அருவி : விமரிசன நடப்பியலின் வகைமாதிரி


தனது முதல் படத்தைக் கவனிக்கத்தக்க படமாக இயக்குவதில் தீவிரம் கவனம் செலுத்துவதில் வெற்றியடைந்த இயக்குநர்களின் வரிசையில் இணைந்திருக்கிறார் அருவி படத்தின் இயக்குநர் அருண் புருசோத்தமன். அருவி படம் பார்த்துமுடித்தவுடன் நினைவுக்கு வந்த படம் கதை திரைக்கதை வசனம் இயக்கம். அதுவரை தான் இயக்கிய படங்களுக்குத் தனது பெயரை ரா. பார்த்திபன் என எழுதிக்காட்டி வந்தவர், ராதாகிருஷ்ணன் பார்த்திபனின் கதை திரைக்கதை வசனம் இயக்கம் என நீண்ட பெயரை வைத்திருந்தார். அவர் எப்போதும் புதுமைவிரும்பி என்றாலும், அந்தப் படத்தில் காட்டிய புதுமை, காரணமற்ற புதுமைகளாக இல்லாமல், படத்தின் தேவைக்கேற்ற புதுமையாக இருந்தது.பிரெக்டின் காவியபாணிக் கதைகூற்றுமுறையைத் (Epic Narration) தேடிப் பயன்படுத்தியிருந்த பார்த்திபன், படம் முழுவதும் அதன் அடிப்படைத் தன்மையான விலக்கிவைத்தலும்(Alienation) ஒன்றிணைத்தலும் (Involvement) என்பதைக் கச்சிதமாகக் கையாண்டு படத்தைப் பார்வையாளர்களின் முடிவுக்கு விட்டுவைத்தார். இத்தன்மை காரணமாகப் படத்தின் மையக் கதையோடு தொடர்ந்து பார்வையாளர்கள் விசாரணை நிலையிலேயே ஒன்றிணைந்து விலகினார்கள். 
விமரிசன நடப்பியல் என்னும் அழகியல்
அருண் புருசோத்தமனின் அருவி படம் அந்த நேர்த்தியில் சற்றும் குறையாமல் இன்னொரு சொல்முறையைக் கையாண்டிருக்கிறது. அச்சொல்முறைக்கு திறனாய்வுப்புலம் விமரிசன நடப்பியல் (Critical Realisam) எனப் பெயரிட்டுள்ளது. நடப்பியல் நிகழ்வுகளின் அடுக்குகளில் தொடங்கி முழுமையாக விலகிச் செல்லும் கூற்றுமுறைக்குள் நடப்பியல் நிகழ்வின் கீற்றுகளும் அவை சார்ந்த கேள்விகளும் எழுப்பப்பட்டுக்கொண்டே இருப்பதை உறுதிசெய்வதின் வழியாக விமரிசன நடப்பியல் தனது அழகியலை உருவாக்கும்.

அருவி சினிமாவின் முதல் அரைமணி நேரக் காட்சிகள் - அருவி என்னும் குழந்தை பிறப்புதொடங்கிப் பூவைப்போலவும், வண்ணக்கோலங்களின் புள்ளிகளைப்போலவும் வளர்க்கப்படும் குழந்தை, குமரியாகிக் கல்லூரி மாணவியாகும்போது அவளது உடம்புக்குள் நுழையும் நோய்த்தொற்றும், அதனால் சொந்தக்குடும்பமே வீட்டைவிட்டுத் துரத்துகிறது எனக் காட்டுவதுவரை வெட்டிவெட்டி ஒட்டப்படும் நடப்பியல் காட்சிகளாக இருக்கின்றன. அவளை ஆதரிக்கும் மூன்றாம் பாலினப் பாத்திரமும், பண உதவிசெய்து அவளை உறவுகொள்ளும் முதலாளியும், அவளது யோகா ஆசையைப் பயன்படுத்திக் கொள்ளும் சாமியாருமென எல்லாமும் சமூக நடப்பியல் உண்மைகள். இந்த நடப்பியல் நிகழ்வுகளின்மேல் விமரிசனத்தைக் கட்டமைக்கப் பயன்படும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் படத்தின் பகுதியாக ஆக்கப்படும் நிலையில் விமரிசன நடப்பியல் என்னும் கலைக்கோட்பாட்டைத் தனது சொல்முறையாக ஆக்குகிறது படம்.
துயரங்களின் ஈர்ப்புத்திரட்சி

கவனத்தை ஈர்ப்பதோடு திரும்பவும் பேசச்செய்யும் கலைப்படங்கள் எப்போது இன்பியல் முடிவுகளைக் கொண்டனவாக இருப்பதில்லை. தெரிந்தோ தெரியாமலோ நடந்துவிடும் ஒரு சிறுபிசகில் அல்லது தவறுதலில் திசைமாறிவிடும் வாழ்க்கையின் போக்கு பெருந்துயரமொன்றில் கொண்டுபோய்ச் சேர்த்துவிட்டது என்பதான ஒற்றைவரிக் கதையாடல்கள் எப்போதும் பார்வையாளத்திரளின் நெஞ்சைத்தொடும் கதைகளாக மாறிவிடுகின்றன. தப்புகள் தெரிந்து செய்பவை; தவறுகள் அறியாமல் நிகழ்ந்துவிடுபவை. அதற்கு இவ்வளவு பெரிய தண்டனையா? என்ற கேள்வியை எழுப்பும் ஒரு கலைப்படைப்பு எப்போதும் நினைவில் நின்றுவிடும் வாய்ப்புகொண்டவை. அந்தவகையில் உலகம் முழுவதும் பார்வையாளர்களின் மனதிற்குள் நின்று நிழலாடும் சினிமாக்கள் பெரும்பாலும் துன்பியல் முடிவுகளைக் கொண்டவையாகவே இருக்கின்றன. அவை கலைப்படங்களாக இருந்தாலும் வெகுமக்களின் ரசனைக்குரிய சினிமாக்களாக இருந்தாலும் துன்பியல் முடிவுகள் பெருந்திரளை ஈர்ப்பதில் வெற்றியடைகின்றன. அருவியும் அப்படியொரு துன்பியல் முடிவினாலேயே பார்வையாளத்திரளைத் தன்வசப்படுத்துகிறது. துள்ளித்திரியும் புள்ளிமானாய்ப் பள்ளியிலும் கல்லூரியிலும் ஒரு பெண்ணின் உடலுக்குள் உயிர்கொல்லும் எச்.ஐ.வி. கிருமித்தொற்று நுழைந்துவிடுவதற்கு அவளது கவனமின்மைகளும் ஒரு காரணம். அவளைச் சூழ்ந்திருந்த நுகர்வியச் சூழலும் நட்புகளும் உருவாக்கித் தரும் ஒவ்வொன்றையும் மறுக்காமல் ருசித்துப் பார்த்துவிடத் துடிக்கும் அவளது அலைபாயும் மனம்தான் அந்தக் கிருமிகளை உள்வாங்குகிறது. விரும்பி ஏற்று உள்வாங்கியதல்ல; ஒரு விபத்தின் வழியாக நுழைந்தது என்று படம் முன்வைக்கிறது. விபத்தின் வழியாக ஒருபெண் உடலுக்குள் எயிட்ஸ் நோய்க்கிருமி நுழையமுடியும் என்றாலும் குடும்பமும் சூழலும் அவளது கற்புசார்ந்த - பாலியல் பிறழ்வுசார்ந்த காரணங்களே காரணமாக இருக்கும் என்ற நினைப்பில் ஒதுக்கிவைக்கின்றன.

எல்லாவகை விளிம்புநிலை மனிதர்களுக்குத் தேவை உள்வாங்கி இணைத்துக்கொள்ளும் மனிதநேயம். அதிலும் தனது தவறினால் உயிர்க்கொல்லி நோயான எயிட்ஸ் தொற்று தாக்கப்பட்ட நோயாளிக்குத் தேவை அன்பும் ஆதரவும் அரவணைப்பும். ஆனால் நமது பொதுப்புத்தி சார்ந்த நடவடிக்கைகள் எப்போதும் அதற்கெதிரான நிலையிலேயே செயல் படுகின்றன. அதனை முதலில் மாற்றவேண்டும் என்பதைத் தனது சினிமாவின் ஆதாரமான நோக்கமாக ஆக்கிக்கொண்டு படத்தின் நிகழ்வுகளை உருவாக்கியுள்ளார் இயக்குநர். பொதுப்புத்தியின் அரைகுறைப் பார்வையோடு இணைந்து நம் சமகால வெகுமக்கள் ஊடகங்கள் தங்களின் நிகழ்ச்சிகளைக் கட்டமைக்கின்றன என்பதையும் விமரிசனம் செய்ய நினைக்கும் இயக்குநர், படத்தின் மையக்கதாபாத்திரமான அருவியின் தர்க்கம் சார்ந்த கேள்விகளின் வழியாக அவளைச் சூழ்ந்திருந்த மனிதர்களின் குற்றவுணர்வைத் துலக்கப்பண்ணுகிறார் இயக்குநர்.

அருவியின் தோழியின் தந்தை, மனிதாபிமானத்தோடு உதவுவதாகக் காட்டிக்கொண்டு பெண்ணுடலைக்கோரும் தையல்கூட முதலாளி, யோகா, ஹீலிங் என மந்திரமொழிகளின் வழி மனிதர்களைத் தன்வசப்படுத்தி ஆண்களாக இருந்தால் பணரீதியாகவும் பெண்களாக இருந்தால் பாலியல் ரீதியாகவும் சுரண்டித் திரியும் சாமியார் என நடப்புச் சமூகத்தின் சிலவகை மாதிரிகளைத் தேர்வுசெய்து அம்பலப்படுத்துகிறது படம். வகைமாதிரிக் கதாபாத்திரங்களை விசாரணைக்குட்படுத்தும் காட்சிகளின் கட்டமைப்புக்குள் இரட்டை நிலையை உருவாக்குவதின் வழிப் பார்வையாளர்களுக்கு இரட்டை மனநிலை உருவாக்கித் தருகிறது. அப்பாத்திரங்கள் அச்சத்தில் திணறும்போது அரங்கின் பார்வையாளர்களிடம் சிரிப்பலை எழும்பித் தணிகிறது. அருவி போடும் உத்தரவிற்கேற்ப நடிக்கத்தொடங்கும் தொலைக்காட்சித் தயாரிப்புப்பணியாளர்களின் செயல்பாடுகளிலும்கூட விமரிசன நடப்பியலின் அழகியல் வண்ணவண்ணமாய் எழும்பிப் பறக்கின்றன. ஒரு சினிமாவின் உச்சநிலைக் காட்சியிலும்கூட கலகலப்பும் தீவிரமான சோகமும் என மாறிமாறி உருவாக்கப்பட்டுப் பார்வையாளர்களை ரசனைக்குரியவர்களாக ஆக்கும் இந்த உத்தித் தமிழ்ச் சினிமாத்திரளுக்கு இதுவரை கிடைக்காத கலையனுபவம்.

சஹிருதய உருவாக்கம்

இந்தத் தன்மையில்தான் அருவி படம் மற்ற படங்களிலிருந்து வேறுபடுகிறது. விஜய், அஜீத், விக்ரம் போன்ற அதிவீர பராக்கிரமம் காட்டும் நாயக நடிகர்களின் ஒரு வெற்றிப்படத்தின் உச்சநிலைக்காட்சிகளை நினைத்துக்கொள்ளுங்கள். நடப்பியல் சாத்தியமில்லாத காட்சி அடுக்குகளின் வழி உருவாக்கப்படும் நாயகப்பிம்பம் வில்லனைச் சந்திக்கும் உச்சநிலைக்காட்சிகளில் பார்வையாளத்திரளை வேறெங்கும் திரும்பவிடாமல் உட்கார்ந்திருக்கும் நாற்காலிகளின் முன்நுனி நகர்த்தி நாயகனோடு இணைந்துவிடச்செய்யும் அம்சங்களால் நிரப்பபடும். பின்னணி ஓசை, முகங்களின் அண்மைக்காட்சிகள், அடுக்கப்படும் காட்சித் துணுக்குகள், சொருகப்படும் இடையீடுகள் என எல்லாம் சேர்ந்து பார்வையாளத்திரளின் மொத்தக்கவனமும் திரையின் பக்கம் திருப்ப்ப்பட்டு நாயகப்பிம்பத்தோடு இணைந்துகொள்ளும். அதர்மத்தை அழிக்கும் நாயகனுக்குப் புத்துணர்ச்சிப் பானம் அளித்து உற்சாகச் சீழ்க்கையொலிகளையும் கைதட்டலையும் வழங்கும் வெற்றுத்திரளாக ஆக்கப்படும் உத்தி அது. இந்த உத்திக்கு மாறாகப் பார்வையாளத்திரள் அருவியின் சின்னச் சின்னச் செயல்களையும் ரசிக்கவும் அவள் மீது அன்பும் அனுதாபமும் காட்டவுமான தூண்டுதலைப் படம் உருவாக்குகிறது. உதவி இயக்குநரிடம் இருக்கும் மனிதாபமானம் காதலைத் தெரிவிக்கும் அட்டையைத் தாங்கித் தேடிச் செல்லத் தூண்டுகிறது. அவனது பயணத்தில் மற்றவர்களையும் இணையச் செய்கிறது. அருவியின் குடும்பத்தினரையும் தேடிச்சேர்க்கிறது.

இந்தத் தூண்டுதல் திரைப்பிம்பமான அருவிக்கு மட்டுமானதல்ல. அருவியைப் போல ஒதுக்கப்படும் எயிட்ஸ் நோயாளிகளுக்காகவும்மட்டும் கூட அல்ல. நமது பொதுப்புத்தி காரணமாக ஒதுக்கப்படும் எமிலி போன்ற மூன்றாம் பாலினத்தவர்க்கும்கூடத்தான். அன்பும் ஆதரவும் தேவைப்படும் ஒவ்வொருவருக்கும் மனிதர்களால் அன்பையும் இரக்கத்தையும் தரமுடியும். அதைத் தருவதில் என்ன தயக்கம் எனக் கேள்வியெழுப்பி அன்பின் கரங்களை நீட்டும் மனிதத்திரளாக மாற்றுகிறது. அருவி படம் முடியும்போது திரையரங்கில் நிலவும் அமைதியும் முணுமுணுப்பற்ற நகர்வுகளும் பார்வையாளர்கள் படத்தின் சஹிருதயர்களாக மாறி நகர்வதைக் காணமுடிந்தது.

குறிப்பிட்ட ஒரு துறையைக் குறுக்கும் நெடுக்குமாக விமரிசிக்க நினைக்கும்போது வழக்கமான நேர்கோட்டுக் கதைசொல்லல் முறை முழுமையாக உதவுவதில்லை. அதற்குப் பதிலாக வேறொரு உத்தியை அல்லது சொல்முறையைத் தேர்வுசெய்யவேண்டும். அதைத் தீவிரமாக விமரிசிக்க நினைத்தால் அந்தப் படைப்பாளி தன்னுடைய துறையையே விமரிசனத்துக்குரியதாகத் தேர்வுசெய்யவேண்டும். நான் இதே துறைக்குள்ளேயே இருக்கிறேன்; எனக்கு எல்லாம் தெரியும்; அதன் கீழ்மைகளையும் அறிவேன்; மேன்மைகளையும் அறிவேன் எனத் தைரியமாகக் கையாளத் தெரியவேண்டும். அப்படிக் கையாண்ட படம் ராதாகிருஷ்ணன் பார்த்திபனின் கதை திரைக்கதை வசனம் இயக்கம். ஆனால் அருவியின் இயக்குநர் அருண் புருசோத்தமன் அப்படிக்காட்டிக் கொள்ளமுடியாது. ஏனென்றால் இது அவரது முதல் படம். அத்தோடு அவர் விமரிசிக்க எடுத்துக்கொண்டது தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பு. அப்படி அவர் காட்டிக்கொண்டாலும் அது மட்டுமே அல்ல அவரது விமரிசன இலக்கு. . ஊடகங்களை மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த வாழ்வியலையும் நகர்த்திக் கொண்டிருக்கும் பண ஆசையே முதன்மையான இலக்கு. எல்லாவற்றிலும் வெற்றி; வெற்றிக்காகப் பணம், பணத்திற்காக வெற்றி என மனிதத்திரளை அலைக்கலைக்கும் நுகர்வியப்பொருளாதாரமும் அதன் அடித்தளமுமான பன்னாட்டுக் குழுமங்களின் வணிகப்பின்புலமும் படத்தின் விமரிசனப்பொருள். இதற்கேற்பவே காட்சிகளையும் காட்சிகளில் உலவும் பாத்திரங்களையும் அவற்றிற்கான வசனங்களையும் உருவாக்கியிருக்கிறார் இயக்குநர்.

நுட்பமான காமிராக்கருவிகள் இல்லாமல் எடுக்கப்பட்ட படத்தில் இசைக் கோர்வைகளும் ஒளியமைப்புமுறைகளும் போதாமையோடு உள்ளன. ஆனால் பாத்திரங்களில் நடிப்பதற்குத் தேர்வுசெய்யப்பட்டவர்கள் முறையான ஒத்திகையோடு பங்களிப்பு செய்துள்ளனர். மையப்பாத்திரத்தை ஏற்று நடித்துள்ள அதிதிபாலனின் பாவனைகளும் உடலசைவுகளும் முழுமையாக நடிப்புக்குத் தயார்படுத்தப்பட்டுள்ளது

பின்னிணைப்பாக ஒரு குறிப்பு

விமரிசன நடப்பியலைப் பயன்படுத்திச் சிறப்பான வெளிப்பாட்டைச் செய்த சினிமாவாக அருவியைச் சொல்லும் இந்த நேரத்தில் இதே நோக்கத்தோடும் உத்திகளோடும் வந்து நாவல் வரலாற்றில் நிலையான இடத்தைப் பிடித்துள்ள அந்த நாவலும் நினைவுக்கு வந்தது .பிரக்ஞை பூர்வமாகத் தான் இயங்கிய இலக்கியத்துறையின் -குறிப்பாக நாவல் எழுத்துத்துறையின் போலியான மனிதாபிமானம், கிளர்ச்சியூட்டும் வர்ணனைகள் வழியாக வெகுமக்களைத் தன்வசப்படுத்தும் வரலாற்றுப்புனைவுகள், நேர்மையும் கொள்கைப்பிடிப்பும் கொண்ட வகைமாதிரிகளை உருவாக்குவதொடு, இரங்கத்தக்கப் பாத்திரங்களை உருவாக்கி அவற்றின் பக்கம் நிற்பதாகப் பாவனை செய்யும் எழுத்துமுறைமை போன்றவற்றைத் தீவிரமாக விமரிசனம் செய்ய நினைத்த அந்தப் புனைகதை சுந்தரராமசாமியின் ஜெ.ஜெ. சில குறிப்புகள். அந்நாவலின் வடிவம், சொல்முறை, எழுப்பிய வினாக்கள் என்பனவற்றை நினைவுபடுத்திகொண்டால் அதனையொத்த வடிவமொன்றை அருவி படம் தனதாக்கிக் கொண்டிருப்பதை உள்வாங்க முடியும். 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்