சட்டமன்றத்தேர்தல் -2021: சில குறிப்புகள்



இந்தத்தேர்தல் அறிவிப்புக்குப் பின் முகநூலில் எழுதிய குறிப்புகள் இங்கே தொகுதியாகத் தரப்பட்டுள்ளன. வாசிப்புக்கு நேரமிருப்பவர்கள் வாசித்துப்பார்க்கலாம்

ஏப்ரல் 04 /வாக்காளர்களின் பொறுப்பு

நவீன அரசியல் களம் மௌனமான அதிகார வேட்டை நடைபெறும் மைதானம் .ஆனால் தேர்தல்களின் காலம் மௌனங்கள் கலைக்கப்படும் காலம்; வசனங்கள் பேசப்படும் காலம்; ஒத்திகைகள் இல்லாமலேயே நேரடிக் காட்சிகள் அரங்கேற்றப்படும் காலம். அரங்கேற்றங்கள் மேடைகளில் மட்டுமல்ல; தெருக்களை நாடியும், வீடுகளைத் தேடியும் வரும் காலம்.

தேர்தல் என்னும் திருவிழா நிகழ்வில் வடம்பிடித்துத் தேரை நிலைநிறுத்தும் பொறுப்புடையவர்கள் வாக்காளர்கள். அவர்களின் கால்கள் ஆழமாகத் தரையில் ஊன்றி நிற்கவேண்டும். ஆறுமாதத்திற்கு முன்னால் ஊடகங்களால் பண்டமாக ஆக்கப்பட்டு விற்பனையாகிக் கொண்டிருக்கும் அந்தப் பொருளை ஊதிப் பார்க்க வேண்டும்; உரசிப்பார்க்கவேண்டும், முட்டிப்பார்க்கவேண்டும்; மோதிப் பார்க்க வேண்டும்; வெந்நீரில் விட்டுக் கலக்கிப் பார்க்கவேண்டும்; தண்ணீரில் விட்டுத் தடவிப்பார்க்கவேண்டும்.

நம்முடைய பிரதிநிதிகளை எடைபோட்டுத் தேர்வு செய்யவேண்டியவர்கள் வாக்காளர்கள் தான். அந்தப் பிரதிநிதிகள் தங்களுக்காக இருப்பார்களா? தங்களுக்கான நிர்வாகத்தைத் தரும் அறிவும் திட்டமிடலும் உடையவர்களா? என்றெல்லாம் யோசித்து முடிவு செய்யவேண்டியவர்கள். ஐந்தாண்டுக்கொரு முறை வரும் தேர்தல் ஊடகங்கள் முன்வைப்பது போல் பண்டமல்ல. தேர்தல் ஆணையம் நடத்துவதுபோலத் திருவிழா அல்ல. அரசியல்வாதிகள் அணுகுவதுபோல போட்டிகளும் அல்ல. வாக்காளர்களின் வாழ்வு அது. மக்களாட்சி என்னும் உயரிய அரசியல் தத்துவத்தில் அதுதான் உயிர். நம் உயிரை ஏழுகடல் தாண்டி, ஏழுமலைதாண்டி, ஏழு மரங்கள் கடந்து, ஒரு மரத்தின் பொந்தில் வைத்துப் பாதுகாப்பதுபோலப் பாதுகாத்தால் மட்டும் போதாது. அந்த அரிய உயிரின் மதிப்புணர்ந்து பயன்படுத்தவேண்டும். ஒவ்வொரு தனிமனிதனின் வாழ்க்கையையும் திட்டமிடும் அரசு நிர்வாகத்தை உருவாக்கும் மதியாளர்களை, செயலாளிகளை, நம்பகத்தன்மை கொண்ட இயக்கத்தை, அந்த இயக்கத்தில் இருக்கும் மனிதர்களைக் கண்டறிந்து வாக்களிக்கவேண்டும். வாக்காளர்களின் பொறுப்பு அளவிடமுடியாது. பொறுப்பான அதிகாரம் அவர்களிடம் இருக்கிறது.

ஏப்ரல் 03/ தேர்தல் பரப்புரைகள்: கடந்தகாலமும் நிகழ்காலமும்


தேர்தல் நெருங்கநெருங்க இரண்டு முதன்மை கட்சிகளான அ இ அதிமுகவும் திமுகவும் விளம்பரப் போரில் இறங்கி அடிக்கிறார்கள். இறங்கி அடிக்கும்போது பழையனவற்றை நினைவூட்டி எதிர்ப்புணர்வைத் தூண்டுவது ஓர் உத்தி என்றால், இப்போது நாங்கள் இதைச் செய்யப்போகிறோம் என வாக்குறுதிகளை வழங்குவது இன்னொரு உத்தி. ஒன்று கடந்தகாலம்; இன்னொன்று நிகழ்காலம்.
திமுக கடைசியாக ஆட்சி செய்த (2006-2011) ஐந்தாண்டுக்காலம் நினைவூட்டப்படுகிறது. குறிப்பாக மின்பற்றாக்குறை நினைவூட்டப்படுகிறது. அரசு அலுவலகங்களில் கட்சியினர் தலையிட்டுக் கட்டைப்பஞ்சாயத்து செய்தல், நிலஅபகரிப்பு போன்றன விளம்பரங்களில் இடம்பெறுகின்றன. விளம்பரத்தில் மட்டுமல்லாமல், திரும்பவும் மின்பற்றாக்குறை வந்துவிடும் என்பதை நினைவூட்டும் விதமாக அடிக்கடி மின்சாரம் நிறுத்தப்படுவதும் இப்போது நடக்கிறது. இவை 10 ஆண்டுகளுக்கு முந்திய கடந்த காலம். அ இ அதிமுகவின் கூட்டணிக்கட்சியான பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கைகளும் பரப்புரைகளும் விளம்பரங்களும் முன்வைப்பவை சில நூற்றாண்டுகளுக்கு முந்திய பழைமைகள்.
திமுகவின் விளம்பரங்களும் பரப்புரைகளும் கடந்த காலங்களை நினைவூட்டுகின்றன. ஆனால் அதில் கவனமும் எச்சரிக்கையுணர்வும் இருக்கின்றன. கவனமாகவும் எச்சரிக்கையோடும் ஜெ.ஜெயலலிதாவின் ஆட்சிக்காலம் நீக்கம் செய்யப்படுகிறது. அவரது காலத்துத் தவறுகளைச் சுட்டிக் காட்டாமல் அவரது மறைவுக்குப் பின்னால் நடந்தனவற்றை மட்டுமே நினைவுபடுத்துகின்றன. அவர் எதிர்த்த பலவற்றை எடப்பாடியும் ஓபிஎஸும் ஏற்றுத்தமிழகத்திற்குத் துரோகம் செய்கின்றனர் என்பதைச் சுட்டிக்காட்டுகின்றன. நீட் தேர்வு உள்ளடக்கிய கல்விப் பிரச்சினைகள், மீதேன் எரிவாயுக் குழாய்கள், எட்டு வழிச்சாலைகள்,பெயரளவுக்குத் தொடங்கப்பட்டு நின்றுபோன எய்ம்ஸ் மருத்துவமனை போன்ற திட்டங்கள் எல்லாம் நினைவூட்டப்படுகின்றன. இவையெல்லாமே கடந்த நான்காண்டுகளின் பிரச்சினைகள். பலவற்றிலும் மத்திய அரசின் தலையீடு, அதனால் மாநில உரிமைகள் விட்டுக் கொடுக்கப்படுதல் போன்றன நினைவூட்டப் படுகின்றன. பாரதிய ஜனதாவின் கைப்பாவையாக இருக்கிறது இப்போதைய ஆட்சி என்பதைச் சொல்ல இந்த நான்காண்டுகளை நினைவூட்டினால் போதும் என நினைத்திருக்கிறது திமுகவின் பரப்புரைக்குழு. அத்துடன் ’ஸ்டாலின் தான் வாராரு’ என்ற பாடல் தொடரும், ’ஏழு உறுதிமொழிகள்’ போன்றனவும், ‘ நான் சொல்கிறேன்; நான் செய்யப்போகிறேன்’ எனப் பேசும் உறுதித்தொனியும் விளம்பரங்களிலும் பரப்புரைகளிலும் திட்டமிட்ட மொழிப்பயன்பாடு. நிகழ்காலத்திலும் எதிர்காலத்திலும் நின்று பேசும் மொழிப்பயன்பாடு நம்பிக்கை ஊட்டக்கூடியன. அதன் உச்சமாக நாளை சன் செய்திகளில் வரப்போகும் ”ஸ்டாலின் செய்வாரா” என்ற இளைஞர்களோடான உரையாடல் அமையும் எனத் தோன்றுகிறது.
விளம்பரங்களின் மீதான பகடி விளம்பரங்களும் வரத்தொடங்கியுள்ளன. வெற்றிநடைபோடும் தமிழகமே என்று கடந்த மூன்று மாத காலமாகக் கேட்டுக் கொண்டிருந்த விளம்பரம் ஒரு கோமாளிக்கூத்து என்கின்றன வெள்ளை வேட்டிக்காரர்களின் கூப்பிய கரங்களும் குட்டிக்கரணங்களும் காட்சிப்படுத்தும் விளம்பரங்கள். அதற்குப் பதிலாக வாராரா? கையெழுத்துப் போட்டுட்டு வாராரா? என்று கேட்கின்றன எதிர்ப்பகடிகள். வேளாண் மானியங்கள், இலவசங்கள், 7.5 சதவீத இடஒதுக்கீடு எனச் சாதனைகளை முன்வைத்து இரட்டை இலைப் பக்கம் மக்கள் இருப்பதாகக் காட்டுகின்றன.
வாக்குப்போட இன்னும் சில நாட்கள் இருக்கின்றன. விளம்பரங்களும் பரப்புரைகளும் வரும். சொற்கள் வரும்; படங்கள் வரும்; கேலிகளும் கிண்டலும் கிடைக்கும். உறுதிகளும் நம்பிக்கைகளும் தரப்படும். எல்லாம் அறியப்பட வேண்டியவைதான். அறிதலுக்குப் பின் எடுக்கவேண்டியது முடிவு. வாக்களிப்பது உரிமை; தெளிவின் வெளிப்பாடு. தமிழ்நாடு வளர்ச்சியடைந்த மாநிலம் என்பது உணர்த்தப்படவேண்டும். அரசியல் அறிவுபெற்ற வாக்காளர்கள் இங்கே இருக்கிறார்கள் என்பதைத் தேர்தல் முடிவுகள் காட்டவேண்டும்.


மார்ச் 31/தமிழ்நாட்டு இந்துக்கள்
பாரதிய ஜனதாவை ஆதரிக்கும் கருத்துருவாக்கிகள் / எழுத்தாளர்கள் இந்தியப் பண்பாடு, இந்திய வரலாறு, இந்தியாவின் ஞானம், இந்தியக் கல்விமுறை, இந்தியக் கலை ரசனை என்று பேசும்போது எப்போதும் தமிழ்நாட்டின் தனித்துவம் குறித்துக் கண்டுகொள்ள விரும்பாமல் பட்டையைக் கட்டிக்கொண்டு திசைமாறியே யோசிப்பவர்களாக இருக்கிறார்கள். தமிழ் மொழியும் அதில் உருவாக்கப்பட்டுத் திரண்ட கருத்துகளும் அவற்றை வெளிப்படுத்திய கவிதையியலும் வாழ்க்கை முறையும் இந்தியப் பரப்பில் வேறுபாடுகள் கொண்டவை என்பதை ஏற்க மறுப்பவர்கள். இந்துமதத்தின் உட்பிரிவுகளாகச் சித்திரிக்கப்படும் சைவம் வைணவம் என்னும் சமய வாழ்க்கை முறைகளும்கூட இந்தியச் சைவத்திலிருந்தும் வைணவத்திலிருந்தும் வேறுபாடுகள் கொண்டவை.
சொந்த ஊரில் அல்லது குறிப்பிட்ட வட்டாரத்தில் பிடிமண்ணைக் குவித்து வைத்து அழகுமலையான் என்று சொல்லிக் குலதெய்வமாகக் கும்பிடும் கூட்டம் சித்திரைத் திருவிழாவில் கள்ளழகர் சேவையில் மொட்டைபோட்டுத் தண்ணீர் பீச்சி அடித்துச் சொந்தம் கொண்டாடுவார்கள். காவல் தெய்வமான காளியும் மதுரை மீனாட்சியும் ஒருவரென நம்பும் கூட்டம் இது. காந்திமதிதான் இசக்கி அம்மன் எனவும், சுடலைமாடன் தான் நெல்லையப்பர் எனவும் கருதிக் கொண்டு கிடாய்வெட்டிக்களிப்பார்கள்.
இதற்கு மாறாக இந்து, இந்துத்துவம் எனப் பேசுபவர்கள் வைதீக இந்துமதமே இந்தியா முழுக்கப் பண்பாட்டு வாழ்க்கையைத் தீர்மானிக்கும் ஒற்றைச் சக்தி எனப் பேசுவார்கள். இப்படிப் பேசுபவர்கள் பெரும்பான்மைத் தமிழர்களுக்கு எதிரான மிகச் சிறுபான்மையினர் என்பதை அவர்கள் ஒத்துக் கொள்வதில்லை. ஆனால் பெரும்பான்மைத் தமிழர்களுக்கு அது புரிந்தே இருக்கிறது. அதனால் தான் சமய வாழ்க்கையை அரசியல் சொல்லாடலாக மாற்றும் இந்துத்துவ அரசியலைத் தமிழ்நாட்டில் செய்யமுடியவில்லை.


மார்ச் 30/ நகரும் நடுநிலையாளர்கள்


சன்செய்திக் கேள்விக்களத்தில் தமிழகக் கிராமங்களைச் சாதிகளின் இருப்பாகவும் வாக்குவங்கியாகவும் முன்னிறுத்தும் ரவீந்திரன் துரைசாமி அமமுகவையும் அதன் தலைவர் டிடிவி தினகரனையும் மூன்றாவது சக்தியாகக் காட்டுகிறார். நகர்ப்புற நடுத்தரவர்க்கத்தை அரசியல் உணர்வு கொண்ட தொகுதியாக முன்னிறுத்தும் ஆர்.வெங்கடேஷ் மக்கள் நீதி மய்யத்தையும் அதன் தலைவர் கமல்ஹாசனையும் மூன்றாவது சக்தியாக்க முனைகிறார். சில மாதங்களுக்கு முன்பு இவர்கள் இருவருமே இதே காரணங்களை முன்வைத்து பா.ஜ.க. வை முன்னிறுத்தினார்கள். இருவருக்குள்ளும் திமுக வென்றுவிடும் என்ற நம்பிக்கை உருவாகியிருக்கிறது.


மார்ச் 29/எதிர்வினைகளால் எழும் அலைகள்

தேர்தல் கால அலை என்பது ஆதரவாக இருப்பதில்லை. எப்போதும் இருக்கும் ஆட்சிக்கெதிரான மனநிலையே அலையாக மாறியிருக்கிறது. எனக்குத் தெரிய 1967 இல் காங்கிரஸ் எதிர்ப்புக்குப் பின்னணியில் இந்தி எதிர்ப்பு என்னும் பேரலை இருந்தது. எம் ஜி ஆர் புதிய கட்சி தொடங்கிய போது அவருக்கு ஆதரவு என்பதை விட அவரால் கருணாநிதிக்கெதிராக உருவாக்கிய ஊழல் எதிர்ப்பு என்னும் அலையே அந்த ஆட்சியை நீக்கியது.

ராஜீவ்காந்தியின் கொலை உருவாக்கிய அலையால் இன்னொரு தடவை ஆட்சியை இழந்தார். ஆடம்பரமான திருமணமும் அவரது தோழியின் குடும்பத்தினரின் சொத்துச்சேர்ப்பும் முதல் தடவை ஜெயலலிதாவைப் பதவியிழக்கச் செய்தது.
ஐந்தாண்டுகளுக்குப் பின்னர் திரும்பவும் ஆட்சியைப் பிடித்த கருணாநிதிக்கெதிராக இரண்டு காரணங்கள் எதிர்ப்பலையை உருவாக்கின. முதல் காரணம் ஈழத் தமிழர் போராட்டத்தைச்சிதைத்த காங்கிரசோடு கொண்டிருந்த உறவும் அதனைச் சரியாகக் கையாளவில்லை என்ற குற்றச்சாட்டு; இன்னொன்று ஒவ்வொரு மாவட்டத்திலும் கட்சியினர் செய்த அதிகாரத் தலையீடுகள். இந்தக் கருத்துப்போக்கைக் கடந்த தேர்தலில் - 2016 இல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் மாற்றும் ஓர் எதிர்ப்பலையை உருவாக்கவில்லை. அதற்குப் பதிலாக அப்போது புதியதாக உருவான மக்கள் நலக்கூட்டணியைக் குறிவைத்த பேச்சுகள் திசைமாற்றத்தைச் செய்தன. ஜெ.ஜெயலலிதாவின் அஇ அதிமுக நூலிழையில் வெற்றியைப் பெற்றது. ஆனால் அவரது மறைவுக்குப் பின் நான்காண்டுகளாக முதல்வராக இருக்கும் எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சிமீது எதிர்ப்புக்கருத்து அலையாக மாறியிருக்கிறது.
இந்த அலை உருவாக்கத்திற்கு முதன்மையான காரணம் மத்தியில் ஆட்சியிலிருக்கும் பா.ஜ.க.வும் அதன் அரசும். அந்த அரசின் நிதி அமைச்சகத்தின் ஒதுக்குதல் போக்கால் தமிழகம் பெற வேண்டிய நிதியைப் பெறத் தவறியிருக்கிறது. உள்துறை அமைச்சகத்தின் மூலம் இணைக்கமான உறவுகளுடன் வாழும் சமய நம்பிக்கையினரிடையே அச்சம் தலை தூக்கியிருக்கிறது. சாதிகளுக்கிடையே மோதலையும் பகையுணர்வையும் உண்டாக்கி வாக்குவங்கி அரசியல் செய்யத்தூண்டியிருக்கிறது.
இதற்கெல்லாம் மேலாகத் தமிழ்நாட்டில் பா.ஜ.க.வின் முகங்களாக இருந்த அரசியல் வாதிகளின் பேச்சுகளாலும் தலையீடுகளாலும் அரசமைப்புகளான நீதிமன்றம், பள்ளிக்கல்வி முதல் பல்கலைக் கழகங்கள் வரையிலான அனைத்துவகையான கல்வியுலகம், சமயத்துறை, ஊடகத்துறை போன்றன பாதிக்கப்பட்டுள்ளன. அக்கட்சியின் பின்னணியில் செயல்படுவதாகக் காட்டிக் கொள்ளும் பத்திரிகையாளர்கள், சமூகச் செயல்பாட்டாளர்கள், அரசியல் விமரிசகர்களின் அப்பட்டமான சார்புநிலையால் தமிழ்மொழி, நீண்டகால வாழ்வியல் முறை, தனிமனிதர்களின் குடும்ப வாழ்க்கை, மாறும் பெண்ணுரிமைச் சிந்தனைகள் போன்றன கேள்விக்குள்ளாகி வருகின்றன.
இந்தப் போக்குகள் எதனையும் கண்டிக்காதவர்களாக அ இ அதிமுகவும் அதன் தலைமையிலான அரசும் இருக்கிறது. அவர்கள் தங்களின் பதவிக்காக - அதிகாரத்திற்காகத் தமிழ்நாட்டின் நலன்களைக் கைவிட்டுவிட்டார்கள் என்ற மனப்போக்கு உருவாகியிருக்கிறது. இப்படியொரு நிலையைத் தங்களின் முன்னால் முதல்வர்களான எம்ஜிஆரும் ஜெ.ஜெயலலிதாவும்கூட எடுத்ததில்லை. இந்த முதல்வரிடமும் துணை முதல்வரிடமும் அப்படியொரு ஆளுமையும் நிர்வாகத்திறனும் இல்லை என்ற கருத்து அந்தக் கட்சியினரிடமே உருவாகிவிட்டது. அத்தோடு கூட்டணியில் இருக்கும் மைய அரசின் பா.ஜ.க. தங்கள் கட்சியைக் கடத்திக்கொண்டு போய்விடும் என்ற அச்சமும் அ இ அதிமுகவினரிடம் உண்டாகியிருக்கிறது. இந்தப்போக்கு - எதிர் மனநிலை பொதுத்தள வாக்காளர்களிடமும் பரவிக்கொண்டிருக்கிறது. இதனை மாற்றும் வலிமையான கருத்தை முன்வைப்பதற்குப் பதிலாகத் தேர்தல் பரப்புரைகளில் வெளிப்படும் சொல்லாட்சித் தவறுகளை- உருவகப் பேச்சின் பின்னணியைப் பயன்படுத்த நினைக்கிறது ஆளுங்கட்சி. அதுவும் நீண்ட நாடாளுமன்ற அனுபவங்கொண்ட ஆ.ராசா போன்றவர்களின் பேச்சை மையப்படுத்தி உருவாக்கப்படும் உணர்வுபூர்வமான திசைதிருப்பல்கள் வாக்காளர்களிடம் அலையாக மாறுவதற்குப் பதிலாக எதிர்மனநிலையையே உருவாக்கும்.
இதெல்லாம் தேர்தலில் ஒரு பிரச்சினையா? என்று வாக்காளர்கள் கேள்வி கேட்டு விலகிப்போய் விடுவார்கள். அரசியல் கருத்தை முன்வைக்கும் ஒரு வினைக்கு இன்னொரு அரசியல் கருத்தே எதிர்வினையாக அமையும். அதனைக் கண்டடைவதற்குள் தேர்தல் வந்துவிடும்.

மார்ச்26/யாருக்குத்திரும்பும் கடைசிநேர அலையடிப்பு



“இந்தத் தேர்தல் தரப்போவது புதிய அனுபவம்” - -ஐந்தாண்டுக்கொரு முறை வரும் தேர்தலைக் கணிக்க முயல்பவர்கள் ஒவ்வொரு தடவையும் சொல்லும் வாசகம் இது. திரும்பத் திரும்பச் சொல்லப்படும் இந்தச் சலிப்புத் தொடரைச் சுவாரசியமாக்குபவை ஊடகங்கள்தான்.


ஒவ்வொரு நாளையும் புத்தம்புதிய ஒன்றின் மூலம் தொடங்கவேண்டும் என்று நினைப்பது ஊடகப் பணிக்கோட்பாட்டு(Media Culture). அதிகாரப்பூர்வமாகத் தேர்தலை நடத்துவது தேர்தல் ஆணையமும் அதன் விதிகளையும் கட்டுப்பாடுகளையும் ஏற்று அரசியல் கட்சிகளும் வாக்காளர்களும். ஆனால் தேர்தல் அறிவிப்புக்குப் பல மாதங்களுக்கு முன்பே ஊடகங்கள் தேர்தலைக் கொண்டுவந்து முன்வந்து நிறுத்துகின்றன. நிறுத்துவது மட்டுமல்லாமல் ஒவ்வொரு தேர்தலும் புத்தம்புதியன எனச் சொல்ல நினைக்கின்றன. அப்படிச் சொல்வதின் மூலம் ஊடகங்கள் தங்களின் இருப்பைக் காட்டிக்கொள்கின்றன.

ஊடகங்களுக்குத் தேவை புதியன. முகங்கள், விவாதங்கள், நிகழ்வுகள், செயல்பாடுகள், கருத்துகள், சொல்லாடல்கள், முன்மொழிதல்கள் என ஒவ்வொன்றிலும் புதியன வேண்டும். ஆனால் நடப்பதென்னவோ பழையனவாகவே இருக்கின்றன என்றாலும் புதிய வண்ணங்களும் தென்படுகின்றன. ஓராண்டுக்கு முன்னால் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஐந்து முகங்கள்-ஐந்து பாதைகள்-ஐந்து சின்னங்கள் ஒவ்வொரு தொகுதியிலும் வலம் வந்தன. திமுக தலைமையிலான எதிரணிச் சின்னங்கள். அஇஅதிமுக தலைமையிலான ஆளும் கட்சிகளின் அணிக்கான சின்னங்கள். இவ்விரண்டணிகள் அல்லாமல் நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் எனச் சிறிய கட்சிகளின் தனிச் சின்னங்கள்.

இவ்வைந்து சின்னங்கள் அல்லாமல் இந்தமுறை மேலும் சில சின்னங்கள் கட்சிச்சின்னங்களாகவே வரப்போகின்றன. பின்னணிக் காரணங்கள் சில வெளிப்படையானவை; சில ரகசியமானவை. கூட்டணிகளில் இருந்த கட்சிகள் தனித்து விடப்பட்டதின் புதிய அணிகள் உருவாகி யிருக்கின்றன; இந்தத் தேர்தலுக்காகவே புத்தம்புதிய கட்சிகள் தொடங்கப்பட்டிருக்கின்றன. அவற்றில் சில எல்லாத்தொகுதிகளிலும் போட்டியிடலாம்; சில கட்சிகள் குறிப்பிட்ட தொகுதிகளில் மட்டும் முகங்காட்டலாம்.

புதுக்கூட்டணிகளும் புதுக்கட்சிகளும் வேட்பாளர்களைத் தேடிக் கொண்டிருக்கும் நேரத்தில் முதன்மை அணிகளுக்குத் தலைமை தாங்கும் திமுகவும் அஇஅதிமுகவும் வாக்காளர்களைக் கவரும் தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டுவிட்டுப் பரப்புரையைத் தொடங்கிவிட்டன. ஆனால் அவற்றின் தேர்தல் அறிக்கைகள் ஒவ்வொரு தேர்தலிலும் புதியனவாக இருப்பதில்லை என்பதே உண்மை. நீண்ட அனுபவங்களைக் கொண்ட அந்தக் கட்சிகளுக்குத் தங்களின் வாக்கு வங்கிகள் எவை என்பது தெரியும். அதனைச் சரியாகக் கணக்கிட்டு நிலை நிறுத்திக்கொள்ளவும், வெற்றிக்குத் தேவையான கூடுதல் வாக்குகளைப் பெறும்பொருட்டுப் பொதுத்தளப் பார்வையை வெளிப்படுத்துவதுமே அவ்விரண்டு கட்சிகளின் வெற்றி ரகசியம்.

பிராமணரல்லாத இடைநிலைச் சாதிகளிலிருந்து உருவான நடுத்தரவர்க்கம் திமுகவின் ஆதார வாக்குவங்கி. அரசுப் பணியாளர்களாகவும் பொதுத் துறைகளின் ஊழியர்களாகவும் தனியார்துறையில் பணியாளர்களாகவும் இருக்கும் இவர்களின் நலன்களுக்கான குறிப்புகள் அதன் தேர்தல் அறிக்கையில் தூக்கலாகவே இருக்கும். இக்குறிப்புகளோடு பொதுத்தளக் கட்டமைப்புகளை உருவாக்குவதன் மூலம் அனைத்துத் தரப்பு மனிதர்களின் கவனத்தையும் ஈர்க்கமுடியும் என்ற நம்பிக்கை அந்தத் தேர்தல் அறிக்கையில் வெளிப்படும். இந்தத் தேர்தல் அறிக்கை அதிலிருந்து மாறுப்பட்டுள்ளது. அனைத்துத்தரப்பினருக்கும் எதையாவது கிடைக்கும் என்று உறுதியளிக்கிறது. ஏனென்றால் இந்தத்தேர்தலில் விரைவாக ஓடி எல்லைக் கோட்டைத் தொட்டு விடும் துடிப்பில் இருக்கிறது.

ஆட்சியைப் பிடித்தே ஆகவேண்டும்; அதுவும் தனியாக ஆட்சி அமைக்க வேண்டும் என்பதை உணர்ந்து கூட்டணிக்கட்சிகளுடன் சிக்கல்கள் வராமல் கூட்டணிப் பேச்சுவார்த்தையை நடத்தி முடித்துவிட்டது.

தேசியக் கட்சிகள் மூன்றும் அதனதன் சின்னத்தில் போட்டியிட, பிடிவாதமாகத் தனிச்சின்னம் வேண்டுமென நினைத்த விடுதலைச் சிறுத்தைகளை அதன் போக்கில் விட்டுவிட்டது. ஆனால் மற்ற கட்சிகள் அனைத்தையும் தனது சின்னத்தில் – உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதை ஊக்குவித்து உறுதிசெய்துவிட்டது. இதுகுறித்து ஊடகங்கள் எதிர்மறை விமரிசங்களை எழுப்ப இயலாது. அதேபோல தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை தமிழக நலன்கள் எவை என்பதில் கவனமான முன்வைப்புகளைச் செய்தது. போராடி, வாதாடிப் பெறப்பட்ட மாநில உரிமைகள் இழப்புக்குள்ளாகிவிட்டன; அவற்றைத் திரும்பப்பெற வேண்டும் என்பதைக் கவனமாக எழுதிக்காட்டியுள்ளது. இதன் மூலம் தனது எதிரி அ இ அதிமுக என்பதிலிருந்து பாரதீய ஜனதா கட்சி என்பதாக நகர்த்தியிருக்கிறது. இப்படியொரு நகர்வை உருவாக்க ஓராண்டுக்கு முன்னால் படாதபாடு பட்ட பா.ஜ.க., இப்போது திரும்பவும் போட்டி அ இ அதிமுகவுக்கும் திமுகவுக்கும் தான் எனக்காட்ட நினைக்கிறது. பரப்புரைகளில் பா.ஜ.க.வின் ஆகப்பெரும் பிம்பமான பிரதமர் மோடியே எதிர்மறைப்பிம்பமாக இருக்கிறார் என்பதை அந்தக் கூட்டணிக்கட்சிகள் மட்டுமல்ல; அந்தக் கட்சியின் வேட்பாளர்களே உணர்ந்திருக்கிறார்கள்.

ஆளும் அஇஅதிமுகவின் வாக்குவங்கி கிராமப்புற விவசாயிகளும் நகர்ப்புற உதிரித் தொழிலாளர்களும் என்பது பல தேர்தலில் நிரூபிக்கப்பட்ட உண்மை. சிறுகுறு விவசாயிகள் எனப் பட்டியலிடப்படும் குடும்பங்களுக்காகவும், உதிரித் தொழிலாளர்களின் அன்றாட வாழ்க்கையில் நேரடியாகப் பங்கேற்கும் விதமாகவும் அமையும் பல நலத் திட்டங்களைத் தனது தேர்தல் அறிக்கையில் எப்போதும் முன்வைக்கும் ஆளுங்கட்சி. தொடர்ச்சியாகத் தங்கள் உடல் உழைப்பைச் செலுத்தத் தயாராக இருக்கும் மனிதர்களுக்குத் தேவை அரசின் ஊக்கம் மட்டுமே. அத்தகைய ஊக்கத்தை அளிக்கும் மானியங்களையும் இலவசங்களையும் முன்வைக்கும் அறிக்கையை நம்பி அதன் வாக்குவங்கி தொடர்ந்து வாக்களிக்கக்கூடும். முன்னால் முதல்வர்களான எம்ஜிஆரும் ஜெ.ஜெயலலிதா உருவாக்கித்தந்த இந்தச் சட்டகத்தையே இப்போதைய முதல்வர் திரு. பழனிச்சாமியும் பின்பற்றுகிறார். அதனாலேயே அம்மாவின் ஆட்சியைத் தொடர வாக்களியுங்கள் என்கிறார்கள் அந்தக் கட்சியினரும் கூட்டணியினரும். இந்தத் தேர்தலுக்கான அறிக்கையை வெளியிடுவதில் அக்கட்சி, ‘தேர்தல் அறிக்கை என ஒன்றை வெளியிட்டுத்தான் ஆகவேண்டுமே என்ற நிலையில் போன தேர்தல் அறிக்கையையும் தி.மு.க. வெளியிட்ட இப்போதைய தேர்தல் அறிக்கையையும் கலந்துகட்டி, இலவசங்களையும் மானியங்களையும் அதிகப்படுத்தி அறிவிப்புச் செய்திருக்கிறது.

அ இ அதிமுகவின் வாங்குவங்கிக்குப் பொருளியல் அடையாளத்தோடுச் சமூகப்படிநிலை அடையாளமும் உண்டு. மேற்கு மாவட்டப் பெரும்பான்மைச் சாதியான கொங்குக் கவுண்டர்களும், தஞ்சை மற்றும் தென்மாவட்டத்து முக்குலத்தோர்களும் அதன் முதன்மை வாக்குவங்கி என்பதும் நம்பப்படும் கருத்துகளில் ஒன்று. அண்மையில் வெளியான சில கருத்துக்கணிப்புகளும் அதனை உறுதிசெய்கின்றன. ஆனால் தென்மாவட்டங்களில் எப்போதும் முக்குலத்தோர்களை அடுத்த நிலையில் இருக்கும் எண்ணிக்கைப் பெரிய சாதிகளான நாடார்களுக்கும் தேவேந்திரகுல வேளாளர்களுக்கும் அதிகாரத்தைப் பகிர்ந்தளிக்கும் உத்தியைக் கடைப்பிடித்தவர் ஜெ.ஜெயலலிதா. அவர் இல்லாத நிலையில் ஏற்பட்ட வெற்றிடத்தால் அச்சாதிகளைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாக நம்பும் டாக்டர் கிருஷ்ணசாமியின் புதியதமிழகம் கட்சியும், சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சியும் கூட்டணியிலிருந்து வெளியேறிப் புது அணிகளைக் கண்டுள்ளன. அதிருப்தியில் இருக்கும் முக்குலத்தோர் வாக்கு வங்கி தனியணி கண்டுள்ள டிடிவி தினகரன் அணிக்கு நகரவே வாய்ப்புண்டு.

அ. இ. அதிமுகவின் கூட்டணிச்சேர்க்கைகளும் தொகுதி ஒதுக்கீடுகளும் வேகம் என்று தொடங்கி மெத்தனம் என்று முடிந்திருக்கிறது. பாட்டாளி மக்கள் கட்சிக்கு 23 தொகுதிகள் என்பதை முடிவுசெய்த ஆரம்ப வேகத்தைத் தொடரவில்லை. அதன் முதன்மைக் கூட்டணிக் கட்சியான தேமுதிக தேய்ந்துபோன நிலையிலும் பிடிவாதம் செய்து தினகரனோடு இணைந்துவிட்டது. இன்னொரு கூட்டணிக்கட்சியான பா.ஜ.க. தமிழகத்தில் தனது ஓட்டுவங்கிக்கேற்ப இடங்களைக் கேட்பதை விட்டுவிட்டு மைய அரசின் அதிகார மையங்களைப் பயன்படுத்திக் கூடுதல் இடங்களைப் பெற்றுள்ளது. அப்படிப் பெற்றுள்ள எண்ணிக்கையே கூட்டணியின் பலவீனம் என்பதாக மாறப்போகிறது. இத்தகைய போக்குகள் அதன் வலிமைவாய்ந்த தலைவர் ஜெ.ஜெயலலிதா இருந்ததுவரை நிகழாதவை.

இவ்விரு அணிகளுக்கும் இடையே நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம்+ கூட்டணிகள், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்+தேமுதிக ஆகிய மூன்று கட்சிகளின் வேட்பாளர்களும் களத்தில் இருக்கிறார்கள். இம்மூன்று கட்சிகளும் வாக்குகளைப் பிரிக்கும் சக்திகள் என்பது ஊடகங்களின் கணிப்பு. திரு. சீமானுக்கென்றொரு வாக்குவங்கி உருவாகியிருக்கிறது. ஒவ்வொரு தேர்தலிலும் அவரது முழக்கங்களும் ஆதரவும் மாறுவதுபோல வாக்குவங்கியின் எண்ணிக்கையும் மாறுகின்றது. அம்மாற்றம் வெற்றிபெறும் மாற்றம் அல்ல. நல்லவர்கள் எனச் சொல்லிக்கொள்ளும் சில தனிநபர்களும் தேர்தல் களத்தில் இருக்கிறார்கள். இருப்பதாகச் சொல்லிக்கொள்ளும் முயற்சி அது.

திரு. தினகரனின் அமமுக, தன்னை அஇ அதிமுகவின் இன்னொரு பிரிவாகவே கருதுகிறது.தேர்தலுக்குப் பின் தொண்டர்களும் இரண்டாம் கட்டப் பொறுப்பாளர்களும் அவர் பக்கம் வரவேண்டுமென்றால் தான் வலிமையான அரசியல் ஆளுமை எனக் காட்டவேண்டுமென வேலை செய்வார். அவரது ஆதரவு தளம் வலிமையான இடங்களில் அறியப்பெற்ற நபர்களை நிறுத்தி வலிமை காட்டவும் செய்வார். குறைந்த து ஒன்றிரண்டு இடங்களாவது வென்று காட்டவும், திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், மதுரை, தஞ்சை போன்ற மாவட்டங்களில் ஆளும் அ இ அதிமுக வேட்பாளர்களைவிடக் கூடுதல் வாக்கு வாங்கிட வேண்டும் என்பது அவரது குறிக்கோளாக இருக்கும். ஏனென்றால். அவரது எதிரிகள் ஓ.பன்னீர்ச்செல்வமும் எடப்பாடி பழனிச்சாமியும் தான். வெளியில் சொல்வதுபோல தீயசக்தி மு.க.ஸ்டாலின் அல்ல.

கமல்ஹாசனின் மக்கள் நீதிமய்ய அரசியல் திரைக்கதை - வசனம் எழுதிக்கொள்ளாமல்’ ஒற்றைவரிக் கதையோடு’ படப்பிடிப்புக்குப் போன சினிமா தயாரிப்புக் கம்பெனி போன்றது. நல்ல படம் தரவேண்டும் என்பது அதன் இலக்கல்ல. இப்போதைக்குப் பலவற்றையும் பதிவுசெய்து கொண்டு போய் எடிட்டரும் தந்து ஒரு படத்தை உருவாக்கிவிடலாம் என்ற நம்பிக்கையில் நகரும் சினிமா அரசியல். இந்தக்காட்சிகள் ஒரு தனிப்படமாக வெளிவரலாம். இல்லையென்றால் நல்ல காட்சிகளை வேறுபடங்களுக்கு விற்றுக் காசு பார்க்கவும் வாய்ப்புண்டு.

பொதுத்தள வாக்குகளை இவர்கள் பிரிப்பார்களா? என்றால் பிரிக்கவே செய்வார்கள். இறுகிய பேரமைப்புகளுக்கு எதிரான மனநிலை கொண்டவர்கள் இந்தக் கட்சிகளுக்கு வாக்களிக்கக் கூடும். இவர்கள் பிரிக்காமல் இருந்தால் அந்த வாக்குகள் யாருக்குப் போகக் கூடியன என்று கேட்டால் இப்போதைய ஆளுங்கட்சிகளுக்குப் போகக் கூடியன என்பதுதான் உண்மை. எப்போதும் எதிர்ப்பு மனநிலையென்பது அதிகாரத்திற்கெதிராகவே செயல்படும். ஆனால் ஆளுங்கட்சியைப் போலவே எல்லா உதிரி அணிகள் ஒவ்வொன்றும் திராவிட முன்னேற்றக் கழகமே எங்கள் எதிரி எனச் சொல்லலாம். அதை மக்கள் நம்பப்போவதில்லை.

அதற்குச் சில காரணங்கள் இருக்கின்றன. இந்தத் தேர்தல் இன்னொரு அரசைத் தேர்ந்தெடுக்கும் தேர்தலாக மட்டும் கருதப்படாமல், ஏற்கெனவே இருந்த உரிமைகள், அமைப்புகள், தன்னடையாளம் கொண்ட தனிமனிதர்கள் என்பதைத் தக்கவைப்பதற்கான தேர்தலாக மாறியிருக்கிறது. களத்தில் பேசப்படும் பரப்புரைகளும், சமூக ஊடகப்பரப்புரைகளும் அந்தப்போக்கிலேயே நகர்கின்றன. இப்போதிருக்கும் அரசு மாற்றப்பட வேண்டுமென நினைப்பது கருத்தாகப் பரவியிருக்கிறது. பன்னெடுங் காலமாகத் தமிழ் நாட்டின் அடையாளங்களாக இருந்த ஆரிய – திராவிடக் கருத்தியல் நீட்சி இருக்க வேண்டும் என்ற கருத்து கூடுதலாகப் பரவி வருகிறது. ஆரியம் என்பது பிராமணர்களின் அடையாளம் என்பதாக முன்பிருந்தது. அவர்கள் மூன்று சதவீதம் பேர்; அவர்களை எதிர்ப்பது தேவையில்லை என்று பேசப்பட்டு, நம்பவைக்கப்பட்ட து. ஆனால் இப்போது திராவிட த்திற்கெதிராக நிற்கும் ஆரியம் பிராமண அடையாளமாக இல்லாமல் பலவித முகங்களோடு மாறிவிட்ட து. அது பழைமையின் அடையாளமாக வலம் வருகிறது. அறிவியல் மறுப்பை ஆதரிக்கிறது. தர்க்கமற்ற சடங்குகளையும் நம்பிக்கைகளையும் முதலீடாக்கி, முட்டாள் தனத்தின் அடையாளமாக ஆகிவிட்டது. வளர்ச்சியின் பெயரால் எளியவர்களின் இன்னல்களுக்குக் காது கொடுக்காத, முகம் காட்டாத அருவெறுப்பான அதிகாரத்தின் அடையாளமாக க் கருதப்படுகிறது. இத்தகைய கருத்துகள் உருவாக்கப்பட்டுவிட்டன. காற்றைவிடக் கருத்துகள் வேகமாகப் பரவும் என்பது ஊடகங்களின் காலத்தில் உண்மையாக்கப்படும்.

மார்ச் 24 மக்கள் நீதிமைய அறிவு
விண்ணப்பப்படிவங்களின் வழியாகச் சாதி உணர்வு தக்கவைக்கப்படுவதாக மக்கள் மையவேட்பாளர் பத்மபிரியா சொல்கிறார். அவரது கட்சியின் தலைவர் கமல்ஹாசனும் சொல்கிறார். இவர்கள் இந்தியாவைப் படித்தவர்களின் நாடாக மட்டும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்தியா என்பது அக்கிரஹாரங்களாகவும், தெருக்களாகவும் ஊர்களாகவும் , சேரிகளாகவும் கொண்ட- பிளவுகளால் ஆன வெளி. இதை அறியாதவர்கள் அல்ல அக்கிரஹாரவாசிகள். அறிந்தும் அறியாதவர்களாகக் காட்டுவது பாவனை. பாவனைகள் நடிப்பின் அடிப்படைத் தேவை.
பாவனையாளர்களும் நடிப்பவர்களும் அரசியல்வெளிக்கு அந்நியமானவர்கள். ஒதுக்கப்படவேண்டியவர்கள்

மார்ச் 24/ சாதாரணமா? லட்சியமா?

பொதுத் தேர்தல் உண்டாக்கும் திருப்பங்கள் அரசியல்வாதிகள் உழலும் பொதுவெளிக்கு மட்டும் உரியது என்று இந்தியர்களில் பெரும்பாலோர் நினைக்கிறார்கள். அரசியல்வாதிகளும் அவர்களது குடும்பமும் உறவினர்களும் நண்பர்களும் மட்டுமே தேர்தல்களாலும் தேர்தலுக்குப் பின் நடக்கும் மாற்றங்களாலும் பயனடைவார்கள் என்பதும் அந்த நினைப்போடு உடன் பிறந்தவைகளாக உள்ளன.
கொஞ்சம் யோசித்துப்பார்த்தால் ஒவ்வொருவரின் அன்றாட வாழ்க்கையிலும் தேர்தல்கள் திருப்பங்களை உண்டாக்கவே செய்யும். அதை நீங்கள் உணர வேண்டும்; உணர்தல் அறிவு; உணர்தல் தான் மகிழ்ச்சி; உணர்தல் தான் துயரம்; உணர்தல் தான் வாழ்க்கை. வாழ்க்கையை அதன் போக்கில் மட்டுமே வாழ சாதாரண மனிதர்கள் பழக்கப்பட்டுள்ளார்கள்.
வாழ்க்கையை நமது போக்கில் திருப்பிப் பார்க்க முயல்வது இலட்சியவாதிகளின் வேலை. நீங்கள் இலட்சியவாதியா? சாதாரண மனிதனா? உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள். யாருக்கு வாக்களிப்பது என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை; வாக்களிக்கும் நாள் இன்னும் தூரத்தில் இருக்கிறது. அதற்குள் என்ன அவசரம்; அப்போது பார்த்துக் கொள்ளலாம் என்று தள்ளிப் போடாதீர்கள். கடைக்குப் போய்ச் சாமான் வாங்கும் விவகாரம் அல்ல; வாக்களிப்பது.
விரிக்கப்பட்டிருப்பதில் புதிய - தரமான பொருளைப் பார்த்து வாங்கிக் கொள்வேன் என்ற முடிவு பொருட்கள் வாங்குவதில் சரியாக இருக்கலாம். வாக்களிப்பதில் கவனிக்க வேண்டியன தரமும் புதுமையும் அல்ல. மாற்றங்களை -திருப்பங்களை உண்டாக்கும் இலட்சியங்கள். இலட்சியங்களுக்குரியதாக உங்கள் வாக்குகளை மாற்றுங்கள். இந்தத் தேர்தல் தமிழ்நாடு என்னும் பெயரில் ஒரு வெளி இருக்குமா? என்ற பெரிய கேள்வியை எழுப்பிக்கொண்டிருக்கிறது.

மார்ச்24/ தொலைநோக்குப் பத்திரத்தில் ஒருநோக்கு

தொலைநோக்குப் பத்திரத்தில் இவையெல்லாம் எழுதப்படவில்லை. ஆனால் இதெல்லாம் நடக்காது என்பது உத்தரவாதமும் இல்லை.
’பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்பது பிழையான கூற்று என அறிவிக்கப்படலாம்.
”யாதும் ஊரே; யாவரும் கேளிர்! ” என்ற வரிகளும் தப்பப்போவதில்லை.
’யாயும் யாயும் யாராகியரோ’ என்ற வரிகள் தடை செய்யப்படலாம்.
காதலர்களைப் போலவே அவர்களின் கடவுள்களர்களும் அச்சத்தில் உறைந்துகிடக்கிறார்கள்.
****
தெய்வமும் உண்டுகொல் தெய்வமும் உண்டுகொல்
வைவாளில் தப்பிய மன்னவன் நாட்டினில்
தெய்வமும் உண்டுகொல் தெய்வமும் உண்டுகொல்
என்றொரு பெருங்குரல் எழுந்துவரும் காலம்
தொலைவில் இல்லை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தி.சு.நடராசனின் திறனாய்வுப் பார்வைகள் :தமிழ் அழகியல், தமிழகத்தில் வைதீக சமயம்

உடல் மறுப்பு என்னும் பெரும்போக்கு

கற்றல் - கற்பித்தல்: மாணவ ஆசிரிய உறவுகள்