முனைவர் தே.ஞானசேகரன்- கல்விப்புல எல்லைகளைத் தாண்டியவர்.

இன்று முற்பகலில் (நவம்.24) பேரா.தே.ஞானசேகரனின் மறைவுச் செய்தி அலைபேசி வழியாகவும் முகநூல் குறிப்புகள் வழியாகவும் வந்து சேர்ந்தன. ஓய்வுபெற்று 2 ஆண்டுகள் தான் ஆகின்றன. அதற்குள் மரணம் என்பதை ஏற்கமுடியவில்லை.
இருவரும் ஒருசாலை ஆய்வாளர்கள். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் நான் முனைவர் பட்டம் தொடங்கிய போது அவர் ஆய்வியல் நிறைஞர் பட்டத்தில் வந்து சேர்ந்தார். அதனை முடித்த கையோடு முனைவர் பட்டம் தொடங்கினார். நாட்டுப்புற நம்பிக்கைகளை மையமிட்ட அவரது ஆய்வு அந்தக் காலத்தில் முன்னோடியான ஆய்வு. சமய நம்பிக்கைகளின் தோற்றம் குறித்த ப்ரேசரின் கோட்பாடுகளை உள்வாங்கிச் செய்யப்பட்ட ஆய்வு. பில்லி, சூனியம், வசியம் செய்தல், திருட்டுப் பொருட்களைக் கண்டுபிடித்துக் கொடுக்கும் வெற்றிலை ஜோதிடம் என அவர் சேகரித்து வைத்திருந்த தகவல்களை எல்லாம் நாளிதழ்களிலும் சில மாத இதழ்களிலும் தொடர்கட்டுரைகளாக எழுதினார். செய்முறையாகவும் தொழிலாகவும் அவற்றைச் செய்துகொண்டிருந்த விக்கிரவாண்டி ஜோதிடர்கள் உள்பட பலரும் அவரது தொடர்பில் இருந்தார்கள் என்பதை அவரது மேசைக்கு எதிர் மேசையில் பார்த்து அதிசயப்பட்டுக் கொண்டிருந்தவன் நான். மற்ற ஆய்வாளர்கள் இல்லாத மாலை நேரத்தில் சிகரெட் பிடித்தபடி அவரும் நானும் ஆய்வாளர்களுக்கான அறையில் எதிரெதிரே அமர்ந்து சிகரெட் பிடித்தபடி எழுதிக்கொண்டே இருப்போம் . திருமணம் ஆனபின் ஆய்வு செய்யும் ஆய்வாளர்களுக்கான பல்கலைக்கழகக் குடியிருப்பில் இருவரது குடும்பமும் இருந்தன.

தனது ஆய்வுப்பட்டத்தை முடித்த கையோடு கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியேற்றவர். பணிக்காலம் முடிந்தவுடன் அவரது சொந்தக் கிராமத்திற்குத் திரும்பிப் போய் வேளாண்மையில் ஈடுபடப் போய்விட்டார். தனது பணிக்காலத்தில் அதிகப்படியான முனைவர் பட்ட ஆய்வுகளையும் எம்பில் ஆய்வுகளையும் முடித்துக் கொடுத்த உழைப்பாளர். ஆசிரியப்பணி மட்டுமில்லாமல் விடுதிக்காப்பாளர், விவேகானந்தர் இருக்கை எனச் சில பணிகளையும் பல்கலைக் கழகத்திற்காகச் செய்தவர். திட்டமிட்டு வேலை செய்வதிலும் ஆய்வாளர்களிடம் வேலை வாங்குவதிலும் தேர்ந்த கல்வியாளர். அவரளவுக்கு நானெல்லாம் வேலை செய்ததில்லை என்பதை அவரிடம் சொல்லியிருக்கிறேன். மாணவர்களுக்கு, ஆய்வாளர்களுக்கு, கல்லூரி ஆசிரியர்களுக்கு எனச் சிறப்பு வகுப்புகள் எடுப்பதற்காகக் கோவைக்கு அழைத்துக் கொண்டே இருப்பார்.
 
தனது முனைவர் பட்ட ஆய்வில் கல்விப்புல எல்லைகளைக் கடந்ததுபோலப் பணிக்காலத்தில் அவர் முன்வைத்த மள்ளரியம் என்ற கருத்தாக்கம் கல்விப்புலத்திற்குள்ளும் வெளியேயும் பெருந்தாக்கத்தை உண்டுபண்ணியது என்பதை யாரும் மறுக்கமுடியாது. 1990 களில் தலித்தியம் என்ற கருத்தாக்கம் உருவாக்கப்பட்டு கல்விப்புலத்திற்குள் பரவியதை உள்வாங்கி, அதன் மறுதலையாக ‘ மள்ளரியம்’ என்ற கருத்தாக்கத்தை முன்வைத்தவர்களில் அவரும் ஒருவர். அவரோடு இணைந்து உதவியவர் மள்ளர் மலர் என்ற இதழின் ஆசிரியராக இருந்த குருசாமி சித்தன் என்பவராவர். 

இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் அட்டவணைச் சாதிகளுக்குள் இருந்த பள்ளர், குடும்பன், காலாடி போன்ற சாதிகளின் வரலாற்றை மருதநிலப் பண்பாட்டோடு இணைத்துப் பேசி, சங்கப்பாடல்களில் குறிப்பிடப்படும் மள்ளர்களே பின்னர் பள்ளர்களாக இறக்கப்பட்டனர். குறிப்பாகப் பள்ளு இலக்கியங்கள் தோன்றிய பின்னிடைக்காலத்தில் - நாயக்கர்கள் காலத்தில் இந்த மாற்றம் நடந்தது என்ற கருதுகோளை முன்வைத்து அவர் எழுதிய கட்டுரைகளும் நூல்களும் முக்கியமானவை. அவற்றின் சாரமே பின்னர் தேவேந்திர குல வேளாளர் என்ற கருத்தாக்கத்தின் உருவாக்கமாகப் பதிவு பெற்றது. 

தலித்தியக் கோட்பாடுகளை உருவாக்கி முன்வைத்த ராஜ்கௌதமனின் சொல்லாடல்களில் ஒன்று தலைகீழாக்கம். இந்த அடிப்படையில் தான் தே.ஞானசேகரனின் ஆய்வுகள் அமைந்தன. தமிழ் நாட்டின் பல மாவட்டங்களில் உழுகுடிகளாகவும் நிலவுடமைச்சாதிகளாகவும் இருக்கும் மள்ளர்களைத் தேவேந்திரகுல வேளாளர்கள் என அழைக்கவேண்டும் எனவும், தேவேந்திரகுல வேளாளர்களைப் பிற்பட்டோர் வகுப்பில் சேர்க்கவேண்டும் எனவும் கருத்துரைகள் உருவான பின்னணியில் பெரும்பங்களிப்புச் செய்த பேராசிரியர் தே.ஞானசேகரன் என்பதை அவரது எழுத்துகள் இப்போதும் சொல்லிக்கொண்டிருக்கின்றன.

இந்த வகையில் அவர் அவர் சமூக இயக்கத்தில் தாக்கம் செய்த பேராசிரியர் என்று மதிப்பிடுவேன். இன்னும் பல நூல்களை எழுதும் திட்டத்தோடு இருந்தார் என்பதை நானறிவேன். அவரது பிரிவு அவரது குடும்பத்தினருக்கு மட்டுமல்ல; தமிழ் ஆய்வுக்கே பெரும் இழப்பு.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்