மகளிரியலின் துன்பியல் சித்திரம் : பாவையின் திறவி


நிகழ்காலத்தில் பெண்ணியம் என்னும் கலைச்சொல் முழுமையான அரசியல் கலைச்சொல்லாக மாறிவிட்டது. இப்படியொரு அரசியல் கலைச்சொல்லை உருவாக்கித் தங்களின் விடுதலை அரசியலைப் பேசுவதற்குப் பெண்ணிய இயக்கங்கள் கடந்து வந்த நடைமுறைத் தடைகளும் கருத்தியல் முரண்பாடுகளும் பற்பல. மனிதத் தன்னிலையின் அடையாளமாக- பரிமாணங்களாகச் சொல்லப்படும் உடலியல், சமூகவியல், உளவியல் கூறுகள் ஒவ்வொன்றிலும் முன்வைக்கப்பட்ட விவாதங்களை வென்றே பெண்கள் கடந்து வந்துள்ளார்கள். உலகிலுள்ள எல்லாப் பெண்களும் அப்படிக் கடந்துவந்துவிட்டார்கள் என்று தடாலடியாக ஒருவர் மறுக்கலாம். ஆனால் பெண்களால் முடியாத பரப்புகள் இருக்கின்றன எனச் சொல்லப்பட்ட ஒவ்வொன்றிலும் தங்களை அடையாளப்படுத்திக் கொண்ட முன்மாதிரிப் பெண்களை உலகம் பரவலாகக் கண்டுவிட்டது. 

‘கனரக வாகனங்களை நீண்ட தூரம் ஓட்டிச்செல்லும் ஓட்டுநர் போன்ற வேலைகளை உடல் வலிமையால் மட்டுமே செய்துகாட்ட முடியும்; அதையெல்லாம் செய்துவிடக்கூடிய உடல் வலிமை பெண்களுக்கில்லை’ என ஒதுக்கிய வேலைகளைப் போட்டியிட்டுக் கேட்டுப் பெற்று தங்களை நிலைநிறுத்தியிருக்கிறார்கள் பெண்கள். இப்போதும் பெரும் எடைகள் கொண்ட வாகனங்களை ஓட்டிச் செல்லும் வாகன ஓட்டிகள் போட்டியில் இருக்கிறார்கள். புத்திசாலித்தனம் தேவைப்படும் உயிரி – தொழில் நுட்பவியல், வானியல், கடலியல் ஆய்வுகளை மேற்கொள்ளும் அறிவியல் ஆய்வுக்கூடங்களில் பெண்கள் நிரம்பியிருக்கிறார்கள். அண்மையில் சந்திரனின் பரப்பில் இறக்குவதற்காக விக்ரம் லாண்டர் என்னும் எந்திர மனிதனைச் செலுத்திய சந்திரயான் திட்டத்தில் ஆண்களுக்கு இணையாகப் பங்களிப்பு செய்த பெண்களை நாமறிவோம். மேலாண்மையியல் கல்வியில் தேர்ச்சிபெற்றுப் பன்னாட்டுக் குழுமங்களின் இயக்குநர்களாகவும் தலைவர்களாகவும் இருக்கும் பெண்களையும் நிகழ்காலம் காட்டிக் கொண்டிருக்கிறது. திரைப்படம், தொலைக்காட்சி, அரங்கியல், இலக்கியம் எனக் கலை இலக்கியத் துறைகளில் பெண்களோடு ஆண்கள்தான் போட்டிபோட வேண்டிய நெருக்கடியை உருவாக்கியிருக்கிறார்கள். நிகழ்கால அரசியல், சமூகவியல் தளங்களில் தலைமைப் பொறுப்புகளை ஏற்று நடத்தும் பெண்களுக்கும் எடுத்துக்காட்டுகளைத் தேடும் காலம் முடிந்து பல பத்தாண்டுகள் ஆகிவிட்டன.



இந்தச் சாதனைகளைச் செய்ததின் பின்னணியில் பெண்ணியம் என்னும் அரசியல் கலைச்சொல் இருந்தது என்பதே பெண்ணிய இயக்கவரலாறு. எதிலும் பெண்கள் தனித்தியங்கும் சாத்தியங்களோடு இருக்கிறார்கள் என்பதை முன்வைத்த புரட்சிகரப் பெண்ணியம் (Radical Feminism) அண்மைக்காலச் சொல்லாட்சி. அதற்கு முன்னால், ஆண்களோடு சமத்துவ நிலைக்காகப் போராடிய காலகட்டம் ஒன்றிருந்தது. ஒரே வேலைக்குச் சமநிலையான சம்பளம் என்னும் கோரிக்கையைப் பொதுத்தளத்தில் வலியுறுத்திய போக்கு அது. பணியிடங்களில் பெண்களுக்கான சிறப்பு விடுமுறைகள், சிறப்பு வெளிகள் போன்றவற்றிற்கான கோரிக்கைகளை வைத்துப் போராடிய சமநிலைப் பெண்ணியவாதிகள், குடும்பவெளிக்குள் கணவன்மார்கள் மனைவிகளைச் சம மானவர்களாக நடத்த வேண்டும் என்று கோரினார்கள். வீட்டுப்பணிகளைப் பங்கிட்டுக்கொள்ள வேண்டுமென வலியுறுத்தினார்கள். சமத்துவப் பெண்ணியம் (Socialist Feminism) இப்போதும் அதன் பணிகளைச் செய்துகொண்டே இருக்கிறது.

சமநிலைக்கான கோரிக்கைகளுக்கு முன்னால் பெண்ணின் இருப்பை உணர்த்தும் கோரிக்கைகள் இருந்தன. அன்றாட வாழ்வின் நிகழ்வுகள் ஒவ்வொன்றிலும் பெண்கள் இருக்கிறார்கள் என்பதை உணரவேண்டும்; அந்த இருப்பை அங்கீகரிக்கவேண்டும் என்று வலியுறுத்தினார்கள். தாராளவாதப் பெண்ணியம் (Liberal Feminism) என்ற கலைச்சொல்லால் குறிக்கப்பட்ட கால கட்டம் இது. பெண்ணியத்தின் பல்வேறு கட்டங்களும் தோன்றி நகர்ந்திருக்கின்றன என்று சொல்வதால், அவை ஒவ்வொன்றும் முடிந்து, இன்னொன்று தொடங்கி விட்டது என்பது பொருள் அல்ல. ஒவ்வொரு கருத்தியலும், அதனதன் அளவில் மக்களிடையே செல்வாக்குடன் இயங்கிக் கொண்டே இருக்கும் என்பதும் உண்மை.

தாராளவாதப் பெண்ணியத்தை உள்வாங்கிய பெண்ணெழுத்துகள், எழுத்துப் பரப்புக்குள் பெண் x ஆண் என்ற எதிர்வுகளை உருவாக்காமல் தனியாகவே பெண்களின் பாடுகளைத் துயரம் தோய்ந்த சித்திரிப்புகளால் எழுதிக்காட்டின. பெண்கள் தாங்கும் – மகள், மருமகள்,மனைவி, தாய் என்பதான ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் எதிர்கொள்ளும் வலிகளையும் வேதனைகளையும் மனச்சுமைகளையும் மீளாத்துயரங்களாக எழுதிக் காட்டுவதை அழகியலாக – பெறும் துன்பியல் அழகியல் வெளிப்பாடுகளாக எழுதிக் காட்டின. ஆண்களால் எழுதிக் காட்டப்பெற்ற பெண் பாத்திரங்களே அப்படியான துன்பியல் பிம்பங்களாக உலக இலக்கியங்கள் பலவற்றிலும் பதிவாகியிருக்கின்றன என்பதை வாசித்திருக்கிறோம். பத்தினித் தன்மை, தியாகம், இழப்பின் கணதி போன்றவற்றின் வெளிப்பாடுகளாகப் புராண, காவிய, தொன்மங்களின் நாயகிகளை ஆண்கள் எழுதிக் காட்டியிருக்கிறார்கள். காளிதாசனால் உருவாக்கப்பெற்ற சாகுந்தலை ஒருவித துன்பியல் நாயகி. அவளின் பிந்திய வாழ்க்கை முழுவதும் துயரச்சித்திரங்களே. அசோகவனத்துச் சீதையைக் குறித்த விவரிப்புகளும், கோவலனைப் பிரிந்திருந்த காவிரிப் பூம்பட்டினத்துக் கண்ணகியும், பெற்ற பிள்ளைகளைத் தூக்கிக் கிணற்றில் எறிந்துவிட்டுத் தற்கொலைக்குத் தயாரான நல்லதங்காளும் துயரம் எழுதிய சித்திரங்கள் அல்லாமல் வேறில்லை. இத்தகைய துயரப்பாத்திரங்களைப் பேசும் காலகட்டத்தைப் பெண்ணிய வரலாறு மகளிரியல் (Women Studies) காலகட்டம் என வரையறைப்படுத்துகிறது.

தமிழ்ப் புனைகதைகளின் தொடக்க நிலையில் ஆண்கள் எழுதிய கதைகள் பலவற்றில் இப்படியான பெண் சோகச் சித்திரங்களை வாசிக்கமுடியும். ராஜம் அய்யரின் கமலாம்பாளும் புதுமைப்பித்தனின் மருதியும் (துன்பக்கேணி) எடுத்துக்காட்டுகள். இவ்வெடுத்துக்காட்டுகளைத் தாண்டி அறியாமையினாலும், அவர்களுக்கெதிராக நிற்கும் இன்னொரு பெண் பாத்திரங்களின் திட்டமிட்ட கொடுமைகளாலும் – பெரும்பாலும் மருமகள்களை வதைக்கும் மாமியார்கள் – துயருற்ற வகைமாதிரிகளை எழுதிக்காட்டினார்கள். இந்தப் போக்கைப் பெண்கள் எழுத வந்த நிலையில் மாற்றிக் கட்டமைத்தார்கள். பெரும்பாலும் அத்தகைய சோகச் சித்திரங்களைத் தவிர்த்தனர். ஏதாவது ஒரு புள்ளியில் பெண்கள் விழிப்புணர்வு கொண்டவர்களாகவே எழுதப்பெற்றனர். இதற்குமாறாக மலேசியத் தமிழ்ப் புனைகதைகளில் பெண்களின் நுழைவு மகளிரியலின் வெளிப்பாடுகளாக இருந்தன/ இருக்கின்றன என்பது குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய ஒன்று. தொடக்க நிலையில் தமிழ்நாட்டுப் பெண் எழுத்துகளும், இலங்கைப் பெண் எழுத்துகளும் விலக்காக இல்லை என்பதைப் பெண்மையச் சிறுகதைகளின் தொகுப்புகள் காட்டுகின்றன. சாகித்திய அகாடெமிக்காக இரா. பிரேமா தொகுத்துள்ள தொகுப்பில் உள்ள கதைகள் பலவற்றில் வாசிக்கலாம். அண்மையில் காப்பு என்ற இலங்கைப் பெண்களின் பெருந்தொகை ஒன்றிற்கு முன்னுரை எழுதும் நோக்கத்தில் வாசித்தபோதும் தொடக்க காலப் பெண் எழுத்துகளின் மகளிரியலின் வெளிப்பாடுகளை வாசிக்க முடிந்தது. 

மகளிரியலை எழுதும் போக்கின் ஒருமாதிரியை மலேசியப் பெண் எழுத்தாளர் பாவையின் கதைகளில் காண முடிகிறது. மலேசியாவின் கெடா மாநிலத்தைச் சேர்ந்த பாவை, 1965- கள் தொடங்கி இன்றளவும் கதைகள் எழுதிவருபவர். வானொலி நாடகங்கள், குறுநாவல்கள், சிறுகதைகள் மூலம் தனது இலக்கிய அடையாளத்தை உருவாக்கியுள்ள பாவை, மலேசியப் பெண் எழுத்தாளர்களில் விருதுகள் பல பெற்றுக் கௌரவம் பெற்றவர். 

இரண்டாம் உலகப்பெரும்போரின் குடும்ப உறவுகளையும் சுற்றியிருந்தவர்களையும் இழந்த துயரத்தை மறக்க முடியாத நினைவுகளாகக் கொண்ட ஒரு பெண்ணின் நினைவு தப்பிய முதுமையைத் துயரத்தின் கவித்துவத்தோடு எழுதிக்காட்டும் கதையாக இருக்கிறது அவரது திறவி. திறப்பு தொலைந்துபோன வீட்டிற்குள் நுழையமுடியாமல் தவிக்கும் ஒருவர், உள்ளே நுழைவதற்குப் பல வழிகளில் முயற்சி செய்வார். உடைத்தாவது நுழைந்துதான் ஆகவேண்டும் என்ற நெருக்கடிகள் ஏற்படும்போது அதைச் செய்ய மற்றவர்களின் துணையை நாடுவர். பருண்மையான வீடு, கதவு, சாவி என்றால் அப்படி உடைத்துக் கொண்டு நுழைந்துவிடலாம். பிறகு புதியவைகளைக் கொண்டு சரிசெய்துவிடலாம். ஆனால் இலக்கியப்பனுவல், மனித உறவுகள் என்னும் வீட்டுச் சுவர்களையும் உணர்வுகள் திறப்புகளையும் பேசுபவை. அதனால் உடைத்துத் திறப்பதைப் பற்றிப் பேசாமல், தானாகவே திறக்கும் திறவிக்காகக் காத்திருக்கும் கணங்களையும் திறந்துகொண்டபோது கிடைக்கும் உணர்வு வெளிப்பாடுகளையும் பேசும். பாவையின் திறவி கதை இப்படி ஆரம்பிக்கிறது:

ஆச்சியம்மாவின் குரல் விட்டுவிட்டுக் கேட்டுக்கொண்டே இருந்தது. மெதுவாக மிக மெதுவாக – ரகசியம் பேசுவது மாதிரி – கிசு கிசுப்பாக – சில வேளைகளில் யாருடனோ சண்டை போடுவது மாதிரி உரத்தகுரலில்… பிறகு அழுவது சிரிப்பது என்று ரகம் ரகமாக அந்தக் குரலின் தொனி மாறிமாறிப் பேச்சுச் சத்தம் அறுந்து விடாமல் கேட்டுக் கொண்டே இருந்தது.

ஆச்சியம்மாவின் அறையை எட்டிப்பார்க்காமல், அவளின் பேச்சுக்குரலை மட்டும் கேட்பவர்கள் அவள் யார் கூடவோ பேசிக் கொண்டு – அல்லது திட்டிக்கொண்டு – சண்டை போட்டுக் கொண்டோ இருக்கிறாள் என்றுதான் நினைப்பார்கள்.ஆனால், அறைக்குள் போய்ப் பார்த்தால்தான் தெரியும், அவள் அறையின் சுவரைப் பார்த்தபடியோ அல்லது மேசை நாற்காலி – கட்டிலைப் பார்த்தபடியோ தான் பேசிக்கொண்டிருக்கிறாள் என்று.

நிகழ்காலத்தை மறத்தல் என்பது மனிதர்கள் சந்திக்கும் பெரும் வியாதி. அப்படி மறப்பவர்களையே சுற்றியிருப்பவர்கள் பைத்தியக்காரர்கள் எனச் சொல்கின்றனர். உண்மையில் அவர்கள் நிகழ்காலத்திலிருந்து விலகிக் கடந்த காலத்திற்குள் பயணித்து அங்கேயே தங்கிவிடுகின்றனர் என்பதுதான் நடப்பது. இதை, நினைவு தப்பும் நோயாகப் பார்க்கும் மருத்துவ அறிவியல், பழைய நினைவுகளைக் கொண்டுவந்துவிட முடியும் என நம்பி மருத்துவ முறைகளைப் பரிந்துரைக்கின்றது. மருந்துகளையும் தருகிறது. அதற்கான வாய்ப்புகள் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், அவர்களோடு உரையாடுவதின் மூலமாக – பழையனவற்றை நினைவூட்டுவதன் மூலமாக க்கடந்த காலத்திலிருந்து நிகழ்காலத்திற்குக் கொண்டுவர முயல்கின்றனர். தனது தாய் ஆச்சியம்மாவின் நினைவுகளை நிகழ்காலத்திற்குக் கொண்டுவந்து அவளது அன்பையும் பாசத்தையும் மறுபடியும் பெற்றுவிடத் துடிக்கும் பாத்திரமான வள்ளி, அவளது முயற்சியில் வெற்றி பெற்றாள் என்பதாகக் கதை முடிகிறது. துன்பத்தின் அடர்த்தியில் தொடங்கும் கதை மகிழ்ச்சியின் தெறிப்பாக முடிகிறது. கதையின் முடிவு இது: 


“யார் கூப்பிட்டது…! அம்மாவா…! அவளா இவ்வளவு தெளிவாக என் பெயர் சொல்லிக் கூப்பிடுகிறாள்…? இவ்வளவு நாள் என்னைத் தெரியாத மாதிரிதானே, நீ யாரு… யாருன்னு கேட்டாள்… அம்மாவுக்கு… ஞாபகம் திரும்பிடுச்சா… கடவுளே…”
வள்ளி, அதிர்ச்சியுடன் அவசரமாய்ப் படக்கென திரும்பியபோது, கையிலிருந்த குவளை தடால் ஓசையோடு எங்கோ போய் விழுந்தது.
அம்மா… நீயா… கூப்பிட்ட..! என்னை யாருன்னு தெரியுதாம்மா..! சொல்லும்மா..! என்னைத் தெரியுதுன்னு சொல்லும்மா… அம்மா… வள்ளி, குரல் கசிய ஆச்சியம்மாவின் நடுங்கிய கைகளை ஆதரவாய்ப் பற்றியபோது…
வள்ளி… வள்ளியென்று கரகரப்பாய் ஒலித்த ஆச்சியம்மாவின் குரல் தேய்ந்து மங்கியது. நடுங்கிய அந்த முதிய கரங்கள் நடுக்கத்தை நிறுத்தியிருந்தன!

கதையின் தொடக்கத்திற்கும் முடிவுக்கும் இடையே ஒரு இணைப்பை உருவாக்கி முடிக்கும் கதைபாணி தொடக்கநிலைச் செவ்வியல் பாணி. ‘குதிரை கட்டப்பட்டிருந்தது’ எனக் கதையைத் தொடங்கினால், கதை முடிவதற்குள் “குதிரை அவிழ்த்துவிடப்பட்டது” என்பதான சொற்றொடர் வரவேண்டும்; இடையில் வரவில்லையென்றாலும் முடிவிலாவது அந்தக் குதிரையைக் கதாசிரியர் அவிழ்த்துத் துரத்தியாக வேண்டுமெனச் சிறுகதையின் இலக்கணங்களை வரையறை செய்தவர்கள் சொல்லியிருக்கிறார்கள். குதிரைக்குப் பதிலாகத் துப்பாக்கியை மதிலில் தொங்கவிட்டு உதாரணம் காட்டும் வரையறைகளும் உண்டு.பாவையின் கதைகள் சிலவற்றை வாசித்தபோது, சிறுகதையின் இலக்கணங்களுக்கு முதன்மை அளித்து வடிவச்செம்மையான கதைகளை எழுதியவர் என்பதாகத் தெரிகிறது.

திறவி கதையின் மையப்பாத்திரங்கள் இரண்டு நினைவு தப்பிய ஆச்சியம்மாவும் அவளின் நினைவுகளைத் திருப்பிக் கொண்டுவர முயலும் மகள் வள்ளியுமே அவ்விருவரும். ஆச்சியம்மாவின் தப்பிய நினைவுகளைத் திரும்பக் கொண்டுவரப் பலவிதமான முயற்சிகளை மகள் வள்ளி செய்துகொண்டே இருந்தாள். உரையாடல்களாகவும், சிறுசிறு நிகழ்வுகளாகவும் செய்துபார்த்தாள்; ஆனால் வள்ளிக்குக் கிடைத்ததோ தோல்விதான் எனக் கதையை நகர்த்துகிறார் பாவை.

“அந்தக் காலத்தில ஜப்பான்காரன் குண்டு போட்டப்ப ஓடிப் போய்ப் பதுங்கு குழியில் பதுங்கிக்குவோம்… எங்க அப்பா – மாமா – பெரியப்பா எல்லாம் தண்டவாளம் போடப் போனவங்கதான் திரும்பி வரவே இல்ல… என்னா ஆனாங்களோ தெரியாது – போ. உன்னோட அண்ணனை, ஜப்பான்காரன் புடிச்சுட்டுப் போனானே… விட்டுட்டானா… சின்னத்தாயி? என்னா விடலையா.. அட பாவமே..” உள்ளறையில் ஆச்சியம்மா சுவரோடு பேசிக் கொண்டிருப்பது சத்தமாய்க் கேட்டது.
எதிரே கற்பனையாய்ச் சின்னத்தாயி பாட்டி சிக்கிக்கொண்டிருக்கிறாள் போலும். எத்தனையோ வருடங்களுக்கு முன் நடந்த கதைகள் – சேதிகள் இப்போது நடந்த மாதிரி சொல்லிக் கொண்டிருந்தாள். நிறுத்தி – நிறுத்திப் பேசினாள்.

“ஜப்பான்காரன் கையில சிக்கினா அம்புட்டுத்தானாம். குருவியைச் சுடுற மாதிரி சுட்டுப் போடுவானாம்… நம்ம ஜனம் எத்தனைபேரு, மலேரியா சீக்குலேயும் – சூடுபட்டும் செத்துப் போயிருக்கு. இன்னும் நெறையக் கதை சொல்லுவாங்க. உனக்கும் அதெல்லாம் தெரிஞ்ச கதைதானே சின்னத்தாயி… இந்தா ஒரு வாய் வெத்தலை போட்டுக்கடி..” கொஞ்ச நேரம் சத்தமே காணோம்..!

இடைவிடாத பேச்சுகளின் தொடர்ச்சியில், இப்படித்தான் சின்னதாய் மௌனம் நிழலாடும். ஓடிப்போய்ப் பார்த்தால், ஆச்சியம்மா அப்படியே சிறுபிள்ளையாய்த் தூங்கிப் போயிருப்பாள்.

ஆச்சியம்மா கடந்த காலத்திலிருந்து நிகழ்காலத்திற்கு வராமல் தன் மகளை அலைக்கழித்தாள் என்பதை வாசகர்களுக்குச் சொல்லும் உணர்ச்சி மிக்க கதைப்பகுதி இது. இப்படிச் சில உணர்ச்சிகரமான கதைநிகழ்வுகளைத் தரும் பாவை, ஆச்சியம்மாவின் நினைவு திரும்பியதற்கான காரணத்தை வலிமையாகச் சொல்லாமல் சட்டென்று முடித்திருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. அவளது நினைவு தப்பியதற்குப் போர்க்காலமும் மனிதர்கள் குண்டுபோட்டுக் கொல்லப்பட்டதும் காரணங்களாக இருக்கக் கூடும் என்பதைக் குறிப்பாகத் தருகிறார். அப்படிக் குறிப்பாகச் சொல்லியிருக்கிறார் எனச் சொல்வதுகூட வலிந்து கூறும் ஒன்றாகவே தோன்றலாம்.அப்படித்தோன்றாமல், நினைவு தப்பியதற்கான காரணத்தை மகளின் எண்ண ஓட்டங்களாகவோ, இதுவாக இருக்குமா? அதுவாக இருக்குமா? என்ற ஐயங்களோடு அவள் செய்யும் செயல்கள் வழியாகக் காட்டியிருக்கலாம். அப்படியான குறிப்புகளைக் கதை கொண்டிருக்கவில்லை. நினைவு தப்பியதற்கான வலுவான காரணம் சொல்லப்படாததாலேயே நினைவு திரும்பியதற்கான காரணத்தையும் வலுவாகச் சொல்லமுடியவில்லை. இத்தகையனவற்றை விமரிசனப் பார்வை மட்டுமே குறைகளாகச் சுட்டிக்காட்டும். வாசகர்களாக இருப்பவர்கள் கண்டுகொள்வதில்லை.

ஒரு கதை வழியாகச் சில மனிதர்களின் தவிப்பையும் உணர்ச்சிப் பெருக்கையும் வாசிக்க நினைக்கும் வாசகர்கள் – வெகுமக்களாக இருக்கும் வாசகர்கள் இத்தகைய கதைகளையே தேடித்தேடிப் படிக்கிறார்கள். வாசிப்பவர்களின் இரக்கவுணர்வைத் தன்வசப்படுத்தும் சித்திரங்களும் உணர்வுகளும் திறவி கதையில் அடுக்கப்பட்டுத் திடீரென்று நினைவு திரும்பிவிட்டது என்பதாக முடிக்கப்பட்டிருக்கிறது. இந்த அழகியல், ஒருவிதத்தில் மகளிரியலின் அழகியல். மகளிரியல் எப்போதும் துன்பங்களை எழுதுவதையே தனது அழகியலாக நினைக்கிறது. மலேசியப்பெண் எழுத்தாளர் பாவை மகளிரியலின் துன்ப அழகியலை எழுதுவதில் கைதேர்ந்தவர் என்பதை அவரது கதைகளை வாசிப்பவர்கள் உணரக்கூடும். 


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நவீனத்துவமும் பாரதியும்

நாயக்கர் காலம். இயல் . 6 சாதிகளும் சமூக அசைவியக்கங்கமும்

ப்ளு ஸ்டார் : கிரிக்கெட்டும் அரசியலும்