சாபம்:புகழ்பெற்ற கவிதையிலிருந்து உருவாக்கப்பெற்ற நாடகம்.

கடல் பயணி
|
இந்தக் கேள்வியை மட்டும் கேட்க வேண்டாம். இளைஞனே
.. இந்த வினா என் மனதில் ஆயிரம் தடவை தோன்றியது. ஆனால் நானே எனது மனதில் இருந்த
வஞ்சக நிலையில் அதை ஒன்றுமில்லாமல் ஆக்கி விட்டேன்.
|
இளைஞன்
|
இல்லை.. இல்லை.. இல்லை.. நீ அப்படியெல்லாம்
சொல்லக் கூடாது.
|
கடல் பயணி
|
ஆம்.. ஆம்.. ஆம்.. நான் ஒரு வஞ்சகன். என்
வஞ்சகச் செயலுக்கு எனது ஆயுள் முழுவதும் விலை தந்தே ஆக வேண்டும். சரி.. அதை
விடு. என் கதையைக் கேள். அந்த ஆல்பர்ட் ரோஸைக் கொன்ற பிறகு சில காலம் நன்றாக
இருந்தது சீதோஷ்ண நிலை. நீண்ட
நாட்களுக்கு அப்படியே தொடர்ந்தது. ஆனால் கப்பலைத் தொடர்ந்து வரவும், கடல் பயணிகளோடு
விளையாடவும் ஆல்பட்ரோஸ் இல்லை. ஒரு கட்டத்தில் எல்லோருமே அதை உணர்ந்தார்கள்..
அவர்கள் சொன்னார்கள்
|
நால்வரும்
|
ஆல்பட்ரோஸைக் கொன்றது சரியல்ல. மிக மோசமான
செயல். மென்மையான கடல் காற்றைக் கொண்டு வந்து சேர்த்தது அந்தப் பறவை தான்.
எங்கள் முடிவை நீ மறுத்திருக்கலாம். ஏன் அதை நீ கொன்றாய்.
|
கடல் பயணி
|
ஒரு ராத்திரி கழிந்தது. மறுநாள் சூரியன்
சிவப்பாகவும் இல்லாமல், மங்கலாகவும் இல்லாமல், புதியதொரு நிறத்தில் கிழக்கே
வந்தது. கடவுளின் தலையைப் போல.. சூரியன் வானத்தின் பரப்பில் மெல்லிய காற்றையும்
வெண் மேகங்களையும் கொண்டு வந்த பொழுது மனம் மாறிய எனது நண்பர்கள் சொன்னார்கள்
|
நால்வரும்
|
அந்தப் பறவையைக் கொன்றது சரி தான். நம்மிடம்
புகையையும் பனியையும் கொண்டு வந்து சேர்த்தது அந்தப் பறவைதான். நீ சரியான
செயலையே செய்துள்ளாய். கவலைப்படாதே.
|
கடல் பயணி
|
மெல்லிய கடல்காற்று வீசியது. வெண்மையான கடல்
மேகங்களும் நகர்ந்தன. எங்கும் அமைதி. அமைதியை நாங்கள் உணர்ந்தோம்.
அந்த அமைதியான கடல் பகுதிக்குள் நுழைந்த
மனிதர்களில் நாங்கள் தான் முதலாவது கூட்டமாக இருப்போம். அந்த அற்புதமான
சீதோஷ்ணம் நீண்ட நாள் நீடிக்கவில்லை. எங்களின்… அந்தச் சாயல் கூட இல்லாமல் போய்விட்டது.
நாங்கள் செய்த அந்தக் கொலைப் பழியால், கடலில் வெகுதூரத்திற்குச் சென்று
விட்டோம்.
திடீரென்று கடல்காற்று நின்று விட்டது. பயணமும்
தடைபட்டது. எல்லோருக்கும் ஒரே வருத்தம். ஒருத்தரோடு ஒருத்தர் பேசவும் இல்லை.
கடல் அமைதியான போது பேசாமல் இருப்பது தாங்க முடியாத ஒன்று. அந்த அமைதியைக்
குலைக்கவாவது நாங்கள் பேசியிருக்க வேண்டும்
ஒவ்வொரு நாளும் அதே சீதோஷ்ண நிலையில் நாங்கள்
துன்பப்பட்டோம். வெப்பமும் தகிப்பும் நிறைந்த வானம், எங்கள் தலையின்
அருகிலிருந்து, ரத்தச் சூரியன், வெப்ப மழை பொழிந்தான். ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு
நாளும் மூச்சு விட முடியாமல், நகரவும் முடியாமல் எங்கள் நாட்கள் நகர்ந்தன. எங்கள் கப்பல் ஏறத்தாழ நின்று
விட்டது. எல்லாமே இறந்து போன ஒன்றாக,,. கப்பல், கடல், சீதோஷ்ணநிலை, உலகம்
எல்லாம்,… நான் சாவின் பிரதேசத்தில் இருப்பதாகவே உணர்ந்தேன். ஓவியக் கடலில்
ஓவியமாகி விட்டது. எங்கள் கப்பல். அதற்குப் பின்பு எதிர்பாராத புயல்கள் பல
ஏற்படத் தொடங்கின.
|
[
தீயொடு கூடிய நடனம். கடல் பயணியான கதைசொல்லியைச் சுற்றி ஆடுகின்றனர்.
முடிவில்
உறங்குகின்றனர். மகிழ்ச்சியான உறக்கமாக
இல்லை. தூக்கத்திலும் அதே நினைப்பு.. ஒரு
மனிதனின் கனவில் பேயுரு தோன்றி..]
|
|
பேயுரு
|
நன்றாகத் தூங்குங்கள். ஆனால் உங்கள் விதி
முடிவாகி விட்டது. நீங்கள் பனியில் சிக்கி மீண்ட நாளிலிருந்தே உங்கள் கப்பலின்
அடியில் கைக்கெட்டும் தூரத்தில் முடிவு வந்து விட்டது. முடிவு நெருங்கி விட்டது.
இன்னும் சில நாட்களில் உங்களின் நண்பனாக ஆகி விடுவேன்.
|
நபர் 3
|
(பயந்து சத்தத்துடன் எழுந்து) ஓ.. கடவுளே.. என்னிடம்
வராதே.. (மற்றவர்களும் எழுந்து விடுகின்றனர்) என்னைத் தொடாதே..
|
நபர் 2
|
ஏ,,ஏ.. என் சப்தம் போடுகிறாய். என்ன என்ன
நடந்தது.
|
நபர் 3
|
கனவு எவ்வளவு கோரமான கனவு. ஒரு குரூரமான உருவம்,
கப்பலின் உச்சியில் வந்து என்னிடம் சொன்னது…” நாம் பனியில் சிக்கி ஆல்பட் ரோஸைப்
பார்த்ததிலிருந்தே அது நம்மைப் பின் தொடர்கிறதாம். நம்முடைய தலைவிதி அதன் கையில்
இருக்கிறதாம். அதன் சகாக்களின் வருகைக்காகக் காத்துக் கொண்டிருக்கிறதாம்
|
நபர் 2
|
அப்படியா.. ஓ.. கடவுளே..
|
நபர் 5
|
என்ன?.. என்ன? நடந்தது?
|
நபர்1
|
அதோ.. அந்தக் கடல் நீரைக் கவனியுங்கள்..
மந்திரவாதி வீசும் எண்ணெயைப் போல பச்சையாகவும் நீலமாகவும் வெள்ளையாகவும்
எரிவதைப் பாருங்கள். ( நால்வரும் 5 ஆம் நபரைச் சுற்றி நின்று பார்த்து)
|
நபர் 2
|
அவன் அந்தப் பறவையைக் கொன்றான். அன்றிலிருந்தே
துன்பமும் வந்து சேர்ந்தது,
|
மற்றவர்கள்
|
ஆம்.. ஆம்.. நீதான் பறவையைக் கொன்றாய்..
|
நபர் 5
|
நீங்கள் சொன்னீர்கள். நான் செய்தேன்.
|
நபர் 2
|
அதனால் என்ன? கடலில் குதியென்று நாங்கள்
சொல்லியிருந்தால் குதித்திருப்பாயா?
|
நபர் 3
|
அவன் தான் இந்தத் துயரங்களுக்குக் காரணம். அவனது
குற்றத்திற்காக நாம் பொறுப்பேற்க முடியாது.
|
குழு
|
ஆம் அவன் தான் எல்லா அழிவிற்கும் காரணம்.
|
கடல் பயணி
|
என்ன மோசமான நாள் அது. அவர்கள்
மிருகங்களைவிடவும் சுயநலமானவர்கள் என்று உணர்ந்தேன். எனக்கெதிராக அவர்கள் ஒன்று
சேர்ந்தார்கள். மனிதர்களின் சுயநலம் பற்றி அதற்குப் பின் ஆயிரம் தடவைக்கு மேல்
எனக்கு நானே கேட்டுக் கொண்டேன். மனிதர்கள் எல்லோரும் இப்படித்தான்
இருக்கிறார்கள். தங்கள் சொந்த நலனுக்காக எதையும் செய்கிறார்கள்; யாரையும்
பகைத்துக் கொள்வார்கள்; யாரையும் உதறிவிடுவார்கள்
என்னுடைய நண்பர்கள் எல்லாச் சாபத்தையும் என்
கழுத்தில் விட்டார்கள்.
|
நால்வரும்
|
”நீதான் ஆல்பட்ரோஸைக் கொன்றாய்; உன்னையே அந்தச்
சாபம் சேரும்” (ஒவ்வொருவரும் இதைச் சொல்லி கழுத்தில் கயிறொன்றை வீசி
விடுகிறார்கள். அவை ஐந்தாம் நபர் கழுத்தில் விழுந்து கொள்கின்றன. அவன் செய்வதறியாது
திகைத்து நிற்கின்றான்)
|
கடல் பயணி
|
நாங்கள் அந்த வெப்ப நாட்களைக் கழித்து விட்டோம்.
நாக்கெல்லாம் வறண்டு, கண்கள் புழுங்கியதாய், அந்தக் கோடை.. நான் மேற்கே பார்த்த
போது, சிலவற்றைக் கவனித்தேன்.
“ஹே.. மேற்கே பாருங்கள்.. அதோ கடலில் எதோ
தெரிகின்றது. நம்மை நோக்கி வருகின்றது.
|
நபர் 1
|
சிறு புள்ளியாக.. பாய்மர உச்சியாக.. நம்மை
நெருங்கி பக்கத்தில்.. பக்கத்தில் ஒரு கடல் ஆவியைப் போல புரண்டெழுந்து
வருகிறதே.. இடமாகவும் வலமாகவும்.. மேலும் கீழுமாக.. அசைந்து.. ஆர்ப்பரிப்புடன்..
|
நபர் 2
|
இது என்ன கனவு. (கையைக் கடித்து ரத்தத்தைச்
சுவைத்துப் பார்த்து விட்டு) இல்லை இது பொய்யல்ல.. உண்மை தான். கப்பல்.. அது ஒரு
கப்பல்..
|
நபர் 3
|
நீதான் ஒரு பெரிய தேவன். நீயொரு தேவன்.
|
கடல் பயணி
|
பாருங்கள்.. பாருங்கள்.. அதற்குப் பின் அது
நகரவில்லை. ரொம்பவும் மாயமானதாய் தோன்றுகிறது. கடலில் காற்றும் இல்லை.
சீதோஷ்ணமும் மாறவில்லை. அலையும் காற்றும் இன்றி கப்பல் அசையுமா..?
|
நபர் 4
|
நம் விதி நம்மோடு விளையாடுகிறது. அது கப்பல்
அல்ல. மேலைக்காற்று. சூரிய ஒளியோடு சேர்ந்து ஒளிச்சுடரை உண்டாக்கியிருக்கிறது.
இப்பொழுது பாருங்கள் ஒன்றுமே இல்லை. சூரியன் கடலுக்கடியில் சென்று மறைகிறான்.
ஆனால் இது காற்றின் செயலல்ல என்றே நம்புகிறேன். ராத்திரி வந்து எல்லோரும்
தூங்கும் வேளையில் ஒரு பெண்ணும் இன்னொரு பெண்ணுமாக இருவர் இந்தக் கப்பலின்
குறுக்கே மிதந்து போனதைக் கண்டேன். அவர்களில் ஒருத்தி வாழ்வு. இன்னொருத்தி சாவு.
தாயம் உருட்டி விளையாண்டபடியே பேசிக் கொண்டே போனார்கள்
|
சாவு
|
ஏற்கெனவே அவர்கள் அந்தக் காரியத்தைச் செய்து
விட்டார்கள். நான் சாவு. அவர்களை எடுத்துச் செல்வதற்காக வந்துள்ளேன்.
|
வாழ்வு
|
நீயேன் இவ்வளவு அவசரமாக வந்தாய்? அவர்கள்
அனைவரும் இளைய வயதினர். அவர்களை எடுத்துச் செல்ல அனுமதிக்க மாட்டேன்.
|
சாவு
|
இங்கே பார்.. என் வேலையில் நீ குறுக்கிடுவது
சரியல்ல.. சாவு என்பது வயதைப் பொறுத்தது அல்ல. அது ரொம்பவும் சிக்கலான கணிப்பு..
|
வாழ்வு
|
சரி..நாம் தாயம் உருட்டி விளையாடுவோம். வெல்லும்
நபர் யாரோ அவரது முடிவே செயல்படுத்தப்படும். (அவர்கள் தாயம் விளையாடுகின்றனர்)
|
சாவு
|
ஹ..ஹா.. விளையாட்டு முடிந்தது. நானே ஜெயித்தேன்.
நான் ஜெயித்து விட்டேன்.
|
கதைசொல்லி
|
அவர்கள் எல்லோருமே விழித்து அந்த விளையாட்டைப்
பயந்த கண்களோடு பார்த்துக் கொண்டிருப்பதை நான் கவனிக்கவில்லை. எங்கள் ரத்தம்
உறிஞ்சப்படுவதை உணர்ந்தோம். நட்சத்திரங்கள் மங்கலாகத் தெரிந்தன. இரவு கடினமாக
இருந்தது. கப்பலில் இருந்து துளிகள் சொட்டிக் கொண்டிருந்தன. நிலவு
செவ்விருந்தாகக் காட்சி அளித்தது.
வேகமாக நடந்தது. அது வெகு வேகமாக நடந்தது..
பெரிய சத்தத்துடன் விழுந்தார்கள். செத்தார்கள்.. ரொம்பவும் .. வேகமாக அவர்களிடமிருந்து உயிர்
பிரியும் அடையாளமோ கேவலோ கூட இல்லை. ஒவ்வொருவராக விழுந்தார்கள். ஆன்மாவும்
ரத்தமும் உடலை விட்டுப் பிரிந்தது. என் வில்லிலிருந்து கிளம்பிப் போன அம்பைப்
போன என்னை விட்டு விலகிப் போனார்கள் அவர்கள்.
நான் பயப்படுகிறேன்.
|
இளைஞன்
|
கடல் பயணியே.. நான் பயப்படுகிறேன். ஒரு பறவையைக்
கொன்றது ஒரு சாதாரண விசயம் என்றே முதலில் நினைத்தேன். ஆனால் விதி .. மிகச்
சாதாரண ஒன்றின் காரணமாகக் கூடத் தன் விளையாட்டை மூர்க்கமாக நடத்தும் என்று
புரிந்து கொண்டேன். நான் பயப்படுகிறேன். கடல் பயணியே நான் பயப்படுகிறேன்.
உங்கள் .. முடிவளர்ந்த கைகளையும் கடல் மண்ணால் திரிக்கப்பட்ட கயிறைப் போல
புடைத்துக் கொண்டிருக்கும் உனது நரம்புகளையும் பார்த்து.. ஒளிரும் உனது
கண்களையும் கண்டு பயமாக இருக்கிறது. உனது கதை பெரியதொரு பாரம்.
|
கடல் பயணி
|
பயப்பட வேண்டாம். கல்யாண விருந்தாளியே பயப்பட
வேண்டாம்.. இந்த உடல் இன்னும் விழவில்லை.
தனியாக.. தனியாக.. தன்னந் தனியாகப் பறந்த ,
மிகப் பரந்த கடலின் பரப்பில் தனியாக.. என் மீது இறக்கம் காட்டவே இல்லை
கடவுள். எனது ஆன்மாவின் துடிப்புக்கு
நிவாரணியே வரவில்லை. என் இனிய நண்பர்கள்.. எனது குழந்தைப் பிராயத்திலிருந்தே
என்னோடு இருந்த நண்பர்கள்.. எனது பெரும்பாலான நேரத்தை அவர்களோடு தான்
கழித்திருப்பேன். அவர்கள் எல்லோரும் இறந்து போய் விட்டார்கள். நான் மட்டும் இந்த
உலகத்திற்குப் பாரமாக, ஒரு கொடிய விளக்கைப் போல ஆயிரக்கணக்கான கோரப்
படைப்புகளில் ஒன்றாக இருந்து கொண்டிருக்கிறேன்,
என் கண்கள் வெகுதூரம் பார்க்கின்றன. நம்பிக்கை
தரும் விதமாக எதுவுமே தெரியவில்லை. கப்பலின் தளத்தில் எனது நண்பர்களின் வானத்தை
நோக்கி பிரார்த்தனை செய்ய முயன்றேன்… முடியவில்லை.. பிரார்த்தனை செய்ய
முடியவில்லை. மனப்பாரத்தோடு.. ஈரமற்ற, வஞ்சகம் நிறைந்த இதயத்தின்
குறுகுறுப்பையும் மீறி பிரார்த்தனை சாத்தியமே இல்லை. அதிகமான பயம் கூட.. எனது
மூச்சுக் காற்று வெளியேற மறுத்தது; நகரவும் முடியவில்லை. எல்லா பாரமும் என் மீது
இருப்பதாக உணர்ந்தேன். ஆகாயம், கடல், எனது இறந்து போன என் நண்பர்கள் என எல்லாப்
பாரமும் என்னை அழுத்தியது. இறந்து போன என் நண்பர்கள் பாக்கியவான்கள் என்று
அவர்கள் மீது எனக்குப் பொறாமை கூட. அவர்களின் கண்களைப் பார்த்தேன். அவை மற்றும்
உயிரோடு… செத்துப் போனவர்களின் அசையும் கண்களைப் பார்ப்பதைவிடக் கொடுமையான சாபம்
வேறு ஒன்றும் இருக்க முடியாது.
ஏழு இரவு.. ஏழு பகல் அந்தச் சாபத்தோடு, அந்தப்
புயலின் போது எங்களின் உணவையும் குடிநீரையும் கூட இழந்தோம். இப்பொழுது பசியோடும்
தாகத்தோடும், கடலின் பரப்பில் பிணங்களின் அசையும் கண்களைச் சந்திக்கும் சாபம்.
தண்ணீர்.. தண்ணீர்.. எல்லா இடத்திலும் தண்ணீர்.
ஆனால் ஒரு துளியும் நாவை நனைக்காது. வானத்தில் நகரும் நிலவோடு இரவு
நட்சத்திரங்களும் நகர்ந்து கொண்டிருந்தன. அவற்றின் கதிர்கள், வெப்பக் கடலில்
பட்டுத் தெறித்தது ரொம்பவும் அழகாக இருந்தது. ஆனால் கப்பலின் அருகில், அதன்
நிழலிலேயே கடல் நீர் செம்பிழப்பாய் இருந்தது. கப்பலின் நிழலைத் தாண்டி கடல் நீரை
கவனித்தேன்.. நீர் குழம்பி, ஒளியுடன் கூடிய வெந்நிறமாய்த் தளும்பியது. தளும்பும்
கடல் அலையின் நிறம் மேலும் கூடி வெவ்வேறு வண்ணங்களில் பளிச்சிட்டன.
ஓ.! அவற்றின் அழகை எப்படி என்னால் சொல்ல
முடியும். சவங்களோடு ஏழு நாட்களைக் கடந்து பின்பு உயிரினங்களைப் பார்த்தேன். என்
வாழ்நாளில் எத்தனையோ அழகான பொருட்களைப் பார்த்தேன். ஆனால் அந்தக் கடல்
சுழிப்பின் வண்ணக் கோலங்கள் தான் மிகவும் அழகானவை என்பேன்..
ஓ! மகிழ்ச்சியான உயிரினங்கள்!
அவற்றின் அழகைச் சொல்ல
வார்த்தைகளே இல்லை.
அதைப் பார்த்தபின்பு வாழ்வதின் அர்த்தம் எனக்குப்
புரிந்தது. அந்த உணர்வில் எனது இதயம் அன்பை நிறைத்துக் கொண்டது. நிச்சயமாக,
கடவுள் என்னைக் காத்து விட்டார். என் மீது இரக்கம் கொண்டிருக்கிறார். கப்பலைச்
சுற்றி நெளியும் அந்த வண்ணக் கோலத்தில்- அலையில் மற்ற எல்லாவற்றையும் மறந்து
போனேன். அவற்றைப் பார்த்தபடியே கடவுளிடம் அன்பாகப் பிரார்த்தனை செய்தேன்.
உடனடியாக எனது கழுத்து விடுதலை அடைவதாக உணர்ந்தேன்.
இறந்து போன ஆல்பட் ரோஸின் இறகால்… எனது இனிய
நண்பர்கள் சூட்டிய அந்த மாலை.. கடலில் விழுந்து, வழிகாட்டியாய் மூழ்கியது.
|
எஸ்.டி. கோலரிட்ஜ் எழுதிய ‘தி ரைம் ஆப் ஏன்சியண்ட் மெரினர்’ The Rime of the Ancient Marinerஎன்ற கவிதையின் உணர்வும் அதில் உள்ள கதைக்கூறுமே இந்த நாடகத்தின் கட்டமைப்பாக மாறியிருக்கிறது. இந்தக் கவிதையை நாடகமாக ஆக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் அறிமுகப்படுத்தி விவாதத்தில் ஈடுபட்டவர் ஷெஷ்துர் ரஹ்மான். வங்கதேசத்தில் இருந்து வந்து என்னிடம் ஆய்வு மாணவராகச் சேர்ந்தார். பின்னர் திருநெல்வேலிக்குப் போனபின்பு பேரா. கே.ஏ.குணசேகரனிடம் ஆய்வை முடித்தார். இந்த நாடகத்தை மேடையேற்ற விரும்புபவர்கள் எனது இணைய முகவரிக்குத் தகவல் அனுப்பி முன் அனுமதி பெற வேண்டும்.
கருத்துகள்