ஆதியிலே வார்த்தைகள் இருந்தன; அர்த்தங்கள் அவ்வப்போது உருவாகின்றன


இப்போது விவாதிக்கப்படும் ஹிஜாப்பின் ஊடாக நினைவுக்கு வந்தது அந்த நாள்.

அன்று அந்தக் கல்வி நிறுவனத்தில் ஒரு முக்கியமான நாள். சிறப்பு நிகழ்ச்சி தொடங்குவதற்கு அரைமணிநேரம் இருக்கும்போதே வளாகத்திற்குள் இருந்தேன். அழைப்பிதழில் குறிப்பிட்டபடி என்றால் அரைமணி நேரம். ஆனால் வரப்போகும் விருந்தினர்களைப்பொறுத்து நேரத்தில் மாறுதல் இருக்கக்கூடும். புதிய கட்டடத்திறப்பு மட்டும் என்று சொல்லமுடியாது. முழுவதும் சுயநிதிப்படிப்பாகத் தொடங்கப்பட்ட கணினியல் & தகவல் தொடர்புத் தொழில்நுட்பப் படிப்புக்கான உள்கட்டுமான மையத்தின் தொடக்கவிழா. அதனோடு இணைந்த தகவல் தொடர்புக் கருவிகளின் இயக்கமும் நடைபெறும். அதன்பிறகு உலக அறிவு அதன் பாக்கெட்டில் வந்து கொண்டே இருக்கும். அறிவுப் பரவலில் தேவையானதைத் தேவையானவர்கள் எடுத்துக் கொள்ளலாம்.

கல்லூரி வளாகத்திற்குள் இன்னொரு உள்பாகமாகத் தனித்திருந்தது அந்த இடம். அதற்குள் கூடைப்பந்து மைதானமும், பேட்மிண்டன் விளையாடுவதற்கான கோடுகளும் போடப்பட்டிருந்தன. ஆனால் வலை கழற்றப்பட்டுக் கம்பங்களில் ஒலிபெருக்கிப் பெட்டிகள் நிறுத்தப்பட்டிருந்தன. அதைத் தாண்டிச் சுவரிலிருந்து விலகிய இடத்தில் அகன்று விரிந்து பூக்கள் சொரியும் கொன்றை மரம் வண்ணவிளக்குச் சரங்களால் மின்னியது. நிகழ்ச்சி தொடங்கும்போது இருட்டத்தொடங்கும். அப்போது மரமும் மின்னும் விளக்குகளும் காட்சிக்குரியதாக இருக்கக்கூடும்.

இசையைப் பெருக்கும் கருப்புப் பெட்டிகளுக்குள்ளிருந்து திரைப்பாடல் ஒலித்ததை நிறுத்திவிட்டு மங்கள இசையை ஒலிக்கவிடும்படி யாரோ சொல்லியிருக்கவேண்டும். பாதியில் பாடல் நிறுத்தப்பட்டுப் புல்லாங்குழல் நாதம் வரும்படி மாற்றப்பட்டது. புல்லாங்குழலில் பக்திப் பாடலின் ஆலாபனை இசைரூபமாக வெளிப்பட்டது. மரத்தடியில் ஒழுங்கற்ற ஒழுங்கில் நாற்காலிகள் நிரம்பியிருந்தன. அங்கிருந்து ஐந்நூறு அடி தூரத்தில் மேடை.

வாசலில் வரவேற்புப் பொருட்கள் ஒரு தட்டில் வெண்மை கலந்த ரோஜாப்பூக்கள் குவியல்களாக இன்னொரு தட்டில் கல்கண்டுத் துணுக்குகள். தட்டுகள் இருக்கும் மேசைக்குப் பின்னால் இரண்டு பெண்கள். இல்லை மாணவிகள். கண்ணை உறுத்தாத இளம்பச்சை நிறத்தில் பட்டுச்சேலையும் அதே நிறத்தில் ஜாக்கெட்டும் அணிந்திருந்தனர். வருகின்றவர்களைப் புன்முறுவலுடன் வரவேற்றுக் கொண்டிருந்தார்கள்.

அவர்களுக்குப் பின்னால் நாலைந்து மாணவர்கள். ஜீன்ஸ் பேண்டும் அதனுள் செருகிய டீசர்ட்; ஸ்டோன்வாஸ், காட்ராய் என விதம்விதமான வண்ணங்களில் வந்தவர்களை அழைத்துப் போய் இருக்கைகளில் அமரச் செய்வது அவர்களது வேலைகளாக இருந்தன. உட்கார்ந்தவர்களுக்குத் தேநீர்க் கோப்பைகளை வழங்குபவர்களாக மாணவிகள். அவர்களும் தழையத் தழைய பட்டுச் சேலைகளோடு. ஒருத்தி மலையாளப் பெண்களின் இளம்மஞ்சள் வண்ணத்தில் கதர்ப்பட்டு; இன்னொருத்தி பட்டுச்சேலையை வடக்கத்திப் பெண்கள் உடுத்தும் முறையில் வலதுபுறத்தில் தோளில் வழியவிட்டிருந்தாள். மாணவிகளின் பட்டு அணிவிப்பைப் பார்த்தபின்பு, எனது கண்கள் பட்டு வேட்டியையும், பட்டுச் சட்டையையும் அணிந்த மாணவனைப் பார்த்துவிட விரும்பித் தேடி அலுத்துப்போனது. பட்டுவேட்டியில் ஒரு மாணவனும் வரவில்லை.

அவர்களிடம் இருந்த உடைகளில் சிறந்தது என நினைத்ததை - நாகரிகம் என்று கருதியதை அணிந்து நடந்தனர். விலை அதிகமான ஷுக்கள் விழா நாளின் சிறப்பம்சமென மாணவர்கள் நினைக்கிறார்கள். கனமான ஷூக்களோடு.. ஜீன்ஸ் பேண்டுகளோடு நின்று கொண்டிருந்தார்கள். கால்களில் ஷு பளபளப்புடன் மின்னின. மாணவிகளுக்கு விழாக்களுக்கான உடைகள் பட்டுச்சேலைகள்.

விழா நாட்களின் உடைகள் நமது பாரம்பரியத்தின் அடையாளங்களாக இருக்க வேண்டும் எனப் பெண்கள் மட்டும் நினைப்பது ஏன்? ஆண்களுக்கு பாரம்பரிய அடையாளத்தைப் பேண வேண்டிய அவசியம் இல்லையோ..? மனம் கேள்விகளை எழுப்பியபோது மூன்று நாட்களுக்கு முந்திய வகுப்பறையில் இந்தக் கேள்வி எழாதது ஏன்? என்று தோன்றியது. இன்று பட்டுச்சேலையில் வலையவரும் இந்த மாணவிகளில் ஒருத்திகூட அன்று சேலையோ, தாவணியோ உடுத்தியவளாக வந்திருக்கவில்லை. எல்லோரும் சுடிதார், மிடி, பனியன், டீசர்ட் என்று வந்திருந்தார்கள். அவைதான் அவர்களின் வழக்கமான உடைகளும் கூட.

அதன் பிறகு என்னால் விழாவைக் கவனிக்கவே முடியவில்லை. ஒவ்வொருத்தரும் அணிந்து வந்த ஆடைகளையே பார்த்துக் கொண்டிருந்தேன். ஒரு மாணவி கேரளத்துப் பெண்களின் சாயலில் சேலையைக் கட்டி முடியை இறுக்கிக் கட்டாமல் வந்திருந்தாள். இன்னொருத்தி ஜிகுஜிகுவெனச் ஜொலிக்கும் சுடிதாரில் வந்திருந்தாள். சாதாரணமான உடையில் பெண்கள் ஒருவரும் வந்ததாகத் தெரியவில்லை. ஆண்களின் ஆடைகளில் பெரிய வேறுபாடுகளைக் காண முடியவில்லை.

அந்தச் சிறப்புநாள் சடங்குகள்.சடங்குகளுக்கான ஆடைகள் ஆண்களையும், பெண்களையும் பாரதூரமாகப் பிரித்துவிடுவது ஆச்சரியம் தான். ஆண்கள் மேற்கத்தியக் கலாச்சாரத்திற்குள்ளும் பெண்கள் கீழ்த்திசைக் கலாச்சாரத்திற்குள்ளும் விருப்பத்தோடு நுழைய இந்தச் சடங்குகள் தேவையாக இருக்கின்றன. சடங்குகள் பெண்களைப் பழைமைக்குள் தள்ள ஆண்கள் அவற்றைக் களியாட்ட நாளாக மாற்றிப் புதுமைக்குள் நுழைகிறார்கள். ஆண்களும் பெண்களும் ஒன்றாய்த் தேர்ந்தெடுத்து ஆடைகள் உடுத்திக் கொள்வதாக விழாக்கள் மாறும் நாள் வெகுதொலைவில் இருக்கிறதோ.. இதில் யோசிக்க வேண்டியவர்கள் ஆண்களா? பெண்களா..? என்று கேட்டுக்கொண்டேன்.

இப்போது விவாதிக்கப்படும் ஹிஜாப்பிற்கு வருவோம். தனது இருசக்கர வாகனத்தில் வந்திறங்கிய அந்தப் பெண் மிஸ்கான் அணிந்திருந்த கறுப்பு வண்ண உடை இசுலாமிய அடையாளத்தை வெளிப்படுத்தும் ஆடை. அந்தக் கல்லூரிக்கெனச் சீருடை ஏதாவது இருந்தால், அதற்கு மாறியபின்பே கல்லூரிக்குள் நுழைய முடியும். சீருடைக் கட்டுப்பாடு என்பது திடீரென்று அறிமுகம் செய்யப்பட்டிருந்தால், அதனை ஏற்க மறுத்துத் தனது எதிர்ப்புணர்வைக் காட்ட ஒவ்வொருவருக்கும் உரிமை உண்டு. ஆனால் முடிவில் எடுக்கப்படும் நிர்வாகத்தின் முடிவுக்குக் கட்டுப்பட வேண்டியது தவிர்க்க முடியாத ஒன்று.

கல்வி நிறுவனங்களில் உருவாக்கப்படும் சீருடை விதிகளின் நோக்கங்கள் பிழையானவை அல்ல; சமத்துவ உணர்வை உருவாக்கும் நல்நோக்கம் அவற்றிற்குண்டு. அண்மையில் கர்நாடகத்தில் கிளறிவிடப்பட்டுள்ள சீருடை ஒழுங்கின் பின்னணியில் நிர்வாகச் சீர்திருத்தமும் சமநிலையைப் பேணுதலும் இருப்பதாகப் படவில்லை. மாநில ஆட்சியில் இருக்கும் ஆளுங்கட்சியின் தேர்தல் வெற்றிக்கான பரப்புரை நோக்கம் அதில் இருக்கிறது. அத்தோடு சீருடைகளை வலியுறுத்தும் கல்வி நிறுவனங்கள் அவரவர் சமய அடையாளங்கள் கொண்ட ஆடைகளுக்கு விதிகளிலிருந்து விலக்குகள் அளித்துள்ளதைப் பல்வேறு மாநிலங்களில் பார்க்கமுடியும்.

கல்வி நிறுவனங்களின் சீருடைகளுக்கு விதிகள் மட்டுமே வகுக்கப்படவில்லை; விதிவிலக்குகளும் வகுக்கப்பட்டுள்ளன. விதிகள் இயந்திரத்தின் அடையாளம்; விதிவிலக்குகள் மனித மனங்களின் நெகிழ்ச்சி. இயந்திரங்களாக இருப்பதா? நெகிழ்ச்சியைக் காட்டுவதா? என்பதைத் தீர்மானிக்க வேண்டியதில்லை.

கல்வி நிறுவனங்களின் விதிகளை -ஒழுங்குகளைப் பராமரிப்பது கல்வித்துறை நடவடிக்கைகளாக இருக்கவேண்டும். கல்வித்துறைக்குத் தொடர்பில்லாத அமைப்புகளாலும் காரணங்களாலும் தீர்மானிக்கப்படும் என்றால் கல்வி வளாகங்களின் அமைதி காணாமல் போய்விடும்.

கல்லூரி வளாகத்திற்குள் காவித்துண்டோடு கூடிய கும்பல் தன்னைச் சூழ நின்று கத்திக்கொண்டு சுற்றி வந்தபோது மாணவி முஸ்கான் உச்சரித்த’ அல்லாஹூ அக்பர்’ அதன் இயல்பில் சமயச் சொல்லாடலே. ஆனால் சுற்றி நின்றவர்கள் “ ஜெய்ஸ்ரீராம்” எனக் கத்திய நிலையில் இன்னொரு சமயச் சொல்லாடலை எதிர்கொள்ளும் வினையின் எதிர்வினையாக மாறுகிறது. அம்மாதிரியான மாற்றத்தில் சமயச் சொல்லாடல் ஒருவரின் உரிமையாக – பாதுகாப்புக்கவசமாக மாறிவிடும் வேதிவினையானதை அந்நிகழ்வு நமக்கு உணர்த்து நின்றது. இப்போது ஹிஜாப் ஆடையா? அடையாளமா? என்ற கேள்விக்கப்பால் உரிமை என்பதாக மாறிவிட்ட து. எல்லாச் சொற்களும் பொருள் கொண்டனவே; ஆனால் நிலையான பொருள் எனச் சொற்களுக்கு இருப்பதில்லை என்பதையும் உணர்ந்தாக வேண்டும்.

            “நமது அனுபவம் கற்பனையிலும் அறிவிலும் வேரூன்றி நின்று                                      கொண்டிருக்கும் ஒன்று. நமது அறிவு நாம் பார்க்கும் இடத்தின் நீண்ட                       வரலாற்றை உள்வாங்கிக் கொண்ட ஒன்று”



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

தணிக்கைத்துறை அரசியல்

நவீனத்துவமும் பாரதியும்