உமாமகேஸ்வரியின் சிறுகதைக்கலை


உமாமகேஸ்வரியின் ஸீஸா:மனவோட்டத்தின் உருவகம்

நீண்ட காலமாகப் புனைகதைப் பரப்பில் இயங்கிவரும் உமாமகேஸ்வரியின் தொடக்கநிலைப் பொது அடையாளமாக வெளிப்பட்டது குடும்பவெளி. நகர வாழ்க்கையில் இருக்கும் நடுத்தரவர்க்கக் குடும்பங்களை எழுதுபவர் என்றோ, கிராமப்புறங்களில் இயங்கும் கூட்டுக்குடும்பத்தை எழுதுபவர் என்றோ பொத்தாம் பொதுவாக அடையாளப்படுத்த முடியாத வகையில் அவரால் முன்வைக்கப்பட்ட குடும்பவெளிகள் இருந்தன. தொடர்ந்து வாசிக்கும்போது அவரால் முன்வைக்கப்படும் பெண்கள், தமிழ்க் குடும்பவெளிக்குள் வித்தியாசமான விருப்பங்களோடும், மனவியல் ஓட்டங்களோடும் நெரிபடும் பெண்களாக இருப்பதை அடையாளப்படுத்த முடிந்தது. அந்த வேறுபட்ட தெரிவுகளுக்காகவும், தெரிவுசெய்த பெண்களின் மனவோட்டங்களையும் சின்னச் சின்னச் செயல்பாடுகளையும் விவரிக்கும் மொழிக்காகவும் அவரது கதைகளைத் தொடர்ந்து ஒருவரால் வாசிக்க முடியும்.

பத்திரிகைகளின் தேவைக்கு எழுத மறுக்கும் மனநிலை கொண்ட எழுத்துக்காரர்கள் தங்கள் எழுத்தையே தொடர்ந்து தாண்ட நினைக்கும் விருப்பம் கொண்டவர்கள். தொடர்ச்சியாக ஒரு தீவிர எழுத்தாளரின் பனுவல்களை – கவிதை, புனைகதை, நாடகம் என எதுவாயினும் - வாசிக்கும்போது, ஒன்றுக்கொன்று பொதுத்தன்மைகள் இருப்பது போலத் தோன்றும். ஆனால் குறிப்பான வேறுபாடொன்றை வாசகர்களுக்குத் தராமல் போகாது. அப்படித்தருவதில் தான் தீவிர இலக்கியம் தன்னைப் பொதுவாசிப்பிலிருந்து வேறுபடுத்திக் காட்டிக்கொள்கிறது.

பொதுத்தன்மை வழியாக உருவாகும் எழுத்தாளரின் அடையாளத்தைக் கைவிட்டுவிட்டுத் தனித்தன்மைகளை உருவாக்குவதில் வழியாகவே கவனிக்கப்படும் எழுத்தாளராகவும் வரலாற்றில் நிற்க க்கூடிய எழுத்துகளைத் தந்தவராகவும் ஆகமுடியும். தனது எழுத்துகளுக்குள்ளேயே வேறுபாடுகளை உருவாக்குவதின் வழியே தன்னைப் புதுப்போக்கொன்றின் அடையாளமாக மாற்றும் முயற்சியில் ஈடுபடும் எழுத்தாளர்களைத் தேடித் தேடி வாசிக்க வாசகர்களும் திறனாய்வாளர்களும் தயாராக இருப்பார்கள். நிறைய எழுதிவிட வேண்டுமென நினைக்கும் ஒருவரால் தொடர்ந்து வேறுபாடுகளையும் சோதனைகளையும் தரமுடியாது. புதியன தேடலும் சோதனை முயற்சிகளும் இயலாத நிலையில் எழுத்தாளர்கள் தேங்கிப் போவதும் நடக்கிறது.

இப்போது புதிதாக வந்துள்ள தமிழ்வெளி இதழில் அச்சாகியுள்ள ஸீஸா இதுவரையிலான உமா மகேஸ்வரியின் கதைகளிலிருந்து முற்றிலும் வேறான ஒன்றாக எழுதப்பட்டுள்ளது. மதங்கள், கடவுளை அல்லது கடவுளின் பிரதிநிதிகளான தேவ தூதர்களை ஆதியும் அந்தமுமில்லாத பிறப்பை உடையவர்கள் எனக் காட்ட முயன்றுள்ளன. ஆணின் துணையின்றி, நேரடியாக அவதரித்தார்கள் என்பதைக் காட்டுவதற்காகக் கன்னிப்பெண்களைக் கர்ப்பம் தரித்தவர்களாகக் காட்டியுள்ளன. பெருஞ்சமயப் புனைவுகளைப் போலவே நாட்டார் தெய்வ வழிபாட்டிலும் இத்தகைய தெய்வ உருவாக்கங்கள் உண்டு. தனது பிள்ளையின் நடவடிக்கைகளில் இருபாலினத்தின் சாயல்களும் கலந்திருக்கும் நிலையில் அதனைத் தெய்வக்குழந்தை எனவும் கடவுளுக்குத் தரவேண்டிய பிள்ளை எனவும் நினைக்கும் பெற்றோர்களைப் பார்த்திருக்கக் கூடும். பெற்றோர்களின் இந்த மன நிலை உருவாக்கும் ஒதுக்குதலே ஒரு இருபால் மனிதனை வீட்டைவிட்டு வெளியேறச் செய்கிறது.

உமாமகேஸ்வரியின் கதைக்குள் சாமியாடும் அம்மாவும் அதனை ஏற்க மறுத்து அம்மாவை வெறுக்கும் மகளும் பாத்திரமாக்கப்பட்டுள்ளனர். அம்மாவின் நிலையை விவரிக்கும் அந்தக் கூற்றே மகளின் நிராகரிப்பைச் சொல்கின்றன:

அம்மாவின் மேல் சாமி வரும். அடிக்கடி. பௌர்ணமி இரவில் அம்மா வேறு வடிவுறுவாள். செக்கச் சிவந்த புடவை. விரி கூந்தல். நெற்றியில் நெருப்புக் கங்கான குங்குமம். பற்களை நறநறத்தபடி, மெல்லிய உறுமலோடு நடுக் கூடத்தில் ஒருகால் உயர்த்தி் உள்ளங்கையை அதில் நிறுத்தி மறுகால் பாதி மடிந்த நிலையில் உட்கார்ந்திருப்பாள். "பசி பசி"என்ற அவள் உறுமலுக்குப் படைக்கப் பல்வேறு பதார்த்தங்களை சமையல் அறையில் பணிப் பெண்கள் தயாரித்துக் கொண்டிருப்பார்கள்

பொரித்த மாமிசத் துண்டுகளும், மதுக் கிண்ணங்களும் அம்மாவின் முன் வைக்கப்படும். அவற்றை உண்டு அருந்திய பிறகு அவள் வேறு யாரோவாக மாறுவாள் .

அப்போது அவள் சொல்லும் வாக்கெல்லாம் பலித்ததாம் .

அம்மாவிற்குள் இயங்கும் புனித நிலையை ஏற்க மறுக்கும் மகளுக்குப் புனிதம் – சுத்தம் – கன்னிமை என எல்லாவற்றின் மீதும் வெறுப்பிருக்கிறது. ரகசியமாக்கப்படும் ஒவ்வொன்றோடும் புனிதங்களின் சாயைகள் படர்வதைத் தடுக்கமுடியாது. நமது சமூகமும் அதன் நிறுவனங்களும் காதலையும் காமத்தையும் ரகசியமாக்கி வளர்க்கின்றன. அதனால் புனிதங்களின் திரைகளோடு நகர்கின்றன.

குழப்பமும் தெளிவின்மையுமான தெய்வாம்சத்தை விவாதிக்கும் ஸீஸா கதையில் குறிசொல்லும் அம்மாவின் செயல்பாடுகளின் மீது வெறுப்புக் கொண்ட மகளின் மன உருவாக்கத்தை சீஸா பலகையின் அந்தரவெளிப்பயணமாக மாற்றி உருவகம் செய்து கதையைக் கட்டியெழுப்பியிருக்கிறார் உமா மகேஸ்வரி. கடவுளின் குழந்தையைச் சுமக்கிறேன் என்ற கூற்று உண்மையாகிவிடுமோ என்ற பதற்றமும் அச்சமும் ஆட்டுவிக்கும்போது தன்னைச் சாய்த்துக்கொள்ள ஒருதுணை இருக்கிறது என்பதை உணர்கிறது அவளது மனம்.

"ஒன்றுமில்லை. ஒன்றுமில்லை" என நினைவை ஒற்றும் குரல் அவனுடையது தான் ...பிள்ளைப் பிராயத்தின் உலகமாக உடனிருந்தவன். ஸீஸா, என்னை உயர்த்துகிறேனென்று நீ கட்புலனாகாத பள்ளத்தாக்கில் கரைந்து மறைந்தாய். நானோ அந்தரத்தில் எந்தப் பிடிமானமுமின்றி அலைக்கழிகிறேன். நீ எங்கே இருக்கிறாய்," அவன் நினைவு மேகங்களூடே கசிந்தது. "என்ன எப்பப் பாரு என்னையே பாடுபடுத்திக்கிட்டு. நான் என்ன உன் விளையாட்டுப் பொருளா?"என்று திட்டிக் கொண்டே மரக் கிளையிலேறி பூவரம் பூப் பறித்துத் தருபவன். குருத்தோலையில் கோமாளி பொம்மைகள், சாட்டைகள், குட்டிப் பெட்டிகள் உருவாக்கித் தந்து அவள் முக வாட்டம் போக்கத் தன்னையே சமயங்களில் கோமாளி ஆக்கிக் கொள்பவன். இங்கே தான். மிக அருகில் தான் அவன் சுவாசம் இழைகிறது. மிருதுத் தலையணை அவன் தோளாய் அணைக்கிறது.

சிறு பிராயத்தில் அவளுடைய ஊஞ்சலை ஆட்டி உயரப் பறக்க வைத்தவனை நினைத்தாள். எவ்வளவு சிரிப்பு. மிக உயரத்திற்கு ஊஞ்சலை அவன் ஏற்றும் போது என்ன ஒரு கூச்சல். சீ...ஸா...ப் பலகையும் அவர்கள் இருவரும் விளையாடத்தான். வளர்ந்த பிறகு சிறுவர்களும் சிறுமியரும் இங்கு வருவதில்லை. சீஸா, அப்படித் தான் அவனை அப்போதிருந்து அழைத்தாள், இங்கேயே தான் இருக்கிறான்., வீட்டையும், தோட்டத்தையும் பார்த்துக் கொண்டு. அவனை எல்லோருமே சீஸா என்றே அழைக்கிறார்கள்...தினந்தோறும் காலையில் தோட்டத்திலிருந்து அவன் எடுத்துச் சேர்த்த பூங்கொத்துகள் பணிப்பெண் மூலமாக வீட்டுக்குள் வரும், அவன் வர முடியாது. சற்றுத் தள்ளி இருந்த அந்த சீஸாப் பலகையைத் தீண்டிப் பார்த்தாள், அவனைப் போலவே தானிருக்கிறது. சிறுவயதில் தொட்டுணர்ந்த அவனுடலின் திண்மையோடு அதே வாசத்தோடு., சமீபத்தில் அவனை ஒரு நாள். ஆலயத்திற்குப் போகும் போது பார்த்தாள். கரிய சிலை போல் உறுதியான தோற்றம். சலனமே அற்ற சற்றும் நிமிர்ந்து அவளை உற்றுப் பார்க்காத விழிகள்...சிற்ப விழிகள். பிள்ளைப் பிராயத்தின் சுவடுகள் இந்த மண்ணிலிருக்கின்றன இன்னும். அவனுடைய, என்னுடைய, எங்களுடைய சுவடுகள்...புன்னகைக்கும், கலத்துச்சிரிக்கும், கண்ணாமூச்சியாடும், ஓடும் சுவடும், ஆம், அழிந்திருக்காது. அப்படியே தான் இருக்கும்.

பின்புறமிருந்து பரபரப்பான, பதட்டமான, பரவசமளிக்கக் கூடிய காலடியோசை. ஆம், அவன்தான் அவளுக்குத் தெரியும் .

ஸீஸா என்றழைக்கப்படும் அந்த ஆடவனோடு அவள் கொண்டது நட்பா, காதலா என்பதற்குள் துல்லியமாக நுழையாமல், எப்போதும் அவனது அருகிருப்பு ஒரு புத்துணர்வைத் தருவதாக இருந்தது எனக் காட்டுகிறது கதையின் புனைவு. அவர்கள் வீட்டிலும் தோட்ட த்திலும் வேலை பார்க்கும் ஸீஸாவின் உடல் வனப்பையும் அதன் அருகிருப்பையும் ரசிக்கும் அவள் அவனிடம் தன்னைத் தரவும் தயாராக இருக்கக் கூடியவள் தான். தான் தெய்வாம்சம் கொண்ட சிசுவைச் சுமக்கப்போகும் புனிதளல்ல; சாதாரணமான ஒரு பெண் என்பதை நிரூபிக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தம் அவளுக்குள் உக்கிரமாக எழும்பி ஆர்ப்பரிக்கும்போது மனவோட்டம் அப்படித்தான் முடிவெடுக்கும். அந்தப் பகுதியை எழுதும் உமாமகேஸ்வரியின் எழுத்து நடை வாசிப்பவர்களை உள்ளிழுத்துக் கொள்ளும் அழகியலாக மாறியிருக்கிறது. அந்த நுட்பத்தோடு, ஸீஸாவில் அவளை வைத்து அந்தரத்தில் – உயரத்தில் பறக்க வைத்து ரசிக்கும் ஆணின் மனவோட்டங்களையும் எழுதிக்காட்டியிருக்கலாம் என்றும் தோன்றியது. ஒரு புனைவில் இன்னும் எழுதக் கூடிய பகுதிகள் இருக்கின்றன என்பது தேர்ந்த வாசகருக்குத் தோன்றும். என்னுடைய வாசிப்பின் நீட்சியாக அந்தப் பகுதியில் இன்னும் எழுதியிருக்க வேண்டும் என்று தோன்றியது. அப்படி எழுதியிருக்கும் நிலையில் அவர்களது உறவு நட்பையும் தாண்டிய உறவாகத் தோற்றமளிக்கும் வாய்ப்பைத் தந்திருக்கும்.

சீஸாப் பலகையை உருவகமாக மாற்றி எழுதப்பெற்றுள்ள கதை, மக்களின் நம்பிக்கைக்குப் பின்னால் இருக்கும் ஒருவித மாயத்தன்மையை -மிஸ்டிக் மனோபாவத்தை எழுத நினைத்துள்ளது. இதுதான் எழுத்தாளரின் தேடலின் கண்டுபிடிப்பு. அதன் மூலம் இதுவரையிலான அவரது சிறுகதைகளிலிருந்து குறிப்பான விலகல் ஒன்றைச் செய்திருக்கிறார் உமா மகேஸ்வரி. அந்தக் கதைக்குள் வரும் இரண்டு தலைமுறைப் பெண்களின் விளக்கிக் காட்ட முடியாத மனவோட்டங்களையும் அறிந்து கொள்வதற்காகவும் வாசிக்கவேண்டிய கதையாக மாறியிருக்கிறது ஸீஸா.

பெண் உடலை உணர்தல் : உமாமகேஸ்வரியின் இரண்டு கதைகள்

ஆர்வமூட்டும் தொடக்கமொன்றைக் கதை கொண்டிருக்க வேண்டும்' என்ற இலக்கணப்படியான மரபான தொடக்கம்தான்.
'கதவு தட்டப்படுவதான உணர்வு. ஆனால் யார் தட்டியது என்று தெரியவில்லை'
என்பது போன்ற திகில் தன்மையை ஆரம்பமாகக் கொண்ட கதை உமா மகேஸ்வரியின் குளவி.(காலச்சுவடு, 200/ஆகஸ்டு, 2016) ஒற்றை நிகழ்வைக் கொண்டதாக - கதைக்குள் இருக்கும் நடுத்தர வயதுப் பெண்ணின் செயல்பாடுகளை மட்டுமே விவரிப்பதாக இருந்த கதைக்குள் வேலைக்காரப் பெண்ணொருத்தியோடு நடத்தும் அந்த ஒரேயொரு கூற்று அவளைப்பற்றிய இன்னொரு பரிமாணத்தை உருவாக்குகிறது.

“குளவி கூடுகட்டினால் நல்லதாச்சே” என்று சிரித்தவளிடம், “ அதிலெல்லாம் நம்பிக்கையில்லை, சுத்தம் பண்ணிடுங்க”என்று உள்ளே போனாள்.

இந்த ஒற்றை உரையாடலுக்குப்பின் கதைசொல்லும் முறை முழுமையாக மாறுகிறது. நினைவுக்குமிழிக்குள் ஆழ்ந்துவிடும் அந்தப்பெண்,“ அதிலெல்லாம் நம்பிக்கையில்லை” என்று சொன்ன அந்தப் பெண், ’அந்தக்குளவிக்கூடு’ பற்றிய நினைவுக்குள்ளேயே மூழ்கிப் போய்விடுகிறாள். இந்தக்கூற்று கர்ப்பம் தரித்தல், குழந்தைப்பேறு, தாய்மை என்னும் பெண்மையின் சாத்தியங்களோடு தொடர்புடைய நம்பிக்கையின்மேல் எழும் கூற்று. அதைச் சொல்லும் வேலைக்காரப்பெண் வீட்டு எஜமானியம்மாவின் இப்போதைய நிலையை அறிந்தே சொன்னாளா? என்ற கேள்விகளுக்குள் எல்லாம் நுழையவில்லை.
குளவி கூடுகட்டுவதைத் தாய்மையோடு இணைத்துப் பேசும் நம்பிக்கை அவளுக்கு இல்லை என்பதற்குக் காரணம் அறிவுசார்ந்த தெளிவு அல்ல என்பது அந்த நினைவலைகளில் வெளிப்படுகிறது. ஒரு குழந்தைக்குத் தாயான பின்னும்கூட தன் உடல் ஆணின் - கணவனின் பாலியல் விருப்ப விளையாட்டுக்களமாக இருக்க முடியாமல் போய்விட்டதே என்ற வருத்தத்தின் மேல் எழும் நினைவுகளாக அலைகின்றன. தனது உடல் தாய்மையடையும் வாய்ப்பை இழந்துவிட்டது என்பதால் ஏற்பட்ட விரக்தி என்பதைவிடத் தனது உடல் ஒரு பெண்ணின் முழுமையை இழந்து விட்டது என்பதால் ஏற்பட்ட விரக்தி அது.
‘ஒரு பெண்ணுடல் எதில் முழுமையடைகிறது’ என்ற கேள்விக்கு “ஆணின் உடலியல் தேவையைப் பூர்த்திசெய்யும் களமாக இருப்பதில்” என்ற நம்பிக்கை பெண்களுக்கு எப்போதும் இருக்கிறது; அதற்கான சாத்தியங்களைத் தனது உடல் இழந்துவிட்டது என்பதாகத் தோன்றும்போது தன் மீதே ஒரு கழிவிரக்கமும், விரக்தியும் உருவாகி அலைக்கழிப்பதாகப் பெண்கள் நினைக்கிறார்கள். பாலியல் இச்சையைத் தூண்டும் உறுப்புகளில் ஏற்படும் குறைபாடு இந்தக் கதையில் ஒரு காரணமாக உணர்த்தப்படுகிறது. அவளது ஜாக்கெட்டுக்குள் திரட்சியாக இருக்கவேண்டிய முலைகளினிடத்தில் இருப்பன இரண்டு கரும்புள்ளிகள் என்ற குறிப்பு உண்டாக்கும் எண்ணங்களின் விரிவாகக் குளவி கதை நிகழ்த்தப்படுகிறது.

கதையில் பாத்திரத்தின் மனச்சிக்கலுக்கு நோயும் அதனால் இல்லாமல் போய்விட்ட முலைகளும் காரணம் என்பது வெளிப்படையாகச் சொல்லப்படவில்லையென்றாலும், அவளது நினைவுகளின் வழியாக உணர்த்தப்படுகிறது. ஆண்கள் எழுதும் கதைகளில் வெளிப்படும் பெண்ணுடல் பற்றிய சித்திரங்களிலிருந்து பெரிதும் மாறுபடாத நுட்பமான சித்திரத்தை உமா மகேஸ்வரியின் குளவி கதை எழுதிக்காட்டுகிறது. இந்த எழுத்து பெண்ணுடலை எழுதவேண்டும் என்ற நோக்கத்தில் எழுதப்பெற்ற கதையல்ல.
‘தாய்மை’ என்னும் புனிதக் கருத்துரு உருவாக்கப்பெற்று பெண்ணுடல் மீது கவிழ்க்கப்பெற்ற சுமை என்பதை உள்ளார்ந்து எழுதிக்காட்டும் கதை.
இப்படியான எழுத்தை பெண்ணியச் சிந்தனையின் ஆணெதிர்ப்பு என்னும் ஒற்றைப்பரிமாணத்தைக் கொண்டு வாசித்து விடமுடியாது. குடும்ப அமைப்பு நபர்களின் உறவுகளால் உருவாவது என்ற பொதுவரையறையை இந்தியச் சமூகம் நிராகரிக்கிறது. இந்தியச் சமூகங்கள், குடும்ப அமைப்பை அகமணமுறை என்னும் சமூக உறவால் தீர்மானமாகும் ஓர் அமைப்பு என மறுவரையறை செய்கின்றன. இதிலிருந்து விலகி, குடும்பம் என்பது சடங்குகள், நம்பிக்கைகள், மரபுகள் வழி உருவாக்கப்படும் கருத்தியலால் கட்டப்படும் அமைப்பு எனக்காட்டுவது நவீன எழுத்தின் பணியாக இருக்கிறது.
இந்தக் கதையின் வழியாக உமாமகேஸ்வரி தன்னை நவீன எழுத்தின் தொடர்ச்சியாக நிறுவிக்கொண்டிருக்கிறார். இந்தக் கதையை மட்டுமல்ல அவரது முதல் சிறுகதைத் தொகுப்பின் தலைப்புக் கதையான மரப்பாச்சியைக் கூட பெண்ணிய வாசிப்புச் செய்ய விரும்பினால் ஆண் - பெண் என்ற இருமையெதிர்வைத் தாண்டிப் பன்முக விசாரணைகளை முன்வைக்கும், சீமாந்த போவா போன்றோரின் சொல்லாடல்களைக் கற்று விவாதிக்க வேண்டும்.
மரப்பாச்சியிலும் பெண்ணுடல் கொள்ளும் மாற்றமே – ‘முலை முளைத்தலின் கிளர்ச்சியே’ கதைப்பொருள். முளைத்து வளரும் முலைகளைக் கவனிக்கவும் அது குறித்து உரையாடவும் ஓர் அந்தரங்கமான உறவொன்றை அவாவும் குழந்தமையைத் தாண்டிய பதின்ம வயதுப் பெண்ணொருத்தியின் தவிப்பைச் சொல்லும் கதை அது. தனக்கேன நேரம் ஒதுக்கும் குடும்ப உறுப்பினர்கள் யாருமில்லாத அவளுக்கு அந்தரங்கமான உறவைத் தரும் ஒன்றாக வருகிறது அந்த மரப்பாச்சி. பரணிலிருந்து வேறு எதையோ தேடி எடுக்க முயன்ற அப்பாவின் கைக்கு அகப்பட்ட பொட்டலத்திற்கு ஞாபகங்களைக் கொண்டுவரும் பொருட்களோடு அந்த மரப்பாச்சியும் வந்தது என்று கதையைத் தொடங்கியுள்ளார் உமாமகேஸ்வரி
ஒரு மாயாஜாலப் புன்னகையோடு அதை அனுவிடம் நீட்டினார். சிறிய, பழைய மஞ்சள் துணிப்பையில் பத்திரமாகச் சுற்றிய பொட்டலம், பிரிபடாத பொட்டலத்தின் வசீகரமான மர்மத்தை அனு ஒரு நிமிடம் புரட்டிப் பார்த்து ரசித்தாள். உள்ளே என்ன? பனங்கிழங்குக் கட்டு? பென்சில் டப்பா? சுருட்டிய சித்திரக் கதைப் புத்தகம்? எட்டு வயது அனுவிற்கு இந்தப் புதிரின் திகில் தாங்க முடியவில்லை. அப்பாவின் ஆர்வமோ அது இவளுக்குப் பிடித்திருக்க வேண்டுமே என்பதாக இருந்தது. அவசர அவசரமாகப் பிரித்தபோது வெளியே வந்தது கரிய மரத்தாலான சிறிய பெண்ணுருவம். அதனுடைய பழமையே அனுவிற்குப் புதுமையானதாயிற்று.

தன்னோடு பேசவும் வினாக்களுக்கு விடைகளைச் சொல்லவும் ஆளற்ற தனிமையில் உறவாடும் ஒன்றாக மாறிவிட்ட மரப்பாச்சியைத் தனது அந்தரங்க உலகத்தின் கனவாக ஆக்கிக் கொண்ட கணங்களை எழுதும் உமா மகேஸ்வரியின் எழுத்து பெண் உணர்வுகளையும் செயல்பாடுகளையும் நுட்பமாக காட்டுகிறது

‘எனக்கு யாரிருக்கா? நான் தனி.’ அனுவின் முறையிடல்களை அது அக்கறையோடு கேட்கும். சுடுகாயைத் தரையில் உரசி அதன் கன்னத்தில் வைத்தால் ‘ஆ, பொசுக்குதே’ என்று முகத்தைக் கோணும். கொடுக்காப்புளிப் பழத்தின் கொட்டையில், உட்பழுப்புத் தோல் சேதம் அடையாமல் மேல் கறுப்புத் தோலை உரித்து நிலை மேல் வைத்தால் பகல் கனவும் பலிக்கும் என்கிற அனுவின் நம்பிக்கைகளுக்கு ‘ஆமாஞ்சாமி’ போடும். அவள் நிர்மாணிக்கிற பள்ளிகளில் மாணவியாக, தொட்டில்களில் பிள்ளையாக, சில நேரம் அம்மாவாக, கனவுலக தேவதையாக எந்த நேரமும் அனுவோடிருக்கும்.
மரப்பாச்சி புதிய கதைகளை அவளுக்குச் சொல்லும்போது, அதன் கண்களில் நீல ஒளி படரும். மரப்பாச்சி மரத்தின் இதயமாயிருந்தபோது அறிந்த கதைகள், மரம் வானை முத்தமிட்ட பரவசக் கதைகள், மழைத்துளிக்குள் விரிந்த வானவிற் கதைகள்… அவள் எல்லா நாளும் ஏதாவது ஒரு கதையின் மடியில் உறங்கினாள்.
வருடங்கள் அவளை உருகிப் புதிதாக வார்த்தன. நீண்டு, மினுமினுக்கிற கைகள்; திரண்ட தோள்கள்; குழைந்து, வளைந்த இடுப்பு, குளியல் அறையில் தன் மார்பின் அரும்புகளில் முதன் முறையாக விரல் பட்டபோது பயந்து, பதறி மரப்பாச்சியிடம் ஓடி வந்து சொன்னாள். அது தனது சிறிய கூம்பு வடிவ முலைகளை அவளுக்குக் காட்டியது.
தன்னை மரப்பாச்சியில் கண்ட கணங்களை மாற்றித் தனக்கான உலகத்தைத் தரும் இன்னொன்றாக – ஆணாக- மரப்பாச்சியை மாற்றிக் கொள்ளும் அந்தச் சிறுமிக்கு மரப்பாச்சியே எல்லாமுமாகிறது
தன் அயர்விலும் ஆனந்தத்திலும் மரப்பாச்சி மங்குவதையும் ஒளிர்வதையும் கண்டு அனு வியக்கிறாள். தன்னை அச்சுறுத்தவும் கிளர்த்தவும் செய்கிற ததும்பல்களை மரப்பாச்சியிடமும் காண்கிறாள். கட்புலனாகாத கதிர்களால் தான் மரப்பாச்சியோடு ஒன்றுவதை உணர்கிறாள்.
மேஜையில் இருக்கும் மரப்பாச்சியின் கண்கள் அவளைத் தாலாட்டும் மெல்லிய வலைகளைப் பின்னுகின்றன. அதன் முலைகள் உதிர்ந்து மார்பெங்கும் திடீரென மயிர் அடர்ந்திருக்கிறது. வளைந்து இடுப்பு நேராகி , உடல் திடம் அடைந்து, வளைந்த மீசையோடு அது பெற்ற ஆண் வடிவம் விசித்திரமாயும் விருப்பத்திற்குரியதாகவும் இருக்கிறது. அது மெதுவாக நகர்ந்து அவள் படுக்கையின் அருகில் வந்தது. அதன் நீண்ட நிழல் கட்டிலில் குவிந்து அனுவை அருந்தியது. பிறகு அது மெத்தை முழுவதும் தனது கரிய நரம்புகளை விரித்ததும் அவை புதிய புதிய உருவங்களை வரைந்தன.; துண்டு துண்டாக. அம்புலிமாமா கதைகளில் அரசிளங்குமரிகளை வளைத்துக் குதிரையில் ஏற்றுகிற இளவரசனின் கைகள். சினிமாக்களில் காதலியைத் துரத்தி ஓடுகிற காதலனின் கால்கள். தொலைக்காட்சியில் கண் மயங்கிய பெண்ணின் கன்னங்களில் முத்தமிடுகிற உதடுகள். தெருவோரங்களில், கூட்டங்களில் அவள் மீது தெறித்து , உணர்வைச் சொடுக்கிச் சிமிட்டுகிற கண்கள்
மரப்பாச்சி உருவாக்கித் தந்த கனவுலக வாழ்க்கையை விட்டு விலகி அது இல்லாத இன்னொரு வெளியில் நுழைய நேரிட்டபோது தனது உடலை வேறுவிதமாக உணர்கிறாள். ஒரு விடுமுறையில் அத்தையின் வீட்டிற்குப் போனபோது அத்தையின் கணவன் – மாமாவின் பேச்சும் உடலும் ஏற்படுத்திய உணர்த்துதல்கள் அவை
அந்தப் பயணம் அவளுக்குப் பிடித்திருந்தது. நகர்கிற மரங்கள்; காற்றின் உல்லாசம்; மலைகளின் நீலச்சாய்வு. எல்லாமும் புத்தம் புதிது.
அம்மா வற்புறுத்தி உடுத்திவிட்ட கரும்பச்சைப் பாவாடையில் அனுவின் வளர்த்தியை மாமாவும் வியந்தார். பார்த்த கணத்திலிருந்தே மாமாவிடம் இருந்து தன்பால் எதுவோ பாய்வதை உணர்ந்து அவள் கூசினாள். ‘எந்த கிளாஸ் நீ? எய்த்தா, நைன்த்தா?’ என்று கேட்டுவிட்டு பதிலைக் காதில் வாங்காமல் கழுத்துக் கீழே தேங்கிய மாமாவின் பார்வையில் அது நெளிந்தது. ‘ எப்படி மாறிட்டே? மூக்கொழுகிக்கிட்டு, சின்ன கவுன் போட்டிருந்த குட்டிப் பொண்ணா நீ?’ என்று அவள் இடுப்பைத் திமிறத் திமிற இழுத்துக் கொஞ்சியபோது மூச்சின் அனலில் அது ஊர்ந்தது. ‘சட்டை இந்த இடத்தில் இறுக்குதா?’ கேட்டு தொட்டுத் தொட்டு மேலும் கீழும் அழுத்தித் தேடிய உள்ளங்கையில் இருந்து அது நசநசவென்று பரவியது. மாமாவின் கைகளில் இருந்து தன்னை உருவிக்கொண்டு ஓடினாள் அனு.

கொட்டும் முத்தங்கள் – கன்னத்தில், உதட்டில், கழுத்தில், அவளுள் தளிர் விடுகிற அல்லது விதையே ஊன்றாத எதையோ தேடுகிற விரல்களின் தடவல், மாறாக அதை நசுக்கிச் சிதைக்கிறது. சிறிய மார்பகங்கள் கசக்கப்பட்டப்போது அவள் கதறிவிட்டாள். வார்த்தைகளற்ற அந்த அலறலில் அத்தைக்கு விழிப்புத் தட்டியது. காய்ந்த கீற்றுப் படுக்கைமீது அனுவின் உடல் சாய்க்கப்பட்ட போது அவள் நினைவின்மையின் பாதாளத்துள் சரிந்தாள். கனமாக அவள் மேல் அழுத்தும் மாமாவின் உடல். அத்தை ஓடிவரவும் மாமா அவசரமாக விலகினார். அத்தையின் உலுக்கல்; ‘அனு, என்ன அனு!’ அவளிடம் பேச்சு மூச்சில்லை. ‘பாத்ரூம் போக வந்தப்ப விழுந்துட்டா போல.’ மாமாவின் சமாளிப்பு. அத்தை மௌனமாக அவளை அணைத்துத் தூக்கிப் படுக்கையில் கிடத்துகிறாள்.
தொடர்ந்து அத்தையின் வீட்டில் இருந்து மாமாவினால் தடவப்படும் உடலாக – அத்துமீறப்படும் உடலாக இருந்துவிடக்கூடாது என்று உடலே சொல்லிக் காய்ச்சலை வரவழைத்துக் கொள்கிறது. குடும்ப உறவுகளால் அத்துமீறப்படும் பெண் உடலின் வேதிவினையைக் கவனமாக எழுதிக் காட்டும் உமா மகேஸ்வரி அதற்கான மருத்துவம் அவளது கற்பனை உலகில் – மரப்பாச்சி மூலம் உருவாக்கிக் கொண்ட கற்பனை வெளியில் இருப்பதாகக் காட்டியிருக்கிறார். அத்தை வீட்டிலிருந்து காய்ச்சலோடு திரும்பிய அந்தச் சிறுபெண் மரப்பாச்சியையே தேடுகிறாள்
அனுவின் கண்களில் நீர் கோர்த்தது. அழுகையோடு படுக்கையில் சரிந்தபோது மரப்பாச்சி சன்னலில் நின்றது. ஆனால் அது அனுவைப் பார்க்கவேயில்லை. அவளையன்றி எங்கேயோ, எல்லாவற்றிலுமோ அதன் பார்வை சிதறிக் கிடந்தது. அனுவின் தொடுகையைத் தவிர்க்க அது மூலையில் ஒண்டியிருந்தது. அதனோடான நெருக்கத்தை இனி ஒருபோதும் மீட்க முடியாதென்று அவள் மனம் கேவியது. உற்றுப் பார்த்தபோது மரப்பாச்சியின் இடை வளைந்து, உடல் மறுபடியும் பெண் தன்மையுற்றிருந்தது. மீண்டும் முளைக்கத் தொடங்கியிருந்த அதன் முலைகளை அனு வெறுப்போடு பார்த்தாள்.
எனக் கதையை முடித்திருக்கிறார்.
உயிரியல் இவ்வுலகின் உயிரிகளை ஆணென்றும் பெண்ணென்றும் வகைப்படுத்திக் காட்டப் பெரிதும் பயன்படுத்துவது அவற்றின் உடல் அடையாளங்களே. ஆணுறுப்போடும் பெண்ணுறுப்போடும் பிறப்பதின் வழியாக வேறுபடும் உடல்களில் ஆண்மையை உணர்தலும் பெண்மையை உணர்தலும் நிகழும் காலகட்டம் முக்கியமான காலகட்டம். வயதுக்கு வருதல் என்ற சொற்களால் குறிப்பிடப்படும் அந்தக் காலகட்டத்தில் பெண்ணுடலில் ஏற்படும் பருண்மையான மாற்றம் முலை முளைத்தல். அதுபோன்றதொரு பருண்மையான உடல் மாற்றம் ஆணுக்கு இல்லை. இதனாலேயே பெண்ணுடலின் மீதான ஈர்ப்பை ஆணுடல் அவாவுகிறது என்று கூடச் சொல்லலாம் இதை ஒருவித உயிரியல் நடவடிக்கையாக மட்டும் கணித்துப் பேசுவது உடலியல் மருத்துவம். ஆனால் அந்தப் பதின் பருவத்தில் மனவியல் மாற்றங்களும் தன் உடலின் புதிர்களையும் ரகசியங்களையும் தானே கண்டுபிடித்துவிடும் எத்தணிப்புகளும் ஆணுக்கும் இருக்கின்றது; பெண்ணுக்கும் இருக்கின்றது. கண்டுபிடிப்பதோடு எதிர்பாலினருக்குக் காட்டிவிடும் எத்தணிப்புகளும் நடக்கின்றன என்கிறது உளவியல் மருத்துவம்.
உடலியல் மருத்துவமும் உளவியல் மருத்துவமும் அவற்றை அணுகும் முறைமைகளிலிருந்து இலக்கியப் பனுவலாக்கம் வேறுபடுகிறது. தனிமனிதர்கள் உருவாக்கிக் கொள்ளும் அந்தரங்க வெளிக்குள் சமூகத்தின் – உறவுகளின் நுழைவு திசைமாற்றத்தை ஏற்படுத்திவிடக்கூடும் எனக் கரிசனம் கொள்கின்றன. உமாமகேஸ்வரியின் இவ்விரு சிறுகதைகளும் அத்தகைய விரிவான அலசல்களுக்குள் நுழையும் நோக்கம் கொண்டன அல்ல. இக்கதைகளின் நோக்கம் உடலில் ஏற்படும் மாற்றத்தை உணரும் பெண்ணின் இருவேறு கட்டங்களைச் சொல்வது மட்டுமே. எழுதத் தொடங்கிய காலகட்டத்தில் எழுதிய மரப்பாச்சி(2002) தோன்றுதலின் - முலை முளைத்தலின் கிளர்ச்சியைச் சொல்கிறது. 14 ஆண்டுகளுக்குப் பின் வந்த குளவி அதன் இழப்பைப் பேசுகிறது. பெண் உடலின் மாற்றங்களை அதன் நுட்பங்களோடும் உடலைப் பேசும் பெண்ணியச் சொல்லாடல்களின் விவாதங்களைக் கதைக்குள் கொண்டுவராமல் அனுபவங்களின் வெளிப்பாடாகக் கதையாக்கிய உமா மகேஸ்வரிக்குப் பெண்ணிய எழுத்துப் பரப்பில் முக்கியமான இடமுண்டு.

உணர்வுகளை எழுதும் நுட்பம்: உமா மகேஸ்வரியின் வெனில்லா


ஒரு சிறுகதைக்கு ஒற்றை நிகழ்வும் அதன் வழியாகத் தாவிச் செல்லும் மனவுணர்வுகளும் போதும் என்பதைத் தொடர்ச்சியாகத் தனது கதைகள் வழியாக நிரூபித்துக்கொண்டே இருக்கும் எழுத்தாளர் உமாமகேஸ்வரி. ஒற்றை நிகழ்வும் மிகக்குறைவான பாத்திரங்களின் தேர்வும் என்பதால், அவரது கதைகள் வாசிப்பதற்கு அதிக நேரத்தை எடுத்துக் கொள்வதில்லை. அதேநேரம் வாசித்தபின் அக்கதையைப் பற்றிய நினைவுகளைத் தொடர்ச்சியாக கிளப்பிக் கொண்டே இருக்கிறது. அதன் மூலம் வாசித்தவரின் மனதிற்குள் நீண்ட நேரம் தங்கியிருப்பதாகவும், அக்கதைகளில் இடம்பெற்ற பாத்திரங்களை ஒத்த மனிதர்களின் சந்திப்பை நினைவூட்டுக் கொண்டே இருப்பதாகவும் ஆகிக் கொள்கிறது.

கூட்டுக்குடும்ப அமைப்புகளைக் கைவிட்டுத் தனிக்குடும்ப அமைப்புக்குள் நுழைந்துவிட்ட நவீன வாழ்க்கையிலும் கூடச் சில காரணங்கள், தனிமனிதர்களைத் தனியர்களாக ஆக்கிவிடுகின்றன. அதிலும் இந்தியக் குடும்ப அமைப்பு, பெண்களைத் தனியர்களாக நினைக்க வைக்கப் பல தருணங்களை உருவாக்கிக் கொண்டே இருக்கும் ஒன்று. அந்தரங்கமான விருப்பங்கள், அனைவரும் செய்யும் செயல்களில் ஈடுபாடின்மை, நினைவுக்கு வந்துவிடும் பால்யகாலத்துக் காதல் நினைவுகள், வெளியில் சொல்லிக் கொள்ள முடியாத நோய்மைகள் போன்றன பெண்களைத் தனியர்களாக நினைக்கச் செய்வதில் முக்கியப் பங்காற்றுகின்றன. ஓய்வு நேரத்தில் புத்தகம் வாசிப்பை அனுமதிக்காத குடும்பவெளியைப் பற்றியும், கதை, கவிதை போன்றனவற்றை எழுதுவதைக் குற்றச் செயலாகப் பார்க்கும் உறவுகளையும் பல கதைகளில் பெண்கள் எழுதியிருக்கிறார்கள்.

குடும்ப அமைப்பின் பலப்பலவான உறவுகளுக்குள் வாழ நேர்ந்தாலும் தனித்திருக்கும் உணர்வைக் கொண்ட பெண்களைத் தனது கதைக்கான மையப்பாத்திரமாகப் பெரும்பாலும் தேர்வுசெய்கிறார் உமா மகேஸ்வரி. இந்தத்தேர்வே அவரது கதைசொல்லும் வடிவத்தைத் தீர்மானித்துவிடுகிறது. ஒரு குறிப்பிட்ட வெளியில் அந்தப் பாத்திரத்தை நிறுத்திவிட்டு, அதன் அலையும் மனதை எழுத்தில் கொண்டு வருவதற்காக அதனையொத்த வேறு கதாபாத்திரங்களைக் கதைக்குள் கொண்டுவருகிறார். அதன் மூலம் வாசிப்பவர்கள் மையப்பாத்திரம் நினைக்கும் காலத்திற்குள்ளும், நினைத்துக் கொள்ளும் வெளிகளுக்குள்ளும் பயணம் செய்ய வேண்டியிருக்கிறது. இந்த நுட்பம் பலரது கதைகளிலும் இடம்பெறும் நுட்பங்களில் ஒன்றுதான் என்றாலும், உமாமகேஸ்வரியின் கதைகளில் நகர்வது தெரியாமல் நகர்ந்து விட்டுத் திரும்பிவிடுகிறது என்பதுதான் அவரது சிறப்பு.

அகழ் - இணைய இதழில் வெளியாகியிருக்கும் வெனில்லா என்னும் கதையின் நிகழ்விடம் ஒரு ஸ்கேன் மையம். உடலுக்குள் குறிப்பிட்ட இந்த நோயின் அறிகுறிகள் இருக்கிறதா? அல்லது இருக்கும் நோயின் அளவு எவ்வளவு என்பதைக் கண்டுபிடித்துச் சொல்லும் நவீன மருத்துவக் கருவியைக் கொண்ட சோதனைக்கூடம் அது. அவள் மம்மோக்ராபி என்னும் புற்றுநோய் இருப்பை அறியும் சோதனைக்காகக் காத்திருக்கிறாள். தனது பெயர் அழைக்கப்படுவதற்காகக் காத்திருக்கும் போது பெண்ணின் முலைகள் சார்ந்த ஒன்று என்பதை உணர்த்தும் தொடக்கத்தைக் கொண்டிருக்கும் கதை, அதன் மீது இரண்டுவித உணர்வுகளைச் சுமந்தவளாகக் காத்திருக்கிறாள் என்பதைச் சுட்டிக்காட்டித் தொடங்குகிறது:

பதினைந்து முதல் இருபது வரையில் பிரிவுகள் அவற்றின் நுனிகளில் பால் சுரக்கும் குமிழ்கள் என்றெல்லாம் விலாவாரியாகச் சொன்னது கூகிள். அலுப்பாக அதை மூடினாள். இயர் போர்னை பொருத்திக் கொண்டு கண்களை மூடினாள். “கழுத்தின் கீழே கவிதைகள் ரெண்டு மிச்சமுள்ளதே… அதுவா, அதுவா, அதுவா…” என்று பாடியது அது. ப்ளே நெக்ஸ்ட் போட்டால் “கொப்பரைத் தேங்கா, முத்தின மாங்காய்” “மாங்கனிகள் தொட்டிலிலே தூங்குதடி கண்ணே”.

முதலில் வெளிப்படும் உணர்வு அவளது முலைக்குள் இருக்கும் நரம்புகள், பால் சுரக்கும் குமிழிகள் போன்றவற்றின் செயல்திறன்கள் பற்றிய உடல் அறிவியல் பற்றிய தேடல். இரண்டாவது முலையைப் பற்றிய ஆணின் மனம் உருவாக்கிக் கொள்ளும் காமம் சார்ந்த உருவகங்கள்.

இவ்விரு எண்ணங்களுமே அவளுக்கு இப்போது எரிச்சல் ஊட்டுவனவாக மாறி விட்டன. காரணம் இப்போது அவளது முலைகளுக்குள் நோயின் வாசம் இருப்பதாகப் பிரமை ஓடிக்கொண்டிருக்கிறது. கரிய குமிழ்கள் உதிக்கின்றன. சிறிய வெல்வட் ஸ்டிக்கர் பொட்டளவே. தேகத்தில் அறையப்பட்ட ஆணிகள் போல அந்தப் பிரமைகள் நகர்ந்து, அது மார்பகப் புற்றுநோயின் அறிகுறிகளாக இருக்கும் என்ற நினைப்பு உச்சமாகும்போது, அவளின் உடலும் மனமும் தவிப்பில் அலைகின்றன. இருக்கையில் அவளது உடல் இருப்புக் கொள்ளவில்லை என்று உணரும் செவிலியால், ‘வெளியில் சென்று வரும் யோசனை முன்வைக்கப்படுகிறது. கீழே ஐஸ் க்ரீம், காபி, பாப்கார்ன் கூட கிடைக்குது அக்கா” என்றும் வழிகாட்ட முடிகிறது. ஆனால் மனம், ‘ மரணத்தின் தருவாயில் அனைவரிடமும் எரிந்து விழுந்த அம்மாவை, தன் மகளைப் பெற்றெடுத்த பிரசவ நேரத்தை, கணவன் காட்டும் அன்பை, முலைகளைப் பற்றிய கவிதை வரிகளை என நினைத்துக்கொண்டு தாவித்தாவிப் பயணிக்கிறது.

எல்லா அலைவுகளும் தாவல்களும் இரண்டு முலைகளையும் ஸ்கேன் செய்து முடிக்கும் வரைதான். முடிந்தபின் சோதனையின் முடிவு பற்றிய எதிர்பார்ப்பு. முடிவு உடனடியாகக் கிடைக்கப்போவதில்லை; ஒருவாரத்திற்குப் பின் தான் தெரியவரும். அதனை எடுத்துக்கொண்டு அதற்கான மருத்துவரை அணுக வேண்டும் என்று தெரிந்தவுடன் ஒரு ஆசுவாசம். ஆசுவாசத்தைக் காட்டும் விதமாக மனம் நிலைகொள்கிறது. விரும்பிய உணவுப் பண்டங்களைத் தேடுகிறது. உச்சமாக ஒரு வெனில்லாவை ருசிக்கும் ஆசை. இவ்வளவு தான் கதையின் நிகழ்வுகள். அந்த வெனில்லா அவளை ஆசுவாசப்படுத்திவிட்டது என்பதை உணர்த்தும்விதமாக் கதையின் முடிவுப் பத்தியை அமைக்கிறார். காரில் ஏறி அமர்ந்தபின் ஓட்டுநரிடம் அவள் சொல்லும் சொற்கள் அவை:

“ஏதாவது பாட்டு போடுங்க அண்ணே” மாங்கனிகள் தொட்டிலே தூங்குதடி கண்ணே. மன்னவனின் பசியாற மாலையிலே பரிமாற நல்லாதானே இருக்கிறது. ஆம். எல்லாமே. மரங்கள் பறந்தன. வீடு வெகு தொலைவிற்குப் போக விரும்பினாள்

சோதனைக்கு முந்திய தவிப்பும் எரிச்சலும் பயமும் இப்போது இல்லை. முலைகளைப் பற்றிய உருவகமான ‘மாங்கனிகள் தொட்டிலிலே தூங்குதடி கண்ணே’ என்பதும் கூட அவளுக்கு இப்போது ஏற்புடையதாகவே இருக்கிறது. சூழலும் வீட்டுக்குப் போகும் பயணமும் கூட நல்லதாகவே தோன்றுகிறது.

தன்னுடைய உடல் தாங்கியிருக்கும் நோயின் தீவிரம் தரும் தவிப்பும், அதன் காரணமாக மனம் அலையும் போது உருவாகும் நினைவோட்டங்களும் முன்னும் பின்னுமாகச் சுழன்றடிப்பது தவிர்க்க முடியாத ஒன்று. நினைவின் சுழற்சிக்குள் தன்னை மட்டுமல்லாமல், தனது மூதாதையர்களையும் பக்கத்துச் சொந்தங்களையும், அவர்களின் இருப்பு மற்றும் பேச்சுகளுக்கான நியாயங்களையும் அசைபோடுவதின் வழியாக் கதையை வாசிப்பவர்களுக்கும் கடத்துகிறார். வாசிப்புத் தீனியாகப் பல்லடுக்கு உணர்வுகளை எழுதிக் காட்டும் நுட்பம் – மன உணர்வுகளை எழுதித் தரும் அந்த நுட்பம் உமா மகேஸ்வரியின் பல கதைகளில் வெவ்வேறு விதமாக வெளிப்படும் ஒன்றாக இருக்கிறது. அவரது கதைகளைத் தொகுப்பாக வாசிக்கும்போது இன்னும் தீவிரமாக இதனை உணரலாம்.

கதைக்கான இணைப்பு: https://akazhonline.com/?p=2955

தாய்மையென்னும் புனிதம்


'ஆர்வமூட்டும் தொடக்கமொன்றைக் கதைகொண்டிருக்க வேண்டும்' என்ற இலக்கணப்படியான மரபான தொடக்கம்தான். 'கதவு தட்டப்படுவதான உணர்வு. ஆனால் யார் தட்டியது என்று தெரியவில்லை' என்பதுபோன்ற திகில் தன்மையைக் கொண்ட தொடக்கம். சிக்கலான மனிதர்களை முன்னிறுத்தும் கதை என்பதான குறிப்புகள்கூட இல்லை. காலச்சுவடு 200 ஆம் இதழில் வந்துள்ள உமா மகேஸ்வரியின் குளவி என்ற தலைப்பிட்ட அந்தக் கதையை வாசிப்பதை நிறுத்திவிடலாம் என்று தோன்றியது. ஆனால் இடையிடையே ஓவியங்களோடு மூன்று பக்கத்தில் முடியும் கதைதான் என்ற நிலையில் தொடர்ந்து வாசிக்கலாம் என்று தோன்றியது.
கதைக்குள் இருக்கும் நடுத்தர வயதுப் பெண்ணின் செயல்பாடுகளை மட்டுமே விவரிப்பதாக இருந்த கதைக்குள் வேலைக்காரப் பெண்ணொருத்தியோடு நடத்தும் அந்த ஒரேயொரு கூற்று அவளைப்பற்றிய இன்னொரு பரிமாணத்தை உருவாக்குகிறது.

“குளவி கூடுகட்டினால் நல்லதாச்சே” என்று சிரித்தவளிடம், “ அதிலெல்லாம் நம்பிக்கையில்லை, சுத்தம் பண்ணிடுங்க” என்று உள்ளே போனாள்.

இந்த ஒற்றை உரையாடலுக்குப்பின் கதைசொல்லும் முறை முழுமையாக மாறுகிறது. நினைவுக்குமிழிக்குள் ஆழ்ந்துவிடும் அந்தப் பெண், “ அதிலெல்லாம் நம்பிக்கையில்லை” என்று சொன்ன அந்தப் பெண், ’அந்தக்குளவிக்கூடு’ பற்றிய நினைவுக்குள்ளேயே மூழ்கிப்போய்விடுகிறாள்.

இந்தக்கூற்று கர்ப்பம் தரித்தல், குழந்தைப்பேறு, தாய்மை என்னும் பெண்மையின் சாத்தியங்களோடு தொடர்புடைய நம்பிக்கையின்மேல் எழும் கூற்று. அதைச் சொல்லும் வேலைக்காரப்பெண் வீட்டு எஜமானியம்மாவின் இப்போதைய நிலையை அறிந்தே சொன்னாளா? என்ற கேள்விகளுக்குள் எல்லாம் நுழையவில்லை. குளவி கூடுகட்டுவதைத் தாய்மையோடு இணைத்துப் பேசும் நம்பிக்கை அவளுக்கு இல்லை என்பதற்குக் காரணம் அறிவுசார்ந்த தெளிவு அல்ல என்பது அந்த நினைவலைகளில் வெளிப்படுகிறது. ஒரு குழந்தைக்குத் தாயான பின்னும்கூட தன் உடல் ஆணின் - கணவனின் பாலியல் விருப்ப விளையாட்டுக்களமாக இருக்கமுடியாமல் போய்விட்டதே என்ற வருத்தத்தின் மேல் எழும் நினைவுகளாக அலைகின்றன.தனது உடல் தாய்மையடையும் வாய்ப்பை இழந்துவிட்டது என்பதால் ஏற்பட்ட விரக்தி என்பதைவிடத் தனது உடல் ஒரு பெண்ணின் முழுமையை இழந்துவிட்டது என்பதால் ஏற்பட்ட விரக்தி அது.

‘ஒரு பெண்ணுடல் எதில் முழுமையடைகிறது’ என்ற கேள்விக்கு ”ஆணின் உடலியல் தேவையைப் பூர்த்திசெய்யும் களமாக இருப்பதில்” என்ற நம்பிக்கை பெண்களுக்கு எப்போதும் இருக்கிறது; அதற்கான சாத்தியங்களைத் தனது உடல் இழந்துவிட்டது என்பதாகத் தோன்றும்போது தன் மீதே ஒரு கழிவிரக்கமும், விரக்தியும் உருவாகி அலைக்கழிப்பதாகப் பெண்கள் நினைக்கிறார்கள். பாலியல் இச்சையைத் தூண்டும் உறுப்புகளில் ஏற்படும் குறைபாடு இந்தக் கதையில் ஒரு காரணமாக உணர்த்தப்படுகிறது. அவளது ஜாக்கெட்டுக்குள் திரட்சியாக இருக்கவேண்டிய முலைகளினிடத்தில் இருப்பன இரண்டு கரும்புள்ளிகள் என்ற குறிப்பு உண்டாக்கும் எண்ணங்களின் விரிவாகக் குளவி கதை நிகழ்த்தப்படுகிறது.
கதையில் பாத்திரத்தின் மனச்சிக்கலுக்கு நோயும் அதனால் இல்லாமல் போய்விட்ட முலைகளும் காரணம் என்பது வெளிப்படையாகச் சொல்லப்படவில்லையென்றாலும், அவளது நினைவுகளின் வழியாக உணர்த்தப்படுகிறது. ஆண்கள் எழுதும் கதைகளில் வெளிப்படும் பெண்ணுடல் பற்றிய சித்திரங்களிலிருந்து பெரிதும் மாறுபடாத நுட்பமான சித்திரத்தை உமா மகேஸ்வரியின் குளவி கதை எழுதிக்காட்டுகிறது. இந்த எழுத்து பெண்ணுடலை எழுதவேண்டும் என்ற நோக்கத்தில் எழுதப்பெற்ற கதையல்ல.
‘தாய்மை’ என்னும் புனிதக் கருத்துரு உருவாக்கப்பெற்று பெண்ணுடல் மீது கவிழ்க்கப்பெற்ற சுமை என்பதை உள்ளார்ந்து எழுதிக்காட்டும் கதை. இப்படியான எழுத்தை பெண்ணியச் சிந்தனையின் ஆணெதிர்ப்பு என்னும் ஒற்றைப்பரிமாணத்தைக் கொண்டு வாசித்துவிடமுடியாது. குடும்ப அமைப்பு நபர்களின் உருவுகளால் உருவாவது என்ற பொதுவரையறையை இந்தியச் சமூகம் நிராகரிக்கிறது. இந்தியச் சமூகங்கள், குடும்ப அமைப்பை அகமணமுறை என்னும் சமூக உறவால் தீர்மானமாகும் ஓர் அமைப்பு என மறுவரையறை செய்கின்றன. இதிலிருந்து விலகி, குடும்பம் என்பது சடங்குகள், நம்பிக்கைகள், மரபுகள் வழி உருவாக்கப்படும் கருத்தியலால் கட்டப்படும் அமைப்பு எனக்காட்டுவது நவீன எழுத்தின் பணியாக இருக்கிறது. இந்தக் கதையின் வழியாக உமாமகேஸ்வரி தன்னை நவீன எழுத்தின் தொடர்ச்சியாக நிறுவிக்கொண்டிருக்கிறார். இந்தக் கதையைப் பெண்ணிய வாசிப்புச் செய்ய விரும்பினால் ஆண் - பெண் என்ற இருமையெதிர்வைத் தாண்டிப் பன்முக விசாரணைகளை முன்வைக்கும், சீமாந்த போவா போன்றோரின் சொல்லாடல்களைக் கற்று விவாதிக்க வேண்டும்.

http://www.kalachuvadu.com/current/issue-200/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BF

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

தணிக்கைத்துறை அரசியல்

நவீனத்துவமும் பாரதியும்