கலையியல் எதிரிகள்

கலையியல் அல்லது அழகியல் பற்றிப் பேசுவது பலருக்குப் புலமைத்துவப்பேச்சு என்றே நம்பப்படுகிறது. ஆனால் கலையியலின் விதிகளைப் பின்பற்றுவதும் செயல்படுத்துவதும் அறிந்த நிலையிலும் அறியாத நிலையிலும் செயல்பட்டுக் கொண்டே தான் இருக்கின்றது. கலைஞர்கள் அல்லது படைப்பாளர்கள் அறிந்து செய்பவர்களாக இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பது புலமைத்துவ மரபு. ஏனென்றால் கலையின் அல்லது படைப்பின் ரசிகர்கள் அறியாமல் இருக்கிறார்கள். அதனால் அவர்களுக்குச் சரியானதைத் தரவேண்டியது அறிந்து செயல்படும் கலைஞர்களின் வேலை என வலியுறுத்தும் இடத்தில் புலமைத்துவ மரபு இருக்கிறது.


தங்களின் இயக்கத்தில் அல்லது தயாரிப்பில் உருவாகும் படத்தில் விவாதிக்கப்படும் பொருண்மையில் சரியானதைச் சொல்லவேண்டியதும் காட்டவேண்டியதும் அவர்களின் சமூகப்பொறுப்போடு தொடர்புடையது கலையியல். ஆனால் அதன் எதிர்நிலையில் நிற்கும் வணிகமோ இன்னொரு நோக்கத்தை முன்வைத்துக்கொண்டே இருக்கிறது. வணிகத்திலும் பொறுப்பான வணிகமும் -பொறுப்பற்ற வணிகமும் இருக்கின்றன. நம்முடைய காலத்தில் பொறுப்பற்ற வணிகர்கள் கலையியலை நிராகரிக்கிறார்கள். தங்களின் செயல்பாடுகளுக்குக் கலையியல் விதிகளைப் பயன்படுத்திக்கொண்டே அதனை மறுக்கிறார்கள். அந்த இடத்தில் தான் புலமைத்துவம் அவர்களின் நோக்கங்களைக் கேள்விக்குள்ளாக்குகிறது.
திரைப்படக்கலையில் செயல்படுபவர்கள் மிகுந்த பொறுப்புணர்வோடு இருக்கவேண்டும். அவர்களின் அறியாமையால் பாதிப்புக்குள்ளாகும் ரசிகர்கள் அல்லது பார்வையாளர்களின் எண்ணிக்கை அளவில் பெரிதாக இருக்கிறது. அதனால் சுட்டிக்காட்டலிலும் வன்மையையும் மென்மையையும் கடைப்பிடிக்க வேண்டியிருக்கிறது.

அண்மையில் வந்துள்ள கூலி படத்தை வன்மையாகக் கண்டிக்கும் நோக்கத்தில் இந்தக் குறிப்பை எழுதுகிறேன். அதற்கு முன்பு மென்மையாகக் கண்டித்த ஒரு படத்தின் ( ஃபயர்/ அக்னி) குறிப்பையும், ஆலோசனையாக ஒரு சினிமாவுக்கு (ஜெண்டில் வுமன்) எழுதிய விமரிசனக்குறிப்பையும் வாசித்துவிட்டு வரலாம்.

அக்னிகுண்டமாகும் காமம்

Fire - ஆங்கிலத்தில் பெயர் வைக்கப்பட்டு தீபா மேத்தா இயக்கிய படம். 1996 இல் வந்த அந்தப் படத்தின் பெயரைத் தாங்கி தமிழில் இப்போது (2025) ஒரு சினிமா வந்துள்ளது. பிப்ரவரி மாதத்தில் வந்த அந்த சினிமாவிற்கு அரங்குகளில் நல்ல கூட்டம் . பாண்டிச்சேரி போயிருந்தபோது பார்க்க நினைத்தும் டிக்கெட் கிடைக்கவில்லை. காரணம் முதல் தீபாமேத்தாவின் படமான தீயின் காட்சிகளை நினைவூட்டும் காட்சிகள் இதிலும் இருக்கவாய்ப்புண்டு என்பதுபோலச் சுவரொட்டிகளும் சமூக ஊடக முன்னோட்டங்களும் இருந்ததைச் சொல்லலாம்.

நெருப்பு, நிலம், நீர் என மும்மைத் தொகுப்பாக தீபா மேத்தா இயக்கிய படவரிசையில் தீ முதல் படம். அதன் மூலக்கதை இந்தியப் புனைகதை ஆசிரியர் இஸ்மத் சுகாயின் சிறுகதை. அந்தச் சினிமாவில் இந்தியத் திரைத்தாரகைகளில் சிறந்த நடிகைகளாகக் கருதப்பட்ட சப்னா ஹாஸ்மியும் நந்திதா தாஸும் நடித்தனர். இயற்கையான உணர்வுகளைக் கட்டுப்படுத்தும் சடங்குகள், சமயநம்பிக்கைகளை விமரிசிக்கும் நோக்கில் எடுக்கப்பட்ட அந்தப்படத்தின் காட்சிகள் காமத்தைத் தூண்டும் நோக்கத்தோடு இருந்தது எனச் சொல்லி அப்போதைய இந்திய அரசாங்கத்தின் தணிக்கைக்குழு தடை செய்தது. அதைவிடவும் அழுத்தமான காமத்தூண்டல் காட்சிகள் இடம் பெற்ற சினிமாக்களைத் தடை செய்யாமல் அனுமதித்த தணிக்கைக் குழு இந்தப்படத்தைத் தடுக்க நினைத்ததற்கு வேறொரு காரணம் இருந்தது.

பெண்ணுடல் மீது மோகம் கொள்ளும் இன்னொரு பெண்ணுடல் என்பதான ஒருபால் உறவை இயல்பானதாகத் தீபா மேத்தா காட்டியிருந்தார். அதனாலேயே அந்தத் தடை எனப் பலரும் தணிக்கைக் குழுவினரை விமரிசன செய்து எழுதியது நினைவில் இருக்கிறது. நான் அந்தப் படத்தை ஒரு திரைப்படவிழாவில் பார்த்து எழுதியதும் நினைவில் இருக்கிறது. தீபா மேத்தாவின் சினிமாவை நினைவூட்டும் விதமாக அதே பெயரை வைத்து, காமத்தைத் தூண்டும் காட்சிகள் நிரம்பிய படம் என்பதை நினைவுபடுத்தியுள்ளார் இயக்குநர். இந்த நெருப்பு (ஃபயர்) சினிமாவை இயக்கிக் கதைசொல்லியாக நடித்துள்ளவர் ஜெ. எஸ். கே. சதீஸ்குமாரே படத்தின் தயாரிப்பாளர்.

ஒரு குற்றம் எப்படி நடந்தது; காவல் துறை எப்படித்துப்பறிந்தது என்பதுபோலத் திரைக்கதை வடிவம் உருவாக்கப்பட்டுள்ளது. துப்பறியும் காவல் அதிகாரியே சொல்லும்விதமாகக் காட்சிகளும் வசனங்களும் அமைந்துள்ளதால், படத்தின் நோக்கம் விழிப்புணர்வு உண்டாக்குவது என்பதாகப் பாவனை செய்யப்பட்டுள்ளது. ஆனால் உண்மையில் அந்தக் காவல் அதிகாரியில் பேச்சுக்குப் பிறகு காட்சிப்படுத்தப்படும் பெரும்பாலான காட்சிகள் ஆண் - பெண் உறவுகளை நிகழ்த்தும் படுக்கையறைக் காட்சிகளே.

உடலியக்க - பிசியோதெரபிஸ்ட் -மருத்துவரால் ஏமாற்றப்படும் பெண்கள் குறித்த கதைநிகழ்வுகள் என்பதால் ஆண் - பெண் உறவுக்காட்சிகளாக இல்லாமல் உடலியக்க மருத்துவக்காட்சிகளாகவே பெண் உடல்களைக் காட்சிப்படுத்தி மலினமாகப் பார்வையாளர்களுக்குத் தீனியாக்கி இருக்கிறது நெருப்பு. சில ஆண்டுகளுக்கு முன்னால் விஜய் தொலைக்காட்சியின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அறிமுகமாகிப் பிரபலம் அடைந்த பாலாஜி முருகதாஸ் படத்தின் எதிர்நிலை நாயகப்பாத்திரமான - பிசியோ தெரபி மருத்துவராக நடித்துள்ளார். அதே தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடித்த ரக்‌ஷிதா மகாலெட்சுமியும், சுரேஷ் சக்ரவர்த்தியும் முதன்மையாக பாத்திரங்களில் நடித்துள்ளனர். அவர்கள் அல்லாமல் சாக்‌ஷி அகர்வால், காயற்றி, சாந்தினி போன்ற அதிகம் அறிமுகம் இல்லாத பெண்கள் நடிக்கவைக்கப்பட்டுள்ளனர்.

ஒளிப்பதிவு, ஒளியமைப்பு. காட்சிக்கான கட்டடங்கள், இயற்கைச் சூழல், ஒலிப்பதிவு போன்றவற்றில் துல்லியத்தன்மையுடன் செய்யப்பட்டுள்ள படத்தின் நோக்கம், பெண்களுக்குக் கிடைத்துள்ள சுதந்திரத்தைக் கட்டுப்பாட்டுடன் பயன்படுத்த வேண்டும்; இல்லையென்றால் பாலியல் ரீதியாக ஏமாற்றப்படும் வாய்ப்புகள் நிரம்பியதாக நமது காலம் இருக்கிறது என்று சொல்வதாகச் சினிமா வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால் காட்சிகளில் உருவாக்கப்படும் களிப்பூட்டும் தன்மை உண்மையில் ஆண் - பெண் உறவுசார்ந்த காட்சித்துண்டுகளால் நிரப்பப்பட்டுப் பார்வையாளர்களைக் கவரும் நோக்கமே அதிகம் நிறைந்துள்ளது.

படத்தின் தயாரிப்பாளரின்/ இயக்குநரின் நோக்கம் விழிப்புணர்வு உண்டாக்குவது என்பது போலத் தோன்றினாலும் வணிக வெற்றிக்குப் பெண்ணுடலைப் பயன்படுத்தும் எதிர்மறை நோக்கம் கொண்ட படம் இந்த நெருப்பு.

****************************************************************************************


ஜெண்டில் வுமன் -அறியாமையின் தவறுகள்

நடிப்புக்கலைஞர்களின் ஈடுபாட்டோடு கூடிய நடிப்பு, காட்சி மொழி வழியாக நிகழ்வுகளை நகர்த்துதல், நிகழ்வுகளுக்குப் பொருத்தமான இடம் மற்றும் இசைப் பின்னணி எனத் தீவிரமான தயாரிப்புடன் கூடிய சினிமாவாக எடுக்கப்பட்டுள்ளது. தொழில் நுட்ப ரீதியில் பெரிய குறைகள் இல்லையென்று கூடச் சொல்லலாம். ஆனால் சினிமாவுக்கான திரைக்கதையாக்கமும், அதன் வழியாக விவாதிக்கும் கருத்தியல் மீது தெளிவான சிந்தனையும் இல்லாத இயக்குநரின் பிழைகளால் விவாதத்தை தூண்டாத படமாக மாறியிருக்கிறது. ‘ஆண்களை முழுமையாக நம்பலாமா? நம்பக்கூடாதா?’ என்ற ஒருவரி முரண்பாட்டை விவாதப் பொருளாக்க முயன்று தோற்றிருக்கிறார் இயக்குநர்.

காதலித்த பெண்ணைத் திருமணம் செய்ய முடியாத நிலையை விளக்கிச் சொல்லித் தனது அம்மா பார்த்த பெண்ணைத் திருமணம் செய்த ஒருவனின் இரட்டை நிலையைக் கதையாக்கம் செய்துள்ளார் இயக்குநர் ஜெண்டில் வுமன். குடும்பத்தினரின் ஏற்பாட்டில் நடக்கும் திருமணங்களில் ஆணும் பெண்ணும் ஒருவரையொருவர் முழுமையாகத் தெரிந்து கொள்ளும் வாய்ப்புகள் குறைவுதான். இருவரில் பெண்களுக்கு வாய்ப்புகளே இல்லை என்றுகூடச் சொல்லலாம். ஏற்பாட்டுத் திருமணத்தில் மனைவியாகும் ஒரு பெண், எல்லாவற்றையும் தெரிந்துகொண்ட பிறகும் அவனோடு நட்பு பாராட்டத் தயாராக இருக்கும் இன்னொரு பெண் என்ற முரணில் படத்தின் விவாதம் பார்வையாளர்களிடம் முன்வைக்கப்படுகிறது. இப்படியான முரண்பாடே எந்தவிதத் தர்க்கத்துக்குள்ளும் அடைபடாத ஒன்று. தர்க்கத்திற்குள் அடைபடாத அந்த விவாதத்தை எப்படி நகர்த்துவது என்பதில் திணறி நிற்கின்றார் இயக்குநர் ஜோஷ்வா சேதுராமன். அந்தத் திணறல் குற்றம், மர்மம், விடுவிப்பு என்ற திரைக்கதை வடிவத்தில் காணாமல் போய்விடும் என்ற நிலைப்பாட்டில் திரைக்கதையை அமைத்துள்ளார். ஆனால் முதன்மைக் கதாபாத்திரங்களின் முப்பரிமாணநிலையைச் சரியாக வடிவமைக்காததால் பார்வையாளர்களுக்குப் போதாமையை உண்டாக்கி முடிக்கப்பட்டிருக்கிறது.

குடும்பத்தினர் ஏற்பாடு செய்து மணந்து கொள்ளும் ஒரு ஆணின் குடும்பப்பின்னணி, கடவுள் நம்பிக்கை, வாங்கும் சம்பளம், வீட்டிலிருக்கும்போது நடந்துகொள்ளும் நெருக்கம், அண்மையில் இருக்கும்போது பேசும் சொற்கள் ஆகியவற்றை முழுமையாக நம்பும் மனைவிக்கு,தற்செயலாக ஏற்பட்ட நிகழ்வொன்றின் வழியாகச் சந்தேகம் ஏற்படுகிறது. தனது பாதுகாப்பில் வந்து நேர்காணலில் கலந்து கொள்ள வந்த ஊர்க்காரப்பெண்ணிடம் தவறாக நடக்க நினைத்தது தற்செயல் நிகழ்வல்ல ; கணவனின் திட்டமிட்ட நடவடிக்கை என்பதை அறிந்துகொண்ட நிலையில் மயக்கமாகிக் கிடக்கும் கணவனைக் கொலை செய்து விடுகின்றாள் மனைவி. கொலையை மறைக்கவும் அதிலிருந்து விடுபட்ட வாழவும் நினைக்கும் கிராமத்துப் பெண்ணின் தீர்க்கமான முடிவுகளைப் படம் வரிசைப் படுத்துகிறது. தனக்கு மட்டுமே கணவன் உடைமையாக இருக்கவேண்டும் என்று நினைக்கும் மரபான பெண்ணின் மனம் கொலையையும் செய்யும். நம்பி மோசம் போனதின் வெளிப்பாடு அந்தக் கொலை. (கொலையும் செய்வாள் பத்தினி)

மனைவியிடம் பொய்க்காரணம் சொல்லிவிட்டுக் காதலியோடு கோவா போக நினைத்தவன் மனைவியால் கொலை செய்யப்படுகிறான் என்பது படத்தில் உருவாக்கப்பட்டுள்ள முடிச்சு.அந்த முடிச்சுக்குக் கணவனின் தொலைபேசிப் படங்களும் தகவல் பரிமாற்றங்களும் கூடுதல் திருப்பங் ளைத் தருகின்றன.
கணவனின் கைபேசியில் இருக்கும் படங்களின் அடுக்குகளுக்குள் போகும்போது ஏற்கெனவே தொடர்பில் இருக்கும் இன்னொரு பெண்ணின் - காதலின் தொடர்புகள் அறியக்கிடக்கின்றன. அவளோடு நடத்திய தகவல் பரிமாற்றங்களை வாசித்தபின் கணவனைக் கொன்றதன் பேரில் இருந்த குற்றவுணர்வு முழுமையாக நீங்குகிறது.

கொலையை மறைத்துவிட்டு இயல்பாக இருந்துவிட முடியும் என நினைத்து எல்லாவற்றையும் மறைக்கத் தயாராகிறாள். ஆனால் அவனோடு ஏற்கெனவே தொடர்பில் இருந்த இன்னொரு பெண்ணோ இவளுக்கு நேர் எதிரானவள். தன்னைக் காதலித்தவன் இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டாளும் தன் மீது அன்பு கொண்டவன். அந்த அன்புக்காகவே அவனது நட்பைத் தொடர விரும்புபவள். தன்னைச் சந்திக்க வருவதாகச் சொன்னவன் குறிப்பிட்ட நாளில் வரவில்லை. அதனால் அவனது மனைவியிடமே வந்து விசாரிக்கிறாள். அவளைத் தெரிந்துகொள்கிறாள். அவளுக்குப் பெண்ணியம் தெரியும்; பிரீடா காலெயைத் தெரியும். அவரது ஓவியங்களால் தனது வீட்டை நிரப்பி வைத்திருப்பவள். இப்படியொரு கிளையைப் படம் உருவாக்கும்போது தீவிரமான விவாதங்களை – பெண்ணியச் சொல்லாடல்களைத் தொட்டுக் காட்சிகளை அமைக்கும்போது ஜெண்டில்வுமன் நவீன சினிமாவாக வடிவம் கொள்ளப்போகிறது என்ற எண்ணத்தைத் தோற்றுவிக்கிறது. ஆனால் அதைச் செய்யாமல் திசை விலகியிருக்கிறது. அந்தத் திசை விலகலைச் செய்வது குற்றம் -மர்மம் – விசாரணை என்ற வடிவத்தினால் உண்டாகிறது.

திருமணம் செய்துகொள்ளாமலேயே காதலுடன் சேர்ந்து வாழ விரும்பும் பெண் – பிரீடா காலேயின் பெண்ணியப் பார்வையை உள்வாங்கிய நவீனப் பெண் தனது பாலியல் ஆசைக்கு உடன்படுவாள் எனத் தப்பான முடிவுடன் செயல்படும் காவல் துறை அதிகாரியைக் கொலை செய்யும்போது முழுமையாகக் குற்றப்புலனாய்வு விடுவிப்பு வகைப் படமாக மாறிவிடுகிறது. கணவனைக் கொலைசெய்த மனைவியும், தனது விருப்பம் இல்லாமல் தனது உடலைப் பாலியல் ஆசைக்குப் பயன்படுத்திவிட முடியும் என நினைத்த காவல் அதிகாரியைக் கொண்ட காதலியும் ஒன்றாக இணைந்து ஆண்களின் துரோகத்தை எதிர்கொள்கிறவர்களாக மாறினார்கள் என முடிகிறது படம்.

இந்தப் படத்தில் உருவாக்கப்பட்டுள்ள காதலி (லாஸ்லியா ) பாத்திரத்திற்கு பிரீடா காலெவெக் குறியீடுபோலக் காட்டுவது எந்தவிதத்தில் ஏற்கத்தக்கதல்ல. மெக்ஸிகோவின் புரட்சிகர அரசியலோடும் உலகப் பெண்ணியச் சிந்தனைத் தளத்தில் தன்னையே வரைந்து மாதிரியாக்கித் தாக்கம் செலுத்திய பிரீடா காலேவைச் சரியான அர்த்தத்தில் படம் முன்வைக்கவில்லை. அவரது ஓவியக்கலை ஈடுபாடு, அரசியல் தெளிவு, பெண்ணிலைவாதச் சிந்தனைகளை அறிந்த எவரும் இந்தப் படத்தில் பிரீடாவின் படங்கள் இடம் பெற்றிருப்பதின் பொருத்தப்பாட்டை மறுக்கவே செய்வார்கள். ஒருவிதத்தில் அந்தக் காட்சிகள் எல்லாம் ஒருவித இடமாறு தோற்றப்பிழைகள்.

கணவனைக் கொலைசெய்யும்(பூர்ணிமா) பாத்திரத்தில் மலையாள சினிமாவின் தேர்ந்த நடிகையான லிஜோமோள் நடித்துள்ளார். தனக்கு வழங்கப்படும் பாத்திரங்களில் முழு ஈடுபாடு காட்டி நடிக்கும் அவரது திறனைப் பல படங்களில் பார்த்திருக்கிறேன். பெண்ணியச் சிந்தனையும் ஈடுபாடும் கொண்ட பாத்திரத்தில் பிக்பாஸ் வழியாக அறிமுகமான ஈழத்தமிழ்ப் பெண்ணான லாஸ்லியா நடித்துள்ளார். இந்தப் பாத்திரத்திற்கு அவரது உடலும் பாவங்களும் இயல்பாகவே பொருந்துவதாக இருக்கின்றன. பாத்திரத்தை உள்வாங்கி வெளிப்படுத்தவும் முயன்றுள்ளார். இவர்கள் இருவரையும் ஏமாற்றும் கணவன் -காதலன் பாத்திரத்தில் நடித்திருப்பவர் பா.இரஞ்சித்தின் படங்களில் நடித்துள்ள நடிகர் (ஹரிகிருஷ்ணன்) அழுத்தமான வேறுபாடுகள் காட்டவேண்டிய நடிப்பை அவர் தரவில்லை.

இந்திய சமூகத்தில் பரவலான விவாதமாக இருக்கும் ஏற்பாட்டுத் திருமணத்தின் மீது விசாரணையைச் செய்துள்ள படம், ஆண் – பெண் உறவில் புதிய சொல்லாடல்களாக மாறிக் கொண்டிருக்கும் காதலித்த ஆணை/ பெண்ணை மறக்க முடியாதிருக்கும் மனநிலை, திருமணத்திற்குப் பின்னும் தொடரும் காதல்கள், தனியாக இருந்து தனது விருப்பம் போல -சுதந்திரமான வாழ்க்கையை அமைக்க நினைக்கும் பெண்கள் போன்றனவற்றைத் தொட்டுக்காட்டியிருக்கிறது ஜெண்டில் வுமன். ஆனால் இவை எல்லாவற்றிலும் போதாமையோடு காட்சிகளையும் உரையாடல்களையும் கொண்டிருக்கிறது. அதற்கு முழுப்பொறுப்பு இயக்குநர் ஜோஷ்வா சேதுராமன் மட்டுமே. இது அவரது முதல் படம் எனத் தெரிகிறது. எதிர்காலத்தில் இந்தவிதமான குறைபாடுகளைக் களைந்து தீவிரமான சோதனை முயற்சிகளைச் சரியான முறையில் எடுக்கக் கூடும். அதற்கான எத்தணிப்புகள் படத்தில் உள்ளன.

***************************************************

கூலி: மொத்தமும் விரோதச் செயல்கள்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உச்சநடிகர் ரஜினிகாந்த் நடித்த கூலி படத்தை அமெசான் பிரைமில் பார்க்க முடிந்தது. தனது இயக்கத்தில் உருவாகும் படங்களுக்குச் சில நூறு கோடிகள் செலவு செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கும் லோகேஷுக்குக் கலையியல் பார்வை என ஒன்று இல்லை என்பதை உறுதிசெய்த சினிமா விக்ரம் -2. 

விக்ரம் -2. படத்தைத் திரையரங்கில் பார்த்தபின் இவரது படங்களைப் பார்க்காமல் தவிர்ப்பதே மனநலத்திற்கும் உடல் நலத்திற்கும் நல்லது எனத் தோன்றியது. காரணம், கலையியல் நோக்கத்திலும், திரைமொழியிலும் கவனம் செலுத்தும் கமல்ஹாசனையே திசைதிருப்பிவிட்டாரே என்ற எரிச்சலும் கோபமும் தான். அதற்கு முன்பு அவரது இயக்கத்தில் வந்த மாநகரம், கைதி, மாஸ்டர் ஆகிய சினிமாக்கள் வழியாக உருவான அந்த எண்ணத்தைக் கூலியில் முழுமையாக்கிவிட்டார். இவரது இயக்கத்தில் வரும் எந்தப் படத்தையும் இனிப் பார்க்கக் கூடாது என்று முடிவு செய்ய வைத்துவிட்டார்.

பொதுச்சமூகத்தின் பார்வைக்கு வராத இருட்டு வாழ்க்கையின் உண்மைகளையும் குரூரத்தையும் வன்முறையையும் பேராசைகளின் பின்னணியையும் உடைத்துப் பேசும் சொல்லாடல்களை முன்வைப்பதாக நினைத்துக் கொண்டு தனது படங்களின் திரைக்கதையை உருவாக்குகிறார். ஆனால் அவை அனைத்தும் எதிர்நிலையில் செயல்பட்டுள்ளன அவரது படங்களில். சினிமாவின் பார்வையாளர்கள் கையிலிருக்கும் சிறிதளவு தொகையையும் களவாடும் பேராசையோடு தனது படத்தின் காட்சிகளை உருவாக்குகிறார். படம் பார்க்கவரும் ஒவ்வொருவர் மீதும் அதே வன்முறைக் காட்சிகளாலும் குரூரமான ஆயுதங்களாலும் மேற்கொள்ளப்படும் தாக்குதல்களை உருவாக்கி அவர்களின் இயல்பை மாற்றிவிடும் தாக்குதல்களைத் தொடுக்கிறார். தனிமனிதர்களாகப் படம் பார்க்கும் வாய்ப்பை இல்லாமலாக்கிக் கும்பலில் கரைந்துபோகும் விதமாகக் காட்சிகளையும் கோணங்களையும் திட்டமிடுகிறார். கூலி படத்தில் ஒரு பெண்ணைச் சுற்றிச் சில 100 பேர் ஆடும் மோனிகா பாடல் ஓர் உதாரணம்.

திரைமொழியின் அடிப்படை அழகான செவ்வகச் சட்டகத்திற்குள் இயற்கையான காட்சிகளும் மென்மையான வண்ணங்களும் மௌனங்களும் மெல்லொலிகளும் இடம் பெறுவதை முற்றிலும் ஒதுக்கி விட்டுப் பெருங்கூட்டத்தையும் பேரோசைகளையும் அடர்வண்ணச்சிதறல்களையும் பரப்பிக் காட்டுகிறார். துறைமுகக்காட்சி என்றாலும் தங்கும் விடுதி என்றாலும் மொத்தமும் நிரம்பி நிற்கும் கோணங்கள். ஒவ்வொரு பிம்ப அசைவும் வீசப்படும் கூரான ஆயுதங்கள், எறிகுண்டுகள், துப்பாக்கி வெடிப்புகள், வாகன மோதல்கள், உடைக்கப்படும் தளவாடங்கள், சிதைக்கப்படும் மனித உடல்கள் என ஒவ்வொன்றும் விரைந்து ஓடிக்கொண்டே இருக்கின்றன.

மெய்ப்பாடுகளின் நுட்பங்களைக் காட்டும் வசன உச்சரிப்புகளோடு கூடிய முகங்களையோ, கண்களின் பரவசமான பார்வையையோ தரும் நடிப்புக் கலைஞர்களின் திறமைகள் முற்றிலும் அழித்தொழிக்கப்படுகின்றன. நடிப்புக்கலைஞர்கள் மட்டுமல்லாது இசை, ஒளிப்பதிவு, ஒலியளவு என எதிலும் கவனம் செலுத்தாத பெரும்போக்காகவே எல்லாம் இருக்கின்றன. பின்னணிப் பொருட்களே முதன்மையானவை. பாத்திரங்களின் எண்ணங்களும் உளவியல் கேள்விகளும் எழுப்பப்படாத வேக நகர்வுகள்.

லோகேஷ் கனகராஜ் பெற்றுத்தரும் கோடிக்கணக்கான சம்பளத்திற்காகக் கமல், விஜய், ரஜினிகாந்த் போன்ற நட்சத்திர நடிகர்கள் அவரது இழுப்புக்கேற்பத் தன்னிலை இழந்து பாத்திரங்களை ஏற்று நடித்துக் கொண்டிருக்கிறார்கள். படம் முடிந்து வெளியீட்டுக்குத் தயாராகும்போது படத்தை ஓடவைக்க அரசியல்வாதிகளாகி மனிதநேயமும் சமூகநடப்புகளும் பேசவும் வருகிறார்கள். கேட்டால் தொழில் வேறு; தொண்டு வேறு என்று சொல்வார்கள். இயக்குநர் மட்டுமல்லாமல் நடிகர்களும் சேர்ந்து செய்யும் இவையெல்லாம் மனிதவிரோதம் மட்டுமல்ல, அவர்களுக்கு சொகுசு வாழ்க்கையைத் தரும் சினிமாவின் எதிர்நிலையும் கூட.



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நவீனத்துவமும் பாரதியும்

நாயக்கர் கால இலக்கியங்கள் சமுதாய வரலாற்றுச் சான்றுகளாகக் கொள்வதற்கான முன் தேவைகள்

நவீன கவிதைகளை வாசிக்கும்போது....