வரலாற்றுவாதத்தின் சிக்கல்கள்

மக்கள் உரிமைகளையும் விடுதலையையும் முன்னெடுக்க நினைக்கும் சமுதாய இயக்கங்களும் அரசியல் இயக்கங்களும் வரலாறு படைப்பது பற்றிய அக்கறைகளை விட வரலாற்றைப் பயன்படுத்துவது பற்றியே அதிகம் சிந்திக்கின்றன. கடந்த காலம் தரும் படிப்பினைகள் நிகழ்காலத்தைப் புரிந்து கொள்ளவும் எதிர் காலத்தை வடிவமைக்கவும் உதவும் என்பது ஒரு பொதுவான நம்பிக்கை. தனிநபர் சார்ந்து பல நேரங்களில் இந்த நம்பிக்கை உண்மையாகக் கூட இருக்கலாம். ஆனால் திரள் மக்கள் இயக்கங்கள் முன் வைக்கும் போராட்டங்களுக்கும் விடுதலைக்கும் அது அப்படியே பொருந்தக் கூடியதுதானா? என்பது தீவிரமாகச் சிந்திக்க வேண்டிய ஒன்று.
தலித் மற்றும் போராட்டங்கள் பற்றிய சொல்லாடல்களுக்குள் அடிபடும் பௌத்தம், பூர்வபௌத்தம் போன்றனவும், அதை முன் மொழிந்து பேசிய அயோத்தி தாசரின் சிந்தனைகளைக் கற்றல் மற்றும் பின்பற்றுதல் போன்றனவும் ஒரு விதத்தில் வரலாற்றுவாதம்தான். பல நேரங்களில் மக்களைத் திரட்டுவதற்கும் திரட்டப்பட்ட கூட்டத்திற்கு அடையாளம் ஒன்றை உருவாக்குவதற்கும் வரலாற்றுவாதம் பயன்பட்டிருக்கிறது என்பது மறுத்து விடக்கூடிய ஒன்றல்ல. ஆனால் அக்கூட்டம் உணர்வு ரீதியாக மட்டுமே திரட்டப்படும் கூட்டம் என்பதையும் நாம் மறந்து விட முடியாது.

நமது காலம் பழைய நம்பிக்கைகளைக் கைவிட்டு நகர்ந்துவிட்ட காலம். சகமனிதனை மதித்தல், காலம், வெளி, மொழி, இனம், சாதி, மதம், பால், நிறம், வர்க்கம் என மக்களைக் கூறு கட்டுவதற்குப் பயன்படும் சொற்களின் மீது விசாரணைகளை எழுப்பி அவற்றிற்கிடையே நிலவும் வேறுபாடுகளின் இடை வெளியைக் குறைத்தல், அதிகாரம் செலுத்துவதற்காக உருவாக்கப்பட்ட நிறுவனங்களைக் கேள்விக்குள்ளாக்குதல், தனிநபர்களைப் புனிதர்களாகக் காட்டுவதை எதிர்த்தல் என்பதாகச் செயல்படும் ஜனநாயகக் கருத்தியல் மீது நம்பிக்கை கொள்ள வேண்டிய காலகட்டத்தில் வாழ்கிறோம்

இக்கருத்தியல் தனி மனிதனுக்குள்ளும் மக்கள் திரளுக்குள்ளும் போய் வினையாற்ற உடனடித் தேவை புத்திபூர்வமான அணிதிரட்டல் தானே தவிர உணர்வு பூர்வமான அணிதிரட்டல் அல்ல. இவ்வாறு திரட்டப்படும் அணிகள் விவாதிக்க மேடைகளை உருவாக்குவதில்லை; விவாதிக்க தக்க மனநிலையையும் உருவாக்குவதில்லை. தனக்காகச் சிந்திக்கும் வேலையைத் தலைமையிடம் தந்து விட்டு தொண்டனாக இருப்பதில் மட்டுமே மகிழ்ச்சி அடையக் கூடியன. தலைமையிடமிருந்து வலிமையான ஆயுதங்களைத் தொடர்ந்து எதிர்பார்த்து நிற்கும் அக்கூட்டம் தலைமை இட்ட பணிகளைப் பொறுப்புடன் செய்வதைக் கடமையாகக் கருதும். பலநேரங்களில் தலைமையின் கட்டளைகளைத் தாண்டியும் வினைகள் செய்வதும் உண்டு. அத்தகைய வினைகளுக்கும் தலைமைதான் பொறுப்பேற்க வேண்டியதாக இருக்கும்.

இப்பொழுது தமிழ்நாட்டில் இயக்கங்கள் நடத்தும் பலரும் அணிதிரட்டலை மட்டுமே கருத்தில் கொள்கின்றனர். திரட்டப்பட்ட அணிகளை வழி நடத்துவதைப் பற்றியோ, வழிகாட்டுதலை மீறி அவ்வணிகள் செய்கின்ற வினைகளுக்குப் பொறுப்பேற்பது பற்றியோ கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. எவையெல்லாம் களையப்பட வேண்டிய வேறுபாடுகள் என ஜனநாயகக் கருத்தியல் முன் மொழிகின்றதோ அதையெல்லாம் பின்பற்றுகின்றன; தங்களின் அணி திரட்டலுக்குப் பயன்படுத்துகின்றன. ஜனநாயகத்தில் நம்பிக்கை இருப்பதாகப் பாவனைகளும் செயது கொள்கின்றன. உணர்ச்சி வசப்படும் தொண்டர்களின் செயல்களைக் கட்டுப்படுத்துவது இயலாத காரியம் என அரசியல் தலைவர்கள் மட்டும் சொல்லவில்லை; பக்தர்களின் செயல்கள் வன்முறையில் இறங்கி விடுகின்றன; கொலை வெறித் தாக்குதலுக்குக் காரணமாகி விடுகின்றன; அதையெல்லாம் தடுத்து நிறுத்திவிட முடியாது என்று மடாதிபதிகளும் கூடக் கூறுகின்றனர். இப்படிச் சொன்ன மதத் தலைவர்களையும் மடாதிபதிகளையும் பட்டியல் இடுவதை இங்கே தவிர்த்து விடலாம்.

பொறுப்பான தலைமைகள் அணிதிரட்டலை மட்டுமே முக்கியமாகக் கருதுவதில்லை; வழி நடத்துதல் பற்றியும் சிந்தித்துச் செயல்படும். தன்னிடம் எதிர்பார்த்து நிற்கும் அணிகளுக்குச் சரியான ஆயுதங்களைத் தருவதில் காட்டும் பொறுப்புணர்வுகளில் தான் தலைமைகளின் வரலாற்றுப் பாத்திரம் தங்கி நிற்கிறது. காந்தி, தான் மட்டுமே பின்பற்றி, பரிசோதித்து, வெற்றிகண்ட அகிம்சையையும் சத்தியாக்கிரகத்தையும் ஆயுதங்களாகத் தனது அணிகளிடம் முன் மொழிந்தார். சரியாகச் சொல்வதானால் காந்திக்கு அணிதிரட்டலுக்கான ஆயுதங்களோ கருத்தியலோ தேவைப்படவில்லை. ஏனென்றால் அவர் முன் நின்ற அணிகள் தேசவிடுதலை என்னும் பெயரால் திரட்டப்பட்ட கூட்டங்கள். ஆனால் அம்பேத்கரின் பணிகளோ அவ்வளவு சுலபமான பணிகள் அல்ல. அணி திரட்டலும் வழிகாட்டுதலும் அவரது பொறுப்புக்களாகவே இருந்தன. முன்கையெடுக்கும் எல்லாத் தலைமைகளின் முன்னாலும் இந்தச் சவால்கள் இருக்கத்தான் செய்யும். தொடக்க காலங்களில் தனக்கான தனி திரட்டுதலில் அதிகக் கவனம் செலுத்தாத அம்பேத்கர் வழி நடத்துதலைப் பற்றியே அதிகம் கவனம் செலுத்தினார். தேச விடுதலையெனக் கூறித் திரட்டப்பட்டுள்ள அணிகளில் அவரது வழி காட்டுதலை எதிர்பார்த்து நின்ற கூட்டமும் உண்டு என்பது அவரது நம்பிக்கை.

அந்த நம்பிக்கையில் தவறொன்றும் இல்லை. அவர் சொன்ன ‘கற்பி; ஒன்றுசேர்; போராடு’ என்னும் முழக்கங்கள் ஒன்றும் இன்று கருதப்படுவது போல தலித்துகளுக்கு மட்டும் உரிய முழக்கங்கள் அல்ல. கற்க வேண்டியதும், ஒன்று சேர வேண்டியதும், போராட வேண்டியதும் ஒடுக்கப்படுவதாகக் கருதும் எல்லோருக்கும் உரிய முழக்கங்கள் தானே. ஆனால் அம்பேத்கர் சொன்னதாலேயே அவை தலித்துகளுக்கு உரிய முழக்கங்களாக மட்டுமே ஆகி விட்டன. இதுதான் ஒட்டுமொத்த இந்திய தேசத்தின் துயரம். அவர் தந்த முழக்கங்கள் அனைவருக்குமான முழக்கங்களாகக் கொள்ளப்படாத நிலையில் அவரே தன்னை தலித்துகளின் வழிகாட்டியாக நிறுவிக் கொள்ள வேண்டிய கட்டாயம் நேர்ந்தது.வரலாறு தந்த நெருக்கடியின் விளைவுகள் தான் அவை யெல்லாம். அதன்பின் அவர் தன்பின்னால் பெருங்கூட்டத்தை அணிதிரட்ட அல்லது எதிரிகளிடம் தனது அணியின் வலுவைக் காட்ட முன் வைத்த ஆயுதம் தான் பௌத்த மதத்தைத் தழுவுதல் என்னும் ஆயுதம் அல்லது யுத்த தந்திரம். இந்த இடத்தில் ஆயுதம் என்பது வெறும் கருவி மட்டுமல்ல; கருத்தியலும் தான் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். வரலாறு அல்லது வரலாற்று வாதம் என்பது பல நேரங்களில் கருத்தாகவும் இருக்கிறது; கருவியாகவும் இருக்கிறது. அம்பேத்கர் சொன்ன போதும்சரி, இன்று அயோத்திதாசரின் வெளிச்சத்தில் திரும்பச் சொல்லப்படுதலின் போதும்சரி- பௌத்தம் பற்றிய சொல்லாடல்கள் வெறும் கருவியாக இல்லாமல் கருத்தியலாகவும் இருக்கிறது என்பதுதான் ஆறுதலான விசயம்.

இந்த நேரத்தில் நம் காலத்துச் சிந்தனையான பின் நவீனத்துவமும் சரி, அதனை வந்தடைய உதவிய பின் அமைப்பியல் சிந்தனையாளர்களான மிஷைல் பூக்கோ, ழாக் தெரிதா போன்றவர்களும் சரி வரலாற்றின் மீதும், வரலாற்று வாதத்தின் மீதும் கடுமையான சந்தேகங்களையும் விமரிசனங் களையும் எழுப்பியுள்ளனர் என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். சொல்லப்படுகின்ற வரலாறுகள் எல்லாம் சொல்லப்படுவன மட்டும் தான். உண்மையில் நிகழ்ந்தன அல்ல என்பது அவர்களது விமரிசனங்களின் சாரம். கடந்த காலத்தைப் புரிந்து கொள்ளத் தொடங்குதல் பல நேரங்களில் கொலைகளுக்கும் பழி வாங்குதலுக்குமே இட்டுச் செல்கிறது என்பது விமரிசனங்களின் பின்னிருக்கும் ஆதங்கமும் கூட. கடந்த காலத்தில் அதிகாரம் செய்தவர்களின் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பதற்காக மட்டுமே அவர்களின் சந்ததியினர் பழிவாங்கப் படவேண்டுமா.? அந்தக் கூட்டத்தைச் சேர்ந்த பெண்களும் அப்பாவிகளும் கேலிக்குரியவர்களாகவும் குற்றவாளிகளாகவும் ஆக்கப் படவேண்டுமா..? இவை தான் அந்த வாதங்கள்.

வரலாற்றைத் தனது போராட்டத்தின் கருவியாகக் கொள்ளும் ஓர் இயக்கம் எப்பொழுதுமே கடந்த காலத்தின் ஒரு பகுதியைப் பொற்காலமாகச் சித்திரித்து அதற்காக ஏங்கத் தொடங்கிவிடுகிறது. அதனைத் திரும்பக் கொண்டு வருவதைத் தனது வேலைத் திட்டமாகவே ஆக்கிக் கொள்கின்றது. அப்படி ஆக்கிக் கொள்கின்றபோது அதற்குத் தடையாக இருக்கும் கூட்டம் அடையாளப்படுத்துவதும் அதற்கெதிரான வன்முறைகள் நிகழ்வதும் நடந்தேறி விடுகின்றன. யூதர்களுக்கெதிராகச் சொல்லப்பட்ட நாஜிகளின் குரலில் வெளிப்பட்டது வரலாற்றின் அடிப்படையில் கட்டப்பட்ட பழிவாங்கும் உணர்வுகள் அல்லாமல் வேறல்ல. இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுக்க இதற்கு உதாரணங்கள் உண்டுதான்.

இந்திய தேசத்தின் விடுதலைக்கான போராட்டத்தில் - ஆங்கிலேயர்களை எதிர்த்து நின்ற களத்தில் மக்களைத் திரட்டப் பயன்பட்டது ஒருவித வரலாற்று வாதம் தான் என்பதை மறுக்க முடியாது. அந்த வாதத்தில் நேர்மறைக் கூறுகளும் இருந்தன; எதிர்மறைக் கூறுகளும் இருந்தன. இன்று தேசியவாதம் பேசும் பாரதிய ஜனதா கட்சி தொடங்கி தமிழினவாதம் பேசிய திராவிட இயக்கங்கள் மற்றும் தமிழ் தேசிய இயக்கங்கள் வரை ஒருவிதமாக வரலாற்றைக் கட்டமைத்துப் பழம் பெருமைக்குள் இன்பம் காணவும் அந்த இன்பலோகத்தை அல்லது பொன்னுலகத்தைத் திரும்பவும் கொண்டு வரவும் பார்க்கின்றன.

கலாசாரத் தேசியம் பேசும் இந்துத்துவ அடிப்படைவாதிகளுக்கு வேத நூல்களே ஆதர்ச நூல்கள்; மனுஸ்மிருதியைச் சட்ட நூல்களாக அங்கீகரித்த குப்தர் காலம் தான் பொற்காலம். அதைத் திரும்பக் கொண்டு வருவதே அவர்களின் இலட்சியக் கனவுகள். அதற்குத் தடையாக இருக்கும் பிற மதத்தினரும் ஜனநாயகவாதிகளும் ஒழித்துக் கட்ட வேண்டியவர்கள். அல்லது இந்த நாட்டை விட்டுத் துரத்தப்பட வேண்டியவர்கள்.

தமிழ் நாட்டின் திராவிட இயக்கங்களுக்குச் சங்ககாலம் தான் பொற்காலம்; ஏனென்றால் தமிழ்நாட்டை அந்த நேரத்தில் ஆண்டவர்கள் தமிழ் மன்னர்கள் என்பதும், ஆரியர்களும் பிறமொழியாளர்களும் நுழையாத காலம் என்பதும் காரணங்கள். பத்தொன்பதாம் நூற்றாண்டு ஐரோப்பாவில் தோன்றிய அறிவொளிக் காலத்தை ஒத்த பகுத்தறிவும், வேறுபாடுகளற்ற சமுதாய வாழ்வும், விரும்பியவர்களைக் காதலித்துத் திருமணம் செய்து கொள்ளும் உரிமைகளும் நிலவியதாகக் கட்டமைத்து அந்தப் பொற்காலத்திற்கு ஏங்குவதும் அதனை மீட்டெடுப்பதும் அவர்களின் நோக்கம். அதற்குத் தடைகளாக இருப்பவர்களாக அவர்கள் நிறுத்துவது சமய நம்பிக்கை யாளர்களையும், சம்ஸ்கிருதம் உள்ளிட்ட பிறமொழிகளைத் தாய் மொழியாகக் கொண்டவர்களையும் தான்.

சங்கப் பொற்காலத்தைத் திரும்பக் கொண்டு வரவேண்டுமென்றால் பிறமொழியாளர்களையும் சமயப் பற்றாளர் களையும் ஓட ஓட விரட்டுவதுதான் ஒரே வழி.தடையாக இருப்பார்கள் என்றால் ஒத்துவராத தமிழர்களையும் கூட காட்டிக் கொடுப்பவர்கள் என்று குற்றம் சாட்டிப் பழி வாங்குவதில் தவறொன்றும் இல்லை என்பதுதான் அவர்களது தத்துவம். சர்வதேச மனிதனைப் பற்றிப் பேசிய பொதுவுடைமைச் சிந்தனையும் கூடப் புராதனப் பொதுவுடைமைச் சமுதாயம் என்னும் பொன்னுலகத்தைக் கட்டமைத்து அதற்கு அறிவியல் காரணங்களைத் தந்துதான் உள்ளது. ஆக வரலாற்றை பயன்படுத்துவது என்பது ஒன்றும் புதிது அல்ல.

இந்தப் பின்னணியில் தான் சாதிய இயக்கங்களும் சாதி மறுப்பு இயக்கங்களும் கூட வரலாற்றைப் பயன் படுத்துவதில் தீவிரம் காட்டி வருகின்றன. அதே நேரத்தில் இரு சாராரும் முன் வைக்கும் வரலாறும் பயன் படுத்தும் முறையும் வெவ்வேறானவை. இன்னும் சொல்வதானால் எதிரும் புதிருமானவையும் கூட. சாதி மறுப்பு இயக்கமான தலித் இயக்கம் பௌத்த அடையாளத்தைச் சுட்டுவது பழம்பெருமை பேசுவதற்காக அல்ல. தனது எதிர்ப்பு மனநிலையின் தொடர்ச்சியைக்க் காட்டுவதற்காகத்தான். பௌத்தம் தமிழ்நாட்டிலும் இந்திய அளவிலும் இந்து மதத்தின் அதிகார வரம்பிற்குள் இல்லை எனக் காட்டுவதன் மூலம் இந்து மதத்தின் சாதிக் கட்டுமான நால்வருணப் பாகுபாடு தங்களுக்குப் பொருந்தாது எனச் சுட்டிக் காட்ட முடியுமல்லவா..? அதே நேரத்தில் இந்து மதம் பௌத்தத்தின் அடையாளங்களைச் சிதைத்துத் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் நோக்கத்தில் அழித்தொழிப்பு வேலைகளைச் செய்துள்ளது என்ற குற்றச் சாட்டும் இதன் பின்னணியில் இருக்கத்தானே செய்கிறது.

இதற்கு மாறாக சாதிய இயக்கங்கள்- தமிழ் நாட்டின் இடைநிலைச் சாதிகள் தங்கள் சாதிகளைப் பெரும்பாலும் ஆண்ட பரம்பரைகள் எனக் காட்டிக் கொள்ளவே முனைகின்றன. மூவேந்தர்களின் வாரிசுகளாகக் காட்டிக் கொள்வதற்கான ஆதாரங்களை இலக்கியங்களிலிருந்தும் வரலாற்றுக் குறிப்புகள் என நம்பப்படும் கல்வெட்டுக்கள், செப்பேடுகள், பட்டயங்கள் போன்றவற்றிலிருந்தும் தேடிக் கண்டு பிடித்துக் கொண்டிருக் கின்றன. மூவேந்தர்களாகக் காட்டிக் கொள்ள இயலாத நிலையில் குறுநில மன்னர்களின் பரம்பரைகளாக, பாளையக்காரர்களின் வாரிசுகளாகக் காட்டிக் கொள்ள ஆதாரங்கள் கிடைத்தால் மகிழ்ச்சி அடைகின்றனர்.

தங்களின் சாதிகளை அரசாங்கம் தரும் சலுகைகளுக்காக மிகப் பிற்பட்டோர் பட்டியலில் சேர்க்கும்படி கோரிக்கைகள் வைத்துக் கொண்டே இன்னொரு புறம் சத்திரிய இனம் எனவும் காட்டிக் கொண்டிருக்கின்ற முரணில் தான் அவை இயங்குகின்றன.சாதிச் சங்கங்கள் நடத்தும் பத்திரிகைகளின் பெரும்பாலான பக்கங்களில் விளம்பரங்களைத் தாண்டி இடம் பெறும் உள்ளடக்கம் இவைதான்.வன்னியர்கள் என்ற பொதுப் பெயரில் அடங்கிக் கொள்ளும் சாதிகளும், தேவர்கள் என்னும் பொதுப் பெயரில் அடங்கிக் கொண்டு கோரிக்கைகள் வைத்துச் செயல்படும் சாதிகளின் பத்திரிகைகளும் நல்ல உதாரணங்கள். தேவர்கள் பின்பற்றும் அதே உத்தியை இன்று பள்ளர்கள், தங்களைத் தேவேந்திரகுல வேளாளர்கள் எனச் சொல்வதன் மூலம் பின்பற்றுகின்றனர். அவர்களின் முன்னோடிகளாகக் காட்டப்படும் இடைக்காலச்சோழர்கள் காலத்திலும் பாண்டியர்கள் காலத்திலும் மனுஸ்மிருதி அரசுகளின் சட்ட நூலாக இருந்தன என்றும், அவற்றைக் காப்பதே இந்த அரசர்களின் தலையாய கடமையாக இருந்தது என அவர்கள் எழுதி வைத்த கல்வெட்டுக்களும் செப்பேடுகளும் சொல்கின்றன. ஒரே நேரத்தில் சில சாதிகளை மேல்நிலையாக்கத்திலும் கீழ்நிலையாக்கத்திலும் இயங்கும்படி செய்ததை என்னவென்று சொல்வது? வேறொன்றும் இல்லை. வரலாறு என்னும் ஆயுதம் தான்.

ஜனநாயகக் கருத்தியலை நம்பிக்கையாகக் கொண்டு வாழத் தொடங்கியிருக்கும் இக்காலகட்டத்தில் திரள் மக்களிடம் வரலாற்று வாதத்தை ஆயுதமாகத் தருவதைப் பற்றித் தலைமைப் பீடங்களில் இருப்பவர்கள் தீவிரமாக யோசித்துச் செயல்பட வேண்டும்.நிகழ் காலத்தில் படும் துன்பங்களையும் துயரங்களையும் பற்றிப் பேசாமல் கடந்த காலப் பெருமைகளையும் காட்சிகளையும் காட்டிக் கொண்டிருப்பது ஒருவிதத்தில் ஏமாற்று வேலைகளாகவே இருக்க முடியும். நிகழ்காலத்தில் என்னவாக இருக்கிறோம் என்பதிலிருந்து தொடங்கி எதிர் காலத்தில் என்னவாக ஆகவேண்டும் என வழி நடத்துவதே சரியான வழி நடத்தலாக அமையத் தக்கது. புத்திபூர்வமாகத் திரட்டப்படும் திரளிடம் வன்முறைக்கு வழி வகுக்கும் ஆயுதங்களைக் கையில் தருவது பற்றி ஒரு தடவைக்குப் பதிலாகப் பத்து தடவை யோசிக்க வேண்டும். வரலாறு இரு பக்கமும் கூரான ஆயுதம். அது எதிரி களை மட்டுமே காயப்படுத்தும் என்பதில்லை; வைத்திருப்பவனுக்கும் காயங்கள் உண்டு பண்ணக் கூடியது தான்.

===================================

புதியகோடாங்கி, பிப்ரவரி 2005

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நவீனத்துவமும் பாரதியும்

நாயக்கர் காலம். இயல் . 6 சாதிகளும் சமூக அசைவியக்கங்கமும்

ப்ளு ஸ்டார் : கிரிக்கெட்டும் அரசியலும்