சினிமா என்னும் பண்பாட்டு நடவடிக்கை


பத்து வயது முதல் திரையரங்குகளுக்குச் சென்று தமிழ்ச் சினிமாவைப் பார்ப்பவனாக இருந்த எனக்குக் கடந்த இரண்டு ஆண்டுகள் பெரும் சவாலாக மாறிவிட்டன. கடைசியாகத் திரையரங்கம் சென்று பார்த்த படம் திரௌபதி (திருநெல்வேலி ராம் தியேட்டரில் பிப்ரவரி 28, 2020). படம் பார்த்து முடித்தபோது ‘கலை இலக்கியம் குறித்துக் கற்றுத்தேர்ந்த கலைவிதிகள் அத்தனையும் தோல்வியுற்று நிற்பதாக உணர்ந்தேன். வெளியேறியபோது.எழுதுவதற்கு எதுவுமில்லை என்று மனம் உறுதி செய்து கொண்ட து.

அன்று ஆச்சரியம் ஒன்று நடந்தது. “படம் பார்த்துத் திரும்புகிறேன்” என்பதை எப்படிக் கண்டுபிடித்தாரோ உயிர்மை ஆசிரியர் மனுஷ்யபுத்திரன். வீடுபோய்ச் சேர்வதற்கு முன்பே அவரிடமிருந்து போன். ‘திரௌபதி பட த்தைப் பார்த்துவிட்டு இன்றே ஒரு கட்டுரை எழுதித்தர வேண்டும் சார்’ என்று கேட்டார். “படம் பார்த்துவிட்டுத் திரும்பிக்கொண்டிருக்கிறேன்; ஆனால் அந்தப் படம் பற்றி எதுவும் எழுதப்போவதில்லை என்று உறுதியாகச் சொல்லிவிட்டேன். அதற்கு முன் அவரிடம் அப்படி மறுத்துப் பேசியதே இல்லை. இதனையொட்டி, எனது பெயரைக் குறிப்பிடாமல் ஒரு முகநூல் குறிப்பைக் கூட மனுஷ்யபுத்திரன் எழுதியிருந்தார்.

நான் போயிருந்த திரையரங்கின் பார்வையாளர் இருக்கைகள் சாதிச்சங்கங்களின் உறுப்பினர்களால் நிரம்பியிருந்தன. இத்தனைக்கும் அந்தப் படத்தில் காட்டப்பட்ட சாதிச்சங்கத்தின் ஒரு கிளைகூடத் திருநெல்வேலியில் கிடையாது. படத்தில் உருவாக்கப்பட்ட பாத்திரங்களின் வருகையின் போது எழும்பிய ஓலங்களும், வசனங்களின் போது தட்டப்பட்ட கையொலிகளும், படம் பேசும் கருத்தியல்களைவிடக் கூடுதல் ஆபத்துகளைச் செவிட்டில் அறைந்து சொல்லிய தினம். மூச்சுக்காட்டாமல் பார்த்துத் திரும்பினேன். திரையரங்கில் தொடர்ந்து சினிமா பார்த்த சினிமா ரசிகனாக அச்சத்தில் உறைந்த நாள் அது.

**********

சினிமா பார்ப்பதில் எனது முதன்மை விருப்பமாக எப்போதும் இருப்பது திரையரங்கமே. சினிமா பார்க்கப்போகிறோம் என நினைப்பது தொடங்கி, அது உண்டாக்கப்போகும் மனக்கிளர்ச்சி தொடங்கிவிடும். உடன் வருபவர்களோடு நடத்தும் உரையாடல், முன் விவாதங்கள், அடித்துப் பிடித்துச் சீட்டு வாங்குவது, முண்டியடித்து இடம்பிடிப்பது, விளக்கை அணைத்துத் திரை விலகும்போது அடிக்கப்படும் சீழ்க்கை ஒலி, வண்ணப்பொடி தூவல்கள், கையொலிகள், எதிர்வினை வசனங்கள், இடைவேளையில் சொல்லப்படும் கருத்துகள் என எல்லாவற்றையுமே சினிமாப் பண்பாட்டின் பகுதிகளாக நினைப்பவன். அவற்றையும் உள்ளடக்கியன எனது விமரிசனங்கள் என்பதைப் பலரும் வாசித்திருக்கக்கூடும் . அதற்காக வீடியோ பிளேயரையும் தொலைக்காட்சிப் பெட்டியையும் சினிமா பார்க்கப் பயன்படுத்தாதவன் என்று நினைத்துக் கொள்ள வேண்டியதில்லை.எல்லா வகை தொழில் நுட்பங்களையும் உடனடியாக ஏற்றுக்கொண்டே பயணித்திருக்கிறேன். இணைய அலைவரிசைகளில் தான் கரோனா தொற்று அடங்கலின் போதும், வார்சாவில் இருந்த இரண்டு ஆண்டுகளிலும் படங்களைப் பார்த்திருக்கிறேன். ஆனால் அப்படிப்பார்ப்பது மக்கள் திரளின் போக்கோடு சினிமா பார்ப்பதாகாது என்ற நம்பிக்கை எப்போதும் உண்டு. தனியொரு பார்வையாளனாகப் படம் பார்ப்பதின் வழியாக நமக்குள் கலை குறித்தும் சினிமா குறித்தும் ஆழ்ந்த எண்ணவோட்டங்கள் உருவாகலாம். ஆனால் வெகுமக்கள் சினிமாவுக்கும் திரள் பார்வையாளருக்குமான உறவைப் பேச நினைத்தால் ஒன்றுக்கு மேற்பட்ட சூழலில் திரளோடு ஒருவனாக நின்று சினிமாக்களைப் பார்ப்பவராக மாற வேண்டும். அப்படித்தான் சினிமாவைக் குறித்து எழுதத்தொடங்கிய பின் எனது சினிமா பார்வையாளப்பயணம் தொடர்ந்திருக்கிறது.

பொங்கல், தீபாவளி, சித்திரை பிறப்பு எனக் கொண்டாட்ட நாட்களுக்கு எம்ஜிஆர் நடித்த புதுப்படங்கள் வந்தபோது டூரிங் தியேட்டர் வாசலில் எத்தனை வண்டிகள் நின்றன என்பது சினிமாப் பொருளாதாரமாக மட்டும் இருக்கவில்லை. அடுத்தடுத்த தேர்தல்களில் நடந்த அரசியல் மாற்றங்களாகவும் மாறியதைக் கவனித்து வளர்ந்தவன். அதனாலேயே சினிமா பார்ப்பதை எனக்குள்ளும் என்னைச் சுற்றியும் நடந்த பண்புநிலை மாற்றங்களாகச் சொல்லிக்கொண்டிருக்கிறேன்.

எல்லாக் காலங்களிலும் சினிமா பார்ப்பதை நிறுத்தாத எனக்குப் பள்ளிப் பருவத்தில் சினிமாவுக்குச் செல்வது சாகசவினைகள். வீட்டுக்குத் தெரியாமல் போனதும் விடுதிக் காப்பாளருக்குத் தெரியாமல் போனதுமான சாகசங்களுக்கு விழுப்புண்களும் தண்டனைகளும் கிடைத்ததுண்டு. கல்லூரிக் காலத்தில் அனுமதிக்கப்பட்ட நாட்களில் போன சினிமாக்கள் காதலின் மாற்றுகளாகவும் இருளின் விநோதங்களாகவும் ஆனதுண்டு. ஆய்வு மாணவனாகப் பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைந்தபோது சினிமா தேடலின் பரம்பல்களாக மாறிவிட்டது. அதன் தொடர்ச்சியாக ஆசிரியரான பின் பாடங்களாக – தரவுகளாக – சொல்லாடல்களாக ஆகிப்போய்விட்டன. இந்த நகர்வுகளின் வழியாகவே நான் சினிமாவைப் பார்த்துப் பேசிக்கொண்டிருக்கிறேன்

***********

நான் இருக்கிறேன் எனச் சொல்வதற்காகவே ஒவ்வொருவரும் அவரவர் தேர்வுசெய்த விசயங்களைக் குறித்துப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். நானும் எனது ஈடுபாடுகளைக் குறித்துப் பேசிக்கொண்டிருக்கிறேன். எனது பேச்சுகள் எல்லாம் தன் போக்கான பேச்சுகள் அல்ல. எல்லாப் பேச்சுகளும் வாசிப்புகளுக்குப் பின்னான பேச்சுகள். அவற்றுக்குள் பங்கேற்பாளனாகவும் இருந்து பேசுவதுண்டு; விலகித் தூரமாக ஒதுங்கி நின்று வெற்றுப் பார்வையாளனாகவும் பேசுவதுண்டு. படைப்பெழுத்துகளுக்கு தன்மை, முன்னிலை, படர்க்கைக் கூற்றுகள் இருப்பதுபோலவே விமரிசனப்பேச்சுகளுக்கும் அம்மூன்று நிலைகள் உண்டு. எழுத்துகளை வாசித்துப் பேசுவதில் தொடங்கிய பயணம் மேடைக்கச்சேரிகளையும், அரங்க நிகழ்வுகளையும், உடலின் அசைவுகளையும், சலனக்காட்சிகளையும் பேசுவதாக மாறியது காலத்தின் கட்டாயம் மட்டுமல்ல; எனது வாழ்வின் பகுதியாகவும் கூட உள்ளது. அதனாலேயே ஒவ்வொன்றையும் பேசுவதற்கு அவற்றின் அடிப்படை விதிகளை முன்வைத்தே பேசி வந்துள்ளேன். அடிப்படை விதிகள் அனைவருக்கும் பொதுவானவை என்ற நிலையில் எனது பார்வைக்கோணமும் சொல்லாடல்களும் அனைவரின் மனப்பாங்கின் சாயலைக் கொண்டிருக்கின்றன என நம்புகிறேன்.

எல்லாவகைக் கலைப் பிரதிகளின் வாசிப்பிலும் அவ்வினை முடிந்தபின் ஒரு மையத்தைக் கண்டுபிடித்து எனது கருத்துகளையும் விவாதங்களையும் முன்னெடுக்கிறேன். எழுத்துப் பிரதிகளில் பெரும்பாலும் ஆசிரிய மையம், வாசக மையம் என்ற இரண்டிற்குள் நின்று போக, அரங்கக் கலையைப் பற்றிப் பேசும்போதும், சினிமாவை விமரிசிக்கும்போதும் இயக்குநர் மையத்தை முதன்மையாகத் தேடுகிறேன். இவ்விரண்டும் நெறியாள்கை செய்யும் இயக்குநர்களின் கலைவடிவமாகவே உலகம் முழுவதும் இருக்கின்றன. ஆனால் தமிழ்ச் சினிமாவுக்குள் இயக்குநர் மையங்கள் பல நேரங்களில் காணாமல் போய் நடிக மையங்களே முன்னுக்கு வந்து நிற்கின்றன. அதனாலேயே தமிழ்ச்சினிமா தமிழ் வாழ்வின் அனைத்து நிகழ்வைகளையும் தீர்மானிக்கும் சக்தி வாய்ந்த கருவியாகத் திகழ்கிறது. இதனை அடையாளப்படுத்திப் பேசுவது வெகுமக்கள் சினிமாவைப் பற்றிய பேச்சில் முதன்மைப் படவேண்டிய ஒன்று என்ற நம்பிக்கையே எனது சினிமா விமரிசனங்களின் அடிநாதம்
 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெரியார்- எப்போதும் பேசுபொருள்

பெரியார்மண்ணும் பிராமணியத்தின் இயக்கமும்.

நாத்திகம் என்னும் ஆன்மீகம்