சில நிகழ்வுகள்: சில குறிப்புகள்

 நாட்குறிப்புகள் போலவும் இல்லாமல் கட்டுரைகள் போலவும் இல்லாமல் அவ்வப்போது முகநூலில் எழுதப்படும் குறிப்புகளைப் பாதுகாத்து வைக்கவேண்டியுள்ளது.  பிந்திய தேவைக்காக.

அ.மார்க்ஸ்

அரசியல் ஈடுபாட்டுக்கும் சொந்த வாழ்க்கையின் செயல்பாடுகளுக்கும் விலகல்கள் இல்லாமல் இருக்கம் மனிதர்களில் ஒருவர் அ.மார்க்ஸ். அதைத் திரும்பவும் அவரது சொற்களைக் கொண்டே சொல்லவைத்து அச்சிட்டுத் தந்திருக்கிறது கனடாவிலிருந்து வரும் காலம் இதழ் (57/ டிசம்பர் 2021/ 20 பக்கங்கள்: 95 முதல் 114 ) அ.மார்க்ஸைச் சந்தித்து நேர்காணல் செய்துள்ள சாம்ராஜ் அவரது பேச்சையும் அதில் வெளிப்படும் தொனியையும் எழுதித் தந்துள்ளார். 40 ஆண்டு காலமாக அ.மார்க்ஸின் வாசகனாகவும் அவ்வப்போது நேர்ச்சந்திப்பு, உரையாடல்கள் வழியாக அறிந்த என்னைப் போன்ற பலருக்கு இந்த நேர்காணலில் அவரது வாழ்க்கை சார்ந்து கிடைக்கும் தகவல்களும் அனுபவங்களும் புதியதல்ல. தேடலும் விவாதிக்கும் முறையும் முன்வைக்கும் வாதங்களும் எனப் பலவற்றில் முன்மாதிரியாக இருந்தவர்.
அவரது தந்தையை மையப்படுத்திப் பள்ளிப்பருவம், அரசியல் ஈடுபாடு, வேலை, போராட்ட வாழ்க்கை, கலை இலக்கிய ஈடுபாடு, அமைப்புகளை உருவாக்குவது, வேலைசெய்வது, வெளியேறுவது , தனியான ஈடுபாடுகள் என விரிந்துள்ள ,இந்த நேர்காணலில் ஒரு பகுதி இப்போது விவாதிக்கப்பட வேண்டிய ஒன்று. தானே முன்னின்று தொடங்கிய தலித் அரசியல், தலித் பண்பாடு, தலித் இலக்கியம் போன்றவற்றிலிருந்து விலகிய மனத்தோடு, அவற்றின் இப்போதைய போக்கின் மீது கடுமையான அதிருப்தியையும் வெளிப்படுத்தியுள்ளார். அடையாள அரசியலை முன்னெடுத்து, நுண் அரசியல் அமைப்புகளையும் நபர்களையும் அடையாளம் கண்டு தமிழ்ச் சிந்தனைப் பரப்பில் உருட்டிவிட்ட அ.மார்க்ஸ், அடையாள அரசியலின் சிக்கல்களையும் போதாமையையும் கூட விவாதித்துள்ளார். இவற்றிலெல்லாம் காத்திரமான பங்களிப்பு செய்த அவரது மறுபரிசீலனைகள் கவனிக்கப்பட வேண்டியவை; விவாதிக்கப்பட வேண்டியவை என்ற நிலையில் இந்த நேர்காணல் முக்கியமானது.
--------------------
காலம் எதிர்வரும் புத்தகக்காட்சியில் கிடைக்கக் கூடும். அதுவரை காத்திருக்கப் பொறுமை இல்லாதவர்கள் kalam@tamilbook.com வழியாக அதன் ஆசிரியர் செல்வத்தைத் தொடர்புகொள்ளலாம்.
May be an image of ‎1 person and ‎text that says '‎و 1 மார்க்ஸிலிருந்து மார்க்ஸ்வரை‎'‎‎

09-02-2022//அறிவுடமையின் வீழ்ச்சி

பா.ஜ. க.வைக் கண்ணை மூடிக்கொண்டு ஆதரிக்கும் தமிழ்நாட்டிலும் அதற்கு வெளியேயும் இருக்கும் தமிழ்ப் பிராமணர்கள் தி.மு.க.விற்கு எதிராகப் பேச வேண்டும் என நினைத்துக்கொண்டு தமிழ்நாட்டிற்கு விரோதமாகப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதன் வெளிப்பாடாக நேற்றும் பல பதிவுகளை வாசிக்கமுடிந்தது.
நேற்று நடந்த சிறப்புச் சட்டமன்றக் கூட்டம் ‘நீட் தேர்வுகளைத் தடுக்கும் சட்டத்தை நிறைவேற்றும் நோக்கம்’ கொண்ட கூட்டம் என்று அதன் எல்லையைக் குறுக்கிவிடப் பார்க்கிறார்கள். நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஆளுநருக்கு அனுப்பப்பட்டால் நீட் தேர்வு இல்லாமல் போகுமா? என்று கேள்வியைக் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஆளுநர் இந்த முறை அப்படியே குடியரசுத்தலைவருக்கு அனுப்புவார். குடியரசுத்தலைவர் ஒன்றிய அமைச்சரவையின் ஆலோசனைப்படி தானே செயல்படமுடியும். ஒன்றிய அரசு ஒருபோதும் அனுமதிக்காது என்று வாதம் செய்கிறார்கள்.
இந்தவாதம் தமிழ்நாட்டிற்கெதிரான வாதம் மட்டுமல்ல. மாநில உரிமையை மறுக்கும் ஒன்றிய அரசின் அதிகாரத்துவப் போக்கை ஆதரிக்கும் வாதம். நீட் எதிர்ப்பு மசோதாவை உடனடியாக நிறைவேற்றித் திருப்பியனுப்பிய நடவடிக்கை மாநிலச் சட்டமன்றங்களின் சட்டமியற்றும் உரிமையைப் பேசும் நடவடிக்கை. ஒன்றிய அரசில் பெரும்பான்மை உறுப்பினர்களைக் கொண்டுள்ள ஆளுங்கட்சிக்கு உள்ள அதிகாரத்தைப்போல மாநில மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அரசுக்கும் - பெரும்பான்மை கொண்ட அரசுக்கும் உள்ளது என்பதை நினைவூட்டும் நடவடிக்கை. தி.மு.க. எதிர்ப்பு, தமிழக எதிர்ப்பாக மாறுவதைக் கூடப் புரிந்துகொள்ளத் தவறுவது அறிவுடமையின் வீழ்ச்சி.

உயர்கல்வியை மீட்டெடுத்தல்

இப்போது உயர்கல்வித்துறை அமைச்சராக இருக்கும் முனைவர் பொன்முடி முந்திய திமுகவின் ஆட்சிக் காலத்திலும் (2006 -2011) உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்தார். அந்தக் காலகட்டத்தில் பொதுப்பல்கலைக்கழகச் சட்டம் ஒன்றைக் கொண்டுவரும் நோக்கம் ஒன்று இருந்தது. அதனை விவாதித்து ஏற்கச் செய்யும் விதமாக அனைத்துப் பல்க்லைக்கழகங்களின் துணைவேந்தர்களைச் சந்தித்து உரையாடினார். பல்கலைக்கழகங்களின் தனித்தன்மை பாதிக்கப்படும் என்ற காரணத்தைச் சொல்லி எதிர்ப்புகள் முன்வைக்கப்பட்டன. அச்சட்டம் வந்திருந்தால் கல்லூரி, பல்கலைக்கழக ஆசிரியர்கள் பெருமளவில் பணியிட மாற்றங்கள் நடக்கும் என்ற அச்சமும் கூடவே இருந்தது. அதன் காரணமாக அச்சட்டம் கிடப்பில் போடப்பட்டது. என்றாலும் காலமுறைப்படி பல்கலைக்கழகங்களின் இணைவேந்தரான உயர்கல்வி அமைச்சரைச் சந்திக்கும் வாய்ப்பை வழங்கிய அந்த முறைக்கு அப்போது வரவேற்பிருந்தது. அடுத்து வந்த அ இ அதிமுக வின் உயர்கல்வி அமைச்சர் அந்த நடைமுறையைப் பின்பற்றவில்லை. அப்போதைய முதல்வர் ஜெ.ஜெயலலிதா இதுபோன்ற நடவடிக்கைகளை உற்சாகப்படுத்துபவராக இருந்ததில்லை என்பதால் துறை அமைச்சர்கள் தனித்துவம் காட்டியதில்லை.
ஜெ.ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பின்பு பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் நியமனங்களும் உயர்கல்விக்கான திட்டமிடல்களும் நேரடியாக ஆளுநர் மாளிகையின் கீழ் கொண்டு போகப்பட்டுள்ளது. இணைவேந்தரான கல்வி அமைச்சர் கூட்டிய கூட்டத்திற்குப் பதிலாக வேந்தரான ஆளுநரே அத்தைகைய கூட்டங்களைக் கூட்ட ஆரம்பித்தார். முன்னாள் ஆளுநர் ஆரம்பித்து வைத்த அந்தப் போக்கை இப்போதைய கவர்னரும் தொடர்கிறார். ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்துவது குறித்தும் பாடத்திட்டங்களை மாற்றும்போது கவனிக்கவேண்டிய கருத்தியல்கள் குறித்தும் விவாதிக்கிறார்கள் அந்தக் கூட்டங்களில்.
பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் நியமனத்தைத் தமிழக அரசே செய்யும் என்ற முன்மொழிவின் போது உயர்கல்வியைத் திட்டமிடும் பொறுப்பையும் தமிழ்நாட்டரசின் உயர்கல்வி வாரியம் தனது பொறுப்பாக ஆக்கவேண்டும். அதன் முன்னோடி நடவடிக்கையாக உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி முன்பு கூட்டிய துணைவேந்தர்கள் கூட்டத்தை ஒவ்வொரு மாதமும் கூட்டவேண்டும். உயர்கல்வி நிறுவனங்களின் உள்ளடக்கம், செயல்பாடுகள், கற்றல் - கற்பித்தலுக்கான புதிய உத்திகள் போன்றவற்றை விவாதிக்க வேண்டும். அந்நடவடிக்கை கல்வியை மாநிலப்பட்டியலுக்குக் கொண்டுவருவதின் பகுதியாக அமையும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெரியார்- எப்போதும் பேசுபொருள்

பெரியார்மண்ணும் பிராமணியத்தின் இயக்கமும்.

நாத்திகம் என்னும் ஆன்மீகம்