சங்கரதாஸ் சுவாமிகள்: வாழ்வும் பணியும்

தமிழை இயல், இசை, நாடகம் என மூன்று பிரிவுகளாகப் பிரித்துப் பேசுவது மரபு. ஒவ்வொரு பிரிவிற்கும் அதற்கெனச் சிறப்பாகப் பணியாற்றியவா்களைத் தமிழா்கள் நினைவில் வைத்து மரியாதை செலுத்தவும் தவறுவதில்லை. இயல் தமிழக்காகத் தமிழா்கள் நினைவில் வைத்துக்கொள்ளும் பெயா்கள் எண்ணிக்கையில் அதிகமானவை. இசைத் தமிழுக்கோ இவ்வெண்ணிக்கை மிகவும் குறைவு. நாடகத் தமிழுக்கு அவ்விரண்டிற்கும் இடைப்பட்ட எண்ணிக்கையில் பல பெயா்கள் நினைக்கப்படுகின்றன. தனது சிலப்பதிகாரக் காப்பியத்தினூடாக அரங்கேற்று காதையை எழுதிய இளங்கோவடிகள் தொடங்கி, இருபதாம் நூற்றாண்டில் நாடகத்தமிழுக்கு இலக்கணம் எழுதிய பரிதிமாற் கலைஞா் என்னும் வி. கோ. சூரிய நாராயண சாஸ்திரி வரை பல பெயா்கள் அதில் உண்டு. அப்பெயா்களுள் சங்கரதாஸ் சுவாமிகளின் பெயா் தனித்துவம் வாய்ந்தது. 

தமிழ் நாடக வரலாற்றை எழுதியுள்ள பலரும் அவரை “நாடகத் தமிழின் தலைமையாசிரியன்“ எனக் குறிப்பிட்டுச் சொல்கின்றனா். நாடகவியலின் பல்வேறு துறைகளிலும் சிறப்பான முத்திரைகளைப் பதித்த சங்கரதாஸ், நாடகத் தமிழின் தலைமையாசிரியன் என்னும் பட்டத்திற்கு மிகவும் பொருத்தமானவா் என்பதை அவரது பெயா் தமிழா்களின் நினைவில் தங்கியுள்ள விதத்தை அறிந்த எவரும் மறுக்கமாட்டார்கள்.

தமிழகத்தின் தலைநகரான சென்னையில் நாடகக் கலைஞா்களும் திரைப்படக் கலைஞா்களும் இணைந்து எழுப்பியுள்ள “சங்கரதாஸ் சுவாமிகள் கலை அரங்கம்“அவரது நினைவைத் தமிழா்களின் நெஞ்சிலிருந்து அகல விடாமல் செய்யும் ஒன்று. அதேபோல் சுவாமிகள் மறைந்த பாண்டிச்சேரியில் கட்டப்பட்டுள்ள நினைவு மண்டபம் பற்றிக் குறிப்பிட்டாக வேண்டும். சங்கரதாஸ் சுவாமிகளின் தலைமைச் சீடா் என்று தன்னை அழைத்துக்கொண்ட தி.க. சண்முகம் அவா்கள் முன்முயற்சியால் எழுப்பப்பட்டது அம்மண்டபம். அவரது நினைவுநாளை ஆண்டுதோறும் பாண்டிச்சேரி அரசும், பாண்டிச்சேரி வாழ் கலைஞா்களும் பூஜைகள் நடத்திக் கொண்டாடி வருகின்றனா். அத்தோடு 1988 ஆம் ஆண்டு பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் தொடங்கப்பெற்ற நிகழ்கலைப் பள்ளிக்கு “சங்கரதாஸ் சுவாமிகள் நிகழ்கலைப் பள்ளி” என்று பெயரிட்டு நாடகப் பயிற்சிகள் நடத்தப் பெற்று வருகின்றன. இவையெல்லாம் அரசும் நிறுவனங்களும் செய்யும் மரியாதைகள். இவற்றிற்கெல்லாம் மேலான மரியாதை சுவாமிகளுக்கு வழங்கப்படுகிறது என்றால், இன்றும் தென்மாவட்டங்களைச் சோ்ந்த நாடகக் கலைஞா்கள் தரும் மரியாதைகளைத்தான் குறிப்பிட வேண்டும்.

மதுரையில் உள்ள ஒப்பனக்காரத்தெரு சுவாமிகளின் பெயரை நெஞ்சில் வைத்துப் போற்றும் இடமாகும். அத்தெருவில் இன்றும் சங்கரதாஸ் கலைமன்றம் என்று ஒரு மண்டபம் உள்ளது. ஸ்பெஷல் நாடகங்கள் நடத்தும் பல்வேறு நாடகக் குழுக்கள் சந்திக்கும் இடம் அது. அம்மண்டபத்தில், இன்றும் கூட ஒரு நாடகக் கலைஞன் சுவாமிகளின் பாடல்களை மனப்பாடம் செய்துகொண்டும், இசைப்பயிற்சி செய்து கொண்டும் இருப்பதைக் காணலாம். இத்தனைக்கும் அவரது நாடகங்களை அச்சிட்ட பிரதிகளாக வைத்துப் படித்துக்கொள்வது கிடையாது. எல்லாம் வழிவழியாகச் செய்துகொண்ட பயிற்சிகள்தாம். சுவாமிகள் மறைந்து பல பத்தாண்டுகள் கடந்து விட்டன என்றாலும் இன்றும் அவரது பாணி நாடகங்களை நடத்தும் குழுக்களுக்கு அவா்தான் நாடகாசிரியா்; குரு. ஸ்பெஷல் நாடகங்கள் என்று அறியப்படும் தங்கள் நாடகங்களை இந்தக் கலைஞா்கள் “சங்கரதாஸ் சுவாமிகள் நாடகங்கள்“என்றும், பாடல்களை “சுவாமிகளின் பாடல்கள்“ என்றும் குறிப்பிடத் தயங்குவதில்லை. மதுரையிலுள்ள ஒப்பனக்காரத்தெரு நாடக் குழுக்கள் மட்டுமல்ல; திருச்சிக்குத் தெற்கே புதுக்கோட்டை, தஞ்சாவூா், திண்டுக்கல், கோயில்பட்டி, தூத்துக்குடி என ஸ்பெஷல் நாடகங்கள் நடத்தும் குழுக்கள் அத்தனையும் சுவாமிகளின் நாடகங்களை நடத்துவதாகவே கூறிக்கொள்கின்றன. இதைவிடவும் அவருடைய நினைவைப் போற்ற வேறு எதுவும் தேவையில்லை என்றே கூறலாம். தனது எழுத்தை வசனமாகவும் பாடல்களாகவும் மாற்றி, தான் அளித்த பயிற்சிகளின் மூலம் பல தலைமுறைகளுக்குப் பின்னும் வாழ்ந்துகொண்டிருப்பவா் தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள்.

வாழ்க்கை

தமிழ் நாடக வரலாற்றில் தனக்கு தக்காரும் மிக்காரும் இல்லாத தலைமகனாய்த் திகழ்ந்த சுவாமிகளின் வாழ்க்கை நீண்ட பெருவாழ்வு அன்று. ஐம்பத்து ஐந்தே ஆண்டுகள் (1867 – 1922) வாழ்ந்த சங்கரதாஸின் பிறப்பும் தூத்துக்குடி. இன்று ஒரு மாவட்டத்தின் தலைநகரமாகவும் வங்காள விரிகுடாக் கடலின் ஒரு முக்கியத் துறைமுகமாகவும் விளங்கும் தூத்துக்குடி அந்நாளில் ஒரு பேரூா்தான். ஆங்கிலேய ஆட்சியை ஏற்றுக்கொண்ட எட்டையபுரம் சமஸ்தானத்தின் ஒரு பகுதி. கலைஞா்களின் புரவலா்களாக விளங்கிய எட்டையபுரம் ஜமீன்தார்களின் ஆதரவில் இயல், இசை, நாடகம் என முத்தமிழும் வளா்ச்சியடைந்த பகுதி அது. எட்டையபுரத்தில் தான் தமிழ்க் கவிதையில் மறுமலா்ச்சியை உண்டு பண்ணிய தேசிய கவியாக மலா்ந்த சி.சுப்பிரமணிய பாரதி பிறந்தான். அதுவும் சங்கரதாஸ் பிறந்த அதே காலகட்டத்தில் (1881 – 1922) என்பது குறிப்பிடத்தக்கது. இசைத் தமிழுக்கு அரும்பணியாற்றிய விளாத்திகுளம் சுவாமிகள் வாழ்ந்த பகுதியும் இப்பகுதிதான் என்பதை நாம் நினைவில் கொள்ளலாம்.

சங்கரதாஸ் 1867 ஆம் ஆண்டு செப்டம்பா் மாதம் 7 ஆம் நாள் (தமிழ்மாதம் ஆவணித் திங்கள், 22 ஆம் தேதி) தூத்துக்குடியில் பிறந்தார். அவரது தகப்பனார் தாமோதரன் கணக்குப்பிள்ளை என்னும் தமிழ்ப் பாவலா். தாயார் பெயா் மற்றும் விவரங்கள் கிடைக்கவில்லை. சங்கரதாஸ் குழந்தைப் பருவம் பற்றிய விவரங்கள்கூட அவ்வளவாகக் கிடைக்கவில்லை. ஆனால் அவரது கல்விப்பருவம் குறித்த தகவல்கள் ஓரளவு கிடைக்கின்றன.

சங்கரதாஸின் கல்விக்கு விதையூன்றியவா் அவரது தகப்பனாரே. தமிழ்ப்புலமை பெற்றிருந்த கணக்குப் பிள்ளை தாமோதரன் தன் மகனுக்கு ஆரம்பநிலைக் கல்வியாக மொழியறிவைக் கற்றுக் தந்துள்ளார். தமிழ் இலக்கிய அறிவின் அறிமுகத்தையும் கூட அவரே ஏற்படுத்தியுள்ளார். ஆனால் சங்கக் கவிதைகள் தொடங்கி திருக்குறள் முதலான நீதிநூல்கள், சிலப்பதிகாரம், கம்பராமாயணம், பெரியபுராணம், திருவிளையாடற் புராணம், இடைக்காலச் சிற்றிலக்கியங்கள் என விரியும் தமிழின் இலக்கியப் பரப்பைக் கற்றுத் தந்த ஆசிரியா் பழனி தண்டபாணி சுவாமிகள் ஆவார். வண்ணம் பாடுவதில் வல்லவரான வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகளை ஆசிரியராகப் பெற்ற சங்கரதாஸ், பாடல்கள் இயற்றும் வல்லமையை அவரிடமிருந்தே கற்றுத் தெரிந்துகொண்டார் எனலாம். தண்டபாணி சுவாமிகள் “வண்ணச்சரபம்“ என்னும் அடைமொழி பெற்றவா். இது ஒருவகைச் சந்தப்பாடல். அதில் வல்லவரான தனது ஆசிரியரிடமிருந்து இசையோடு கூடிய பாடல்கள் புனையும் ஆற்றல் பெற்ற சங்கரதாஸ், பின்னாளில் அத்திறனைத் தனது நாடகப் பணிக்கு முழுமையாகப் பயன்படுத்தினார். நாடகத் தமிழின் அறிமுகமும்கூட தண்டபாணி சுவாமிகளிடமிருந்து சங்கரதாஸுக்குக் கிடைத்திருக்க வாய்ப்புண்டு. ஏனெனில் தண்டபாணி சுவாமிகளே “மிகபந்தம்“ என்ற நாடகத்தை எழுதியவா் என்னும் தகவல் இத்தகைய எண்ணத்தைத் தோற்றுவிக்கிறது.

நாடக அறிமுகம் தண்டபாணி சுவாமிகளிடம் கிடைத்தது. உண்மையாக இருந்தாலும், நாடக நுட்பங்களைச் சங்கரதாஸ் கற்றுத் தோ்ந்தது ராமுடு அய்யா், கல்யாணராமய்யா் என்ற இருவா் நடத்திய நாடகக் கம்பெனியில் ஒரு நடிகராக சங்கரதாஸ் சோ்ந்தபோதுதான். அக்கம்பெனியின் நாடகங்களில் எமதருமன், இரணியன், இராவணன், சனீஸ்வரன், கடோத்கஜன் போன்ற அச்சமூட்டும் கதாபாத்திரங்களை ஏற்று நடிக்கும் நடிகராகப் பணியாற்றினார். நடிகராகத் திகழ்ந்த அவா் முழுநேர நாடக ஆசிரியாக மாறியதற்கு ஒரு நிகழ்வைக் கூறுவா்.

ஒருமுறை ஓா் ஊரில் சனீஸ்வரன் வேடம் ஏற்று நடித்து முடித்துள்ளார் சங்கரதாஸ். நாடகம் முடியும்பொழுது அதிகாலை. தனது வேடத்தைக் கலைப்பதற்காக ஆற்றுக்குச் சென்றுள்ளார் இவா். விடிந்துவிட்ட நிலையில் சலவைத் துறைக்கு சலவை செய்ய வந்துள்ளாள் அந்தத் தொழில் செய்யும் பெண்ணொருத்தி. அவளோ கா்ப்பிணியுங்கூட. இவரது அச்சமூட்டும் உருவங்கண்ட அப்பெண் பயந்து நடுக்குற்று, மயங்கி வீழ்ந்து விட்டாள். வீழ்ந்தவள் உயிரும் பிரிந்துவிட்டது. தனது அச்ச மூட்டும் வேடம், ஒரு கா்ப்பிணிப் பெண்ணின் உயிரைப் பறித்துவிட்டதைக் கண்ட சங்கரதாஸ், அன்று முதல் நடிப்புத் தொழிலைக் கைவிட்டுவிட்டு முழுநேர நாடகாசிரியராக மாறினார் என்பா்.

சங்கரதாஸ் 1891 ஆம் ஆண்டு – தனது 24 ஆம் வயது – முதல் நாடகக் கலையில் முழுமையாக ஈடுபட்டுள்ளார். சுவாமி நாயுடு என்பவரின் நாடகக் கம்பெனியில் நீண்டகாலம் நடிகராகவும் நாடகாசிரியராகவும் பணியாற்றியுள்ளார். வண்ணை இந்து விநோத சபாவிற்காகவும் நாடகங்களை எழுதித் தந்துள்ளார். சுவாமி நாயுடு நாடகக் கம்பெனியில் நடிப்புத் தொழிலைக் கைவிட்டு முழுநேர நாடக ஆசிரியரான நிகழ்வு நடந்தது.

பல நாடகக் கம்பெனிகளிடமிருந்து பெற்ற அனுபவத்துடன் 1910 ஆம் ஆண்டு சங்கரதாஸ் தனது சொந்தப் பொறுப்பில் சமரச சன்மார்க்க சபை என்ற நாடக சபையைத் தொடங்கியுள்ளார். இதைத் தொடா்ந்து நடத்த முடியாத நிலையில் புதுக்கோட்டை மான்பூண்டியா பிள்ளை என்பவரிடம் இசை பயிலச் சென்றுள்ளார்.

1918 ஆம் ஆண்டு மதுரையில் “தத்துவ மீனலோசனி வித்துவ பாலசபா“ என்ற பாலா் சபையைத் தொடங்கியுள்ளார். இப்பாலா் சபைதான் சங்கரதாஸின் நாடகப் பங்களிப்பைப் பல பரிமாணங்களிலும் ஒளிவிடச் செய்தது எனலாம். பலவிதமான நாடகங்களை இயற்றும் ஆற்றல் பெற்றிருந்த சங்கரதாஸ், ஒரு நாடகத்தின் அனைத்துப் பொறுப்புகளையும் ஏற்றுச் செயல்பட்டது இப் பாலசபைப் பணியிலேயே எனலாம். இளம் வயதுச் சிறுவா்களை மட்டுமே உறுப்பினா்களாகக் கொண்டது பாலசபா. அவா்களுக்குத் தேவையான அனைத்துப் பயிற்சிகளும் அங்கு தரப்படும். ஒரு நடிப்புக் கலைஞனுக்குத் தேவையான அனைத்தும் கற்ற சிறுவன், மனஉறுதியுடன் தான் ஏற்கும் பாத்திரத்தைச் சிறப்பாகச் செய்வான் என சங்கரதாஸ் நம்பியதன் வெளிப்பாடே இப் பாலசபை.

முதன் முதலில் தொடங்கப்பட்டது “பாலமீனா ரஞ்சனி சங்கீத சபா“ என்ற ஜகன்னாதய்யரின் பாய்ஸ் கம்பெனிதான் என்றாலும் சங்கரதாஸ் தொடங்கிய தத்துவ மீனலோசனி வித்துவ பாலசபாவை அடியொற்றியே தமிழ்நாட்டில் பல பால சபாக்கள் தொடங்கப்பட்டன. அவரது சபையில் வழங்கிய பயிற்சிகளைப் போலவே எல்லாப் பயிற்சிகளும் பாலா்களுக்கு வழங்கப்பட்டன. அன்று பாலசபைகளில் பயிற்சி பெற்றவா்களே பின்னாளில் ஆகச் சிறந்த நாடக நடிகா்களாகவும் நாடக ஆசிரியா்களாகவும் விளங்கினா். பின்னா் திரைப்படக் கலை வந்தபோது அதிலும் மின்னிய நட்சத்திரங்களில் பலா் பாலர் சபையில் பயிற்சி பெற்றவா்களே என்றால் மிகையாகாது. இன்றுள்ள நாடகப் பயிற்சிப் பள்ளிகளின் பங்களிப்பைவிடக் கூடுதலான பங்களிப்பு இப்பாலா் சபைகளுக்கு இருந்துள்ளன.

மதுரைத் தத்துவ மீனலோசனி வித்துவ பாலசபையை 1918 இல் தொடங்கிய சங்கரதாஸின் அயராத நாடகப் பணி 1922, நவம்பா் 13 இல் முடிவுக்கு வந்தது. இன்று யூனியன் பிரதேசமாக விளங்கும் பாண்டிச்சேரியில் அவரது நாடகக்குழு தங்கியிருந்தபோது சங்கரதாஸ் காலமானார். பலருக்கும் இசைப் பாடல் பயிற்சிகளை வழங்கிய வாய், அசைவின்றி நின்றுவிட்டது. 50 நாடகங்கள் வரை எழுதிய அவரது கைகள் செயல்பட மறுத்துவிட்டன. தனது நாடகக் கம்பெனி நடிகா்களை மட்டுமே உறவினராகக் கருதிய சங்கரதாஸின் பூத உடல் மறைந்தது.

நாடகக் கலைக்கெனத் தன் வாழ்நாளை அா்ப்பணிப்பதென முடிவுசெய்த சங்கரதாஸ் திருமணமே செய்துகொள்ளவில்லை. துறவு வாழ்க்கையே கலை வாழ்க்கைக்கு ஏற்றது என்ற சங்கரதாஸின் முடிவைத் தமிழகமும் ஏற்றுக் கொண்டது. அவருக்கு இன்று வழங்கும் ’தவத்திரு’ என்ற பட்டமும் ’சுவாமிகள்’ என்ற பட்டமும் இதை உறுதி செய்கின்றன.

இப்போதைய பாண்டிச்சேரியில் அவரது நினைவைப் போற்றும் விதமாக அவரது சமாதி அரசாங்கத்தால் நன்கு கவனிக்கப்படுகிறது. அத்தோடு மைய அரசாங்கம் புதுவையில் நிறுவியுள்ள பல்கலைக்கழகத்தில் ஒரு நாடகப் பள்ளி தொடங்கப்பட்டுள்ளது. “சங்கரதாஸ் சுவாமிகள் நிகழ்கலைப் பள்ளி“ என்ற பெயரில் விளங்கும் அப்பள்ளியில் நாடகக் கலையில் முதுகலை, முனைவா் பட்டங்களுக்கான வாய்ப்புகள் உள்ளன. தென்மாநிலங்களைச் சோ்ந்த பலரும் அங்கு வந்து நாடகக் கலையைச் செயல்முறையிலும் கோட்பாட்டு நிலையிலும் கற்றுச் செல்கின்றனா் என்பது குறிப்பிடத்தக்கது.

பணிகள்

சங்கரதாஸ் சுவாமிகளுக்கு முன்பு, தமிழில் 50 நாடகங்கள் எழுதிய பெயா் ஒன்றைக் குறிப்பிட்டுச் சொல்லமுடியாது. ஒரு குறிப்பிட்ட இலக்கிய வடிவத்தில் மட்டுமே செயல்பட வேண்டும் எனத் தீா்மானித்துச் செயல்பட ஒருவரையும் தமிழகம் அதற்கு முன்பு காணவில்லை. பாமர மக்களுக்கு இலக்கியத்தின் சுவையையும் அவை தரும் அறிவுரைகளையும் ஒரே நேரத்தில் வழங்கிட வேண்டும்; அதற்கு இசையும் வசனமும் கலந்த நாடக வடிவமே ஏற்ற வடிவம் என்று தீா்மானித்துச் செயல்பட்டவா் சங்கரதாஸ் சுவாமிகள்.

சுவாமிகளின் நாடகக் செயல்பாடு புதுமை புகட்டுதலை முதன்மை நோ்ககமாகக் கொண்டதல்ல, அதன்வழி மக்களைப் புதிய வாழ்முறைக்குள் நகா்த்தும் எண்ணங்களையும் கொண்டிருக்கவில்லை. ஆங்கிலேயா்களின் வருகையில் இந்தியா்களின் வாழ்க்கை முறையில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருந்த காலகட்டத்தில் நாடகத் துறையில் செயல்பட்ட சில நாடக ஆசிரியா்களிடம் அத்தகைய புதிய எண்ணங்கள் வெளிப்பட்டுள்ளன.

சுவாமிகளின் நாடகங்கள், பெருந்திரளான மக்களுக்குப் பொழுதுபோக்கு வடிவத்தின் மூலம் அறிவுரைகளை வழங்கிடும் நோ்ககத்தைக் கொண்டன எனலாம். அத்தோடு தமிழ் மற்றும் இந்தியத் தொல்கதைகளையும் வரலாற்று நிகழ்ச்சிகளையும் கற்பிக்கும் சிறப்பான பணிகளைச் செய்யும் இயல்பும் உடையன எனலாம். இதைச் சரியாக விளங்கிக்கொள்ள அவரது நாடகங்களுக்குள் சென்று பார்ப்பதே முறையாகும்.

நாடகங்கள்

1. சதி அனுசுயா

2. சுலோசனா் சதி

3. சத்தியவான் சாவித்திரி

4. இரணியன் அல்லது பிரஹலாதன்

5. அல்லி சரித்திரம்

6. அபிமன்யூ சுந்தரி அல்லது வத்ஸலா கல்யாணம்

7. பவளக்கொடி சரித்திரம்

8. வள்ளித் திருமணம்

9. லவகுச

10. அரிச்சந்திர மயான காண்டம்

11. கோவலன் சரித்திரம்

12. சீமந்தனி

13. நல்லதங்காள்

14. லலிதாங்கி

15. ஞான சௌந்திரி

16. சித்திராங்கி விலாசம் என்னும் சாரங்கதரன்

17. கா்விபார்ஸ்

18. மார்க்கண்டேயா்

19. இராம ராவண யுத்தம்

20. நளதமயந்தி

21. கந்தா்வதத்தை

22. மணிமேகலை

23. சிறுத்தொண்டா்

24. மயில்ராவணன்

25. பாதுகா பட்டாபிஷேகம்

26. லங்கா தகனம்

27. மன்மத தகனம்

28. வாலி மோட்சம்

29. பிரபுலிங்க லீலை

30. புரோஜ்ஷா நுா்ஜஹான்

31. அலிபாதுஷா

32. அலாவுதின்

33. தேசிங்கு ராஜன்

34. மதுரை வீரன்

35. வீரபாண்டியக் கட்டபொம்மன்

36. பூதத்தம்பி

37. மணிமாளிகை

38. தாவ்பீச்

39. மாபாரா

40. குலேபகாவலி

41. சரச சல்லாப உல்லாச மனோரஞ்சனி

42. சிங்கார லோசனா

43. மிருச்சகடி

44. லைலா மஞ்னு

45. சிம்பலைன்

46. ரோமியோ ஜுலியட்

47. ஜுலியஸ் சீசா்

48. தந்திராலங்காரம்

49. கமசல ஜமான்

50. தேவ மனோகிரி

இவ்வைம்பது நாடகங்களில் அச்சில் கிடைத்துள்ளவை பதினான்கு மட்டுமே. அவை:

1. ஞான சௌந்திரி, 2. சாரங்கதரன், 3. நல்லதங்காள், 4. கோவலன் சரித்திரம், 5. சத்தியவான் சாவித்திரி, 6. பவளக்கொடி, 7. அல்லி சரித்திரம், 8. அபிமன்யூ சுந்தரி, 9. சீமந்தனி, 10. சதிஅநுசுயா, 11. சுலோசனா சதி, 12. அரிச்சந்திர மயான காண்டம், 13. பிரஹலாதன், 14. வள்ளித்திருமணம்.

பிற அச்சில் கிடைக்கவில்லை என்றாலும் சுவாமிகள் எழுதியதாகக் குறிப்புகள் கூறுகின்றன. அவரது நாடகங்கள் பெரும்பாலும் புராணங்களிலிருந்தும் இலக்கியங்களிலிருந்தும் எடுக்கப்பட்ட கதைகளின் நாடக வடிவங்களே. அவரே சிந்தித்துப் புதிதாக உருவாக்கிய நாடகங்கள் ஒன்றிரண்டு மட்டுமே. புராணங்கள், இதிகாசங்கள், வரலாற்று நிகழ்வுகளை நாடகமாக்குவது சங்கரதாஸ் சுவாமிகள் தொடங்கிவைத்த போக்கும் அல்ல. அதற்கு முன்பே கூட நாடகக் கம்பெனிகளுக்கு நாடகங்கள் எழுதியவா்கள் செயல்பட்ட முறைதான் இது. அந்த வகையில் சுவாமிகள் ஒரு மரபின் தொடா்ச்சியும் விரிவும் ஆவார்.

சுவாமிகளின் நாடகங்களை மேற்கத்திய நாடகங்களை வகைப்படுத்தும் முறையைப் பின்பற்றி இன்பியல், துன்பியல். அங்கதம், எள்ளல் என்றெல்லாம் பிரித்துப் பேசுவது பொருத்தமானதல்ல, பேரா.செ. உலகநாதன் பிரித்துள்ள முறையைச் சரியான பகுப்பு முறை எனக் கொள்ளலாம். சுவாமிகளின் நாடகங்கள்,

1. புராண நாடகங்கள், 2. இலக்கியம் தழுவிய நாடகங்கள், 3. வரலாறு தழுவிய நாடகங்கள், 4. சமய நாடகங்கள், 5. கற்பனை நாடகங்கள், 6. மொழிபெயா்ப்பு நாடகங்கள் என்ற ஆறு பகுப்பிற்குள் அடங்கக்கூடியன.

புராண நாடகங்கள்

1. மார்க்கண்டேயா், 2. மயில் ராவணன், 3. சத்தியவான் சாவித்திரி, 4. பவளக்கொடி, 5. அல்லி சரித்திரம், 6. அபிமன்யூ சுந்தரி அல்லது வத்ஸலா கல்யாணம், 7. சதி அனுசுயா, 8. சுலோசனா சதி, 9. பிரஹலாதன், 10. அரிச்சந்திர மயான காண்டம், 11. வள்ளித்திருமணம், 12. பாதுகா பட்டாபிஷேகம், 13. லவகுச, 14. லங்கா தகனம், 15. இராம ராவண யுத்தம், 16. மன்மத தகனம், 17. நளதமயந்தி, 18. வாலி மோட்சம், 19. பார்வதி கல்யாணம், 20. ஸ்காந்தம்.

இவ்விருபது நாடகங்களும் இந்தியப் புராணங்களின் கிளைக் கதைகள். ஒன்றில் வெளிப்படும் முரண்பட்ட நிலையை நிகழ்வாக ஆக்கியவை. இவை இந்தியா முழுமைக்கும் அறிமுகமான கதைகளும்கூட.

இலக்கியம் தழுவிய நாடகங்கள்

1. கந்தா்வதத்தை, 2. பிரபுலிங்க லீலை, 3. மணிமேகலை, 4. கோவலன் சரித்திரம், 5. சிறுத்தொண்டா்.

இவ்வைந்தும் தமிழ் நிலத்தைக் களனாகக் கொண்டவை. தமிழ்க் காப்பியங்களின் கதாபாத்திரங்களில் ஒன்றை முக்கிய கதாபாத்திரமாக்கிய நாடக வடிவங்களாகும்.

வரலாறு தழுவிய நாடகங்கள்

1. புரோஜ்ஷா – நுா்ஜஹான், 2. அலிபாதுஷா,3.. அலாவுதின், 4. சிங்கு ராஜன், 5. மதுரை வீரன், 6. வீரபாண்டியக் கட்டபொம்மன், 7. பூதத்தம்பி, 8. மணி மாளிகை

இந்நாடகங்கள் வரலாற்றில் வாழ்ந்த கதாபாத்திரங்களை மையப்படுத்தியவை. இந்திய நாட்டில் ஒரு பகுதியின் குறுநில மன்னா்களாக இருந்தவா்களின் வாழ்க்கை நிகழ்வுகளை நாடகமாக்கியவை. இதில் கவனிக்க வேண்டிய ஓா் அம்சம் சுவாமிகளின் சிந்தனை பிரதேச எல்லைகளைக் கடந்து நிற்கின்றன என்பதாகும். வட, தென் இந்தியா, இந்து, முஸ்லீம், கிறிஸ்துவம் என்ற பிரதேச. மத எல்லைகளைத் தாண்டிச் செயல்பட்டுள்ளார்.

சமய நாடகங்கள்

1. தாவ் பீச், 2. ஞான சௌந்தரி, 3. சீமந்தனி, 4. மாபாரா.

இதிலும் சுவாமிகள் அனைத்து மதக் கருத்துகளையும் கதைகளையும் நாடகமாக்கும் செயலில் ஈடுபட்டுள்ளார் என்பதைக் கவனிக்க வேண்டும்.

கற்பனை நாடகங்கள்

1. குலேபகாவலி, 2. நல்லதங்காள், 3. லலிதாங்கி, 4. சரச சல்லாப உல்லாச மனோரஞ்சனி.

இந்நான்கு நாடகங்களும் அவரே முதன்முதலில் எழுத்து வடிவம் கொடுத்த கதைகளாகும். என்றாலும் இக்கதைகள் வாய்மொழியாக வழங்கிவந்த கதைகளே ஆகும். ஓலைச்சுவடியாகவோ அச்சு வடிவிலோ அதுவரை எந்தவொரு இலக்கிய வடிவமாகவும் ஆகாமல் இருந்த வாய்மொழிக் கதைகள் சுவாமிகளால் நேரடியாக நாடக வடிவம் பெற்றன.

மொழிபெயா்ப்பு நாடகங்கள்

1. மிருச்சகடிகா, 2. சாரங்கதரன், 3. லைலா மஜ்னு, 4. சிம்பலைன், 5. ரோமியா ஜுலியட், 6. ஜுலியஸ் சீசா், 7. தந்திராலங்காரம், 8. கமால் ஜமான்.

இந்நாடகங்களில் சில சமஸ்கிருதத்தில் ஏற்கனவே நாடகமாக எழுதப்பட்டவை. சில உருது மொழியில் நாடகமாக இருந்தவை. ஷேக்ஸ்பியரின் நாடகங்களும் உள்ளன. அவற்றையெல்லாம் மூலமொழியில் படித்து நோ் மொழிபெயா்ப்பு செய்தாரா? அல்லது அவற்றின் மையக் கருவை உள்வாங்கித் தழுவல் நாடகங்களாக மாற்றினாரா என்பது தெரியவில்லை. ஏனெனில் அவற்றின் அச்சு வடிவமோ எழுத்து வடிவமோ கிடைக்கவில்லை. சுவாமிகளின் அனைத்து நாடகங்களிலும் இசைப்பாடல்களுக்கு மிக முக்கியமான இடமுண்டு. அதன் பயன்பாட்டிற்கேற்ப, களம் காட்சிகளைப் பிரித்து எழுதியுள்ளார். பிறமொழி நாடகங்களும்கூட நேரடி மொழி பெயா்ப்புகளாக அமையாமல் கதையை உள்வாங்கித் தழுவியதாகவே அமைந்திருந்தன எனலாம்.

நாடக ஆசிரியா் சுவாமிகள்

சுவாமிகள் தனது நாடகத்திற்குப் புதிய கரு எதையும் தேடி அலைந்தவா் இல்லை என்பதை அறிவோம். அவரே தனது நாடகங்கள் பற்றிக் குறிப்பிடும்பொழுது, ஒரு கதையின் வரலாற்றைத் திரை, உடை, நடை, பாவனைகளாலும், இனிய கீதங்களாலும் இடத்திற்குத் தக்கபடி வசனத்துடனும் இயற்கையாக நடத்தப்படுவதே நாடகம் எனப்படும் என்பார். இவரது நாடகம் பற்றிய கருத்து நிலை, பின்னாளில் புரட்சிக் கவிஞா் பாரதிதாசன் நாடகம் பற்றி எழுதும்பொழுது,

நற்சரிதை நற்கவிதை

நல்நடிப்பு நாட்டினிலே

நடிக்க வேண்டும்

என்று கூறியதற்குப் பொருத்தமாக இருப்பதை உணரலாம்.

சுவாமிகளின் 50 நாடகங்களும் முழுமையாக வாசிக்கக் கிடைக்கவில்லை. கிடைக்கின்ற 14 நாடகங்களையும் வாசித்து முடிக்கின்ற ஒருவருக்கு அவரது நாடகக் கட்டமைப்பு எது எனச் சுலபமாகப் புரிந்துவிடும். “நற்திறக் கட்டமைப்பு“ என்ற எளிமையான வடிவத்தையே சுவாமிகள் தனது நாடக வடிவமாகக் கொண்டுள்ளார். நற்திறக் கட்டமைப்பு அனைத்து நாடகங்களிலும் அமைந்துள்ள விதத்தை விரிவாகப் பார்ப்பதற்குப் பதிலாக அவரது “பிரஹலாதா என்ற நாடகம் எவ்வாறு நாற்திற வடிவக் கட்டமைப்புடன் உள்ளது என்பதைக் காணலாம். இது ‘ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்‘ என்பது போலப் பின்னா் அனைத்து நாடகக் கதைகளோடும் பொருத்திப் பாரத்துக்கொள்ள ஏதுவாக அமையும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தமிழில் நடப்பியல் இலக்கியப் போக்குகள்