இலக்கிய இதழ்கள் :விடுதலைக்கு முன்னும்பின்னுமான சிற்றிதழ்ப் போக்குகள்


அம்ருதா, அரும்பு, உயிர்மை, பேசும் புதிய சக்தி, காக்கைச் சிறகினிலே, புதிய கோடாங்கி, உங்கள் நூலகம், புத்தகம் பேசுது முதலான மாத இதழ்கள் எனது முகவரிக்கு ஒவ்வொரு மாதத்தொடக்கத்திலும் வந்துவிடுகின்றன. இவற்றில் தொடர்ந்து எழுதுகிறேன் அல்லது எப்போதாவது எழுதுவேன் என்பதற்காக அதன் ஆசிரியர்கள் அனுப்பி வைக்கிறார்கள். காலச்சுவடு, தீராநதி இரண்டிலும் எழுதினால் அந்த மாதம் மட்டும் அனுப்புவார்கள். மற்ற மாதங்களில் கடைக்குப் போய் வாங்கிக்கொள்ள வேண்டும்.
நான் மாணவனாக இருந்த காலத்திலில் தொடர்ச்சியாக வாங்கி வாசித்த தாமரை, செம்மலர் போன்றனவற்றை நிறுத்தி கால் ஆண்டுக்கும் மேலாகி விட்டது. மாணவர்கள் சிலரிடம் வாங்கும்படி சொன்னால் வாங்க மறுக்கிறார்கள். வாங்க மறுக்கும் அவர்கள் சந்தா கட்டிக் காலச்சுவடு, விகடன் தடம், உயிர் எழுத்து, தீராநதி போன்றனவற்றை வாங்கிப் படிக்கிறார்கள். அவர்களிடமிருந்து பண்டமாற்றாக வாங்கிப் படித்துவிட்டுத் திருப்பிக் கொடுத்துக்கொண்டிருக்கிறேன்.
 
1990- களின் தொடக்கத்தில் அறிமுகமான உலகமயம், தாராளமயம், தனியார் மயம் என்ற மூன்றின் தாக்கங்கள் இலக்கிய இதழ்களுக்கு வந்து சேர 10 ஆண்டுகள் தேவைப் பட்டன. எழுத்தியக்கத்தின் அடையாளமாகத் தொடங்கப்பட்ட இலக்கிய இதழ்களை எழுத்தாளரின் அடையாளமாக மாற்றியது சுந்தர ராமசாமியின் காலச்சுவடு. தொடங்கப்பட்ட ஆண்டு 1994. 2000-க்குப் பின்னான ஆண்டுகளில் ஆரம்பிக்கப்பட்டுக் கடந்த 20 ஆண்டுகளின் இலக்கியப் போக்குகளைத் தீர்மானித்துள்ள இதழ்களில் பலவற்றைத் தொடர்ச்சியாகவும் சிலவற்றை அவ்வப்போதும் வாசித்துக் கொண்டிருக்கிறேன். அந்த வாசிப்பின் விளைவாகச் சில கேள்விகள் எனக்குள் எழுந்ததுண்டு. இந்தக் கட்டுரை அந்தக் கேள்விகளுக்கான விடைதேடலின் ஒரு பகுதியே என்று சொல்லலாம்.
 
கேள்விகளில் முதன்மையானது:

எந்தவொரு இலக்கிய இயக்கத்தின் அடையாளமாக இந்த இதழ்கள் வருகின்றனவா? உலக அளவில் அல்லது தேசிய அளவில் அல்லது மாநில அளவில் முன்னெடுக்கப்படும் இலக்கியப் போக்கோடு தொடர்புடைய அடையாளம் இவ்விதழ்களுக்கு இல்லையே? இலக்கிய இயக்கத்திற்குப் பின்புலமாக இருக்கும் சமூகத்தின் கேள்விகளையாவது இந்த இதழ்களின் எழுத்துப்பரப்புகள் வெளிப்படுத்துகின்றனவா? வெளிப்படுத்தப்படாமல் தவிர்க்கின்றன என்றால் அதற்கான காரணங்களில் ஒன்றாக உலகமயத்தின் வரவையும், அதன் வழியாக உருவான பின் நவீனத்துவ மனநிலையையும் சொல்லலாமா? இதைப் புரிந்துகொள்ள என்ன செய்யலாம்? இப்படியான கேள்விகளுக்குக் கிடைக்கும் முதன்மையான பதிலாக நான் நினைத்துக் கொள்வது சிறுபத்திரிகைகளின் ஆத்மார்த்தமான ஈடுபாடொன்றைக் கைவிட்ட குணம் ஒன்று இருக்கிறது என்பதாகும். அந்தக் குணம் லாபத்தை முதன்மை நோக்கமாகக் கொண்ட வணிகத்தோடு சமரசம் செய்துகொண்டது.
இன்று வெளிவரும் இடைநிலை/ இலக்கியப்பத்திரிகை ஒவ்வொன்றுக்கும் பின்னே ஒரு பதிப்பகம் இருக்கிறது; அப்பதிப்பகத்தின் வழியாகப் புத்தகக் காட்சிகளில் வெளியிட நூல்கள் வேண்டும்; நூல்களை எழுத எழுத்தாளர்கள் வேண்டும்; எழுத்தாளர்களை எழுதவைக்க ஒரு இதழ் வேண்டும். இதழ்களில் எழுதப்பட்டவை நூலாக்கப்பட வேண்டும். புதிதாக உருவாகியுள்ள வணிகக் கட்டமைப்பின் அடையாளங்களாக இவ்விதழ்கள் வருகின்றன
 
ஒருவிதமான வட்டப்பாதையில் நடக்கும் வினைகளில் – சுழற்சியில்- நடந்து கொண்டே இருக்கும் வினையாற்றல்களில்- ஆரக்கால்கள் வியாபார நீட்சிகளாக இருக்கின்றன. அவை இணைக்கப்படும் குடமும் சட்டகமும் பதிப்பகங்களின் வியாபார உத்திகளாக இருக்கின்றன. சுழல் வட்ட வணிக வினையில் எப்போதாவது சிறுசிறு விலகல்கள் ஏற்படலாம். அவை வெளியிலிருந்து தாக்கும் வணிகத் தாக்குதலாகவும் கற்றுத்தேறிய வணிக உத்திகளாகவும் பெரும்பாலும் இருக்கும். சிலநேரங்களில் உள்ளிருந்து கிளம்பும் சமூக நெருக்கடிகளும்கூட விலகல்களை உருவாக்கவே செய்துள்ளன. இவற்றைச் சமாளித்து அல்லது உள்வாங்கி வெற்றிகரமாக ஆக்கும் உத்திகள் பதிப்பகத்தின் / இதழின் முதலாளிகளுக்குக் கைகூட வேண்டும். அத்தகையவர்கள் திரும்பவும் வட்டப்பாதைப் பயணத்தை உறுதிசெய்து விடுவார்கள்.
 
நானே இரண்டுமாயிருந்து உருவாக்கிக்கொள்ளும் இந்தப் பதிலோடு தொடர்ச்சியான சில பதில்களும் சேர்ந்துகொள்ளும். பதிப்பகங்களோடும் இதழ்களோடும் தொடர்புடைய வெளியீட்டு விழாக்கள், கலந்துரையாடல்கள், அரசு மற்றும் தனியார் நடத்தும் இலக்கிய விழாப் பங்கேற்புகள், உள்நாட்டு- அயல்நாட்டுப் பயணங்கள், விருதுக்குழு உறுப்பினர் என்னும் அதிகாரம், விருதளிப்புகள், கிடைக்கும் விருது எனப் போட்டிசார் தொடர்ச்சிகளும் இணைந்து கொள்கின்றன. சங்கிலிப்பிணைப்புகளால் ஆனவைகளாக இலக்கியம்சார் வினைகள் தொழிற்பட்டுள்ளன. ஆரம்பிக்கப்பட்ட பதிப்பகமென்னும் நிறுவனத்திற்கு ஒவ்வோராண்டும் வெளியிட நூல்கள் தேவை என்ற பதிலால் வினாக்கள் காணாமல் போய்விடும்.


கருத்து அல்லது கருத்தியல் ஒன்றை உருவாக்கித் தீவிரமாக விடை காணமுயன்ற நவீனத்துவ மனநிலை தொலைந்து, தற்காலிகத்தின் - தற்செயலான சமாதானத்தின் பகுதியாக பின் நவீனத்துவமன நிலைக்கு நானும் மாறிவிட்டதால் கிடைக்கும் பதிலில் ஆறுதல் அடைந்து கடந்து வந்திருக்கிறேன். என்றாலும் இவையெல்லாம் எல்லாம் இலக்கிய இதழ்களா? சிறுபத்திரிகைகளின் குணங்களைக் கொண்டவைகளா? இவற்றின் பயணங்கள் அல்லது இலக்குகள் எவற்றை நோக்கி நகர்கின்றன என்ற கேள்விகளுக்கான விடைகளைத் தேடவும் வேண்டியிருக்கிறது. இந்த வினாக்களுக்கான விடைகளை இவ்விதழ்களின் கடந்தகாலப் பதிவுகளிலும் நிகழ்காலப் போக்குகளிலும் தேடிக் கண்டுபிடிக்கலாம். அதற்கு அடித்தளமாக 21 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் தமிழில் தோன்றிய இலக்கிய இதழ்களின் செயல்பாடுகளையும், சிறுபத்திரிகைகளின் அடையாளங்களையும் தொகுத்துக் கொண்டு பகுத்துப்பார்த்து, அவற்றில் எவையெல்லாம் தொலைந்து போயிருக்கின்றன; தொலைக்கப்பட்டிருக்கின்றன என விவாதிக்கும்போது நிகழ் காலத்திற்கான விடை கிடைக்கக்கூடும்.


இலக்கிய இதழ்(சிறுபத்திரிகை)களின் தொடக்கம்

‘இலக்கிய இதழ் என்பதற்கான வரையறைகள்’ இவைதான் என்பதான திட்டமில்லாமல் உருவான இதழ்களே பின்னர் இலக்கிய இதழ்களாக அடையாளப்பட்டிருக்கின்றன; அப்படியொரு அடையாளத்தை உருவாக்கிக் கொண்டதின் முதன்மைக் காரணியாக ஓர் இலக்கியவாதியின் ஆசியரித்துவம் இருந்திருக்கிறது. தேசியவாதம் என்னும் அரசியல் நிலைபாட்டை முன்னெடுக்கத் தோன்றிய (1933, செப்டம்பர்,7) மணிக்கொடிக்கு ஸ்டாலின் சீனிவாசன் ஆசிரியராக இருந்தபோது இலக்கிய இதழ் என்ற அடையாளம் இல்லை. 1935 மார்ச்சில் 35 ரூபாய் சம்பளத்தில் வேலைக்குச் சேர்ந்த பி.எஸ்.ராமையா என்ற சிறுகதைக்காரரால் தான் இலக்கிய இதழ் என்ற அடையாளம் கிடைத்தது என வரலாறு சொல்கிறது.
கோட்டைக் கொடி மரத்தில் பறந்த யூனியன் ஜாக் திடீரென்று கீழே விழுந்தது.‘விழுந்தது ஆங்கிலக்கொடி, இனி அங்கு பறக்க வேண்டியது நமது மணிக்கொடி’ என்றேன், அதுவே எங்கள் பத்திரிகைக்குப் பெயராகட்டும் என்று குதூகலத்துடன் முடிவு செய்தோம். மூவரும் கையெழுத்திட்டு “மணிக்கொடி”யைத் தமிழ் நாட்டுக்கு அறிமுகம் செய்தோம். என்று எழுதுகிறார் பி. எஸ், ராமையா. இலண்டனில் இருந்து வெளிவந்து கொண்டிருந்த 'சண்டே அப்சர்வர்' என்ற வாரப் பத்திரிகையை ஆதர்சமாகக் கொண்டு செப்டெம்பர் 17 ,1933 இல் தொடங்கப்பட்ட மணிக்கொடி சிற்றிதழ் பற்றிய குறிப்பு இது.
 
பி. எஸ். ராமையா, 1935 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் மணிக்கொடியைத் திரும்பவும் நடத்த முன்வந்தார். இவர் காலத்தில், கி. ராமச்சந்திரன் மணிக்கொடியில் இணைந்தார். வாரப்பத்திரிகையாக இயங்கி வந்த மணிக்கொடி, இருவார இதழாக வெளிவரத் தொடங்கியது. இராமையாவின் காலத்து மணிக்கொடி, சிறுகதைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தது. மேலும், நவயுகப்பிரசுரம் என்ற நிறுவனம் நிறுவப்பட்டு, அதன் மூலம் புத்தகங்கள் வெளிவந்தன. அந்தத் தொடக்கமேகூட இதழோடு இணைந்த பதிப்பகத்தொடக்கமாகவே இருந்துள்ளது
 
இந்திய விடுதலைக்குப் பின் தோன்றி 2000 வரை செல்வாக்குச் செலுத்திய இலக்கிய இதழ்களின் மொத்தத் தொகுதிகள் கிடைக்கும் நூலகங்கள் எவையும் இப்போதும் சாத்தியமாகவில்லை. இணையத்தின் பெருக்கத்திற்குப் பின் கொஞ்சம் கொஞ்சமாகச் சாத்தியாமாகி வருகின்றது. இந்நிலையில் எனது வாசிப்பனுவங்கள் வழியாகவே அந்தக் கேள்விகளுக்கான விடைகளைத் தேட முயல்கின்றேன். பாரதக் கதைகளின் பெரிய எழுத்துப் பனுவல்களையும் விராடபர்வத்தையும் சக்கரவர்த்தித் திருமகனையும் வாசித்த பள்ளிப்பருவம் எனக்குண்டு என்றாலும் இதழ்களை வரிசையாக வாசிக்கும் வாய்ப்புகள் கல்லூரிக் காலத்தில்தான் ஏற்பட்டன. புகுமுக வகுப்பு மாணவனாக அமெரிக்கன் கல்லூரியின் டேனியல்போர் நூலகத்திற்குள் நுழைந்த பின்னரே நான் இதழ்கள் வாசிக்கும் மாணவனாக மாற்றம் பெற்றேன்.

இந்தியாவில் அவசரநிலைக்காலம் அறிவிக்கப்பெற்ற ஆண்டில்தான் எனது கல்லூரிப் பருவத்தின் தொடக்கமும் நிகழ்ந்தது. புதுமுகவகுப்புக் காலத்தில் அவசரநிலை எதிர்ப்பின் வழியாக அறிமுகமான துக்ளக்கைத் தொடர்ந்து, தமிழ் இலக்கிய மாணவனாக மாறியபோது முதல் இலக்கிய இதழாகக் கணையாழி. அறிமுகமானது. அறிமுகப்படுத்தியவர் எனக்கு நவீன இலக்கியங்களைக் கற்பித்த ஆசிரியர் சாமுவேல் சுதானந்தா. கணையாழியைத் தொடர்ந்து தீபத்தையும் வாசிக்கச் செய்தவரும் அவரே. அரசியலற்ற இலக்கியத்தை அறிமுகப்படுத்தும் அவரது நிலைபாட்டிற் கெதிரான நிலையில் திராவிட இயக்க இலக்கியங்களைச் சொல்லவும் இடதுசாரி இதழ்களின் நோக்கங்களைப் பேசவும் ஆசிரியர்கள் துறையில் இருந்தார்கள். அடுத்தடுத்த மாதங்களில் செம்மலர், தாமரை போன்ற இதழ்களின் அறிமுகங்கள் கிடைத்தன.

என்னைப்போலவே ஆசிரியர்களின் தூண்டுதலால் இலக்கிய இதழ்களை அறிமுகப்படுத்திக்கொள்ளும் வாய்ப்புகள் பெறாதவர்களுக்கும்கூட தமிழின் நவீன இலக்கியப் பரப்பில் இருந்த இலக்கியப் போக்குகள், இலக்கிய இயக்கங்கள், அவற்றிற்குப் பின்னிருந்த அரசியல், சமூக அக்கறைகள், அவ்வக்கறைகளால் இலக்கிய உருவாக்கத்தில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் சிதைவுகள் பற்றிய விவாதங்களைக் கூடுதல் குறைவுகள் இல்லாமல் சொன்னவராக வல்லிக்கண்ணனையே சொல்ல வேண்டும். விடுதலைக்குப் பின்னான நவீனத் தமிழிலக்கியத்தின் வளர்ச்சிகளை உடனுறை மனிதனாக பார்த்துப் பதிவுசெய்த இலக்கிய வரலாற்றுத் தன்மை கொண்ட அவரது நூல்களுக்கு இலக்கிய இதழ்களின் பெருமதிகளைக் கட்டமைத்ததில் பெரும்பங்குண்டு. இந்தக் கட்டுரைக்குத் தேவையான தரவுகளைக்கூட விடுதலைக்குப் பின்னர் வந்த இதழ்களின் தொகுப்புகளைப் பார்த்துத் திரட்டவில்லை. அந்த இதழ்களின் எழுத்துகளிலிருந்து தொகுக்கப்பட்ட கவிதை, கட்டுரை, கதைகளைக் கொண்ட தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிகளிலிருந்தே முன்வைக்கிறேன்

நா.பார்த்தசாரதியின் ஆசிரியத்துவத்தில் வந்துகொண்டிருந்த தீபத்தில் முழுமையாகவும் வேறுசில இதழ்களில் அவ்வப்போதும் எழுதிப் பின்னர் நூல்களாக்கப்பட்ட வல்லிக்கண்ணனின் புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் (1977), சரஸ்வதிகாலம் (1980) பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை (1981), சரஸ்வதி காலம் (1982) எழுத்தாளர்கள்-பத்திரிகைகள்- அன்றும் இன்றும் (1986), தமிழில் சிறு பத்திரிகைகள் (1991) - தீபம் யுகம் (1999) போன்ற நூல்கள் விடுதலைக்குப்பின்னான இலக்கிய இதழ்களின் கருத்தியல் வெளிப்பாடுகளையும் வெளிப்படுத்திய ஆசிரியர்களையும் அறிந்துகொள்ள உதவும் முக்கியமான ஆவணங்கள். அவற்றோடு பி.எஸ்.ராமையாவின் மணிக் கொடி காலம்(1980) நூலுக்கும் அதில் பங்குண்டு.

சிறுபத்திரிகை என்ற அடையாளத்தையும், இலக்கிய இதழ்கள் என்ற அடையாளத்தையும் தனதாக்கிக் கொண்ட இதழ்களை முன்வைத்தே இவ்விருவரும் விரிவாக எழுதியுள்ளனர். எல்லா வினைகளும் இன்னொரு வினையின் எதிர்வினை என்பதான அறிவியல் விதி இலக்கிய இதழ்களின் தோற்றத்திலும் இருந்திருக்கும் என்பதை வல்லிக்கண்ணனும் பி.எஸ்.ராமையாவும் சொல்லவில்லை என்றாலும் அவர்களது விவரிப்பின் வழியாகவும் விவாதங்களின் வழியாகவும் கவனமான வாசிப்பால் எளிதாக உணரமுடியும். இவ்வடையாளத்தேடல்கள் பெரும்பான்மைப் போக்கால் – வணிக இதழ்களால் கட்டமைக்கப்பட்ட ரசனைக்கு எதிரானவை சிறுபத்திரிகைகள் என்ற புரிதலை உருவாக்கின. கும்பல் வாசிப்புக்குத் தீனியளித்த கதைகள், கட்டுரைகள், நகைச்சுவைத் துணுக்குகள், அரசியல்,சினிமா, நாடக, இசை குறித்த குறிப்புகளோடு இலக்கியம் பற்றிய அறிமுகங்களையும் கொண்டனவாக வெளிவந்த ஆனந்தவிகடன், கல்கி, கலைமகள்,சுதேசமித்திரன் போன்ற வணிகப் போட்டி இதழியலுக்கு - வெகுமக்கள் இதழ்களுக்கு மாற்றாக மணிக்கொடி,சரஸ்வதி, சாந்தி, இலக்கியவட்டம் போன்றவற்றைத் தொடக்கத்தில் சிறுபத்திரிகைகள் எனக் குறிக்கும் வழக்கத்தை இவ்விருவரின் நூல்களில் காண முடிகிறது. வெகுமக்கள் ரசனைக்குரிய எழுத்துகளுக்கு மாற்றாக எழுதப்பெற்ற இலக்கியப்பனுவல்களைத் தாங்கியன சிற்றிதழ்கள் என்பதுபோலவும் அவற்றில் எழுதப்படும் கதைகள், கவிதைகள், கட்டுரைகள் போன்றனவே தீவிர இலக்கியத்தின் அடையாளம் என்பதாகவும் முன்னிறுத்தப்பட்டன.

பேரடையாளங்களும் சிற்றடையாளங்களும்

இலக்கியப் பனுவல்களின் சிற்றடையாளம் முதன்மையாக்கப்பட்டது போலவே அரசியல் தளத்தில் அப்போதைய பேரடையாளமாக உருப்பெற்றுவந்த திராவிட இயக்கச் செயல்பாடுகளும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் செயல்பாடுகளும் அவற்றுக்குத் துணையாக ஆரம்பிக்கப்பெற்ற திராவிட இயக்க இதழ்களும் சிற்றெல்லைக்குள் வராது என வரையறுக்கப்பட்டு ஒதுக்கப்பட்டன. ஆனால் மணிக்கொடி தொடங்கப் பெற்றதற்கு முன்பே பெரியார் ஈ.வெ.ராமசாமியின் குடியரசு (1925) தொடங்கப்பட்டு வெளிவந்தது. திராவிட இயக்க இதழ்களைக் குறித்து விரிவாகப் பேசும் திருநாவுக்கரசு 265 திராவிட இயக்க இதழ்களைப் பட்டியலிட்டுள்ளார். அவற்றுள் 14 இதழ்கள் முதன்மையானவை என்கிறார்.
· திராவிட முன்னேற்றக் கழகம் அறிஞர் அண்ணா தலைமையில் தமிழகத்தின் ஆட்சிபீடத்தைக் கைப்பற்றிய போது அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தோர் பெரும்பாலோர் இதழாசிரியர்களாக இருந்த மாட்சிமையைக்கண்டு உலகமே வியந்து பாராட்டியது. நாவலர் இரா. நெடுஞ்செழியன் மன்றம், மக்களாட்சி இதழ்களையும், கலைஞர் மு. கருணாநிதி மறவன்மடல், முரசொலி, வெள்ளிவீதி, முத்தாரம் இதழ்களையும், சத்தியவாணிமுத்து அன்னை இதழையும், கே. ஏ. மதியழகன் தென்னகம் இதழையும் ஆசிரியராகப் பொறுப்பேற்று இதழ் பணியாற்றினார்கள். திருவாரூர் கே. தங்கராசு அவர்களின் பகுத்தறிவு, திராவிட ஏடு, வே. ஆனைமுத்து அவர்களின் குறள் முரசு, குறள் மலர், சிந்தனையாளன், Periya Era, சா. குருசாமி அவர்களின் குத்தூசி, சாமிசிதம்பரனாரின் அறிவுக்கொடி, இனமுழக்கம், தமிழ் மன்றம், ஏ.பி. சனார்த்னம் அவர்களின் தோழன், கவிஞர் கண்ணதாசனின் தென்றல், ஈ.வே.கி. சம்பத் அவர்களின் புதுவாழ்வு, விடிவெள்ளி முருகு சுப்பிரமணியம் அவர்களின் பொன்னி, காஞ்சி மணிமொழியாரின் போர்வாள், கா. அப்பாத்துரையாரின் முப்பால் ஒளி, நாஞ்சில் கி.மனோகரனின் முன்னணி, இலக்கியவாதி சுரதா அவர்களின் விண்மீன், க. அன்பழகனின் புதுவாழ்வு, இராசாராம் அவர்களின்திருவிளக்கு, எஸ்.எஸ். தென்னரசு அவர்களின் தென்னரசு, பாவலர் பாலசுந்தரத்தின் தென்சேனை, ஏ.வி.பி. ஆசைத்தம்பியின் திராவிட சினிமா, தனிஅரசு, டி.கே. சினிவாசனின் தாயகம்,, செ. கந்தப்பனின் செங்கதிரோன், திருக்குறள் சா. முனிசாமியின் குறள் மலர், சி. சிட்டிபாபுவின் கழகக் குரல், பி.எஸ். இளங்கோவனின் கலையாரம், ஆலடி அருணாவின் எண்ணம், இராம அரங்கண்ணலின் அறப்போர் முதலான நூற்றுக்கணக்கான திராவிடர் இயக்க இதழ்கள்ஏற்படுத்திய விழிப்புணர்வை– கருத்துப் பரப்பல் சாதனையை வரலாறு என்றும் பறைசாற்றிக் கொண்டே இருக்கும் என்பது திருநாவுக்கரசின் கூற்று.

உணர்ச்சிகரமான பேச்சுகள், கூட்டத்தை மொத்தமாகத் திசை திருப்பும் உரைகள், எளிமையான எதிர்வுகள் வழியாகக் கட்டமைக்கும் உச்சநிலைக் காட்சிகள் கொண்ட நாடகங்கள், கதைகள், திரைப்படங்கள் போன்றவற்றையும் வெகுமக்கள் ரசனைக்குரியன எனப் பேசிய சிறுபத்திரிகைகள், அக்கால கட்டத்தின் வெகுமக்கள் அரசியல் கட்சியான திராவிட முன்னேற்றக் கழகத்தையும் இடதுசாரிக் கட்சிகளையும் ஒருசேர எதிர்த்தன. அவ்வெதிர்ப்பை நேரடியாகப் பேசாமல், கலை. இலக்கியங்களில் அரசியல் வெளிப்பாடு தவிர்க்கப்பட வேண்டுமென வலியுறுத்தின. இந்த அளவுகோல்கள் எதையும் முன்வைத்து உள்வாங்காமல் - கண்டு கொள்ளப்படாமல் -ஒதுக்கப்பட்ட இதழ்கள் தலித்திய இதழ்கள். 1907 இல் அயோத்திதாச பண்டிதரால் ஆரம்பிக்கப்பட்ட ஒரு பைசாத்தமிழன் இலக்கிய வாசிப்பில் நிகழ்த்திய மாற்று வாசிப்புகள் முக்கியமானவை. அவையெல்லாம் இலக்கிய இதழ்கள் குறித்த வரலாற்றாசிரியர்களால் கண்டுகொள்ளப் படவில்லை. தலித்திய இதழியல் வரலாறு பற்றி விரிவாக எழுதியுள்ள ஜெ.பாலசுப்பிரமணியம் தனது சூர்யோதயம் முதல் உதய சூரியன் வரை என்னும் நூலில் மொத்தம் 42 தலித் இதழ்கள் குறித்து அறிமுகம் செய்துள்ளார். இவையெல்லாம் விடுதலைக்கு முந்திய சிற்றிதழ்கள். தமிழர்களின் அறிவியக்கத்திலும் இலக்கியப்பார்வையிலும் பங்காற்றியவை. இவ்விதழ்களைக் கண்டுகொள்ளாமல் ஒதுக்கியதற்குத் திராவிட இயக்க வரலாற்றாசிரியர்களையும் இலக்கிய வரலாற்றாசிரியர்களையும் குறைகூறும் ஸ்டாலின் ராஜாங்கம், ஜெ.பாலசுப்பிரமணியம் போன்றவர்கள் சிறுபத்திரிகைகள் அல்லது இலக்கியப் பத்திரிகைகள் என்பதில் கறாரான ஒதுக்குதல் கோட்பாட்டை முன்வைத்த க.நா.சுப்பிரமணியம், வல்லிக்கண்ணன், பி.எஸ், ராமையா தொடங்கி ராஜமார்த்தாண்டன், வேதசகாயகுமார் வரை நீளும் இலக்கிய வரலாற்றாசிரியர்களைக் கண்டுகொள்ளாமல் ஒதுக்குவது ஏனென்று தெரியவில்லை. ஒட்டுமொத்தமாக, தமிழ் இதழியல் சூழலை ஆராய்ந்தால் சிற்றிதழ் – வெகுசன இதழ்கள் என்பன முற்றிலும் இலக்கியத் திறனாய்வுகள், இலக்கிய விமர்சனங்கள், இலக்கியத்தின் புதிய முயற்சிகள், என இலக்கியத்தை மட்டுமே மையப்படுத்தி பகுக்கப்பட்டுள்ளது தெளிவாகலாம். அந்த மையம் அரசியலைப் பேசும் பேச்சுகளை மட்டுமே விலக்கவேண்டுமென நெருக்கடி தரவில்லை. சமூகப்பிரிவுகள், அச்சமூகங்களின் உரிமைகள், போராட்டங்கள் அதன் வழியான விடுதலை போன்றனவற்றையும் கூட ஒதுக்கிவைக்க வேண்டுமெனப் பேசியுள்ளன.
 
இலக்கியத் தரம்வாய்ந்த சிற்றிதழாகச் சி.சு.செல்லப்பாவின் எழுத்து இதழை முன்வைப்பதில் பலரும் போட்டிபோடுகின்றனர். ஆனால் எழுத்து ஆரம்பிக்கப்படுவதற்கு முன்பே க.நா.சுப்பிரமணியம் சந்திரோதயம், சூறாவளி போன்ற இதழ்களை நடத்தியதாக வல்லிக்கண்ணன் எழுதுகிறார். அத்தோடு கிராம ஊழியன், கலாமோகினி போன்ற இதழ்களிலும் சரஸ்வதி தொடங்குவதற்கு முன்பு 1950-51 வந்தன என்று வல்லிக்கண்ணனே எழுதுகிறார். என்றாலும் வல்லிக்கண்ணனும் எழுத்துவையே அசலான இலக்கிய/ சிறுபத்திரிகையாக வரையறை செய்கிறார்.ஆய்வாளர் ராஜமார்த்தாண்டன் (2005) சிறுபத்திரிகை சி.சு.செல்லப்பாவின் ‘எழுத்து'(1959) இதழிலிருந்து தொடங்குவதாகவே கூறுகிறார். சிற்றிதழ்களின் ஆய்வாளராகக் கருதப்படும் வல்லிக்கண்ணன் அவர்களும் தமிழில் சிறு பத்திரிகைகள் என்ற நூலில்(1991) இதே கூற்றை முன்வைப்பது குறிப்பிடத்தக்கது.
 
‘புதுமை இலக்கிய மாத ஏடு’ என்ற அறிமுகத்துடன் பிரசுரம் கண்ட முதல் ‘எழுத்து’ சிற்றிதழின் நான்கு பக்க முன்னுரையில் ‘முழுக்க முழுக்க கருத்து ஆழமும் கனமும் உள்ள ஓர் இலக்கியப் பத்திரிகையை இந்தப் பாமரப் பிரியமான பத்திரிகைப் பரப்புக் காலத்தில் ஆரம்பிப்பது ஒரு சோதிக்கின்ற முயற்சிதான்’ (ஜனவரி 1959) எனக் குறிப்படப்பட்டுள்ளது.
 
க.நா.சு நடத்தி வந்த சூறாவளி, சந்திரோதயம் பத்திரிகைகளில் துணையாசிரியராகப் பணிபுரிந்த அனுபவம் சி.சு செல்லப்பாவுக்கு உண்டு. சுதேசமித்திரன் இதழ், செல்லப்பா எழுதிய கட்டுரை ஒன்றை வெளியிட மறுத்தபொழுது எழுந்த கோபத்தில் செல்லப்பா எழுத்து இதழைத் தொடங்கினார் எனக்குறிப்பு கூறுகிறது. எழுத்து இதழ் பல கவிஞர்களுக்கு ஒரு பயிற்சிக் கூடமாக விளங்கியது.
 
எழுத்து இதழ் பல கவிஞர்களுக்கு ஒரு பயிற்சிக் கூடமாக விளங்கியது. கிராம ஊழியனில் வெளியான (1944) ந.பிச்சமூர்த்தியின் ‘பெட்டிக்கடை நாரணன்’ என்ற இரண்டு பக்கக் கவிதை எழுத்து முதல் இதழில் மறுபிரசுரமானது. தி.சோ.வேணுகோபாலனின் முதல் புதுக்கவிதையான ‘கவி-வேதனை’ என்ற கவிதை எழுத்து இரண்டாவது இதழில் (பிப்ரவரி - 1959) பிரசுரமானது. எழுத்து மூன்றாவது இதழில் (மார்ச் - 1959) , சுந்தர ராமசாமியின் (பசுவய்யா) முதல் புதுக் கவிதையான ‘உன் கை நகம்’ என்ற கவிதையும் , நகுலனின் (டி.கே துரைஸ்வாமி) முதல் புதுக்கவிதையான ‘கரத்த பானை’ என்ற கவிதையும் பிரசுரமாயின .
 
எழுத்து நவம்பர்-1959 இதழில் சி.மணியின் (சி.பழனிச்சாமி) முதல் புதுக் கவிதையான முக்கோணம் என்ற கவிதை வெளிவந்தது . எழுத்து ( ஜனவரி 1960 ) இதழில் பிரமிளின் (தருமு சிவராமு ) முதல் புதுக் கவிதையான ‘நான்’ என்ற கவிதை வெளியானது. நவம்பர்-1961 இதழில் வைத்தீஸ்வரனின் முதல் புதுக்கவிதையான கிணற்றில் ‘விழுந்த நிலவு’ வெளியானது.
திறனாய்வும் எழுத்துவின் ஆசிரியர் சி.சு.செல்லப்பாவின் விருப்பத்திற்குரிய விவாதப்பொருள். பகுப்புமுறை விமரிசனம் என்ற ஒன்றை முன்வைத்துப் பேசும் அவரது தமிழில் இலக்கியவிமரிசனம் என்னும் நூலின் வழியாக எழுத்துக்காலத்தில் தமிழில் நடந்த விமரிசனப் போக்குகளையும் செயல்பட்ட விமரிசகர்களையும் அவர்களின் விமரிசனச் செயல்பாடுகளின் பின்னணியில் இருந்த நோக்கங்களையும் அறியமுடிகிறது. க.நா.சு. வெங்கட் சாமிநாதன், பிரமிள் ஆகியோரின் விமரிசனக் கட்டுரைகளை வெளியிட்ட சி.சு.செல்லப்பாவே அவர்களின் விமரிசனப்பாணிகள் மீது மறுப்பையும் மாற்றுகளையும் முன்வைத்துள்ளார். அதேநேரத்தில் க.நா.சு, முருகையன், சி.மணி, சி.கனகசபாபதி ஆகியோர் எழுதிய கவிதைகள் குறித்த கட்டுரைகளை ஏற்றும் வெளியிட்டுள்ளார். புதுக்கவிதையும் இலக்கிய விமரிசனமும் எழுத்துவின் முதன்மையான அடையாளங்களாக இருந்தன. பல்கலைக்கழக ஆய்வுகளை அஞ்சறைப்பெட்டி ஆய்வு எனக் கேலிசெய்த சி.சு.செல்லப்பா, கல்விப்புலங்களில் பின்பற்றப்படும் விளக்கமுறைத் திறனாய்வையொத்த ஒன்றையே – பகுப்புமுறை விமரிசனமாக (Analytical criticism) முன்வைத்தார் என்றாலும் அவரது பகுப்புமுறை விமரிசனம், விளக்கமுறையிலிருந்து மதிப்பீடுகளை முன்வைப்பதில் வேறுபட்டது என்பதையும் சுட்டிக்காட்டத்தான் வேண்டும். எழுத்துக் கவிஞர்கள் பலரின் கவிதைகள் தொகுக்கப்பட்டுப் புதுக்குரல்கள் என்ற கவிதைத் தொகுப்பு வெளியிடப்பட்டதின் வழி தமிழ்ப் புதுக்கவிதையின் வடிவம், உள்ளடக்கம் என்ற இரண்டிலும் சமூக உள்ளடக்க நீக்கமும், ஓசையொழுங்குவழி உருவாகும் பாவின வடிவ நீக்கமும் நிகழ்ந்தது.

‘எழுத்து’ ஆரம்பித்த சில வருடங்களில் கா.நா.சுவிற்கும் செல்லப்பாவிற்கும் இடையில் விமர்சனக் கலை குறித்தான பார்வையில் மாறுபட்ட கருத்துக்கள் நிலவ, க.நா.சு இலக்கிய வட்டம் (நவம்பர் 1963) என்ற சிற்றிதழைத் தொடங்கினார் இவ்விதழ் இலக்கியத்துக்கு மட்டுமே முக்கியத்துவம் வழங்கியது என்பதை ‘இலக்கியவட்டம்’ இதழ் தொகுப்பின் (2004) முன்னுரையின் வழி அறியமுடிகிறது.
 
இவற்றைத் தொடர்ந்து வல்லிக்கண்ணனின் நூல்களில் கவிதைக்குப் பங்களிப்புச் செய்தனவாகவும் விமரிசனத்தை வளர்த்தனவாகவும் புனைகதைகளில் தீவிரக் கவனம் செலுத்தியனவாகவும் நடை, அஃ, பிரக்ஞை, கசடதபற, யாத்ரா, கணையாழி, இலக்கியவட்டம். வைகை, விழிகள், கொல்லிப்பாவை, சதங்கை, ஞானரதம், சுவடு, தீபம், புதுசு, புதியநம்பிக்கை போன்றன குறிக்கப்படுகின்றன. 1960 களில் பின்பாதி ஆண்டுகளில் தொடங்கப்பட்ட இவ்விதழ்களில் பல எழுபதுகளின் பின்பாதியோடு நின்றுபோயின. 80 களின் மத்தியில் நின்றுபோன இவ்விதழ்களின் தொடர்ச்சியாக நவீன விருட்சம், தளம் போன்றன அவ்வப்போது வருகின்றன. தொடங்கப்பெற்ற காலத்துப் பாதைகளிலிருந்து விலகிப் போனாலும் கணையாழி இப்போதும் வந்து கொண்டிருக்கிறது

மணிக்கொடி தொடங்கிவைத்த இலக்கியப் பத்திரிகை என்னும் சொல்லாடல் எழுத்து வழியாக நீண்டதை மறுக்கும் தரப்பினர் இருவகைப்பட்டவர்கள். இருவகையாரும் அரசியல் சொல்லாடலால் அடையாளப்படுத்தப்படுவதின் வழியாகவே அறியப் பட்டனர். முதலாம் வகையினர் திராவிட இயக்கத்தவர்கள் எனவும் இரண்டாம் வகையினர் பொதுவுடைமையாளர்கள் என்பதாகவும் அடையாளமாயினர். இந்த அடையாளப்படுத்துதலே ஒருவகையில் இலக்கியப்பரப்பிலிருந்து வெளியேற்றப்படும் சொல்லாடல்கள் என்பது தனி ஆய்வுக்குரியது.

எழுத்துபாணி பத்திரிகைகளைப் பிராமணிய ஆதரவுக் கருத்தியலாளர்கள்; அதனால் தமிழ் மரபிலக்கியத்திற்கும், தமிழ் மொழிக்கும், தமிழ் இனத்திற்கும் எதிரானவர்கள் என அடையாளப்படுத்திக்கொண்டு ஒதுங்கிப் போனவர்கள் என்றுகூட முதல் வகையினரைச் சொல்லலாம். அவர்கள் பெரும்பாலும் கல்விப்புலத்தில் செயல்பட்ட கல்லூரி, பல்கலைக்கழகப் பேராசிரியர்களாக- தமிழ்த்துறை சார்ந்த பேராசிரியர்களாக இருந்தார்கள். அவர்கள் தங்களின் இலக்கிய முன்னோடியாகப் பாரதிதாசனை அடையாளப்படுத்திக்கொண்டு அவரால் கவனப்படுத்தப்பட்ட இயற்கை, காதல், மொழி, இனப்பற்று, பகுத்தறிவு மேன்மை, ஆரிய-வடவர் எதிர்ப்பு என இயங்கினர். பெரும்பாலும் மரபுக்கவிதைகளில் செயல்பட்ட இவர்கள் பாரதிதாசன் பரம்பரையினர் என அறியப்பெற்றார்கள். இவர்களுக்கும் ஏராளமான இதழ்கள் இருந்தன. (திராவிட இயக்க இதழ்களாக 265 வரை பட்டியலிடப்பட்டுள்ளது). திராவிட இயக்கத்தின் தேர்தல் அரசியல் முகமான திராவிட முன்னேற்றக்கழகம் 1967 இல் ஆட்சியதிகாரத்திற்கு வந்தபிறகு இதழ்கள் வெளியிடும் பணிகள் ஓரளவு முடிவுக்கு வந்தன.

இரண்டாவது வகையினரான பொதுவுடைமையாளர்களுக்குரிய அனைத்துச் செயல்பாடுகளையும் – கலை, இலக்கிய முயற்சிகளுக்கும் கட்சி அமைப்பே பொறுப்பேற்றுக் கொள்ளும் என்ற நம்பிக்கை இருப்பதால் இதழ்களைத் தொடங்கி நடத்தும் பொறுப்பும் பணிகளும் மையப்படுத்தப் பட்ட கட்சிப்பணியாகவே இருந்தது. 1960 இல் தொடங்கித் தொடர்ந்து வந்துகொண்டிருக்கும் தாமரையும், 1970 இல் தொடங்கி வந்துகொண்டிருக்கும் செம்மலரும் மையப்படுத்தப்பட்ட அமைப்பின் கலை இலக்கிய இதழ் அடையாளங்கள். மையப்படுத்தப்பெற்ற கலை இலக்கியச் செயல்பாடுகளோடு முழுமையாக உடன்படாத இடதுசாரிகள் அவ்வப்போது தங்களுக்கான இலக்கியக் கருத்துக்களை விவாதிப்பதற்கும் இலக்கிய வெளிப்பாடுகளைச் செய்யவும் பல இதழ்களைத் தொடங்கி நடத்தினர். அவ்வாறு தொடங்கப் பெற்ற இதழ்கள் பல இருந்தபோதிலும் தனித்த அடையாளமாகவும் கவிதையில் தங்களுக்கான பாணியொன்றை முன்வைத்த குழுவாகவும் வானம்பாடி குழுவைச் சொல்ல வேண்டும். 1971 -இல் தொடங்கப்பெற்ற வானம்பாடி இதழில் இலக்கிய இயக்கத்தை முன்னெடுக்கும் நோக்கம் இருந்தது என்கிறார் அதில் செயல்பட்ட சி.ஆர்.ரவீந்திரன்.

ஒரு நினைவுப்பதிவில் இப்படிச் சொல்கிறார்: தமிழ் உலகில் ‘மணிக்கொடி காலம்’போல கோவைக்கு ‘வானம்பாடி காலம்’ முக்கியமானது. 1970-களின் தொடக்கத்தில் இலக்கியவாதிகள் தமிழ், பக்தி, காந்தியம், காதல் என பாடிக் கொண்டிருந்த நேரத்தில் இடதுசாரி தாக்கம் மிகுந்த இளைஞர்களின் வடிகாலாகக் கோவை உப்பிலிபாளையத்தில் முல்லை ஆதவன் தலைமையில் ஒரு இலக்கியக் கூட்டம் நடத்தினோம். அதில் கவிஞர்களே பெரும்பகுதி இருந்தனர். ‘மானுடம் பாடும் வானம்பாடி’ என்ற தலைப்பில் ஒரு இயக்கம் காண அந்த கூட்டத்தில் முடிவெடுத்து அதுவே பிறகு வானம்பாடி இயக்கமாக உருவெடுத்தது. இந்திய/ தமிழ்த்தேசியத் தன்மைகொண்ட இடதுசாரித்தனம் என்பதைப் பேசிய வானம்பாடிகள் அதிகமும் செயல்பட்டது கவிதை வடிவத்திலும் கவிதைகளின் வழி நிகழ்த்தவேண்டிய சமூக விமரிசனத்திலும் எனலாம்.
 
வானம்பாடிகளுக்கு முன்பே 1960 முதல் தாமரையும், 1970 முதல் செம்மலரும் இடதுசாரிகளின் அடையாளமாக வந்துகொண்டிருந்தன. எஸ்.வி.ராஜதுரை, எஸ்.என்.நாகராஜன், கோவை ஞானி போன்றோரை மையமிட்டு புதிய தலைமுறை இதழைக் கொண்டுவந்துகொண்டிருந்தனர் என்றாலும் இலக்கிய இயக்கம் என்பதை முன் வைத்தது வானம்பாடிகள்தான். வானம்பாடிகள் காலத்திற்குப் பிறகு தன்னார்வ நிறுவனங்களின்- என்.ஜி.ஓ. க்களின் - செயல்பாடுகளைப் பதிவு செய்யும் பல்வேறு இதழ்கள் வந்தன. அந்நிய/ இந்திய/ அமைப்புகளின் நிதியுதவியைப் பெற்று சமூகச் செயல்பாடுகளில் ஈடுபடும் தன்னார்வத் தொண்டர்களுக்காகவும் பெற்ற நிதியின் ஒருபகுதியை அறிவுசார் விழிப்புணர்வு நடவடிக்கைகளில் ஈடுபடுகிறோம் எனக் காட்டுவதற்காகவும் தொடங்கப்பெற்ற இதழ்களின் எண்ணிக்கை 1970 களில் கணக்கிடப்படாதவை. பெரும்பரப்பைப் பேசவிடாமல் தனித்தனி பிரச்சினைகளை நோக்கிச் செயல்பாட்டுத்தளத்தையும் அறிவார்ந்த கலை, இலக்கிய விவாதங்களையும் நகர்த்திய இவ்விதழ்களின் வருகை இந்தியாவில் அவசரநிலைக்கால அறிவிப்புக்குப் பின் அதிகமாயின. அதனாலே இதன் பின்னணியில் அமெரிக்காவின் உளவுத்துறை நிறுவனமான சி ஐ ஏ. வின் பங்கு இருப்பதாக இந்திய அரசின் கண்காணிப்பு அறிக்கைகளும் இடதுசாரிகளின் கலை, இலக்கிய அறிக்கைகளும் குற்றம் சாட்டின. கட்சி அமைப்பின் அறிக்கைகளைத் தாண்டி புதிய இடதுவாதம், ப்ராங்க்பர்ட் மார்க்சியம், அமைப்பியம், இருத்தலியல்வாதம், உளவியல் பகுப்பாய்வு, நுண் அரசியல், வெகுமக்கள் ரசனை போன்ற சொல்லாடல்களைத் தமிழ்ப்பரப்புக்குள் கொண்டுவர முயன்ற படிகள், பரிமாணம், இங்கே இன்று, புதுயுகம் பிறக்கிறது, புதிய நம்பிக்கை, நிகழ், தமிழ் நேயம் போன்றனவும் என் ஜி ஓ க்களின் இதழ்களாகவே கருதப்பெற்றன. ஆனால் இவைகளில் வந்த விமரிசனச் சொல்லாடல்களும் கவிதை, கதைகள், கட்டுரைகள் போன்றன தமிழகக்கலை இலக்கியச் சூழலை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தின என்பதை முறையான இலக்கிய வரலாறு பதிவுசெய்யும்.

அவசரநிலைக்குப் பின் இடதுசாரிகளின் புதிய அலையாக - மூன்றாவது பாதையான நக்சல்பாரிகளின் எழுச்சி தமிழ் இலக்கியப்பரப்பில் எழுத்துகளாகவும் செயல்பாடுகளாகவும் வெளிப்பட்டன. செயல்பாட்டுத் தளத்தில் வீதிநாடகங்களாகவும் அறைக்கூட்ட விவாதங்களாகவும், நாட்டார் கலைகளை தேடுவதாகவும் மறுப்பதாகவுமான விவாதங்கள் அக்காலத்தில் மேலெழுந்தன. தமிழகச் சிறுநகரங்களில் பயிலரங்குகளாகவும் கருத்தரங்குகளாகவும் நடந்தன. இவ்வகையான செயல்பாடுகளுக்குக் கிறித்தவச் சமயப்பரப்பை நோக்கமாக க்கொண்ட -விடுதலை இறையியல் பேசும் அமைப்புகளின் தார்மீகமான ஆதரவுகள் இருந்ததால் இவைகளையும் தன்னார்வ அமைப்புகளின் பிரித்தாளும் செயல்பாடுகள் என்றே கட்சி அரசியல் பேசிய இடதுசாரிகள் விமரிசனம் செய்தனர். இச்செயல்பாடுகளைப் பதிவுசெய்யும் இதழ்களாக என்.ஜி.ஓ.க்களின் தேன்மழை, நிறங்கள், நிஜங்கள், தேடல், ஊற்று போன்றன வெளிவந்தன என்றாலும் அவற்றைத் தாண்டிய வெளிப்பாடுகளைக் கொண்டனவாக விழிகள், யாத்ரா, இலக்கிய வெளிவட்டம்,புறப்பாடு, செந்தாரகை, புதிய மனிதன், புதிய நம்பிக்கை போன்றன எண்பதுகளில் வந்த கலை, இலக்கிய இதழ்கள் என்பதையும் மறுக்க முடியாது. இவைகளின் உள்ளடக்கங்களில் கிராமியப்பண்பு, வட்டாரக் கலை அடையாளங்கள், நாட்டார் கலைகள் மீதான கவன ஈர்ப்பு, அறிவியல் வளர்ச்சியை மறுபரிசீலனை செய்யத்தூண்டும் போக்கு போன்றன தூக்கலாக இருந்தன. தமிழகத்தில் அறியப்பெற்ற இரண்டு இடதுசாரிக்கட்சிகளையும் விமரிசிக்கும் தொனியோடு உருவான நக்சல்பாரிக்குழுக்களின் இதழ்களாகக் கேடயம், புதிய ஜனநாயகம் என்ற இரண்டும் 80- களின் பின்பாதியில் வந்தன. அதற்கு முன்பே அவ்விரு அரசியல் இதழ்களின் முகவரிகளிலிருந்தே கலை, இலக்கிய இதழ்களாக மன ஓசை, புதிய கலாச்சாரம் என்ற இரண்டும் வந்தன. தங்கள் அமைப்புகளின் அரசியல் வேறுபாடுகளுக்கேற்பச் சின்னச்சின்ன வித்தியாசங்களை முன்வைத்தன. அவற்றையெல்லாம் பின்னுக்குத் தள்ளி இன்னொருவிதமான இலக்கிய இயக்கத்தைத் தோற்றுவித்த இதழாகச் சொல்லப்பட வேண்டியது நிறப்பிரிகை.

புதுச்சேரியில் ரவிக்குமாரின் முகவரியை வெளியீட்டிடமாகக் கொண்டு அ.மார்க்ஸ், பொ.வேல்சாமி ஆகியோரால் தொடங்கப்பட்ட நிறப்பிரிகை (1992) உலகமயத்திற்குப் பின்னான உலகத்தின் இருப்பையும், இந்தியத் தன்னிலைகளையும் தமிழ்மண்ணின் அறிவுப் பரப்பையும் விவாதிக்கும் நோக்கத்தில் தொடங்கப்பட்ட அரசியல் இதழ் நிறப்பிரிகை. பின்னர் தனது இலக்கிய இணைப்புகள் வழி அதுவரை இல்லாத இலக்கிய இயக்கமொன்றை உருவாக்கியது. தலித் இலக்கியம், பெண்ணிய இலக்கியம் போன்றவற்றிற்கான வரையறைகளையும் மாதிரிப் பிரதிகளையும் அடையாளப் படுத்தியது. அத்தோடு விமரிசனத்துறைக்கு படிகள், மேலும், நிகழ், இங்கே இன்று போன்ற இதழ்களின் வழியாகத் தமிழவன், நாகார்ஜுனன், எம்.டி.முத்துக்குமாரசாமி போன்றவர்களால் அறிமுகமாயிருந்த அமைப்பியலையும் அதன் மீது விமரிசனங்களை முன்வைத்து அமைப்பியலை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த நினைத்த பின் அமைப்பியலின் உட்கூறுகளான சிதைவாக்கம், சொல்முறைக் கோட்பாடு, பின் நவீனத்துவ விமரிசன முறை போன்றவற்றைத் தமிழுக்குள் உருட்டிவிட்ட பணியைச் செய்தவை நிறப்பிரிகையும் அதனோடு இணைந்து நின்று துணை இதழ்கள்போல வந்த சிதைவு, கிரணம், எதிர், ஊடகம், கிழக்கு, களம்புதிது போன்றன எனலாம்.

விடுதலைக்குப் பின்பு தமிழில் தொழிற்பட்ட மூன்றுவிதமான இலக்கிய இயக்கங்களை எழுத்து இலக்கியப்போக்கு, வானம்பாடி இலக்கியப்போக்கு, நிறப்பிரிகை இலக்கியப்போக்கு என அடையாளப்படுத்தலாம். இந்த இலக்கியப்போக்குகள் மூன்று நிலையில் வரையறைகளை முன்வைத்தன. அவற்றை இப்படித் தொகுத்துக் கொள்ளலாம்.

  • இலக்கியத்தின் வடிவங்கள் – கவிதை, நாடகம், புனைகதை முதலான வடிவங்கள் எவ்வாறு இருக்க வேண்டுமெனப் பேசின.
  • வடிவங்களுக்குள் எழுதுபவனின் இருப்பும் குரலும் வெளிப்பாடுகளும் இருக்க வேண்டிய தன்மைகளை விளக்கின.
  • அதனை வாசிக்கும் வாசகர்களிடத்தில் அந்தப் பிரதிகள் எவ்வகையான மனமாற்றத்தையும் அதன் தொடர்ச்சியாகச் செயல்மாற்றத்தையும் உருவாக்க வேண்டுமென வலியுறுத்தின.

இம்மூன்று கூறுகளுமே ஐரோப்பாவில் தோன்றிய இலக்கிய இயக்கங்களான புனைவியம் முதல் நடப்பியம் வரையிலானவற்றிலும், நடப்பியம் அல்லாதனவாகிய மிகையதார்த்தம், விமரிசன யதார்த்தம், சோசலிச யதார்த்தம், மனப்பதிவியம், வெளிப்பாட்டியம், குறியீட்டியம், அபத்தவியம், காவியபாணி வெளிப்பாடு போன்றனவற்றின் முன்வைப்பாளர்களால் விவாதிக்கப்பட்டன. 

இன்னொருவிதத்தில் சொல்வதானால் பிராய்டிய உளவியலையும் உளப்பகுப்பாய்வையும் இலக்கியப்பிரதி உருவாக்கத்திற்கான காரணிகளாக எழுத்து இயக்கம் முன்வைத்தது. அதில் இயங்கியவர்கள் இந்துத்துவச் சமயச்சொல்லாடல்களை, இந்தியத்தத்துவ விளக்கங்களோடு முன்வைத்துக் கலை இலக்கியக்கோட்பாட்டை முன்வைத்தனர். வேதாந்த, சித்தாந்த மரபுகளோடு தங்களை இணைத்துக்கொண்ட முற்பட்ட வகுப்பினராக இருந்தால் உள்ளொடுங்கிய குரல்களில் பேசுவதை விரும்பினார்கள்; ஏற்றுக்கொண்டார்கள். அதற்கு மாறாக வானம்பாடிகளில் இயங்கியவர்கள் தமிழின் புறக்கவிதை மரபான வெளிப்பாட்டுத்தன்மையை இலக்கியத்தில் விரும்பினார்கள். அவர்களுக்கு ஐரோப்பாவில் புதிதாகத் தோன்றிய மார்க்சியம் வழங்கிய சிந்தனை மரபு பின்னணியாக இருந்தது. அதனால் நடப்பியலும், அதன் வகைகளில் ஒன்றான சோசலிச யதார்த்தவாதமும் விமரிசன யதார்த்தவாதமும் ஏற்புடையனவாக இருந்தன. உலக மயத்திற்குப் பின் மார்க்சியம் சந்தித்த விமரிசனங்களை எதிர்கொள்வதில் அமைப்பியமும் பின் அமைப்பியம் கைக்கொண்ட மொழிசார் சிந்தனை முறைகளை நிறப்பிரிகை வரித்துக்கொண்டது

நிறப்பிரிகையின் வருகைக்கு முன்பு சுட்டிக்காட்டப்பட வேண்டிய இலக்கிய இதழ்களாக எஸ்.வி.ராஜதுரையின் ஆசிரியத்துவத்தில் வந்த இனி இதழையும், மீராவின் ஆசிரியத்துவத்தில் வந்த அன்னம் விடுதூதுவையும், பாவை சந்திரனின் ஆசிரியத்துவத்தில் வந்த புதிய பார்வையையும் கோமல் சுவாமிநாதனின் ஆசிரியத்துவத்தில் வந்த சுபமங்களாவையும் குறிப்பிட்டுப் பேசவேண்டும். வலது, இடது என்ற அரசியல், பண்பாட்டு நிலைபாடுகளையும் பெரிதுபடுத்தாமல் தமிழ் இலக்கிய வடிவங்கள், வகைகள், வெளிப்பாடுகள் சமகாலத்தன்மையையும் நவீனத்துவ நுழைவையும் கொண்டனவாக மாற வேண்டும் என்ற நோக்கத்தோடு அதன் ஆசிரியர்கள் ஒருவித தாராளவாத நிலைபாடுகளைக் கொண்டவர்களாகத் தங்களை முன்னிறுத்தினர். இவற்றோடு கல்வித்துறை முறையியலையும் இட துசாரி விமரிசன மரபையும் இணைத்து விரிவான ஆய்வுக்கட்டுரைகளை வெளியிட்ட நாவாவின் ஆராய்ச்சியையும் இவற்றோடு இணைத்துப் பேசவேண்டும். இவ்வைந்து இதழ்களிலும் அறிமுகமான பலரும் 21 ஆம் நூற்றாண்டின் முக்கிய எழுத்தாளர்களாக மாறினர்; திறனாய்வாளர்களாகத் தொடர்ந்தனர். சிறுபத்திரிகைக்காரர்களாக அறிமுகமாகி, பெரும்பத்திரிகைகளான ஆனந்தவிகடன், குமுதம், குங்குமம் போன்றவற்றில் எழுதுவதோடு, அக்குழுமங்கள் நட த்தும் இதழ்களின் ஆசிரியத்துவப் பொறுப்புகளிலும் இயங்குகின்றனர். இத்தகைய தாராளவாத நிலைபாட்டையும் இலக்கியம் மட்டுமே முதன்மை என்பதையும் ஏற்றுக்கொண்ட இதழ்கள் 2000 -க்குப் பின்னர் ஒவ்வொரு மாதமும் மாத இதழ்களாக வந்துகொண்டிருக்கின்றன

எழுத்து, வானம்பாடி, நிறப்பிரிகை எனப் பெயர்சுட்டல் ஒரு முன்னோடி அடையாளம் மட்டுமே. அவை ஒவ்வொன்றின் பக்கக் கிளைகளானப் பல பின்னோடி இதழ்களும் 2000-க்கு முன்பே இருந்தன. 2000 -க்குப் பின்னரும் சில இதழ்கள் அந்தத் தொடர்ச்சியைக் கொண்டிருந்தன. ஆனால் 2000 -க்குப் பின் வந்த இடைநிலை இதழ்கள் இலக்கிய இயக்கமென்னும் அடையாளம் தேவையில்லையென நினைத்துக் கைவிட்டு விட்டன. அதற்குப் பதிப்பகங்கள் என்னும் வணிக அமைப்போடு தொடர்பு பட்டிருக்கும் பொருளியல் காரணங்கள் முதன்மையானவை என்றாலும் ஒட்டு மொத்தமாகப் பரவிவிட்ட நம்பிக்கையின்மையும் இன்னொரு காரணமாகும். எப்போதும் எழுத்தில் விவாதிப்பதில் ஈடுபாடு காட்டும் எழுத்தாளர்களிடம் ஏதொன்றின் மீதும் – இலக்கிய இயக்கத்திற்குப் பின்னணியாக இருந்த அரசியல், சமயத் தத்துவ நிலைபாடுகள் ஏதொன்றின் மீதும் நம்பிக்கை இல்லாமல் போனதும் கவனப்படுத்தப்பட வேண்டும். நம்பிக்கையின்மையோடு ஒவ்வொருவரும் விரும்பி விளையாடும் பின் நவீனத்துவ விளையாட்டை இலக்கிய இதழ்களின் பக்கங்களில் எழுதுபவர்கள் ரகசியமாக விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.
================================================================
பேரா.அ.ராமசாமி
தமிழியல் துறை, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், திருநெல்வேலி
=====================================
சாகித்ய அகாடெமி, சென்னை அண்ணா பல்கலைக்கழக ஊடகவியல் துறையுடன் இணைந்து நடத்திய ‘ஊடகங்களும் இலக்கியமும்’ என்னும் கருத்தரங்கில் வாசிப்பதற்காக “ விடுதலைக்குப் பின் சிறுபத்திரிகைகள்” என்னும் தலைப்பிடப்பட்டு வாசிக்கப்பட்ட து. நாள்: 24-10- 2018






கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நவீனத்துவமும் பாரதியும்

நாயக்கர் காலம். இயல் . 6 சாதிகளும் சமூக அசைவியக்கங்கமும்

ப்ளு ஸ்டார் : கிரிக்கெட்டும் அரசியலும்