தேர்வுகளும் தேர்தல்களும் - முடிவுகளற்ற விளையாட்டு.

முரணின் பின்னணியைப் பற்றிய விவாதம் பின் -நவீனத்துவ விமரிசனத்தில் முக்கியமானது.நவீனத்துவவாதிகள் கடந்த காலத்தை அழித்து விட முயல்கின்றனர். ஆனால் பின் -நவீனத்துவமோ கடந்த காலத்திற்குள் மாற்றுப் பார்வையுடன் பயணம் செய்ய வேண்டும் எனக்கருதுகிறது.

 ஒருவருக்கு அவரது வேலை சார்ந்து பதவி உயர்வு அளிக்கும் போது அவரது பணிகளைத் துறைசார்ந்த மதிப்பீட்டுக் குழுக்கள் மதிப்பீடு செய்கின்றன. அக்குழுக்களின் பரிந்துரைக்குப் பின் அவருடைய பதவி உயர்வு உறுதி செய்யப்படுகிறது. குறிப்பாக நான் பணியாற்றிய கல்வித்துறையில் இந்த மதிப்பீட்டிற்கு விதி விலக்குகளே கிடையாது. ஒவ்வொரு பதவி உயர்வும் மதிப்பீட்டறிக்கைக்குப் பின்னரே கிடைக்கின்றன. அம்மதிப்பீட்டு நடைமுறை சரியாக நடக்கிறதா.? என்று கேட்டால் அதற்கான பதில் உறுதியாகச் சொல்ல முடியாது.

 மாணவர்களுக்குப் பாடம் நடத்தித் தேர்ச்சி அடையச் செய்யும் ஆசிரியர்களுக்கு எதற்குத் தேர்வும் மதிப்பீடும் என முதலில் கேட்கப்பட்டதுண்டு.  “மாதா பிதா குரு தெய்வம்” என்ற மதிப்பீடுகள் இன்னும் இருப்பதாக நம்பியதின் விளைவாகக் கேள்விகளுக்கு அப்பாற்பட்ட பணியாக ஆசிரியப் பணி கருதப்பட்ட காலம் இப்போது இல்லை.  கல்விப் பணியைச் சேவையாகக் கருதிச் செய்து வந்த  நிலைமைகள் மாறி விட்டன. ஆசிரியப் பணியும் இன்று சம்பளத்திற்காகச் செய்யப்படும் வேலை அவ்வளவு தான்.  எனவே ஆசிரியத் தொழிலுக்கெனப் புனிதங்கள் இருப்பதாகச் சொல்லிக் கொள்ள பெரும்பாலும் யாரும் முன் வருவதில்லை. வேலை நேரம், நேரத்திற்கேற்ற சம்பளம், பணிப்பாதுகாப்பு, வாரிசுக்கு உரிமை என எல்லாத் துறைகளிலும் இருக்கும் பணி சார்ந்த உரிமைகளை ஆசிரியர்களது சங்கங்களும் கோரிப் பெற்றபின் ஆசிரியப் பணியின் புனிதங்கள் குறித்துப் பேசிக் கொண்டிருப்பதில் அர்த்தம் எங்கே இருக்கிறது.  அத்துடன் மதிப்பீட்டுக்குப் பின் பதவி உயர்வு சாத்தியம் என்ற நிலையில் மதிப்பீட்டு அறிக்கையை எதிர்பார்த்துக் காத்திருத்தல் தானே நடக்கும். தங்களது பணிகளை மதிப்பீடு செய்வதை ஆசிரியர்களும் அவர்களுடைய சங்கங்களும் இப்படித்தான் ஒத்துக் கொண்டார்கள்.


ஆசிரியர்களை அவர்களுடைய துறை சார்ந்த மதிப்பீடுகளோடு  வேறு விதமான மதிப்பீட்டு முறை ஒன்றையும் உயர்கல்விக்குப் பொறுப்பான நிறுவனங்கள் வலியுறுத்தி வருகின்றன. ஆசிரியர்களை மாணவர்களும் மதிப்பீடு செய்ய வேண்டும் என்ற  பரிந்துரையை உயர்கல்வித் துறைக்குப் பொருப்புடைய பல்கலைக்கழக மானியக்குழு ஒவ்வொரு சம்பள விகித அறிமுகத்தின் போதும் வலியுறுத்தி வருகிறது. கல்லூரி மற்றும் பல்கலைக்கழக ஆசிரியர்களுக்கு ஊதிய விகிதத்தை மாற்றி அமைக்கும் பல்கலைக்கழக மானியக்குழு மாணவர்களைக் கொண்டு ஆசிரியர்களை மதிப்பிடும் வழிமுறைகளைக் கூட உருவாக்கித் தந்துள்ளது. ஆனால் அவ்வழி முறைகள் நடைமுறைப் படுத்தப்படுவதுதான் இல்லை. 


பொதுவாக ஒவ்வொருவரையும் மதிப்பீடு செய்தல் என்பது எதற்காக? இந்தக் கேள்வியைக் கேட்டால்,  மதிப்பீடு செய்தலின் நோக்கம் முன்னேற்றுவது என ஒரு பதில் உடனடியாகக் கிடைக்கலாம். தனது உறுப்பினர்களின் நலனில் அக்கறை கொண்ட எந்த ஒரு நிறுவனமும் அவர்களை மேல்நிலைக்குக் கொண்டு செல்லவே விரும்புகிறது. அப்படியான விருப்பத்தினைச் செய்யும் போது எந்த அடிப்படையில் அடுத்த கட்டத்திற்கு நகர்த்துவது என்ற கேள்வி எழுகிறது. அத்தகைய கேள்வியின் விளைவே மதிப்பீட்டின் தோற்றம். கல்விச்சாலைகளில் ஒவ்வோர் ஆண்டும் மாணாக்கரை அடுத்த வகுப்பிற்கு உயர்த்த வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்ட போது உண்டாக்கப் பட்ட முறை தான் தேர்வு நடத்தி மதிப்பெண் வழங்கித் தேர்ச்சி அளிக்கும் முறை. இந்த நடைமுறையைத் தொடர்ந்து பின்பற்றி வரும் நாம் மதிப்பீட்டின் பலன் முன்னேற்றம் என்பதாகவே புரிந்து வைத்திருக்கிறோம். 


உண்மையில் மதிப்பீட்டின் நோக்கம் அது மட்டும் அல்ல.எல்லாச் செயல்பாடுகளுக்கும் பல விதமான நோக்கங்களும் காரணங்களும் இருப்பது போல மதிப்பீட்டிற்கும் பல காரணங்கள் இருக்கின்றன. அவற்றில் சில காரணங்கள் நேர்மறையானவை; பல எதிர்மறையானவை என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். முன்னேற்றம் என்பதற்குப் பதிலாகக் கண்காணித்தலே மதிப்பீட்டின் நோக்கம் என நவீனச் சிந்தனையான அமைப்பியல் சொல்கிறது. ஒவ்வொரு அமைப்பும் தனது துணை அமைப்பு களையும், அதன் உறுப்பினர்களையும் கண்காணிக்க வைத்திருக்கும் நடைமுறைத் தந்திரம் தான் மதிப்பிடல் என்று சொல்கிறார்கள் அமைப்பியல் வாதிகள். கல்விச்சாலைகளைக் காவல் நிலையங்கள், சிறைச்சாலைகள், மனநோய் மருத்துவமனைகள் ஆகியவற்றோடு ஒப்பிட்டுப் பேசும் மிசைல் ஃபூக்கோ போன்ற பின்னை அமைப்பியலாளர்கள், தேர்வுகளைக் கண்காணிப்பின் வடிவங்களாகவே வருணிக்கின்றனர். முன்பெல்லாம் ஆண்டிற்கு ஒரு முறை தேர்வு நடத்திய நிலையை மாற்றிக் கொண்டு கல்வி நிலையங்கள் ஓராண்டில் பல தடவை தேர்வுகளை நடத்துவது என்பது கண்காணிப்பின் இறுக்கத்தை அதிகப் படுத்தும் நோக்கத்தில் தான் என்கிறார்கள்.


நமது குழந்தைகளையும் பிள்ளைகளையும் இளையோர்களையும் கல்வி நிறுவனங்களுக்கு அனுப்புவது அறிவையும் சிந்தனையையும் சுதந்திரமாகத் தேடிக் கொள்ளவா? நடைமுறைச் சமூகத்திற்கேற்றபடி தகவமைக்கவா? என்ற கேள்விகளுக்கு அமைப்பியலாளர்கள் தகவமைக்கும் நோக்கம் தான் எனப் பதில் அளிக்கிறார்கள். மழலையர் பள்ளி தொடங்கிப் பல்கலைக்கழகக் கல்வி வரை விதம்விதமான தேர்வுகள் நடந்து  கொண்டே இருக்கின்றன. ஆண்டிற்கு ஒரு முறை தேர்வு என்ற நிலையை மாற்றி அரையாண்டுத் தேர்வு,   காலாண்டுத் தேர்வு, மாதத்தேர்வு என நகர்ந்து வாரத்தேர்வுகள், தினசரித் தேர்வுகள் என்பது வரை வந்து விட்டன .


தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டியவர்கள் நமது குழந்தைகள் எனக் கருதும் பெற்றோர்கள், குடும்ப எல்லைக்குள் அதைச் செய்யும் வழி தெரியாததால், அந்தப் பொறுப்பைக் கல்வி நிறுவனங்களுக்குக் கையளித்து விடுகிறார்கள். அதிகமான தேர்வுகளை நடத்தும் பள்ளிகள், அதிகமாகக் கண்காணிக்கின்றன என்பதால் , அதிகமானக் கல்விக் கட்டணத்தைச் செலுத்தி விட்டு நிம்மதியாகத் தங்கள் வேலையைச் செய்து கொண்டிருக்கலாம் எனக் கருதுகிறார்கள்.


ஒவ்வொரு ஆண்டும் மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கி அடுத்த வகுப்பிற்கு அனுப்புவது என்ற நடைமுறை, கல்விச் சாலைகளில் மட்டுமே இருப்பதாக நினைத்துக் கொள்ள வேண்டாம். நேரடியாக இல்லையென்றாலும்  பொது வெளியில் பல்வேறு விதமான மதிப்பீட்டு முறைகள்  மறைமுகமாகச் செயல்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. பேருந்து நிறுத்தத்தில் நின்று எதிர் பால் நபர்களுக்கு மதிப்பெண் வழங்கும் யுவதியும் இளைஞனும் தேர்வு செய்வதை மட்டும் நோக்கமாகக் கொண்டவர்கள். திரை அரங்கிற்கு வரும் திரைப்படத்திற்கு பத்திரிகை வழங்கும் மதிப்பெண் பார்வையாளனுக்கு உதவும் நோக்கம் கொண்ட ஒன்று. திரைப்படத் துறை என்பதாக மட்டும் அல்லாமல், நமது ஊடகங்கள் தாங்கள் வழங்கும் மதிப்பீடுகள் என்னும் மதிப்பெண்கள் மூலம் அனைத்துத் தரப்பினரையும் கண்காணிக்கும் அதிகாரம் இருப்பதாகக் கருதிக் கொள்கின்றன. இந்தியாவில் ஒரு பத்திரிகை ஒவ்வோராண்டும் நமது மத்திய அமைச்சரவையில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் மதிப்பெண்களை வழங்கித் தரப் பட்டியலும் வழங்குவதை பருண்மையான வெளிப்பாடாகச் சொல்லலாம்.  மாநிலத்தின் முதல் அமைச்சர் தனது அமைச்சரவைச் சகாக்களுக்கு அளிக்கும் மதிப்பெண்கள் ஒற்றை நோக்கம் கொண்டவை அல்ல. பாராட்டுதல், கண்காணித்தல், மிரட்டுதல் எனப் பல நோக்கங்கள் கொண்டவை என்பதை வெளிப்படையாகச் சொல்ல வேண்டியது இல்லை.


ஆசிரியர்கள் கல்விச் சாலைகளில் தங்கள் மாணாக்கர்களை மதிப்பெண்கள் மூலம் தேர்ச்சி அளித்தல், கண்காணித்தல் என இருவிதமாகச் செயல் படுவது போல மாணவர்கள் அளிக்கும் மதிப்பெண் மூலமே ஆசிரியர்களின் பணி உயர்வும், பாதுகாப்பும் இருக்கும் என்றால் என்ன நடக்கும்? கண்காணிப்பை ஏற்றுக் கொள்ளும் மாணவர்கள் வகுப்பறையில் அமைதியாக அமர்ந்திருக்கலாம். தேர்ச்சிக்குத் தேவையான மதிப்பெண்ணை இந்த மாணவன் வழங்க மாட்டான் எனத் தெரிந்தால், அவனை வகுப்பறையை விட்டு ஆசிரியர் வெளியேற்றவும் செய்யலாம்.


இந்தியாவில் நாடாளுமன்றம், சட்டமன்றம், உள்ளூர் மன்றங்கள் எனப் பலவிதமான தேர்தல் நடைமுறைகள் இருக்கின்றன. அவற்றில் பொதுத்தேர்தல்களும் இடைத் தேர்தல்களும்   நடைபெறுவதுண்டு.  ஒவ்வொரு அமைப்புக்கும்  ஐந்தாண்டுக்கு முறை நமது பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் முறை மதிப்பீடு செய்யும் முறைதானா? அதன் வழியே தங்களது பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் வாக்காளர்கள் கண்காணிப்புச் செய்கின்றனரா? மதிப்பிடுதலும் கண்காணிப்பதும் வாக்காளர்கள் கையில் இருக்கிறது என்றால் முன்னேற்றம் அளிக்கும் அதிகாரமும் அவர்கள் கையில் தானே இருக்க வேண்டும். வாக்காளர்களின் ஒப்புதலுடன் பணியாற்றும் பொறுப்பை ஏற்கும் பிரதிநிதிகள், வாக்காளர்களை முன்னேற்றும் திட்டங்களைத் தீட்டும் அதிகாரம் கொண்டவர்களாக மாறுவது எப்படி? அளிக்கும் வாக்கு அங்கீகாரமா? அதிகாரத்தைக் கைமாற்றும் ஒப்புதலா? அந்த ஒப்புதலை ஐந்தாண்டுக் காலம் என வரையறை செய்ததில் தான் ஜனநாயகத்தின் உயிர் ஒளிந்து கொண்டு இருக்கிறது எனச் சொல்லலாமா? இப்படிப் பல கேள்விகளை நாம் கேட்டுக் கொண்டே போகலாம்.


பொதுவாக ஆளுங்கட்சிகள் தாங்கள் செய்த பணிகளுக்கு உரிய மதிப்பெண்கள் வழங்கித் திரும்பவும் பணியாற்றிட வாய்ப்பளியுங்கள் எனக் கேட்பதன் மூலம் அவை எழுதிய தேர்வுகளுக்கான மதிப்பெண் களைக் கோருகின்றன என்றே சொல்ல வேண்டும். எதிர்க்கட்சிகளோ தாங்களும் தேர்வு எழுதத் தயாராக இருப்பதாகவும் அதற்கொரு வாய்ப்பைக் கொடுங்கள் எனக் கேட்கின்றன. அளிப்பதும் அளிக்காததும் வாக்காளர்கள் கையில் இருக்கிறது என்பது என்னவோ உண்மை தான். ஆனால் யாராவது ஒருவருக்கு அந்த வாய்ப்பை அளிக்கத்தான் வேண்டும் என்ற கட்டாயம் தான் இந்தத் தேர்தல் என்னும் மதிப்பீட்டில் இருக்கும் பெரிய சிக்கல் என்று தோன்றுகிறது.

நெருக்கடி மிகுந்த தேர்தல்களில் ஓட்டளிக்கும் நாள் அதிரடிக் குழப்பத்தை உண்டாக்கி விடுகிறது என்பதை ஒவ்வொருவரும் புரிந்து கொள்வதற்குள் தேர்தல் முடிவுகள் வெளி வந்து விடுகின்றன. வெளியாகும் தேர்தல் முடிவுகள் பலநேரங்களில் குழப்பமாகவே இருந்தாலும் பின் நவீனத்துவ மனநிலைப்படிக் குழப்பத்திலிருந்து தெளிவும் கிடைத்து விடுவதும் சாத்தியமாக இருக்கிறது. 

இப்படி எழுதும் நான் ரொம்பவும் குழப்பத்தில் இருப்பதாகப் பலருக்கும் தோன்றலாம். ஆனால் வெற்றி அதன் தொடர்ச்சியான அதிகாரத்தைக் கைப்பற்றுதல், அதிகாரத்தில் கிடைக்கும் பங்கிற்காக முன் வைத்த எல்லா நெறிகளையும், கொள்கைகளையும், நோக்கங்களையும் உடனடியாகக் கைவிடத் தயாராகும் அரசியல் வாதிகளை வெற்றிக்குப் பின்னால் தொடர்ந்து சந்தித்துக் கொண்டிருக்கிறோம்.   தேர்தலுக்கு முன்னால் அரசியல்வாதிகள் செய்த வினைகள் மறந்துபோகும்.  ஒருவர் இன்னொருவர் மீது வீசிய  செருப்புகளுக்குப் பின்னால் என்ன நோக்கம் இருந்தது என்ற கேள்வியை ஒருவரும் கேட்பதில்லை. அதனால் வெற்றிக்குப் பின்னால் கையை வெட்டலாம்; நாக்கை அறுக்கலாம்; ரோலரை ஏற்றிக் கொள்ளலாம் என்ற ஆவேசமான/ வெறுப்பை உமிழும் நெருப்புப் பேச்சுக்களும் அர்த்தம் இழந்து வெற்று வார்த்தைகளாக ஆகி விடக் கூடும்.


எல்லாவகையான பொதுத்தேர்தல்களும்   தமிழகத்தைப் பொறுத்தவரையில் அரசமைப்பு நிறுவனங்களை உருவாக்குவதற்கான தேர்தல்கள் அல்ல. அதே நேரத்தில் அதிகாரத்தில் பங்கை உறுதி செய்யும் தேர்தல்கள் என்பதும் உண்மை. கட்சிகள் பெறும் உறுப்பினர்கள் எண்ணிக்கை எவ்வளவு முக்கியமோ அதைவிடக் கூடுதல் முக்கியம் அக்கட்சிகள் பெறும் வாக்கு சதவீதமும். இந்தத் தேர்தலில் பெறும் வாக்கு சதவீதம் அடுத்துவரும் வரப்போகும்   தேர்தல்களின் அதிகாரப்போட்டிக்கு அச்சாரம் என்பதும் கவனிக்க வேண்டிய ஒன்றாக இருக்கிறது. ஒருவரும் வெற்றி பெறப்போவதில்லை என்று தெரிந்த பிறகும் பெறப்போகும் வாக்கு சதவீதத்திற்காகத் தனித்து நிற்கும் கட்சிகளின் கவனம் எல்லாம் எத்தனை சதவீதம் என்பதில் இருக்கப்போகிறது. பா.ம.க., தே. மு .தி.க, அமமுக, மக்கள் நீதிமய்யம் போன்றன எப்போதும் இந்த நோக்கத்தோடுதான் தேர்தலை எதிர்கொள்கின்றன. இந்தப் போட்டியில் தேசியக் கட்சியான பா.ஜ.க. ஆர்வத்தோடு இறங்கியிருக்கிறது. அது பெறப்போகும் வாக்கு சதவீதம் அடுத்த நாடாளுமன்றத்தேர்தலில் அதன் கூட்டணிக்குள் அதன் இடத்தை உறுதி செய்யும் நோக்கம் கொண்ட து. அந்தக் கூட்டணித் தலைமையைக் கைப்பற்றும் ஆசை கொண்டது என்றும் சொல்லலாம்.   

தேர்வுக்குத் தயாராகும் வேட்பாளர்கள் வெற்றிக்குப் பின்னால் மதிப்பீட்டாளர்களாக மாறுவதை நவீனத்துவம் தெளிவு என வரையறை செய்துவிட்டு ஒதுங்கிக் கொள்ளும். ஆனால்   பின் நவீனத்துவம் குழப்பம் என்று வரையறை செய்து தெளிவுக்கான போட்டிக்களனைக் குறித்துப் புதிய சொல்லாடல்களை உருவாக்கும். ஒருவகையில் முடிவுகளற்ற விளையாட்டை விளையாடிக்கொண்டே இருக்க வேண்டும்.

 


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

தணிக்கைத்துறை அரசியல்

நவீனத்துவமும் பாரதியும்