நினைவுகள் அழிவதில்லை

 முகநூலுக்குள் இப்போது வந்தவுடன் அந்த இருவரது மரணச்செய்திகள் முன்னிற்கின்றன. இருவரோடும் நெருக்கமான பழக்கமும் நினைவில் இருக்கும் நிகழ்வுகளும் இருக்கின்றன. முதலாமவர் நாடகவியலாளர் கே.எஸ்.ராஜேந்திரன்; இரண்டாமவர் நாவலாசியர் பா.விசாலம்

இந்திய அரங்கியலுக்குப் பல தளங்களில் பங்களிப்புச் செய்த கே எஸ் ராஜேந்திரன். புதுவை சங்கரதாஸ் சுவாமிகள் நாடகப்பள்ளிக்கு ஆசிரியராக வந்து எங்களோடு பணியாற்றும் ஆசையோடு இருந்தவர். புதுவைப்பல்கலைக்கழகம் அவரைத் தவறவிட்டது. அதனால் அவரது பங்களிப்பு முழுவதும் டெல்லியின் தேசிய நாடகப்பள்ளிக்குப் போய்விட்டது. அங்கு அரங்கியல் கற்கப்போன தமிழ்நாட்டு மாணவர்களுக்கு நல்லதொரு வழிகாட்டியாக இருந்தார் எனப் பலரும் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். சண்முகராஜாவின் ஏற்பாட்டில் தமிழ்நாட்டில் ஒருமாத கால அளவு நாடகப்பட்டறைகளை தேசிய நாடகப்பள்ளி நடத்த உதவியாக இருந்தார். மதுரையில் தெருக்கூத்தைக் கற்றுக்கொள்ள தேசிய நாடகப்பள்ளி மாணவர்களை அழைத்து வந்து ஒருமாதம் பயிற்சி அளித்தார். அப்பயிலரங்கில் பாரதியின் பாஞ்சாலி சபதத்தைக் கூத்துக்காட்சிகளாக மாற்றுவது குறித்து இரண்டு வகுப்புகளை நடத்தினேன். கூத்துப்பட்டறைக்காக அவர் இயக்கிய நாடகம் ஒன்றைப் பார்த்த நினைவுண்டு.
தமிழ்நாட்டிற்கு எளிய அரங்கை அறிமுகம் செய்த வீதி - அமைப்பின் ஆரம்பப்புள்ளிகளில் ஒருவர். தமிழ், இந்தி, ஆங்கிலம், சம்ஸ்க்ருதம் எனப் பல மொழிகளில் நாடகங்களை இயக்கியவர்; இந்திய மாநிலங்கள் பலவற்றிலும் அவரது மாணவர்கள் நாடகங்களை இயக்கியும், நாடகங்களில் நடித்தும் அவரது நினைவைத் தொடர்வார்கள். பல்கலைக்கழக மானியக்குழுவின் வேலையாகப் போன என்னைத் தேசிய நாடகப்பள்ளி வளாகத்திற்கு அழைத்துக் கொண்டு அதன் காலை நேரக் காட்சிகளை காட்டிப் பேசிக்கொண்டிருந்த நாள் நினைவில் இருக்கிறது.
****************

பா.விசாலம், புதுச்சேரி வாழ்க்கையில் அவரது அறிமுகமும் அன்பும் நினைவில் இருக்கும் ஒன்று. மெல்லக்கனவாய்ப் பழங்கதையாய் என்ற நாவலோடு அறிமுகமான நிகழ்வைக் கிரா. நினைவுகளில் விரிவாக எழுதியுள்ளேன்.
பாண்டிச்சேரிக்குக் கி.ரா. வந்தததால் எழுத்தில் மட்டுமே வாசித்திருந்த பல எழுத்தாளர்களை நேரில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. தமிழ்நாட்டுக்காரர்கள் என்றில்லாமல் அயல்நாட்டிலிருந்து வந்தவர்களைக் கூட அவரது வீட்டில் பார்த்திருக்கிறேன். அப்படி அறிமுகமான எழுத்தாளர்களில் இளையோரும் உண்டு. நடுத்தர வயதினரும் உண்டு. ஒரு சில முதியவர்களும் உண்டு. நான், பாண்டிச்சேரிக்குப் போனபோது எனது வயது 30. அதனால் இளையோர்களில் ஒருவன் எனக் கருதியிருந்தேன். நாற்பதிலிருந்து அறுபது தாண்டியவர்களை நடுத்தர வயதினராகவும் அறுபதுக்கும் மேல் கடந்தவர்களை முதிய எழுத்தாளராகவும் நினைத்துக் கொள்வேன். அவரைப் பார்க்க வருபவர்களில் நடுத்தரவயது மற்றும் மூத்தோர்கள்தான் அதிகம்.
ஒருநாள் அதுவரை நான் கேள்வியே படாத ஒரு எழுத்தாளரை எனக்கு அறிமுகம் செய்தார் கி.ரா. அது ஒரு இன்பகரமான நினைவு. அந்த எழுத்தாளரின் பெயர் பா.விசாலம். அவரது "மெல்லக்கனவாய்ப் பழங்கதையாய்" என்ற நாவலோடுதான் அறிமுகம் ஆனார். அறிமுகமான இடம் கி.ரா.வின் வீடு. நான் போனபோது கி.ரா.வின் சாய்வு நாற்காலிக்குப் பக்கத்தில் இருந்த சின்ன மேசையில் மெல்லக் கனவாய்ப் பழங்கதைகள் நாவலின் சில பிரதிகள் இருந்தன. அவருக்கு முன்னால் இரண்டுபேர் அமர்ந்திருந்தார்கள்.
அவர்களோடு பேசிக்கொண்டிருந்த கி.ரா. பேச்சை நிறுத்திவிட்டு, அந்த நாவலின் ஒரு பிரதியைக் கையிலெடுத்துக் கொண்டு, ‘இவரைத் தெரியுமா? என்று கேட்டார். அந்தக் கேள்வி எனக்கா? அவருக்கா? என்று புரியாமல் இருவரும் தலையை அசைத்தோம். பிறகு அவரே இருவரையும் இருவருக்கும் மாற்றிமாற்றி அறிமுகம் செய்தார். அவர் பெயர் பா.விசாலம்; அறுபது வயதை நெருங்கும்போது தனது முதல் நாவலோடு தமிழ் இலக்கியத்திற்குள் வந்திருக்கிறார். இவர் அவரது கணவர் ராஜு. பாண்டிச்சேரி தொழிற்பேட்டையில் குறுந்தொழில்கூடம் வைத்திருக்கும் தொழில் அதிபர் என்றார். சுந்தரராமசாமிக்கு நண்பர்கள் என்று சொல்லிவிட்டு ‘ நாகர்கோயில்காரங்க;நாவலைப் படிச்சுப் பாருங்கய்யா?’ என்ற சொன்ன போது பா.விசாலம் தன்கைப்பட அன்புடன் என்று எழுதிக் கையெழுத்துப் போட்டுக் கொடுத்தார்.
விசாலத்தின் கணவர் ராஜுவைச் சிலதடவை பார்த்ததாகத்தோன்றியது. அவரையும் மதியழகன் தான் அறிமுகம் செய்திருந்தார். நான் பல்கலைக்கழகம் போவதற்கு நிற்கும் குறிஞ்சி நகர் பேருந்து நிறுத்தத்தில் அவரைச் சந்தித்தது ஞாபகம் வந்தது. அதற்குப் பின்பக்கம் இருக்கும் தாகூர் நகரில் அவரது வீடு என்றும் சொல்லியிருந்தார். புதுவை இலாசுப்பேட்டைப் பகுதி ஒரு தொகுதி. அத்தொகுதிக்குள் இருக்கும் நகர்களின் பெயர்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதமாக ஆளுமைகளின் பெயர்களாக - ராஜாஜி, தாகூர், லெனின், இந்திரா என இருக்கும். பண்டைத்தமிழ் இலக்கியத்திலிருந்து திணைப்பெயர்கள் கொண்ட -குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் நகர்களும் உண்டு. ஔவை, பாரதியார், குமரகுருபர் எனப் புலவர்களின் பெயர்களையும் பார்க்காலம். நகர் என்று இருந்தாலும் அதற்குள் இரண்டிலிருந்து ஐந்து தெருக்களே இருக்க வாய்ப்புண்டு.
விசாலத்தின் மெல்லக்கனவாய்ப் பழங்கதையாய் ஒருவித லட்சியத்தன்மை கொண்ட ஒரு பெண்ணின் கதை. நாகர்கோவில் பின்னணியில் எழுதப்பெற்ற நாவல். ஆனால் வட்டார மொழியைக் கைவிட்டுவிட்டு இடப்பின்னணியில் பாத்திரங்களை உலாவ விட்டிருந்தார். இளமையின் வேகமும் லட்சியமும் கொண்ட பெண்ணின் பிடிவாதமான காதலும், இடதுசாரி இயக்கத்தலைவர்களோடு பழகிய பழக்கமும் நிகழ்வுகளாக விரியும் அந்த நாவலை ஒருவிதத் தன்வரலாற்று நாவல் என்று வகைப்படுத்தலாம்.
நாவலை வாசித்துவிட்டு அவர்களது தாகூர் நகர் வீட்டுக்குப் போய் மாலைநேரக் காபியோடு விரிவாகப் பேசிக்கொண்டிருந்தேன். ஊடகம் இதழில் எழுத நினைத்தேன். ஆனால் அது நாவல் போன்றவற்றைக் கவனத்தில் கொள்ளாத இதழ். அப்போது அவ்வளவு பிரபலம் இல்லை என்பதால் நான் எழுதி அனுப்பிய விமரிசனம் வரவில்லை. விசாலத்தின் கணவர் ராஜூ இலக்கியம், சமூக இயக்கம் என இயங்கும் பலருக்கும் நெருக்கமானவர். கேட்காமலே நன்கொடைகள் வழங்கி ஆதரவு தருவார். மெல்லக்கனவாய்.. நாவலின் லட்சிய இடதுசாரி அவரே என்று தோன்றியது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்