தூத்துக்குடியில் ஒரு நாடகவிழா

பார்வையாளனாகவும் பங்கேற்பாளனாகவும்

தமிழ்நாட்டின் முதன்மையான நகரங்களான சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம், நெல்லை, திருவண்ணாமலை, புதுச்சேரி போன்ற நகரங்களில் தோன்றிய நவீன நாடகக்குழுக்கள் தீவிரமாகச் செயல்பட்ட காலமாக 1980 தொடங்கி 20 ஆண்டுகளைச் சொல்லலாம். அந்தக் காலகட்டத்தில் ஒரு நடிகனாகவும் அரங்கச் செயல்பாடுகள் பலவற்றில் பங்கேற்றவனாகவும் தமிழகமெங்கும் அரங்கேறிய நவீன நாடகங்களைக் கான்பதற்காகப் பயணம் செய்துகொண்டே இருப்பேன். மதுரையின் நிஜநாடக இயக்கத்தின் உறுப்பினராகவும் புதுச்சேரி சங்கரதாஸ் சுவாமிகள் நிகழ்கலைப்பள்ளியின் ஆசிரியனாகவும் இருந்து பங்கேற்ற – பார்த்த நாடகங்களுக்காகச் செய்த பயணங்கள் மறக்க முடியாதவை. அப்படிப் பார்த்த நாடகங்கள் பலவற்றைப் பற்றியும் எழுதிய விமரிசனக்கட்டுரைகள் தொகுக்கப்படாமல் இருக்கின்றன.
அண்மைக்காலங்களில் சென்னை மாநகரத்தில் நடக்கும் நாடக நிகழ்வுகள், நாடகப்பயிற்சிப் பட்டறைகள் பற்றிய தகவல்களும் விளம்பரங்களும் முகநூல் போன்ற சமூக ஊடகங்களில் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கின்றன. அவற்றைப் பார்ப்பதற்கென்று சென்னைக்குச் செல்வதில்லை அதே நேரம் ஏதாவதொரு காரணத்தோடு சென்னையில் இருக்கும் நாட்களில் நடைபெறும் நாடகநிகழ்வுகளைப் பார்க்கத் தவறுவதுமில்லை. கடந்த மாதம் ஜூலை -27 இல் தமிழ்நாட்டின் தென்பகுதி நகரமான தூத்துக்குடி ஒரே நாளில் 5 நவீன நாடகங்களை அரங்கேற்றிய நாடகவிழா ஒன்று நடந்தது. அங்குள்ள காமராஜ் கல்லூரியில் நடந்த வெக்கை நாடகவிழா நீண்ட காலத்திற்குப் பின் மனநிறைவு அளித்ததாகவும் நவீன நாடக வரலாற்றில் குறித்து வைக்க வேண்டிய நிகழ்வாகவும் இருந்தது. அதேபோல் கடந்த மூன்று ஆண்டுகளாகத் தமிழக அரசு நடத்திய இலக்கியவிழாக்களில் பங்கேற்றபோது ஏற்பட்ட கேளிக்கைத்தனமும் திட்டமிடலில் இருந்த போதாமைகளும் பொறுப்பின்மைகளும் அவற்றிலிருந்து விலகிவிடும் மனநிலையை உருவாக்கியிருந்தது. அதற்கெல்லாம் ஆறுதல் தரும் விதமாகப் பெங்களூரு நகரில் நடந்த ‘புக்பிரம்மா இலக்கியவிழா’ அமைந்திருந்தது. எனவே இவ்விரு விழாக்களையும் குறித்த பதிவாக இந்தக் கட்டுரையை எழுதத்தோன்றியது.

தூத்துக்குடி நகரில் நடந்த வெக்கை நாடகவிழாவில் பங்கேற்ற ஐந்து நாடகக்குழுக்கள் பங்கேற்றன. அவை மேடையேற்றிய நாடகங்களின் விவரம் வருமாறு:

1 . தூத்துக்குடி, ஆகம் நாடக வெளியின் "நீடுதுயில்"-இயக்கம்: கார்த்திக் ராஜேந்திரன்

2.ஈரோடு நாடகக் கொட்டகையின்‌ "உந்திச்சுழி". கூத்துப்பட்டறை ந.முத்துசாமியின் நாடகம். இயக்கம் : வே. சதீஷ்குமார்

3. மதுரை, திகழ் நிகழ் கலைக்குழுவின் "ஃபோர் ப்ளே" (4play).இயக்கம் : நந்தா-நடிப்பு : ரோகிணி, சுரேன்

4 "வெள்ளை மொழி" நெறியாளர்: அ. மங்கை நடிப்பு: ரேவதி/ தொழில்நுட்ப இயக்குநர்: ஸ்ரீஜித் சுந்தரம்

5. புகிரி அரங்காட்டக் குழுவின் "நாற்காலி" மூலக்கதை : கி.ராஜநாராயணன்/இயக்கம் : லி.ராம்ராஜ் /நடிகர்கள்: லி.ராம்ராஜ், சந்திரமதி, ருக்குமணி, பிறைசூடன், காயத்ரி


அரங்கேறிய ஐந்து நாடகங்களில் இறுதியாக மேடையேறிய நாற்காலி மட்டுமே ஒரு மணி நேரத்திற்கும் சற்றுக் கூடுதலாக நிகழ்ந்தது. மற்ற ஐந்து நாடகங்களும் 30 – 45 நிமிடக் கால அளவினதாக இருந்தன. பிற்பகல் 2.30 மணிக்குத் தொடங்கி இரவு 09.30 க்குள் ஐந்து நாடகங்களும் நிகழ்த்தப்பட்டன. ஒவ்வொரு நாடகங்களுக்கும் இடையில் அந்த நாடகங்களைக் குறித்த இருபது நிமிட விவாதங்களும் நடந்தன என்பது குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று. அரங்கு நிறைந்த பார்வையாளர்களாகத் தொடங்கிய முதல் நாடகத்தின் போது சுமார் 250 பேருக்கும் அதிகமாகப் பார்வையாளர்கள் இருந்தனர். அந்த எண்ணிக்கை கடைசி நாடகத்தின்போது 150 எனக் குறைந்திருந்தது என்றாலும் நவீன நாடகங்கள் குறித்த பெரிய அளவு அறிமுகம் இல்லாத தூத்துக்குடியில் இவ்வளவு பார்வையாளர்கள் இருந்து பார்த்தார்கள் என்பது மகிழ்ச்சியான ஒன்று. அதனைக் குறிப்பிட்டதோடு ஐந்து நாடகங்களையும் குறித்த எனது பார்வையாள அனுபவங்களோடு நாடக விழா நிறைவடைந்தது.

40 ஆண்டுகளுக்கு முன்னால், நவீன நாடகம் என்றால் என்ன? என்ற கேள்வி ஒன்றுக்கு இப்படிச் சொன்னேன்:
 நவீன நாடகம் என்பது, ஒரு புதிய உள்ளடக்கம், புதிய வடிவத்தில் வெளிப்படுவதும், புதிய வகையான மேடையேற்றரூபத்தை தேடுவதும் முதன்மையானது. அதே நேரம், பழைய வடிவத்திலும், மேடையேற்ற பாணியிலும் புதிய உள்ளடக்கம் வெளிப்பட்டால்’ நவீன நாடகம்’ அல்ல என்றும் கூற முடியாது ; ஆனால் அப்படி வெளிப்படுவது என்பது இயலாத காரியம் என்றும் சொன்னேன். தொடர்ந்து, “காதல் புனிதமானது; குடும்ப அமைப்பு போற்றுதற்குரியது; தந்தை சொல் மிக்க மந்திரமில்லை” போன்ற குடும்பச் சமாச்சாரங்களும், ‘ நியாயம் வெல்லும், உழைப்பே வெற்றிக்கு ஆதாரம்’போன்ற சமூகச் சமாச்சாரங்களும் புதிய வடிவத்தில், புதிய மேடையேற்ற ரூபத்தில் வரும்பொழுது நவீன நாடகமாக ஆகாது என்று சொன்னேன். அப்போது சொன்ன அதே வரையறைகளோடு இந்த ஐந்து நாடகங்களையும் பார்த்துக் கொண்டிருந்தபோது ஒவ்வொன்றும் நவீன நாடகமேடையேற்றம் என்ற தன்னுணர்வைக் கொண்டனவாக இருந்தன என்பதை உறுதிப்படுத்தின.

 ********

முதலாவதாக மேடையேறிய நீடுதுயில் நாடகத்தை இயக்கியவர் கார்த்திக் இராஜேந்திரன். தூத்துக்குடியில் இயங்கும் ஆகம் நாடக வெளி என்ற குழுவுக்காக இந்த நாடகத்தை வடிவமைத்து இயக்கியிருந்தார். குழந்தைகள் மீது – குறிப்பாகப் பெண் குழந்தைகளின் மீது தனிநபர்களாகவும் சமூகமாகவும் செலுத்தப்படும் வன்முறைகளைச் சொன்ன இந்நாடகம் அதன் வலியையும் வேதனைகளையும் சொல்ல பேச்சுமொழியை விடவும் காட்சி மொழியை அதிகம் நம்பியிருந்தது. இடுக்கலான மேடைப்பொருள்களுக்கு இடையே நுழைந்து வெளியேறிய ஒற்றை நடிகரின் தனிமொழிகள், மேடையில் நிரப்பப்பட்டிருந்த பொம்மைகள், பலவண்ண ஆடைகள், விளையாட்டுச் சாமான்கள் போன்றவற்றைக் கையிலேந்திப் பேசியபோது, அரங்கமெங்கும் சிதறிக்கிடக்கும் பெண் குழந்தைகளோடு பேசும் உணர்வை உருவாக்கித் தந்தது. அதற்கும் மேலாக நடித்தவர் குரலும் பின்னணி இசைக்கருவியின் அறுத்து நிரப்புவது போன்ற இசைத்தொடர்ச்சியும் குரூர அரங்கின் காட்சிகளைக் கொண்டு நிரப்பிய மேடை நிகழ்வாக மாற்றியது. தொடர்ச்சியற்ற காட்சிகளால் ஆன படிமங்களும் ஒளியமைப்பும் சேர்ந்து அனாதைகளாக்கப்பட்டும், பிச்சைக்காரர்களாகவும் ஆண்களின் உடல்பசியைத் தீர்க்கவும் அபலைகளாகவும் அலையும் பெண் குழந்தைகளின் ஓலத்தைக் காட்சிப்படுத்தின.

இரண்டாவது நாடகமான உந்திச்சுழியை மேடையேற்றிய நாடகக்குழு ஈரோடு நாடகக் கொட்டாய். ஈரோட்டில் தொடர்ச்சியாக நாடகங்களையும் அரங்கம் சார்ந்த நிகழ்வுகளையும் மேடையேற்றும் இந்தக் குழுவின் மேடையேற்றம் ஒன்றை இப்போதுதான் பார்க்கிறேன். இந்தக் குழு மேடையேற்றிய உந்திச்சுழியைக் கூத்துப்பட்டறையின் தயாரிப்பாகப் பார்த்துள்ளேன். ஆணின் கருமூட்டையை உள்வாங்கிப் பிள்ளையாகச் சுமப்பது; பெற்றுத்தருவது என்பதோடு தொடர்புடைய ஒன்று உந்திச்சுழி. அந்தத் தொடர்வினைகளே பெண்களை, ஆண்களின் அடிமையாக மாற்றிவைத்துவிட்டது என்று விவாதிக்கும் நாடக உரையாடல்கள், பெண் விடுதலைக்கு உதவும் கண்டுபிடிப்புகளில் ஒன்று முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கும் இனமாக மனித இனத்தை மாற்றினால் மட்டுமே பெண்களின் விடுதலை சாத்தியம் என்ற முடிவை நோக்கிச் செல்லும் சொல்லாடலைக் கொண்டது. தீவிரமான இந்த உரிப்பொருளைப் பார்வையாளர்களுக்குக் கொண்டுபோய்ச் சேர்க்கும் காட்சிப்படிமங்களும், உரையாடல் மொழியும் உருவாக்கப்படாத நிலையில் பார்வையாளர்களிடமிருந்து விலகிய நிகழ்வாக இருந்தது என்பதைப் பின்னர் நடந்த விவாதங்களில் காண முடிந்தது. ஆனால் ஈரோடு நாடகக் கொட்டாய் என்ற குழுவில் அரங்கச் செயல்பாடுகளில் ஆர்வம் கொண்ட ஆண்களும் பெண்களும் இணைந்து செயல்படுகின்றார்கள்; மேலும் மேலும் கற்றுக்கொள்ளும் ஆர்வத்துடன் இருக்கிறார்கள் என்பதையும் அறிமுகத்தின்போது முன்வைத்தார்கள். அடுத்தடுத்த நாடகத் தயாரிப்பின்போது அவர்களின் நோக்கம் நிறைவேறும்.

வெக்கை நாடகவிழாவில் அரங்கேறிய ஃபோர் ப்ளே" (4play) நாடகத்தின் உள்ளடக்கமும் நிகழ்த்திய முறையும் எதிர்பார்க்காத ஒன்று.மேடையின் மையத்தில் இருந்த செவ்வக மேடையொன்றின் மீது வெளிச்சம் மெதுவாகப் பரவியபோது நான்கு கால்கள் மட்டும் தெரிய உடல்கள் மூடியிருந்த காட்சி. ஆண் + பெண் உடல்களின் நெருக்கத்தைக் காட்டும் விதமாகக் கால்களின் காட்சி. பக்கத்தில் இருக்கும் நாற்காலிகளில் உள்ளாடைகள். இந்தத் தொடக்கமும், உடலுறவுக்கு முந்திய செயல்களைக் குறிக்கும் ஃப்ளே என்ற தலைப்பும் சேர்ந்து பாலியல் சார்ந்த உள்ளடக்கம் ஒன்றைப் பேசும் நாடகம் என்ற தோற்றத்தையும் எதிர்பார்ப்பையும் உருவாக்கின, ஆனால், தொடர்ந்து உருவாக்கிய காட்சிப்படுத்தலும், உரையாடல்களும் எதிர்பார்ப்பிலிருந்து விலக்கி, தகவல் தொழில் நுட்பத்துறைக்குள் நடக்கும் ஆதிக்கத்தையும் ஏமாற்றமான மனநிலையையும் விவாதிக்கும் சொல்லாடல்களுக்குள் நகர்த்திக் கொண்டு போய்விட்டன.

தன்னறிவின் மீதான நம்பிக்கையும் தன் முன்னேற்றமும் இணைந்து நிற்கும் தனிநபர் வாதத்தை வாழ்வியலாக ஆக்கும் தகவல் தொழில் நுட்பப் பணியிடச் சூழலும், மேலாண்மைக் கண்ணோட்டங்களும் சமூகமாக மனிதர்களை வாழவிடாமல் பிரித்துப்போடும் விதத்தைக் கச்சிதமாகக் காட்சிகளாகவும் உரையாடல்களாகவும் நகர்த்திக் கொண்டே போனது. ஒருவரையொருவர் காதலிப்பவர்களாகவும், திருமண பந்தத்திற்குள் நுழைந்துவிடும் வாய்ப்புள்ளவர்களாகவும் அந்தப் பெண்ணும் ஆணும் இருக்கிறார்கள். ஆனால் இருவரும் ஒருவரையொருவர் சார்ந்து வாழும் சூழல் இருக்கக் கூடாது என்ற எண்ணமும் இருக்கிறது. அதற்கும் மேலாக மரபான எண்ணங்களின் தொடர்ச்சியாக, ஆணின் ஆதிக்கப் போக்கும் இணைந்து நிற்கின்றன. ஒருவர் மீது இன்னொருவருக்கு நம்பிக்கையில்லாமலும் தன் வளர்ச்சியை மட்டும் நினைத்துச் செயல்படுகிறவர்களாகவும் ஆக்கப்படும் சூழல் புதிய பணியிடங்களில் நிலவுவதையும் அவையே வாழ்வியலாக மாற்றப்படும் தந்திரமாக இருப்பதையும் நாடகம் பார்வையாளர்களுக்கு எளிமையாகக் கடத்தியது. 

இந்த நோக்கத்தை விவாதிக்கும் போக்கிலேயே இந்தியச் சமூக அமைப்பின் அடிப்படையான சநாதனமும், நால்வருணப்பாகும்பாடும் செயல்படும் சூழலும் நிலவுகிறது; மறுகட்டமைப்புப் பெறுகிறது என்ற விமரிசனத்தைத் தீவிரமாக முன்வைத்த நாடகத்தில் இரண்டே இரண்டு பாத்திரங்கள் தான். அவ்விரு பாத்திரங்களும் நேரடியாகவும், தொலைபேசி உரையாடல்களாகவும் பேசிக்கொள்ளும் உரையாடல்கள் வலுவான செய்திகளைச் சொல்லிக் கொண்டே இருந்தன. இரண்டு பாத்திரங்களையும் ஏற்று நடித்த ரோகிணியும் சுரேனும் நடிப்பின் அனைத்து நிலையிலும் – உடல்மொழி, குரல்வெளிப்பாடு, மேடையைப் பயன்படுத்திய பாங்கு என ஒவ்வொன்றிலும் தேர்ச்சிமிக்க திறன்களை வெளிப்படுத்தினார்கள். அண்மைக்காலத்தில் நான் பார்த்த நாடகங்களில் திகழ்நிகழ் குழுவிற்காக நந்தா எழுதி இயக்கிய இந்த நாடகம் முக்கியமான ஒரு நாடகம் என்று சொல்வேன். இத்தகைய நாடகங்கள் பல ஊர்களிலும் மேடையேற்றப்படவேண்டும் என்பதை இயக்குநரிடம் தனியாகக் குறிப்பிட்டுச் சொன்னேன்.

திருநங்கை ரேவதியின் தனிநபர் நடிப்பில் ‘வெள்ளைமொழி’ தனியாள் நடிப்பில், தன் வரலாற்றை முன்வைக்கும் அரங்க நிகழ்வு. வெக்கை நாடகவிழாவில் பார்ப்பதற்கு முன்பே சில தடவை பார்த்துள்ளேன். குறிப்பிட்ட வயதிற்குப்பின் ஒரு உடம்பிற்குள் நடக்கும் பால்மாறாட்டத்தின் வெளிப்பாட்டை உணரும் நிலையில், 
தன்னைச் சுற்றியுள்ள
குடும்பத்தினரிடமும் உறவினர்களிடமும் சொல்ல முடியாமல் தவிக்கும்போது அது ஒரு உளவியல் சிக்கல்கள். அங்கிருந்து தொடங்கி, அதனை ஏற்று உடல் ரீதியாக மாற்றத்தை உருவாக்கிக் கொண்டு திருநங்கையாகவோ, திருநம்பியாகவோ வாழ்தல் இன்னொரு மாற்றம். ஒருவிதத்தில் அது தாங்களே உருவாக்கிக் கொண்ட ஒரு சமூக இருப்பு. அதற்கொரு சடங்குநிலையை உருவாக்கிப் பங்கேற்றுக் குழுவுக்குள் அடையாளத்தை உருவாக்கிக் கொள்ளுதல் இன்னொரு மாற்றம். இப்படியான பல்நிலை மாற்றங்களை அடையும் பாலின மாற்ற உடல்கள், பொதுச்சமூகத்தின் ஏற்புக்காக அரசின் சட்ட நடவடிக்கைகளையும் உரிமைகளியும் கோருதல் என்பது வரையிலுமான அகவெளி நடவடிக்கைகளையும் புறநிலைநிலைச் செயல்பாடுகளையும் வெள்ளைமொழி நாடகம் ஒரு கதைபோலச் சொல்லி நிலை நிறுத்துகிறது.

பெண்ணிய நாடகங்களை வடிவமைத்து இயக்குவதில் தேர்ச்சியுடைய அ.மங்கையின் இயக்கத்தில் உருவாகியுள்ள வெள்ளைமொழியில் ரேவதியின் நடிப்பும் மெய்ப்பாடுகளும் தொடர்ச்சியாக மேம்பட்டுக்கொண்டே இருக்கின்றன. ஒவ்வொரு மேடையேற்றத்திலும் அவரது வியர்வை சிந்தும் உடலும், மெய்ப்பாடுகளை உருவாக்கிக் குரல்மொழியின் வழியாகக் கடத்தும் மேம்பட்ட கோரிக்கைகளும் தர்க்கங்களும் விளிம்புநிலை அரங்க அழகியலின் சிறப்பான வெளிப்பாடுகள்.



வெக்கை நாடகவிழாவில் நிறைவாக நடத்தப்பட்ட நாடகம் நாற்காலி
முக்காலி மட்டுமே இருந்த கிராமப்புற வீடொன்றிற்கு வந்து சேர்ந்த நாற்காலி, அந்தக் குடும்பத்தின் பயன்பாட்டுக்குரியதாக இல்லாமல் ஊரின் பயன்பாட்டுக்கு உரியதாக – இறந்துபோன மனிதர்களை அமரவைக்கும் அமர நாற்காலியாக மாறும் சோகத்தைக் கதையாக்கியவர் கி.ரா. அந்தக் கதையின் தலைப்பையும் அதன் பயன்பாட்டையும் படிமங்களாகவும் குறியீடாகவும் மாற்றி, சமகால வாழ்க்கையில் ஒரு நாற்காலியை வைத்துக்கொண்டு உருவாக்கக்கூடிய விமரிசனங்களைக் காட்சிப்படுத்தியிருந்தார் இயக்குநர் லி.ராம்ராஜ். ஏற்கெனவே சில கதைகளையும், கவிதைகளையும் தழுவிச் சில நாடகங்களை உருவாக்கி மேடையேற்றி அனுபவம் பெற்றவர். அந்த அனுபவங்களோடு கி.ரா,வின் நாற்காலி கதையைக் கச்சிதமான நாடகப்பனுவலாக மாற்றாமல், நெகிழ்ச்சியான பனுவலாக மாற்றியிருந்தார். அதனால் நாற்காலி என்ற மையம் அவ்வப்போது எங்கெங்கோ விலகி, விலகிப் போய்விட்டுத் திரும்பவும் வந்து நிற்பதாக வடிவம் பெற்றிருந்தது.

முழுமையும் அங்கதத் தொனியையும் நகைச்சுவை நோக்கத்தையும் கொண்டு உருவாக்கப்பட்ட வடிவமைப்பில், நடிகர்கள் ஒவ்வொருவரும் அவரவர் விருப்பத்திற்கேற்ப வெளியே செல்லவும் உள்ளே நுழையவுமான வாய்ப்பைக் கொண்ட வடிவமாக மாறி நின்றது. இந்த வடிவம் ஒருவிதத்தில் சங்கரதாஸ் சுவாமிகளின் ஸ்பெஷல் நாடக பாணியில் இருக்கும் வடிவம்தான். அதில் வசனமும் பாடலும் திரும்பத் திரும்ப இடம்பெற்று இருமுறை நிகழ்வாக அமையும். ஆனால் லி.ராம்ராஜின் இயக்கத்தில் அந்தப் பாணி மிகைத்தன்மை கொண்ட உடல் மொழியாகவும் நீட்டி முழக்கிய வசனப்பேச்சுகளாகவும் வெளிப்பட்டன. நவீன நாடக மேடையேற்றங்களில் இவ்வகை நடிப்பு முறைகளை அதிகம் காணமுடியாது என்றாலும் பார்வையாளர்களின் ஈடுபாடும் விருப்பங்களும் அவ்வப்போது கிடைத்த கைதட்டலில் வெளிப்படவே செய்தன. விலகிவிலகிப் போய்த் திரும்பியதால் நாடக நிகழ்வுக்கான கால அளவும் அதிகம் என்பதாகவே தோன்றியது. இன்னொரு மேடையேற்றத்தில் இந்த விலகல்களைச் சரிசெய்து மேடையேற்றும்போது கச்சிதத்தன்மை வந்துவிட வாய்ப்புண்டு.

கல்லூரியில் கிடைத்த அரங்க உதவியோடு, பார்வையாளர்களிடம் எந்தவிதக் கட்டணமும் பெற்றுக்கொள்ளாமல் ஒரு நாள் நாடகவிழாவாக ஐந்து நாடகங்களை அரங்கேற்றிக் காட்டிய வெக்கை நாடகவிழாக்குழுவினர் பாராட்டுக்குரியவர்கள். அடுத்தடுத்த ஆண்டுகளில் இன்னும் சில நாடகங்களோடு பெரியதொரு நாடகவிழாவை நடத்திக் காட்ட அரசின் கலை, பண்பாட்டுத்துறை போன்றன உதவும் நிலையில் சங்கரதாஸ் சுவாமிகள் பிறந்த ஊரான தூத்துக்குடி நாடக ரசிகர்கள் நிரம்பிய நகரமாக மாறும் வாய்ப்புண்டு.

**************



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சமஸ்: அமைப்புகளை நோக்கி அதிகம் பேசும் குரல்

நாயக்கர் கால இலக்கியங்கள் சமுதாய வரலாற்றுச் சான்றுகளாகக் கொள்வதற்கான முன் தேவைகள்

இது நினைவஞ்சலி அல்ல