அமெரிக்காவில் பணிவாய்ப்புக் குடிநுழைவுகள் - சில திருப்பங்கள்
அமெரிக்க அதிபராகத் திரு டொனால்ட் ட்ரம்பைத் திரும்பவும்தேர்ந்தெடுத்தபோது அமெரிக்கா தனது ஜனநாயக முகத்தைக் கழற்றிக்கொள்ளத் தொடங்கியிருப்பதாகப் பலரும் சொன்னார்கள். ஆனால் அண்மைக்காலத்தில் உலகெங்கும் உருவாகிவரும் "மண்ணின் மைந்தர்கள் அரசியலின் விளைவு" என்றே நினைக்கத்தோன்றியது. சொந்த நாட்டு மக்களின் நலனை முன்னிறுத்தும் நோக்கத்தைத் தவறாகச் சொல்லமுடியாது என்ற மனநிலை உலகெங்கும் தோன்றியுள்ளது. இதன் தொடர்ச்சியில் தான் அமெரிக்க அதிபரின் வரிவிதிப்புக் கொள்கைகளையும் குடிநுழைவுக் கட்டுப்பாடுகளையும் பார்க்கவேண்டும்.
அதே நேரம் மூளை உழைப்புக்குழுவினர் அல்லாத சேவைப்பணி முதலாளிகளும் பணியாளர்களும் இந்தக் கட்டண உயர்வால் அதிகம் பாதிக்கப்படப் போகின்றார்கள். இந்தியாவிலிருந்து சென்று புதுபுதுதாகக் கடைகள் தொடங்கியவர்களும் உற்பத்திநிலையங்களில் முதலீடு செய்தவர்களும் இனிப் போவது குறையும் . அவர்கள் தான் குறைவான சம்பளத்தில் தங்கள் ஊரிலிருந்து ஆட்களை அமெரிக்காவிற்கு அழைத்துப் போய் குறைவான சம்பளம் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். குறிப்பாக அமெரிக்காவில் இருக்கும் குஜராத்திகள் , ராஜஸ்தானிகள், ஆந்திரவாலாக்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள். அவர்களின் உணவுப்பொருள் அங்காடிகள், பெட்ரோல் நிலையங்கள், சேவைப்பிரிவுக்கடைகள், நகைக்கடைகள், உணவு விடுதிகள், துணிக்கடைகள் , உதிரிப்பொருட்கள் உற்பத்தி நிலையங்கள் போன்றவற்றில் பணியாற்ற ஆட்களை இங்கிருந்து இறக்குமதி செய்யமுடியாது.
அமெரிக்காவில் தங்கியிருக்கும் தமிழர்களில் இத்தகைய பணிகளில் இருப்பவர்கள் மற்ற மாநிலங்களோடு ஒப்பிடக் குறைவாகவே இருப்பார்கள். இதற்கு முன்பு குடிநுழைவு வாங்கித் தங்கியவர்களுக்கு இப்போதைக்குச் சிக்கல் இல்லை. குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு இந்தியாவுக்கு வந்து திரும்பவும் அனுமதி பெற்றுப் போகவேண்டும் என்றால் இந்தக் கட்டணத்தைக் கட்ட அவர்களால் இயலாமல் போகலாம். அவர்களுக்குப் பணி வாய்ப்புகள் வழங்கியுள்ள குழுமங்களும் அந்தத்தொகையைக் கட்ட விரும்பாமல் கைவிடலாம்.
****************
விவரங்கள் தேவையானவர்களுக்குச் சொந்த அனுபவங்கள் வழியாக விளக்குகிறார் அமெரிக்காவில் இருக்கும் நண்பர் பி.கே.சிவகுமார்.
எச்1 விசா பிரச்னையும் தீர்வும்:
நான் அமெரிக்கா வந்தபோது - வருடத்துக்கு 60,000 H1B விசாக்களே தரப்பட்டன. அதுவும் அதற்கான விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு - கல்வி, வேலை அனுபவம் ஆகிய தகுதிகளின் அடிப்படையில். பின்னர் அது வருடத்துக்கு 90,000 விசாக்கள் என உயர்ந்தது. அதற்கப்புறமும் உயர்ந்திருக்கலாம்.
இரண்டாம் ஜார்ஜ் புஷ் ஆட்சியின்போது செலவுக் குறைப்புக்காக இதில் லாட்டரி சிஸ்டம் கொண்டுவரப்பட்டது. அமெரிக்காவில் இல்லாத வேலையாட்களை எடுக்கிற ஸ்பெஷாலிட்டி ப்ரோகிராமுக்கு லாட்டரி சிஸ்டம் கொண்டுவந்ததன் மூலம் அந்த ப்ரோகிராமின் நோக்கத்தையே சிதைத்தார்கள்.
லாட்டரி மூலம் என்ன ஆனது? ஒரு வருட அனுபவம் உள்ளவரும் பத்து வருட அனுபவம் உள்ளவரும் எச்-ஒன் விசாவுக்கு விண்ணப்பித்தால், ஒரு வருட அனுபவம் உள்ளவர் பத்து வருட அனுபவம் உள்ளவருடன் போட்டியிட்டு லாட்டரியில் விசா பெறுகிற நிகழ்தகவைப் பெற்றார். இந்த விசா சிஸ்டம் கெட்டுப் போனதற்கு இது முதல் காரணம்.
இரண்டாவதாக வேலை விசாவில் வருகிறவரின் இணையர் டிபண்டெண்ட் விசாவில் தான் இருக்க முடியும். வேலை செய்ய முடியாது என்று இருந்தது. கிரீன் கார்ட் பிராசஸில் அது வருவதற்கு முன் வேலை செய்யத் தற்காலிக அனுமதி வரும் வரையோ, டிபெண்டெண்ட் விசாவை வேலை விசாவாக மாற்றும் வரையோ டிபெண்டெண்ட் விசாவில் வந்தவர் வேலை செய்ய முடியாது என இருந்தது. இதை ஒபாமா பீரியடில் மாற்றினார்கள் என நினைக்கிறேன். H4 டிபண்டெண்ட் விசாவில் வீட்டில் இருந்தவர்கள் வேலை செய்யலாம் என ஆனதும் அவர்கள் மிகக் குறைந்த சம்பளத்துக்கு வேலை செய்ய முன்வந்து பலரின் வேலைகளைக் கெடுத்தார்கள்.
இங்கே H1 அல்லது H4-ல் வேலைக்கு எடுக்கிற பெரும்பாலான இந்திய நிறுவனங்கள் திறமை, கல்வி, அனுபவம் குறித்து மயிருக்கும் கவலைப்படுவதில்லை. எவ்வளவு குறைவான சம்பளத்துக்கு ஒருவர் கிடைப்பார், அவரைத் தன் கனெக்ஷன் மூலம் கிளையண்ட்டிடம் வேலைக்கு அனுப்பி, எவ்வளவு அதிகபட்சம் பில் செய்து, அதிகபட்ச லாபம் பார்க்கலாம் என்பதே அவர்களின் நோக்கம்.
H1 விசாவில் குறைந்த பட்ச லாபம் என்பது 30%ல் இருந்து 50% வரை என்பது - H4 விசாவும் வேலை செய்யலாம் என்று ஆனபின் - 100%ல் இருந்து 200%க்கு மேல்வரை வரை ஆனது. எனக்குத் தெரிந்த ஒரு தமிழ்ப் பெண் H4 விசாவில் ஒரு நாளைக்கு 240 டாலருக்கு வேலை செய்தார். அவரைக் கிளையண்டிடம் ஒருநாளைக்கு 900 டாலர் என இந்திய நிறுவனம் பில் செய்தது. இது ஓர் உதாரணம் தான். எல்லா எச்-4 வேலையும் ஏறக்குறைய அடிமாட்டு விலைக்கு வேலை செய்ய முன்வந்து சப்ளையை அதிகமாக்கி டிமாண்டைக் கெடுத்ததுதான்.
இதையே அமெரிக்கக் குடியுரிமை பெற்றவரையோ, கிரீன் கார்டு வைத்திருப்பவரையோ ஏன் எச்-1 விசாவில் நல்ல அனுபவம் உள்ளவரையோ எனில் ஒரு நாளைக்கு 700 டாலரில் இருந்து 800 டாலர் கேட்பார்கள்.
இந்திய நிறுவனங்களைப் பார்த்து அமெரிக்க நிறுவனங்களும் இதைச் செய்தன. The H1 Visa system is the most abused system post 2000 and it robbed not only jobs but also right salaries for the qualified where those employers who sponsored the visas made most money - especially head hunting and software firms from India.
அதனால் இந்த முறையில் நிச்சயம் சீர்திருத்தம் வேண்டும்.
1. இதில் இருக்கிற லாட்டரி சிஸ்டம் ஒழிக்கப்பட வேண்டும்
2. எச் ஒன் விசாவுக்கு விண்ணப்பிக்கவே முதலில் மூன்று அல்லது நான்கு தடையற்ற வருட வேலை அனுபவம் மற்றும் கல்வித் தகுதி வேண்டும் என்கிற விதி வேண்டும்.
3. கல்வித்தகுதி, வேலை அனுபவம், திறமை அடிப்படையிலேயே மீண்டும் எச்-1 விசா வழங்க வேண்டும்.
4. எச்-4 டிபண்டெண்ட் விசாவில் இருக்கிறவர்களுக்கு வேலை விசாவோ இஏடி என்கிற பர்மிட்டோ இல்லாமல் வேலை செய்ய இயலாது என்கிற முந்தைய விதி மீண்டும் வேண்டும்.
5. ஒவ்வொரு நிறுவனமும் எச்-1ல் ஒருவரை வேலைக்கு எடுத்தால் - அமெரிக்காவில் இருந்து ஒருவரை (citizen or green card holder) வேலைக்கு எடுக்க வேண்டும் என்கிற முறை வேண்டும்.
6. இந்தியாவுக்கோ வெளிநாடுகளுக்கோ அனுப்பப்படுகிற ஒவ்வொரு மூன்று வேலைக்கும் ஒரு வேலை அந்நிறுவனத்தால் அமெரிக்காவில் கொடுக்கப்பட வேண்டும் என்கிற விதி வேண்டும்.
7. எச்-1 விசா ஸ்பான்சர் செய்கிற நிறுவனங்களின் லாபம் அதிகபட்சம் 30% என cap செய்யப்பட வேண்டும்.
இவையெல்லாமே இந்த எச் ஒன் விசா சிஸ்டத்தைச் சீரமைக்க உதவும். அதைவிட்டுவிட்டு 100,000 கட்டணம் என்பதனால் ஆகப் போவது ஒன்றுமில்லை. நிறுவனங்கள் இதற்குத் தடை வாங்கலாம். அல்லது வேலையை மெக்சிகோ, தென் அமெரிக்க நாடுகளுக்கு என மாற்றலாம்.
குடியரசுக் கட்சி ஆதரவாளர்கள் இந்த ஆலோசனைகளை டிரம்புக்கு எடுத்துச் சொல்லலாம். இவை என்னுடைய ஆலோசனை என்றாலும் பொதுநலம் கருதி யாரும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
கருத்துகள்