திரைப்படங்களைப் பார்த்தல் பொதுக்குறிப்புகளும் சிறப்புக்குறிப்பும்

நமது ரசனைகள்- யாருடைய தேர்வு

இணையவழிச் செயலிகளின் வரவு - செயற்கை நுண்ணறிவுப் பயன்பாடு - மொழிகடந்த வெளிகளின் படங்கள் (Pan world, Pan India, Pan Tamil) எனப் பலவிதமான சொல்லாடல்களின் பின்னணியில் ஒரு சினிமா ரசிகரின் இருப்பும் வெளிப்பாடுகளும் பெரும் கேள்விக்குரியதாகவும் கேலிக்குரியதாகவும் ஆகிக் கொண்டிருக்கின்றன என்பதை அறிந்துகொண்டிருக்கிறோமா?.

தயாரிப்பு முடித்த சினிமாக்களை வெளியிட வாரக்கடைசிக்காகக் காத்துக் கொண்டிருப்பது ஒரு மரபான மனநிலை. இப்போதும் அது தொடரத்தான் செய்கிறது. அதேபோல் சில பத்து முதல் நூறுகோடிகள் வரை சம்பளம் பெற்றுக்கொண்டு தான் நடித்த சினிமாவை வெற்றிப்படமாக மாற்ற வேண்டிய கட்டாயத்தில் நாயக நடிகர்களும் படத்தின் இயக்குநரும் தவிக்கவே செய்கிறார்கள். ஒவ்வொரு படத்திற்கும் முதல் வாரத்தைக் கடப்பதை வாழ்வா? சாவா? ஆக்கிவிடுகிறார்கள் திரையரங்குக்கு வரும் பார்வையாளர்களும், சமூக ஊடகங்களின் கருத்துரையாளர்களும்.

திரையரங்கில் பார்வையாளர்கள் வராமல் காற்றாடிய சினிமாக்கள், செயலிகளின் முதல் 10 வரிசைப் பட்டியலில் ஆண்டுக்கணக்கில் நிலை கொண்டிருக்கின்றன.போட்ட பணத்தைப் பெற்றுவிடுவதில் செயலிகளின் பங்களிப்பும் கவனத்திற்குரியதாக ஆகியிருக்கின்றது. கோடிகளுக்குப் பதிலாக லட்சங்களில் தயாரித்த சினிமாக்களுக்கும் அவற்றில் இடம் கிடைத்திருக்கிறது. நடிப்பவர்களின் மொழி அடையாளங்கள் பேணப்படுவதும் அழிக்கப்படுவதும் ஒரே நேரத்தில் நடக்கின்றது. நடிக்கத்தெரிந்த நடிகர்களுக்கான தொழில் வாய்ப்புகள் அதிகமாகிக் கொண்டே இருக்கின்றன. அறுபது வயதிற்கும் மேலான வயதுடைய மனிதர்கள் பாத்திரங்களாக வருவது அதிகமாகியிருக்கின்றது. சினிமா வாய்ப்பைத் தேட நினைப்பவர்கள் 30 வினாடிச் சுருளில் தங்கள் உடலின் திறன்மிக்க பகுதிகளைக் காட்சிப்படுத்துகிறார்கள்; தகவல் தொடர்புத்திறனை அறிவாகக் காட்டுகின்றார்கள். .

இந்த நெருக்கடியில் சினிமா ரசிகர்களும் தங்கள் அடையாளத்தைத்-தனித்துவத்தை-ரசனை வெளிப்பாட்டைத் தக்கவைப்பதும் வெளிப்படுத்துவதும் தெரியாமல் திணறுகிறார்கள். ஒரே கட்டுத் தொகையில் ஒரு டஜன் எண்ணிக்கையில் இணையச்செயலிகளைப் பார்க்கும் வாய்ப்பைத் தருகின்றன அலைபேசிக்குழுமங்கள். இலவச இணைப்புகளையும் முன்வைக்கின்றன. தனித்த செயலிகளாக விளங்கும் நெட்பிளிக்ஸ், அமெசான் பிரைம், ஜியோஹாட்ஸ்டார் போன்றன மாதச்சந்தாவையும் ஆண்டுச் சந்தாவையும் பெற்றுக்கொண்டு திரைக்கு வந்த ஒன்றிரண்டு வாரங்களிலேயே தங்கள் தளத்தில் புதிய சினிமாக்களை வெளியிட்டுக் குவிக்கின்றன.

அந்தந்தச் செயலிகளே தங்களின் அடையாளம் பேணும் படங்களைத் தயாரிக்கவும் செய்கின்றன. இந்தப் போக்கில் நெட்பிளிக்ஸ் தொடர்ந்து முன்னோடியாகத் திகழ்கின்றது. உலக சினிமாவின் பார்வையாளர்களுக்கு வகைபிரித்து வைத்திருக்கின்றது அதன் தளம். சினிமாவாகத் தயாரிப்பதுபோல தொடர்களைத் தருவதிலும் போட்டியிட்டுக் கொண்டிருக்கின்றன. இந்தப் போட்டிக்கும் பின்னும் தமிழ்த் தொலைக்காட்சிகளின் குடும்ப வன்மத்தொடர்கள் வெற்றிகரமாக நிற்கின்றன என்பது தமிழர்களின் பொது உளவியலோடு சேர்த்து விவாதிக்க வேண்டியன தனிப்பாடங்கள்.

ஒரு சினிமாவைப் பார்த்துக்கொண்டிருக்கும்போது எந்த மொழிச் சினிமாவைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்பதைத் தீர்மானிக்க முடியாமல் தவிக்க வேண்டியிருக்கிறது. நடிக்கும் நடிகர்களின் மொழி அடையாளத்தைக் கொண்டா? படத்தில் காட்டப்படும் மலைகளையும் நதிகளையும் நகரங்களையும் சிற்றூர்களையும் அங்கெல்லாம் பரவி நிற்கும் வெக்கையையும் குளிர்ச்சியையும் பதிவு செய்யும் காமிராவின் கோணங்களைக் கொண்டா? உரிப்பொருள் எழுப்பும் விவாதங்களின் அடைப்படையிலா? எந்த முடிவும் இன்னொரு விலகலால் மாறும் முடிவாகிவிடுகின்றது.

கலை, இலக்கியங்களை விமரிசனம் செய்வதற்காகக் கற்றுக்கொண்ட ஆய்வு முறையியல்களும் விமரிசனச் சொல்லாடல்களும் போதாமையுடையனவாக மாறிக்கொண்டிருக்கின்றன. தேர்வு செய்து பார்ப்பது; ரசிப்பது, விவாதிப்பது, விமரிசிப்பது என வேகம் காட்ட முடியாத தவிப்பே மிஞ்சி நிற்கின்றது. ஒன்றைப் பற்றிப்பேசிக்கொண்டிருக்கும்போது இன்னொன்று அதன் மேல் நிழலாகப் படிந்து முந்தியதை இல்லாமல் ஆக்கிவிட்டு நகர்கின்றது. தொடர்ச்சியாகச் சினிமாவைப் பார்க்கும் எனது அனுபவமாக மட்டும் இதனைச் சொல்லத் தோன்றவில்லை.பலருக்கும் அந்த அனுபவங்கள் கிடைத்துக் கொண்டே இருக்கின்றன

அந்த ஏழு படங்கள்

ஒரு வாரத்தில் -2025/ஆகஸ்டு 18 முதல் 24 வரை- நாளொன்றுக்கு ஒரு படம் என ஏழு படங்களைப் பார்த்து முடித்தேன். அந்த ஏழு படங்களில் பாதிக்கும் மேல் கடந்த ஒருமாதத்திற்குள் இணையச் செயலிகளில் வெளியான புதிய படங்கள் ; ஒன்றிரண்டு சில மாதங்களுக்கு முன்பு வந்த படங்கள். இவை எவற்றையும் திரையரங்கிற்குச் சென்று பார்த்துவிட நினைக்கவில்லை:

1] இரட்டையர் (Do patti)- இந்தி
2] பறந்து போ -தமிழ்
3] படைக்களம் -மலையாளம்
4] 3BHK (மூன்று படுக்கையறைகள் வீடு) -தமிழ்
5] உங்களைப்போல ஒருவர் (Aap Jaisa Koi) - இந்தி
6] தலைவன் தலைவி (தமிழ்)
7] மாரீசன் -தமிழ்


தனித்தனியாகப் பார்த்தபோது ஏழு சினிமாக்களும் அதனதன் அளவில் தனித்தன்மையானவை போலவே இருந்தன. ஆனால் சில பொதுக்கூறுகளின் அடிப்படையில் இணைவைத்துப் பார்க்கவும் பேசவும் வாய்ப்பளிப்பனவாகவும் இருந்தன. ஒவ்வொன்றின் மீதும் விரிவான விமரிசனக்குறிப்புகள் எழுதுவதைவிட அந்தச் சினிமாக்களின் மீதான பொதுநிலைக் குறிப்புகளாகச் சிலவற்றைச் சொல்லத் தோன்றியது. அந்தப் படங்களைப் பார்க்க நினைப்பவர்களுக்கு உதவலாம் என்பதே நோக்கம்.

அப்படிச் சொல்ல நினைத்தபோது இரட்டையர் என்ற இந்திப்படமும் படைக்களம் என்ற மலையாளப்படமும் ஒத்த தன்மைகள் சிலவற்றைக் கொண்டிருப்பதாகத் தோன்றின. அதே போல் ராமின் பறந்துபோவும் ஶ்ரீகணேஷ் என்ற புதிய இயக்குநரின் மூன்று படுக்கையறை கொண்ட வீடும் படமாக்கலில் ஒற்றுமைத்தன்மையைக் கொண்டிருந்தன. மாதவன்- பாத்துமா சோனு செய்க் நடிக்க, விவேக் சோனு இயக்கியுள்ள உங்களைப் போல ஒருவரும் விஜய்சேதுபதி -நித்யாமேனன் நடிப்பில் பாண்டிராஜ் இயக்கிய தலைவன் தலைவியும், ஒற்றை மையத்தை விவாதப்பொருளாக வைத்திருக்கின்றன என்பது புலப்பட்டது. ஏழு படங்களில் மூன்று இணைநிலைப் படங்களைச் சுட்டிக்காட்டிய பின் சுதீஷ் சங்கர் என்ற அறியப்படாத இயக்குநரின் இயக்கத்தில் நடிப்புக்கலையில் பலவிதமான சோதனைகளைச் செய்து தங்களை நிரூபித்துள்ள வடிவேலுவும் பகத்பாசிலும் மையக்கதாபாத்திரங்களை ஏற்று நடித்த மாரீசன் தனித்துவமான சினிமா என முகநூல் குறிப்பொன்றை -25/08/25 அன்று எழுதினேன்.

மாரீசன் என்ற அந்தப் பெயர் ராமாயணத்தில் இடம்பெற்றுள்ள கதாபாத்திரம் என்பதையோ, இந்தப் படத்தில் ஒரு குறியீட்டுப் பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதையோ நான் விளக்கியெல்லாம் எழுதவில்லை. எந்தக் காரணங்களும் சொல்லாமல் “ஏழில் மாரீசனே சிறந்த படம்” என முகநூலில் எழுதியபோது 350 க்கும் அதிகமானோர் விருப்பக்குறியிட்டனர்; 30 க்கும் அதிகமானோர் ‘ஆமாம்; அது நல்லபடம்’ என்று ஏற்றுச் சொன்னார்கள். எனது முகநூல் பதிவொன்று இவ்வளவு கவனம் பொதுவாக வருவதில்லை.

வந்த எதிர்வினைகளில் ஒரேயொரு எதிர்வினை மட்டும் வேறாக இருந்தது. அந்த எதிர்வினையை எழுதியவர் (கவிதா சுந்தர்) எனது நட்புபட்டியலில் இல்லாதவராக இருந்தார். அவர், “STRAW – Netflix ல இருக்கு; மாரீசன் விட நல்லா இருக்கும்” என்றார். முகம் தெரியாத கவிதா சுந்தரின் குறிப்பை ஏற்று அன்றிரவே பார்த்தேன். வைக்கோல் என்ற தமிழ்ப்பெயர்ச் சொல்லின் ஆங்கிலப் பெயர்ச் சொல்லே ஸ்ட்ரா. நெல்மணிகளைப் பிரித்தெடுக்காத நிலையில் அந்தப்பயிரின் தண்டுக்குள் இருக்கும் ஓட்டை வழியாகத் திரவத்தை உறிஞ்சிக் குடிக்கமுடியும். குடுவைகளில் அடைக்கப்பட்ட திரவங்களை உறிஞ்சிக் குடிக்கப் பயன்படும் ஒன்றின் பெயராகவும் ஆங்கிலத்தில் STRAW என்ற பெயர்ச் சொல் பயன்பாட்டில் உள்ளது. படத்தை பார்த்து முடித்தபின் அந்தப் பெயரும் மாரீசன் போல குறியீட்டுப் பொருளிலேயே படத்தின் பெயராகி நிற்கிறது என்பது புலப்பட்டது. ஆனால் வைக்கோல் என்ற பொருளிலா? உறிஞ்சிக் குடித்தபின் தூக்கிக் குப்பைக் கூடையில் போடவேண்டிய உறிஞ்சு குழாய் என்ற பொருளிலா? என்ற கேள்வி எழுந்தது. இரண்டு விதமான குறியீட்டுப் பொருண்மையும் படத்தோடு பொருந்தி நிற்பது சிறப்பெனத் தோன்றியது.

இப்படி நடப்பதும் இந்தக் காலம் உருவாக்கியுள்ள நெருக்கடிதான். யாரோ ஒருவர், உலகத்தின் ஏதோவொரு மூலையிலிருந்து ஒற்றைக் குறிப்பின் வழியாக ஒரு சினிமாவைத் தேடிப் பார்க்கும் வாய்ப்பை நமது காலம் உருவாக்கித் தந்திருக்கிறது. ‘தேடுங்கள் கண்டடைவீர்கள்’ என்ற வேதாகமச் சொற்றொடரை உண்மையாக்கி நிற்கின்றன இணையச் செயலிகள். ஏழில் சிறந்ததாக நான் கருதிய மாரீசனுக்கும் அதைவிடச் சிறந்ததாகக் கவிதா சுந்தர் குறிப்பிட்ட ஸ்ட்ராவிற்கும் இடையே பல ஒற்றுமைகள் உள்ளன. அது உலக சினிமாவிற்கான அடையாளங்களையும் விருதளிப்பையும் முன்வைக்கும் ஆஸ்கார் விருதுப் போட்டிக்குப் பட்டியலிடப்பட்ட படம் என்பது குறித்துக்கொள்ளவேண்டிய ஒன்று. இவற்றை விரிவாகப் பார்ப்பதற்கு முன்பு இணையிணையாக நின்ற மூன்று ஜோடிகளைக் குறித்த சில விமரிசனக்குறிப்பைச் சொல்லிவிடலாம்.

ஒப்பீடுகள் :

1.உளவியல் சிடுக்குகள்


இரண்டு பெண்களின் -இரட்டையராய்ப் பிறந்த சகோதரிகளின் போட்டா போட்டியில் நகரும் காட்சிகளால் ஆனது தோ பட்டி என்ற இந்திப் படத்தின் நிகழ்வுகள். அந்நிகழ்வுகளின் பின்னால் இருப்பதும், மந்திர, தந்திரச் சிடுக்குகள் மூலம் எதிராளியைக் கட்டுப்படுத்தித் தான் மேலே வந்துவிட முடியும் என நம்பும் இரண்டு கல்லூரிப் பேராசிரியர்களின் போட்டி நடவடிக்கைகளால் நகரும் படைக்களனின் நிகழ்வுகளும் இணைநிலைத் தன்மை கொண்டவை. தன் முனைப்பு அல்லது தன்னம்பிக்கை இன்மை என்ற நிலையில் மனிதர்களின் உளவியல் செயல்படும் விதத்தை விவாதிக்கும் படங்களாக இரட்டையரும் படைக்களனும் ஒரே கோட்டில் இணைந்துகொள்கின்றன.

அப்பாவிப் பெண்கள் மீது கணவன்மார்கள் நடத்தும் குடும்ப வன்முறை வழக்குகளைத் துப்பறியும் பெண் காவல் அதிகாரியின்- கஜோல் ஏற்றுள்ள புலனாய்வுப்பாத்திர நோக்கில் விரியும் படத்தில், வெளிப்படுத்திக் கொள்வதில் தயக்கம் கொண்ட மரபான இந்தியப் பெண் ஒருத்தியும்.- தயக்கங்களை உதறிய நவீன வாழ்க்கையை எந்தவிதத் தயக்கங்களும் இல்லாமல் அனுபவித்தும் பார்த்துவிட நினைக்கும் இன்னொருத்தியும் என்ற இரட்டைக்குள் அப்பாவியான பெண்ணின் தோல்விகளையும் வெளிப்படையானவளின் வெற்றிகளையும் பார்வையாளர்களுக்குக் காட்சிப்படுத்துகிறார் இயக்குநர், சிறு வயதிலிருந்தே தனது சகோதரிக்குக் கிடைத்தனவற்றையெல்லாம் தனக்கெனப் பறித்துக்கொள்ளும் சகோதரியின் மீது ஆத்திரம் கொள்ளாமல் அச்சப்பட்டுத் தனித்திருக்கும் சகோதரி என்ற எதிர்வு நிலைகளைப் படம் அடுக்கிக் கொண்டே போகின்றது. அப்பாவிப்பெண்ணுக்கு எப்படியாவது உதவும் நோக்கில் குடும்ப வன்முறை வழக்கொன்றைப் பதிவு செய்து தண்டிக்கும் நோக்கத்தில் இருக்கிறார் காவல்துறை அதிகாரி.
 
ஒரு கட்டத்தில் அப்பாவிப் பெண்ணின் தோல்விகள் எல்லாம் உண்மையில் தோல்விகளே அல்ல; தனது கணவனாகிய ஆணைப் பழிவாங்கும் வன்மம் என்பது கீறலாக வெளிப்படுகின்றது. அந்தக் கீறலின் தொடர்ச்சியில் படம் துப்பறியும் படமாக மாறிவிடுகின்றது. துப்பறியும் அதிகாரியும், சொந்த சகோதரியும் நடத்தும் ரகசியத்தேடல்களின் முடிவில் அந்தப் பழிவாங்கும் படிமங்களும் உணர்வுகளும் இரட்டைச் சகோதரிகளின் அம்மாவுக்கு ஆண்கள் இழைத்த குடும்ப வன்முறைகளின் தாக்கத்தால் ஏற்பட்ட உளவியல் சிக்கல் என்பதாகப் படம் முடிகின்றது. இந்தியக் குற்றவியல் சட்டப்படி அந்தப் பெண் தண்டனை பெறவேண்டியவள் என்றாலும் அவளுக்குள் படிந்திருந்த வன்மத்திற்கு ஆண்களின் காரணங்களற்ற ஆதிக்க மனநிலையும் அதன் வெளிப்பாடுகளுமே காரணம் என்பதால் தண்டிக்காமல் விட்டுவிடுகின்றார் பெண் காவல் அதிகாரி.

மலையாளப்படமான படைக்களம் இன்னொரு இரட்டை நிலையை உத்தியாக்கிக் காட்சிகளை அடுக்கியுள்ளது. ஒரு மனிதரின் உடம்புக்குள் இன்னொரு மனிதரின் மூளையை அல்லது மனதைச் செலுத்திவிடும் கூடுவிட்டுக் கூடுபாயும் மந்திரதந்திரச் சடங்குகளே படைக்களம். இந்தச் சடங்குகளின் அடிப்படைகளோடு உயிரி இயல்பியல் என்னும் அறிவியல் உண்மைகளையும் இணைத்து உருவாக்கப்பட்ட திரைக்கதையில் கல்லூரி ஆசிரியர்களின் பதவி மோகமும் வெறியும் நடத்தும் தீய பக்கங்கள் பேசப்பட்டுள்ளன. நியாயமாகக் கிடைக்கவேண்டிய துறைத்தலைவர் பொறுப்பு தள்ளிப்போவதற்குத் தனது தன்முனைப்பற்ற தன்மையும் எல்லாவற்றிலிருந்தும் ஒதுங்கிப் போகும் மனநிலையுமே காரணம் என இருக்கும் ஒருவரின் உடம்புக்குள் புகும் இன்னொருவரின் செயல்பாடுகளுக்காக ஆசிரியர் ஒருவர் தண்டிக்கப்படுகின்றார். இந்தத் தந்திரத்தை உணர்ந்த மாணவர்கள் குழாம் ஒன்று அறிவியல் வழியில் மந்திரதந்திரக் கணக்குகளைச் சரிசெய்து நல்ல முடிவைக் கொண்டுவருகிறார்கள். தன்னை முன்னிறுத்திக் கொள்ளும் பேராசை கொண்டவரும் கூடக் குடும்ப எல்லைக்குள் தவறுகளைச் செய்யும்போது தடுமாற்றம் அடைந்துவிடுவார்கள் என்பதை விவாதிக்கும் கூறுகளோடு நகர்ந்த படத்தையும் உளவியல் காரணங்களால் மட்டுமே புரிந்துகொள்ள முடியும்.

2. மிகையான நடப்புக்காட்சிகள்

எந்தவிதச் சிந்தனையுமற்று ஒவ்வொரு நாளையும் இன்னொரு நாளாக நினைத்துக் கடந்துபோகும் சாதாரண வாழ்நிலையில் அதிகமானோர் இருக்கின்றனர் . ஆனால் சிந்திக்கின்ற மனிதர்கள் அப்படி நகர்ந்து விடுவதில்லை. சூழல் உருவாக்கிய நெருக்கடியால் அல்லது நாகரிகமான வாழ்வியல் என்ற கருத்தினால் ஏற்றுக்கொண்ட சுமைகளை இறக்கிவைக்க முடியாமல் தவிக்கும் வாழ்க்கையொன்றை வாழ்கிறோம் என்ற அலுப்பும் சலிப்பும் நகரத்து மனிதர்களின் நடுத்தரவர்க்க வாழ்க்கையில் இருக்கிறது. அலுப்போடும் சலிப்போடும் வாழ நேர்ந்ததின் காரணங்களை ஆராய்ந்து தெளியும் மனம், ஒரு கட்டத்தில் அவற்றிலிருந்து விலகிவிடும் வாய்ப்புகளைக் குறித்துச் சிந்திக்கத் தொடங்கும். சிந்திப்பதன் விளைவாக விடுபடுதலை நோக்கி நகர்வார்கள். பறந்து போ படத்தை இயக்கியுள்ள ராமிற்கு நகரத்து நடுத்தர வர்க்க மனிதர்களின் குழந்தை வளர்ப்பு மீது கடுமையான அதிருப்தி இருக்கிறது. அந்த அதிருப்தியைச் சுமந்தலையும் கணவன் -மனைவியைப் பாத்திரங்களாக்கித் திரைக்கதையாக்கிப் படமாக்கியுள்ளார்.
 அடைத்துப் போடப்பட்ட வீட்டுக்குள்ளேயே கிடைக்கும் உணவு வகைகள், தின்பண்டங்கள், விளையாட்டுச் சாமான்கள், கேளிக்கையூட்டும் கருவிகள் என ஒவ்வொன்றும் அவனுக்குள் உருவாக்கிய மூர்க்கத்தனத்தைக் களையும் வழியாகத் தற்காலிக ஏற்பாடொன்றைச் செய்கிறார்கள். ஒரு சாலைப்பயண வாழ்க்கையின்-ரோட் ட்ரிப்- வழியாகக் கட்டுப்பாடற்றுப் பறந்து திரியும் பறவை வாழ்க்கையை காட்டுகின்றார்கள். ஆனால் அந்தத் தற்காலிகத்தை நிரந்தரமாக்கும் வகையறியாது திரும்பவும் பழைய நிலைமையைத் தொடர்கின்றார்கள். அப்படித் தொடர்வதற்கான சமாதானங்களாக இப்போதுள்ள சூழலையும் மரபான சாதி அமைப்பையும் காரணங்காட்டித் தப்பித்துக் கொள்கிறார்கள். நடுத்தரவர்க்க வாழ்க்கையின் இருத்தலியல் சிக்கல்களின் மீதான விமரிசனப்பார்வை என்ற அளவில் ராமின் பறந்துபோ முக்கியமான சினிமா. குழந்தையின் முந்தையை நிலையையும் மாறிய நிலையையும் நேர்நிலைப் படுத்தும் காட்சிகள் ஒவ்வொன்றும் மிகைத்தன்மை மிக்கவை. தான் வலியுறுத்த விரும்பும் நோக்கத்தை ஆழமாகப் பதியவைக்க வேண்டும் என்று விரும்பும் ராம் எப்போதும் இத்தகைய மிகைத்தன்மையான காட்சிகளையே ஒவ்வொரு படத்திலும் நடப்பாகக் காட்டிக் கொண்டிருக்கிறார்.

குழந்தை வளர்ப்பைப் போலவே சொந்த வீட்டுக்கனவு என்பது நடுத்தரவர்க்கத்தின் இன்னொரு இருப்பியல் பிரச்சினை. எப்பாடுபட்டாவது வாடகை வீடு தேடுவதையும், வீட்டு உரிமையாளர்களின் கண்காணிப்பையும் தாண்டவேண்டும் என்பதில் காட்டும் முனைப்புகளையும் நகர்வுகளையும் திரைக்கதையாக்கியிருக்கிறார் 3BHK (மூன்று படுக்கையறைகள் வீடு) படத்தை இயக்கிய ஶ்ரீ கணேஷ். சொந்த வீட்டுக்கனவைச் சுமக்கும் நடுத்தர்வர்க்க மனிதன் வாசுதேவனின் துயரங்களை மட்டுமே அடுக்கி அடுக்கி உண்டாக்கும் துயரக்காட்சிகளின் மிகைநடப்பில் இருப்பதும் நோக்கத்தை ஆழமாகப் பார்வையாளர்களுக்குக் கடத்திவிட வேண்டும் என்ற ஒற்றை நோக்கம் மட்டுமே. ஶ்ரீகணேஷிடமும் ராமிடம் தங்கியிருப்பது ஒருவிதத்தீவிரமனப்பான்மை. அந்தத் தீவிர மனப்பான்மை பார்வையாளர்களைக் குற்றவுணர்வுக்குள்ளாக்கவே செய்திருக்கிறது. சினிமாவைக் கலையாக ரசித்துப் பார்ப்பவர்களாகவே ஆக்க முடியாத இத்தகைய தீவிர மனப்பான்மைகள் நேர்மறையான எண்ணங்களை உருவாக்குவதற்குப் பதிலாக எதிர்மறை மனநிலையையே உருவாக்கும்.

உன்னைப்போல ஒருவர் என்ற பொருள் கொண்ட இந்திப்படமும் தலைவன் தலைவியும் நிகழ்கால இந்தியாவில் குடும்பங்கள் உருவாக்கப்படும் இருவேறு நிலைகளை விசாரணைக்குள்ளாக்கியிருக்கின்றன. ஏதோவொரு புள்ளியில் ஒத்துப்போகும் ஒன்றின் மேல் உருவாக்கப்பட்டுவிடும் நிச்சயிக்கப்பட்ட திருமணங்களின் தலைவன் தலைவிகளின் அல்லல்பட்ட வாழ்க்கையை நகைச்சுவையாக விசாரிக்க நினைத்து காட்டுக்கத்தலாக வெளிப்படும் உரையாடல் மொழியையே சினிமாவின் வெளிப்பாட்டு வடிவமாக நினைத்த பாண்டிராஜ் ஒரு தோல்விப்படத்தை உருவாக்கியிருக்கிறார். சினிமாவைப் பார்க்க விரும்பும் பார்வையாளர்களின் கண்ணுக்கு இதமளிக்கும் ஒரு காட்சியும் இல்லாமல் செவிமடல்கள் சிதையுமளவுக்குக் கூச்சல்களே வசனங்களாக நிரம்பியிருக்கின்றன. மகனுக்குத் தலைமொட்டை எடுக்கும்போது உடன் இருக்க வேண்டியது தகப்பனா? தாய்மாமனா? என்ற முரண்பாட்டுக்கேள்வியின் மேல் நகரும் படம் அந்தப் புள்ளியிலேயே திரும்பத்திரும்ப வந்து நிற்கின்றது. சினிமாவின் மொழிக்குள் உடலின் மொழிக்கும் மௌனத்திற்கும் இடமுண்டு என்பதை அறியாமல் எடுக்கப்பட்ட வன்முறை சினிமா. கண்டிக்கவேண்டிய ஒன்று.

குடும்பத்தை உருவாக்குவதில் ஆண் -பெண் இணையின் பொருத்தங்கள் என்ற புள்ளியில் மட்டுமே தலைவன் தலைவியோடு இணைவைக்கக் கூடியது ஆப்செய்ஷா கொய். அதன் இயக்குநர் விவேக் சோனுவின் சினிமா பற்றிய புரிதல்கள் பாராட்டத்தக்க ஒன்று. திருமண வயதைத் தாண்டிய - 40 வயதைத் தாண்டிய - சம்ஸ்க்ருதப் பேராசிரியர் X பிரெஞ்சு இலக்கியம் கற்பிக்கும் ஆசிரியர் என்ற முரணிலைப் பாத்திரங்களை வைத்துக்கொண்டு இந்தியக்குடும்பங்களை விசாரணைக்குள்ளாக்கியிருக்கிறது. காதலையும் காமத்தையும் அடக்கப்படும் ஒன்றாகவே கற்பித்துவரும் இந்தியக் குடும்பத்தில் ஆண்களின் இருப்பு எப்போதும் மேலாதிக்கச் சிந்தனையைத் தாண்டிய ஒன்றாக இருப்பதில்லை என்பதைப் பாத்திரங்களின் வடிவமைப்பாலும், அவற்றுக்கிடையே நடக்கும் உரையாடல்கள் மூலம் நகர்த்தியுள்ளார்.


சொந்தசாதி, உறவினர் வழித் தகவல் தொடர்பு போன்ற மரபான வாழ்க்கைக்குள் இருந்த பெண் பார்த்தல் நடைமுறைகளைத் தாண்டிப் புதிய முறைகளின் வழியாகத் தேடும் வரன்களின் சந்திப்பின் போதும் கூடப் பெண்களின் விருப்பங்களும் தன்னிலையும் ஒதுக்கப்படுகின்றன என்பதை மையக்கதாப்பாத்திரங்களின் தொடக்கம், சந்திப்பு, பிரிவு, விவாதம், முடிவு என்ற வடிவத்தில் நிதானமாக விவாதித்துள்ளது.எதிர்ப்பால் இணையோடு உரையாடும் வாய்ப்புள்ள அலைபேசிச் செயலியில் கணக்குவைத்து, அறிமுகமில்லாத பெண்ணிடமிருந்து காதலின் மொழியையும் காமத்தின் உணர்வையும் பெற்றுக்கொள்ளும் ஆணுக்குத் தனது மனைவியாக வரப்போகிறவள் தான் அந்த உணர்ச்சிகளைத் தந்தவள் என்ற உண்மை தெரியவரும்போது அவளின் கற்பையும் புனிதத்தையும் சந்தேகப்படுகிறான்.

ஒரு ஆண் இணையச் செயலிகளில் உலவலாம் என்றால், அதே விருப்பத்தோடு ஒரு பெண் அந்தச் செயலியில் – மெய்ந்நிகர் வாழ்வில் ஏன் இருக்கக்கூடாது என்ற வலுவான கேள்வியைப் படம் முன்வைக்கிறது. அதேபோல் குறிப்பிட்ட வயதுக்குப்பிறகு பெண்ணுக்குக் காம உணர்வு மட்டுப்பட்டுவிடும் என்ற நம்பிக்கையின் மீதும் தாக்குதல் தொடுத்துள்ளது. 40 வயதைத்தாண்டிய தாயின் காதலை – அண்ணியின் காம விருப்பத்தை ஆதரிக்கும் கொழுந்தனின் பாத்திரங்களைக் குடும்பத்திற்குள்ளேயே வைத்துக் காட்டியுள்ளது. ஜாம்ஜெட்பூர், கல்கத்தா என வங்காளப்பின்னணியில் எடுக்கப்பட்ட காட்சிகளின் ஒளிப்பதிவும் இசைக்கோர்வைகளும் எந்தவிதப் பிசிறும் தோன்றாமல் நகர்ந்துள்ளன. நமது சமகாலத்தை விவாதப்படுத்திய செவ்வியல் சினிமாவின் தரத்தில் இருக்கிறது இந்தப் படம். பார்க்கவேண்டிய இந்திய சினிமா. இனிச் சிறந்த படமாக நான் சொன்ன மாரீசனுக்கும் அதையும் தாண்டிய சிறந்த சினிமா என முன்வைக்கப்பட்ட ஸ்ட்ராவைக் குறித்துப் பேசலாம்.

நீதியும் சட்டமும்

பொறியில் மாட்டித் தப்பித்த எலியின் பயணம் என்ற குறியீட்டுக் காட்சியோடு தொடங்கு மாரீசன் , ஏமாற்றுக்காரத் திருடன், ஏமாறப்போகும் ஞாபகமறதி வியாதிக்காரர் என்ற இரண்டு பாத்திரங்களின் பயணத்தோடு நம்மையும் பயணிக்க வைக்கிறது. நாகர்கோவில், திருநெல்வேலி, திருவண்ணாமலை, பாலக்காடு, கோயம்புத்தூர் முதலான ஊர்களுக்குப் பயணிக்கின்றார்கள். திருடிய மோட்டார் சைக்கிளில் செல்லும் பயணக்காட்சிகள் தரும் நகர்வோடு பின்னப்பட்ட திரைக்கதைக்குள் ரகசியம், கொலை, பாலியல் குற்றம், பணத்தாசை என ஒவ்வொன்றாக முடிச்சுகள் அவிழ்க்கப்படுகின்றன. அப்படியான முடிச்சுகள் விழுவதற்கு முன்னால் திருடனால் ஏமாற்றப்படும் வாய்ப்புகளைப் பெரியவர் தனது ஞாபகமறதி வியாதியைப் பயன்படுத்தித் தப்பிக்கும் சுவாரசியமான காட்சிகளும் பயணமும் பார்வையாளர்களுக்கு நகைச்சுவையுணர்வோடு கூடிய திளைப்புக்காட்சிகளாகத் தரப்பட்டுள்ளன.

ஞாபமறதிக்காரரான வங்கிக் கணக்கில் இருக்கும் தொகையை ஆட்டையப் போடும் முயற்சியில் அவரோடு பயணிக்கும் திருடனுக்குத் தெரியாமல் பெரியவர் வேலாயுதம்பிள்ளை செய்யும் கொலைகள் சட்டத்தையும் காவல் துறையையும் திசைதிருப்பிவிட்டுச் செல்லும் ஒருவரின் சாகசக் காட்சிகள் போலத் தோற்றம் தந்தாலும், அதன் பின்னணியில் குற்றவாளிகளைத் தேடித்தேடிக் கொல்லும் ஒரு நீதிமானின் செயல்களும் நல்நோக்கமும் இருக்கிறது எனக் காட்டிப் படத்தை முடித்துள்ளார் இயக்குநர்

உண்மையான தன்னிலையை இன்னொன்றாக மாற்றுக்கொள்ளுதலின் குறியீடு மாரீசன். அந்த அடிப்படையில் படத்தின் தலைப்புப்பெயரோடு பொருந்தும் கதாபாத்திரம் வேலாயுதம்பிள்ளையாக வரும் வடிவேலுதான். அவர்தான் படத்தின் நாயகப்பாத்திரம். ஆனால் அவரது பாத்திரத்தின் மேன்மையும் அதனை ஏற்று நடிக்கும் வடிவேலுவின் நடிப்புத்திறனும் பகத்பாசில் என்ற இயல்பான நடிகனின் திறமையான நடிப்புக்கலை வெளிப்பாடு உடன் பயணிப்பதால் தான் முழுமையடைகிறது எனச் சொல்ல வேண்டும். பாலியல் திளைப்புக்காகச் சிறுமிகளைக் கடத்தும் குற்றவாளிகளைத் தண்டிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொள்ளும் - தனது அன்புக்குரிய மனைவியின் விருப்பத்தை நிறைவேற்றும் பொருட்டு ஏற்றுக்கொண்டு நடத்தும் குற்றச்செயல் சார்ந்த பயணங்களுக்குப் பின்னால் இருக்கும் தனி மனித நீதிதான் படத்தின் விவாதம்.

சட்டத்தை நிலைநாட்டும் காவல்துறையால் தண்டிக்க முடியாத சூழலில் தனிமனிதர்கள் தங்களைக் குற்றவாளிகளாக்கிக் கொண்டு நீதியை வழங்குகிறார்கள். அறத்தை-நீதியை நிலைநாட்டுவதில் தனிமனிதர்களின் பங்கை எப்போதும் அனுமதித்து வந்துள்ள இந்தியா போன்ற தொல்சமூக மக்கள் வாழும் நாடுகளில் இத்தகைய மனிதர்கள் புனிதர்களாக ஆக்கப்படும் வாய்ப்புகளும் உண்டு. திருட்டுக்குற்றங்களைச் செய்வதற்குத் தயங்காத ஒருவனின் துணையோடு தொடர்கொலைகளைச் செய்யும் வேலாயுதம் பிள்ளையை மாரீசன் என்னும் தொன்மப்பாத்திரத்தோடு இணைவைத்துக் காட்டியிருக்கிறது இந்த சினிமா. திரைக்கதை ஆக்கத்திற்காகவும் மையப்பாத்திரங்களை ஏற்று நடித்துள்ள வடிவேலு, பகத்பாசில் என்ற இருபெரும் நடிகர்களுக்காகப் பார்க்கவேண்டிய படம்.

நெட்பிளிக்ஸ் செயலியின் தயாரிப்பாக அண்மையில் வந்துள்ள ஸ்ட்ரா( STRAW) என்னும் சினிமாவோடு மாரீசனை இணைவைத்துப் பேச ஒரேயொரு காரணம் மட்டுமே பொதுநிலையில் உள்ளது. நவீன அரசுகளின் சட்டங்களும் நீதிமன்றங்களும் தனிமனிதர்களை எப்படி நடத்துகின்றன என்பதை விவாதப்படுத்தும் அக்காரணத்தை போகின்ற போக்கில் ஒதுக்கித் தள்ளிவிட முடியாது.அதே நேரம் மாரீசனைப் போலவே ஸ்ட்ராவும் சட்டத்தையும் நீதியையும் அணுகியிருக்கிறது என்றும் சொல்ல முடியாது. இரண்டு படங்களும் எடுக்கப்பட்ட நாடுகளின் பொதுச்சமூக உளவியல்போக்கோடு இணைந்து அணுகியிருக்கின்றன என்பது கவனிக்க வேண்டிய வேறுபாடு.

பெர்ரி டெய்லரின் ஸ்ட்ராவின் நிகழும் காலம் அதிகபட்சம் போனால் அரைநாளுக்குள் தான் இருக்கும். காலையில் கண்விழித்துக் குழந்தையைப் பள்ளிக்கு அனுப்பிவிட்டு வேலை செய்யும் பல்பொருள் அங்காடியில் அன்றைய சம்பளத்தை வாங்கியவுடன் தன்னை நெருக்கிக் கொண்டிருக்கும் சிக்கல்கள் பெரும்பாலும் தீர்ந்துவிடும் என்று நினைக்கும் யானா வில்கிட்சன் சந்திக்கும் ஒவ்வொன்றும் இடியாய், பேரிடியாய் அவள் மீது விழுகின்றன. சந்தித்து மீளமுடியாத ஒவ்வொரு சூழலிலும் தனிமனுசியாகத் தன்னிலையில் மாற்றமில்லாமல் நின்று தன்னை நிலைநிறுத்துகின்றாள் என்பதுதான் படத்தின் மொத்த நிகழ்வுகளும். ஒரு சினிமாவை ரசிப்பதாக நினைத்துக்கொண்டு கதைச் சுருக்கத்தைச் சொல்லக்கூடாது என்றாலும் கொஞ்சம் சொல்லித்தான் ஆகவேண்டும்.

கணவன் இல்லாது பிள்ளைகளை வளர்க்கும் பெண்களின் நிலை என்பது அமெரிக்க வாழ்க்கையில் தொடர்ச்சியாக விவாதிக்கப்படும் உரிப்பொருள். யானா வில்கிட்சன் அப்படியான ஒரு பெண். அவளது குழந்தைக்கு இருக்கும் நோய் பெரும் செலவை வேண்டும் ஒன்று. தன் மகளின் மருத்துவச் செலவுக்காகவும் கல்விச்செலவுக்காகவும் இரட்டை வேலை செய்பவள். ஆனாலும் அவளது வருமானத்தில் நல்லதொரு வீட்டையும் சத்தான உணவையும் தரமுடியாத நிலை. பிள்ளையைச் சரியாகக் கவனிக்காத தாய் என்ற குற்றச்சாட்டைச் சந்திக்கும் சூழலில் அரசு காப்பகம் ஒன்று அந்தப் பிள்ளையைப் பிரித்துக் கொண்டுபோகும் தருணம். பள்ளியில் இருந்து ஒவ்வொரு மாதமும் வாடகை தரமுடியாத நிலையில் வீட்டுச் சாமான்களை வெளியே தூக்கி எறியும் வீட்டின் உரிமையாளர் தரும் நெருக்கடி. இந்த நெருக்கடிகளும் மனச்சோர்வும் நிரம்பிய நிலையில் பணியிடத்திற்குக் காரோட்டிச் செல்லும்போது ஏற்பட்ட சிறிய விலகல். அதனால் கோபம் அடைந்த காவலரின் அத்துமீறிய பேச்சும், அதிகபட்சமான தண்டத்தொகையும் என விடிகின்ற அந்த நாளைச் சுமுகமாக்கும் ஒரே அருமருந்து அன்று கிடைக்கப்போகும் சம்பளம் தான். அமெரிக்க வாழ்க்கையில் வறுமையும் இருக்கின்றது என்பதைக் காட்டும் நடப்பியல் சினிமா.

அவளின் எதிர்பார்ப்பும் தீர்மானங்களும் ஒவ்வொன்றாகத் திசைமாறுகின்றன. தாமதமாகப் பணியிடத்திற்குப் போனதில் தொடங்கும் கொதிநிலையால் பணியிலிருந்து நீக்கம். அதனால் சம்பளம் காசோலையாக வீட்டுக்கு வரும் என்ற அறிவிப்பு. அந்த நேரத்தில் பணத்தைக் கொள்ளையடிக்க வந்த கொள்ளையர்களின் துப்பாக்கியால் சுடப்பட்ட பணியிட மானேஜரின் மரணம். கொலையாளிகளின் கையிலிருந்த துப்பாக்கியை எடுத்து ஏந்திக் காசோலையைக் கேட்டதால், அந்தக் கொலையில் யானாவுக்குப் பங்கிருக்கிறது என்ற சந்தேகம். காவல் துறையின் வருகை. அதற்குள் காசோலையோடு எதிரே இருக்கும் வங்கியில் சென்று பணம் கேட்டபோது, அடையாள அட்டையில்லாமல் பணம் தர மறுப்பு. ஆனால் கையிலிருக்கும் துப்பாக்கியையும் பைக்குள் இருக்கும் வெடிகுண்டு போன்ற ஒன்றால் பதற்றமடைந்த வங்கிப்பணியாளர்களின் அச்சம். கொள்ளையடிக்க வந்த கொள்ளைக்காரி என்ற நிலையில் போலீஸின் சுற்றிவளைப்பு என அடுத்தடுத்து காட்சிகளை அடுக்கிக்கொண்டே நகர்கிறது ஸ்ட்ரா. ஆனால் தன்னுடைய காசோலைக்குரிய பணத்தைத் தாண்டி ஒரு டாலரையும் எடுத்துக் கொள்ளாத நேர்மை வங்கி மேலாளரின் மனதை மாற்றுகிறது. விசாரிக்க வந்த காவல்துறையின் அதிகாரியான பெண்ணின் மனதைத் தூண்டுகிறது.

வங்கிக் கொள்ளையாகப் பரவிய செய்தியை நேரலையில் சொல்லவந்த தொலைக்காட்சி அலைவரிசைகள் உருவாக்கிய பதற்றமும் வெடித்துவிடும் வெடிகுண்டு உண்மையில் வெடிகுண்டல்ல; அவளது மகளின் பள்ளிக்கூடப் பயிற்சிக்கான பொம்மை என்ற உண்மை, வங்கியில் பணம் எடுக்க வந்தவர்களிடம் அவள் காட்டிய அன்பும் பரிவும் அவளது தன்னிலையையும் சட்டப்படியான உரிமை கோரலையும் உறுதிப்படுத்துகின்றன. சட்டம் ஒழுங்கு கெடுவதாக நினைக்கும் மத்தியக் காவல் படையின் வருகை, தவறு செய்யாத தனிமனுசியைத் தண்டித்துவிடக் கூடாது என்ற மனிதாபிமானக் காவல் அதிகாரியின் நேர்மை என ஒவ்வொன்றாக முடிச்சுகள் அவிழ்கின்றன. அவளது நிலையை இரண்டுவிதமாகப் பரப்புகிறது நேரலைக்காட்சிகள். அவை மக்களின் மனச்சாட்சியைத் தட்டி எழுப்புகின்றது. வங்கி மேலாளர் அவளது குழந்தையைப் பாதுகாக்கும் பொறுப்பை எடுத்துக்கொள்கின்றார். அவள் தண்டிக்கப்படும் வாய்ப்புகள் இருந்தாலும் சட்டத்திற்குக் கட்டுப்பட்டு மனிதாபிமானம் மிக்க காவல் அதிகாரியிடம் சரண் அடைகின்றாள். அமெரிக்கச் சட்டத்தின் விதிகளின் படியான நீதி கிடைக்கிறது அவளுக்கு.

சட்டமும் நீதியும் விசாரணைக்குள்ளாகியிருக்கும் ஒற்றுமைக்குள் இந்தியக்கலையியல் பார்வையும் மேற்கத்தியக் கலையியல் பார்வையும் வெளிப்பட்டுள்ளதையும் கவனிக்கவேண்டும். இந்தியாவில் இருக்கும் சட்டங்களும் காவல்துறையும் குற்றவாளிகளைத் தண்டிக்கும் நிலையில் கையாலாக நிலையில் இருக்கின்றன; அதனால் அறம் சார்ந்த வாழ்க்கையை விரும்பும் தனிநபர்கள் குற்றவாளிகளை தண்டிக்கும் பொறுப்பை எடுத்துக்கொள்ளலாம் என வலியுறுத்துவதை மறுத்துப் பேசும் ஒரு கதாபாத்திரம் கூடப் படத்திற்குள் இல்லை. ஆனால் பெர்ரி டெய்லரின் இயக்கத்தில் உருவாகியுள்ள ஸ்ட்ராவில் அத்தகைய பாத்திரங்கள் கணிசமாக இடம்பெற்றுள்ளனர் என்பது முக்கியமான வேறுபாடுகள்.

வேகம் கொண்ட காட்சிகளும் உணர்வுக்குவியல்களும் பாத்திரங்களின் தவிப்பும் என நகரும் 108 நிமிட சினிமாவுக்குள், எல்லாவற்றையும் விசாரிக்கும் மனப்பாங்குள்ள பாத்திரங்களை உருவாக்கிப் பார்வையாளர்களின் எண்ணத்திற்குள் – சிந்தனைப்பரப்புக்குள் இயக்குநர் நுழைந்துவிடுகின்றார். வீட்டைவிட்டுக் கிளம்பும் ஒவ்வொரு நாளும் யானா தரும் சிறிய அளவு தொகையைப் பெற்றுக்கொண்டு ஆசிர்வதிக்கும் பெரியவர், பணியிடத்தில் அவளையும் அவளது குழந்தையின் நோய்மையும் அறிந்த அவளது தோழி, அவளைக் குற்றவாளியாகக் கருதி விசாரிக்க வந்த பெண் அதிகாரியின் உள்ளுணர்வைத் திசைமாற்றிய தூக்கி எறியப்பட்ட வீட்டுப் பொருட்கள், அவளின் மனக்குழப்பத்தை முதலிலிருந்தே அறிந்திருக்கும் வங்கி மேலாளர், பணம் எடுக்க வந்த வாடிக்கையாளர்கள் என ஒவ்வொரு பாத்திரமும் படத்திற்குள்ளேயே பார்வையாளர்களின் சிந்தனைத்தளத்தோடு உரையாடுகின்றனர் இந்த அம்சமே இந்தியக்கலையியல் பார்வைக்கும் மேற்கத்தியக் கலையியல் பார்வைக்கும் இடையேயுள்ள வேறுபாடு.

இந்த வேறுபாடுகள் மட்டுமே ஸ்ட்ரா ஆகச் சிறந்த படம் எனச் சொல்லப்போதும் என்றாலும் நடிப்புக்கலைஞர்களின் தேர்வு, அவர்களின் உரையாடல் மொழியில் வெளிப்படும் த்வனி, எல்லா நிலையிலும் நடக்கச் சாத்தியமான காட்சிகள், அக்காட்சிகளுக்குக் கூடுதல் புரிதலை உண்டாக்கும் இசைச் சேர்க்கை என ஒவ்வொன்றும் கச்சிதமாக இருக்கின்றன. இப்படியாகத்தான் நாம் பார்க்கும் சினிமாக்களைப் பார்க்கவும் ரசிக்கவும் விவாதப்படுத்தவும் விமரிசிக்கவுமான தேவைகள் இருக்கின்றன.

நன்றி : உயிர்மை










கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தில்லையின் விடாய்: உடலரசியலின் வெளிப்பாடுகள்

நாயக்கர் கால இலக்கியங்கள் சமுதாய வரலாற்றுச் சான்றுகளாகக் கொள்வதற்கான முன் தேவைகள்

சங்கப் பெண்கவிகளின் கவிதையியல்