வாசிப்பின் விரிவுகள்:

வாசிப்பின் நோக்கமும் தெரிவுகளும் பலவாக இருக்கும். எழுத்தின் கவனமும் முன்வைப்பும் சிலவாக மாறிவிடும்
நிகழ்காலத்தைப் புனைவாக்குவதின் சிக்கல்கள்
வாசிக்கப்படும் எழுத்திற்குள் வாசிப்பவரின் நிகழ்காலம் பற்றிய குறிப்புகள் கிடைக்கும்போது தொடர்ந்து வாசிப்பது நடக்கிறது. வாசித்து முடித்தவுடன் வாசிப்பவர் அந்த எழுத்தைக் குறித்து ஒரு கருத்தை உருவாக்கிக் கொள்வதும் நடக்கும். உருவாக்கும் கருத்தை எழுத்திலோ நண்பர்களின் பேச்சுகளின் வழியாகவோ வெளிப்படுத்தும் வாய்ப்பு கிடைத்தால் வெளிப்படுத்தவும் செய்வார்.
எழுத்திற்குள் வெளிப்படும் ‘நிகழ்காலம்’ அந்த எழுத்தை விவாதிக்கத்தக்க எழுத்தாக மாற்றிவிடும் அதே வேளையில் பல தள விவாதமாக இல்லாமல் இரட்டை எதிர்வுக்குள் நின்று எழுத்தாளர் முன்வைக்கும் விவாத முடிவோடு ஒத்துப்போவது அல்லது மறுத்து ஒதுக்குவது என்பதைச் செய்யும்படி வலியுறுத்தவும் செய்கிறது.


இந்தமாத (பிப்ரவரி,2022) உயிர்மையில் புனைகதை வடிவத்தில் நீண்ட அனுபவம் கொண்ட நான்கு பேரின் சிறுகதைகள் அச்சாகியுள்ளன. அவை:
பெருமாள் முருகன் - ஒற்றைக்குரல்
வா.மு.கோமு -இவ்விடம் கப்பலோட்டக் கற்றுத்தரப்படும்
இரா.முருகவேள் - உலகம் திருச்செங்கோட்டை ஆய்வு செய்கிறது.
உமாமகேஸ்வரி -கார்த்திகாவின் அலங்கார மேஜை
 
இந்நான்கில் இரா. முருகவேளின் கதையிலும் வா.மு.கோமுவின் கதையிலும் அந்தக் கதையில் ‘ இது நிகழ்காலத்தைப் பேசுகிறது’ என்பதை எளிதாகக் கண்டு பிடிப்பதற்கான தகவல்கள் வெளிப்படையாக இருக்கின்றன. கதைக்கூற்று முறையே நிகழ்காலத்தில் இருந்தாலும் குறிப்பான தகவல்கள் வழி நிகழ்காலம் உறுதிப்படுத்தப்படுகிறது.

வா.மு.கோமுவின் கதையில் வரும் பத்திரிகையாளன் ராசு, ‘ஜெயமோகன்’ எழுத்தின் வாசகன் என்ற தகவல் வழியாக நிகழ்காலக் கதை என்பது புலப்படுகிறது. முருகவேளின் கதையிலும் பத்திரிகையாளனே கதைசொல்லி. அவனைச் சந்திக்கும் ஆபீஸ் பாய் எடுத்த டாகுமெண்டரி பற்றிய குறிப்பாக “ அல்ஜிஸிராவுக்கோ.. பிபிசிக்கோ காத்திருக்கட்டும்” என்ற குறிப்பின் வழி நிகழ்காலக் குறிப்பைக் கொண்டிருக்கிறது.

ஒரு ஞாயிற்றுக்கிழமைப் பொழுதை எங்காவது சென்று கழித்துவிட்டுத் திரும்பலாம் என்று வலிய அழைத்த சங்கவியின் உள்ளார்ந்த விருப்பத்தைப் புரிந்துகொள்ளாமல் அப்படியே திருப்பி அனுப்பி வைக்கிறான் ராசு. எழுதுவதில் ஆர்வமும் இலக்கியக்கூட்டங்களில் பங்கேற்கும் விருப்பமும் இருக்கும் சங்கவி, கட்டுப்பெட்டியான பெண்ணில்லை. அதனாலேயே எங்காவது போகலாம் என்ற முன்வைப்பை அவளே செய்கிறாள். அவளது அழைப்பை முழு ஈடுபாட்டோடு ஏற்காமல் தயாராகும் ராசு, தனது இருசக்கர வாகனத்தில் அணைக்கட்டுப் பகுதிக்குப் போகிறார்கள். கீழ்பவானி ஆத்துக் கால்வாயில் ஒன்னை மணிநேரம் குளிக்கிறார்கள். தண்ணிக்குள் உச்சா போவதைப் பற்றியெல்லாம் பேசிக்கொள்கிறார்கள். திரும்பி வந்து தான் தங்கியிருக்கும் அறையில் அவளையும் வைத்துக்கொண்டு டாஸ்மாக்கில் வாங்கிய சரக்கடிக்கிறான். தன்னோடு தனியாக அறையில் உட்கார்ந்து தண்ணியடிப்பதை வேடிக்கை பார்த்த சங்கவிக்கு ஒரு முத்தம் கூடத் தராமல் அனுப்பிவைத்ததைக் குறிப்பிட்டுச் சொல்லிவிட்டே போகிறாள். “நான் ஆம்பிளையா இருந்து என் ரூமுக்கு வந்திருந்தா உன்னை செஞ்சிருப்பன் டா! செய்யாம தாட்டி விட்டிருக்க மாட்டேன்!” என்பது அவள் கூற்று.
உதவும் மனப்பான்மையோடு தன்னறத்தைப் பின்பற்றும் ஒழுக்கவாதியாகவும் வெளிப்படும் அவனது பாத்திரமும் செயல்களும் ஜெயமோகன் ரசிகன் என்பதால் வரையறுக்கப்படுகிறது. இந்த வெளிப்பாடு விவாதிக்குரிய ஒன்றாக மாறும் வாய்ப்பும் உண்டு. அந்த விவாதத்தின் முடிவில் அவன் செயல் ஏற்கப்படலாம் அல்லது எள்ளலோடு ஒதுக்கப்படலாம். திருச்செங்கோட்டை ஆய்வு செய்வதான பாவனையில் உலகமயச் சூழலை விவாதிக்கும் முருகவேளின் கதையின் போக்கும், நிகழ்வுகளும் அதேவிதமான எள்ளல் நடையிலேயே நகர்கின்றது. கார்ப்பரேட் வணிகக்குழுமங்களின் தொழில் நோக்கம் , கள ஆய்வுப்பின்னணி போன்றவற்றை விவாதிக்கும் கதை. அதில் ஆசிரியரின் முடிவோடு ஒத்துப்போகும் தன்மையிலான சொல்முறையைக் கையாளாமல், தாவித்தாவிச் செல்லும் எள்ளல் நடையும் நகர்வுகளுமாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த நகர்வும் நடையும், தீவிரமான புனைவுத்தன்மையைக் குறைத்துக் கட்டுரைத்தன்மையையே தூக்கலாக்கியிருக்கின்றன.
 
இவ்விரண்டை மட்டுமே காலப்பின்னணியில் விவாதிக்கமுடியும். பெருமாள் முருகனின் கதையும் உமாமகேஸ்வரியின் கதையும் விவாதிக்கப்பட வேண்டிய மையங்கள் வேறானவை. அண்டைவீட்டுப் பகைமைக்கான அற்பக் காரணங்களை அதன் இயல்பில் பேசும் பெருமாள் முருகனின் கதை விவரிப்புச் செறிவுகொண்ட கதை என்ற வகையில் வாசித்து விலகிவிடக்கூடிய கதை. ஆனால் உமா மகேஸ்வரியின் கதை, ”மாங்கல்ய தோஷம்” என்ற ஜாதக நம்பிக்கையில் ஆண்வாசம் கிடைக்காத பெண் எடுக்கும் சிக்கலான காமம் சார்ந்த முடிவின் இயல்பைக் குற்றவுணர்வின்றி எழுதியிருக்கும் விதம் விரிவாகப் பேசவேண்டிய ஒன்று. தனியாக எழுதவேண்டும்.

இயற்பண்பியல் எழுத்தின் மாதிரி:

ஒரு புனைகதைக்குள் உருவாக்கப்படும் பாத்திரங்களே முரண்பாட்டின் எதிர்துருவங்களை முன்வைக்கின்றன. மு. குலசேகனின் இந்தக் கதையின் நிகழ்வெளி ஒரு கல்லூரி வளாகம். அதனை விவரிப்பதின் வழியாக அரசு உதவிபெறும் கல்லூரி என்பதையும், இசுலாமிய அமைப்பொன்றின் நிர்வாகத்தில் இயங்கும் கல்லூரி என்பதையும் வாசகர்களுக்கு உணர்த்துகின்றார். பாத்திரங்களாகப் பொதுநிலை ஆசிரிய, மாணவர்களோடு, பழங்குடிக் கிராமத்திலிருந்து வரும் மாணவர் ஒருவரும், தங்கள் கோரிக்கைக்காகப் போராடும் ஆசிரியர் சங்கத்தின் தீவிர உறுப்பினர் ஒருவரும், அதனைத் தடுத்து நிறுத்தித் தனது அதிகாரத்தை நிலைநாட்ட நினைக்கும் கல்லூரி முதல்வரும் முதன்மையான பாத்திரங்களாக முன் நிறுத்தப்படுகிறார்கள்.
 
ஏன் போராட்டம்? இந்தப் போராட்டம் எதற்கெதிரானது? அதன் நியாயங்கள் என்ன? போன்ற விசாரணைகளுக்குள் நுழையாமல் முன்வைக்கப்படும் பாத்திரங்களின் இயக்கம், உருவாகும் நெருக்கம், வெடிக்கும் விலகல் போன்றவற்றைக் கூடுதல் குறைவு இல்லாமல் எழுதிக்காட்டும் மொழிநடை வழியாக இயற்பண்பியல்வாத (Naturalistic)எழுத்துமுறையாகக் கதையின் நிகழ்வுகளை நகர்த்துகிறார். பாதிக்கப்பட்டோரின் பக்கம் நிற்கவேண்டிய கடப்பாடு கொண்ட நடப்பியல் எழுத்தாளராகத் தன்னை நினைத்துக்கொண்டால் உருவாக்கப்படும் பாத்திரங்களின் சார்பில் நின்று விவாதிக்கும் உரையாடல்களையும் மொழிநடையையும் கையாளத் தோன்றும். அதைத் தவிர்த்துத் தனது எழுத்தை இயற்பண்பியல் எழுத்தாகத் தரவேண்டும் என நினைத்ததால் கதைக்குள் பெரிய அலையொன்றை உருவாக்கும் காட்சிகளைக் கட்டமைக்காமல் அவற்றின் போக்கிலேயே விவரிப்புகளைச் செய்கிறார் மு.குலசேகரன்.

நிகழ்வின் பங்கேற்பாளராக இருந்து கிடைக்கும் சொந்த அனுபவத்தையோ, பங்கேற்காமல் வெளியிலிருந்து பார்த்த நிகழ்வுகளின் சாராம்சத்தையோ புனைகதையாக மாற்றும்பொழுது எழுத்தாளர்கள் தங்களின் நிலையை (Position ) எந்தத் தளத்தில் நிறுத்திக் கொள்வது என்பதைத் தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும். மிகக் குறைவாகவே எழுதும் மு.குலசேகரன் அலையடிப்பாக எந்த உணர்வெழுச்சியையும் காட்டாத இயற்பண்பியல் வாதத்தையே தேர்வுசெய்கிறார். அதன் வழியாக ஒவ்வொரு நிகழ்வுகளின்போதும் மனித இருப்பும் அவற்றில் வெளிப்படும் இன்பத்தின் களிப்புகளையும் துயரத்தின் சாயல்களையும் விரிக்க முடியும் என நம்புகிறார். பெரும் முரண்பாடாகப் பிளவொன்றை உருவாக்கிக் காட்ட வாய்ப்பிருந்தும் அதைக் கதைக்குள் உருவாக்காமல் எது நடக்கச் சாத்தியமோ அதை மட்டும் எழுதியிருப்பதின் மூலம் தனது எழுத்துகளின் அழகியல் இது என்பதைச் சொல்கிறார். அண்மைக்காலத்துப் புனைகதைக்குள் இவரது அழகியல்வாத வெளிப்பாடுகள் போல எழுதப்படும் கதைகள் மிகக்குறைவு. அந்த அழகியல் எப்படி இருக்கும் என்பதை அறிய இந்தமாதக் காலச்சுவடில் வந்துள்ள ‘ பேசும் வகுப்பறை’ கதையை வாசித்துப் பாருங்கள்

ஆஸ்திரேலியப் பின்னணியில் இருகதைகள்

’தான் பிறந்த கிராமமே உலகம்’ என்று கருதி வாழ்ந்த மனிதர்களில் பலர், தொடர்ந்து வாழ வேண்டும் என்ற ஆசையை நிறைவேற்றிக் கொள்ளும் பொருட்டு வெவ்வேறு இடங்களுக்கு இடம் பெயர்ந்து செல்கின்றனர். அவர்கள் செல்லும் புதிய வெளி அவர்களுக்குப் புதிர்கள் நிறைந்த ரகசியங்களையும், அதற்குரிய மனிதர்களையும் சந்திக்கும் வாய்ப்புகளை உருவாக்கித் தருகிறது. ஆனால் மனம் என்னவோ பழைய வெளியைச் சிக்கலற்றதாகக் கருதிக் கொண்டு அதை நினைத்தே அலைந்து கொண்டிருக்கிறது. புலம் பெயர்தல் என்னும் பெருநிகழ்வாக அறியப்படும் வடிவத்தின் இன்னொரு வடிவம் இடம் பெயர்தல்.

புதிய இடங்களுக்குள் பெயர்த்து வீசப்படும் மனிதர்கள் அவர்களின் அகம் சார்ந்தும், புதியதான புறவெளி சார்ந்தும் அடையும் மனநிலையையும் தத்தளிப்புகளையும் பேசும் கதைகள் தமிழில் தொடர்ந்து எழுதப்படுகின்றன. நேற்று வந்த அம்ருதாவில் அப்படியொரு கதையை எழுதியிருக்கிறார் நோயல் நடேசன். கதையின் தலைப்பு ‘ மனிதரில் எத்தனை நிறங்கள்’. ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரத்துக் குளிரின் பின்னணியில் எழுதப் பெற்றுள்ள இக்கதையை வாசித்து முடிக்கும்போது. அதே ஆஸ்திரேலியாவுக்கு அகதியாகச் சென்ற ஒருவனை விடாது துரத்தும் மனப்படிமத்தை - மனித உடலும் விலங்கு உடலும் கலந்த படிமத்தின் விரிவை எழுதிய ஆ.சி.கந்தராஜாவின் கதை ஒன்று காலச்சுவடுவில் வந்துள்ளதாக அவரது முகநூல் பக்கம் சொல்லியது. அவர் தந்த இணைப்பின் வழியாகச் சென்று வாசித்தபோது தமிழ்ப் புலம்பெயர் இலக்கியத்தின் எல்லைகளும் புனைகதை ரகசியங்களும் அடையும் விரிவை வாசிக்கமுடிந்தது. வாசிப்பதின் வழியாகப் புதிய உலகங்களுக்குள் இருக்கமுடியும் என்பதைத் தாண்டி வேறென்ன கிடைக்கப்போகிறது?.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

தணிக்கைத்துறை அரசியல்

நவீனத்துவமும் பாரதியும்