கிறேன். நிச்சயம் இன்னொரு பழமலய் உருவாகி விடக்கூடாது. உங்கள் பயத்தை புரிந்துகொள்கிறேன் 

Mani Jayaprakashvel

சாதியப்பெருமிதம் அல்லது இன்னும் கொஞ்சம் மேலாக சாதிய அபிமானம் இவையெல்லாம் சாதி வெறியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் ஆபத்தான சூழ்நிலையில் வாழ்கிறோம். சமூக நீதி என்று சொல்லிக் கொண்டு தன் சமூகத்துக்கான நீதியை எழுதிக்கொண்டிருக்கும் ராமதாஸ் போன்ற அரசியல்வியாதிகள் திட்டமிட்ட நடவடிக்கைகள் மூலம் தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிரான பொதுவெறியை எல்லா சாதியினரிடமும் ஊட்டி வருவதும், அவர்களுக்கு எதிரான வெறியாட்டங்களை உள்ளூர மற்ற சாதியினர் கொண்டாடுகிற சூழலில், ராமதாஸ் போன்ற அரசியல் வியாதிகள் ஒதுக்கப்பட வேண்டியதும் அவர்களுக்கு எதிரான பொது மனநிலை உண்டாக்குவதும் இந்த காலத்தின் தேவையாக உள்ளது. இலக்கியத்தில் சாதிய பெருமிதங்களை பதிவு செய்யும் படைப்பாளிகளை இந்த சாதிய கட்சி அரசியலுக்கு கருவி போல சொல்லும் அ. ராமசாமியின் கருத்து மடைமாற்றுவது போல உள்ளது. திரைப்படங்களில் சாதிய அபிமானம் மிகுந்த வலிமையோடு திட்டமிட்டு திணிக்கப்படுகிறது. இதை நானும் மிக ஆபத்தான ஒன்றாக கருதி கடுமையாக எதிர்க்கிறேன். ஆனால் வட்டாரைலக்கிய படைப்பாளிகள் சாதிய அடையாளம் கொண்டிருந்தாலும் அது அதிகம் ஆபத்தானது அல்ல. அதைவிடவும் ஆபத்தானவர்கள் ராமதாஸ் போன்ற அரசியல் வியாதிகள் மற்றும் சீமான் ஹரி போன்ற திரைப்பட படைப்பாளிகள் தான்.

அ. ராமசாமி

Mani Jayaprakashvel என்னுடைய கருத்து மடைமாற்றுவது போலத் தோன்றினால் எங்கோ சிக்கல் இருக்கிறது என்று அர்த்தம். அந்தச் சிக்கல் என்னுடைய எழுத்து முறையிலும் இருக்கலாம்; உங்கள் வாசிப்பிலும் இருக்கலாம்.சாதியப் பெருமிதங்களைப் பேசத் தூண்டும் தரவுகள் வட்டார இலக்கியம் என்னும் வகைப்பாட்டிற்குள்ளும், நாட்டார் வழக்காற்றியல் ஆய்வுகள் என்னும் கல்வித்துறைச் செயல்பாட்டிற்குள்ளும் இருக்கிறதோ என்ற ஐயம் எனக்கு நீண்ட நாட்களாக இருக்கிறது

Mani Jayaprakashvel

வட்டார இலக்கியங்கள் நாட்டுப்புறவியல் ஆய்வுகள் இவற்றையெல்லாம் சாதி என்ற கண்ணி இல்லாமல் தொடவே முடியாது. உங்களுக்கும் தெரிந்துதான் இருக்கும். என் ஊரின் கதையை ஒரு ஆவணமாக்க எண்ணிய என் முயற்சியில் அனுபவ ரீதியாகவும் இதை அறிந்தேன். இது நமது சமூக அமைப்பின் குறைதான் மறுப்பதற்கில்லை. ஆனால் மேலுள்ள பணியில் ஈடுபடுபவர்கள் சாதிய அடையாளம் செய்யாமல் இயங்க முடியது. என் ஊரின் பெரும்பான்மையான ஆதிக்க சாதியில் பிறந்த எனக்கு எல்லா சாதியினரிடமும் பேசுவதில் எந்த தடையும் இல்லை (இந்த அடையாளம் இல்லாமல் போனாலும் என் தந்தையின் தனிப்பட்ட குணத்துக்காக எனக்கு எல்லா சாதியிடமும் கண்டிப்பாக அந்த அனுசரனை கிடைத்திருக்கும் என்பது தனி). ஆனால் இதையே என் ஊரில் உள்ள ஒரு தாழ்த்தப்பட்ட தோழர் செய்திருந்தால் எனக்கு கிடைத்த அனுசரனை அவருக்கு கிடைத்திருக்காது. அ. கா பெருமாளின் ஆய்வு நூல்களையும் படித்திருப்பீர்கள். சாதி இல்லாமல் இந்த வேலைகளை செய்ய முடியாது. முருகன் என்ற மொட்டையான பெயருக்காக பெருமால் முருகனுக்கு ஒரு வெள்ளாள கவுண்டர் வீட்டில் தண்ணீர் கொடுக்க வில்லை என்பதையும் நீங்கள் அறிந்திருப்பீர்கள். பழமலையின் சாதிய அடையாளம் அவருக்கு செய்ததை விடவும் அந்த வட்டார வழக்கு இலக்கியத்து நிறைய செய்திருக்கிரது என்பதால் அதை ஒரு குறையாக கருத வேண்டியதில்லை. மேலாக உண்மையான பிரச்சனை எங்கிருக்கிறது என்பதும் உங்களுக்கு தெரியாததல்ல. இலக்கியம் என்ற வரையறைக்குல் நின்று கொண்டு நீங்கள் பேசுவது இன்னமும் எனக்கு மடைமாற்றும் செயகத்தான் படுகிறது. விருப்பமிருப்பின் விவாதிப்போம்.

அ. ராமசாமி

இலக்கியம் என்ற வரையறைக்குள் நின்று கொண்டு பேசுகிறேனா? வெகுமக்கள் தளத்தில் அரசியல் பேச்சாக மாறியுள்ள ஒன்றின் மூலம் எங்கெல்லாம் இருந்திருக்கலாம் என்று தேடுகிறேன் என்றல்லவா நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன். வட்டார வழக்கும் வட்டார இலக்கியமும் குறையுடையன என்ற நிலைபாட்டிற்குள் இன்னும் நான் நுழையவில்லை. அப்படியொரு நிலைபாட்டை எடுக்கும்படி தூண்டிவிடுமோ என்ற அச்சமும் இருக்கிறது.

Mani Jayaprakashvel

நீங்கள் வட்டார இலக்கியங்களை குறைத்து மதிப்பிடுவதாக நான் சொல்ல முனையவில்லை. இன்றைய பிரச்சனைகளின் தொடக்க கண்ணி ராமதாஸ் போன்ற அரசியல்வியாதிகள்தான். இதில் இலக்கியம் அல்லது உங்கள் பட்டியலில் இருக்கும் இலக்கியவாதிகள் பொருட்படுத்தும் படியான பொதுவிளைவுகளை ஏற்படுத்தியவர்கள் அல்ல. அப்படியான விளைவுகளை ஏற்படுத்தியவர்கள் பாரதிராஜா, கமல்ஹாசன் முதலான திரைப்பட படைப்பாளிகளே. இந்த வரிசை மிகப்பெரியது. உங்கள் கணிப்பு பிழையானது இல்லை என்றால் நான் சொன்னதுதான் உண்மை.

அ. ராமசாமி

நம் காலத்தில் நம் கன்னத்தில் அறைவனவாக இருப்பது என்னவோ ராமதாஸ் போன்ற அரசியல்வாதிகள் தான்.அரசியல் தான் பொதுத்தளத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் ஒன்றாக இருக்கிறது. ஆனால் இத்தகைய அரசியலுக்கான மூல வேர்கள் அரசியல் களத்திலிருந்து மட்டுமே உருவாகி இருக்க வேண்டும் என்பதில்லை. அத்தகைய மூல வேர்களை உருவாக்கித் தருவதில் கலை இலக்கியங்களுக்கு முக்கியமான பங்கு இருப்பதாக ஓர் இலக்கியமாணவன் என்ற நிலையில் நம்புகிறேன். கலை இலக்கியங்கள் எல்லா நேரங்களிலும் நேர்மறையான கருத்துகளை மட்டுமே உருவாக்கும் என்றில்லை. அதன் போக்கில் எதிர்மறைக் கருத்துகளை அறியாமலேயே உருவாக்கிவிடும் வாய்ப்புகளும் உண்டு. பாரதிராஜாவின் வரவும் அவர் சென்றடைந்துள்ள இடங்களையும் கவனித்துப் பாருங்கள். வேதம் புதிதுவில் அவர் சொன்னதென்ன? முதல் மரியாதையில் முன்னிறுத்திய பாத்திரம் என்ன? அதே காலகட்டத்தில் பசும்பொன்னிலும் கிழக்குச் சீமையிலேயும் சித்திரித்துக் காட்டிய உலகங்கள் எப்படிப்பட்டவை என்பதையும் பார்க்க வேண்டும்

Mani Jayaprakashvel

இலக்கியங்களை இவர்கள் ஒரு ஊறுகாய் போல பயண்படுத்துகிறார்கள். சாமான்யவெளியில் லியோனி வைரமுத்து நாஞ்சில் சம்பத் வைகோ கருணாநிதி போன்றவர்கள் தான் இலக்கியவாதிகள். ஆக, பழமலை போன்றவர்கள் அப்படியான கருவியாக மூல வேராக இருக்க முடியாது. இதில் சினிமா என்ற கலை முக்கிய கருவி என்பதை நானும் என் முதல் பதிவில் ஒப்புக்கொண்டு எடுத்துக்காட்டியுள்ளேன். பாரதிராஜாவில் இருந்து இது ஆரம்பிக்கிறது என்று நான் அழுத்திக்கூறியுள்ளேன். அதில் உங்களோடு மாற்றுக்கருத்து இல்லை. இலக்கியம் என்ற உங்கள் மூலப்பதிவையே நான் திசைதிருப்பல் என்கிறேன்.

அ. ராமசாமி

தமிழில் வட்டார இலக்கியங்கள் படைத்த இலக்கியவாதிகள் இந்த நோக்கத்தில் தான் எழுதுகிறார்கள் எனச் சொல்ல வரவில்லை. தங்கள் வட்டாரத்தை நுட்பமாகப் பதிவு செய்தல் என்ற படைப்பு நுட்பத்தைக் கைக்கொள்ளும் போது அனுபவத்தை எழுதுதல், கவனித்ததை எழுதுதல், சுற்றியுள்ளதை எழுதுதல், கடந்த காலத்தை எழுதுதல் போன்றன சிறந்த எழுத்துக்கூறுகளாகக் கருதப்படுகின்றன. ஆனால் இந்தக் கூறுகள் எல்லாமே ஒரு எழுத்தாளனை தனது ஊர், தனது குடும்பம், தனது சாதி, தனது உறவினர், தனது அனுபவம் என்பதற்குள் நிறுத்தி விடும் ஆபத்துக் கொண்டன என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். இதற்குப் பதிலாகத் தன்னை, தனது அனுபவத்தை, தனது வரலாற்றை, தனது உறவுகளை, தனது ஊரை,தனது சாதியை தனதுகளிலிருந்து விலக்கி வைத்து பொதுநிலையில் வைத்து - நம் காலத்தின் முரண்களில் வைத்து எழுதும் நுட்பத்திற்கு நகர வேண்டும் என நினைக்கிறேன். அதற்கும் நமது படைப்பாளிகள் வட்டார மொழியைப் பயன்படுத்தலாம். அப்படிப் பயன்படுத்தினாலும் அவை வட்டார இலக்கியமாக இருக்காது. அங்கிருந்து பொது இலக்கியத்தின் எல்லைக்குள் நுழைந்து உலக இலக்கியமாக மாறிவிடும். அதை நோக்கிய பயணத்தில் நமது படைப்பாளிகள் இல்லை என்று கவனப்படுத்தவே எனது ஐயங்களைச் சொல்லிக் கொண்டிருக்கிறேன்

Mani Jayaprakashvel

தலித் இலக்கியம் என்று தனியெ ஒன்றை வகைமைப்படுத்தி வருகிறார்கள். உழைக்கும் மக்களுக்கான பொது இலக்கியத்தினை உழைக்கும் வர்க்கம் தான் எழுதமுடியும். ஒடுக்கப்பட்டவர்களின் குரலை அவர்கள் தான் உயர்த்த முடியும் என்றும் சொல்லப்படுகிறது. அதை நான் ஆதரிக்கிறேன். பழமலையின் எழுத்தை உழைக்கும் மக்களின் எழுத்து என்று சொன்னால் அது உங்களின் பிழையான கணிப்பே. ஆக உங்களின் அச்சமும் அதையொட்டிய உங்களின் முடிபும் அர்த்தமற்றது. உங்கள் கணிப்பு பிழை இல்லை என்றால் நோக்கம் பிழை.

அ. ராமசாமி

. என்னுடையவை கணிப்புகள் அல்ல; பின்னோக்கிப் பார்த்ததால் உண்டாகும் ஐயங்கள். எனது அச்சமும் ஐயங்களும் நிகழாமல் போக வேண்டும் என்றே நான் விரும்புகிறேன்நான். கண் முன் நடப்பன கவலை அளிப்பனவாக உள்ளன என்பதையும் சொல்ல விரும்புகிறேன். பழமலய்யின் படைப்புப் போக்கை நன்கு அறிவேன். தொடங்கிய புள்ளியிலிருந்து முன்னோக்கிப் போய்விட்டுச் சடாரென்று பின்னோக்கிப் பயணித்தவர், பாரதிராஜாவைப் போல. நிகழ்கால அரசியல் படைப்பாளிகளைக் கபளிகரம் செய்யும் வல்லமையோடு இருக்கின்றது.

Janaa Violin Sri Swaralaya

உழைக்கும் வர்க்கம் உழைதுக்கொன்டே இருக்கிறது , சுரண்டிப் பிழைக்கும் வர்க்கம் சுரண்டிக்கொண்டே இருக்கிறது , ராஜா , ராணி , போன்றவர்களின் வரலாறு உள்ள அளவிற்கு உழைப்பவர்களின் வரலாறு படைக்கப்பெரவில்லை இன்னும் , கலை இலக்கியம் படைப்பவர்கள் ஆட்சியில் இருப்பவர்கள் அல்லது பெருவாரியான மக்கள் சக்திக்கு பயந்து அவர்களுக்கு தகுந்தார் போல் இலக்கியத்தைப் படைத்தது விடுகின்றனர்

இதனால் உழைப்பவன் , தீட்டுப்பட்டவனின் உண்மை நிலவரம் மறைக்கப்பட்டு போகிறது , அவர்களின் சந்ததியினருக்கு அவர்கள் யார் என்று அறிந்துகொள்ள முடியாமல் போகிறது ... ஆகவே ஒவ்வொரு மனிதனும் தன் சுய சரிதத்தை தானே தன் சொந்த வட்டார மொழி வழக்கில் எழுத வேண்டும். மனிதன் மனிதனாய் வாழ பழகிக்கொள்ள வேண்டும் .... அதுவே பிற்காலத்தின் சிறந்த இலக்கியமாக மலரும்


Ramasamy Alagarsamy

அய்யா தங்களின் இந்த கட்டுரையும் , தங்கள் நண்பர்களுடனான இந்த உரையாடலும் பாராட்டுக்குரியது .. பாராட்டுக்கள்

பத்ம. சிவ அசோகன்

எல்லாப் பிரிவினைக்கும் உலக தேசியம் ஒன்றே தீர்வு

பத்ம. சிவ அசோகன்

அமரிக்கர் ஆங்கிலேயரை வெளியேற்றினர். ஆனால் பிரிட்டிஷாரின் ஆங்கிலத்தை ஏற்கவில்லை. சாலையில் இடப்பக்கம் செல்வது உட்படப் பல வாழ்க்கை நடைமுறைகளை மாற்றிக் கொண்டனர். சட்டங்களை மாற்றிக் கொண்டனர். இந்தியர் ஆங்கிலேயரின் நகலாக இருக்கவே விரும்புகின்றனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்