பழமலையும் சந்ருவும்-சந்திப்பும் நினைவுகளும்

முகநூலின் வருகைக்குப் பின்னர் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் திருப்பும் பக்கங்களெல்லாம் பார்க்கக் கிடைக்கின்றன. நண்பர்களுக்கும் குடும்ப உறுப்பினர்களுக்கும் ஒருவர் மாற்றி ஒருவர் சொல்லிக்கொள்ளும் வாழ்த்துகளும் கேட்கின்றன. அதேபோல் நண்பர்களின் சந்திப்புகளும் படங்களாக விரிகின்றன. அண்மையில் கவி. பழமலய்யைச் சந்திக்க நேர்ந்தது. ஓவியர் சந்ருவிற்குப் பார்க்காமலேயே வாழ்த்துச் சொல்ல முடிந்தது.

நீண்ட காலத்திற்குப் பின் கவிஞர் பழமலையோடு


நாடாளுமன்ற உறுப்பினரும் எனது நீண்டகால நண்பருமான ரவிக்குமார் அவர்களின் ஐந்து நூல்களை வெளியிட்டுச் சிறப்புரை ஆற்றுவதற்குச் சென்றபோது இமையம், விழிபா. இதயவேந்தன், முதலான எழுத்தாளர்களைச் சந்திப்பேன் என்பது தெரியும். ஆனால் கவி. பழமலையைச் சந்திப்பேன் என்று நினைக்கவில்லை. விழுப்புரம் தான் அவரது ஊர். என்றாலும் தன்னை வன்னியர் அறிவிஜீவியாகக் காட்டியதை மறுக்காத நிலையில் இங்கே வருவார் என நினைக்கவில்லை. நாடாளுமன்ற உறுப்பினரைத் தொகுதி மக்கள் தொடர்புகொள்ள உதவும் “செயலி” அறிமுகக்கூட்டம் முடியும் வரை பழமலயின் முகம் தட்டுப்படவில்லை. அடுத்த நிகழ்வாக ஐந்து நூல்கள் வெளியிடும் கூட்டம் தொடங்கி வெளியிட்ட நிலையில் அவர் அரங்கிற்குள் வந்தார்.

பாண்டிச்சேரிக்கால வாழ்க்கையின்போது (1989-1997) மாதத்திற்கிரண்டு முறையாவது பழமலையைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்படும். அம்பேத்கர் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டத்திற்குப் பிறகு பாண்டிச்சேரியில் நடந்த மாற்று அரசியல், மாற்றுக்கோட்பாடுகள், மாற்று இலக்கியம், மாற்று வாழ்வியல் சார்ந்த நிகழ்வுகள் அனைத்திற்கும் கவி.பழமலை தவறாது வருவார். அவரது முதல் கவிதைத்தொகுதியான, ‘சனங்களின் கதை’ tதோழமை வெளியீடு) வந்து பரவலான அறிமுகத்தைப் பெற்றிருந்தது. கலை கலைக்காகவே என்ற விமரிசனப் பார்வையில் இருந்தவர்களால் இவையெல்லாம் கவிதை அல்ல; செய்திக்குறிப்புகள் என்பதாக நிராகரிக்கப்பட்ட தொகுதி அது. அதே நேரத்தில் மாற்று நடவடிக்கைகளை முன்னெடுத்த - முன்னெடுக்கும் ‘ கலை சமூக வெளிப்பாட்டிற்காக என்ற விமரிசனப்பார்வையாளர்களால் கொண்டாடப்பட்டது. அதுவரையிலான இடதுசாரிக் கவிதை வடிவத்திற்கான மாற்று வடிவமாகக் கூட சனங்களின் கதையில் இருக்கும் கவிதைகள் கருதப்பட்டன. முதல் கவிதைத் தொகுதிக்குக் கிடைத்த வரவேற்பினால், அதே பாணிக் கவிதைகளையே தொடர்ந்து பல தொகுதிகளைக் கொண்டுவந்தார். அவற்றில் உள்ள தகவல்கள், நபர்கள், செய்திகள் போன்றன அவரது அரசியல் நகர்வுக்கு ஏற்ப மாறிக்கொண்டே இருந்தன.
முதல் தொகுதியின் நீட்சியாக, குரோட்டன்களோடு கொஞ்சநேரம், இவர்கள் வாழ்ந்தது, இன்றும் என்றும், முன்நிலவுக் காலம், புறநகர் வீடு, இரவுகள் அழகு,வேறு ஒரு சூரியன் போன்ற கவிதைத் தொகுதிகள் அவரது தொகுதிகளாகக் கிடைக்கின்றன. மொத்தமாகப் பழமலய் கவிதைகள் தொகுக்கப்பட்டுப் பெருந்தொகுதியாகவும் வந்திருக்கிறது.
தமிழ் எழுத்தாளர்கள் ஒவ்வொருவரின் சாதி பற்றிய தகவலும் அவருக்குத் தெரியும் என்பதை வைத்துப் பாண்டிச்சேரி நண்பர்கள் அவரை, இலக்கியத் தாசில்தார் என்று வேடிக்கையாகச் சொல்வதுண்டு. எழுத்தாளர்களின் சாதியைத் தெரிந்துகொள்ளும் ஆர்வத்தை அவர் மறைத்ததும் இல்லை . இந்தியாவில் சாதி இருப்பு என்பது மறுக்க முடியாத உண்மை; அதிலிருந்து விலகிவிட்டேன் எனச் சொல்வது முழுமையாக நடப்பதில்லை என்பதால், அதனை வெளிப்படையாகச் சொல்லிவிடலாம் என்பதை வலியுறுத்துவார். பிராமணர்கள் அவர்களது சாதிக்காக வாதாடுவதுபோலவே, தலித்துகள் அவர்களது மேலேற்றத்துக்குப் போராடத்தொடங்கியிருக்கிறார்கள். அதுபோலவே இடைநிலைச் சாதிகளும் முயன்று மேலெழும்புவது எப்படித் தவறாகும் என்று கேள்வி எழுப்புவார். ஆனால் சமநீதியை -சம உரிமையை உறுதியாக்க நினைத்த அரசியல் சட்டத்தை ஏற்பவர்கள் இப்படிச் செயல்பட முடியுமா? என்ற கேள்விக்கு அவரிடம் பதில் இருக்காது. ஒவ்வொரு சாதியும் முயன்று மேலெழும்போது மற்றவர்களை எதிரியாகப் பார்க்க வேண்டிய நெருக்கடியில் எவ்வாறு செயல்படுவார்? சொந்த சாதிக்கெதிராகவா? ஆதரவாகவா? என்ற கேள்விக்கெல்லாம் அப்போது பதில் சொல்லவில்லை. கவிதைகள் எழுதியதோடு வன்னிய ஆளுமையாக மாறி, அண்ணன் குப்புசாமி வாழ்க்கைக் குறிப்புகள், திருக்குறளார் முனுசாமி, தகடூர் மண்ணும் மக்களும், தெரியாத உலகம் - மானுடவியல் கட்டுரைகள், போன்ற நூல்கள் எழுதிய நிலையில் அவரை வன்னியக் கவியாகக் கொண்டாடிய நிலையும் ஏற்பட்டது.

பழமலய் பாண்டிச்சேரி வருகை தருவதற்கு இன்னொரு காரணமும் இருந்தது. அவரது மகன் லெனின் அங்கே ஹோமியோபதி மருத்துவராக இருந்தார். அலோபதி மருத்துவத்திலிருந்து ஹோமியோ மீது நம்பிக்கை ஏற்படக்காரணமாக இருந்தவர். சில மாதங்களுக்கு முன்பு அவரது எதிர்பாராத மரணத்தைப் பழமலை எப்படி எதிர் கொண்டிருப்பார் என்பதை நினைத்துப் பார்க்க முடியவில்லை. தனக்கிருந்த மார்க்சிய ஈடுபாட்டால் தன் மகனுக்கு அப்படியொரு பெயரை வைத்திருப்பதைக் குறித்துக் கையறுநிலைத் தொனியில் அவர் எழுதிய கவிதைதான் அப்போது நினைவுக்கு வந்தது. அந்தக் கவிதையின் தலைப்புமனிதனாக இருப்பது
==================
அது ஏதோ ஒரு விழாநாள்.
மகள், புத்தாடை உடுத்தித் திரிந்தாள்,
வீட்டிற்கு
ஒரு காரியமாய் வந்தவர் சொன்னார்;
“ இப்ப செயில்ல இருந்துகிட்டு இருந்தீங்கென்னா,
இந்தப் பொன்னு இப்பிடி இருக்க முடியுமா? -


திருமங்கலத்திலிருந்து விடுமுறைக்கு வந்திருந்தவன்,
அறையிலிருந்து வெளிவந்து,
கண்டு கொண்டான்: “வாங்க சார்”

“ஒங்க கொள்க ஒங்களோட,
இவுங்க எதிர்காலத்த கெடுத்துடாதீங்க,
இப்பெயர் வேணாம், மாத்தில்லாம்,
நீயே மாத்திக்கல்லாம், லெனீன்.”

நண்பருடையது ஒரு மாதிரியான கரிசனம்,
நான் சிரிக்கக் கூடாது.
மதிக்கவில்லை என்று வருத்தப்படுவார்.

பிரச்சினை:
‘பொங்கல் பரிசு பெறுபவனின்’
அரசியல் சுதந்திரம்.

இது,
மனிதனாக இருப்பதைப் பற்றிய கேள்வியும்.
இதற்கு,
மக்கள் கந்தல் உடுத்தட்டும்!
மகனுக்கு,
அரசு வேலை கிடைக்காமல் போகட்டும்!
========================================
இவர்கள் வாழ்ந்தது/ 68/ 104

கலைஞர் சந்ரு: ஒரு நினைவுப்பயணம்


ஓவியர் சந்ரு அவர்களுக்கு நேற்றுப் பிறந்தநாள் என்பதை அவரது ரசிகர்கள் முகநூலில் நிரப்பி வைத்துவிட்டனர். ரசிகர்களில் பலபேர் அவரது மாணாக்கர்களாகவும் இருந்துள்ளனர் என்பதையும் காணமுடிகின்றது. கலைஞராகவும் ஆசிரியராகவும் இருப்பதின் மகிழ்ச்சியை நேற்று முழுவதும் அனுபவித்திருக்கக் கூடும். வாழிய கலைஞர் சந்ரு. வாழ்த்துகள் 
ஓவியர் சந்ருவுடனான எனது தொடர்புக்கு வயது கால் நூற்றாண்டுக்கும் மேல் இருக்கும். 1991 அம்பேத்கர் நூற்றாண்டுக்குப் பின்னான தலித் எழுச்சியில் தனது பங்காக எழுத்தாளரும் இந்தியக் குடிமைப்பணி அதிகாரியுமான சிவகாமி புதிய கோடாங்கி என்றொரு இதழைத் தொடங்கினார். அதன் முதல் இதழைச் சென்னையில் அண்ணா அறிவாலயத்திற்கு எதிரில் இருந்த நட்சத்திர விடுதியொன்றில் வெளியிட்டார். இதழை வெளியிட்டவர் அப்போதைய மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான். பாண்டிச்சேரி பல்கலைக்கழக நிகழ்கலைப் பள்ளியின் விரிவுரையாளராக இருந்த நான் தலைமை தாங்கினேன்.

புதிய கோடாங்கியின் ஆசிரியர் சிவகாமியுடன் இணைந்து கவிஞரும் சிறுகதையாசிரியருமான ப்ரதீபா ஜெயச்சந்திரன், ஓவியரு சந்ரு ஆகியோரும் அவ்விதழ் உருவாக்கத்தில் பணியாற்றினார்கள். ப்ரதீபா ஜெயச்சந்திரன் புதுவையில் இருந்தார். அவரோடு ரவிக்குமார், நான், மதியழகன், சுகுமார் என ஒரு பட்டாளமே போனோம். கொட்டும் மழைநாளில் சென்னை அண்ணா சாலையில் இறங்கி நனைந்தபடி அந்த விடுதிக்குள் நுழைந்தபோது எங்களை வாசலில் எதிர்கொண்ட சென்னை நண்பர்களில் ஒருவராக ஓவியர் சந்ருவும் இருந்தார். அதற்கு முன்பே அவரின் ஓவியங்களும் மாணவர்களோடு கொள்ளும் அன்பான உறவும் எனக்கு அறிமுகமாகியிருந்தன. அவரது மாணவர்கள் பலரும் புதுவைக்கு வந்து இடங்களையும் காட்சிகளையும் வரைவார்கள். அப்போதைய பேச்சுகளில் தங்கள் ஆசிரியரின் அன்பையும் கற்பிக்கும் முறைகளில் இருக்கும் திட்டமிடப்படாத முறைகளையும் சொல்வார்கள். 

மாத இதழாக வந்த புதிய கோடாங்கியின் இதழ் உருவாக்கத்தில் - குறிப்பாக அட்டைப்பட வடிவமைப்பில் சந்ருவே முதன்மையான பங்களிப்பைச் செய்தார். புதிய கோடாங்கியின் பொறுப்பில் நடந்த இலக்கியக்கூட்டங்கள், பயிலரங்குகள், விவாத அரங்கு போன்றவற்றில் சந்ருவும் பங்கேற்றார். நானும் பங்கேற்றிருக்கிறேன். புதுவையிலிருந்து நெல்லைக்கு வந்த பின்னும் அந்த இதழில் தொடர்ச்சியாக எழுதிக்கொண்டிருந்தேன். தலித் இலக்கிய ஆக்கங்கள், நாடகங்கள், கவிதைகள் என ஒவ்வொன்றைப்பற்றியும் முன்வைப்புகள் தேவைப்பட்ட காலமது. இயக்கமாகச் செயல்படும் முறைகளைப் புதுச்சேரியின் சூழல் கற்றுக்கொடுத்துக் கொண்டே இருந்தது.

புதிய கோடாங்கியின் நிகழ்வுகளில் சந்ரு முன்வைக்கும் கலையியல் பார்வையில் - குறிப்பாக ஓவியம் சார்ந்த உருவாக்கப் பயிற்சி மற்றும் பார்வையாளர்கள் பங்கேற்பு போன்றனவற்றில் நவீனத்துவத்தோடு முரண்படும் தொனியைக் கொண்டிருந்தார். பெரிய அளவு எத்தணிப்புகளும் திட்டமிடலும் தேவையில்லை என்பதுபோலப் பேசுவார். ஆனால் அவரது ஓவியங்களும் கலைஞனாக அவரது வாழ்க்கை முறையும் நவீனத்தோடு இணைந்ததாக இருந்தன. இப்போதும் அதுவே தொடர்கின்றது. இம்முரண்பட்ட இரட்டை நிலையை அவரிடம் எப்படி விளக்குவது என்பது புரியாமல் தவித்ததுண்டு. இருவரும் புதிய கோடாங்கியின் செயல்பாடுகளில் பங்கேற்காமல் விலகியபின் அதற்குள் நானும் நுழையவில்லை. தூர இருந்த பார்த்துப் புன்னகைக்கும் நண்பர்களாக நகர்ந்து கொண்டிருக்கிறோம்.

***********
சந்ருவின் படைப்பாக்கம் அல்லது பாணி என்பது ஓவியத்திற்கும் சிற்பங்களுக்கும் வேறானவையாக இருந்தன. உயிரிகளையும் பொருள்களையும் முழுமைப்படுத்தி வரையாமல் குறியீடுகளையும் உள்ளோடும் ஆதாரக் கோடுகளையும் வரைந்து காட்டுவதைத் தனது பாணியாகக் கொண்ட சந்ரு, சிற்பங்களில் முழுமையைக் கொண்டுவருவதிலும் மிகை நடப்பியல் கூறுகளுடன் உருவாக்குவதிலும் சிறப்பாக வெளிப்பட்டார். நிகழ்கால நடப்புகளைத் தொன்மக்கதைகள், புராணங்கள், நாட்டார் நம்பிக்கைகள், வெளிப்பாட்டு முறைமைகள் வழியாகச் சொல்லும் அவரது ஓவியங்கள் ஒவ்வொருவருக்கும் விளக்கிச் சொல்லவேண்டிய அடுக்குகளைக் கொண்டவை. அதனை அவரே செய்வார். அவரது படங்களின் உள்ளோடும் அர்த்தங்களை உணர்ந்தவர்களும் சொல்லலாம். பாடமாக விளக்கிச் சொல்லலாம்.
விமரிசனங்களை எதிர்பார்க்காத சந்ரு, தனது படங்கள் குறித்த விமரிசனங்களைப் பொருட்படுத்தியவருமல்ல. தங்கள் ஓவிய, சிற்பக்கலைப் படைப்புகளைப் பாராட்டும் விமரிசகர்களின் அறியாமையைக் கண்டு கொள்ளாமல் ஒத்துப்போகும் கலைஞர்களை எப்போதும் பகடிசெய்து வந்தார். அந்தப் பகடியின் நீட்சியை ஓவிய விமரிசகர்களின் பக்கமும் நகர்த்தியதுண்டு. அதனால் அவர்களின் பார்வையிலிருந்து விலகினார்; விலக்கப்பட்டார் என்றும் சொல்லலாம்.
முதன்மையாகக் கலையை வணிகப்படுத்தவதில் சந்ருவுக்கு விருப்பங்கள் இருந்ததில்லை. சென்னையின் நுண்கலைக்கல்லூரியின் ஆசிரியராகவும் பின்னர் அதன் முதல்வராகவும் இருந்த அவரால் தனது கலைத்திறனையும் ஓவியத்தயாரிப்புகளையும் பயன்படுத்தி, வசதிகளையும் வாய்ப்புகளையும் பெற்றிருக்கலாம். ஏனென்றால் தனிநபர் கலையான ஓவியமும் சிற்பமும் எல்லாக்காலத்திலும் பொருளியல் வாய்ப்புகளைத் தரவல்லவை. போட்டியாளர்கள் இன்றி அதிகம் சவால் விடாதவை. என்றாலும் அத்தகையவற்றில் முனைப்புக்காட்டாமல், அரசுத்துறை சார்ந்த பணிகளைச் செய்வதில் ஆர்வம் காட்டினார். கோயில்கள் சிலவற்றின் ஓவியங்களைப் புதுப்பிக்கும் பணிகளை மேற்கொண்டார். பொதுவெளிகள் நிறுவப்படும் சிற்பங்களை உருவாக்கித் தந்தார். 

தனது பணி ஓய்வுக்குப் பின்னர் அவரும் நெல்லையில் தான் இருக்கிறார். பெருநகர வாசனையைத் தவிர்த்துள்ள திருநெல்வேலி நகரின் ஒரு ஓரத்தில் அவர் இருக்கிறார். நான் இன்னொரு ஓரத்தில் இருக்கிறேன் . எப்போதாவது எங்காவது சந்தித்துக்கொள்கிறோம். அவரது பெயரையும் திறமையையும் பயன்படுத்திக்கொள்ள இங்குள்ள பல குழுக்கள் முயல்கின்றன. அவற்றிற்கு உண்மையிலேயே அவரின் கலையியல் சார்ந்த புரிதல்களும் வெளிப்பாடுகளும் தெரிந்துதான் இருக்கின்றனவா ? என்ற சந்தேகம் எனக்குண்டு. அவரை முன்னிறுத்தி நடக்கும் நிகழ்வுகள் பலவற்றை நான் ஒரு பார்வையாளனாக ஓரத்தில் நின்று பார்த்துவிட்டு வந்துவிடுவேன். அவரிடம் உரையாடும் மொழி எனக்கு வசமாகவில்லை என்று இப்போதும் உணர்கிறேன். 

தீவிரமாக அவரிடம் அன்பு பாராட்டும் அவரது மாணவர்களுக்கு விடுக்கும் ஒரு வேண்டுகோளோடு இப்பிறந்தநாள் குறிப்பை நிறைவுசெய்யலாம் என்று தோன்றுகிறது. அவரை ஓர் ஆசிரியராகவும் கலைஞராகவும் கொண்டாடும் நீங்கள் அவரின் செயல்பாட்டு முறைகளையும், கலைஞராகச் செயல்படும்போது அவரது மனப்பாங்கையும் பதிவுசெய்யுங்கள். அந்தப் பதிவுகளின் போது அவரது ஆசிரியத்துவம் எவ்வாறு வெளிப்பட்டது என்பதையும் எழுதி வையுங்கள். ஒரு ஆசிரியர் ஆசிரியராகவும் கலைஞராகவும் அதற்கான வெளிகளை எவ்வாறு கட்டமைத்தார் என்பது எதிர்காலச் சந்ததிக்குத் தேவை.வேலைத்தளத்தில் கலைஞர்கள் (Artist at Work ) என்பது போன்ற நூல்கள் ஆங்கிலத்தில் நிறைய இருக்கின்றன. அதனைச் சந்ருவை மையமிட்டுச் செய்வது தமிழின் ஓவியக்கலையில் நடக்கவேண்டும் என்பது என் ஆசை. அவரது மாணவர்கள் சிலருக்கு இத்தகைய திறமை இருக்கிறது. இதுபோன்ற பதிவுகள் நாடகம், சினிமா, இசை, கவிதை, புனைகதை என்றும் பரவவேண்டும். அவ்வகை எழுத்துகள் தமிழில் ஒரு புதுவகை எழுத்துவகைமையாக அமையும். 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

தணிக்கைத்துறை அரசியல்

நவீனத்துவமும் பாரதியும்