தமிழியல் ஆய்வு என்னும் பன்முகம்

தமிழ் ஆய்வு, இயல் என்னும் சொல்லை இடையில் இணைத்துக்கொண்டு தமிழியல் ஆய்வு என்னும் சொற்சேர்க்கை செய்ய நினைக்கும்போது அதன் தளங்கள் பலதரப்பட்டனவாக, அதன் நிலைகள் பலபரப்புகளில் விரிவனவாக ஆகின்றன. தமிழ் பற்றிப் பேசும் ஒரு நிறுவனம் எப்போது தனது பேச்சுகளை விரிக்க நினைக்கின்றதோ, அப்போது அந்நிறுவனச் சொல்லாடல்கள் தமிழ்ச் சொல்லாடல்களாக இல்லாமல் தமிழியல் சொல்லாடல்களாக மாறுகின்றன.
நேற்று -27-07-2018- சென்னையின் புகழ்பெற்ற கிறித்தவக் கல்லூரியின் தமிழ்த்துறை - பரிதிமாற்கலைஞர், மறைமலை அடிகள், ஆலாலசுந்தரனார் போன்ற தமிழின் நிலைபேற்றை நிறுவிய ஆளுமைகள் பணியாற்றிய - அந்தத்துறையின் தமிழியல் ஆய்வு மன்றத்தின் இந்தக் கல்வி ஆண்டு நிகழ்வுகளைத் தொடங்கி வைக்கும் வாய்ப்பு கிடைத்தது. தொடங்கிவைத்து நான் பேசிய தலைப்பு: திறனாய்வு என்னும் அறிவியல் .
இளங்கலை, முதுகலை, ஆய்வியல் நிறைஞர், முனைவர் படிப்புகள் என முழுமையான துறையில் 150 -க்கும் அதிகமான மாணவர்களிடம் பேசிய பேச்சைக் கேட்டார்கள். பேசி முடித்தபின் கேள்விகளும் கேட்டனர்.அந்தக் கேள்விகளுக்குச் சொன்ன பதில்கள் இன்னும் விரிவாகப் பேசவேண்டிய பொருண்மைகள். ஆழமாகவும் நுட்பமாகவும் செய்யப்பட்ட ஆய்வுகள் ஏன் பாடத்திட்டத்திற்குள் வராமல் இருக்கின்றன எனக் கேட்டார் ஒருவர்.
தமிழ்க் கல்வியைத் தரும் நிறுவனங்கள் நகராமல்- நவீனமாகாமல்- பழைய மாவில் புளிச்ச தோசை சுடும் வேலையை விரும்பிச் செய்கின்றன என்று மட்டும்தான் சொல்ல முடிகிறது. மகிழ்ச்சியான நாளொன்றாக பகல் நகர்ந்தது.
அந்தப் பேச்சை அந்தக்கல்லூரியின் இளம் ஆசிரியர் சுருக்கித் தந்துள்ளார். நானே முகநூல் பதிவுக்காக எழுதியிருந்தால்கூட இப்படிக்கச்சிதமாக எழுதியிருக்க மாட்டேன். அவர் எழுதியதையே இங்கே பிரதியெடுத்துத்தருகிறேன். நன்றி சுடர்விழி.
திறனாய்வு என்னும் அறிவியல்
=============================
இன்று எம் கல்லூரியின் தமிழியல் ஆய்வு மன்றத்தைத் தொடங்கி வைத்து "திறனாய்வு என்னும் அறிவியல்" தலைப்பில் உரை நிகழ்த்தி மாணவர்களின் சிந்தனைத் திறப்பிற்கு வித்திட்டுச் சென்றுள்ளார்.பேரா.அ.ராமசாமி அவர்கள். திறனாய்வு என்பது கலை என்று சொல்லியே பழக்கப்பட்ட நம் மரபார்ந்த எண்ணத்தைத் தன் அடுக்கடுக்கான , நியாயமான வாதங்களால் தகர்த்து அறிவியலோடு அது பெரிதும் இயைந்து நிற்கும் தன்மையை மிக நுட்பமாகவும் ஆழமாகவும் பதிவு செய்தார்.
கலை என்பது எழுத்தாகவோ காண்பதாகவோ கேட்பதாகவோ அல்லது இரண்டும் கலந்ததாகவோ இருக்க வேண்டும். அவை வெளிப்படுத்தும் உணர்வுகள் இன்பியலாகவோ துன்பியலாகவோ நமக்கு கடத்தப்பட வேண்டும். ஆனால் இத்தகைய அம்சங்களுக்குள் பொருந்தாத திறனாய்வை எப்படி கலையாகப் பார்க்க முடியும் என்று , கலைக்கும் திறனாய்வுக்கும் உள்ள பொருத்தப்பாடற்ற தன்மையை விளக்குவதாக தன் உரையின் முதல் பகுதியை அமைத்துக் கொண்டார்.
அடுத்து கல்விப்புலத்தின் அடிப்படை பிரிவுகளான அறிவியல் புலம்,மொழிப்புலம், சமூக அறிவியல் புலம் ஆகியவற்றுள் அறிவியல் எவ்வாறு பேசப்படுகிறது என்பதை விளக்கினார்., ஏற்கனவே உலகில் இருப்பதைப் பற்றி பேசுவதும் கண்ணுக்கு வெளிப்படுவனவற்றைப் பேசுவதும்,இவ்வாறு இருப்பதும் வெளிப்படுவதும் மனிதர்க்கு எவ்வாறு பயன்படும் என்பனவற்றைப் பேசுவதும் தான் அறிவியல் என்பதைப் பல்வேறு சான்றுகளுடன் தெளிவுப்படுத்துவதை உரையின் இரண்டாம் பகுதியாக அமைத்துக்கொண்டார்.
திறனாய்வு என்பது கலையல்ல;ஆனால் கலைகளைப் பற்றி பேசுகிறது.
திறனாய்வு, அரிஸ்டாட்டில்,தொல்காப்பியர்,பரதர் ஆகியோரின் அடிப்படைக் கோட்பாடுகளை வைத்துக் கொண்டுள்ளது,
எல்லாவற்றையும் விளக்குவதற்கான திறனாய்வு முறைகளை அமைத்துக் கொண்டுள்ளது
இலக்கிய உருவாக்கத்தைப் பற்றிய, அதன் பயன்பாடுகளைப் பற்றிய அணுகுமுறைகளைக் கொண்டிருக்கிறது.
எனவே இத்தகைய அறிவியல் ஆய்வு நடைமுறையைக் கொண்டிருப்பதால் திறனாய்வு எனபது அறிவியலே என்று என்று கூறி தன் உரையை நிறைவு செய்தார்.
சுவாரஸ்யமான ஒரு கூடுதல் தகவல் என்னவென்றால்,பேரா.அ.ராமசாமி அவர்கள் "திறனாய்வுக் கலை" என்னும் நூல் எழுதிய தி.சு.நடராசன் அவர்களின் மாணவர்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்